Home Kalki Read Sivagamiyin Sabatham Part 4 Ch 32

Read Sivagamiyin Sabatham Part 4 Ch 32

94
0
Read Sivagamiyin Sabatham Part 4 Ch 32 Free, Sivagamiyin Sabatham is a historical novel. Sivagamiyin Sabatham audiobook, Sivagamiyin Sabatham pdf, Sivagamiyin Sabatham full story
Sivagamiyin Sapatham Part 4 Ch 32 சிவகாமியின் சபதம் நான்காம் பாகம்: சிதைந்த கனவு அத்தியாயம் 32: காபாலிகையின் காதல்

Read Sivagamiyin Sabatham Part 4 Ch 32

சிவகாமியின் சபதம்

நான்காம் பாகம்: சிதைந்த கனவு

அத்தியாயம் 32: காபாலிகையின் காதல்

Read Sivagamiyin Sabatham Part 4 Ch 32

வானை நோக்கிக் கைகளைத் தூக்கிப் பல தெய்வங்களின் பேரில் ஆணையிட்டுச் சபதம் செய்த பிக்ஷு மறுபடியும் கீழே உட்கார்ந்து புலிகேசியின் உயிரற்ற உடலை எடுத்துத் தம் மடியின் மீது வைத்துக் கொண்டார். “தம்பி! நீ சாகவில்லை, இத்தனை நாளும் நாம் ஓருயிரும் இரண்டு உடலுமாக வாழ்ந்து வந்தோம். இப்போது உயிரைப் போல் உடம்பும் ஒன்றாகி விட்டோ ம். என் உயிரோடு உன் உயிர் ஒன்றாகக் கலந்து விட்டது. இனிமேல் நீதான் நான்; நான்தான் நீ! இரண்டு பேர் இல்லை!” இவ்விதம் உருகிக் கனிந்த குரலில் கூறிவிட்டுப் புத்த பிக்ஷு தமது தேகம் முழுவதும் குலுங்கும்படியாக விம்மி விம்மி அழுதார்.

சுயப் பிரக்ஞையை அறவே இழந்து சோகக் கடலின் அடியிலே அவர் ஆழ்ந்து விட்டார் என்று தோன்றியது. இரவு விரைவாகச் சென்று கொண்டிருந்தது. சந்திரன் மேலே மேலே வந்து கொண்டிருந்தது. பாறைகள் – மரங்களின் நிழல்கள் வர வரக் குட்டையாகிக் கொண்டு வந்தன. நெடுநேரம் பாறை மறைவில் நின்று காத்துக் கொண்டிருந்த காபாலிகை கடைசியில் பொறுமை இழந்தாள். மெதுவாகப் பாறை மறைவிலிருந்து வெளிப்பட்டு மெள்ள மெள்ள அடிமேல் அடிவைத்து நடந்து வந்தாள்.

பிக்ஷுவின் பின்புறத்தில் வந்து நின்று அவருடைய தோள்களை இலேசாக விரல்களால் தொட்டாள். புத்த பிக்ஷு திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தார். “ரஞ்சனி! நீதானா?” என்றார். “ஆம்; நான்தான்!” என்றாள் காபாலிகை. “இன்னும் நீ போகவில்லையா?” “போகச் சொல்லி ஆக்ஞாபித்தால் போய் விடுகிறேன்.” “வேண்டாம், இரு! இந்தப் பெரிய உலகில் என்பேரில் அன்பு உடையவள் நீ ஒருத்திதான் இருக்கிறாய்.” “என் பேரில் அன்பு கொண்டவர் ஒருவருமே இல்லை.” “ஆ! ரஞ்சனி ஏன் அப்படிச் சொல்லுகிறாய்? நான் ஒருவன் இல்லையா?” என்றார் பிக்ஷு.

சற்றுமுன் அவருடைய குரலில் தொனித்த சோகம் எங்கேயோ போய் இப்போது அதில் கபடங் கலந்த நயிச்சிய பாவம் தொனித்தது. “அடிகளே! ஏன் இந்தப் பேதையை ஏமாற்றப் பார்க்கிறீர்? இந்தக் கோர அவலட்சண உருவத்தின் பேரில் யாருக்குத் தான் பிரியம் ஏற்படும்!” என்று காபாலிகை கேட்டாள். “காதலுக்குக் கண்ணில்லை என்று நீ கேட்டதில்லையா? நீ எத்தனை குரூபியாயிருந்தாலும் என் கண்ணுக்கு நீதான் ரதி!” என்றார் புத்த பிக்ஷு. “வஞ்சக பிக்ஷுவே! ஏன் இப்படி மனமறிந்து பொய் சொல்லுகிறீர்? என்னை இந்த அலங்கோலம் ஆக்கினது நீர்தானே? என் பேரில் அன்பு இருந்தால் இப்படிச் செய்திருப்பீரா?” என்றாள் அந்தக் கோர காபாலிகை.

“ரஞ்சனி! இதைப் பற்றி எத்தனை தடவை உனக்குச் சொல்லி விட்டேன்? அஜந்தா சித்திரத்தைப் போன்ற அற்புத அழகோடு வாதாபி அரண் மனையில் நீ இருந்தால், யாராவது ஒரு இராஜகுமாரன் உன்னை அபகரித்துக் கொண்டு விடுவான் என்றுதானே இப்படிச் செய்தேன்?” “என்னைத் தாங்களே அபகரித்துக் கொண்டு போயிருக்கலாமே? யார் வேண்டாம் என்று சொன்னது?” “அதையும்தான் உனக்கு ஆயிரம் தடவை சொல்லியிருக்கிறேன். மறுபடியும் சொல்லுகிறேன், நான் செய்ய வேண்டிய காரியங்கள் சில இருந்தன. முக்கியமாக, புத்த சங்கத்திலிருந்து விடுதலை பெற வேண்டியிருந்தது.” “இப்படித்தான் எத்தனையோ காலமாய்ச் சொல்லி வருகிறீர். எப்போதுதான் உமக்கு விடுதலை கிடைக்கப் போகிறது?”

“ரஞ்சனி எனக்கு விடுதலை கிடைத்து விட்டது! உன் மனோரதம் நிறைவேறுவதற்கான பெருந்தடை நீங்கி விட்டது; உனக்குச் சந்தோஷந்தானே?” என்று பிக்ஷு நயமாகக் கூறினார். “சத்தியமாகச் சொல்லுகிறீரா?” என்று ரஞ்சனி கேட்டாள். “முக்காலும் சத்தியமாகச் சொல்லுகிறேன். நான் விடுதலை கேட்கவே தேவை ஏற்படவில்லை. புத்த சங்கத்தாரே என்னைப் பிரஷ்டம் செய்து விட்டார்கள். உன்னுடைய தபஸின் சக்தியினால்தான் இது நடந்திருக்க வேண்டும்.”

காபாலிகை இன்னும் சந்தேகம் நீங்காதவளாய், “ஏன் பிரஷ்டம் செய்தார்கள்? சர்வ சக்திவாய்ந்த நாகநந்தி பிக்ஷுவைப் புத்த சங்கத்தார் எப்படிப் பிரஷ்டம் செய்யத் துணிந்தார்கள்?” என்று கேட்டாள். “அது பெரிய கதை, அப்புறம் சொல்லுகிறேன். ரொம்ப முக்கியமான வேலை இப்போது நமக்கு இருக்கிறது. இதோ இந்த உடலை உடனே தகனம் செய்ய வேண்டும். யாருக்காவது தெரிந்து விட்டால் காரியம் கெட்டு விடும். எங்கே ரஞ்சனி! கட்டைகள் கொண்டு வந்து இங்கேயே சிதை அடுக்கு, பார்க்கலாம்.” “என்னால் அது முடியாது!” “ஏன் அப்படிச் சொல்லுகிறாய்? எனக்கு உதவி செய்ய மாட்டாயா?” என்றார் புத்த பிக்ஷு. “புத்த சங்கத்திலிருந்து உம்மை ஏன் பிரஷ்டம் செய்தார்கள்? அதைச் சொன்னால் உதவி செய்வேன்.”

“சுருக்கமாகச் சொல்லுகிறேன், கேள்! காஞ்சி மாமல்லன் படையெடுத்து வருகிறான் என்ற விஷயம் எனக்கு முன்னமே தெரியும். ஆனால், அதைச் சில காரணங்களுக்காக என் சகோதரனிடம் சொல்லாமல் இரகசியமாய் வைத்திருந்தேன். இது தெரிந்த போது நான் சகோதரத் துரோகமும் தேசத் துரோகமும் செய்து விட்டதாக இந்த நிர்மூடன் எண்ணினான். நான் உயிர் கொடுத்துக் காப்பாற்றி இவ்வளவு மேன்மைப் பதவிக்குக் கொண்டு வந்த என் சகோதரன் என்னைப் பார்த்து ‘உயிரோடிருக்கும் வரையில் என் முகத்தில் விழிக்காதே’ என்று சொல்லி அனுப்பினான். அதன் பலனாகத் தான் இப்போது இங்கே அநாதைப் பிரேதமாகக் கிடக்கிறான். நீயும் நானும் இவனை எடுத்துத் தகனம் செய்தாக வேண்டும்!” என்று சொல்லி பிக்ஷு பெருமூச்சு விட்டார். மறுபடியும் கூறினார்; “இதெல்லாம் அஜந்தா சங்கிராமத்துப் புத்த பிக்ஷுக்களுக்குத் தெரிந்தது. இத்தனை காலமும் என்னால் கிடைத்த உதவிகளையெல்லாம் பெற்று வந்தவர்கள், நான் சக்கரவர்த்தியின் கோபத்துக்கு ஆளானேன் என்று தெரிந்ததும் உடனே என்னைச் சபித்துப் புத்த சங்கத்திலிருந்து பிரஷ்டம் செய்தார்கள். அதன் பலனை அவர்களும் அனுபவிக்க நேர்ந்தது. ரஞ்சனி! நீலகேசியை எதிர்ப்பவர்கள் யாராயிருந்தாலும் தப்பிப் பிழைக்க முடியாது, அவர்களுடைய கதி அதோகதி தான்.”

“அஜந்தா பிக்ஷுக்களுக்கு அப்படி என்ன கதி நேர்ந்தது?” என்று காபாலிகை கேட்டாள். “வேறொன்றும் இல்லை; அப்புறம் ஒரு வாரத்துக்கெல்லாம் அஜந்தா பிக்ஷுக்கள் சங்கிராமத்தை மூடிவிட்டு உயிர் தப்புவதற்கு ஓடும்படி நேர்ந்தது. நாடு நகரங்களில் எல்லாம் ‘அஜந்தாக் கலை விழா, புத்த பிக்ஷுக்களின் சூழ்ச்சி; காஞ்சி மாமல்லனுக்கு ஒத்தாசையாக அவர்கள் செய்த வஞ்சகமான ஏற்பாடு’ என்ற வதந்தி பரவியது. வதந்திக்கு விதை போட்டவன் நான்தான். ஜனங்கள் கோபங்கொண்டு அஜந்தாவுக்குத் திரண்டு போய்ச் சங்கிராமத்தையும் அங்குள்ள சிற்ப சித்திரங்களையும் அழித்துப் போடுவதற்கு ஆயத்தமாகி விட்டார்கள். இது தெரிந்ததும் பிக்ஷுக்கள் அஜந்தாவுக்குப் போகும் அந்தரங்க பகிரங்க வழிகள் எல்லாவற்றையும் மூடி மறைத்து விட்டு வடக்கே ஹர்ஷனுடைய ராஜ்யத்தை நோக்கி ஓட்டம் பிடித்தார்கள். அப்புறம் அஜந்தாவுக்குப் போக நானே பிரயத்தனம் செய்தேன். என்னாலேயே வழி கண்டுபிடிக்க முடியவில்லை. பிற்பாடு பார்த்துக் கொள்ளலாம் என்று திரும்பி வந்து விட்டேன். நல்ல சமயத்திலேதான் வந்தேன். ரஞ்சனி! எழுந்திரு! சீக்கிரம் நான் சொன்னபடி செய்! உடனே சிதை அடுக்கு! நெருப்பு கொண்டு வா!”

“சக்கரவர்த்தியைத் தகனம் செய்த பிறகு என்ன செய்யப் போகிறீர்கள்?” “ரஞ்சனி! சக்கரவர்த்தியின் மரணத்தைப் பற்றியோ, தகனத்தைப் பற்றியோ யாரிடமும் பிரஸ்தாபிக்கக் கூடாது, காற்றினிடம் கூடச் சொல்லக் கூடாது. இதைப் பரமரகசியமாக வைத்திருக்க வேண்டும், தெரியுமா?” “எதற்காக ரகசியம் அடிகளே?” “எல்லாம் அப்புறம் சொல்லுகிறேன், ரஞ்சனி! இப்போது ஒரு கணமும் வீணாக்க நேரமில்லை.” “வஞ்சகப் பிக்ஷுவே! நீர் ஒன்றும் சொல்ல வேண்டியதில்லை; காரணம் எனக்கே தெரியும்.” “உனக்கு என்ன தெரியும்?” “இந்தப் பிரேதத்தைத் தகனம் செய்து விட்டு இரகசியச் சுரங்க வழியாக வாதாபி நகருக்குள் போகப் போகிறீர்! நீர்தான் சக்கரவர்த்தி என்று சொல்லிக் கொள்ளப் போகிறீர். சளுக்க சிம்மாசனத்தில் ஏறி அந்தக் காஞ்சி நகரத்து மூளியை உமக்கு அருகே உட்கார்த்தி வைத்துக் கொள்ளப் போகிறீர்….!”

நாகநந்தி கோபங்கொண்டு எழுந்து, “உன் வாக்குப்படியே செய்கிறேன். எப்படியாவது நீ தொலைந்து போ! இனிமேல் உன்னோடு…” என்று மேலும் சொல்வதற்குள் காபாலிகை அவர் காலில் விழுந்து, “அடிகளே! என்னை மன்னித்து விடுங்கள் நீர் சொல்வதைக் கேட்கிறேன்!” என்றாள். “உனக்குத்தான் என்னிடம் கொஞ்சம் கூட நம்பிக்கை இல்லையே? உன்னிடம் சொல்லி என்ன பிரயோஜனம்?” “எனக்கு நம்பிக்கை உண்டாக்குவதற்கு ஒரு வழி இருக்கிறதே!” “அது என்ன?” “அந்த நடனப் பெண்ணை எனக்குக் கொடுத்து விடுங்கள்!”

“ரஞ்சனி! இத்தனை காலம் பொறுத்தாய்; இன்னும் சில நாள் பொறுத்துக்கொள். இந்த வாதாபி முற்றுகை முடியும் வரையில் பொறுத்துக் கொள். சிவகாமியை ஒரு காரியத்துக்காகக் காப்பாற்றி வைத்திருக்கிறேன் என்று உன்னிடம் சொல்லி வந்தேனல்லவா? அந்தக் காரியம் இப்போது நெருங்கி வந்து விட்டது. மாமல்லன் மீது பழிவாங்கியதும் சிவகாமியை உனக்குத் தந்து விடுகிறேன். பிறகு இந்த நீலகேசிதான் தக்ஷிண தேசத்தின் சக்கரவர்த்தி! நீதான் சக்கரவர்த்தினி! சளுக்க – பல்லவ – சோழ – பாண்டிய – வேங்கி நாடுகள் எல்லாம் நம் இருவருடைய காலின் கீழே கிடக்கப் போகின்றன!” என்று நாகநந்தி என்கிற நீலகேசி கூறிய போது நிலவொளியிலே அவருடைய கண்கள் தீப்பிழம்பைப் போல் ஒளி வீசின.

காபாலிகை ஒருவாறு சமாதானம் அடைந்தவளாய்க் காணப்பட்டாள். நீலகேசியின் சொற்படி அவள் தன் குகைக்குச் சென்று அங்கிருந்து விறகுக் கட்டைகளைக் கொண்டு வந்து அடுக்கலானாள். அப்போது, நீலகேசியின் காதில் விழாதபடி அவள் தனக்குள்ளேயே சொல்லிக் கொண்டாள்; “வஞ்சகப் பிக்ஷுவே! நீர் என்னை மறுபடியும் ஏமாற்றப் பார்க்கிறீர். ஆனால், உம்முடைய எண்ணம் ஒருநாளும் பலிக்கப் போவதில்லை. நீர் எவ்வளவுதான் காலில் விழுந்து கெஞ்சினாலும், தேவேந்திர பதவியே அளித்தாலும் அந்த மூளி சிவகாமி உம்மைக் கண்ணெடுத்தும் பார்க்க மாட்டாள். கடைசியாக என் காலிலே வந்துதான் நீர் விழுந்தாக வேண்டும்!”

Source

Previous articleRead Sivagamiyin Sabatham Part 4 Ch 31
Next articleRead Sivagamiyin Sabatham Part 4 Ch 33

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here