Home Kalki Read Sivagamiyin Sabatham Part 4 Ch 13

Read Sivagamiyin Sabatham Part 4 Ch 13

95
0
Read Sivagamiyin Sabatham Part 4 Ch 13 Free, Sivagamiyin Sabatham is a historical novel. Sivagamiyin Sabatham audiobook, Sivagamiyin Sabatham pdf, Sivagamiyin Sabatham full story
Sivagamiyin Sapatham Part 4 Ch 13 சிவகாமியின் சபதம் நான்காம் பாகம்: சிதைந்த கனவு அத்தியாயம் 13: அகக் கண்காட்சி

Read Sivagamiyin Sabatham Part 4 Ch 13

சிவகாமியின் சபதம்

நான்காம் பாகம்: சிதைந்த கனவு

அத்தியாயம் 13: அகக் கண்காட்சி

Read Sivagamiyin Sabatham Part 4 Ch 13

திகம்பர சமணரால் வழிகாட்டப் பெற்று, நெடுமாறன் குகைக்குள்ளே நுழைந்தபோது, உள்ளிருந்து வந்த தூபப் புகையின் வாசனை அவனுடைய தலையை கிறுகிறுக்கச் செய்தது. மெதுவாகச் சமாளித்துக் கொண்டு உள்ளே சென்றான். சிறிது தூரம் சென்றதும் தென்பட்ட விசாலமான குகை மண்டபத்தில் ஓர் அபூர்வமான காட்சியைக் கண்டான். தீப ஸ்தம்பத்தின் மீதிருந்த பெரிய அகல் விளக்கின் தீபம் சுடர் விட்டுப் பிரகாசித்துக் கொண்டிருந்தது. ஒரு பக்கத்தில் வைத்திருந்த பாத்திரத்திலிருந்து தூபப் புகை வந்து கொண்டிருந்தது. தீபத்தின் வெளிச்சமும் தூபத்தின் புகையும் சேர்ந்து அங்கே தோன்றிய காட்சியை ஏதோ ஒரு மாயாலோகத்தின் கனவுக் காட்சியாகத் தோன்றும்படி செய்தது. நெடுமாறன் சற்று உற்றுப் பார்த்த பிறகு காட்சி சிறிது தெளிவடைந்து காணப்பட்டது. பத்துப் பன்னிரண்டு திகம்பர சமணர் வட்ட வடிவமாக உட்கார்ந்திருந்தார்கள். அவர்கள் அனைவரும் ஏதோ ஒரு மந்திரத்தை ஒரே குரலில் ஒரே விதமாக ஜபித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களில் ஒருவர் உடுக்கை போன்ற ஒரு வாத்தியத்தைக் கையிலே வைத்து முழக்கிக் கொண்டிருந்தார். மற்றொருவர் பல தந்திகள் உள்ள ஒரு முழு நீளமுள்ள வீணையைக் கையில் வைத்துக் கொண்டு அதன் நரம்புகளை விரலினால் தட்டிக் கொண்டிருந்தார். இந்த இரண்டு நாதங்களும் சேர்ந்துதான் ‘தரிரிம்’ ‘தரிரிம்’ என்ற ஒலியைக் கிளப்பி நெடுமாறன் உடம்பிலுள்ள நரம்புகளையெல்லாம் புடைத்தெழச் செய்தன.

வட்ட வடிவமாக உட்கார்ந்திருந்த சமணர்களுக்கு நடுவில் ஏறக்குறையப் பதினாறு வயதுள்ள ஒரு சிறுவன் காணப்பட்டான். மேற்படி மந்திர உச்சாரணத்துக்கும் வாத்தியங்களின் ஒலிக்கும் இசைய, அவனுடைய தேகம் இலேசாக ஆடிக் கொண்டிருந்தது. அவனுடைய கண்களோ முக்கால் பங்கு மூடியிருந்தன. கண்கள் திறந்திருந்த அளவில் வெள்ளை விழி மட்டும் தெரிந்தபடியால் முகம் பயங்கரத் தோற்றத்தை அளித்தது. நெடுமாறனை அழைத்து வந்த சமண முனிவர் அவனை நோக்கிச் சமிக்ஞை செய்து, எதுவும் பேச வேண்டாமென்றும், சப்தம் செய்யாமல் உட்கார வேண்டுமென்றும் தெரிவித்தார். நெடுமாறன் அவ்விதமே சப்தம் செய்யாமல் உட்கார்ந்திருந்தான்.

மந்திர உச்சாரணம், வாத்திய முழக்கம் ஆகியவற்றின் வேகம் வரவர அதிகரித்து வந்தது. திகம்பர மண்டலத்துக்கு மத்தியிலிருந்த சிறுவனுடைய உடம்பின் ஆட்டமும் விரைவாகிக் கொண்டு வந்தது. திடீரென்று மந்திர உச்சாரணமும், வாத்திய முழக்கமும் நின்றன. சிறுவன் ‘வீல்’ என்று சப்தமிட்டுக் கொண்டு தரையிலே சாய்ந்தான். சற்று நேரம் அந்தக் குகை மண்டபத்தில் ஒரு பயங்கர நிசப்தம் குடிகொண்டிருந்தது. கட்டையைப் போல் கீழே கிடந்த சிறுவனின் கண்ணிமைகளும் உதடுகளும் இலேசாகத் துடித்தன. கையில் வீணை வைத்துக் கொண்டிருந்த சமணர் அதன் ஒற்றை நரம்பை இலேசாகத் தட்டி விட்டு, “தம்பி! என் குரல் உனக்குக் கேட்கிறதா?” என்று வினவினார். “கேட்கிறது, சுவாமி!” என்று அந்தச் சிறுவனின் உதடுகள் முணுமுணுத்தன. “அப்படியானால் நான் கேட்கிற கேள்விகளுக்கு விடை சொல், சற்று முன்னால் நீ இருந்த இடத்துக்கும் இப்போதுள்ள இடத்துக்கும் ஏதேனும் வித்தியாசம் தெரிகிறதா?”

“சற்று முன்னால் நான் மலைக் குகையில் தரையில் கிடந்தேன். இப்போது ஆகாச வெளியில் மிதந்து கொண்டிருக்கிறேன். ஆகாச வெளியில் நினைத்த இடத்துக்கெல்லாம் போகக் கூடியவனாயிருக்கிறேன்.” “நீ மிதக்கும் இடத்தில் உன்னைச் சுற்றி என்ன பார்க்கிறாய்?” “என்னைச் சுற்றிலும் திரள் திரளாகப் புகை மண்டலங்கள் காணப்படுகின்றன; அந்தப் புகை மண்டலங்களுக்குள்ளே எத்தனை எத்தனையோ உருவங்கள் மங்கலாகக் காணப்படுகின்றன. அவை மறைந்து தோன்றிக் கொண்டிருக்கின்றன.” “தம்பி! நீ நிற்கும் இடத்திலேயே நிற்க வேண்டுமா? முன்னாலும் பின்னாலும் உன்னால் போகக்கூடுமா?” “முன்னாலும் பின்னாலும் மேலேயும் கீழேயும் நானா திசைகளிலும் நினைத்தபடியெல்லாம் நான் போகக் கூடியவனாயிருக்கிறேன்.” சிறுவனிடம் மேற்படி கேள்விகளைக் கேட்ட சமணர், நெடுமாறனை நோக்கி, “பாண்டிய குமாரா! இந்தப் பிள்ளை இப்போது ரிஷப தேவரின் அருள் மகிமையில் அகக்காட்சி பெற்றிருக்கிறான். இதற்கு முன் இருபதாயிரம் ஆண்டுக் காலத்தில் நடந்தவைகளையும், இனிமேல் இருபதினாயிரம் ஆண்டுக் காலத்தில் நடக்கப் போகும் சம்பவங்களையும் இவனால் நேருக்கு நேர் கண்டு சொல்ல முடியும்! தங்களுக்கு ஏதாவது தெரிந்து கொள்ள வேண்டுமா?”

நெடுமாறன் சற்றுத் தயங்கினான், ‘வருங்காலத்தை மறைத்துக் கொண்டிருக்கும் மேகத் திரையை விலக்கிக் கொண்டு எதிர்காலச் சம்பவங்களை, தான் பார்க்க வேண்டியது அவசியந்தானா? அப்படிப் பார்ப்பதனால் ஏதேனும் விபரீதம் ஏற்படுமோ? ஒன்றும் தெரிந்து கொள்ளாமல் அந்த மந்திரக் குகையிலிருந்து உடனே எழுந்து போய் விடலாமா?’ மனத்தில் இப்படி நெடுமாறன் எண்ணினானே தவிர, அவனை அங்கிருந்து எழுந்து போக விடாமல், ஏதோ ஒரு சக்தி தடுத்து அவனை அங்கேயே பலமாக இருத்திக் கொண்டிருந்தது. “ஆம், அடிகளே! வாதாபி யுத்த முடிவைப் பற்றித் தெரிந்து கொள்ள விரும்புகிறேன்” என்ற வார்த்தைகள் நெடுமாறன் வாயிலிருந்து தாமே வெளிவந்தன. உடனே, சமணர் தரையில் கிடந்த சிறுவனை நோக்கி, “தம்பி! கொஞ்சம் வடக்கு நோக்கிப் பிரயாணம் செய்து அங்கே என்ன பார்க்கிறாய் என்று சொல்லு!” என்றார்.

“ஆகட்டும், சுவாமி! இதோ வடதிசை நோக்கிப் போகிறேன்!” என்றான் சிறுவன். சற்றுப் பொறுத்து, “ஆ! என்ன பயங்கரம்!” என்றான். “தம்பி! அங்கே என்ன பயங்கரமான காட்சியை நீ பார்க்கிறாய்?” என்று சமணர் கேட்டார். “ஆகா! மிகப் பயங்கரமான யுத்தம் நடக்கிறது. கணக்கிலடங்காத வீரர்கள் வாட்களாலும் வேல்களாலும் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டு செத்து விழுகிறார்கள். எங்கே பார்த்தாலும் இரத்த வெள்ளம் ஆறாக ஓடுகிறது. பெரிய பெரிய பிரம்மாண்டமான யானைகள் பயங்கரமாகப் பிளிறிக் கொண்டு ஒன்றையொன்று தாக்குகின்றன. யுத்தம் ஒரு பெரிய பிரம்மாண்டமான கோட்டை மதிலுக்குப் பக்கத்தில் நடக்கிறது. கோட்டையின் பிரதான வாசலில் ஒரு பெரிய கொடி பறக்கிறது. அந்தக் கொடியில் வராகத்தின் உருவம் பொறிக்கப்பட்டிருக்கிறது. ஆகா! கோட்டைக் கதவு இதோ திறக்கிறது! கணக்கற்ற வீரர்கள் கோட்டைக்குள்ளேயிருந்து வெளியே வருகிறார்கள். ஆ! யுத்தம் இன்னும் கோரமாக நடக்கிறது. சாவுக்குக் கணக்கேயில்லை, கண்ணுக்கெட்டிய தூரம் ஒரே பிணக்காடு, அம்மம்மா! பார்க்கவே முடியவில்லை!”

சிறுவனுடைய கண்ணிமைகள் அப்போது இலேசாகத் துடித்ததைப் பார்த்த சமண குரு, “தம்பி! பயப்படாதே! உனக்கு ஒன்றும் நேராது; இன்னும் சிறிது உற்றுப் பார். போர்க்களம் முழுவதும் பார்த்து, மிகவும் நெருக்கமான சண்டை எங்கே நடக்கிறதென்று கவனி!” என்றார். “ஆம், ஆம்! அதோ ஓரிடத்தில் பிரமாதமான கைகலந்த சண்டை நடக்கிறது. குதிரை மேல் ஏறிய வீரன் ஒருவன் இரண்டு கைகளிலும் இரண்டு வாட்கள் ஏந்திப் பயங்கரப் போர் புரிகிறான். அவனைச் சுற்றிலும் எதிரிகள் சூழ்ந்து கொண்டு தாக்குகிறார்கள். அவன் தன்னந்தனியாக நின்று அவ்வளவு பேரையும் திருப்பித் தாக்குகிறான். அவனுடைய கை வாட்கள் அடிக்கடி மின்னலைப் போல் ஜொலிக்கின்றன. ஒவ்வொரு வாள் வீச்சுக்கும் ஒரு தலை உருளுகிறது. ஆகா! இதோ அந்த வீரனுக்குத் துணையாக இன்னும் சில வீரர்கள் வருகிறார்கள். அவர்களுக்கு நடுவில் மீனக்கொடி பறக்கிறது. ‘நெடுமாற பாண்டியர் வாழ்க! வாதாபிப் புலிகேசி வீழ்க!’ என்று அவர்கள் கர்ஜித்துக் கொண்டு எதிரிகள் மீது பாய்கிறார்கள்.” இப்படி அந்தச் சிறுவன் சொன்னபோது, இதுவரை சிறிது அலட்சிய பாவத்துடனேயே கேட்டுக் கொண்டு வந்த நெடுமாறன் திடுக்கிட்டு நிமிர்ந்து உட்கார்ந்தான். மேலே என்ன நடக்கப் போகிறது என்று தெரிந்து கொள்வதில் அவனுக்கு அப்போது அளவில்லாத பரபரப்பு உண்டாயிற்று.

மறுபடியும் சிறிது நேரம் சிறுவன் பேசாதிருந்தான். சமண குரு மீண்டும் அவனைத் தூண்டினார். மேலே என்ன நடக்கிறது என்று நன்றாகப் பார்த்துக் கூறும்படி ஆக்ஞாபித்தார். “ஆகா! சண்டை முடிந்து விட்டது, எதிரிகள் எல்லாரும் செத்து விழுந்து விட்டார்கள். வெற்றியடைந்த வீரர்கள் அந்த அஸகாய சூரனைச் சூழ்ந்து கொண்டு, ‘மீன் கொடி வாழ்க! நெடுமாற பாண்டியர் நீடூழி வாழ்க!’ என்று கோஷிக்கிறார்கள். ஆகா! அவர்களுடைய கோஷமும் ஜயபேரிகைகளின் முழக்கமும் சேர்ந்து காது செவிடுபடச் செய்கின்றன.”

“அதோ இன்னொரு வீரர் கும்பல் வருகிறது; அந்தக் கும்பலின் நடுவில் ஒரு ரதம் காணப்படுகிறது. ரதத்தின் மேல் ரிஷபக் கொடி பறக்கிறது. ரதத்தில் கம்பீர வடிவமுள்ள ஒருவர் வீற்றிருக்கிறார். அவருடைய முகத்தில் குரோதம் கொதித்துக் கொண்டிருக்கிறது. இந்த இரதத்தைச் சூழ்ந்து வரும் வீரர்கள் ‘மாமல்ல சக்கரவர்த்தி வாழ்க! என்று கோஷம் செய்கிறார்கள். ஆனால், அவர்களுடைய கோஷத்தில் அவ்வளவு சக்தி இல்லை. இரண்டு கூட்டமும் சந்திக்கிறது. ரதத்தில் வந்தவரும் குதிரை மேலிருந்தவரும் ஒருவரையொருவர் பார்க்கிறார்கள். இரண்டு பேரும் கீழே இறங்குகிறார்கள், சமீபத்தில் வருகிறார்கள். மீனக்கொடிக்குரிய வீரர், ரிஷபக் கொடிக்கு உரியவரைப் பார்த்து, ‘மாமல்லரே! பகைவர்கள் ஒழிந்தார்கள்; புலிகேசி இறந்தான்; வாதாபிக் கோட்டை நம் வசமாகி விட்டது; இனிமேல் தங்கள் காரியம், நான் போக விடை கொடுங்கள்!’ என்று கேட்கிறார். ஐயோ! ரிஷபக் கொடியாரின் முகத்தில் குரோதம் தாண்டவமாடுகிறது. அவர், ‘அடே பாண்டிய பதரே! எனக்கு வர வேண்டிய புகழையெல்லாம் நீ கொண்டு போய் விட்டாயல்லவா?” என்று சொல்லிக் கொண்டே உடைவாளை உருவுகிறார். மீனக் கொடியார், ‘வேண்டாம் சக்கரவர்த்தி! வேண்டாம்! நமக்குள் எதற்காகச் சண்டை?’ என்கிறார். ரிஷபக் கொடியார் அதைக் கேட்காமல் உடைவாளை வீசுகிறார், ஐயையோ!”

கேட்டவர்களின் ரோமம் சிலிர்க்கச் செய்த ‘வீல்’ சப்தத்துடன் இத்தனை நேரமும் தரையில் படுத்துக் கிடந்த சிறுவன் எழுந்து உட்கார்ந்தான். பீதியும் வெருட்சியும் நிறைந்த கண்களை அகலமாகத் திறந்து சுற்றிலும் பார்த்துத் திருதிருவென்று விழித்தான். நெடுமாற பாண்டியன் உடம்பு நடுங்கிக் கொண்டிருந்தது. சமண முனிவரைப் பார்த்து, “அப்புறம் நடந்ததைத் தெரிந்து கொள்ள வேண்டாமா? முக்கியமான தருணத்தில் எழுந்து விட்டானே?” என்றான். “இளவரசே! இன்றைக்கு இவ்வளவுதான், மறுபடி இன்றிரவு இவனை அகக் காட்சி காணும்படி செய்ய முடியாது. பிறகு நடந்ததைத் தெரிந்து கொள்ள விரும்பினால் நாளைக்குத் தாங்கள் திரும்பவும் இவ்விடத்துக்கு வந்தாக வேண்டும்!” என்றார்.

Source

Previous articleRead Sivagamiyin Sabatham Part 4 Ch 12
Next articleRead Sivagamiyin Sabatham Part 4 Ch 14

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here