Home Kalki Read Sivagamiyin Sabatham Part 3 Ch 56

Read Sivagamiyin Sabatham Part 3 Ch 56

79
0
Read Sivagamiyin Sabatham Part 3 Ch 56 Free, Sivagamiyin Sabatham is a historical novel. Sivagamiyin Sabatham audiobook, Sivagamiyin Sabatham pdf, Sivagamiyin Sabatham full story
Sivagamiyin Sapatham Part 3 Ch 56 சிவகாமியின் சபதம் மூன்றாம் பாகம்: பிக்ஷுவின் காதல் அத்தியாயம் 56: மகேந்திரர் கோரிக்கை

Read Sivagamiyin Sabatham Part 3 Ch 56

சிவகாமியின் சபதம்

மூன்றாம் பாகம்: பிக்ஷுவின் காதல்

அத்தியாயம் 56: மகேந்திரர் கோரிக்கை

Read Sivagamiyin Sabatham Part 3 Ch 56

மாமல்லர், பரஞ்சோதி முதலியவர்கள் காஞ்சிக்குத் திரும்பி வந்த போது, மகேந்திர பல்லவரின் தேகநிலை முன்னை விட மோசமாகியிருந்தது. அவர்கள் சிவகாமியை அழைத்து வரவில்லையென்று தெரிந்த பிற்பாடு, அவருடைய உடம்பு மேலும் நலிவடைந்தது. திருவெண்காட்டு நமசிவாய வைத்தியர் எவ்வளவோ திறமையாக வைத்தியம் செய்தும், தேக நிலைமையில் அபிவிருத்தி ஏற்படவில்லை. மகேந்திர பல்லவர் ஒருநாள் தம் புதல்வர் மாமல்லரையும் மந்திரி மண்டலத்தாரையும், படைத் தலைவர்களையும், கோட்டத் தலைவர்களையும் அழைத்து வரச் செய்தார். படுக்கையில் படுத்தபடியே சுற்றிலும் சூழ்ந்து நின்றவர்களைச் சக்கரவர்த்தி பார்த்தார். எல்லாருடைய கண்களிலும் கண்ணீர் கசிந்திருப்பதையும், எல்லாருடைய முகத்திலும் பக்தி விசுவாசம் ததும்பிக் கொண்டிருப்பதையும் கவனித்தார்.

மகேந்திர பல்லவரின் பழைய சிம்ம கர்ஜனைக் குரலைக் கேட்டிருந்தவர்கள், இப்போது அவருடைய மெலிந்த ஈனஸ்வரமான குரலைக் கேட்டுத் திடுக்கிட்டார்கள். தங்களுடைய உணர்ச்சியை வெளிக்காட்டாமல் தடுத்துக் கொள்ள முயன்றார்கள். மகேந்திர பல்லவர் சொன்னார்; “நான் இந்தப் புகழ்பெற்ற பல்லவ சிம்மாசனத்தில் ஏறி, இன்றைக்கு இருபத்தைந்து வருஷம் ஆகிறது. இவ்வளவு காலமும் நீங்கள் காட்டிய பக்தியும் விசுவாசமும் இணையற்றவை. காஞ்சியின் புகழ் பாரத நாடெங்கும் ஓங்கி நின்ற காலத்தில், நீங்கள் என்னிடம் பக்தி விசுவாசத்துடன் நடந்து கொண்டீர்கள். என்னுடைய விருப்பமே கட்டளையாகவும் என்னுடைய வார்த்தையே சட்டமாகவும் பாவித்து வந்தீர்கள். அது பெரிய காரியமல்ல, நான் தவறுக்கு மேல் தவறாகச் செய்து வந்த காலத்திலும் காஞ்சியின் புகழ் மங்கி வந்த நாளிலும் படையெடுத்து வந்த பகைவர்களை முன்னேற விட்டுப் பின்வாங்கி வந்த காலத்திலும், காஞ்சிக் கோட்டைக்குள் நாம் மறைந்திருக்க வேண்டி வந்த காலத்திலும் என்னிடம் இடைவிடாத விசுவாசம் காட்டி வந்தீர்கள். மாறாத பக்தி செலுத்தி வந்தீர்கள். சளுக்க மன்னன் புலிகேசியை உங்களுடைய விருப்பத்திற்கு மாறாக நான் விருந்துக்கு அழைத்ததையும் அதனால் விளைந்த விபரீதங்களையும் நீங்கள் பொறுத்துக் கொண்டிருந்தீர்கள். எனக்கு அந்திய காலம் நெருங்கியிருக்கும் இந்தச் சமயத்தில் உங்களுக்கெல்லாம் என் மனத்தில் பொங்கிக் கொண்டிருக்கும் எல்லையற்ற நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நான் செய்த தவறுகளுக்காகவும் என்னால் உங்களுக்கெல்லாம் நேர்ந்த கஷ்டங்களுக்காகவும் மன்னிக்கும்படியாக ரொம்பவும் கேட்டுக் கொள்கிறேன்…”

இவ்விதம் மகேந்திர பல்லவர் பேசிய போது, சபையிலே சிலர் விம்மி அழுதார்கள். முதன் மந்திரி ஓர் அடி முன்னால் வந்து “பிரபு! இப்படியெல்லாம் பேசக் கூடாது என்று பிரார்த்திக்கிறேன். எங்களிடம் தாங்கள் மன்னிப்புக் கேட்பது எங்களைத் தண்டிப்பதேயாகும். தங்கள் மேல் இல்லாத குற்றங்களையெல்லாம் சுமத்திக் கொண்டு, எங்களை வேதனைக்கு ஆளாக்குகிறீர்கள். நடந்ததெல்லாம் விதிவசத்தினால் நடந்தது. சென்று போன காரியங்களைப் பற்றிச் சிந்திப்பதில் பயனில்லை!” என்றார்.

மகேந்திர சக்கரவர்த்தி மேலும் கூறினார்; “சாரங்கதேவ பட்டரின் மொழிகள் என்னை மேலும் உங்களிடம் நன்றிக்கடன் பட்டவனாகச் செய்கின்றன. இன்று உங்களையெல்லாம் நான் அழைத்ததன் காரணத்தைச் சொல்கிறேன். என் வாழ்நாளின் இறுதி நெருங்கி விட்டது. இன்னும் சில நாளைக்கெல்லாம் இந்த மெலிந்து நைந்த தேகத்திலிருந்து என் ஆவி பிரிந்து போய் விடும். என் அருமைக் குமாரன் நரசிம்மன் வேத விதிப்படி இறந்து போன தந்தைக்குச் செய்ய வேண்டிய உத்தரக் கிரியைகளைச் செய்வான்…” என்று சக்கரவர்த்தி சொன்னபோது, மாமல்லர் தாங்க முடியாத துக்கமும் ஆத்திரமும் பொங்க, “அப்பா! அப்பா!” என்று அலறினார்.

மகேந்திர பல்லவர் அருகில் நின்ற மகனை அன்புடன் தழுவிக் கொண்டு, உச்சி முகந்து, “குழந்தாய்! நான் சொல்ல வேண்டியதைச் சொல்லித்தான் ஆக வேண்டும். உனக்குக் கேட்பதற்குக் கஷ்டமாயிருந்தால் சற்று வெளியே போய் இருந்து விட்டு அப்புறம் வா!” என்றார். ஆனால் அவ்விதம் மாமல்லர் வெளியேறவில்லை. மறுபடியும் மந்திரி பிரதானிகளைப் பார்த்துச் சக்கரவர்த்தி கூறினார்: “என் அருமை மகன் எனக்குரிய உத்திரக் கிரியைகளைச் செய்வான். நீங்களும் காலம் சென்ற சக்கரவர்த்திக்குரிய மரியாதைகளைச் செய்வீர்கள். ஆனால், இதனாலெல்லாம் என் ஆத்மா சாந்தி அடையவே அடையாது. இப்போது நான் உங்களிடம் கேட்டுக் கொள்ளப் போகும் கோரிக்கையை நிறைவேற்றி வைத்தால் என் ஆத்மா சாந்தி அடையும். இல்லாவிட்டால் சொர்க்கத்திலே இருந்தாலும் என் ஆவி நிம்மதி அடையாது.” “பிரபு! சொல்லுங்கள்; தங்களுடைய ஆக்ஞை எதுவானாலும், அதை நிறைவேற்றி வைப்பதாக இங்குள்ளவர் அனைவரும் சபதம் செய்ய ஆயத்தமாயிருக்கிறோம்!” என்று முதல் அமைச்சர் கூறினார்.

“என்னுடைய அஜாக்கிரதையினாலும் சளுக்க மன்னனின் வஞ்சகத்தினாலும் பல்லவ வம்சத்துக்குப் பெரிய அவமானம் நேர்ந்து விட்டதை நீங்கள் அறிவீர்கள். அறுநூறு வருஷத்து வீரப் புகழுக்கு என் காலத்தில் பங்கம் நேர்ந்துவிட்டது. அந்த அவமானத்தை என்னாலே துடைக்க முடியவில்லை. இழந்து விட்ட பல்லவ வம்சத்துப் புகழை நிலைநாட்டாமலே நான் உங்களிடம் விடைபெற்றுக் கொள்கிறேன். நான் செய்ய முடியாமற்போன காரியத்தை நீங்கள் நிறைவேற்றி வைக்க வேண்டும். பல்லவ சைனியம் படையெடுத்துச் சென்று, சளுக்கரை வென்று, புலிகேசியைக் கொன்று, வாதாபி நகரை அழித்து, தீ வைத்து எரிக்க வேண்டும். வாதாபி நகரம் இருந்த இடத்தில் பல்லவ ஜயஸ்தம்பம் கம்பீரமாக வானளாவி நிற்க வேண்டும். அப்போதுதான் பல்லவ வம்சத்துக்கும் தமிழகத்தின் வீரத்துக்கும் நேர்ந்துள்ள களங்கம் நிவர்த்தியாகும். இதுவே என் கோரிக்கை, என்ன சொல்கிறீர்கள்? நிறைவேற்றுவீர்களா?” “நிறைவேற்றுகிறோம்”, நிறைவேற்றுகிறோம்” என்று ஏக காலத்தில் பல குரல்கள் ஒலித்தன. “மகேந்திர பல்லவேந்திரர் வாழ்க! வீர மாமல்லர் வாழ்க!” என்ற ஜயகோஷங்களும் முழங்கின. மகேந்திர பல்லவர் இன்னொரு தடவை எல்லாரையும் பார்த்து, “மறுமுறையும் உங்களுக்கு என் இருதயத்தில் பொங்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

அப்போது முதல் அமைச்சர், “பிரபு ஒரு விஷயம், தங்கள் கோரிக்கையை வெளியிட்ட போது, இங்குள்ள நாங்கள் அனைவரும் அதை நிறைவேற்றி வைப்பதாக ஒப்புக் கொண்டு கோஷித்தோம். ஆனால், முக்கியமாகத் தங்கள் கோரிக்கையை நிறைவேற்றி வைக்க வேண்டிய இருவரும் சும்மா இருந்தார்கள். குமார சக்கரவர்த்தியையும் சேனாபதி பரஞ்சோதியையுந்தான் சொல்கிறேன். அவர்கள் மௌனமாயிருந்தது எங்களுக்கு அர்த்தமாகவில்லை” என்றார். “மாமல்லனும் பரஞ்சோதியும் ஏற்கெனவே எனக்கு அவ்வாறு வாக்களித்துச் சபதம் கூறியிருக்கிறார்கள். அதனாலேதான் இப்போது சும்மா இருந்தார்கள். அவர்கள் செய்த சபதத்தை நிறைவேற்றி வைக்க நீங்கள் அவர்களுக்கு ஒத்தாசை செய்ய வேண்டும். சபையோர்களே! நான் மாமல்லனோடு ஒரு முக்கியமான விஷயம் பேச வேண்டியிருக்கிறது. அதனுடைய முடிவை உங்களுக்கும் நான் தெரிவித்தாக வேண்டும். சற்று எங்களுக்கு அவகாசம் கொடுப்பீர்களா?” என்று கேட்டார்.

Source

Previous articleRead Sivagamiyin Sabatham Part 3 Ch 55
Next articleRead Sivagamiyin Sabatham Part 3 Ch 57

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here