Home Kalki Read Sivagamiyin Sabatham Part 4 Ch 10

Read Sivagamiyin Sabatham Part 4 Ch 10

83
0
Read Sivagamiyin Sabatham Part 4 Ch 10 Free, Sivagamiyin Sabatham is a historical novel. Sivagamiyin Sabatham audiobook, Sivagamiyin Sabatham pdf, Sivagamiyin Sabatham full story
Sivagamiyin Sapatham Part 4 Ch 10 சிவகாமியின் சபதம் நான்காம் பாகம்: சிதைந்த கனவு அத்தியாயம் 10: மங்கையர்க்கரசி

Read Sivagamiyin Sabatham Part 4 Ch 10

சிவகாமியின் சபதம்

நான்காம் பாகம்: சிதைந்த கனவு

அத்தியாயம் 10: மங்கையர்க்கரசி

Read Sivagamiyin Sabatham Part 4 Ch 10

அர்த்த ராத்திரியில் அந்தப்புரத்துக்குள்ளே புகுந்த மாமல்லரின் காதிலே ஒலித்த யுத்த பேரிகையின் முழக்கமானது, அந்தக் காஞ்சி நகரில் வாழ்ந்த லட்சக்கணக்கான மக்கள் காதிலும் ஒலித்தது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவித உணர்ச்சியை அந்த முழக்கம் உண்டாக்கிற்று. அந்த நடுநிசி வேளையில், காஞ்சி அரண்மனையைச் சேர்ந்த நந்தவனத்தில், பிராயம் முதிர்ந்த ஒரு மனிதரும் கட்டழகியான ஓர் இளம் பெண்ணும் தனிமையாக உலாவிக் கொண்டிருந்தார்கள். வானத்திலே பிரகாசித்துக் கொண்டிருந்த சந்திரனோடு போட்டியிட்டுக் கொண்டு, அந்தப் பெண்ணின் வதன சந்திரன் பிரகாசித்துக் கொண்டிருந்தது. யுத்த பேரிகையின் முழக்கத்தைத் திடீரென்று கேட்டதும் பெருங்காற்றில் பூங்கொடி நடுங்குவதைப் போல், அந்த யுவதியின் உடம்பும் நடுங்கிற்று. பீதி நிறைந்த குரலில், “அப்பா! இது என்ன ஓசை?” என்று கேட்டுக் கொண்டே அந்தப் பேதைப் பெண் தன் தந்தையைக் கட்டிக் கொண்டாள்.

“குழந்தாய்! யுத்த பேரிகை முழங்குகிறது! நான் உன்னிடம் விடைபெற வேண்டிய சமயம் நெருங்கி விட்டது!” என்று அந்தப் பெரியவர் கூறினார். நிலா வெளிச்சத்தில் சற்று உற்றுப் பார்த்தோமானால் அந்த இருவரையும் நாம் ஏற்கெனவே பார்த்திருக்கிறோம் என்பது நினைவு வரும். ஆம்! அன்று பகலில் ஏகாம்பரேசுவரர் சந்நிதியில் புருஷர்களின் கோஷ்டியிலே அந்தப் பெரியவரும், பெண்களின் வரிசையிலே அந்த இளநங்கையும் நின்று கொண்டிருக்கவில்லையா? அந்தப் பெண்ணின் முகத்திலே அப்போது ததும்பிய பரவசமான பக்தி பாவத்தைக் கண்டு நாம் வியக்கவில்லையா? அவ்விருவரும் கொடும்பாளூர்ச் சோழ வம்சத்தைச் சேர்ந்த செம்பியன் வளவனும், அவனுடைய செல்வத் திருமகளுமேயாவர்.

கரிகால் வளவன் காலத்திலிருந்து சில நூற்றாண்டுகள் மிகப் பிரபலமாக விளங்கியிருந்த சோழ ராஜ்யமானது, நாளடைவில் சீரும் சிறப்பும் குன்றித் தெற்கே பாண்டியர்களாலும், வடக்கே பல்லவர்களாலும் நெருக்கப்பட்டு, மிக்க க்ஷீண நிலையை அடைந்ததோடு, சோழ வம்சமும் இரண்டு மூன்று கிளைகளாகப் பிரிந்து போயிருந்தது. உறையூரில் நிலைபெற்ற சோழ வம்சத்து மன்னர்கள் ஒரு சிறு ராஜ்யத்துக்கு உரியவர்களாயிருந்தார்கள். கொடும்பாளூர்க் கிளை வம்சத்தின் பிரதிநிதியாக அப்போது விளங்கிய செம்பியன் வளவனுக்குப் புத்திர பாக்கியம் இல்லை. குலத்தை விளங்க வைக்க ஒரு புதல்வி மட்டுமே இருந்தாள். அந்த அருமைக் குமாரிக்கு ‘மங்கையர்க்கரசி’ என்ற செல்வப் பெயரைச் செம்பியன் வளவன் சூட்டினான். ஆசை காரணமாகத் தகப்பன் சூட்டிய பெயர் என்றாலும் பெண்ணைப் பார்த்தவர்கள் அனைவரும் ‘இத்தகைய பெண்ணுக்கு இந்தப் பெயரேதகும்’ என்றார்கள். அப்படித் தேக சௌந்தரியத்திலும் குண சௌந்தரியத்திலும் அவள் சிறந்து விளங்கினாள்.

தன்னுடைய ஆயுள் முடிவதற்குள்ளே தன் மகளைத் தென்னாட்டின் சிறந்த இராஜவம்சம் ஒன்றில் பிறந்த இராஜகுமாரனுக்குக் கல்யாணம் செய்து கொடுத்து விட வேண்டும் என்ற ஆசை செம்பியன் மனத்திலே குடிகொண்டு, இரவு பகல் அதே கவலையாக இருக்கும்படி செய்தது. இந்த நிலையில், வாதாபி படையெடுப்புச் சைனியத்தில் வந்து சேரும்படி, தென்னாட்டு மன்னர் குலத்தினர் அனைவருக்கும் மாமல்லரிடமிருந்து ஓலை வந்தது போல் அவனுக்கும் மனோரதம் நிறைவேறுவதற்கு இதுவே தருணம் என்று எண்ணி உற்சாகமடைந்தான். இந்தத் தள்ளாத பிராயத்தில் அவன் போருக்குக் கிளம்பி வந்ததற்கு முக்கிய காரணம், காஞ்சி நகரில் அச்சமயம் பல தேசத்து இராஜகுமாரர்கள் கூடியிருப்பார்களென்றும், அவர்களில் யாருக்கேனும் மங்கையர்க்கரசியை மணம் புரிவிப்பது ஒருவேளை சாத்தியமாகலாம் என்றும் அவன் நம்பியதுதான்.

“அப்பா! உண்மையாகவே என்னை இங்கே விட்டு விட்டுப் போகப் போகிறீர்களா? இந்தப் பெரிய அரண்மனையில், முன்பின் தெரியாதவர்களுக்கு மத்தியில், நான் எப்படிக் காலம் கழிப்பேன்? ஒருவேளை யுத்தகளத்திலே தங்களுக்கு ஏதாவது நேர்ந்து விட்டால் என் கதி என்ன ஆவது!” என்று புலம்பினாள் செம்பியன் குமாரி மங்கையர்க்கரசி. “குழந்தாய்! நமது குல தெய்வமான முருகப் பெருமான் உன்னைக் காப்பதற்கு இருக்கும் போது நீ ஏன் கவலைப்பட வேண்டும்? எந்தப் பெருமானுடைய வேலாயுதமானது மலையைப் பொடியாக்கியதோ, கடல் நீரை வற்றச் செய்ததோ, சூரனை வதைத்ததோ, பானுகோபனை சம்ஹரித்ததோ, தேவர்களுக்கு அபயப் பிரதானம் அளித்ததோ, அத்தகைய வெற்றிவேல் உனக்கு என்றும் துணையாயிருக்கும். குழந்தாய்! நீ கொஞ்சமும் அதைரியப்படாமல் எனக்கு விடைகொடுக்க வேண்டும்” என்று செம்பியன் கூறியதைக் கேட்ட மங்கையர்க்கரசி, மெய்சிலிர்த்துப் பரவச நிலை அடைந்து நின்றாள்.

அவளுடைய பக்தி பரவச நிலையைத் தெரிந்து கொள்ளாத தந்தை, “அம்மா! வேலும் மயிலும் உனக்குத் துணையாக இருப்பதோடு, மாமல்ல சக்கரவர்த்தியின் தாயார் – மகேந்திர பல்லவரின் பட்டமகிஷி – புவனமகாதேவியும் உனக்கு ஆதரவாக இருப்பார். உன்னைத் தன் சொந்த மகளைப் போல் பாதுகாத்து வருவதாக எனக்கு வாக்குத் தந்திருக்கிறார். நீ உன் அன்னையை இளம்பிராயத்திலே இழந்து விட்டாய். புவனமகாதேவிக்கோ சொந்தப் புதல்வி கிடையாது. உன்னைத் தன் கண்மணியைப் போல் பாதுகாத்துத் தருவதாக என்னிடம் உறுதி கூறியிருக்கிறார். ஆகையால், என் செல்வ மகளே, நீ சிறிதும் கவலைப்பட வேண்டாம். போர்க்களத்துக்குப் போக எனக்குத் தைரியமாக அனுமதி கொடு!” என்றான். இதற்கும் மங்கையர்க்கரசி மறுமொழி கூறாமல் மௌனமாய் நிற்கவே செம்பியன் வளவன் இன்னமும் சொல்லலானான்.

“மகளே! நீ பால்மணம் மாறாத பச்சைக் குழந்தையாயிருந்தபோது, ஒரு பெரியவர் நமது வீட்டுக்கு வந்தார். அவர் உன்னைப் பார்த்தார்; உன் முகத்தை உற்றுப் பார்த்தார். உன் சின்னஞ்சிறு பிஞ்சுக் கைகளைத் தூக்கிப் பார்த்தார். பார்த்து விட்டு, ‘இந்தக் குழந்தையின் கையில் சங்கு சக்கர ரேகை இருக்கிறது; இவள் பெரிய மண்டலாதிபதியின் பட்டமகிஷியாவாள்!’ என்று சொன்னார். அந்த வார்த்தைகள் என் காதிலே இனிய தேனைப் போல் பாய்ந்தன. அன்று முதல் இராஜகுமாரன் எப்போது வரப் போகிறான், எங்கிருந்து வரப் போகிறான் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். அவனைத் தேடிக் கொண்டுதான் முக்கியமாக நான் இந்தக் காஞ்சி நகருக்கு வந்தேன்!….” மங்கையர்க்கரசி அப்போது அளவில்லாத பரபரப்புடன், “அப்பா! அப்பா! நேற்றிரவு நான் ஒரு அதிசயமான கனவு கண்டேன், அதைச் சொல்லட்டுமா?” என்று கேட்டாள்.

Source

Previous articleRead Sivagamiyin Sabatham Part 4 Ch 9
Next articleRead Sivagamiyin Sabatham Part 4 Ch 11

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here