Home Kalki Read Sivagamiyin Sabatham Part 4 Ch 35

Read Sivagamiyin Sabatham Part 4 Ch 35

82
0
Read Sivagamiyin Sabatham Part 4 Ch 35 Free, Sivagamiyin Sabatham is a historical novel. Sivagamiyin Sabatham audiobook, Sivagamiyin Sabatham pdf, Sivagamiyin Sabatham full story
Sivagamiyin Sapatham Part 4 Ch 35 சிவகாமியின் சபதம் நான்காம் பாகம்: சிதைந்த கனவு அத்தியாயம் 35: வாதாபி கணபதி

Read Sivagamiyin Sabatham Part 4 Ch 35

சிவகாமியின் சபதம்

நான்காம் பாகம்: சிதைந்த கனவு

அத்தியாயம் 35: வாதாபி கணபதி

Read Sivagamiyin Sabatham Part 4 Ch 35

மனிதர்களுக்குள்ளே இருவகை சுபாவம் உள்ளவர்கள் உண்டு. ஒருவகையார் கொடூரமான காரியங்கள்களையும் காட்சிகளையும் பார்க்கப் பார்க்க அவற்றைக் குறித்து அலட்சியமாக எண்ணத் தொடங்குகிறார்கள். அப்புறம் எண்ணத் தொடங்குகிறார்கள். அப்புறம் அத்தகைய கொடூரமான காரியங்களைச் செய்வது அவர்களுக்குச் சகஜமாகி விடுகிறது. ஆரம்பத்தில் பரிதாபம் அளிக்கும் சம்பவங்கள் நாளடைவில் அவர்களுடைய மனத்தில் எத்தகைய உணர்ச்சியையும் உண்டாக்குவதில்லை. இன்னொரு வகை சுபாவமுள்ளவர்களும் இந்த உலகில் இருக்கிறார்கள். கொடூரமான காட்சிகளைப் பார்க்கப் பார்க்க அவர்களுடைய உள்ளம் உணர்ச்சியின்றித் தடித்துப் போவதற்குப் பதிலாக ஆத்திரம் அதிகமாகிறது. பரிதாப சம்பவங்களைப் பார்க்கப் பார்க்க அவர்களுடைய மனவேதனை மிகுதியாகிறது. அநீதிகளையும், அக்கிரமங்களையும் காணக் காண அவற்றை உலகிலிருந்து ஒழிக்க வேண்டுமென்ற பிடிவாதம் அதிகமாக வளர்கிறது. பிந்திய சுபாவமுள்ள மாந்தர் கூட்டத்தைச் சேர்ந்தவர் சேனாதிபதி பரஞ்சோதி. ரத்தத்தைப் பார்க்கப் பார்க்க ரத்த வெறி அதிகமாகும் ராட்சஸ வர்க்கத்தை அவர் சேர்ந்தவரல்ல. வாதாபிப் பெரும் போரில் போர்க்களத்திலிருந்து ஓடிய ரத்த வெள்ளத்தையும் மலைமலையாகக் குவித்து கிடந்த மனித உடல்களையும்பார்த்து, படுகாயமடைந்து உயிர்போகும் தறுவாயில் அலறிக் கொண்டிருந்தவர்களின் ஓலத்தையும் கேட்ட பிறகு, பரஞ்சோதியின் உள்ளத்தில், ‘இந்தப் பயங்கரமெல்லாம் என்னத்திற்கு? மனிதருக்கு மனிதர் கொடுமை இழைப்பதும் கொன்று கொண்டு சாவதும் எதற்காக’ என்ற கேள்வியும் எழுந்திருந்தன.

அத்தகைய மன நிலைமையில் சிவகாமி தேவியின் ஓலை வரவே, அதில் எழுதியிருந்த ஒவ்வொரு வார்த்தையும் உண்மையென்று அவருக்குப் பட்டது. மேலும் அவ்விதக் கொடுஞ் செயல்களில் தம்மைப் புகவொட்டாமல் தடுத்தாட்கொள் வதற்காக இறைவனே சிவகாமி தேவியின் மூலம் அத்தகைய உபதேசத்தைச் செய்தருளியதாக அவர் எண்ணினார். இல்லாவிடில், மாமல்லருக்கு நேராக எழுதாமல் ஆயனர் மகள் தமக்கு அந்த ஓலையை எழுத வேண்டிய காரணம் என்ன? சிவகாமி தேவியே தமது சபதத்தை நிறைவேற்ற வேண்டிய அவசியமில்லை என்று சொல்லி விட்டபடியால், மாமல்லரும் அதற்கு உடனே இணங்கி விடுவார் என்று பரஞ்சோதி கருதினார். புலிகேசி பத்து வருஷங்களுக்கு முன்னால் பல்லவ நாட்டில் செய்த கொடுமைகளுக்காக இப்போது வாதாபி நகரின் ஜனங்கள் மீது பழி தீர்த்துக் கொள்வதில் யாருக்கு லாபம்? மேலும், இத்துடன் போகும் என்பது என்ன நிச்சயம்! பத்து வருஷங்களுக்கு முன்னால் புலிகேசி பல்லவ நாட்டில் செய்த அக்கிரமங்களுக்காக இப்போது வாதாபி மக்கள் மீது நாம் பழிவாங்குகிறோம். அதே மாதிரி இன்னும் சில வருஷம் கழித்துச் சளுக்க வம்சத்தார் மறுபடி பல்லவ நாட்டின் மீது பழிவாங்கப் பிரயத்தனப் படலாம் அல்லவா? நாட்டை ஆளும் மன்னர்கள் தங்களுடைய சொந்த கௌரவத்தையும் குல கௌரவத்தையும் நிலைநாட்டுவதற்காக ஒருவரையொருவர் பழிவாங்க முற்படுவதனால், இருதரப்பிலும் குற்ற மற்ற ஜனங்கள் அல்லவா சொல்ல முடியாத எத்தனையோ அவதிகளுக்கு உள்ளாகிறார்கள்.

இப்படியெல்லாம் சேனாதிபதி பரஞ்சோதியின் உள்ளம் சிந்தனை செய்து கொண்டிருந்தது. இடையிடையே மாமல்லர் விடுத்த கூரிய சொல்லம்புகளின் நினைவு அவருக்கு வேதனையளித்துக் கொண்டிருந்தது. மாமல்லருக்கும் உள்ளமும் உயிரும் ஒன்றே என்பதாக எண்ணி மனப்பால் குடித்துக் கொண்டிருந்ததெல்லாம் பொய்யாக அல்லவா போய் விட்டது? தம்முடைய யோசனையை அவ்வளவு அலட்சியமாகப் புறக்கணித்துதோடு, அவ்வளவு அகௌரவப்படுத்திப் பேசி விட்டாரே! அரசகுலத்தினரின் சுபாவமே இப்படித்தான் போலும்! அதிலும் அந்த இலங்கை நாட்டான் வந்ததிலிருந்து மாமல்லருடைய சுபாவமே மாறிப் போய் விட்டது! எல்லாம் அவனால் வந்த வினைதான். மாமல்லரிடம் மூன்று நாள் அவகாசம் கொடுக்கும்படி சேனாதிபதி பரஞ்சோதி கோரிய போது, கோட்டைக் தாக்குதலுக்குத் தக்க ஆயத்தம் செய்வதற்காகவே அவ்விதம் கோருவதாகக் கூறினார். இந்தக் காரணம் என்னவோ உண்மைதான். ஆயத்தமில்லாமல் ஆரம்பித்துப் பத்து நாளில் செய்யக் கூடிய காரியத்தைத் தகுந்த ஆயத்தங்களுடன் ஆரம்பித்து ஒரே நாளில் செய்து விடலாம் என்ற உண்மையைச் சேனாதிபதி பரஞ்சோதி தமது அனுபவத்தில் கண்டறிந்திருந்தார். எனவே, அந்த முறையைத் தம் யுத்த தந்திரங்களின் முதன்மையான தந்திரமாக அநுஷ்டித்து வந்தார்.

ஆனால் சேனாதிபதி மூன்று நாள் அவகாசம் வேண்டும் என்று கேட்டதற்கு மேற்கூறிய காரணத்தைத் தவிர இன்னும் ஒரு முக்கிய காரணம் இருந்தது. அது, இன்னமும் வாதாபிக் கோட்டைக்குள்ளே இருந்த சிவகாமி தேவியைக் கோட்டைத் தாக்குதல் ஆரம்பிப்பதற்குள்ளே பத்திரமாக வெளியில் கொண்டு வந்து சேர்க்க வேண்டும் என்பதுதான். பல்லவ சைனியம் கோட்டையை வெளியிலிருந்து தாக்க ஆரம்பிக்கும் போது கோட்டைக்குள்ளே ஆயனரின் குமாரிக்கு ஏதேனும் ஆபத்து விளையாது என்பது என்ன நிச்சயம்? இதைப் பற்றி ஏற்கனவே மாமல்லரும் பரஞ்சோதியும் கலந்து யோசனை செய்து கோட்டைக்குள்ளே ஒரு சிலரை முன்னதாக அனுப்புவதற்குச் சுரங்க வழி ஏதாவது இருக்கிறதா என்று கண்டுபிடிக்கச் சத்ருக்னனையும் குண்டோ தரனையும் ஏவியிருந்தார்கள். இவர்களுடைய முயற்சி என்ன ஆகிறது என்று பார்ப்பதற்காகவும் சேனாதிபதி மூன்று நாள் அவகாசம் கேட்டார்.

அந்த மூன்று நாளும் முடியும் சமயம் இப்போது வந்துவிட்டது. மூன்றாம் நாள் சூரியன் அஸ்தமிக்கும் நேரம். அன்றிஇரவு மாமல்லர் தமது முடிவைச் சொல்லி விட்டால், உடனே தாக்குதலை ஆரம்பிக்க வேண்டியதாயிருக்கும். ஆனால், சத்ருக்னனும் குண்டோ தரனும் இன்னும் வந்தபாடில்லை. இந்தத் தர்ம சங்கடத்துக்கு என்ன செய்வது? மாமல்லர் ஒருவேளைதம் கருத்தை மாற்றிக் கொண்டு சண்டையில்லாமலே கோட்டையின் சரணாகதியை ஒப்புக் கொள்ளுவதாயிருந்தால் நல்லதாய்ப் போயிற்று. இல்லாவிடில், சிவகாமி தேவிக்கு அபாயம் ஒன்றும் நேராமல் பாதுகாப்பது எப்படி?

இவ்விதமெல்லாம் பலவாறாகச் சிந்தனை செய்து கொண்டே பல்லவ சேனாதிபதி வாதாபிக் கோட்டையின் மதில் ஓரமாகக் குதிரை மீது வந்து கொண்டிருந்தார். கோட்டைக்கு உட்புறத்தில் ஏதோ சலசலப்பு ஏற்பட்டிருந்ததாகத் தோன்றியது. இத்தனை நாளும் கோட்டைக்குள்ளே எல்லையற்ற மௌனம் சதா குடிகொண்டிருந்திருக்க அதற்கு மாறாக இப்போது ஏதோ நானாவிதச் சப்தங்கள் எழுந்து கொண்டிருந்தன. இதனால் பரஞ்சோதியின் உள்ளக் கொந்தளிப்பு அதிகமாயிற்று. கோட்டையின் பிரதான முன்வாசலை அடைந்ததும் பரஞ்சோதி குதிரையை நிறுத்தினார். கோட்டையைத் தாக்குவதாயிருந்தால் அந்த பிரதான வாசலின் பிரம்மாண்டமான கதவுகளை முதல் முதலில் உடைத்தெறிந்தாக வேண்டும். அப்போதுதான் ஏககாலத்தில் அநேக வீரர்கள் உள்ளே புகுவது சாத்தியமாகும். சொற்ப நேரத்தில் நகரைக் கைப்பற்ற முடியும். இதற்கு வேண்டிய ஏற்பாடுகள் முன்னமே செய்யப்பட்டிருந்தன வெனினும் கடைசி முறையாக யானைப் படை வீரர்களுக்குக் கட்டளையிடுவதற்கு முன்னால் ஒரு தடவை அந்த வாசலை நன்றாய்க் கவனிக்கச் சேனாதிபதி விரும்பினார்.

எனவே, குதிரை மேலிருந்து இறங்கி வாசலை நெருங்கி வந்தார். அப்போது அந்த வாதாபிக் கோட்டை முன் வாசலில் அமைக்கப்பட்டிருந்த அருமையான வேலைப்பாடமைந்த சிற்பங்கள் அவர் கவனத்தைக் கவர்ந்தன. அந்தச் சிற்பங்களிலே கணபதியின் விக்ரகம் ஒன்றும் இருந்தது. பரஞ்சோதி அதன் அருகில் சென்று கைகூப்பி நின்றார். மனத்திற்குள் பின்வருமாறு பிரார்த்தனை செய்து கொண்டார்: ‘விக்னங்களையெல்லாம் நிவர்த்தி செய்யும் விநாயகப் பெருமானே நாங்கள் வந்த காரியம் நன்கு நிறைவேற அருள்புரிய வேண்டும் என் குருதேவரின் குமாரி சிவகாமி தேவிக்கு எவ்விதத் தீங்கும் நேரிடாமல் அவரைப் பத்திரமாய் அவருடைய தந்தை ஆயனரிடம் ஒப்புவிப்பதற்குத் துணைசெய்ய வேண்டும். என்னுடைய இந்தப் பிரார்த்தனையை நீ நிறைவேற்றி வைத்தால் பதிலுக்கு நானும் உனக்கு இந்தக் கோட்டைத் தாக்குதலில் எவ்வித தீங்கும் ஏற்படாமல் பார்த்துக் கொள்கிறேன். உன்னை என் பிறந்த ஊருக்குக் கொண்டு போய் ஆலயங் கட்டிப் பிரதிஷ்டை செய்வித்துத் தினந்தோறும் பூஜையும் நடத்துவிக்கிறேன்.

இவ்வாறு பரஞ்சோதி பிரார்த்தனை நடத்தி முடித்த அதே கணத்தில் அந்தக் கோட்டை வாசலுக்குச் சற்றுத் தூரத்தில் நின்ற பல்லவ வீரர்களிடையே மிக்கப் பரபரப்பு காணப்பட்டது. கோட்டை வாசலின் உச்சியைப் பார்த்தவண்ணம் அவர்கள் ஹாஹாகாரம் செய்தார்கள். அது சேனாதிபதியின் கவனத்தையும் கவரவே, அவர் அந்த வீரர்களை நோக்கினார். அவர்களில் ஒருவன், “சேனாதிபதி! வெள்ளைக் கொடி இறங்கி விட்டது!” என்று கூவினான். சேனாதிபதி தாமும் அவர்களிருந்த இடத்துக்கு விரைந்து சென்று கோட்டை வாசலின் உச்சியைப் பார்த்தார். மூன்று நாளாக அங்கே பறந்து கொண்டிருந்த சமாதான வெள்ளைக் கொடி காணப்படவில்லை!

Source

Previous articleRead Sivagamiyin Sabatham Part 4 Ch 34
Next articleRead Sivagamiyin Sabatham Part 4 Ch 36

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here