Home Kalki Read Sivagamiyin Sabatham Part 4 Ch 1

Read Sivagamiyin Sabatham Part 4 Ch 1

107
0
Read Sivagamiyin Sabatham Part 4 Ch 1 Free, Sivagamiyin Sabatham is a historical novel. Sivagamiyin Sabatham audiobook, Sivagamiyin Sabatham pdf, Sivagamiyin Sabatham full story
Sivagamiyin Sapatham Part 4 Ch 1 சிவகாமியின் சபதம் நான்காம் பாகம்: சிதைந்த கனவு அத்தியாயம் 1: அரண்ய வீடு

Read Sivagamiyin Sabatham Part 4 Ch 1

சிவகாமியின் சபதம்

நான்காம் பாகம்: சிதைந்த கனவு

அத்தியாயம் 1: அரண்ய வீடு

Read Sivagamiyin Sabatham Part 4 Ch 1

ஆயனரின் அரண்ய வீட்டைச் சுற்றி மீண்டும் மரங்கள் செழித்து வளர்ந்து வானோங்கி நின்றன. நெடுந்தூரம் படர்ந்திருந்த கிளைகளில், பசுந்தழைகளும் இளந்தளிர்களும் அடர்ந்திருந்தன. சில விருட்சங்களில் மலர்கள் கொத்துக் கொத்தாய்க் குலுங்கின. இளங்காற்றில் மரக்கிளைகள் அசைந்து ஒன்றோடொன்று மோதியபோது, உதிர்ந்த மலர்கள் பூமியில் ஆங்காங்கு புஷ்பக் கம்பளம் விரித்தது போல் கிடந்தன. அந்த மலர்களின் நறுமணம் நாலாபுறமும் ‘கம்’ என்று நிறைந்திருந்தது. கானகத்துப் பறவைகள் அவ்வப்போது கலகலவென்று ஒலி செய்து, அங்கே குடி கொண்டிருந்த நிசப்தத்தைக் கலைத்தன.

ஆயனர் வீட்டுக்குச் சற்றுத் தூரத்தில் இருந்த தாமரைக் குளத்தில் தண்ணீர் ததும்பி அலைமோதிக் கொண்டிருந்தது. தாமரை இலைகள் தள தளவென்று விளங்கின. அந்த இலைகளின் மீது தண்ணீர்த் துளிகள் முத்துக்களைப்போல் தத்தளித்துக் கொண்டிருந்தன. இளங்காற்றில் தாமரை இலைகள் அசைந்த போது, அந்த ஒளி முத்துக்கள் அங்குமிங்கும் ஓடியது, கண்கொள்ளாக் காட்சியாயிருந்தது. இந்த இயற்கை அழகையெல்லாம் பார்த்து அனுபவிப்பதற்கு மனிதர்கள் மட்டும் அங்கே இல்லை.

ஆயனரின் அரண்ய வீட்டைச் சுற்றி முன்னொரு காலத்தில் நூற்றுக்கணக்கான சிற்பக்கலைச் சீடர்கள் வேலை செய்து கொண்டிருந்தார்கள். தற்சமயம் அங்கே சீடன் எவனும் காணப்படவில்லை. அங்கே இப்போது குடிகொண்டிருந்த சூனியத்தின் வேதனையை இன்னும் அதிகப்படுத்தும்படியாக அரண்ய வீட்டுக்குள்ளிருந்து ஒரே ஒரு தனிக் கல்லுளியின் சத்தம் ‘கல் கல்’ என்று கேட்டுக் கொண்டிருந்தது. ஆம்; வீட்டுக்குள்ளே அயனச் சிற்பியார் மீண்டும் கையில் கல்லுளி எடுத்து வேலை செய்து கொண்டிருந்தார். அருமைப் புதல்வியை ஆயனர் பறி கொடுத்து இப்போது ஒன்பது ஆண்டுகளுக்குமேல் ஆகிவிட்டன. இத்தனை காலமும் அவர் உயிர் வாழ முடிந்தது மீண்டும் சிற்பத் தொழிலில் கவனம் செலுத்திய காரணத்தினாலேதான்.

பன்னிரண்டு வருஷங்களுக்கு முன்னே, நாம் அந்தச் சிற்பக் கிரஹத்தில் பார்த்ததைக் காட்டிலும் இப்போது அதிகமான நடனச் சிலைகளைப் பார்க்கிறோம். சிலை வடிவம் ஒவ்வொன்றும் சிவகாமியை நினைவூட்டுகின்றன. மண்டபத்தின் சுவர்களிலே அந்த நாளில் நாம் பார்த்த சித்திரங்கள் எல்லாம் இப்போது நிறம் மங்கிப் போயிருக்கின்றன. இதிலிருந்து அஜந்தா வர்ண இரகசியத்தை இன்னும் ஆயனர் தெரிந்து கொள்ளவில்லையென்று நாம் ஊகித்துக் கொள்ளலாம். ஆயனரின் உருவத் தோற்றத்திலும் பெரிய மாறுதலைக் காண்கிறோம். அவருடைய தலை ரோமம் தும்பைப் பூவைப் போல் வெளுத்துப் போயிருக்கிறது. கண்கள் குழி விழுந்திருக்கின்றன; முகத்திலே சுருக்கங்கள் காணப்படுகின்றன. அவரை இப்போது ஆயனக் கிழவர் என்று கூறினால் யாரும் ஆட்சேபிக்க முடியாது.

ஆயனர் தமது வேலையில் முழுக்கவனத்தையும் செலுத்திக் கொண்டிருந்தபடியால், வீட்டின் வாசலில் இரட்டைக் குதிரை பூட்டிய ரதம் வந்து நின்ற சத்தம் அவர் காதில் விழவில்லை. “தாத்தா!” என்ற மழலைக் குரலைக் கேட்டதும் திரும்பிப் பார்த்தார். மாமல்ல நரசிம்ம சக்கரவர்த்தியும் அவருடன் இரு குழந்தைகளும் வாசற்படியைத் தாண்டி வந்து கொண்டிருந்தார்கள். மாமல்லரின் உருவமும் ஓரளவு மாறியிருந்தது. அவருடைய முகத்தில் யௌவனத்தின் தளதளப்புக்குப் பதிலாக முதிர்ச்சி பெற்ற கம்பீர தேஜஸ் குடிகொண்டிருந்தது. படபடப்புக்குப் பதிலாகத் தெளிந்த அறிவும் முரட்டுத் துணிச்சலுக்குப் பதிலாக வயிர நெஞ்சத்தின் உறுதியும் அவருடைய கண்களிலே பிரகாசித்தன.

அவருடன் வந்த குழந்தைகளின் முகத் தோற்றத்திலிருந்து அவர்கள் அண்ணனும் தங்கையுமாக இருக்க வேண்டுமென்று ஊகிக்க முடிந்தது. அண்ணனுக்கு வயது எட்டு; தங்கைக்கு ஆறு இருக்கும். மாமல்லருடைய சாயல் இருவர் முகத்திலும் காணப்பட்டது. “தாத்தா!” என்று கூவிக்கொண்டு இரு குழந்தைகளும் ஆயனரிடம் ஓடினார்கள். ஆயனர் அவர்களை, “என் கண்மணிகளே வாருங்கள்!” என்று சொல்லி வரவேற்றார். அவர்களைத் தம் தோளின் மேல் சாய்த்துக் கொண்டு கொஞ்சிச் சீராட்டினார். அவருடைய கண்களில் கண்ணீர் துளித்தது. அது குழந்தைகளைக் கண்டதனால் ஏற்பட்ட ஆனந்தக் கண்ணீரா, அல்லது நடந்திருக்கக் கூடியதையும் நடக்காமற் போனதையும் நினைத்துக் கொண்டதனால் ஏற்பட்ட தாபக் கண்ணீரா என்று யாரால் சொல்ல முடியும்!

குழந்தைகள் சற்று நேரம் ஆயனருடன் விளையாடிக் கொண்டிருந்த பிறகு, மாமல்ல சக்கரவர்த்தி அவர்களைப் பார்த்து, “குந்தவி! மகேந்திரா! இரண்டு பேரும் வெளியே ஓடிப்போய்ச் சிறிது நேரம் விளையாடிக் கொண்டிருங்கள். நான் தாத்தாவுடன் கொஞ்சம் பேசிவிட்டு வருகிறேன்!” என்று சொல்லிக் கொண்டே குழந்தைகளைக் கையைப் பிடித்து அழைத்துக் கொண்டுபோய் வெளியில் விட்டார். “கண்ணா! குழந்தைகளைப் பார்த்துக் கொள்!” என்று சாரதியைப் பார்த்துச் சொன்னார். அதோ குதிரைக் கடிவாளங்களைப் பிடித்துக் கொண்டு நிற்பவன் கண்ணபிரான்தான். அவன் முகத்தில் இப்போது கறுகறுவென்று மீசை வளர்ந்திருந்தது.

குழந்தைகளை வெளியில் விட்டு விட்டு வீட்டுக்குள்ளே திரும்பி வந்த மாமல்லரைப் பார்த்து ஆயனர், “பிரபு! தாங்கள் எனக்கு இட்ட கட்டளையை நிறைவேற்றிவிட்டேன். நூற்றெட்டாவது நடனச் சிலை இன்றோடு வேலை முடிகிறது” என்றார். சிவகாமியின் பிரிவினால் ஆயனரின் அறிவு நாளுக்கு நாள் சிதறிப்போய் வருவதைக் கண்ட நரசிம்மவர்ம சக்கரவர்த்தி, அவரை நூற்றெட்டு நடனத் தோற்றச் சிலைகளையும் பூர்த்தி செய்யும்படி கட்டளையிட்டிருந்தார். ஆயனர் வேலை செய்யத் தொடங்கிய நாளிலிருந்து அவருடைய அறிவு பாதுகாக்கப்பட்டு வந்தது. “ஆயனரே! என்னுடைய ஆயத்தங்களும் முடிந்து விட்டன. விஜயதசமியன்று யுத்தத்துக்குப் புறப்படுகிறோம். காலையில் ஆயுதபூஜை நடத்திவிட்டு மாலையில் வாதாபி யாத்திரை தொடங்குகிறோம்!” என்றார் மாமல்லர்.

“ஐயா! நானும் கேள்விப்பட்டேன்; திருக்கழுக்குன்றம் மலைச்சாரலில் வந்து சேர்ந்திருக்கும் மாபெரும் சைனியத்தைப் பற்றிக் குண்டோ தரன் கூறினான். கண்ணுக்கெட்டிய தூரம் யானைப் படையும், குதிரைப்படையும், காலாட்படையும் ஒரே சேனா சமுத்திரமாய் இருக்கிறதாமே? இன்னமும் வீரர்கள் வந்து சேர்ந்து கொண்டிருக்கிறார்களாமே? வாளும் வேலும் ஈட்டியும் மலை மலையாகக் குவிந்து கிடக்கின்றனவாமே? குண்டோ தரன் வந்து சொன்னதைக் கேட்டதும் எனக்கே திருக்கழுக்குன்றம் போய்ப் பார்க்க வேண்டுமென்று தோன்றியது. “ஆயனரே! திருக்கழுக்குன்றத்தில் இறங்கியிருக்கும் படைகள் நமது சைனியத்தில் மூன்றில் ஒரு பங்குதான்; வடக்கே பொன்முகலி நதிக்கரையில் ஒரு பெரிய சைனியம் நமது சேனாபதி பரஞ்சோதியின் தலைமையில் காத்திருக்கிறது. தெற்கேயிருந்து பாண்டியனுடைய சைனியம் விரைந்து வந்து கொண்டிருக்கிறது. வராக நதிக்கு அருகில் வந்துவிட்டதாக இன்று தான் செய்தி கிடைத்தது.

“பிரபு! என்னை மன்னிக்க வேண்டும், தாங்கள் காலங்கடத்திக் கொண்டிருப்பதாக எண்ணி நொந்து கொண்டிருந்தேன். எப்பேர்ப்பட்ட பகீரதப் பிரயத்தனம் செய்திருக்கிறீர்கள் என்று இப்போதுதான் தெரிகிறது….” “பகீரதப் பிரயத்தனம் என்றா சொன்னீர், ஆயனரே!” “ஆம் ஐயா!” “ஒரு சம்பவம் ஞாபகம் இருக்கிறதா? மகேந்திர பல்லவரும், நானும், நீங்களும் கடல் மல்லைத் துறைமுகத்தில் பாறைகளைச் சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தோம். திடீரென்று மழை பிடித்துக் கொண்டது. ஒரு பாறை இரண்டாய்ப் பிளந்தது போல் நடுவில் பள்ளமாயிருந்தது. பாறையில் பெய்த மழைத் தண்ணீர் அந்தப் பள்ளத்தின் வழியே தடதடவென்று கொட்டியது ‘ஆகாச கங்கை விழுகிறது!’ என்று நான் சொன்னேன். உடனே, மகேந்திர பல்லவர், ‘சிற்பத்துக்கு நல்ல விஷயம்; இங்கே பகீரதன் தவத்தைச் சித்திரிக்கலாம்’ என்றார். நீங்களும் அதை ஒப்புக் கொண்டு சிற்பிகளை அழைத்து வேலை தொடங்கும்படி சொன்னீர்கள். அப்போது நான் தந்தையிடம் பகீரதன் கதை சொல்லும்படி கேட்டுக் கொண்டேன்.

“பகீரதன் கதையை அன்று மகேந்திர பல்லவரிடம் கேட்ட போது எனக்கு ஒரே வியப்பாயிருந்தது. பகீரதனுடைய தவத்துக்கு என்னென்ன இடையூறுகள் நேர்ந்தன? அவ்வளவையும் சமாளித்து அவன் எடுத்த காரியத்தைச் சாதித்ததைக் குறித்துப் பெரிதும் ஆச்சரியப்பட்டேன். இளம்பிள்ளைப் பிராயத்தில் அப்பாவிடம் கேட்ட அந்தக் கதை இப்போது எனக்கு வெகு உபயோகமாயிருந்தது. ஆயனரே! வாதாபியிலிருந்து நான் உங்கள் குமாரியை அழைத்து வராமல் திரும்பி வந்தபோது, மூன்று வருஷத்துக்குள்ளே படை திரட்டிக் கொண்டு வாதாபிக்குப் போகலாம் என்று எண்ணியிருந்தேன். வரும் வழியெல்லாம் அவ்வாறுதான் நானும் பரஞ்சோதியும் திட்டம் போட்டுக் கொண்டு வந்தோம். மூன்று வருஷத்தில் நடத்த எண்ணிய காரியத்துக்கு ஒன்பது வருஷம் ஆகிவிட்டது.”

“பல்லவேந்திரா! ஒன்பது வருஷம் ஆயிற்று என்றா சொன்னீர்கள்? ஒன்பது யுகம் ஆனதாக எனக்குத் தோன்றுகிறது!” “எனக்கும் அப்படித்தான், ஆயனரே! சிவகாமியைப் பார்த்துப் பல யுகம் ஆகிவிட்ட மாதிரிதான் தோன்றுகிறது. ஆனாலும், நான் என்ன செய்ய முடியும்? இரண்டு வருஷம் நாட்டில் மழையில்லாமல் பஞ்சமாய்ப் போயிற்று. ஒரு வருஷம் பெரு மழையினால் தேசங்கள் நேர்ந்தன. இலங்கை இளவரசன் மானவன்மனுக்கு ஒத்தாசை செய்ய வேண்டி வந்தது. பாண்டியனுக்கும் சேரனுக்கும் மூண்ட சண்டையில் தலையிட்டுச் சமாதானம் செய்விக்க வேண்டியிருந்தது. இத்தகைய காரணங்களினால் மனச்சோர்வு ஏற்பட்ட போதெல்லாம் அடிக்கடி துறைமுகத்துக்குச் சென்று பகீரதனுடைய தவச் சிற்பத்தைப் பார்த்தேன். மீண்டும் ஊக்கமும் தைரியமும் அடைந்தேன். கடைசியில் பகீரதன் முயற்சி பலிதமடைந்ததுபோல், என்னுடைய பிரயத்தனமும் பூர்த்தியடைந்து விட்டது. அடுத்த வாரத்தில் போருக்குப் புறப்படப் போகிறேன்.”

“பிரபு! இது என்ன? ‘புறப்படப் போகிறேன்’ என்று சொல்கிறீர்கள்?” என்று கேட்டார் ஆயனர். “வேறு என்ன சொல்லவேண்டும், ஆயனரே?” “புறப்படப் போகிறோம்’ என்று சொல்ல வேண்டும். பல்லவேந்திரா! இன்னும் எத்தனை காலம் நான் உயிரோடிருப்பேனோ, தெரியாது. சிவகாமியை ஒரு தடவை கண்ணாலே பார்த்து விட்டாவது கண்ணை மூடுகிறேன்.” மாமல்லர் தம்முடைய கண்களில் துளித்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டு, “ஐயா! உம்முடைய மகளுக்காக நீர் உயிர் வாழ்ந்தே ஆக வேண்டும். சாவைப் பற்றி நினைக்கவே வேண்டாம். நீங்கள், வந்தே தீரவேண்டுமென்றால் அழைத்துப் போகிறேன். விஜயதசமியன்று புறப்பட ஆயத்தமாயிருங்கள்!” என்றார்.

Source

Previous articleRead Sivagamiyin Sabatham Part 3 Ch 57
Next articleRead Sivagamiyin Sabatham Part 4 Ch 2

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here