Home Kalki Read Sivagamiyin Sabatham Part 4 Ch 9

Read Sivagamiyin Sabatham Part 4 Ch 9

75
0
Read Sivagamiyin Sabatham Part 4 Ch 9 Free, Sivagamiyin Sabatham is a historical novel. Sivagamiyin Sabatham audiobook, Sivagamiyin Sabatham pdf, Sivagamiyin Sabatham full story
Sivagamiyin Sapatham Part 4 Ch 9 சிவகாமியின் சபதம் நான்காம் பாகம்: சிதைந்த கனவு அத்தியாயம் 9: யுத்த பேரிகை

Read Sivagamiyin Sabatham Part 4 Ch 9

சிவகாமியின் சபதம்

நான்காம் பாகம்: சிதைந்த கனவு

அத்தியாயம் 9: யுத்த பேரிகை

Read Sivagamiyin Sabatham Part 4 Ch 9

“தேவி! இந்தப் புராதன பல்லவ சிம்மாசனம் உன்னைப் போன்ற உத்தமியைத் தனக்கு உரியவளாகப் பெறுவதற்கு எத்தனையோ காலம் தவம் செய்திருக்க வேண்டும்! உன்னைப் பட்டமகிஷியாகப் பெறுவதற்கு நான் எவ்வளவோ ஜன்மங்களில் பாக்கியம் செய்திருக்க வேண்டும்!” என்று மாமல்ல சக்கரவர்த்தி கூறிய போது, அவரது வயிரம் பாய்ந்த கம்பீரக் குரலும் தழுதழுத்தது. வானமாதேவிக்கோ புளகாங்கிதம் உண்டாயிற்று. ஏதேதோ சொல்ல வேண்டுமென்று தேவி பிரயத்தனப்பட்டாள். ஆனால், வார்த்தைகள் வெளிவரவில்லை; பல்லவேந்திரர் மேலும் கூறினார்.

“பாண்டியர் குலவிளக்கே! கேள்! நீ என்னுடைய பட்டமகிஷி மட்டுமல்ல. எனக்குப் பிறகு இச்சிம்மாசனத்திற்குரிய மகேந்திர குமாரனுடைய அன்னை. பல்லவ சாம்ராஜ்யத்துப் பிரஜைகளையெல்லாம் ஒரு நாளிலே ஒரு நொடியிலே வசீகரித்து, அவர்களுடைய பக்தியைக் கொள்ளை கொண்ட சக்கரவர்த்தினி. என் தந்தை மகேந்திரர் காலமான சில நாளைக்குப் பிறகு, மந்திரி மண்டலத்தார் எனக்குப் பட்டாபிஷேகம் செய்து, பல்லவ சிம்மாசனத்தில் அமர்த்தினார்கள். அதே சிம்மாசனத்தில் என் அருகில் நீயும் வீற்றிருந்தாய். நம்மிருவருக்கும் ஆசி கூறிய எங்கள் குலகுரு ருத்ராச்சாரியார் நாம் சிம்மாசனத்தில் வீற்றிருக்கும் காட்சியானது, சொர்க்கலோகத்துத் தேவ சபையில் தேவேந்திரனும் இந்திராணியும் கொலு வீற்றிருப்பதைப் போல் இருக்கிறது என்று ஆசி கூறினார். அதைக் கேட்ட சபையோர் குதூகலத்துடன் ஆரவாரித்து மகிழ்ந்தார்கள். கொஞ்ச காலம் நாட்டில் மழை பெய்யாமலிருந்ததையும், நீ காஞ்சி நகர் புகுந்ததும் பெருமழை பெய்ததையும் நினைவுகூர்ந்த சபையோர், நீ சாக்ஷாத் இந்திராணியேதான், சந்தேகமில்லை என்று ஒருமுகமாகக் கூறினார்கள். செந்தமிழ்ப் புலவர்கள் உனக்கு வானமாதேவி என்று பெயர் சூட்டி வாழ்த்துப் பாடல்கள் புனைந்தார்கள். அது முதல் அரண்மனையிலும் நாடு நகரங்களிலும் உன்னை இந்திராணி என்றும், வானமாதேவி என்றும் என் பிரஜைகள் பெருமையோடு சொல்லி வருகிறார்கள். அப்பேர்ப்பட்ட உன்னை இந்தப் பல்லவ சிம்மாசனத்திலிருந்து இறக்கி விடுவதற்கு இந்த உலகிலே வேறு யாருக்கும் உரிமை கிடையாது….”

வானமாதேவி அப்போது குறுக்கிட்டு ஒரு கேள்வி கேட்டாள். “சுவாமி! இந்தப் பல்லவ சிம்மாசனத்துக்கு மட்டுந்தானே நான் உரிமையுடையவள்? தங்களுடைய இதய சிம்மாசனத்தில் எனக்கு இடம் கிடையாதல்லவா?” சற்றும் எதிர்பாராத மேற்படி கேள்வி மாமல்லரை ஒருகணம் திகைப்படையச் செய்து விட்டது. சற்று நிதானித்த பிறகு, வானமாதேவியை அன்புடன் நோக்கிச் சொன்னார்: “ஆகா! இத்தகைய சந்தேகம் உன் மனத்திலே ஏற்பட்டிருந்தும் சென்ற ஒன்பது வருஷ காலமாக என்னை ஒன்றும் கேளாமலே இருந்து வந்திருக்கிறாயல்லவா? தமிழ் மறை தந்த திருவள்ளுவ முனிவர், “தெய்வந் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யும் மழை” என்று கூறியருளினார். அவருடைய பொய்யா மொழிக்கு நீயே உதாரணமாவாய். சாதாரணப் பெண் ஒருத்திக்கு அத்தகைய சந்தேகம் தோன்றியிருந்தால் தினம் நூறு தடவை அதைப் பற்றிக் கேட்டுக் கணவனை நரக வேதனைக்கு உள்ளாக்கியிருப்பாள்!” “பிரபு! அப்படியானால் இந்த அரண்மனையிலே நான் கேள்விப்பட்டதிலும், நாட்டிலும் நகரத்திலும் ஜனங்கள் பேசிக் கொள்வதிலும் உண்மை கிடையாதா? அதை எண்ணிக் கொண்டு நான் எத்தனையோ இரவுகள் உறக்கமின்றிக் கழித்ததெல்லாம் வீண் மடமைதானா?” என்று வானமாதேவி சிறிது உற்சாகத்துடன் கேட்டாள்.

“தேவி! உண்மையில்லாமல் ஒரு வதந்தி பிறக்காது. நீ கேள்விப்பட்டது முழுவதும் பொய்யல்ல. ஆனால் அது என் பூர்வ ஜன்மத்தைச் சேர்ந்த விஷயம்” என்று கூறிவிட்டு மாமல்லர் சற்று நேரம் அக நோக்குடன் இருந்தார். பின்னர் ஒரு நீண்ட பெருமூச்சு விட்டு விட்டு அவர் கூறியதாவது: “ஆம்! அது என் பூர்வ ஜன்மத்தின் நிகழ்ச்சி. தேய்ந்து மறைந்து போன பழைய கனவு. என்னுடைய இளம்பிராயத்தில், மகேந்திர பல்லவரின் ஏக புதல்வனாய் கவலையும் துயரமும் இன்னதென்று அறியாதவனாய் நான் வளர்ந்த காலத்தில், வானமும் பூமியும் ஒரே இன்பமயமாய் எனக்குத் தோன்றிய நாட்களில், ஒரு சிற்பியின் மகள் என் இதயத்தில் இடம்பெற்றிருந்தாள். அவளுக்காக என் உடல் பொருள் ஆவியையும் இந்தப் பல்லவ குலத்தின் பெருமையையும் தத்தம் செய்ய நான் சித்தமாயிருந்தேன். ஆனால், என்றைய தினம் அவளுடைய உள்ளத்திலே அன்பைக் காட்டிலும் ஆங்காரம் மேலிட்டு என்னுடைய இதமான வார்த்தையை உதாசீனம் செய்தாளோ, நூறு காத தூரம் நான் அவளைத் தேடிச் சென்று என்னுடன் வரும்படி அழைத்தபோது, வெறும் பிடிவாதம் காரணமாக என்னுடன் வருவதற்கு மறுத்தாளோ, அன்றே என்னுடைய இதயத்திலிருந்து அவள் விலகிச் சென்றாள். இன்னமும் அவளை நான் மறந்து விடவில்லை; மறக்க முடியவும் இல்லை. இதற்குக் காரணம் அவளுக்கு நான் அன்று கொடுத்த வாக்குறுதியை இன்னும் நிறைவேற்றாமலிருப்பதுதான். தூர தேசத்தில் பகைவர்களுடைய கோட்டைக்குள்ளே வசிக்கும் சிவகாமியின் ஆவியானது என்னை இடைவிடாமல் சுற்றிச் சுற்றி வந்து, பகலில் அமைதியில்லாமலும், இரவில் தூக்கமில்லாமலும் செய்து வருகிறது. என்றைய தினம் அவளுக்கு நான் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுகிறேனோ, வாதாபியை வென்று, அவளை விடுதலை செய்து, அவள் தந்தையிடம் ஒப்புவிக்கிறேனோ அன்று அந்தப் பாதகியின் ஆவி என்னைச் சுற்றுவதும் நின்று போய் விடும். அன்றைக்கே அவளுடைய நினைவை என் உள்ளத்திலிருந்து வேரோடு பிடுங்கி எறிந்து விடுவேன். பின்னர் என் மனத்திலே உன்னையும் நமது அருமைக் குழந்தைகளையும் இந்தப் பல்லவ சாம்ராஜ்யத்தின் மகோந்நதத்தையும் தவிர, வேறெதுவும் இடம்பெறாது. தேவி! நான் சொல்வதில் உனக்கு நம்பிக்கை ஏற்படுகிறதா! அல்லது இதெல்லாம் உலகில் காமாதுரர்களான புருஷர்கள் சாதாரணமாய்ச் சொல்லும் பசப்பு வார்த்தைகள் என்றே நினைக்கிறாயா?” என்று மாமல்லர் கேட்டார்.

வானமாதேவி அந்தக்கணமே தந்தக் கட்டிலிலிருந்து கீழிறங்கி மாமல்லரின் பாதங்களைத் தொட்டு, “பிரபு! தங்களுடைய வார்த்தை எதிலும் நான் அவநம்பிக்கை கொள்ளேன். தங்களுடைய வாக்குகளுக்கு விரோதமாக என் கண்ணெதிரிலே தாங்கள் நடந்து கொள்வதாகத் தோன்றுமானால், என் கண்களின் பேரிலேதான் அவநம்பிக்கை கொள்வேன்; தங்களைச் சந்தேகிக்க மாட்டேன்!” என்றாள். சந்தேகமும் ஆங்காரமும் நிறைந்த சிவகாமியின் காதலுக்கும் இந்தத் தென் பாண்டிய நாட்டு மங்கையர் திலகத்தின் சாத்வீகப் பிரேமைக்கும் உள்ள வேற்றுமையைக் குறித்து மாமல்லரின் உள்ளம் சிறிது நேரம் சிந்தனையில் ஆழ்ந்திருந்தது. சட்டென்று சுயநினைவு பெற்று வானமாதேவியை இரு கரங்களாலும் தூக்கிக் கட்டிலில் தம் அருகில் உட்கார வைத்துக் கூறினார்:

“இந்த விஷயத்தைப் பற்றி இப்போது கேட்டதே நல்லதாய்ப் போயிற்று. என் தலையிலிருந்து ஒரு பெரிய பாரத்தை நீக்கி விட்டாய். அதற்கு ஈடாக உன்னிடம் இந்தப் பெரிய ராஜ்யத்தின் பாரத்தை நான் ஒப்புவித்து விட்டுப் போகப் போகிறேன். நான் இல்லாத காலத்தில் மந்திரி மண்டலத்தார் இராஜ்ய விவகாரங்களைக் கவனித்துக் கொள்வார்கள் என்றாலும், முக்கியமான காரியங்களில் உன்னுடைய அபிப்பிராயத்தைக் கேட்டே செய்வார்கள். ஆனால், தேவி! ஒரு முக்கியமான காரியத்தை மட்டும் உன்னுடைய தனிப் பொறுப்பாக ஒப்புவிக்கப் போகிறேன். அதை அவசியம் நிறைவேற்றித் தருவதாக நீ எனக்கு வாக்களிக்க வேண்டும்” என்று சக்கரவர்த்தி கேட்டதும் வானமாதேவியின் முகத்தில் பெருமிதக் கிளர்ச்சி காணப்பட்டது. “பிரபு! இந்த அபலைப் பெண்ணினால் ஆகக்கூடிய காரியம் ஏதேனும் இருந்தால் கட்டளையிடுங்கள். அதை என்னுடைய பரமபாக்கியமாகக் கருதி நிறைவேற்றி வைக்கிறேன்!” என்றாள்.

“காரியம் இருக்கிறது, அது மிகவும் முக்கியமான காரியம். உன் சகோதரன் மகன் நெடுமாறன் ஒரு பெரிய சைனியத்துடன் வாதாபிப் படையெடுப்பில் என்னோடு சேர்ந்து கொள்வதற்காகப் புறப்பட்டான் இன்னும் வந்து சேரவில்லை. வராக நதிக்கரையில் தேக அசௌக்கியம் காரணமாகத் தங்கியிருப்பதாகவும் ஒரு வாரத்தில் காஞ்சிக்கு வந்து சேருவதாகவும் அது வரையில் நான் அவனுக்காகக் காத்திருக்க வேண்டுமென்றும் சொல்லி அனுப்பியிருக்கிறான். அப்படி நான் தாமதிப்பது அசாத்யமான காரியம். நமது குலகுரு பார்த்துச் சொன்ன நாளில் நான் கிளம்பியே தீர வேண்டும். தேவி! வழியில் நெடுமாறன் சமணர்களின் மாய வலையிலே விழுந்திருப்பதாக எனக்குச் செய்தி எட்டியிருக்கிறது. சமணர்கள் என் மீது எப்படியாவது பழி தீர்க்க வஞ்சம் கொண்டிருப்பதை நீ அறிவாய். இந்த நிலையில் நெடுமாறனால் இவ்விடம் தீங்கு எதுவும் நேராமல் நீதான் பார்த்துக் கொள்ள வேண்டும்.”

இப்படி மாமல்லர் கூறி வாய் மூடுவதற்குள் வானமாதேவி, “பிரபு! இந்த விஷயத்தில் தாங்கள் கொஞ்சமும் கவலையின்றி நிம்மதியாகச் செல்லுங்கள். என் பிறந்தகத்தைச் சேர்ந்தவர்களால் தங்களுக்கு எவ்விதக் கெடுதலும் நேர்வதற்கு நான் விடமாட்டேன். நெடுமாறனுக்கு அத்தகைய தீய எண்ணம் ஏதேனும் இருப்பதாகத் தெரிந்தால் இந்தக் கையிலே கத்தி எடுத்து அவனுடைய நெஞ்சிலே பாய்ச்சிக் கொன்று விடுவேன்!” என்று கம்பீரமாய் மொழிந்தாள். மாமல்லர் இலேசாகப் புன்னகை புரிந்து விட்டுக் கூறினார்: “வேண்டாம், வேண்டாம்! உன்னுடைய மல்லிகை இதழ் போல் மிருதுவான தளிர்க் கரங்கள் கத்தியைப் பிடித்தால் நோகுமல்லவா? நீ கத்தி எடுக்க வேண்டாம். அப்படி ஒரு வேளை அவசியம் நேர்ந்தால் நமசிவாய வைத்தியரைக் கேட்டு நல்ல விஷமாக வாங்கி வைத்துக் கொண்டு, அதைப் பாலிலே கலந்து கொடுத்து விடு!… ஆனால் அந்த மாதிரி அவசியம் ஒன்றும் அநேகமாக நேராது. என்னுடைய சந்தேகம் கொஞ்சமும் ஆதாரமற்றதாயிருக்கலாம். என்றாலும் இராஜ்யப் பொறுப்பு வகிப்பவர்கள் இப்படியெல்லாம் சந்தேகப்பட்டு முன் ஜாக்கிரதை செய்தல் அவசியமாயிருக்கிறது! அதிலும் யுத்தத்துக்காகத் தூரதேசத்துக்குக் கிளம்பும் போது சர்வ ஜாக்கிரதையாயிருக்க வேண்டுமல்லவா?”

இப்படி மாமல்லர் கூறி முடித்தாரோ இல்லையோ, அரண்மனையின் கனமான நெடுஞ்சுவர்களையெல்லாம் அதிரச் செய்து கொண்டு ஒரு பெரு முழக்கம் கேட்டது. கேட்கும்போதே ரோமச் சிலிர்ப்பு உண்டாகும்படியான அந்தச் சப்தம் வெளியிலே எங்கேயோ தொலை தூரத்திலிருந்து வருகிறதா அல்லது தரைக்கு அடியிலே பாதாளத்திலேயுள்ள பூகர்ப்பத்திலேயிருந்து வருகிறதா என்று தெரியாதபடி அந்தப் படுக்கை அறைக்குள்ளே எப்படியோ புகுந்து வந்து சூழ்ந்தது. அந்தச் சப்தம் காதினால் கேட்கக் கூடிய சப்தம் மட்டும் அல்ல! உடம்பினாலே ஸ்பரிசித்து உணரக்கூடிய சப்தமாயிருந்தது. “ஆகா நடுராத்திரி ஆகி விட்டது! யுத்த பேரிகை முழங்குகிறது!” என்று மாமல்லர் துள்ளி எழுந்தார்.

அவ்வாறு மாமல்லரைத் துள்ளி எழச் செய்த யுத்தபேரிகையின் முழக்கம், அவருடைய மனக் கண்ணின் முன்னால் அதிபயங்கரமான போர்க்களங்களின் காட்சியைக் கொண்டு வந்து காட்டியது. பெரிய கருங்குன்றுகள் இடம் விட்டு நகர்ந்து ஒன்றையொன்று தாக்குவது போல், ஆயிரக்கணக்கான போர் யானைகள் கோரமாகப் பிளிறிக் கொண்டு, ஒன்றையொன்று மோதித் தாக்கின. நூறு நூறு ரதங்கள் பூமி அதிரும்படியாக விரைந்து சென்று, ஒன்றின் மீது ஒன்று இடித்துத் தூள் தூளாகி விழுந்தன. பதினாயிரக்கணக்கான குதிரைகள் வாயுவேகமாகப் பாய்ந்து சென்று போர்க்களத்தின் மத்தியில் சந்திக்க, அவற்றின் மீதிருந்த போர் வீரர்கள், கையிலிருந்த ஈட்டிகளைக் கொண்டு, ஒருவரையொருவர் தாக்கிய போது, ஈட்டிகள் மின்னலைப் போல் ஒளிவீசிக் கண்களைப் பறித்தன. லட்சக்கணக்கான போர் வீரர்கள் கூரிய வாள்களைக் கொண்டு ஒருவரையொருவர் வெட்டித் தள்ளினார்கள். பார்க்கப் பயங்கரமான இரத்த வெள்ளம் ஒரு பெரிய மாநதியின் பிரவாகத்தைப் போல் ஓடிற்று. அந்த பிரவாகத்தில் உயிரிழந்த கரிகளும், பரிகளும், காலும் கையும் தலையும் வெட்டுண்ட மனிதர்களின் உடல்களும் மிதந்து சென்றன. இந்தப் பயங்கரமான கோரக் காட்சியுடன் கலந்து கலந்து, ஒரு பெண்ணின் ஆங்காரம் நிறைந்த முகத்தோற்றமும் மாமல்லரின் அகக் காட்சியில் தென்பட்டது! அது சிற்பி மகள் சிவகாமியின் முகந்தான் என்று சொல்ல வேண்டியதில்லையல்லவா?

Source

Previous articleRead Sivagamiyin Sabatham Part 4 Ch 8
Next articleRead Sivagamiyin Sabatham Part 4 Ch 10

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here