Home Kalki Read Sivagamiyin Sabatham Part 3 Ch 54

Read Sivagamiyin Sabatham Part 3 Ch 54

97
0
Read Sivagamiyin Sabatham Part 3 Ch 54 Free, Sivagamiyin Sabatham is a historical novel. Sivagamiyin Sabatham audiobook, Sivagamiyin Sabatham pdf, Sivagamiyin Sabatham full story
Sivagamiyin Sapatham Part 3 Ch 54 சிவகாமியின் சபதம் மூன்றாம் பாகம்: பிக்ஷுவின் காதல் அத்தியாயம் 54: விபரீதம்

Read Sivagamiyin Sabatham Part 3 Ch 54

சிவகாமியின் சபதம்

மூன்றாம் பாகம்: பிக்ஷுவின் காதல்

அத்தியாயம் 54: விபரீதம்

Read Sivagamiyin Sabatham Part 3 Ch 54

மாமல்லர் தமது நிலை குலைந்த நெஞ்சைத் திடப்படுத்திக் கொண்டு, கனிவு ததும்பிய கண்களால் சிவகாமியை நோக்கினார். “சிவகாமி! உன்னுடைய நம்பிக்கை வீணாய்ப் போகவில்லையே! உனக்கு நான் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றத்தானே வந்திருக்கிறேன்? நூறு காத தூரம் காடும் மலையும் நதியும் கடந்து வந்திருக்கிறேன். பசி பட்டினி பாராமல் இராத் தூக்கமில்லாமல் வந்திருக்கிறேன். நான் ஏறி வந்த குதிரை ஏறக்குறையச் செத்து விழும்படி அவ்வளவு வேகமாய் வந்தேன். சற்று முன்பு நான் கூறிய கடுமொழிகளையெல்லாம் மறந்துவிடு. யார் மேலேயோ வந்த கோபத்தை உன் மீது காட்டினேன். இத்தனை நாளைக்குப் பிறகு நம்முடைய சந்திப்பு இப்படிக் கோபமும் தாபமுமாயிருக்குமென்று நான் நினைக்கவில்லை. எவ்வளவோ ஆசையோடு எத்தனையோ மனக்கோட்டை கட்டிக் கொண்டு வந்தேன்! – போகட்டும், சிவகாமி! புறப்படு, போகலாம்!”

“பிரபு! மன்னியுங்கள்! இப்போது நான் வரமாட்டேன், என் சபதம் நிறைவேறிய பிறகுதான் வருவேன்.” “சிவகாமி! இது என்ன வார்த்தை? என்னுடன் வருவதற்கு உனக்கு விருப்பம் இல்லையா, என்ன? தாமதிக்க நேரமில்லை.” “இளவரசே! என் சபதத்தை நிறைவேற்றி வையுங்கள். பாதகன் புலிகேசியைக் கொன்று, வாதாபி நகரத்தைச் சுட்டெரித்து விட்டு, உங்கள் அடிமையின் கையைப் பிடித்து அழைத்துச் செல்லுங்கள். அப்போது நிழல் போல் உங்களைத் தொடர்ந்து வருவேன்.” “சிவகாமி! உன் சபதத்தை அவசியம் நிறைவேற்றி வைக்கிறேன். ஆனால் அதை நிறைவேற்றுவது எளிதல்ல. பெரும்படை திரட்டிக் கொண்டு, தக்க ஆயுத பலத்தோடு வரவேண்டும். இதற்கெல்லாம் அவகாசம் வேண்டும்; பல வருஷங்கள் ஆகலாம்…”

“பல்லவ குமாரர்தானா இப்படிப் பேசுகிறீர்கள்? வீரமாமல்லரா இப்படிப் பேசுகிறீர்கள்? புலிகேசியைக் கொன்று வாதாபியை வெற்றி கொள்வது அவ்வளவு கடினமான காரியமா? இந்தப் பேதை தெரியாமல் சபதம் செய்து விட்டேனே?… பல்லவ குமாரா! தாங்கள் காஞ்சிக்குப் போய் இராஜ்ய காரியங்களைக் கவனியுங்கள். இந்த ஏழைச் சிற்பியின் மகளைப்பற்றிக் கவலை வேண்டாம்! நான் என்ன பாண்டிய ராஜகுமாரியா, சோழன் திருமகளா தாங்கள் கவலைப்படுவதற்கு? நான் எக்கேடு கெட்டால் தங்களுக்கென்ன? என் சபதம் எப்படிப் போனால் என்ன?” என்று சிவகாமி கசப்புடன் பேசினாள். “சிவகாமி! நீதான் பேசுகிறாயா? நீ பழைய சிவகாமிதானா?” என்றார் மாமல்லர்.

“இல்லை, பிரபு! நான் பழைய சிவகாமி இல்லை; புதிய சிவகாமியாகி விட்டேன். என் வாழ்க்கை கசந்துவிட்டது, என் மனம் பேதலித்து விட்டது. இந்தப் புதிய சிவகாமியை மறந்து விடுங்கள். ஒரு சமயம் தங்களிடம், ‘அடியாளை மறக்க வேண்டாம் என்று வரம் கேட்டேன். இப்போது, ‘மறந்துவிடுங்கள்’ என்று வரம் கேட்கிறேன்!” என்றாள் சிவகாமி. “சிவகாமி! கேள்! நீ புதிய சிவகாமியானாலும் நான் பழைய மாமல்லன்தான். உன்னைப் பிரிந்திருந்த காலத்திலெல்லாம் ஒரு கணமேனும் உன்னை நான் மறக்கவில்லை. இரவிலும், பகலிலும், கனவிலும் நனவிலும், அரண்மனையிலும் போர்க்களத்திலும், என்ன செய்தாலும் யாரோடு பேசினாலும், என் உள்ளத்தைவிட்டு நீ ஒரு கணமும் அகலவில்லை. உன் பேரில் நான் கொண்ட பரிசுத்தமான காதலின் மேல் ஆணை வைத்துச் சொல்லுகிறேன். நீ செய்த சபதத்தை நிறைவேற்றி வைக்கிறேன். இப்போது என்னோடு புறப்படு!” என்று மாமல்லர் உணர்ச்சி மிகுதியினால் நாத் தழு தழுக்கக் கூறினார்.

கல்லையும் கனிய வைக்கக்கூடிய மேற்படி மொழிகள் சிவகாமியின் மனத்தைக் கனியச் செய்யவில்லை. பட்ட கஷ்டங்களினாலும் பார்த்த பயங்கரங்களினாலும் கல்லினும் கடினமாகியிருந்தது அவள் உள்ளம். “காதலாம் காதல்! காதலும் கல்யாணமும் இங்கே யாருக்கு வேண்டும்?” என்றாள் சிவகாமி. “நிஜமாகத்தான் சொல்கிறாயா? காதலும் கலியாணமும் உனக்கு வேண்டாமா?” என்று மாமல்லர் ஆத்திரத்தோடு கேட்டார். “நிஜமாகத்தான் சொல்கிறேன்; காதலும் கலியாணமும் எனக்கு வேண்டாம்; பழிதான் வேண்டும். வஞ்சம் தீர்க்க வேண்டும்; புலிகேசி சாகவேண்டும். வாதாபி எரிய வேண்டும், வாதாபி மக்கள் அலறிப் புடைத்துக் கொண்டு அங்குமிங்கும் ஓட வேண்டும் வேறொன்றும் எனக்கு வேண்டாம்!”

மாமல்லர் மீண்டும் நயமான வார்த்தைகள் கூறினார். “சிவகாமி! உன் விருப்பத்தைத் தெரிந்து கொண்டேன். உன்னைக் காட்டிலும் நூறு மடங்கு என் உள்ளம் கொதித்துக் கொண்டிருக்கிறது. உன்னைச் சிறைப்பிடித்து வந்து அவமானப்படுத்திய பாதகனைப் பழிவாங்க என் மனம் துடித்துக் கொண்டிருக்கிறது. கட்டாயம் உன் சபதத்தை நிறைவேற்றி வைக்கிறேன். நீ மட்டும் இப்போது என்னுடன் புறப்பட்டு வந்துவிடு!” “வரமாட்டேன், இளவரசே! ஆயனச் சிற்பியாரிடம், அவருடைய மகள் இறந்து போய்விட்டாள் என்று சொல்லி விடுங்கள்!” “சிவகாமி! இது என்ன பிடிவாதம்? கடைசி வார்த்தையாகச் சொல்லுகிறேன், கேள்! உன்னுடைய சபதத்தை நான் கட்டாயம் நிறைவேற்றி வைக்கிறேன். ஆனால், இந்தச் சமயம் என்னுடன் நீ வராவிட்டால் என் மனம் கசந்து போய்விடும். என் அன்பை அடியோடு இழந்து விடுவாய்!”

“அன்பு வேண்டாம் சுவாமி! சபதத்தை நிறைவேற்றுங்கள்.” “பெண்ணே! பல்லவ குலத்தினர் ஒரு நாளும் சொன்ன சொல் தவறுவதில்லை.” “இளவரசே! ஆயனச் சிற்பியின் மகளும் சொன்ன சொல்லை மாற்றுவதில்லை!” “ஆகா! இதென்ன அகம்பாவம்?” என்றார் மாமல்லர். “ஆம், இளவரசே! எனக்கு அகம்பாவந்தான்; ஏன் இருக்கக் கூடாது? பாண்டியன் மகளுக்கும், சேர ராஜகுமாரிக்குந்தான் அகம்பாவம் இருக்கலாமா? நான் சிற்பியின் மகள்தான், ஆனாலும் செந்தமிழ் நாட்டு வீரப்பெண் குலத்திலே பிறந்தவள். காதலன் கழுத்திலே மாலை சூட்டிப் போர்க்களத்துக்கு அனுப்பிய மாதர் வம்சத்தில் பிறந்தவள். கண்ணகித் தெய்வம் வாழ்ந்த நாட்டில் நானும் பிறந்தேன். எனக்கு ஏன் அகம்பாவம் இருக்கக்கூடாது, பிரபு?”

சிவகாமியின் மனத்தைத் திருப்ப மேலே என்ன சொல்லலாம் என்று அவர் சிந்திப்பதற்குள், சேனாபதி பரஞ்சோதி பரபரப்புடன் உள்ளே வந்தார், மாமல்லரின் காதில் ஏதோ சொன்னார். மாமல்லரின் முகத்தில் ஒரு கணம் திகிலின் அறிகுறி தோன்றியது; மறுகணம் சமாளித்துக் கொண்டார். “சேனாபதி! இந்த மூடப் பெண்ணின் பிடிவாதத்துக்கு முன்னால் நம்முடைய திட்டமெல்லாம் சின்னா பின்னமாகிவிடும் போலிருக்கிறது!” என்றார். சிவகாமியின் பக்கம் கோபமாகத் திரும்பி, “பெண்ணே! நீ வருவாயா? மாட்டாயா? உன்னுடன் வாதமிட்டுக் கொண்டிருக்க நேரமில்லை!” என்றார் மாமல்லர்.

அப்போது சேனாபதி பரஞ்சோதி குறுக்கிட்டு, “அம்மணி, எங்களுடைய நிலைமையைத் தெரிந்து கொள்ளுங்கள். எதிரிகளின் கோட்டைக்குள்ளே தனியாக நாலு பேர் வந்திருக்கிறோம். கோட்டைச் சுவர் மீது நூலேணியுடன் கண்ணனும் அவன் தந்தையும் காத்துக் கொண்டிருக்கிறார்கள். கோட்டைக்கு வெளியில் இந்த நிமிஷத்தில், நரபலி கொடுக்கும் காபாலிகர்கள் எங்களைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள். இங்கேயோ அந்தக் கள்ள பிக்ஷு நாங்கள் வந்திருப்பதை அறிந்துகொண்டு, இதோ வீதி முனையில் வந்து கொண்டிருக்கிறார். தேவி! இந்த நிலைமையில் தாங்கள் இப்படி வீண் விவாதம் வளர்த்தக் கூடாது…” என்றார்.

‘பெண் புத்தி பேதமையுடைத்து’ என்று முன்னோர் சொல்லியிருக்கிறார்கள் அல்லவா? அது உண்மை என்பதை நிரூபிக்கும்படி சிவகாமி அப்போது பேசினாள். “ஐயா! பல்லவ குமாரரும் அவருடைய அருமைத் தோழரும் கேவலம் மண்டை ஓட்டில் பிச்சை வாங்கும் காபாலிகருக்கும், காவித்துணி தரித்த புத்த பிக்ஷுவுக்கும் பயந்து ஓடுவார்கள் என்பது இதுவரையில் எனக்குத் தெரியாமலிருந்தது. அதற்காக என்னை மன்னியுங்கள். நீங்கள் தப்பிப் பிழைப்பதை நான் குறுக்கே நின்று மறிக்கவில்லையே! தாராளமாகப் போகலாம்” என்றாள். பல்லவ குமாரருக்குக் காலாக்னியையொத்த கோபம் வந்தது. “அடி பாதகி! சண்டாளி! இதன் பயனை நீ அனுபவிப்பாய்!” என்று சீறினார். பின்னர் பரஞ்சோதியைப் பார்த்து “சேனாபதி! இந்த வஞ்சகப் பாதகியின் நோக்கம் இப்போது தெரிந்தது. கள்ள பிக்ஷுவிடம் நம்மைக் காட்டிக் கொடுத்துவிட வேண்டும் என்பது இவள் எண்ணம், வாரும் போகலாம்!” என்றார்.

அப்போது பரஞ்சோதி, “பிரபு! மன்னிக்க வேண்டும், நான் எல்லாம் கேட்டுக் கொண்டிருந்தேன். ஆயனர் புதல்வி அப்படி வஞ்சகம் செய்யக் கூடியவர் அல்ல. தான் செய்த சபதத்தை முன்னிட்டுத்தான் ‘வர மாட்டேன்’ என்கிறார்….” என்பதற்குள்ளே, மாமல்லர் குறுக்கிட்டார். “தளபதி பெண்களின் வஞ்சகம் உமக்குத் தெரியாது. சபதமாம், சபதம்! வெறும் பொய்! வாதாபிச் சக்கரவர்த்தியின் மாளிகையை விட்டு வருவதற்கு இவளுக்கு விருப்பமில்லை, வாரும் போகலாம்!” என்று மாமல்லர் சேனாபதியின் கையைப்பற்றி இழுக்கத் தொடங்கினார்.

தளபதி பரஞ்சோதி நகராமல் நின்றார்; “பிரபு! இது நியாயமல்ல; சிவகாமி அம்மையை இங்கு விட்டுப் போவது பெரும் பிசகு!… அவராக வருவதற்கு மறுத்தால், நாம் பலவந்தமாகத் தூக்கிக் கொண்டு போக வேண்டியதுதான்!…” என்றார். இந்த வார்த்தைகள் காதில் விழுந்ததும் சிவகாமியின் தேகமெல்லாம் சிலிர்த்தது. ஒரு சமயம் மாமல்லர் தன்னை விஷநாகம் தீண்டாமல் கட்டிக் காத்ததாகக் கனவு கண்டதைப் பற்றிச் சொன்னது அவளுக்கு நினைவு வந்தது. ‘அந்தக் கனவு இப்போது மெய்யாகாதா? சேனாதிபதியின் யோசனைப்படி மாமல்லர் தன்னை நெருங்கி வந்து கட்டிப் பிடித்துத் தூக்கிக் கொண்டு போக மாட்டாரா?” என்று எண்ணினாள். ஆகா! அம்மாதிரி மாமல்லர் செய்திருந்தால், பின்னால் எவ்வளவு விபரீதங்கள் நேராமல் போயிருக்கும்!

விதிவசத்தினால் மாமல்லர் அவ்வாறு செய்ய மனங்கொள்ளவில்லை. “வேண்டாம், சேனாபதி! வேண்டாம், இஷ்டமில்லாத பெண்ணை நாம் பலவந்தப்படுத்தி அழைத்துப் போக வேண்டியதில்லை. இவளுக்கு நான் கொடுத்த வாக்குறுதியை ஒரு சமயம் நிறைவேற்றுவேன். பிறகு இஷ்டமானால் வரட்டும், அதுவரையில் அந்தக் கள்ள பிக்ஷுவையே கட்டிக்கொண்டு அழட்டும்!…” என்று மாமல்லர் சொல்லிக் கொண்டிருக்கும் போது சத்ருக்னனும் குண்டோதரனும் உள்ளே ஓடோடியும் வந்தார்கள். “பிரபு! பிக்ஷு வீதி முனையில் வருகிறார். அவருடன் வந்த வீரர்களில் பாதிப் பேர் வீட்டின் கொல்லைப் பக்கமாகப் போகிறார்கள்!” என்று சத்ருக்னன் மொழி குளறிக் கூறினான். பரஞ்சோதி மறுபடியும் சிவகாமியின் பக்கம் நோக்கிப் பரபரப்புடன், “அம்மா!…” என்றார். “வேண்டாம், தளபதி! வேண்டாம், இந்தக் கிராதகி நம்மைக் கள்ள பிக்ஷுவிடம் காட்டிக் கொடுக்கத்தான் பார்க்கிறாள்! வாரும் போகலாம்!” என்று மாமல்லர் இரைந்து கூறிப் பரஞ்சோதியின் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு அம்மாளிகையின் பின்புறமாக விரைந்தார். அடுத்த கணம் அவர்கள் நால்வரும் சிவகாமியின் பார்வையிலிருந்து மறைந்தார்கள்.

Source

Previous articleRead Sivagamiyin Sabatham Part 3 Ch 53
Next articleRead Sivagamiyin Sabatham Part 3 Ch 55

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here