Home Kalki Read Sivagamiyin Sabatham Part 4 Ch 27

Read Sivagamiyin Sabatham Part 4 Ch 27

101
0
Read Sivagamiyin Sabatham Part 4 Ch 27 Free, Sivagamiyin Sabatham is a historical novel. Sivagamiyin Sabatham audiobook, Sivagamiyin Sabatham pdf, Sivagamiyin Sabatham full story
Sivagamiyin Sapatham Part 4 Ch 27 சிவகாமியின் சபதம் நான்காம் பாகம்: சிதைந்த கனவு அத்தியாயம் 27: இதயக் கனல்

Read Sivagamiyin Sabatham Part 4 Ch 27

சிவகாமியின் சபதம்

நான்காம் பாகம்: சிதைந்த கனவு

அத்தியாயம் 27: இதயக் கனல்

Read Sivagamiyin Sabatham Part 4 Ch 27

சொல்ல முடியாத வியப்புடனே தம்மைப் பார்த்த சிவகாமியை சர்ப்பத்தின் கண்களையொத்த தமது காந்த சக்தி வாய்ந்த கண்களினாலே நாகநந்தியடிகள் சற்று நேரம் உற்றுப் பார்த்தார். “சிவகாமி! நான் சொல்வதை நீ நம்பவில்லையா? என் நெஞ்சைத் திறந்து உனக்கு நான் காட்டக் கூடுமானால் இந்தக் கடின இதயத்தைப் பிளந்து இதற்குள்ளே இரவும் பகலும், ஜுவாலை விட்டு எரிந்து கொண்டிருக்கும் தீக்கனலை உனக்கு நான் காட்ட முடியுமானால்….” என்று சொல்லிக் கொண்டே பிக்ஷு தம் மார்பில் படீர் படீர் என்று இரண்டு தடவை குத்திக் கொண்டார். உடனே அவருடைய இடுப்பு வஸ்திரத்தில் செருகிக் கொண்டிருந்த சிறு கத்தியை எடுத்து, அதன் உறையைச் சடாரென்று கழற்றி எறிந்து விட்டுத் தம் மார்பிலே அக்கத்தியால் குத்திக் கொள்ளப் போனார். சிவகாமி சட்டென்று அவருடைய கையைப் பிடித்துக் கத்தியால் குத்திக் கொள்ளாமல் தடுத்தாள்.

சிவகாமி தன் கரத்தினால் நாகநந்தியின் கையைப் பிடித்திருந்த சொற்ப நேரத்தில், இரண்டு அதிசயமான அனுபவங்களை அடைந்தாள். நாகநந்தியின் கரமும் அவருடைய உடல் முழுவதும் அப்போது நடுங்குவதை உணர்ந்தாள். ஒன்பது வருஷத்துக்கு முன்னால் புத்த பிக்ஷுவைச் சிவகாமி தன்னுடைய தந்தையையொத்தவராய்க் கருதியிருந்த போது சில சமயம் அவருடைய கரங்களைத் தற்செயலாகத் தொட்டுப் பார்க்க நேர்ந்ததுண்டு. அப்போது அவளுடைய மனத்தில், ‘இது என்ன வஜ்ர சரீரம்! இவருடைய தேகமானது கேவலம் சதை, இரத்த, நரம்பு, தோல் இவற்றின் சேர்க்கையே பெறாமல் முழுவதும் எலும்பினால் ஆனதாக அல்லவா தோன்றுகிறது? எப்பேர்ப்பட்ட கடின தவ விரதங்களை அனுஷ்டித்து இவர் தம் தேகத்தை இப்படிக் கெட்டிப்படுத்தியிருக்க வேண்டும்?’ என்று எண்ணமிட்டதும் உண்டு. அதே புத்த பிக்ஷுவின் தேகம் இப்போது பழைய கெட்டித் தன்மையை இழந்து மிருதுத் தன்மையை அடைந்திருந்ததைச் சிவகாமி உணர்ந்து அதிசயித்தாள்.

நாகநந்தி சற்று நேரம் கையில் பிடித்த கத்தியுடன் சிவகாமியைத் திருதிருவென்று விழித்துப் பார்த்துக் கொண்டிருந்தார். பிறகு சுய உணர்வு திடீரென்று வந்தவரைப் போல் கையிலிருந்த கத்தியைத் தூரத்தில் விட்டெறிந்தார். உடனே சிவகாமியும் அவருடைய கையை விட்டாள். “சிவகாமி! திடீரென்று அறிவு கலங்கி மெய்ம்மறந்து போனேன்! சற்று முன் உன்னிடம் என்ன சொன்னேன், எதற்காக இந்தக் கத்தியை எடுத்தேன் என்பதைக் கொஞ்சம் ஞாபகப்படுத்துவாயா?’ என்று புத்த பிக்ஷு கேட்டதற்குச் சிவகாமி, “சுவாமி! சற்று முன்னால் தாங்கள் புத்த பிக்ஷு விரதத்தைக் கைவிடப் போவதாகவும், சிம்மாசனம் ஏறி இராஜ்யம் ஆளப் போவதாகவும் சொன்னீர்கள்” என்று கூறிவிட்டுத் தயங்கினாள்.

“ஆம், சிவகாமி! நான் கூறியது உண்மை. அதற்காகவே நான் அஜந்தாவுக்குப் போகிறேன். முப்பத்தைந்து வருஷத்துக்கு முன்னால் அஜந்தா நதிக்கரையில் பிக்ஷு விரதம் ஏற்றேன். அதே நதியில் அந்த விரதத்திற்கு ஸ்நானம் செய்து விட்டு வரப்போகிறேன். அஜந்தா சங்கிராமத்தின் தலைவராகிய எந்தப் பூஜ்ய புத்த குருவினிடம் தீக்ஷை பெற்றேனோ, அவரிடமே இப்போது விடுதலை பெற்று வரப் போகிறேன், அது உனக்குச் சம்மதந்தானே?” என்றார் நாகநந்தியடிகள். சிவகாமி, இன்னதென்று விவரம் தெரியாத பயத்தினால் பீடிக்கப்பட்டவளாய், “சுவாமி! இது என்ன காரியம்? இத்தனை வருஷ காலமாக அனுசரித்த புத்த தர்மத்தைத் தாங்கள் எதற்காகக் கைவிட வேண்டும்? அதனால் தங்களுக்கு உலக நிந்தனை ஏற்படாதோ? இத்தனை நாள் அனுஷ்டித்த விரதம், தவம் எல்லாம் நஷ்டமாகுமே? எந்த லாபத்தைக் கருதி இப்படிச் செய்யப் போகிறீர்கள்!” என்றாள்.

இப்படிக் கேட்டபோதே, அவளுடைய உள்ளுணர்ச்சியானது இந்தக் கேள்வியையெல்லாம் தான் கேட்பது மிகப் பெரிய தவறு என்றும், அந்தத் தவற்றினால் பிக்ஷு விரித்த வலையிலே தான் விழுந்து விட்டதாகவும் உணர்த்தியது. “என்ன லாபத்துக்காக என்றா கேட்கிறாய்!” என்று திரும்பிக் கேட்டு விட்டு, “ஹா ஹா ஹா” என்று உரத்துச் சிரித்தார். “உனக்குத் தெரியவில்லையா? அப்படியானால், சொல்கிறேன் கேள்! முப்பத்தைந்து வருஷ காலமாக அனுஷ்டித்த புத்த பிக்ஷு விரதத்தை நான் கைவிடப் போவது உனக்காகத்தான், சிவகாமி! உனக்காகவே தான்! நான் அஜந்தாவில் சம்பிரதாயமாக, உலகம் அறிய, குருவினிடம் அனுமதி பெற்று விரதத்தை விடப் போகிறேன். ஆனால், விரத பங்கம் பல வருஷங்களுக்கு முன்னாலேயே நேர்ந்து விட்டது. என்றைய தினம் உன்னுடைய தகப்பனார் ஆயனரின் அரண்ய வீட்டில், அற்புதச் சிலைகளுக்கு மத்தியிலே உயிருள்ள சிலையாக நின்ற உன்னைப் பார்த்தேனோ, அன்றைக்கே என் விரதத்துக்குப் பங்கம் வந்து விட்டது. ஆனால், அதற்காக நான் வருத்தப்படவில்லை. உன்னுடன் ஒருநாள் வாழ்வதற்காகப் பதினாயிரம் வருஷம் நரகத்திலே கிடக்க வேண்டுமென்றால், அதற்கும் நான் ஆயத்தமாயிருக்கிறேன். உன்னுடைய அன்பை ஒரு கண நேரம் பெறும் பாக்கியத்துக்காக என்றென்றைக்கும் மோட்சத்தை இழந்து விட வேண்டும் என்றால் அதற்கும் சித்தமாயிருக்கிறேன்….”

சிவகாமி பயந்து நடுங்கினாள், இத்தனை நாளும் அவள் மனத்திற்குள்ளேயே புதைந்து கிடந்த சந்தேகம் இன்று உண்மையென்று தெரியலாயிற்று. ஆனால்…இந்தக் கள்ள பிக்ஷு இத்தனை நாளும் ஏன் இதையெல்லாம் தம் மனத்திற்குள்ளே மறைத்து வைத்துக் கொண்டிருந்தார்? இத்தனை காலமும் தன்னைத் தொந்தரவு செய்யாமல், எந்த விதத்திலும் வற்புறுத்தாமல் சுதந்திரமாக ஏன் விட்டு வைத்திருந்தார்? அவள் மனத்தில் எழுந்த மேற்படி கேள்விக்குத் தட்சணமே மறுமொழி கிடைத்தது.

“சிவகாமி! என்னுடைய ஆத்மாவை நான் காப்பாற்றிக் கொள்வதற்கும் உன்னுடைய வாழ்க்கைச் சுகத்தை நீ பாதுகாத்துக் கொள்வதற்கும் ஒரு சந்தர்ப்பம் ஒன்பது வருஷத்துக்கு முன்னால் ஏற்பட்டது. மாமல்லன் இங்கு வந்து உன்னை அழைத்தபோது நீ அவனுடன் போயிருந்தாயானால், அல்லது உன்னை அவனிடம் சேர்ப்பிப்பதற்கு எனக்காவது ஒரு சந்தர்ப்பம் கொடுத்திருந்தாயானால், நான் என் விரதத்தை ஒருவேளை காப்பாற்றிக் கொண்டிருப்பேன். நீயும் உன் வாழ்க்கை இன்பத்தைப் பாதுகாத்துக் கொண்டிருக்கலாம். ஆனால், நீ என் உண்மையான நோக்கத்தைத் தெரிந்து கொள்ளாமல் அநாவசியமாகச் சந்தேகித்து விஷக் கத்தியை என் முதுகின் மேல் எறிந்து காயப்படுத்தினாய். அப்போது அந்த விஷக்கத்தி என்னைக் கொல்லவில்லை. ஆனால், அதே கத்தியானது இப்போது என்னைத் தாக்கினால் அரை நாழிகை நேரம் கூட என் உயிர் நிலைத்திராது! சிவகாமி, சற்று முன்னால் என் கரத்தை நீ பிடித்த போது உன் மனத்தில் ஒரு சந்தேகம் உதித்தது. ஒன்பது வருஷத்துக்கு முன்னால் இரும்பையும் கல்லையும் ஒத்துக் கெட்டியாயிருந்த என் கை இப்போது இவ்வளவு மிருதுத்தன்மை அடைந்திருப்பதைக் குறித்து நீ ஆச்சரியப்பட்டாய். இந்த மாறுதலுக்குக் காரணம் நீதான், சிவகாமி! கடுமையான தவ விரதங்களை அனுசரித்து என் தேகத்தை நான் அவ்வாறு கெட்டிப்படுத்திக் கொண்டிருந்தேன். வெகுகாலம் விஷ மூலிகைகளை உட்கொண்டு என் தேகத்தில் ஓடிய இரத்தத்தை விஷமாகச் செய்து கொண்டிருந்தேன். அந்தக் காலத்தில் என்னை எப்பேர்ப்பட்ட கொடிய விஷ நாகம் கடித்தாலும், கடித்த மறுகணம் அந்த நாகம் செத்துப் போகுமே தவிர எனக்கு ஒரு தீங்கும் நேராது. என்னுடைய உடம்பின் வியர்வை நாற்றம் காற்றிலே கலந்து விட்டால், அதன் கடுமையைத் தாங்க முடியாமல் சுற்று வட்டாரத்திலுள்ள விஷப் பாம்புகள் எல்லாம் பயந்து நாலு திசையிலும் சிதறி ஓடும். இதைப் பல சமயங்களில் நீயே நேரில் பார்த்திருக்கிறாய்….” என்று நாகநந்தி கூறிய போது, இரண்டு பேருடைய மனத்திலும் பத்து வருஷங்களுக்கு முன்னால் மண்டபப்பட்டுக் கிராமத்தில் வெண்ணிலா விரித்த ஓர் இரவிலே நடந்த சம்பவங்கள் ஞாபகத்தில் வந்தன.

“அப்பேர்ப்பட்ட இரும்பையொத்திருந்த என் தேகத்தை மாற்று மூலிகைகளினாலும் மற்றும் பல வைத்திய முறைகளை அனுசரித்தும் இப்படி மிருதுவாகச் செய்து கொண்டேன். என் இரத்தத்தில் கலந்திருந்த விஷத்தை முறிவு செய்தேன். சென்ற ஒன்பது வருஷம் இந்த முயற்சியிலேதான் ஈடுபட்டிருந்தேன். இடையிடையே உன்னைப் பல நாள் பாராமலிருந்ததன் காரணமும் இதுதான். சிவகாமி! முப்பது பிராயத்து இளைஞனைப் போல் இன்று நான் இல்வாழ்க்கை நடத்துவதற்குத் தகுந்தவனாயிருக்கிறேன். இத்தனைக்கும் பிறகு நீ என்னை நிராகரிக்க முடியாது. அப்படி நிராகரித்தாயானால் அதன் மூலம் எனக்கு நீ அளிக்கும் துன்பத்துக்குப் பரிகாரமாக நூறு நூறு ஜன்மங்களில் நீ பிராயச்சித்தம் செய்து கொள்ளும்படியிருக்கும்! அப்போதுங்கூட உன்னுடைய பாபம் தீர்ந்து விட்டதாகாது!”

சிவகாமியின் தலை வெடித்து விடும் போல் இருந்தது. தன் முன்னால் பிக்ஷு உட்கார்ந்து மேற்கண்டவாறு பேசியதெல்லாம் ஒருவேளை சொப்பனமாயிருக்கலாம் என்று ஒருகணம் எண்ணினாள். அந்த எண்ணத்தினால் ஏற்பட்ட ஆறுதலும் சந்தோஷமும் மறுகணமே மாயமாய் மறைந்தன. இல்லை, இதெல்லாம் சொப்பனமில்லை; உண்மையாகவே தன் கண்முன்னால் நடக்கும் பயங்கரமான நிகழ்ச்சிதான். இரத்தம் போல் சிவந்த கண்களைக் கொட்டாமல் புத்த பிக்ஷு தன்னை வெறித்துப் பார்த்துக் கொண்டிருப்பது இதோ தன் எதிரில் உண்மையிலேயே நடக்கும் சம்பவந்தான்.

அபாயம் நெருங்கியிருப்பதை உணர்ந்ததும் சிவகாமியின் உள்ளம் சிறிது தெளிவடைந்தது. இந்தக் கொடிய பைத்தியக்காரனிடமிருந்து தப்புவதற்கு வேறு வழியில்லை. வணங்கி வேண்டிக் கெஞ்சிக் கூத்தாடி எப்படியாவது கொஞ்சம் அவகாசம் பெற்றுக் கொள்ள வேண்டும். கடவுள் அருள் இருந்தால் இந்த வெறி கொண்ட பிக்ஷு அஜந்தாவிலிருந்து திரும்புவதற்குள் மாமல்லர் வந்து தன்னை விடுதலை செய்து கொண்டு போவார். இல்லாவிடில், வேறு ஏதேனும் யுக்தி செய்ய வேண்டும். முற்றத்துக் கிணறு இருக்கவே இருக்கிறது. எனவே, பிக்ஷுவிடம் மன்றாடி வேண்டிக் கொள்வதற்காகச் சிவகாமி வாய் திறந்தாள்.

பிக்ஷு அதைத் தடுத்து, “வேண்டாம், சிவகாமி! இன்றைக்கு நீ ஒன்றுமே சொல்ல வேண்டாம். அவசரப்பட்டு எனக்கு மறுமொழி சொல்ல வேண்டாம். அஜந்தா போய் வந்த பிறகே உன்னிடம் இதைப் பற்றியெல்லாம் பிரஸ்தாபிக்க வேண்டுமென்று நான் எண்ணியிருந்தேன். ஆனால், வாதாபிக்கு வெளியே இன்று இரவு நாங்கள் தங்குவதற்குரிய இராஜாங்க விடுதியை அடைந்ததும், உன்னிடம் என் மனத்தைத் திறந்து காட்டி விட்டுப் போவதுதான் உசிதம் என்றும், எல்லா விஷயங்களையும் நன்றாக யோசித்து முடிவு செய்ய உனக்குப் போதுமான அவகாசம் கொடுக்க வேண்டும் என்றும் முடிவு செய்து கொண்டு திரும்பி வந்தேன். உன்னை நான் வற்புறுத்தப் போவதில்லை, பலவந்தப்படுத்தப் போவதில்லை. உனக்கு இஷ்டமில்லாத காரியத்தை ஒருநாளும் செய்யச் சொல்ல மாட்டேன். ஆனால், நான் சொல்ல வேண்டியதை மட்டும் சொல்லி விடுகிறேன்; ஒரே மூச்சில் இப்போதே சொல்லி விடுகிறேன்; சற்றுப் பொறுமையுடன் கேட்டுக் கொண்டிரு. நான் அஜந்தாவிலிருந்து திரும்பி வந்த பிறகு நீ உன்னுடைய தீர்ப்பைச் சொல்லலாம்.” பிக்ஷுவின் இந்த வார்த்தைகள் சிவகாமிக்கு ஒருவாறு ஆறுதல் அளித்தன. அவளுடைய பீதியும் படபடப்பும் ஓரளவு குறைந்தன.

நாகநந்தி ஆரம்பத்திலிருந்து மறுபடியும் கதையை ஆரம்பித்தார்; “எந்த நேரத்தில் உன் தந்தையின் அரண்ய வீட்டில் உன்னை நான் பார்த்தேனோ, அதே நேரத்தில் என்னுடைய இதயத்திலிருந்து என் சகோதரனையும் சளுக்க சாம்ராஜ்யத்தையும் அப்புறப்படுத்திவிட்டு, அவர்கள் இருந்த இடத்தை நீ ஆக்கிரமித்துக் கொண்டாய். அது முதல் என்னுடைய யோசனைகள், ஏற்பாடுகள் எல்லாம் தவறாகவே போய்க் கொண்டிருந்தன. அந்தத் தவறுகள் காரணமாகவே வாதாபிச் சக்கரவர்த்தியின் தென்னாட்டுப் படையெடுப்பு வெற்றியடையாமற் போயிற்று. “ஆகா! அந்தக் காலத்தில் நான் அனுபவித்த சொல்லொணாத மனவேதனையை மட்டும் நீ அறிந்தாயானால், உன் இளகிய நெஞ்சம் கரைந்து உருகி விடும். ஒரு பக்கத்தில் உன் பேரில் எனக்கு ஏற்பட்டிருந்த காதலாகிய கனல் என் நெஞ்சைத் தகித்துக் கொண்டிருந்தது. அதே சமயத்தில் உன்னைச் சேர்ந்தவர்கள் உன்னோடு பழகியவர்கள், உன்னுடைய அன்புக்குப் பாத்திரமானவர்கள் மீது எனக்கேற்பட்ட அளவில்லாத அசூயை பெருநெருப்பாக என் உடலை எரித்தது. அப்போதெல்லாம் என் நெஞ்சில் நடந்து கொண்டிருந்த தேவாசுர யுத்தத்துக்குச் சமமான போராட்டத்தை நீ அறிந்தாயானால், பெரிதும் பயந்து போயிருப்பாய். ஒரு சமயம் உன்னைச் சேர்ந்தவர்கள் எல்லாரையும் கொன்று விட வேண்டும் என்று எனக்குத் தடுக்க முடியாத ஆத்திரம் உண்டாகும். ஆயினும் பின்னால் உனக்கு அது தெரிந்து விட்டால் உன்னுடைய அன்பை என்றென்றைக்கும் இழந்து விட நேரிடுமே என்ற பயம் என்னைக் கோழையாக்கியது. மாமல்லனையும் மகேந்திர பல்லவனையும் கொல்லுவதற்கு எனக்கு எத்தனையோ சந்தர்ப்பங்கள் வாய்த்தன. ஆனால், ஒவ்வொரு சமயமும் ‘உனக்குத் தெரிந்து விட்டால்….?’ என்ற நினைவு என்னைத் தடுத்தபடியால் அவர்கள் தப்பிப் பிழைத்தார்கள். பரஞ்சோதி காஞ்சியில் பிரவேசித்த அன்று உன்னை மதயானை தாக்காமல் காப்பாற்றினான் அல்லவா? அந்தக் காரணத்துக்காகவே அவனை அன்றிரவு நான் சிறையிலிருந்து தப்புவித்து உன் வீட்டுக்கு அழைத்து வந்தேன். ஆனால், அவனுக்கு நீ நன்றி செலுத்துவதைப் பார்க்க என்னால் சகிக்க முடியவில்லை. கலைவாணி! உன் தந்தை ஆயனருக்கு உன்னிடமுள்ள செல்வாக்கைப் பார்த்துக்கூட நான் அசூயை அடைந்தேன். ஆயினும் உன்னைப் பெற்ற புண்ணியவான் என்பதற்காக அவரை வாளால் வெட்டப் போன வீரனின் கையைப் பிடித்துத் தடுத்து உயிரைக் காப்பாற்றினேன். அதுமுதல் உன் தந்தையைக் காப்பாற்றிக் கொடுத்ததே என்ற காரணத்துக்காக இந்தக் கையை வாழ்த்திக் கொண்டிருக்கிறேன்.”

இதைக் கேட்ட சிவகாமியின் நெஞ்சம் உண்மையிலேயே இளகித்தான் விட்டது. ‘இந்தப் புத்த பிக்ஷு இரக்கமற்ற ராட்சதனாயிருக்கலாம்; இவருடைய இருதயம் பைசாசத்தின் இருதயமாயிருக்கலாம்; இவருடைய தேகத்தில் ஓடும் இரத்தம் நாகசர்ப்பத்தின் விஷம் கலந்த இரத்தமாயிருக்கலாம்; ஆனாலும் இவர் என்பேரில் கொண்ட ஆசையினால் என் தந்தையின் உயிரைக் காப்பாற்றினார் அன்றோ?’ சிவகாமியின் மனோநிலையை ஒருவாறு அறிந்து கொண்ட புத்த பிக்ஷு ஆவேசம் கொண்டவராய் மேலும் கூறினார்; “கேள், சிவகாமி! உன்னைப் பெற்றவர் என்பதற்காக ஆயனரைக் காப்பாற்றினேன். உன்னை விரோதிப்பவர்களை நான் எப்படிப் பழிவாங்குவேன் என்பதற்கும் ஓர் உதாரணம் சொல்லுகிறேன். இந்த வாதாபியில் நீ எவ்வித அபாயமும் இன்றி நிர்ப்பயமாக இத்தனை காலமும் வாழ்ந்து வருகிறாயல்லவா? இதற்குக் காரணம் என்னவென்று ஒருவேளை நீ ஊகித்திருப்பாய். நீ என்னுடைய பாதுகாப்பில் இருக்கிறாய் என்று எல்லோருக்கும் தெரியுமாதலால் தான், யாருமே உன் அருகில் நெருங்குவதில்லை. இதைக் குறித்து இந்நகரத்து அரண்மனையில் ஒரு பெண்ணுக்கு அசூயை உண்டாயிற்று. அவள் பட்டத்து ராணியின் சகோதரி. விஷம புத்தியுள்ள அந்தப் பெண் என்னைத் தன்னுடைய மோக வலையில் ஆழ்த்துவதற்கு மிக்க பிரயத்தனம் செய்தாள். அது பலிக்காமல் போகவே, ஒருநாள் அவள் உன்னைக் குறிப்பிட்டு நிந்தை மொழி கூறினாள். ‘அந்தக் காஞ்சி நகர்க் கலைவாணியின் அழகு எனக்கு இல்லையோ?’ என்று கேட்டாள். மறுநாள் அவள் என்னை நெருங்கிய போது, அவளுடைய கையை நான் பிடித்து, என் கைவிரல் நகத்தினால் ஒரு கீறல் கீறினேன். அன்றிரவு அவள் தூங்கி, மறுநாள் காலையில் எழுந்து கண்ணாடியில் தன் முகத்தைப் பார்த்துக் கொண்டாள். அவ்வளவுதான்; அவளுடைய மூளை கலங்கிப் பைத்தியம் பிடித்து விட்டது! அவ்வளவு பயங்கரத் தோற்றத்தை அவள் அடைந்திருந்தாள். ஒருவருமறியாமல் அவள் இந்நகரை விட்டு வெளியேறிக் காட்டிலும், மலையிலும் வெகுகாலம் அலைந்து கொண்டிருந்தாள். இப்போது அவள் காபாலிக மதத்தினரின் பலிபீடத்தில் அமர்ந்து பலி வாங்கி உண்டு உயிர் வாழ்ந்து வருகிறாள்…”

சிவகாமி பழையபடி பீதி கொண்டாள்; இந்த வெறி பிடித்த பிக்ஷு சீக்கிரம் போய்த் தொலைய மாட்டாரா என்று மனத்திற்குள் எண்ணமிட்டாள். “சிவகாமி! சில நாளைக்கு முன் அந்தக் காளி மாதாவைத் தற்செயலாக நான் சந்திக்க நேர்ந்தது. அவள் என்ன சொன்னால் தெரியுமா? ‘சுவாமிகளே! ஒருநாள் இல்லாவிட்டால் ஒருநாள் உம்முடைய காதலி சிவகாமியை நீங்கள் என்னிடம் ஒப்புவித்தேயாக வேண்டும். அவளுடைய உடலைப் புசித்தால்தான் என்னுடைய பசி தீரும்!’ என்றாள் பைத்தியக்காரி. அப்படி உன் உடலைப் புசிப்பதாயிருந்தால் அவளிடம் நான் கொடுத்து விடுவேன் என்று எண்ணுகிறாள்! அவளை விட நூறு மடங்கு எனக்குத் தான் பசி என்பதை அவள் அறியவில்லை! உன்னைப் பார்க்கும் போதெல்லாம் உன்னை அப்படியே விழுங்கி விடவேண்டும் என்று எனக்குண்டாகும் பேராவலை அவள் என்ன கண்டாள்?”

திடீரென்று நாகநந்தி பிக்ஷு மலைப் பாம்பாக மாறினார். மலைப்பாம்பு வாயை அகலத் திறந்து கொண்டு, பிளந்த நாக்கை நீட்டிக் கொண்டு, தன்னை விழுங்குவதற்காக நெருங்கி வருவது போல் சிவகாமிக்குத் தோன்றியது. “ஐயோ!” என்று அலறிக் கொண்டு அவள் பின்னால் நகர்ந்தாள்; கண்களையும் இறுக மூடிக் கொண்டாள். நாகநந்தி சிரித்தார், “சிவகாமி! பயந்து விட்டாயா? கண்களைத் திறந்து பார்; புத்த பிக்ஷுதான் பேசுகிறேன்!” என்றார். சிவகாமி கண்களைத் திறந்து பார்த்தாள். சற்று முன்தான் கண்ட காட்சி வெறும் பிரமை என்பதை உணர்ந்து கொண்டாள். ஆயினும் அவளுடைய கண்களில் பீதி நிறைந்திருந்தது. நாகநந்தி எழுந்து நின்று சொன்னார்; “சிவகாமி! நான் சொன்னதையெல்லாம் யோசித்துப் பார்! ஒருவேளை எனக்குப் பைத்தியம் பிடித்திருக்கிறது என்று நீ நினைக்கிறாய் போலும்! நல்லவேளையாக எனக்கு இன்னும் பைத்தியம் பிடிக்கவில்லை. என் அறிவு தெளிவாய்த்தானிருக்கிறது. ஆனால், இன்னும் கொஞ்ச நாள் வரையில் உன்னிடம் நான் கொண்ட காதல் நிறைவேறாமல் போனால் எனக்குப் பைத்தியம் பிடித்தாலும் பிடித்து விடும். அப்புறம் நான் என்ன செய்வேனோ தெரியாது.

“சிவகாமி நான் போய் வருகிறேன்; நான் திரும்பி வருவதற்குள் உன் மனத்தைத் திடப்படுத்திக் கொண்டு எனக்கு ஒரு முடிவு சொல்ல வேண்டும். உனக்காக நான் இது வரை செய்திருக்கும் தியாகங்களையெல்லாம் காட்டிலும் மகத்தான தியாகம் ஒன்றைச் செய்யப் போகிறேன். அதைப் பற்றி நான் திரும்பி வருவதற்குள் நீயே தெரிந்து கொள்வாய். அதைத் தெரிந்து கொண்ட பிறகு நீ என் பேரில் இரக்கம் கொள்ளாமலிருக்க முடியாது.” என் கோரிக்கைக்கு இணங்கமலிருக்கவும் முடியாது.” இவ்விதம் சொல்லி விட்டு நாகநந்தி சிவகாமியை அளவில்லாத ஆர்வம் ததும்பும் கண்களினால் சற்று நேரம் உற்றுப் பார்த்தார், சட்டென்று திரும்பி வாசற்பக்கம் சென்றார். பிக்ஷு சென்ற பிறகு சிவகாமியின் உடம்பு வெகுநேரம் வரையில் நடுங்கிக் கொண்டேயிருந்தது.

Source

Previous articleRead Sivagamiyin Sabatham Part 4 Ch 26
Next articleRead Sivagamiyin Sabatham Part 4 Ch 28

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here