Home Kalki Read Sivagamiyin Sabatham Part 4 Ch 18

Read Sivagamiyin Sabatham Part 4 Ch 18

94
0
Read Sivagamiyin Sabatham Part 4 Ch 18 Free, Sivagamiyin Sabatham is a historical novel. Sivagamiyin Sabatham audiobook, Sivagamiyin Sabatham pdf, Sivagamiyin Sabatham full story
Sivagamiyin Sapatham Part 4 Ch 18 சிவகாமியின் சபதம் நான்காம் பாகம்: சிதைந்த கனவு அத்தியாயம் 18: தமக்கையும் தம்பியும்

Read Sivagamiyin Sabatham Part 4 Ch 18

சிவகாமியின் சபதம்

நான்காம் பாகம்: சிதைந்த கனவு

அத்தியாயம் 18: தமக்கையும் தம்பியும்

Read Sivagamiyin Sabatham Part 4 Ch 18

அன்று சூரியாஸ்தமனம் ஆன பிறகு வானமாதேவி தன்னுடைய விலை மதிப்பில்லா ஆபரணங்கள் பத்திரமாக வைக்கப்பட்டிருந்த அறையில் வெள்ளிப் பெட்டிகளையும் தங்கப் பெட்டிகளையும் திறந்து எதையோ தேடிக் கொண்டிருந்தாள். திடீரென்று, “அக்கா! என்ன தேடுகிறாய்?” என்ற குரலைக் கேட்டுத் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தாள். அவளுக்குத் தெரியாமல், ஓசை உண்டாக்காமல், அந்த அறைக்குள் நெடுமாறன் பிரவேசித்திருந்தான். அவனைக் கண்டதும் வானமாதேவியின் திகைப்பு அதிகமாயிற்று. “அக்கா! என்ன தேடுகிறாய்?” என்று நெடுமாறன் மறுபடியும் கேட்டுவிட்டு ஏறிட்டுப் பார்த்தான். மறுமொழி சொல்ல முடியாமல் வானமாதேவி கொஞ்சம் தடுமாறிவிட்டு, “தம்பி! நீ எப்போது இங்கு வந்தாய்?” என்றாள். “நான் வந்து சிறிது நேரமாயிற்று. ஒருவேளை இந்தக் கத்தியைத்தான் தேடுகிறாயோ என்று கேட்பதற்காக வந்தேன்!” என்று சொல்லிக் கொண்டே பின்புறமாக மறைத்து வைத்துக் கொண்டிருந்த ஒரு சிறு கத்தியை நெடுமாறன் நீட்டினான்.

வானமாதேவி அந்தக் கத்தியை வெறித்துப் பார்த்தவாறு நின்றாள். அவளுடைய முகத்தில் முத்து முத்தாக வியர்வைத் துளிகள் துளித்து நின்றன. “அக்கா! என்னைக் கத்தியால் குத்திக் கொல்வதென்று முடிவாகத் தீர்மானித்திருந்தாயானால், இதை வாங்கிக் கொண்டு இப்போதே அந்தக் காரியத்தைச் செய்துவிடு! வீரத்துக்குப் பெயர்போன பாண்டிய குலத்திலே பிறந்து, பல்லவ குலத்திலே வாழ்க்கைப்பட்ட வானமாதேவி தன் அருமைச் சகோதரனைத் தூங்கும்போது கத்தியால் குத்திக் கொல்லுவது அழகாயிராது. பிறந்த குலம், புகுந்த குலம் இரண்டுக்கும் அதனால் இழுக்கு உண்டாகும்!” பரிகாசமும் பரிதாபமும் கலந்த குரலில் நெடுமாறன் கூறிய மேற்படி வார்த்தைகளைக் கேட்ட வானமாதேவியின் உள்ளம் என்ன பாடுபட்டது என்பதைச் சொல்லி முடியாது. ஒரு பக்கம் அவமானமும் ஆத்திரமும் அவளைப் பிடுங்கித் தின்றன; மற்றொரு பக்கம் கோபமும் ஆத்திரமும் பொங்கின.

எவ்வளவோ முயன்றும், அவளுடைய வாயிலிருந்து ஒரு வார்த்தையும் வரவில்லை. நெடுமாறன் மேலும் கூறினான்; “அல்லது ஒருவேளை விஷங்கொடுத்து என்னைக் கொல்லுவதாகத் தீர்மானித்திருந்தாயானால், கொடுக்கிற விஷம் நிச்சயமாய்க் கொல்லக்கூடியதுதானா என்று தெரிந்து கொண்டு கொடு. நீ எவ்வளவோ சிரமப்பட்டு வாங்கி வைத்திருந்த விஷத்தை அரண்மனைத் தோட்டத்தில் உள்ள மான்குட்டிக்கு கொடுத்துப் பார்த்தேன். அது உயிரை விடும் வழியாகக் காணப்படவில்லை. முன்னை விட அதிகமாகவே துள்ளி விளையாடுகிறது!”

நெடுமாறனுடைய வார்த்தை ஒவ்வொன்றும் விஷந்தோய்ந்த அம்பைப் போல் வானமாதேவியின் நெஞ்சில் பாய்ந்து அவளைக் கொல்லாமல் கொன்றது. அந்த வேதனையை மேலும் பொறுக்க முடியாதவளாய், தயங்கித் தயங்கி, “தம்பி! இதெல்லாம் என்ன பேச்சு? நானாவது உன்னைக் கொல்லவாவது?…” என்றாள் வானமாதேவி. “அக்கா! பல்லவ குலத்தில் வாழ்க்கைப்பட்டதற்குப் பொய்யும் புனைச்சுருட்டும் கற்றுக் கொண்டு விட்டாயா? நேற்றிரவு புவன மகாதேவியிடம் யோசனை கேட்கப் போனாயே? அவர் இந்த யோசனைதான் சொல்லிக் கொடுத்தாரா?” என்றான் நெடுமாறன்.

வானமாதேவிக்கு அவளுடைய ஆத்திரத்தையெல்லாம் பிரயோகிக்க இப்போது ஒரு வழி கிடைத்தது. கடுமை நிறைந்த குரலில், “நான் நினைத்தபடியே ஆயிற்று; இதையெல்லாம் உனக்குச் சொன்னது அந்தச் சோழ நாட்டுப் பெண்தானே?” என்றாள். அந்தப் பேதைப் பெண் மீது உன் ஆத்திரத்தைக் காட்ட வேண்டாம். அக்கா! அவள் அதற்குப் பாத்திரமில்லாதவள். சற்று முன்னால் அவள் என்னிடம் இதைப் பற்றிப் பிரஸ்தாபித்தது உண்மைதான். ஆனால் இந்தக் கத்தி காணாமற்போனது இன்றைக்கல்லவே? இரண்டு நாளாக இதை நீ தேடுகிறாய் அல்லவா?”

வானமாதேவி மீண்டும் சிறிது நேரம் திகைத்து நின்றுவிட்டு, “சமண சித்தர்களால் அறிய முடியாதது ஒன்றுமில்லை போலிருக்கிறது!” என்றாள். “ஆனால், உன்னுடைய மனத்திலுள்ளதை அறிவதற்குச் சித்தர்களின் சக்தி தேவையில்லை, அக்கா! பாவம்! நீ கள்ளங்கபடு அறியாதவள். வள்ளுவர் பெருமான், “அடுத்தது காட்டும் பளிங்கு போல் நெஞ்சம் கடுத்தது காட்டும் முகம்” என்று சொன்னது உன்னைப் பற்றியே சொன்னதாகத் தோன்றுகிறது. உன் மனத்திலுள்ள எண்ணத்தை உன்னுடைய முகமே எனக்குக் காட்டிவிட்டது. மேலும் நான் கண் குருடாகவும், காது செவிடாகவும் பிறக்கவில்லையே? இந்த அரண்மனைக்கு வந்ததிலிருந்து என் கண்களையும் காதுகளையும் திறந்து வைத்துக் கொண்டுதானிருக்கிறேன். உன் இடுப்பிலே இந்தக் கத்தியை நீ சதா செருகி வைத்துக் கொண்டிருப்பதையும் பார்த்தேன். இதை நீ ஒரு தடவை ஞாபகமறதியாகத் தரையில் வைத்தாய். உனக்குத் தெரியாமல் இதை எடுத்துக் கொள்வதில் எனக்கு எவ்விதச் சிரமும் ஏற்படவில்லை….”

“ஆகா! எப்பேர்ப்பட்ட அசடு நான்?” என்று முணுமுணுத்தாள் வானமாதேவி. “நீ அசடு இல்லை, அக்கா! ஆனால் இந்தக் காரியம் செய்வதற்கு உன் மனம் இடம் கொடுக்கவில்லை. அதனால்தான் மனத்திலுள்ளதை மறைக்கத் தெரியாமல் பைத்தியம் பிடித்தவள் போல் அலைந்தாய்!… ஆஹா! பத்து வருஷத்துக்கு முன்பு நீயும் நானும் மதுரை அரண்மனையில் இருந்தபோது, என் பேரில் நீ எவ்வளவு பிரியமாயிருந்தாய்? அந்த நாளை நினைத்தாலே எனக்கு மெய்சிலிர்க்கிறது. நான் விவரமறியாக் குழந்தையாயிருந்தபோதே, என் அன்னை இறந்து போனாள். பிறகு அரண்மனையில் சின்னராணி வைத்ததே சட்டமாயிருந்தது. தாயின் அன்பை அறியாத எனக்கு நீயே தமக்கையும் தாயுமாக இருந்து வந்தாய். வெகு காலம் வரையில் நீ என் சொந்தத் தமக்கையென்றே எண்ணிக் கொண்டிருந்தேன். உன் கலியாணத்தின் போதுதான், நீ என் மாற்றாந்தாயின் மகள் என்று அறிந்து கொண்டேன்.”

வானமாதேவியின் கண்களிலிருந்து தாரை தாரையாய்க் கண்ணீர் பொழியலாயிற்று. “நெடுமாறா! அதையெல்லாம் இப்போது எதற்காக நினைவூட்டுகிறாய்?” என்று விம்மலுக்கிடையே வானமாதேவி கேட்டாள். “அவ்வளவு அன்பாக என்னிடம் இருந்தாயே? அப்படிப்பட்டவள் எவ்வாறு இவ்வளவு கொடூர சித்தமுடையவள் ஆனாய்? என்னைக் கத்தியால் குத்தியோ விஷங்கொடுத்தோ கொல்லுவதற்கு எவ்வாறு துணிந்தாய்?….” என்றான் நெடுமாறன். “தம்பி! என்னை மன்னித்துவிடு, அவர் யுத்தத்துக்குப் புறப்படும்போது இவ்விடத்துப் பொறுப்பை என்னிடம் ஒப்புவித்து விட்டுச் சென்றார். உன்னால் ஏதாவது இங்கே அபாயம் நேரலாம் என்று எச்சரித்தார். அப்படி நேராமல் பார்த்துக் கொள்வதாக நான் வாக்குக் கொடுத்தேன். ஆனால் அவருக்கு வாக்குக் கொடுத்தபோது நீ இவ்விதம் சதி செய்யப் போகிறாய் என்று கனவிலும் கருதவில்லை!” என்று சொல்லி விட்டு மறுபடியும் கண்ணீர்விடத் தொடங்கினாள்.

“அக்கா! நீ கண்ணீர் விடுவதைப் பார்க்க எனக்குச் சகிக்கவில்லை. நான் என்ன சதி செய்தேன் என்பது எனக்கே தெரியவில்லை. நீ உன் பதிக்கு என்ன வாக்குக் கொடுத்தாய் என்பதையும் நான் அறியேன். ஒருவேளை என்னைக் கத்தியால் குத்திக் கொன்று விடுவதாக வாக்குக் கொடுத்திருந்தாயானால், அதைப் பற்றிக் கவலைப்படாதே! இதோ என் மார்பைக் காட்டச் சித்தமாயிருக்கிறேன்; உன் வாக்கை நிறைவேற்று!” என்று சொல்லிய வண்ணம் நெடுமாறன் கத்தியை வானமாதேவியின் கையில் கொடுப்பதற்காக நீட்டிக் கொண்டே, தன் மார்பையும் காட்டினான். “தம்பி! பெருந் துக்கத்தில் ஆழ்ந்திருக்கும் என்னோடு ஏன் விளையாடுகிறாய்? நீ என்ன உத்தேசத்தோடு இப்போது வந்தாயோ, அதைச் சொல்லு!” என்றாள் சக்கரவர்த்தினி.

“அக்கா! நான் விளையாடவில்லை, உண்மையாகவே சொல்லுகிறேன். உன்னைப் பற்றி நினைக்க நினைக்க எனக்கு எவ்வளவோ கர்வமாயிருக்கிறது. பாண்டியர் குலத்தில் பிறந்த பெண் இவ்வளவு பதிபக்தியுடையவளாயிருப்பது மிகப் பொறுத்தமானதுதான். பாண்டியர் குல தெய்வமான மீனாக்ஷி தேவி, பெற்ற தகப்பனான தக்ஷனை நிராகரித்து விட்டுச் சிவபெருமானே கதி என்று வந்து விடவில்லையா! பிறந்த வீட்டாரால் புருஷனுக்கு ஏதேனும் கேடு நேர்வதாயிருந்தால், புருஷனுடைய நன்மைக்கான காரியத்தைத் திடமாகச் செய்வதுதான் பாண்டியகுலப் பெண்களின் மரபு. ஆனால் என்னால் என்ன கேடு வரும் என்று நீ சந்தேகப்பட்டாய்? எந்த விதத்தில் நான் உன்னுடைய மன வெறுப்புக்குப் பாத்திரமானேன்? அதை மட்டும் சொல்லிவிட்டு இந்தக் கத்தியை என் மார்பில் பாய்ச்சி விடு!” என்றான் நெடுமாறன்.

“தம்பி என் வாயினால் அதைச் சொல்லியே தீரவேண்டுமா? உன்னோடு அழைத்து வந்திருக்கும் பாண்டிய சைனியத்தைக் கொண்டு காஞ்சி நகரையும் பல்லவ சிம்மாசனத்தையும் கைப்பற்ற வேண்டுமென்று நீ சதி செய்யவில்லையா?” “இம்மாதிரி துரோக சிந்தை எனக்கு ஏற்பட்டிருப்பதாக உனக்கு ஏன் சந்தேகம் வந்தது? யார் சொன்னார்கள், அக்கா!” “யார் சொல்லவேண்டும்! உன் முகத் தோற்றம், நடவடிக்கை பேச்சு எல்லாம் சந்தேகத்தை உண்டாக்கின. ‘வாதாபிக்குப் போவது சந்தேகம்’ என்று சொன்னாய், ‘இந்த அரண்மனையிலேயே அடைக்கலந்தந்தால் இங்கேயே இருந்து விடுகிறேன்’ என்று கூறினாய்; எப்போது பார்த்தாலும் ஏதோ சிந்தனையில் உள்ளவன் போல் காணப்பட்டாய். இதையெல்லாம் தவிர நள்ளிரவில் சமணசித்தர் கூட்டத்துக்குப் போய் வந்தாய். சமணர்களுடைய சூழ்ச்சியில் நீ அகப்பட்டுக் கொண்ட பிறகு நான் சந்தேகப்படுவதற்கு இன்னும் என்ன வேண்டும்?”

“அக்கா! வீணாகச் சமணர்களின் மீது பழி சொல்ல வேண்டாம். அவர்கள் வருங்கால நிகழ்ச்சிகள் சிலவற்றை எனக்குக் காட்டியது உண்மையே. ஆனால், அவற்றிலிருந்து நான் முடிவு செய்தது நீ நினைத்ததற்கு நேர் மாறானது. மாமல்லச் சக்கரவர்த்தி இங்கு இல்லாத சமயம் பார்த்து அவருடைய தலைநகரையும் ராஜ்யத்தையும் அபகரித்துக் கொள்ள நான் எண்ணவில்லை. ‘மாமா! மாமா! என்று சொல்லிக் கொண்டு என்னை ஓயாமல் சுற்றித் திரியும் குழந்தை மகேந்திரனுக்குத் துரோகம் செய்யவும் நான் எண்ணவில்லை. ஆனால் இந்த அரண்மனைக்கு வந்தது முதலாக எதைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தேனென்றால், எனக்கு நியாயமாக உரிய பாண்டிய ராஜ்யத்தையும் துறந்து, உலக வாழ்க்கையையும் துறந்து திகம்பர சமணனாகி விடலாமா என்றுதான்….”

“தம்பி! இது என்ன விபரீத யோசனை?” என்று வானமாதேவி திடுக்கிட்டுக் கேட்டாள். “எது விபரீத யோசனை, அக்கா! ஆறறிவுள்ள மனிதர்களைப் புலிகளாகவும் ஓநாய்களாகவும் ஆக்கி, லட்சக்கணக்கான ஜனங்கள் ஒருவரையொருவர் கொன்று மடிவதற்குக் காரணமாயிருக்கும் இராஜ்ய பாரத்தை ஏற்றுக் கொள்வது விபரீத யோசனையா? அல்லது புழு பூச்சிகளின் உயிருக்குக்கூட ஊறு செய்யாத ஜீவ காருண்ய மதத்தைச் சேர்ந்து கொல்லா விரதம் மேற்கொண்டு வாழ்வது விபரீத யோசனையா?” “தம்பி! நீ மிகப்படித்தவன்; உன்னோடு தத்துவ விசாரணை செய்வதற்கு வேண்டிய தகுதியற்றவள் நான். ஆயினும் நீ சமண சந்நியாசி ஆகிற யோசனை விபரீதமானதுதான். அதை நினைக்கும் போதே எனக்கு என்னவோ செய்கிறது!”

“என்னை நீ கத்தியால் குத்திக் கொன்றாலும் கொல்லுவாய். ஆனால் நான் திகம்பர சமணன் ஆவதை மட்டும் விரும்ப மாட்டாய்! போனால் போகட்டும்; அந்தக் கவலை உனக்கு வேண்டாம். நான் திகம்பர சமணன் ஆகப்போவதில்லை. அந்த யோசனையை நேற்றுச் சாயங்காலத்தோடு கைவிட்டு விட்டேன்….” “பின்னே, என்ன செய்ய உத்தேசித்திருக்கிறாய், தம்பி!” என்று அடங்காத ஆர்வத்துடன் பல்லவ சக்கரவர்த்தினி கேட்டாள். “நாளைய தினம் மதுரைக்குத் திரும்பிப் போகிறேன். அக்கா! ஒருவேளை எனக்கு அந்தச் சிரமம் கொடுக்காமல் நீ என்னைக் கொன்று விடுவதாயிருந்தால்… ” என்று கூறி மீண்டும் தன் கையிலிருந்த கத்தியை நீட்டினான்.

வானமாதேவி அவன் அருகில் வந்து அந்தக் கத்தியைப் பிடுங்கித் தூர எறிந்தாள். பிறகு, நெடுமாறனுடைய இருகரங்களையும் பிடித்துக் கொண்டு கண்களில் நீர் ததும்ப, குரல் தழதழக்க, “நெடுமாறா! இந்தப் பைத்தியக்காரியைத் தண்டித்தது போதும், இனிமேல் அந்தப் பேச்சை எடுக்காதே! உன்பேரில் சந்தேகப்பட்டது பெரிய குற்றந்தான், என்னை மன்னித்துவிடு!” என்றாள். உனக்கு இவ்வளவு மனக்கலக்கத்தை அளித்ததற்காக நான்தான் உன்னிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும். என்னை மனபூர்வமாக மன்னித்து ஆசீர்வாதம் செய், அக்கா!” என்றான் நெடுமாறன். “கடவுள் அருளால் உனக்குச் சகல மங்களங்களும் உண்டாகட்டும். சீக்கிரத்தில் உனக்குத் தகுந்த பத்தினியை மணந்து கொண்டு நெடுங்காலம் பாண்டிய சிம்மாசனத்தில் வீற்றிருப்பாய்….” “அக்கா! எனக்குத் தகுந்த பத்தினியைத் தேடிக் கொண்டுதான் நான் காஞ்சி நகருக்கு வந்தேன். அவளைப் பார்ப்பதற்காகவே இத்தனை நாளும் இங்கே தாமதித்தேன். நேற்றுச் சாயங்காலம் அவளை உன்னுடைய அரண்மனைத் தோட்டத்தில் சந்தித்துப் பேசிய பிறகுதான் என் உள்ளம் தெளிவடைந்தது. உன் ஆசீர்வாதம் பலித்து நான் பாண்டிய சிம்மாசனம் ஏறினால் அந்தப் பெண்தான் என் பட்டமகிஷியாயிருப்பாள்!” என்றான் நெடுமாறன்.

Source

Previous articleRead Sivagamiyin Sabatham Part 4 Ch 17
Next articleRead Sivagamiyin Sabatham Part 4 Ch 19

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here