Home Kalki Read Sivagamiyin Sabatham Part 4 Ch 34

Read Sivagamiyin Sabatham Part 4 Ch 34

78
0
Read Sivagamiyin Sabatham Part 4 Ch 34 Free, Sivagamiyin Sabatham is a historical novel. Sivagamiyin Sabatham audiobook, Sivagamiyin Sabatham pdf, Sivagamiyin Sabatham full story
Sivagamiyin Sapatham Part 4 Ch 34 சிவகாமியின் சபதம் நான்காம் பாகம்: சிதைந்த கனவு அத்தியாயம் 34: சிவகாமியின் ஓலை

Read Sivagamiyin Sabatham Part 4 Ch 34

சிவகாமியின் சபதம்

நான்காம் பாகம்: சிதைந்த கனவு

அத்தியாயம் 34: சிவகாமியின் ஓலை

Read Sivagamiyin Sabatham Part 4 Ch 34

சேனாதிபதி பரஞ்சோதிக்குச் சிவகாமி அனுப்பியிருந்த ஓலையில் பின்வருமாறு எழுதியிருந்தது: “வீரபல்லவ சைனியத்தின் சேனாதிபதியும் என் அன்புக்குரிய சகோதரருமான பரஞ்சோதியாருக்கு ஆயனர் மகள் சிவகாமி எழுதிக்கொண்டது. இந்த அபலையை, அநாதையை, ஒன்பது வருஷ காலம் தாங்களும் பல்லவ குமாரரும் மறந்து விடாமல் நினைவு வைத்துக் கொண்டிருந்து என் சபதத்தை நிறைவேற்றி வைப்பதற்காகப் படையெடுத்து வந்திருப்பதை அறிந்து கொண்டேன். கோட்டைக்கு வடதிசையில் நடந்த பெரு யுத்தத்தைப்பற்றியும் இங்கே செய்தி வந்திருக்கிறது. அந்த யுத்தத்தில் வாதாபிச் சக்கிரவர்த்தி மாண்டிருக்க வேண்டுமென்று இங்குள்ளவர்கள் சொல்லிக் கொள்கிறார்கள்.

இந்த வாதாபிக் கோட்டையின் காவலரான பீமசேனர் என்னை வந்து பார்த்தது ஓலை எழுதும்படி கேட்டுக்கொண்டார். அதன்படி என் மனப்பூர்வமான சம்மதத்துடன் இதை எழுதுகிறேன். தாங்களும் பல்லவ குமாரரும் எந்த நோக்கத்துடன் படையெடத்து வந்தீர்களோ அந்த நோக்கம் நிறைவேறிவிட்டது. சளுக்கிய சைனியமும் வாதாபிச் சக்ரவர்த்தியும் நாச மடைந்தார்கள் இத்துடன் யுத்தத்தை நிறுத்தி வாதாபி கோட்டையின் சரணாகதியை ஒப்புக்கொள்ளும்படி ரொம்பவும் வேண்டிக் கொள்ளுகிறேன். “நான் அன்று செய்த சபதத்தைப் பல்லவகுமாரர் அதன்படியே நிறைவேற்ற வேண்டும் என்னும் விருப்பம் இப்போது எனக்கு இல்லை.அதை அப்படியே நிறைவேற்றுவதென்றால், இந்தப் பெரிய நகரத்தின் குற்றமற்ற ஜனங்கள் வீடு வாசல்களை இழந்து சொல்ல முடியாத கஷ்டங்களுக்கு உள்ளாகும்படி நேரிடும். அவர்களை அத்தகைய கொடுமைகளுக்கு உள்ளாக்க நான் பிரியப்படவில்லை. அவ்விதம் செய்தால் யாருக்கு என்ன பிரயோசனம்?

“ஏற்கனவே நடந்த யுத்தத்தில் இரு தரப்பிலும் ரொம்பவும் உயிர்ச்சேதம் நேர்ந்திருப்பது தெரிகிறது. என் காரணமாக ஏற்பட்ட இந்த விபரீத படுகொலையை நினைத்து ரொம்பவும் வருத்தப்படுகிறேன். “அருமைச் சகோதரரே! கடந்த ஒன்பது வருஷ காலம் இந்த நகரத்தில் தன்னந்தனியாக நான் வசித்த போது ஓயாமல் என்மனம் சிந்தனை செய்து கொண்டிருந்தது. பல்லவ குமாரரும் தாங்களும் முன்னொரு தடவை வந்து என்னை அழைத்த சமயம் நான் உங்களுடன் கிளம்பி வராதது எவ்வளவு பெரும் பிசகு என்பதை உணர்ந்து கொண்டேன். என்சபதத்தை நிறைவேற்றிய பிறகு தான் இந்த நகரை விட்டுப் புறப்படுவேன் என்று பிடிவாதம் பிடித்தது எவ்வளவு அறிவீனம் என்பதை உணர்ந்து வருந்தினேன். ஆறு அறிவு படைத்த மனிதர்கள் யுததம் என்ற பெயரால் ஒருவரையொருவர் கொன்று கொள்வது எவ்வளவு பைத்தியக்காரச் செயல்?

“கடவுளால் சிருஷ்டிக்கப்பட்ட ஜீவன்களை மனிதர்கள் கொல்வது தெய்வ சம்மதமாகுமா? ஒரு சிறு அற்பமான உயிரைக் கூட நம்மால் சிருஷ்டிக்க முடியாமலிருக்கும் போது ஆயிரக்கணக்கான உயிர்களைக் கொல்வது எவ்வளவு பாபமான காரியம்? இதையெல்லாம் நினைத்துப் பார்க்கப் பார்க்க என்னால் இந்தப் பயங்கரமான பெரிய யுத்தம் வந்துவிட்டதே என்று ரொம்பவும் துக்கப்படுகிறேன். “உலகத்தில் மனிதர்கள் குற்றம் செய்தால் அதைற்குத் தண்டனையளிக்கவோ அல்லது மன்னித்து அருளவோ எல்லாம் அறிந்த இறைவன் இருக்கிறான். ‘அவன் அன்றி இவ்வுலகில் ஓர் அணுவும் அசையாது’ என்று பெரியோர் சொல்லுகின்றனர். அப்படியிருக்க மனிதர்கள் தங்களையொத்த மற்ற மனிதர்களின் குற்றங்களுக்குத் தண்டனை விதிக்க ஏன் முற்பட வேண்டும்?

“சகோதரரே!போனது போகட்டும். இனிமேலாவது இரத்த வெள்ளம் பெருகுவது நிற்கட்டும். என்னுடைய மூடப் பிடி வாதத்தினால் உங்களுக்கொல்லாம் நான் கொடுத்த கஷ்டங்களுக்காக என்னை மன்னித்து விடுங்கள். பல்லவ குமாரரிடம் நான் ரொம்பவும் கேட்டுக் கொண்டதாகச் சொல்லி யுத்தத்தை நிறுத்தச் சொல்லுங்கள். கோட்டை முற்றுகை ஆரம்பமானதிலிருந்து என்னிடம் நகரவாசிகள் ரெம்பவும் மரியாதை காடடி வருகிறார்கள். பல்லவ குமாரர் கோட்டைச் சரணாகதியை ஒப்புக் கொண்டால், என்னைப் பல்லக்கிலே ஏற்றிச் சகல மரியாதைகளுடனும் வெளியே அனுப்பி வைக்கச் சித்தமாய் ருக்கிறார்கள். இதையெல்லாம் பல்லவ குமாரரிடம் தெரியப்படுத்துங்கள். உங்கள் எல்லோரையும் பார்க்க வேண்டும் என்று என் உள்ளம் துடிதுடித்துக்கொண்டிருக்கிறது. இன்று சூரியன் மலைவாயில் இறங்குவதற்கு முன்னால் தங்களையும் பல்லவ குமாரரையும் பார்க்கும் பாக்கியம் எனக்குக் கிடைக்கும் என்று நம்புகிறேன். என் அருமைத் தந்தையின் பாத கமலங்களில் என்னுடைய நமஸ்காரங்களைச் சமர்ப்பிக்கிறேன்.”

மாமல்லருடைய குணப்பண்பையும் மனப்போக்கையும் நன்கு அறிந்துள்ள நாம், சிவகாமி தேவியின் மேற்படி ஓலை அவருக்கு ஏன் அத்தனை கோபத்தையும் ஆத்திரத்தையும் உண்டாக்கியது என்று ஒருவாறு ஊகிக்கலாம். ஓலையைக் கிழிக்கப்போனவரிடம் சேனாதிபதி, “அது என் ஓலை” என்று சொன்னதும், மாமல்லரின் ஆத்திரம் இன்னும் அதிகமாயிற்று. “அப்படியா? இதோ உமது ஓலையை எடுத்துக் கொள்ளும், சேனாதிபதி! திவ்யமாக எடுத்துக் கொள்ளும். இந்தத் தர்மோபதேச மகாமந்திர ஓலையை நீரே வைத்துக் கொண்டு பூஜை செய்யும்!” என்று சொல்லிக் கொண்டே மாமல்லர் ஓலையை வீசி விட்டெறிந்தார்.

சேனாதிபதி அதைப் பயபக்தியுடனே பொறுக்கி எடுத்துக் கொண்டு கூறினார் : “ஆம், பல்லவேந்திரா! இது எனக்கு மகா மந்திரோபதேச ஓலைதான். திருநாவுக்கரசர் பெருமானிடம் சிவதீட்சை பெறுவதற்காகக் காஞ்சி நகரத்துக்கு வந்தேன். ஆனால் அந்த பாக்கியம் அன்று கிடைக்கவில்லை. ஆனால், சிவகாமி தேவியிடம் உபதேசம் பெறும் பாக்கியம் இப்போது கிடைத்தது. நான் ஆசாரியராக வரித்த ஆயனச் சிற்பியாருடைய குமாரியல்லவா சிவகாமி தேவி!”

மாமல்லருடைய கோபம் இப்போது வரம்புகளையெல்லாம் கடந்து விட்டது. சிவகாமி விஷயமாக நாலு பேருக்கு முன்னால் இதுவரை பேசி அறியாதவர், அத்தனை பேருக்கும் முன்னால் வெட்ட வெளிச்சமாகப் பின்வரும் ஆங்கார வார்த்தை களைக் கொட்டினார் : “சேனாதிபதி! என் வாழ்நாளில் இரண்டு தவறுகளை நான் செய்திருக்கிறேன். சிற்பியின் மகளைச் சிம்மாசனத்தில் ஏற்றி வைக்க முயன்றேன். அந்த முயற்சியில் தோல்வியுற்றேன். தமிழ் ஓதவும் சிற்ப வேலை கற்கவும் வந்த உம்மைப் பல்லவ சாம்ராஜ்யத்தின் சேனாதிபதியாக்கினேன்! அதுவும் நான் செய்த பெருந்தவறு ஆயிற்று. சிற்பியின் மகள் சிம்மாசனத்துக்குத் தகுதியற்றவள் என்பதை நிரூபித்து விட்டாள். நாடி பார்க்கும் வைத்தியரின் மகன் நாடு பிடிக்கும் சேனைத் தலைவனாக யோக்கியதை அடைய முடியாது என்பதை நீர் நிரூபித்து விட்டீர்…”சேனாதிபதி பரஞ்சோதிக்குக் கண்ணில் நீர் ததும்பிற்று. அவமானமும் ஆத்திரமும் தொண்டையை அடைக்க, தழுதழுத்த குரலில், “பல்லவேந்திரா! …” என்று ஏதோ சொல்வதற்கு ஆரம்பித்தார்.

“சேனாதிபதி! நிறுத்தும்!” என்று மாமல்லர் கர்ஜனை செய்ததும், சேனாதிபதி வாயடைத்துப் போய் நின்றார். இதுவரை மாமல்லர் அவரிடம் இம்மாதிரி பெசியதே இல்லை. மரியாதைக் குறைவாகவோ மனம் புண்படும்படியோ அவரைப் பார்த்து ஒரு வார்த்தையும் கூறியதே இல்லை. மாமல்லரின் இந்தப் புதிய ருத்ராவதாரம் பரஞ்சோதிக்குப் பிடிபடவே இல்லை. மாமல்லர் மேலும் சொல்லம்புகளைப் பொழிந்தார் : “என்னை யார் என்று எண்ணிக் கொண்டீர்? இந்தச் சிற்பி மகள் தான் என்னை யார் என்பதாக எண்ணிக்கொண்டாள்? என்ன தைரியத்தினால் இந்தமாதிரி ஓலை எழுத அவள் துணிந்தாள்? நீங்கள் இரண்டு பேரும் பல்லவ குலத்தில் பெருமையைக் குலைத்துப் பாழாக்க இப்படி எத்தனை காலமாகச் சதி செய்தீர்கள்? இந்த மூடப் பெண் புத்தியில்லாமல் பிடிவாதம் பிடிக்கும் போது இவளுடைய பிடிவாததுக்காக நாம் யுத்தத்துக்கு ஆயத்தம் செய்ய வேண்டும். இவள் பார்த்து வேண்டாம் என்றால் உடனே இவளுடைய கட்டளையைச் சிரமேற்கொண்டு யுத்தத்தை நிறுத்தி விட வேண்டுமா? பல்லவ சாம்ராஜ்யமே இவளுக்காகத்தான் இருக்கிறது என்று எண்ணிக் கொண்டாளா? பல்லவ நாட்டுப் பிரஜைகளும் பல்லவ சக்கரவர்த்தியும் இவளுக்குத் தொண்டு செய்யும் அடிமைகள் என்று எண்ணிக் கொண்டல்லவா இப்படி ஓலை எழுதத் துணிந்தாள்? ஒன்பது வருஷம் பிரயத்தனம் செய்து இந்த மகத்தான சைனியத்துடன் நான் படையெடுத்து வந்தது இந்தச் சலன புத்தியுள்ள சிற்பி மகளின் மூட சபதத்தை நிறைவேற்றுவதற்காக அல்ல; அதை நீர் நன்றாகத் தெரிந்து கொள்ளும். பல்லவ குலத்தின் பங்கமுற்ற கௌரவத்தை நிலைநாட்டுவதற்காகவே நான் வந்தேன். மகேந்திர சக்கரவர்த்தி மரணத் தருவாயில் எனக்கு இட்ட கட்டளையை நிறைவேற்றும் பொருட்டுப் படையெடுத்து வந்தேன். பதினெட்டு வயதில் மகாமல்லன் என்று பட்டம் பெற்ற நரசிம்ம பல்லவனைப் பார்த்து நானிலம் சிரிக்காதிருக்கும் பொருட்டு வந்தேன். அற்ப புத்தியுள்ள சிற்பி மகளின் சபதத்தை நிறைவேற்றுவதற்காக வரவில்லை. இவளிடம் தர்மோபதேசம் பெற்று மோட்சம் அடைவதற்காகவும் நான் வரவில்லை. மேலே யுத்தத்தை நடத்துவதற்கு உமக்கு இஷ்டமில்லையென்று தெரிகிறபடியால் உமக்கு இந்த க்ஷணமே சேனாதிபதி உத்தியோகத்திலிருந்து விடுதலை தருகிறேன்!”.

இவ்வளவு நேரமும் சேனாதிபதியையே பார்த்துப் பேசிய மாமல்லர் சட்டென்று இலங்கை இளவரசரைத் திரும்பிப் பார்த்து, “மானவன்மரே! நம்முடைய சேனாதிபதி இப்படி நல்ல சமயத்தில் என்னைக் கைவிட்டு விடுவார் என்று அறிந்து தான் உம்மையும் உடன் அழைத்து வந்தேன். நல்லவேளையாக என் விருப்பத்தின்படி நடக்க நீர் ஒருவராவது இருக்கிறீரே! கோட்டையைத் தாக்குவதற்கு உடனே ஏற்பாடு செய்யும். இன்றிரவே தாக்குதல் ஆரம்பமாகி விட வேண்டும்!” என்றார். கோடை இடி குமுறி இடித்தாற் போன்ற குரலில் மாமல்லர் இவ்விதம் கர்ஜனை செய்து ஓய்ந்ததும் சிறிது நேரம் அங்கு நிசப்தம் குடிகொண்டிருந்தது. அனைவரும் திகைத்துப் போய் நின்றார்கள். மாமல்லரையும் பரஞ்சோதியையும் இரண்டு உடலும் ஓருயிருமான நண்பர்கள் என்று அவர்கள் அதுகாறும் எண்ணியிருந்தார்கள். பரஞ்சோதியைப் பார்த்து மாமல்லர் இவ்வளவு கடுமையான மொழிகளைக் கூறியது அவர்களைப் பெருங்கலக்கத்திற்கு உள்ளாக்கியது.

மானவன்மரோ, “இதுஎன்ன? பிள்ளையார் பிடிக்க குரங்காய் முடிந்ததே! சேனாதிபதியை என்றென்றறைக்கும் நமது விரோதி யாக்கிக்கொண்டோ மே?” என்று வேதனையடைந்து சும்மா நின்றார். “மானவர்மரே! ஏன் நிற்கிறீர் என்று? ” மாமல்லர் அதட்டவும், மானவர்வர் பரஞ்சோதியைப் பார்த்தார். மற்றவர்களைப் போலவே அத்தனை நேரம் திகைத்து நின்ற பரஞ்சோதி அப்போது ஓர் அடி முன்னால் வந்து தழுதழுத்த குரலில், பல்லவேந்திரா! பன்னிரண்டுவருஷம் நான் பல்லவ சாம்ராஜ்யத்துக்காக நான் செய்திருக்கும் சேவையை முன்னிட்டு ஒருவரம் அருளவேண்டும்!” என்றார்.

மாமல்லர் மறுமொழி ஒன்றும் சொல்லாமலிருக்கவே பரஞ்சோதி மேலும் கூறினார்: “பிரபு! தாங்களும் நானும் இதோ தெரியும் இந்த வாதாபி நகரத்துக்குள்ளே நாற்சந்தியில் நிற்கும் புலிகேசியின் ஜயஸ்தம்பத்துக்கருகில் நின்று ஓரு சபதம் எடுத்துக் கொண்டோ ம். கூடிய சீக்கிரம் படையெடுத்து வந்து அந்தப் பொய் ஜயஸ்தம்பத்தை பெயர்த்துத் தள்ளி விட்டு அதற்குப் பதிலாகப் பல்லவ விஜயத்தின் ஞாபக ஸ்தம்பத்தை அதே இடத்தில் நிலைநாட்டவும், சிவகாமி தேவியை விடுதலை செய்து கொண்டு போகவும் பிரதிக்ஞை செய்தோம். அதை நிறைவேற்றும் பொருட்டுச் சென்ற ஒன்பது வருஷகாலமாக இரவும் பகலும் உழைத்து வந்தோம். அந்த பிரதிக்ஞை நிறைவேறும் வரையில் இந்தச் சேனாதிபதி பதவியை அடியேன் வகிப்பதற்கு அனுமதி கொடுங்கள்!” என்றார்.

மாமல்லரின் முகத்தில் கோபாவேசம் தணிந்து ஓரளவு மகிழ்ச்சியும் மலர்ச்சியும் காணப்பட்டன. “இதற்கு இவ்வளவு சுற்றி வளைத்து வரம் கேட்பானேன்? சேனாதிபதி! நான் விரும்புவதும் அதுவேதான். உடனே தாக்குதலை ஆரம்பியுங்கள்!” என்றார். “தயவு செய்து மன்னிக்க வேண்டும்.இன்னும் ஒரு சிறு கோரிக்கை, பிரபு! கோட்டையைத் தாக்க ஆரம்பித்து விட்டால் ஒரு பகல் ஓர் இரவுக்குள் துரிதமாக முடித்து வெற்றி பெற வேண்டும். அதற்குத் தக்க ஆயத்தம் செய்வதற்கு மூன்று நாள் அவகாசம் கொடுங்கள்!” என்று சேனாதிபதி விநயத்துடன் கேட்டார். மாமல்லரின் மௌனம் அவர் வேண்டா வெறுப்பாகச் சேனாதிபதியின் கோரிக்கைக்கு இணங்கியதற்கு அறிகுறியாய் இருந்தது.

Source

Previous articleRead Sivagamiyin Sabatham Part 4 Ch 33
Next articleRead Sivagamiyin Sabatham Part 4 Ch 35

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here