Home Kalki Read Sivagamiyin Sabatham Part 4 Ch 21

Read Sivagamiyin Sabatham Part 4 Ch 21

96
0
Read Sivagamiyin Sabatham Part 4 Ch 21 Free, Sivagamiyin Sabatham is a historical novel. Sivagamiyin Sabatham audiobook, Sivagamiyin Sabatham pdf, Sivagamiyin Sabatham full story
Sivagamiyin Sapatham Part 4 Ch 21 சிவகாமியின் சபதம் நான்காம் பாகம்: சிதைந்த கனவு அத்தியாயம் 21: புலிகேசியின் கலைமோகம்

Read Sivagamiyin Sabatham Part 4 Ch 21

சிவகாமியின் சபதம்

நான்காம் பாகம்: சிதைந்த கனவு

அத்தியாயம் 21: புலிகேசியின் கலைமோகம்

Read Sivagamiyin Sabatham Part 4 Ch 21

புலிகேசிச் சக்கரவர்த்தி வாதாபியில் இல்லை, அஜந்தாவுக்குப் போயிருக்கிறான் என்று குண்டோ தரன் கூறிய செய்தி அங்கிருந்த நால்வருக்கும் வியப்பையும் குதூகலத்தையும், அளித்தது என்பது அவர்கள் வாயிலிருந்து வந்த விநோதமான சப்தங்களிலிருந்து தெரியவந்தது. “ஆஹாஹோஹோ!” “ஓஹ்ஹோ!” “ஹேஹேஹே!” “சேசேசே!” என்றெல்லாம் அர்த்தமில்லாத ஓசைகளை வெளியிட்ட பிறகு, ஏக காலத்தில் நால்வரும் குண்டோ தரனைப் பார்த்து, “நிஜந்தானா?” “உண்மையா?” “அஜந்தாவுக்கா போயிருக்கிறான்?” “புலிகேசிக்கு அஜந்தாவில் என்ன வேலை?” என்று சரமாரியாகக் கேள்விகளைப் பொழிந்தார்கள். அப்போது மாமல்லர், “இப்படி எல்லாருமாகக் குண்டோ தரனைத் துளைத்தால், அவன் எப்படி மறுமொழி சொல்லுவான்? கொஞ்சம் சும்மா இருங்கள்; குண்டோ தரா! உன் பிரயாணத்தைப் பற்றிய விவரங்களை ஆதியோடந்தமாகச் சொல்லு!” என்றார்.

குண்டோ தரன் சக்கரவர்த்தியைப் பணிந்து விட்டுக் கூறினான்; “பல்லவேந்திரா! இந்த ஏழை சந்தேகமறத் தெரிந்து கொண்டு, வந்த உண்மையைத்தான் கூறினேன். புலிகேசிச் சக்கரவர்த்தி அஜந்தாவுக்குத்தான் போயிருக்கிறார். யாரோ சீனாவிலிருந்து ஒரு யாத்திரிகன் வந்திருக்கிறானாம். அவன் பெயர் என் வாயில் நுழையவில்லை, ‘ஹியூன் சங்’ என்று சொன்னார்கள். அவன் உத்தர தேசத்தில் கன்யாகுப்ஜம், காசி, கயா முதலிய க்ஷேத்திரங்களையெல்லாம் பார்த்துவிட்டு வந்தானாம். கன்யாகுப்ஜத்தில் ஹர்ஷ சக்கரவர்த்தியின் ஆட்சி மகிமையைப் பற்றி அவன் வர்ணித்தானாம், ஹர்ஷ சக்கரவர்த்திக்குத் தான் குறைந்து போய் விடவில்லையென்று வாதாபிச் சக்கரவர்த்தி அந்த யாத்திரிகனைத் தானே நேரில் அழைத்துக் கொண்டு அஜந்தாவின் சிற்ப சித்திர அதிசயங்களைக் காட்டுவதற்காகப் போயிருக்கிறாராம்! பிரபு! இப்போதெல்லாம் புலிகேசிச் சக்கரவர்த்திக்குக் கலைகளிலே ரொம்ப மோகமாம்! வாதாபியிலுள்ள பாறைகளையெல்லாம் குடைந்து மாமல்லபுரத்துச் சிற்பங்களைப் போல் அமைத்துக் கொண்டிருக்கிறாராம்! நமது தொண்டை மண்டலத்திலிருந்து கைகால்களை வெட்டாமல் சிறைப்பிடித்துக் கொண்டு போன சிற்பிகள் சிலர் அந்தப் பாறையிலே வேலை செய்வதை நானே பார்த்தேன். ஆனால், ஒரு வேடிக்கையைக் கேளுங்கள். அந்தச் சீன யாத்திரிகன் ஹியூன் சங்கைப் புலிகேசி மேற்படி சிற்பப் பாறைகளுக்கு அழைத்துச் சென்று காட்டியபோது, ‘இந்தப் பாறைச் சிற்பங்களைப் பார்த்து விட்டுத்தான் காஞ்சி மகேந்திர பல்லவன் மாமல்லபுரத்தில் இதே மாதிரி செய்யப்பிரயத்தனப்பட்டான்! அவனுக்கு நல்ல புத்தி கற்பித்து விட்டு வந்தேன்!’ என்றானாம். இதைப் பற்றிக் கேட்ட போது எனக்கு என்னமாயிருந்தது, தெரியுமா? இரத்தம் கொதித்தது! வாதாபி நாற்சந்தியில் உள்ள ஜயஸ்தம்பத்தில் காஞ்சி மகேந்திர பல்லவரை வாதாபிப் புலிகேசி புறங்கண்டதாக எழுதியிருக்கும் பொய்யும் இன்னும் அப்படியேதான் இருக்கிறது. பிரபு! இதற்கெல்லாம் காலம் இன்னும் மூன்று மாதந்தானே என்று மனத்தைத் திடப்படுத்திக் கொண்டு திரும்பி வந்தேன். வாதாபியில் யுத்த ஏற்பாடுகள் ஒன்றுமே நடக்கவில்லை. இந்த வருஷம் நம்முடைய படையெடுப்பை அவர்கள் எதிர்பார்க்கவே இல்லையாம்! வாதாபிச் சைனியம் வடக்கே நர்மதைக் கரையிலும் கிழக்கே வேங்கியிலுமாகச் சிதறிக் கிடக்கிறது!”

இவ்விதம் குண்டோ தரன் சொல்லிச் சற்று நிறுத்தியதும், மாமல்லர் பரஞ்சோதியைப் பார்த்து, “சேனாதிபதி! பார்த்தீரா? நம் சத்ருக்னனுடைய யுக்தி இவ்வளவு நன்றாகப் பலிக்கும், என்று நாம் கூட எதிர்பார்க்கவில்லையல்லவா?” என்றார்! சத்ருக்னன் அப்போது பணிவான குரலில், “பல்லவேந்திரா அடியேனுடைய யுக்தி என்று ஏன் சொல்லுகிறீர்கள்? தாங்களும் சேனாதிபதியும் சேர்ந்து தீர்மானித்ததைத்தானே நான் நிறைவேற்றினேன்!” என்றான். அதற்குச் சேனாதிபதி பரஞ்சோதி, “சத்ருக்னர் சொல்வது உண்மைதான்! எல்லாம் மகேந்திர பல்லவரிடம் நாம் மூவரும் கற்றுக் கொண்டதுதானே? இந்த யுத்தத்திலே நாம் ஜயம் பெற்றோமானால் அதனுடைய பெருமை முழுவதும் விசித்திர சித்தருக்கே சேர வேண்டியது!” என்றார். “சேனாதிபதி! ‘யுத்தத்தில் ஜயம் பெற்றோமானால்.. என்று நீங்கள் சொல்வதை நான் ஆட்சேபிக்கிறேன். ஜயத்தைப் பற்றி என்ன சந்தேகம் இருக்கிறது? ஆனால், எந்த ‘யுக்தி’யைப் பற்றி நீங்கள் எல்லோரும் பேசுகிறீர்கள் என்பது எனக்கு விளங்கவில்லை, தயவுசெய்து சொன்னால் தேவலை!” என்றான் ஆதித்தவர்மன்.

“அப்படிக் கேள், தம்பி! அதைச் சொன்னால் மகேந்திர பல்லவர் எங்களுக்கு அளித்த பயிற்சி இப்போது எவ்வளவு தூரம் பயன்படுகிறது என்பதைத் தெரிந்து கொள்வாய். சென்ற ஒன்பது வருஷமாக நானும் சேனாதிபதியும் இந்தப் படையெடுப்புக்காக ஆயத்தம் செய்து வந்த போது, சத்ருக்னனுடைய ஒற்றர் படையும் மிகத் திறமையாக வேலை செய்து வந்தது. நம் ஒற்றர் படையிலே சிலர் சத்ருக்னனுடைய தூண்டுதலின் பேரில் நம் யுத்த ரகசியங்களை வாதாபிச் சக்கரவர்த்திக்கு விற்பனை செய்யத் தொடங்கினார்கள். முதலில் சில காலம் உண்மையான தகவல்களையே அனுப்பிக் கொண்டிருந்தபடியால் புலிகேசிக்கு நம்பிக்கை ஏற்பட்டது. மூன்று வருஷத்துக்கு முன்னால், ‘இந்த வருஷம் பல்லவ சைனியம் வாதாபியின் மேல் படையெடுத்து வரப் போகிறது’ என்று செய்தி போயிற்று. புலிகேசி அதை நம்பிப் பெரிய ஆயத்தங்கள் செய்திருந்தான். ஆனால், பல்லவ சைனியம் வராமல் ஏமாந்தான். இப்படியே மூன்று வருஷம் ஏமாந்த பிறகு புலிகேசி கோபங்கொண்டு பழைய ஒற்றர்களையெல்லாம் தள்ளி விடச் செய்தான். புதிய ஒற்றர்கள் இந்த வருஷத்தில், வாதாபி மேல் படையெடுக்கும் உத்தேசமே இங்கு இல்லை என்றும், மானவன்மனுக்கு இலங்கையைப் பிடித்துக் கொடுப்பதற்காகவே பல்லவ சைனியம் சேகரிக்கப்படுகின்றதென்றும் செய்தி அனுப்பினார்கள். புலிகேசி மேற்படி செய்தியைப் பூரணமாய் நம்பி விட்டான் என்று முன்னமே தெரிந்து கொண்டோ ம். துங்கபத்திரை நதிக்கரையிலிருந்த சளுக்க சைனியத்தை நர்மதைக்கும் வேங்கிக்கும் பகிர்ந்து அனுப்பி விட்டதாகவும் அறிந்தோம். இப்போது குண்டோ தரன் சொல்வதிலிருந்து, புலிகேசியே அஜந்தாவுக்குப் போயிருக்கிறான் என்று தெரிகிறது. சத்ருக்னனின் யுக்தி பலித்திருக்கிறது அல்லவா?

இப்படி மாமல்லர் கூறி முடித்ததும், “பல்லவேந்திரா! இலங்கை இளவரசர் இந்த வகையிலும் நமக்குப் பேருதவி செய்திருப்பதாகத் தெரிகிறதே! மானவன்மர் காஞ்சியில் வந்து இருந்ததனால்தானே புலிகேசியின் கண்ணில் சத்ருக்னன் இவ்வளவு நன்றாக மண்ணைத் தூவ முடிந்தது!” என்றான் ஆதித்தவர்மன். சமணர்களால் மனம் குழம்பிப் போயிருந்த குமார பாண்டியனை மதுரைக்குத் திருப்பி அனுப்பி விட்டுப் பாண்டிய சைனியத்தைப் போருக்கு அழைத்துக் கொண்டு வருகிறாரே, அந்த உதவிதான் சாமான்யப்பட்டதா?” என்றான் சத்ருக்னன். அப்போது மாமல்லர் கடுமையான குரலில், “மானவன்மன் என்னதான் நமக்கு உதவி செய்திருக்கட்டும்; அவன் என்னை ஏமாற்றிய காரியத்தை என்னால் மறக்கவே முடியாது; மன்னிக்கவும் முடியாது!” என்றார். “பல்லவேந்திரா! இது என்ன? தங்களை இலங்கை இளவரசர் எந்த விஷயத்தில் ஏமாற்றினார்?” என்று சேனாதிபதி கேட்டார். “மானவன்மன் நம்மோடு வாதாபிக்கு வரக் கூடாது என்பதற்கு, ஒரு முக்கியமான காரணம் அவனுக்கு நான் சொன்னேன். போர்க்களத்தில் அவன் ஒருவேளை வீரசொர்க்கம் போகும்படி நேர்ந்துவிட்டால், இலங்கை இராஜ வம்சம் சந்ததி அற்றுப் போய் விடும்; ஆகையால் அவன் வரக் கூடாது என்று சொல்லியிருந்தேன். இந்த விஷயத்திலேதான் மானவன்மன் என்னை ஏமாற்றி விட்டான்!” என்றார் சக்கரவர்த்தி. “இதில் ஏமாற்றுவதற்கு என்ன இருக்கிறது?” என்றான் ஆதித்தவர்மன். “நாம் புறப்பட்டு வந்த ஒரு வாரத்துக்குள் இலங்கை இராஜ வம்சத்துக்குச் சந்ததி ஏற்பட்டு விட்டது! மானவன்மனுடைய மனைவி நாம் புறப்படும் போது பத்து மாதக் கர்ப்பிணியாம். நாம் புறப்பட்ட ஐந்தாம் நாள் அவளுக்கு ஆண் குழந்தை பிறந்ததாம்! இந்த விஷயத்தில் சத்ருக்னன் கூட எனக்கு உண்மையைத் தெரியப்படுத்தாமல் இருந்து விட்டான்!” என்று மாமல்லர் கூறுவதற்குள்ளே சேனாதிபதி உள்பட எல்லோரும் ‘கொல்’ என்று சிரித்தார்கள். இதற்கிடையில் “ஓஹோ! இப்போது தெரிந்தது!” என்றான் குண்டோ தரன். “உனக்கு என்ன தெரிந்தது இப்போது புதிதாக?” என்று மாமல்லர் கேட்டார்.

“பிரபு! அதோ அந்த அரச மரத்தில் நான் ஏறி இருந்த போது தெற்கே ஒரு பெரிய புழுதிப்படலம் தெரிந்தது. ஏதோ படை திரண்டு வருவது போல் தோன்றியது. ‘எந்த சைனியம் இப்படிச் சக்கரவர்த்திக்குப் பின்னால் வருகிறது?’ என்று யோசித்தேன். தாங்கள் பேசிக் கொள்வதிலிருந்து இலங்கை இளவரசர் தான் பாண்டிய சைனியத்துடன் அவசரமாக வருகிறார் என்று தெரிந்தது” என்றான் குண்டோ தரன். “ஓஹோ! அதற்குள் வந்து விட்டானா?” என்று மாமல்லர் கூறிய போது நிலா வெளிச்சத்தில் அவருடைய முக மலர்ச்சி நன்றாகத் தெரிந்தது. பிறகு அவர் பரஞ்சோதியைப் பார்த்து, “சேனாதிபதி! ஆகக்கூடி, நீங்கள் எல்லாரும் என்னதான் சொல்கிறீர்கள்! மானவன்மனுடைய தவறை மன்னித்து அவனையும் நம்மோடு அழைத்துப் போக வேண்டும் என்று சொல்கிறீர்களா?” என்று கேட்டார்.

“ஆம், பிரபு! அழைத்துப் போக வேண்டியதுதான்!” என்று சேனாதிபதி கூறிய குரலில் ஓரளவு தயக்கம் இருக்கத்தான் செய்தது. “அப்படியானால் ஒன்று செய்யுங்கள்; நீங்கள் மூவரும் கொஞ்சம் முன்னால் நதியைக் கடந்து சென்று இன்றிரவு சைனியம் தங்குவதற்கு வேண்டிய ஏற்பாடுகளைக் கவனியுங்கள். நானும் குண்டோ தரனும் இங்கேயே இருந்து மானவன்மனை அழைத்து வருகிறோம். குண்டோ தரனிடம் நான் கேட்க வேண்டிய சில விஷயங்களும் இருக்கின்றன” என்று மாமல்லர் கூறவும், குறிப்பறியும் ஆற்றல் வாய்ந்த அறிவாளிகளாகிய மற்ற மூவரும் உடனே கிளம்பிச் சென்று, நதியில் அவர்களுக்காகக் காத்திருந்த படகில் ஏறிக் கொண்டார்கள். அவர்கள் சென்றதும் மாமல்லர் குண்டோ தரனை ஏறிட்டுப் பார்த்தார். மெல்லிய குரலில் குண்டோ தரன், “பல்லவேந்திரா! வாதாபியில் ஆயனரின் குமாரியைப் பார்த்தேன்; சௌக்கியமாயிருக்கிறார். நம்முடைய வரவை இரவும் பகலும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்” என்றான். “அந்தப் பாதகியின் சௌக்கியத்துக்கு என்ன குறைவு? சௌக்கியத்தையும் சாந்தத்தையும் இழந்து தவிப்பவன் நான் அல்லவா?” என்று நரசிம்மவர்மர் முணு முணுத்தார்.

Source

Previous articleRead Sivagamiyin Sabatham Part 4 Ch 20
Next articleRead Sivagamiyin Sabatham Part 4 Ch 22

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here