Home Kalki Read Solaimalai Ilavarasi Ch 11

Read Solaimalai Ilavarasi Ch 11

71
0
Read Solaimalai Ilavarasi free, Solaimalai Ilavarasi is an historical novel written by Kalki. Read Solaimalai Ilavarasi Ch 11, Download Solaimalai Ilavarasi, Solaimalai Ilavarasi PDF, Download Solaimalai Ilavarasi PDF
Solaimalai Ilavarasi Ch 11 சோலைமலை இளவரசி அத்தியாயம் 11: அரண்மனைச் சிறை

Read Solaimalai Ilavarasi Ch 11

சோலைமலை இளவரசி

அத்தியாயம் 11: அரண்மனைச் சிறை

Read Solaimalai Ilavarasi Ch 11

மறுநாள் காலையில் குமாரலிங்கம் உறக்கம் நீங்கிக் கண்விழித்து எழுந்தபோது சூரியன் உதயமாகி மலைக்கு மேலே வெகுதூரம் வந்திருப்பதைப் பார்த்தான். ‘அப்பா இவ்வளவு நேரமா தூங்கிவிட்டோ ம் பல தினங்கள் தூக்கமில்லாமல் அலைந்ததற்குப் பதிலாக இப்போது வட்டி சேர்த்துத் தூங்குகிறோம் போல் இருக்கிறது’ என்று எண்ணித் தனக்குத்தானே நகைத்துக் கொண்டான். சுற்றுமுற்றும் பார்த்துத் தான்படுத்திருந்த இடத்தைக் கவனித்ததும் அவனுடைய நகைப்புத் தடைபட்டது. முதல்நாள் காலையில் தான் படுத்துத் தூங்கிய வஸந்த மண்டபம் அல்லஅது என்பதையும் அந்தப் பழைய கோட்டைக்குள்ளே இடிந்துகிடந்த பல பாழுங் கட்டிடங்களில் ஒன்றின் மேல்மச்சுத்தளம் அது என்றும் தெரிந்து கொண்டதும் அவனுக்கு ஒரே வியப்பும் திகைப்புமாய்ப் போய்விட்டது. நேற்றிரவுதான் இந்தக் கட்டிடத்துக்கு வந்து மேல்தளத்தில் ஏறிப் படுத்துக்கொண்டதாகவே அவனுக்கு ஞாபகம் வரவில்லை. உறக்கக் கலக்கத்தோடு அங்குமிங்கும் அலைந்து கொண்டிருக்கையில் தற்செயலாக இங்கே வந்ததும் படுத்துத் தூங்கிப் போயிருக்க வேண்டும்.

இது என்ன கட்டிடமாயிருக்கும் ஒரு வேளை… ஆகா சந்தேகம் என்ன ‘சின்ன நாச்சியார் அரண்மனை’ என்பது இதுவாகத்தான் இருக்க வேண்டும் பிறகு ஒவ்வொன்றாக இரவில் கனவிலே கண்ட நிகழ்ச்சிகள் கேட்ட சம்பாஷணைகள் எல்லாம் குமுறிக் கொண்டு ஞாபகம் வந்தன. உண்மையில் அவ்வளவும் கனவுதானா கனவு என்றால் அநுபவங்கள் எல்லாம் அவ்வளவு உண்மைபோலத் தோன்றுமா ஒரேநாள் இரவில் பத்துப் பதினைந்து தினங்களின் நிகழ்ச்சிகளை உண்மைபோல் உணர்ந்து அநுபவிக்க முடியுமா அந்த அநுபவங்களும் பத்துப் பதினைந்து வருஷங்களில் நீடித்த அநுபவங்களைப் போல் உள்ளத்தில் பதிய முடியுமா இந்தப் பாழுங் கோட்டையில் ஏதோ மாயமந்திரம் இருக்கிறது பொன்னம்மாள் சொன்னபடி மோகினிப்பிசாசு இல்லாவிட்டால் வேறு ஏதோ ஒரு மாயப்பிசாசோ பில்லிசூனியமோ கட்டாயம் இங்கே இருக்கிறது. சேர்ந்தாற்போல் சிலநாள் இங்கே இருந்தால் மனுஷனுக்குப் பைத்தியம் பிடித்தாலும் பிடித்துவிடலாம் உடனே இங்கிருந்து நடையைக் கட்டவேண்டியதுதான்…

பொன்னம்மாளை மறுபடியும் பார்க்காமலே போய்விடுகிறதா அழகுதான் பொன்னம்மாளாவது கண்ணம்மாளாவது ஐந்தாம்வகுப்புக் கூடப் பூர்த்தியாகப் படிக்காத பட்டிக்காட்டுப் பெண்ணுக்கும் காலேஜுப் படிப்பையெல்லாம் கரைத்துக் குடித்த தேசபக்த வீரனுக்கும் என்ன சிநேகம் என்ன உறவு ஏற்படக்கூடும். இந்தப் பாழுங்கோட்டையிலுள்ள ஏதோ ஒரு மாயசக்தியினால்தான் பொன்னம்மாளைப் பற்றிய நினைவே தன்மனத்தில் உண்டாகிறது. உடனே இங்கிருந்து புறப்பட வேண்டியதுதான் வேறு எங்கே போனாலும் பாதகமில்லை. இங்கே ஒருநிமிஷங்கூட இருக்கக்கூடாது இவ்வாறு தீர்மானித்துக்கொண்டு அந்தப் பழைய மாளிகை மச்சிலிருந்து கீழே குதித்து இறங்கி ஒற்றையடிப்பாதையை நோக்கிக் குமாரலிங்கம் நடந்தான். திடீரென்று நாய் குரைக்கும் சத்தம் கேட்டது குமாரலிங்கத்தின் நாவும் தொண்டையும் ஒரு நொடியில் வறண்டு விட்டன. அப்படிப்பட்ட பயங்கர பீதி அவனைப் பற்றிக் கொண்டது. காரணம் என்னவென்று யோசித்துப் பார்த்தால் நம்பமுடியாத அசட்டுக் காரணந்தான் இரவில் கனவிலே கேட்ட வேட்டைநாயின் குரைப்புச் சத்தத்தை அது அவனுக்கு நினைவூட்டியதுதான்.

காரணம் எதுவாயிருந்தாலும் மனத்தில் தோன்றிய பீதி என்னவோ உண்மையாயிருந்தது. சட்டென்று பக்கத்திலிருந்த இடிந்த பாழுஞ்சுவர் ஒன்றுக்குப் பின்னால் மறைந்துநின்று ஒற்றையடிப் பாதையில் யார் வருகிறார்கள் என்று கவனித்தான். அவன் மறைந்து நின்றதும் கவனித்ததும் வீண் போகவில்லை. சில நிமிஷத்துக்கெல்லாம் கையில் தடியுடன் ஒருமனிதன் முன்னால்வர அவனைத் தொடர்ந்து ஒரு நாய் வந்தது. நாய் என்றால் தெருவில் திரியும் சாமான்ய நாய் அல்ல; பிரமாண்டமான வேட்டைநாய். முன்காலைத் தூக்கிக் கொண்டு அது நின்றால் சரியாக ஓர் ஆள் உயரம் இருக்கும் எருமைமாட்டை ஒரே அறையில் கொன்று தோளிலே தூக்கிப் போட்டுக்கொண்டு அநாயசமாகப் போகக்கூடிய வேங்கைப் புலியுடன் சரிசமமாகச் சண்டையிடக்கூடிய நாய் அது குமாரலிங்கம் மறைந்து நின்ற பாழுஞ் சுவருக்கு அருகில் வந்த போது அந்த நாய் மேற்படி சுவரை நோக்கிக் குரைத்தது. முன்னால் வந்த மனிதன் திரும்பிப் பார்த்து “சீ கழுதை சும்மா இரு” என்று சொல்லிவிட்டுக் கைத்தடியால் நாயின் தலையில் ‘பட்’ என்று ஓர் அடி போட்டான். நாய் ஒரு தடவை உறுமிவிட்டுப் பிறகு பேசாமல் சென்றது. மனிதன் நாயை அடித்த சம்பவத்தை குமாரலிங்கம் சரியாகக் கவனிக்கவில்லை. கவனிக்க முடியாதபடி அவனுடைய மனத்தில் வேறொன்று ஆழமாகப் பதிந்துவிட்டது. அப்படிப் பதிந்தது நன்றாகத் தெரிந்த அந்தமனிதனுடைய முகந்தான். முறுக்கிவிட்ட மீசையோடு கூடிய அந்த முரட்டுமுகம் மாணிக்கவல்லியின் தந்தை

சாக்ஷாத் சோலைமலை மகாராஜாவின் முகத்தைப் போலவே தத்ரூபமாக இருந்தது. சுவரைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருந்த படியினால் குமாரலிங்கத்துக்குத் தலைசுற்றியபோதிலும் கீழே விழாமல் தப்பிக்க முடிந்தது. மனிதனும் நாயும் மறைந்த பிறகு குமாரலிங்கம் கோட்டை மதில் ஓரமாக ஓடிய சிறு கால்வாய்க்குச் சென்று முகத்தையும் சிரஸையும் குளிர்ந்த தண்ணீரினால் அலம்பிக் கொள்ள விரும்பினான். அதனால் தன்மனம் தெளிவடையும் என்றும் மேலே யோசனை செய்து எங்கே போவதென்று தீர்மானிக்கலாம் என்றும் எண்ணினான். அவ்விதமே கால்வாயை நோக்கிச் சென்றான். போகும்போது சோலைமலை மகாராஜாவை எந்தச் சந்தர்ப்பத்திலே அவன் பார்த்தான் என்பதும் இளவரசி மாணிக்கவல்லிக்கும் அவருக்கும் நடந்த பேச்சுவார்த்தைகளும் திரும்பத் திரும்ப அவனுக்கு ஞாபகம் வந்து கொண்டிருந்தன.

மாறனேந்தல் மகாராஜா உலகநாதத்தேவர் சோலைமலைக் கோட்டையில் வெகு காலமாகப் பூட்டிக் கிடந்த ‘சின்ன நாச்சியார் அரண்மனை’யில் சுமார் பதினைந்து தினங்கள் வசித்தார். அந்த அரண்மனை வாசம் ஒருவிதத்தில் அவருக்குச் சிறைவாசமாகத்தான் இருந்தது. சிறைவாசத்திலும் தனிச் சிறைவாசந்தான். ஆனாலும் சொர்க்கவாசத்தின் ஆனந்தத்தை அவர் அந்த நாட்களில் அநுபவித்துக் கொண்டிருந்தார். பகலெல்லாம் அந்த அரண்மனைச் சிறையின் மேன்மாடத்தில் அவர் அங்குமிங்கும் நடந்துகொண்டிருப்பார். அவருடைய கால்கள் நடந்து கொண்டிருக்கையில் உள்ளம் என்னவெல்லாமோ ஆகாசக் கோட்டைகளைக் கட்டிக் கொண்டிருக்கும். ஒரு குறிப்பிட்ட பலகணியின் அருகே அவர் அடிக்கடி வந்து நின்று எதிரே தோன்றிய பெரிய அரண்மனையை நோக்குவார். அந்த அரண்மனையின் மேல்மாடி முகப்பில் சிலசமயம் ஒரு பெண் உருவம் உலாவிக் கொண்டிருக்கும். இளவரசி மாணிக்கவல்லி தமக்காகவே அங்குவந்து நிற்கிறாள் உலாவுகிறாள் என்பதை எண்ணும் போதெல்லாம் அவருடைய உள்ளம் துள்ளிக் குதிக்கும். தினம் மூன்று வேளையும் வீரம்மா அக்கம்பக்கம் பார்த்துக் கொண்டு புறப்படுவாள்; சின்ன அரண்மனைக்கு ஒழுங்காகச் சாப்பாடு கொண்டுவந்து வைத்துவிட்டுப் போவாள்.

சூரியன் அஸ்தமித்து இரவு ஆரம்பித்ததோ இல்லையோ சிறைக்கதவு திறக்கப்படும். உடனே உலகநாதத்தேவர் கோதண்டத்திலிருந்து கிளம்பிய இராமபாணத்தைப் போல் நேரே வஸந்த மண்டபத்துக்குப் போய்ச் சேர்வார். சீக்கிரத்திலேயே மாணிக்கவல்லியும் அங்கு வந்துவிடுவாள். அப்புறம் நேரம் போவதே அவர்களுக்குத் தெரியாது. வருங்காலத்தைப் பற்றி எத்தனையோ மனோராஜ்ய இன்பக் கனவுகளைக் கண்டார்கள். இடையிடையே ஒருவரையொருவர் ‘நேரமாகிவிட்டது’ பற்றி எச்சரித்துக் கொள்வார்கள். எனினும் வெகுநேரம் சென்ற பிறகுதான் இருவரும் தத்தம் ஜாகைக்குச் செல்வார்கள்.

இப்படி ஒவ்வொரு தினமும் புதியபுதிய ஆனந்த அநுபவங்களை அவர்களுக்குத் தந்துவிட்டுப் போய்க் கொண்டிருந்த காலத்தில் ஒருநாள் பகல்வேளை முழுவதும் இளவரசியை அரண்மனை மேல்மாடி முகப்பில் காணாதபடியால் உலகநாதத்தேவர் ஏமாற்றமும் கவலையும் அடைந்தார். அஸ்தமித்த பிறகு வழக்கம்போல் வஸந்த மண்டபத்துக்குப் போய் அவர் காத்திருந்ததும் வீணாயிற்று. ஏதேதோ விவரமில்லாத பயங்களும் கவலைகளும் மனத்தில் தோன்றி அவரை வதைத்தன. மனத்தைத் துணிவுபடுத்திக் கொண்டு பெரிய அரண்மனைக்குச் சமீபமாகச் சென்று நின்றார். இருவர் பேசும் குரல்கள் கேட்டன. ஒரு குரல் மாணிக்கவல்லியின் இனிமை மிக்க குரல்தான். இன்னொரு குரல் ஆண்குரல் அவளுடைய தகப்பனாரின் குரலாகத்தான் இருக்க வேண்டும். அடர்த்தியான செடியின் மறைவிலே நன்றாக ஒளிந்து நின்று கொண்டு பலகணியின் வழியாக உலகநாதத்தேவர் உள்ளே பார்த்தார். அவர் எதிர்பார்த்தபடியே தந்தையும் மகளும் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள்.

ஆஹா அவ்வளவு அழகும் சாந்தகுணமும் பொருந்திய இனிய மகளைப் பெற்ற தகப்பனாரின் முகம் எவ்வளவு கடுகடுப்பாகவும் குரோதம் கொதித்துக் கொண்டும் இருக்கிறது. இதைப்பற்றி அதிகமாகச் சிந்திப்பதற்குள்ளே அவர்களுடைய சம்பாஷணையில் சிலவார்த்தைகள் அவர் காதில் விழுந்தன. உடனே பேச்சைக் காதுகொடுத்துக் கவனித்துக் கேட்க ஆரம்பித்தார். சோலைமலை மகாராஜாவுக்கும் அவருடைய அருமை மகளுக்கும் பின்வரும் சம்பாஷணை நடந்தது:

தந்தை: ஏது ஏது உலகநாதத் தேவனுக்காக நீ பரிந்து உருகிப் பேசுகிறதைப் பார்த்தால் கொஞ்சநாளில் அவனைக் கலியாணம் செய்து கொள்கிறேன் என்று கூடச் சொல்லுவாய் போலிருக்கிறதே மகள்: நீங்களுந்தான் எனக்கு அடிக்கடி மாப்பிள்ளை தேடவேண்டிய கஷ்டத்தைப் பற்றிச் சொல்லுகிறீர்கள் அல்லவா உங்களுக்கு அந்தக் கஷ்டம் இல்லாமற் போனால் நல்லதுதானே அப்பா தந்தை: என்கண்ணே உன் தாயார் காலமான பிறகு உன்னை வளர்ப்பதற்கு நான் எவ்வளவோ கஷ்டப்பட்டேன். அதைப் போல் இந்தக் கஷ்டத்தையும் நானே சுமந்து கொள்கிறேன். உனக்கு அந்தக் கவலை வேண்டாம். மகள்: எனக்குக் கவலையில்லாமல் எப்படி இருக்கும் அப்பா நீங்கள் பார்க்கும் மாப்பிள்ளை என் மனதுக்குப் பிடித்திருக்க வேண்டாமா நான் தானே கலியாணம் செய்து கொள்ள வேண்டும் அதற்குப் பிறகு ஆயுள் முழுவதும் அவரோடு நான் தானே இருந்தாக வேண்டும்

தந்தை: என் செல்வக் கண்மணி உன்னைக் கலியாணம் செய்து கொள்ளுகிற கழுதை உன்னைச் சரிவர வைத்துக் கொள்ளாவிட்டால் அவன் தவடையில் நாலு அறை கொடுத்துவிட்டு உன்னைத் திரும்ப இங்கே அழைத்துக்கொண்டு வந்துவிடுவேன். இப்போது இருப்பதுபோல் எப்போதும் நீ இந்தச் சோலைமலைக் கோட்டையின் மகாராணியாக இருக்கலாம். மகள்: அது எப்படி அப்பா ஒருவருக்கு வாழ்க்கைப்பட்ட பிற்பாடு நான் திரும்பவும் இங்கே வந்து சந்தோஷமாக இருக்க முடியுமா தந்தை: இந்த அரண்மனையில் உன்னுடைய சந்தோஷத்துக்கு என்ன குறைவு மாணிக்கம் மகள்: பெண்ணாய்ப் பிறந்தவர்கள் புருஷன் வீட்டுக்குப் போவதுதானே முறைமை அப்பா தந்தை: அது முறைமைதான் கண்ணே ஆனால் தகப்பனார் பார்த்துக் கலியாணம் செய்து கொடுக்கிற போது அப்படிக் கொடுக்கிற புருஷனுடைய வீட்டுக்கு மகள் போக வேண்டும். நாமெல்லாம் மானம் ஈனம் அற்ற வெள்ளைக்கார சாதியல்ல. வெள்ளைக்கார சாதியில் பெண்கள் தாங்களே புருஷர்களைத் தேடிக் கொள்வார்களாம் மோதிரம் மாற்றிக்கொண்டால் அவர்களுக்குக் கலியாணம் ஆகிவிட்டது போலவாம். இப்படிச் சொல்லிவிட்டு சோலைமலை மகாராஜா ‘ஹா ஹா ஹா’ என்று சிரித்தார். அவருடைய சிரிப்பு ஒருவாறு அடங்கிய பிறகு மறுபடியும் சம்பாஷணை தொடர்ந்தது. மகள்: அப்பா வெள்ளைக்கார சாதியைப்பற்றி அடிக்கடி புகழ்ந்து பெருமைப்படுத்திப் பேசுவீர்களே இன்றைக்கு ஏன் இந்தமாதிரி பேசுகிறீர்கள்

தந்தை: நானா வெள்ளைக்காரர்களைப் புகழ்ந்து பேசினேன் அதற்கென்ன அவர்கள் சண்டையில் கெட்டிக்காரர்கள். துப்பாக்கியும் பீரங்கியும் வைத்திருக்கிறார்கள் என்று சொல்லியிருப்பேன். மற்றபடி அவர்களைப் போல் கலியாணம் முதலிய காரியங்களில் வியவஸ்தை இல்லாமல் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லையே மகள்: அப்பா கலியாண விஷயத்தில் வெள்ளைக்காரர்கள் வியவஸ்தை இல்லாதவர்கள் என்று எப்படிச் சொல்லலாம் நம்முடைய தேசத்திலும் பழைய காலத்தில் அவ்விதந்தானே நடந்தது. இராஜகுமாரிகள் சுயம்வரத்தில் தங்கள் மனத்துக்கு உகந்த புருஷணைத் தேர்ந்தெடுத்து மாலையிடவில்லையா தமயந்தியும் சாவித்திரியும் வியவஸ்தை இல்லாதவர்களா

இதைக்கேட்ட சோலைமலை மகாராஜா சிறிது நேரம் திகைத்துப் போய் நின்றார். பிறகு “மாணிக்கம் வெளி உலகம் இன்னதென்று தெரியாமல் இந்த அரண்மனையில் அடைபட்டுக் கிடக்கும்போதே நீ இவ்வளவு கெட்டிக்காரியாக இருக்கிறாயே உனக்குத் தகுந்த புருஷனை நான் எங்கிருந்து பிடிக்கப்போகிறேன் பழைய நாட்களிலே போல மதுரைப் பட்டணத்தில் பாண்டிய ராஜ்யத்தை ஸ்தாபித்துவிட்டு எந்த மறவர்குலத்து வீரன் உன்னைப் பட்டத்து ராணியாக்குகிறேன் என்று வருகிறானோ அவனுக்குத்தான் உன்னைக் கட்டிக்கொடுப்பேன். வேறுஎந்தக் கழுதையாவது வந்தால் அடித்துத் துரத்துவேன்” என்று சொல்லிவிட்டு ‘இடி இடி’யென்று சிரித்தார். மறுபடியும் “அதெல்லாம் கிடக்கட்டும் மாணிக்கம் நீ உன் உடம்பைச் சரியாகப் பார்த்துக்கொள். இராத்திரியில் வெகுநேரம் வரையில் தோட்டத்தில் சுற்றிவிட்டு வருகிறாயாமே அது நல்லதல்ல. இளம் பெண்கள் இராத்திரியில் சீக்கிரம் படுத்துத் தூங்க வேண்டும். இன்றைக்காவது சீக்கிரமாகப் போய்ப் படுத்துக்கொள்” என்றார்.

“இராத்திரியில் எனக்குச் சீக்கிரமாகத் தூக்கம் வருகிறதில்லை அப்பா அதனால் தான் நிலா நாட்களில் சந்திரனையும் நட்சத்திரங்களையும் பார்த்துக்கொண்டு சிறிது நேரம் தோட்டத்தில் உலாவிவிட்டு வருகிறேன்” என்றாள் மாணிக்கவல்லி. “அடடே அதுதான் கூடாது சிறு பெண்கள் நிலாவில் இருக்கவே கூடாது; சந்திரனையே பார்க்கக் கூடாது. அப்படிச் சந்திரனையே பார்த்துக் கொண்டிருந்த பெண்கள் சிலருக்குச் சித்தப்பிரமை பிடித்திருக்கிறது” என்று சொல்லிவந்த மகாராஜா திடீரென்று பேச்சை நிறுத்தி “அது என்ன சத்தம்” என்று கேட்டுக்கொண்டு பலகணியின் வழியாக வெளியே பார்த்தார். மாணிக்கவல்லியின் முகத்தில் பெருங்கிளர்ச்சியுடன் “ஒன்றுமில்லையே அப்பா வெளியில் ஒரு சத்தமும் கேட்கவில்லையே” என்றாள். உண்மை என்னவென்றால் சற்று முன்னால் மகாராஜா அங்கிருந்து போவதற்காக எழுந்ததைப் பார்த்தவுடனே தோட்டத்தில் செடிகளின் மறைவில் நின்றுகொண்டிருந்த உலகநாதத்தேவர் இன்னும் சிறிது பின்னால் நகர்ந்தார். அப்போது செடிகளின் இலைகள் அசைந்ததனால் உண்டான சலசலப்பைக் கேட்டுவிட்டுத் தான் “அது என்ன சத்தம்” என்று சோலைமலை மகாராஜா கேட்டார்.

மேற்படி கேள்வி உலகநாதத் தேவரின் காதில் விழுந்தபோது அவருடைய குடலும் நெஞ்சும் நுரைஈரலும் மேலே கிளம்பித் தொண்டைக்குள் வந்து அடைத்துக் கொண்டது போலேயிருந்தது. அப்போது நினைத்துப் பார்த்தாலும் குமாரலிங்கத்துக்கு மேலே சொன்னது போன்ற தொண்டையை அடைக்கும் உணர்ச்சி ஏற்பட்டது. எப்படியோ சமாளித்துக் கொண்டு தட்டுத்தடுமாறி நடந்தான். ‘சலசல’வென்று சத்தத்துடன் ஓடிய தெளிந்த நீரையுடைய சின்னஞ்சிறு கால்வாயின் கரையை அடைந்தான். குளிர்ந்த தண்ணீரினால் முகத்தை நன்றாய் அலம்பிக்கொண்ட பிறகு தலையிலும் தண்ணீரை வாரிவாரி ஊற்றிக் கொண்டான். “ஓஹோ இங்கேயா வந்திருக்கிறீர்கள்” என்ற இனிய குரலைக் கேட்டு குமாரலிங்கம் தலை நிமிர்ந்து பார்த்தான். கையில் ஒரு சிறு சட்டியுடன் பொன்னம்மாள் கரை மீது நின்றுகொண்டிருந்தாள். குமாரலிங்கத்தின் வாயிலிருந்து அவனை அறியாமல் “மாணிக்கவல்லி வந்துவிட்டாயா” என்ற வார்த்தைகள் வெளிவந்தன.

Source

Previous articleRead Solaimalai Ilavarasi Ch 10
Next articleRead Solaimalai Ilavarasi Ch 12

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here