Home Kalki Read Solaimalai Ilavarasi Ch 12

Read Solaimalai Ilavarasi Ch 12

88
0
Read Solaimalai Ilavarasi free, Solaimalai Ilavarasi is an historical novel written by Kalki. Read Solaimalai Ilavarasi Ch 12, Download Solaimalai Ilavarasi, Solaimalai Ilavarasi PDF, Download Solaimalai Ilavarasi PDF
Solaimalai Ilavarasi Ch 12 சோலைமலை இளவரசி அத்தியாயம் 12: அப்பாவின் கோபம்

Read Solaimalai Ilavarasi Ch 12

சோலைமலை இளவரசி

அத்தியாயம் 12: அப்பாவின் கோபம்

Read Solaimalai Ilavarasi Ch 12

பொன்னம்மாள் சிறிது நேரம் திறந்த வாய் மூடாமல் அதிசயத்துடன் குமாரலிங்கத்தையே பார்த்துக் கொண்டு நின்றாள். குமாரலிங்கம் தன்னுடைய தவறை உணர்ந்தவனாய்க் கரைமீது ஏறிப் பொன்னம்மாளின் அருகில் வந்தான். “பொன்னம்மா சட்டியில் என்ன சோறு கொண்டு வந்திருக்கிறாயா அப்படியானால் கொடு; நீ நன்றாயிருப்பாய் பசி பிராணன் போகிறது” என்றான். பொன்னம்மாள் அதற்குப் பதில் சொல்லாமல் “சற்று முன்னால் ஒரு பெண்பிள்ளையின் பெயர் சொன்னாயே அந்தப் பெண் யார்” என்று கேட்டாள். “என்னமோ பைத்தியக்காரத்தனமாய்த்தான் சொன்னேன். அது யாராயிருந்தால் இப்போது என்ன அந்தச் சட்டியை இப்படிக்கொடு. நான் சாப்பிட வேண்டும்” “முடியாது நீ நிஜத்தைச் சொன்னால்தான் கொடுப்பேன்; இல்லாவிட்டால் இதைத் திரும்பக் கொண்டுபோய் விடுவேன். “என்ன சொல்ல வேண்டும் என்கிறாய்” “ஏதோ ஒரு பெயர் சொன்னாயே அதுதான்” “மாணிக்கவல்லி என்று சொன்னேன்.” “அவள் யார் அப்படி ஒருத்தியை ஊரிலே விட்டு விட்டு வந்திருக்கிறாயா உனக்கு கலியாணம் ஆகிவிட்டதா “

“இல்லை பொன்னம்மா இல்லை கலியாணம் என்ற பேச்சையே நான் காதில் போட்டுக் கொள்வதில்லை. சுவாமி விவேகானந்தர் என்று கேள்விப்பட்டிருக்கிறாயா அவர் என்ன சொன்னார் தெரியுமா ‘இந்த நாட்டில் ஒவ்வொரு மூடனும் கலியாணம் செய்து கொண்டிருக்கிறான்’ என்றார். நம்முடைய தேசம் சுதந்திரம் அடையும் வரை நான் கலியாணம் செய்துகொள்ளப் போவதில்லை.” “தேசம் தேசம் தேசம் உனக்குத் தேசம் நன்றாய் இருந்தால் போதும்; வேறு யார் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை” “ஆமாம் பொன்னம்மா அது நிஜம். தேசம் நன்றாயிருந்தால் தானே நாமெல்லோரும் நன்றாயிருக்கலாம்” “தேசமும் ஆச்சு நாசமத்துப் போனதும் ஆச்சு” “சரி; அந்தச் சட்டியை இப்படிக் கொடு” “அதெல்லாம் முடியாது. நான் கேட்டதற்குப் பதில் சொன்னால்தான் தருவேன்.” “எதற்குப் பதில் சொல்ல வேண்டும்” “யாரோ ஒருத்தியின் பெயரைச் சொன்னாயே இப்போது – அவள் யார் “”பொன்னம்மாள் ரொம்பப் பொல்லாதவள் – பொய் என்ற வார்த்தையே சொல்லாதவள் அன்னம் படைக்க மறுத்திடுவாள் – சொன்னதைச் சொன்னதைச் சொல்லிடுவாள்” என்று கேலிக் குரலில் பாடினான் குமாரலிங்கம்.

பொன்னம்மாள் கடுமையான கோபங் கொண்டவள் போல் நடித்து “அப்படியானால் நான் போகிறேன்” என்று சொல்லிவிட்டுத் திரும்பி நடக்கத் தொடங்கினாள். “பொன்னம்மா உனக்குப் புண்ணியம் உண்டு. கொண்டு வந்த சோற்றைக் கொடு சாப்பிட்ட பிறகு நீ கேட்டதற்குப் பதில் நிச்சயமாகச் சொல்லுகிறேன்.” “முன்னாலேயே அப்படிச் சொல்வதுதானே வீண் பொழுதுபோக்க எனக்கு இப்போது நேரம் இல்லை அப்பாவேறு ஊரிலேயிருந்து வந்துவிட்டார்” இதைக் கேட்டதும் குமாரலிங்கத்தின் மனத்தில் ஒரு சந்தேகம் உதித்தது. “பொன்னம்மா உன் தகப்பனார் வந்து விட்டாரா அவர் எப்படியிருப்பார்” என்று கேட்டான்.

“எப்படியிருப்பார் இரண்டுகால் இரண்டுகையோடு தான் இருப்பார்” என்று சொல்லிக்கொண்டே பொன்னம்மாள் கால்வாய்க் கரையில் உட்கார்ந்து சட்டியைக் குமாரலிங்கத்திடம் நீட்டினாள். “இது சோறு இல்லை; பலகாரம். இலை கொண்டுவர மறந்து போனேன். சட்டியோடுதான் சாப்பிட வேண்டும்” என்றாள். “ஆகட்டும்; இந்த மட்டும் ஏதோ கொண்டு வந்தாயே அதுவே பெரியகாரியம்” என்று சொல்லிக் குமாரலிங்கம் சட்டியைக் கையில் வாங்கிக் கொண்டு அதிலே இருந்த பலகாரத்தைச் சாப்பிட ஆரம்பித்தான். “எங்க அப்பாவுக்கு உன்பேரில் ரொம்பக் கோபம்” என்று பொன்னம்மாள் திடீரென்று சொன்னதும் குமாரலிங்கத்துக்குப் பலகாரம் தொண்டையில் அடைத்துக் கொண்டு புரையேறிவிட்டது. பொன்னம்மாள் சிரித்துக் கொண்டே அவனுடைய தலையிலும் முதுகிலும் தடவிக்கொடுத்தாள். இருமல் நின்றதும் “நல்ல வேளை பிழைத்தாய் உன்னைத்தான் நம்பியிருக்கிறேன்” என்றாள்.

“என்னை எதற்காக நம்பியிருக்கிறாய்” “எல்லாவற்றுக்குந்தான். வீட்டிலே எனக்குக் கஷ்டம் தாங்க முடியவில்லை. அப்பாவோ ரொம்பக் கோபக்காரர். சின்னாயி என்னைத் தினம் தினம் வதைத்து எடுத்து விடுகிறாள்” “ஐயோ பாவம் ஆனால் உன் அப்பாவுக்கு என்பேரில் கோபம் என்கிறாயே அது ஏன் என்னை அவருக்குத் தெரியாவே தெரியாதே” “எப்படியோ அவருக்கு உன்னைத் தெரிந்திருக்கிறது; நேற்று ராத்திரி உன் பெயரைச் சொல்லித் திட்டினார்” “இது என்ன கூத்து என்னை எதற்காகத் திட்டினார்” “ஏற்கெனவே அவருக்கு காங்கிரஸ்காரன் என்றாலே ஆகாது. ‘கதர்’ கட்டிய காவாலிப் பயல்கள்’ என்று அடிக்கடி திட்டுவார். நேற்று ராத்திரி பேச்சுவாக்கில் அதன் காரணத்தை விசாரித்தேன். எங்க அப்பா நிலஒத்தியின் பேரில் நிறையப் பணம் கடன் கொடுத்திருந்தார். காங்கிரஸ் கவர்ன்மெண்டு நடந்தபோது கடன் வாங்கியவர்கள் கடனைத் திருப்பிக் கொடுக்க வேண்டியதில்லை என்று சட்டம் செய்துவிட்டார்களாமே அதனால் அப்பாவுக்கு ரொம்பப் பணம் நஷ்டம்.”

“ஆமாம்; விவசாயக் கடன் சட்டம் என்று ஒரு சட்டம் வந்திருக்கிறது. அதனால் கடன் வாங்கியிருந்த எத்தனையோ விவசாயிகளுக்கு நன்மை ஏற்பட்டது. உன் தகப்பனாருக்கு மட்டும் நஷ்டம் போலிருக்கிறது.” “அது மட்டுமில்லை. காங்கிரஸ்காரனுங்க கள்ளு சாராயக்கடைகளையெல்லாம் மூடணும் என்கிறார்களாமே” “ஆமாம்; அது ஜனங்களுக்கு நல்லது தானே உங்க அப்பா தண்ணி போடுகிறவராக்கும்” “இந்தக் காலத்திலே தண்ணி போடாதவங்க யார் இருக்கிறாங்க ஊரிலே முக்காலு மூணு வீசம் பேர் பொழுது சாய்ந்ததும் கள்ளுக்கடை சாராயக்கடை போறவங்கதான். அதோடு இல்லை. எங்க அப்பா ஒரு சாராயக் கடையைக் குத்தகைக்கு எடுத்திருக்கிறார்.” “ஓஹோ அப்படியானால் சரிதான் கோபத்துக்குக் காரணம் இருக்கிறது. ஆனால் என் பேரில் அவருக்குத் தனிப்பட எதற்காகக் கோபம் நான் என்ன செய்தேன் “

“கேட்டை மூட்டை செவ்வாய்க்கிழமை எல்லாம் சேர்ந்து கொண்டது போல் ஆகியிருக்கிறது. கோர்ட்டிலே அவர் தாவாப் போட்டிருந்தாராம். சனங்கள் கோர்ட்டைத் தீ வைத்துக் கொளுத்திவிட்டார்களாம். அதனாலே அவருடைய பத்திரம் ஏதோ எரிந்து போய்விட்டதாம் உன்னாலே உன்னுடைய பிரசங்கத்தைக் கேட்டதனாலே தான் சனங்கள் அப்படி வெறிபிடித்துக் கோர்ட்டைக் கொளுத்தினாங்க என்று சொல்லிவிட்டு உன்னைத் திட்டு திட்டு என்று திட்டினார். ஆனால் நீ இங்கே இருக்கிறது அவருக்குத் தெரியாது. அவர் கையிலே மட்டும் நீ அகப்பட்டால் உன் முதுகுத் தோலை உரித்து விடப் போவதாக அவர் கத்தினபோது எனக்கு ரொம்பப் பயமாயிருந்தது. அதனாலேதான் காலங்காத்தாலே உன்னைப் பார்ப்பதற்கு வந்தேன்.”

குமாரலிங்கத்துக்குப் பளிச்சென்று ஒரு காட்சி ஞாபகத்துக்கு வந்தது. அன்று காலையில் அந்தப் பக்கம் போன கடுகடுப்பான முகத்தைக் கனவிலே சோலைமலை அரண்மனையிலே மட்டுமல்ல – வேறு ஓர் இடத்திலும் அவன் பார்த்ததுண்டு. அவனுடைய வீராவேசப் பிரசங்கத்தைக் கேட்டு ஜனங்கள் சிறைக் கதவை உடைத்துத் தேசபக்தர்களை விடுதலை செய்த அன்று பொதுக்கூட்டம் ஒன்று நடந்ததல்லவா கூட்டம் ஆரம்பமாகும் சமயத்தில் ஒரு சின்ன கலாட்டா நடந்தது. அதற்குக் காரணம் அன்று காலையில் அந்தப் பக்கமாக ஒற்றையடிப் பாதையில் போன மனிதன்தான். அவன் அன்றைக்குப் போதை மயக்கத்தில் இருந்தான். “இங்கிலீஷ்காரனுகளிடத்தில் துப்பாக்கி பீரங்கி ஏரோப்ளேன் வெடி குண்டு எல்லாம் இருக்கிறது. காங்கிரஸ்காரனுங்களிடத்தில் துருப்பிடித்த கத்தி கபடா கூடக் கிடையாது. சவரம் பண்ணுகிற கத்திகூட ஒரு பயல்கிட்டேயும் இல்லை இந்தச் சூரன்கள்தான் இங்கிலீஷ்காரனை விரட்டியடிச்சுடப் போறான்களாம் போங்கடா போக்கடாப் பயல்களா” என்று இந்த மாதிரி அவன் இரைந்து கத்தினான். பக்கத்திலிருந்தவர்கள் அவனிடம் சண்டைக்குப் போனார்கள். தொண்டர்கள் சண்டையை விலக்கிச் சமாதானம் செய்து அவனைக் கூட்டத்திலிருந்து வெளியேற்றினார்கள். இவ்வளவும் ஒரு நிமிஷத்துக்குள் குமாரலிங்கத்துக்கு ஞாபகம் வந்தது.

Source

Previous articleRead Solaimalai Ilavarasi Ch 11
Next articleRead Solaimalai Ilavarasi Ch 13

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here