Home Kalki Read Sivagamiyin Sabatham Part 4 Ch 39

Read Sivagamiyin Sabatham Part 4 Ch 39

87
0
Read Sivagamiyin Sabatham Part 4 Ch 39 Free, Sivagamiyin Sabatham is a historical novel. Sivagamiyin Sabatham audiobook, Sivagamiyin Sabatham pdf, Sivagamiyin Sabatham full story
Sivagamiyin Sapatham Part 4 Ch 39 சிவகாமியின் சபதம் நான்காம் பாகம்: சிதைந்த கனவு அத்தியாயம் 39: வாதாபி தகனம்

Read Sivagamiyin Sabatham Part 4 Ch 39

சிவகாமியின் சபதம்

நான்காம் பாகம்: சிதைந்த கனவு

அத்தியாயம் 39: வாதாபி தகனம்

Read Sivagamiyin Sabatham Part 4 Ch 39

மாமல்ல சக்கரவர்த்தி தமது கூடாரத்தின் வாசலில் நின்று மாபெரும் பல்லவ சைன்யம் வாதாபிக் கோட்டை மதிலை நெருங்கிச் செல்லும் காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தார். தமது வாழ்நாளிலேயே மிக முக்கியமான சம்பவம் தம் கண் முன்னால் நடைபெறத் தொடங்கியிருக்கிறது என்பதை அவருடைய அந்தராத்மா அவருக்குச் சொல்லிக் கொண்டிருந்தது. அன்றிரவு நடக்கப் போகும் மகத்தான கோட்டைத் தாக்குதலின் காரணமாக ஆயிரமாயிரம் வருஷங்கள் வரையில் அவருடைய பெயர் ‘வாதாபி கொண்ட நரசிம்மன்’ என்று சரித்திரத்தில் பிரசித்தி பெற்று விளங்கப் போகிறது. ஆனால், அவர் எந்த நோக்கம் காரணமாக இந்த மகத்தான சைனியத்தைத் திரட்டிக் கொண்டு வந்தாரோ, அந்த நோக்கம் நிறைவேறுமா? சிவகாமிக்கு அவர் கொடுத்த வாக்குறுதி அன்றிரவோ மறுநாளோ நிறைவேறுவது நிச்சயம். மூன்று நாளைக்குள்ளே வாதாபிக் கோட்டை தகர்ந்து வாதாபி நகரம் பற்றி எரிவது நிச்சயம்… ஆனால், அதைப் பார்ப்பதற்குச் சிவகாமி உயிரோடிருப்பாளா? ஆஹா! அந்தப் பாவி உயிரோடிருந்து வாதாபி எரியும் காட்சியைப் பார்த்துவிட்டு வெளியேறி வந்தால்தான் என்ன? அவளுடைய வாழ்க்கை பழைய ஆனந்த வாழ்க்கையாகப் போகிறதா? ஒருநாளும் இல்லை. அவளுடைய மனோராஜ்யமெல்லாம் ஒரு சிதைந்த கனவாகி விட்டது. ஒருவேளை அந்தச் சிதைந்த கனவிலே சிவகாமி சில சில சமயம் இன்பத்தைக் காணக்கூடும், தமக்கோ அதுகூடக் கிடையாது. தமது பிற்கால வாழ்க்கை ஒரு வறண்ட பாலைவனமாகவே இருக்கும். அந்த எல்லையற்ற நெடிய பாலைவனத்தில் கானல் நீரைத் தவிர வேறு குளிர்ச்சியான காட்சியே தென்படப் போவதில்லை.

இவ்விதச் சிந்தனைகளில் ஆழ்ந்திருந்த மாமல்லர், தம்மிடம் முடிவாக விடைபெற்றுச் சென்ற பரஞ்சோதி மீண்டும் வருவதைக் கண்டு சிறிது வியப்புற்றவராய், அவர் தம் அருகில் நெருங்கியதும், “சேனாதிபதி! ஏதாவது புதிய விசேஷம் உண்டா?” என்று கேட்டார். “ஆம், பிரபு! சத்ருக்னன் திரும்பி வந்தான்” என்று சேனாதிபதி கூறி, அவன் சொன்ன விஷயங்களைச் சுருக்கமாகத் தெரிவித்தார். எல்லாவற்றையும் கேட்ட மாமல்லர், “இந்தச் செய்திகள் காரணமாக நமது யோசனையில் ஏதேனும் மாறுதல் உண்டா?” என்று கேட்டார். “விசேஷமாக ஒன்றுமில்லை, பிரபு! ஆனால், கோட்டைத் தாக்குதலைக் கூடிய விரைவில் நடத்தவேண்டிய அவசியம் அதிகமாகிறது. எதிரில் பாயும் புலியைக் காட்டிலும் காலடியில் நெளிந்து ஓடும் பாம்பு அதிக அபாயம் உள்ளதல்லவா?” “அப்படியானால் காபாலிகையின் கதையை நீர் நம்புகிறீரா? உமக்கு யுத்தச் சீட்டு அனுப்பியது புலிகேசி இல்லை. நாகநந்தி பிக்ஷுதான் என்று நினைக்கிறீரா? அப்படியானால் சிவகாமி தேவி பற்றிய கவலை அதிகமாகிறது. நானும் உங்களுடனே கோட்டைக்குள் இப்போதே வந்து விடட்டுமா?” “வேண்டாம், பிரபு! தாங்கள் இங்கே இருப்பதுதான் உசிதம் என்று கருதுகிறேன்.”

எது எப்படிப் போனாலும் இந்தத் தடவை தளபதி பரஞ்சோதி சிவகாமி தேவியைத் தாமே முதலில் சந்திக்க வேண்டும் என்று தீர்மானித்திருந்தார். முன் தடவை மாமல்லர் சிவகாமியைச் சந்தித்துப் பேசியதன் விபரீத விளைவை அவர் மறந்து விடவேயில்லை. அம்மாதிரி இம்முறை ஏற்படாமல் தடுப்பது தம் கடமையெனக் கருதினார். மாமல்லரும் பல காரணங்களினால் சிவகாமியை உடனே சந்திக்க விரும்பவில்லை; எனவே, அவர் பின்வருமாறு கூறினார்; “அப்படியே ஆகட்டும், சேனாதிபதி! ஒரு விஷயத்தை மறந்துவிட வேண்டாம். புலியைவிடப் பாம்பு கொடியது என்று நீர் கூறியது முற்றும் உண்மை. நாகநந்தி விஷயத்தில் தாட்சண்யமே பார்க்க வேண்டாம். அந்தக் கள்ள பிக்ஷு உயிரோடிருக்கும் வரையில் இந்த வாழ்க்கையில் நம் இருவருக்கும் நிம்மதி கிடையாது; இதை மறக்க மாட்டீர் அல்லவா?” “மறக்கமாட்டேன், பிரபு!”

இதற்குப் பிறகும் சேனாதிபதி தயங்கி நிற்பதைக் கண்டு மாமல்லர், “இன்னும் ஏதாவது சொல்லுவதற்கு இருக்கிறதா?” என்றார். பரஞ்சோதி, ஆம் இன்னும் ஒரே ஒரு விஷயம். மன்னிக்க வேண்டும்; வாதாபி நகரை எரித்துவிட வேண்டும் என்ற கட்டளையில் மாறுதல் ஒன்றும் இல்லையே?” என்று கேட்டார். “சேனாதிபதி! போதும்! இந்த நிமிஷமே நான் கோட்டை வாசலுக்குப் போகிறேன். இனி உம்மை நம்பிப் பயனில்லை, நீர் திருநீறு தரித்து ருத்ராட்சம் அணிந்து சிவ பஜனை செய்யச் செல்லும்!” “பிரபு! திருநீறு தரித்த பெருமான் திரிபுரத்தையே எரித்தார். இந்த வாதாபியை எரிப்பது அவருக்குப் பெரிய காரியமில்லை. இன்று இரவே வாதாபி நகரம் பற்றி எரிவதைக் காண்பீர்கள்!” “அப்படியானால் ஏன் இந்தத் தயக்கம், கேள்வி எல்லாம்?”

“தங்களுடைய விருப்பத்தை நிச்சயமாகத் தெரிந்து கொள்வதற்காகத்தான். கோட்டைக்குள் புகுந்தபிறகு நகரை எரிக்க வேண்டும் என்று தாங்கள் கட்டளையிட்டீர்கள், அதை மாற்றிச் செய்ய விரும்புகிறேன். முதலில், வாதாபி தகனம் ஆரம்பமாகப் போகிறது. வெளியிலிருந்தபடியே நெருப்புப் பந்தங்களை நகருக்குள் எறியும்படி கட்டளையிடப் போகிறேன்.” “இதற்கு என்ன அவசியம்?” “நகரத்துக்குள்ளேயிருந்து நம் வீரர்கள் கொண்டு வரும் பொருள்களில் பாதி அவரவர்களுக்கே சொந்தம் என்று சொல்லியிருக்கிறேன். ஆகையால், நகரம் பற்றி எரிவதைக் காணும்போது நம் வீரர்களின் வேகம் ஒன்றுக்குப் பத்து மடங்காகும். பிரபு! நாளைச் சூரியோதயத்துக்குள்ளே நான் இந்தக் கோட்டைக்குள்ளே பிரவேசித்தாக வேண்டும். அதற்குமேல் தாமதித்தால் சிவகாமி தேவியைக் காப்பாற்றுவது அசாத்தியமாகி விடலாம். சூரியோதயமாகும் சமயத்தில் தாங்களும் ஆயத்தமாயிருக்க வேண்டும். இன்று ஓரிரவு தூங்காமல் வாதாபி தகனத்தைப் பார்த்துக் கொண்டிருங்கள்!” என்று சொல்லி விட்டுச் சக்கரவர்த்தியின் மறுமொழிக்குக் காத்திராமல் சேனாதிபதி விரைந்து சென்றார்.

சேனாதிபதி சொன்னபடியே அன்றிரவு நடுநிசி நேரத்தில் வாதாபி தகனம் ஆரம்பமாயிற்று. கோட்டை மதிளைச் சுற்றி ஆங்காங்கு பெரிய உயரமான தூக்கு மரங்கள் நிறுத்தப்பட்டன. அந்த மரங்களின் மீது ஏறி நின்று அதற்கென்று பயிற்சி செய்யப்பட்டிருந்த பல்லவ வீரர்கள், கொளுத்தப்பட்ட தீப்பந்தங்களையும் கந்தக வெடிகளையும் நகருக்குள் வீசி எறிந்தார்கள். தீப்பந்தங்கள் போகும்போதே காற்றினால் ஜுவாலை விட்டுக் கொண்டு சென்று விழுந்த இடங்களில் எல்லாம் குபீர் குபீர் என்று தீ மூட்டின. கந்தக வெடிகள் ஆங்காங்கு வெடித்து நெருப்பைப் பரப்பின. அன்றிரவு மூன்றாம் ஜாமத்திற்குள் இலட்சோப இலட்சம் ஜனங்கள் வசித்த அந்த வாதாபி மாநகரத்தில் நாற்புறமும் தீ மூண்டு எரியத் தொடங்கியது. அக்கினி தேவனுக்கு உதவி செய்ய வாயு பகவானும் வந்து சேர்ந்தார். மூண்டடித்த காற்றினால் தீயின் ஜுவாலைகள் குதித்துக் குதித்துப் பாய்ந்து வாதாபி நகரின் மாடமாளிகைகள் கூட கோபுரங்கள் எல்லாவற்றையும் விரைந்து விழுங்கத் தொடங்கின.

தீயோடு புகையும் படலம் படலமாக எழுந்து எட்டுத் திசைகளையும் வானத்தையும் மறைத்தது. அதே சமயத்தில் பல்லவ, பாண்டிய வீரர்கள் கோட்டையை நாற்புறமும் சூழ்ந்து கொண்டு மதிள் மீது ஏறிக்குதிக்க முயன்றார்கள். மதிள் மீதிருந்த சளுக்க வீரர்கள் அவர்களைத் தடுத்தார்கள். அவர்களுடைய வாளாலும் வேலாலும் அம்புகளாலும் தாக்கப்பட்டு ஆயிரமாயிரம் தமிழ் வீரர்கள் உயிரிழந்து விழுந்தார்கள். ஆயினும் சமுத்திரத்தில் பெருங்காற்று அடிக்கும்போது ஓர் அலைக்குப் பின்னால் இன்னோர் அலை இடைவிடாமல் வந்து கரையை மோதுவது போலத் தமிழ் வீரர்கள் மேலும் மேலும் வந்து கொண்டேயிருந்தார்கள்.

அதோடு கோட்டையின் நாலுபுறத்து வாசல்களும் பலமாகத் தாக்கப்பட்டன. ஏக காலத்தில் பத்துப் பன்னிரண்டு யானைகள் தங்கள் துதிக்கையினால் பிரம்மாண்டமான மரத் தூண்களையும் இரும்புலக்கைகளையும் தூக்கி ஆவேசமாகக் கோட்டை வாசல் கதவுகளின் மீது மோதியபோது அந்தக் கதவுகள் படார் படார் என்று தெறித்து முறிந்து விழுந்தன. சேனாதிபதி பரஞ்சோதி சக்கரவர்த்தியிடம் கூறியவண்ணமே அன்றிரவு நாலாம் ஜாமம் முடியும் தறுவாயில் வாதாபிக் கோட்டை வாசல்களைத் தகர்த்த பல்லவ வீரர்கள், ஏற்கெனவே எரியத் தொடங்கியிருந்த வாதாபி நகருக்குள் பிரவேசித்தார்கள். கோட்டை மதிளைத் தாக்கிய பல்லவ வீரர்களும் நாற்புறத்திலும் உள்ளே குதிக்கத் தொடங்கிவிட்டார்கள். வாதாபி நகரம் தீக்கிரையாகும் இந்தச் சரித்திரப் பிரசித்தி பெற்ற சம்பவத்தைக் கீழ்வானத்தில் உதித்திருந்த விடிவெள்ளி கண்கொட்டாமல் பார்த்து வியந்து கொண்டிருந்தது.

Source

Previous articleRead Sivagamiyin Sabatham Part 4 Ch 38
Next articleRead Sivagamiyin Sabatham Part 4 Ch 40

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here