Home Kalki Read Solaimalai Ilavarasi Ch 15

Read Solaimalai Ilavarasi Ch 15

73
0
Read Solaimalai Ilavarasi free, Solaimalai Ilavarasi is an historical novel written by Kalki. Read Solaimalai Ilavarasi Ch 15, Download Solaimalai Ilavarasi, Solaimalai Ilavarasi PDF, Download Solaimalai Ilavarasi PDF
Solaimalai Ilavarasi Ch 15 சோலைமலை இளவரசி அத்தியாயம் 15: கைமேலே பலன்

Read Solaimalai Ilavarasi Ch 15

சோலைமலை இளவரசி

அத்தியாயம் 15: கைமேலே பலன்

Read Solaimalai Ilavarasi Ch 15

இத்தனை நேரமும் கனவு லோகத்தில் சஞ்சாரித்துக் கொண்டிருந்த குமாரலிங்கம் பொன்னம்மாள் “போய் வாரேன்” என்று சொல்லிக்கொண்டு புறப்பட்டதும் இவ்வுலகத்துக்குத் திடும் என்று வந்தான். “போகிறாயா எங்கே போகிறாய்” என்று கேட்டுக் கொண்டே பொன்னம்மாளின் கரங்களைப் பிடித்துக் கீழே விழுந்து கிடந்த பழைய அரண்மனைத் தூண் ஒன்றின் பேரில் அவளை உட்கார வைத்தான். “நான் சீக்கிரம் போகாவிட்டால் சின்னாயி என்னை வெட்டி அடுப்பிலே வைத்துவிடுவாள் அந்தக் காந்திக் குல்லாக்காரர்கள் உனக்காகக் காத்துக் கொண் டிருக்கிறார்கள். உன் பெயரைச் சொல்லி ஊரெல்லாம் தமுக்கு அடித்துத் தண்டோராப் போடுவானேன் நீயே போய் ஆஜராகிவிடு அதோ கிராமச்சாவடியும் இலுப்பமரமும் தெரிகிறதல்லவா அங்கேதான் எங்கள்வீடு இருக்கிறது நான் ஊருணியில் குளித்துவிட்டுச் சற்று நேரம் சென்ற பிறகு வருகிறேன்” என்றாள் பொன்னம்மாள். “அதெல்லாம் ரொம்ப சரி; அப்படியே செய்யலாம். ஆனால் என்னுடைய பாட்டை மட்டும் இப்போதே நீ கேட்டுவிட வேண்டும். கேட்டுவிட்டு உடனே போய் விடலாம்” என்றான் குமாரலிங்கம்.”சரி படிக்கிற பாட்டைச் சீக்கிரம் படி” என்றாள் பொன்னம்மாள். குமாரலிங்கம் அவ்விதமே தான் கவனம் செய்திருந்த பாட்டைப் பாடிக் காட்ட ஆரம்பித்தான்.

பொன்னம்மாள் ரொம்பப் பொல்லாதவள் – அவள் பொய் என்ற வார்த்தையே சொல்லாதவள் சொன்னதைச் சொல்லும் கிளியினைப் போல் – என்றும் சொன்னதையே அவள் சொல்லிடுவாள் மன்னர் குலம் தந்த கன்னியவள் – இந்த மாநிலத்தில் நிகர் இல்லாதவள் அன்னம் அவள் நடை அழகு கண்டால் – அது அக்கணமே தலை கவிழ்ந்திடுமே பாடும் குயில் அவள் குரல் கேட்டால் – அது பாட்டை மறந்து பறந்திடுமே மாடும் மரங்களும் அவளுடைய – உயர் மாட்சிமைக்கு வலம் வந்திடுமே கூந்தல் முடிப்பிலே சொகு கடையாள் – விழிக் கோணத்திலே குறுநகையுடையாள் – அவள் மாந்தளிர் மேனியைக் கண்டவர்கள் – அந்த மாமரம் போலவே நின்றிடுவர் கற்பக மலர்களோ அவள் கரங்கள் – அந்தக் கண்களில்தான் என்ன மந்திரமோ அற்புதமோ ஒரு சொப்பனமோ – இங்கு ஆர் அறிவார் அவள் நீர்மை யெல்லாம் பொன்னம்மாள் மிகப் பொல்லாதவள் – அவள் பொய்சொல்லக் கொஞ்சமும் அஞ்சாதவள் அன்னம் படைக்கவே வந்திடுவாள் – எனில் அமுது படைத்து மகிழ்ந்திடுவாள் ஆனதால் என் அருந் தோழர்களே – நீங்கள் அவளை மணந்திட வந்திடாதீர்…

இத்தனை நேரம்வரை மேற்படி பாடலை முரண்பட்ட உணர்ச்சிகளோடு கேட்டு வந்தாள் பொன்னம்மாள். பாட்டிலே இருப்பது பாராட்டா பரிகாசமா என்று அவளுக்கு நன்றாய்த் தெரியவில்லை. ஒரு சமயம் புகழ்வது போலிருந்தது; இன்னொரு சமயம் கேலி செய்வது போலவும் இருந்தது. ஆனால் கடைசி வரிகள் இரண்டையும் கேட்டதும் பாட்டு முழுவதும் பரிகாசந்தான் என்ற நிச்சயம் ஏற்பட்டுக் கோபம் பொங்கிக் கொண்டு வந்தது. “சே போ போதும். உன் பாட்டு நிறுத்திக் கொள் எவன் என்னைக் கண்ணாலம் செய்து கொள்ள வரப்போகிறான் என்று நான் காத்துக் கிடக்கிறேனாக்கும்” என்று சீறினாள் பொன்னம்மாள். “பொன்னம்மா இன்னும் இரண்டே இரண்டு வரிதான் பாட்டில் பாக்கி இருக்கிறது. அதைச் சொல்லட்டுமா வேண்டாமா அதற்குள் கோபித்துக் கொண்டுவிட்டாயே” என்றான் குமாரலிங்கம். “சரி அதையுந்தான் சொல்லிவிடு” என்று பதில் வந்தது.குமாரலிங்கம் முதல் இரண்டு வரிகளையும் சேர்த்துப் பாட்டைச் சொல்லி முடித்தான்: ஆனதால் என் அரும் தோழர்களே – நீங்கள் அவளை மணந்திட வந்திடாதீர் ஏனென்று கேளுங்கள் இயம்பிடுவேன் – இங்கு யானே அவளை மணந்து கொண்டேன்

கடைசி இரண்டு வரிகளைக் கேட்டதும் பொன்னம்மாள் தன்னையறியாமல் கலீர் என்று நகைத்தாள். உடனே வெட்கப்பட்டுத் தலையைக் குனிந்து கொண்டாள் திரும்பவும் குமாரலிங்கத்தை ஏறிட்டு நோக்கி “மாறனேந்தல் மகாராஜாவாயிருந்தால் இந்த மாதிரியெல்லாம் கன்னாபின்னா என்று பாடுவாரா ஒரு நாளும் மாட்டார்” என்றாள். பல தடங்கல்களுக்கும் தயக்கங்களுக்கும் பிறகு பொன்னம்மாள் குமாரலிங்கத்திடம் விடை பெற்றுக் கொண்டு பிரிந்து சென்ற போது மிக்க குதூகலத்துடனேயே சென்றாள். அந்தப் பாழடைந்த கோட்டையில் காலடி வைத்தவுடனே அவளுக்கு ஏற்பட்ட சந்தேகங்களும் பயங்களும் அங்கிருந்து திரும்பிச் சென்றபோது அவளை விட்டு நீங்கியிருந்தன. குமாரலிங்கத்தின் பாடலில் அவளுடைய ஞாபகத்தில் இருந்த சில வரிகளை வாய்க்குள்ளே முணுமுணுத்துக் கொண்டே போனாள். ஊருணியில் போய்ச் சாவகாசமாகக் குளித்தாள். பின்னர் வீட்டை நோக்கிக் கிளம்பினாள். போகும்போது இத்தனை நேரம் குமாரலிங்கத் தேவர் தன் வீட்டுக்குப் போயிருப்பார்; அவரை இப்படி உபசரிப்பார்கள் அப்படி வரவேற்பார்கள் என்றெல்லாம் எண்ணமிட்டுக் கொண்டு சென்றாள். அவரைக் குதிரைச் சாரட்டில் வைத்து ஊர்வலம் விட்டாலும் விடுவார்கள். ரோஜாப்பூ மாலையும் செவந்தி மலர் மாலையும் பச்சை ஏலக்காய் மாலையும் அவருக்குப் போடுவார்கள். இன்று சாயங்காலம் இலுப்ப மரத்தடியில் மீட்டிங்கி நடந்தாலும் நடக்கும் என்று சிந்தனை செய்து கொண்டு உல்லாசமாக நடந்து சென்றாள்.

ஆனால் சிறிது தூரம் நடந்ததும் அவளுடைய உல்லாசம் குறைவதற்கு முகாந்தரம் ஏற்பட்டது. அவளுடைய தந்தை வேட்டை நாய் சகிதமாகச் சற்றுத் தூரத்தில் போய்க் கொண்டிருப்பதைக் கண்டதும் அவளுக்குச் சொரேல் என்றது. வீட்டில் விருந்தாளிகளை வைத்துவிட்டு இவர் எங்கே கிளம்பிப் போகிறார் ஒரு வேளை தன்னைத் தேடிக்கொண்டுதானோ சின்னாயி கோள் சொல்லிக் கொடுத்துவிட்டாளோ நடையின் வேகத்தைப் பார்த்தால் மிக்க கோபமாய்ப் போகிறதாகத் தென்படுகிறதே அப்பாவின் கண்ணில் படாமல் ஒரு மரத்தின் பின்னால் மறைந்து நின்றுவிட்டு அவர் போனதும் விரைவாக வீட்டை நோக்கிச் சென்றாள். அவர் வீடு வந்து சேருவதற்குள் தான் போய்ச் சேர்ந்து நல்ல பெண்ணைப் போல் சமையல் வேலையில் ஈடுபட வேண்டுமென்று தீர்மானித்துக் கொண்டு நடந்தாள். ஊருணியிலிருந்து அவளுடைய வீடு இருந்த வீதிக்குச் சென்று குறுக்குச் சந்தில் திரும்பியதும் படமெடுத்து ஆடும் பாம்பைத் திடீரென்று எதிரில் கண்டவளைப்போல் பயங்கரமும் திகைப்பும் அடைந்து நின்றாள். ஐயோ இது என்ன இவ்வளவு போலீஸ் ஜவான்கள் எதற்காக வந்தார்கள் அவர்களுக்கு மத்தியிலே இருப்பவர் யார் குமாரலிங்கம் போலிருக்கிறதே ஐயோ இது என்ன அவர் இரண்டு கையையும் சேர்த்து – கடவுளே விலங்கல்லவா போட்டிருக்கிறது இதெல்லாம் உண்மைதானா நாம் பார்க்கும் காட்சி நிஜமான காட்சிதானா அல்லது ஒரு கொடூரமான துயரக் கனவு காண்கிறோமா அந்தக் காந்திக் குல்லாக்காரர்கள் எங்கே ஆஹா அவர்கள் இப்போது வேறு உருவத்தில் சிவப்புத் தலைப் பாகையுடன் தோன்றுகிறார்களே ஆம் அதோ பின்னால் பேசிச் சிரித்துக் கொண்டு வருகிறவர்கள் அவர்கள் தான் சந்தேகமில்லை.

திகைத்து ஸ்தம்பித்து முன்னால் போவதா பின்னால் போவதா என்று தெரியாமல் கண்ணால் காண்பதை நம்புவதா இல்லையா என்றும் நிச்சயிக்க முடியாமல் – பொன்னம்மாள் அப்படியே நின்றாள். போலீஸ் ஜவான்களின் பேச்சில் சில வார்த்தைகள் காதிலே விழுந்தன. “எவ்வளவு ஜோராய் மாப்பிள்ளை மாதிரி நேரே வந்து சேர்ந்தான் வந்ததுமில்லாமல் ‘நான் தான் புரட்சித் தொண்டன் குமாரலிங்கம் நீங்கள் எங்கே வந்தீர்கள் ‘ என்று கேட்டானே என்ன தைரியம் பார்த்தீர்களா” என்றார் ஒரு போலீஸ்காரர். “அந்தத் தைரியத்துக்குத்தான் கைமேல் உடனே பலன் கிடைத்து விட்டதே” என்று சொன்னார் இன்னொரு போலீஸ்காரர். குமாரலிங்கத்தின் கையில் பூட்டியிருந்த விலங்கைத் தான் அவர் அப்படிக் ‘கைமேல் பலன்’ என்று சிலேடையாகச் சொல்கிறார் என்று தெரிந்து கொண்டு மற்றவர்கள் ‘குபீர்’ என்று சிரித்தார்கள். அந்தச் சிரிப்புச் சத்தத்தினிடையே ‘வீல்’ என்ற ஒரு சத்தம் – இதயத்தின் அடிவாரத்திலிருந்து உடம்பின் மேலுள்ள ரோமக் கால்கள் வரையில் குலுங்கச் செய்த சொல்லமுடியாத சோகமும் பீதியும் அடங்கிய சத்தம் – கேட்டது. போலீஸ் ஜாவன்களின் பரிகாசப் பேச்சைக் கேட்டுக்கொண்டு தலை குனிந்த வண்ணம் நடந்து வந்த தொண்டன் குமாரலிங்கத்தின் காதிலும் மேற்படி சத்தம் விழுந்தது. சத்தம் வந்த திசையை நோக்கி அவன் ஏறிட்டுப் பார்த்தான். பொன்னம்மாளின் முகம் – ஏமாற்றம் துயரம் பீதி பச்சாதாபம் ஆகிய உணர்ச்சிகள் ஒன்றோடொன்று போட்டியிட்ட முகம் – மின்னல் மின்னுகின்ற நேரத்துக்கு அவன் கண் முன்னால் தெரிந்தது. அடுத்த விநாடி பொன்னம்மாள் தான் வந்த பக்கமே திரும்பினாள். அந்தக் குறுக்குச் சந்தின் வழியாக அலறிக் கொண்டு ஓடினாள்.

போலீஸ் ஜவான்களின் ஒருவர் “பார்த்தீங்களா ஐயா சிவப்புத் தலைப்பாகையைப் பார்த்துப் பயப்படுகின்றவர்கள் இந்த உலகத்தில் இன்னும் சிலர் இருக்கத்தான் இருக்கிறார்கள். ஆனால் இந்த வீராதி வீரன் இருக்கிறானே இவன் மட்டும் போலீஸ¤க்குப் பயப்பட மாட்டான்; துப்பாக்கி தூக்குத் தண்டனை ஒன்றுக்கும் பயப்பட மாட்டான் எதற்கும் பயப்பட மாட்டான்” என்று சொல்லிக் கொண்டே குமாரலிங்கத்தின் கழுத்திலே கையை வைத்து ஒரு தள்ளுந் தள்ளினார். பொன்னம்மா வீறிட்டுக் கதறிய சத்தம் குமாரலிங்கத்தின் காதில் விழுந்ததோ இல்லையோ அந்தக் கணத்திலேயே அவன் நூறு வருஷங்களுக்கு முன்னால் சென்று விட்டான். இதோ அவன் எதிரில் தெரிவது போன்ற ஒரு பிரம்மாண்டமான இலுப்ப மரந்தான் அது; ஆனால் இன்னும் செழிப்பாக வளர்ந்து நாலாபுறமும் கிளைகள் தழைத்துப் படர்ந்திருந்தன. சோலைமலைக் கோட்டை வாசலுக்கு எதிரே கூப்பிடு தூரத்தில் அந்த மரம் நின்றது. மரத்தின் அடியில் இது போலவே மேடையும் இருந்தது. ஆனால் அந்த மரத்தின் கீழேயும் மரத்தின் அடிக்கிளையிலும் தோன்றிய காட்சிகள்… அம்மம்மா குமாரலிங்கம் கண்களை மூடிக்கொண்டான். கண்களை மூடிக் கொண்டால் மட்டும் ஆவதென்ன அவனுடைய மனக் கண்ணின் முன்னால் அந்தக் காட்சிகள் தோன்றத்தான் செய்தன. இலுப்பமரத்தின் வயிரம் பாய்ந்த வலுவான அடிக்கிளையில் ஏழெட்டுக் கயிறுகள் ஒவ்வொன்றின் நுனியிலும் ஒரு சுருக்குப்போட்ட வளையத்துடன் தொங்கிக் கொண்டிருந்தன.

தொங்கிய வளையம் ஒவ்வொன்றின் அடியிலும் ஒவ்வொரு மனிதன் நின்று கொண்டிருந்தான். அப்படி நின்றவர்களைச் சூழ்ந்து பல சிப்பாய்கள் வட்டமிட்டு நின்றார்கள். மரத்தடி மேடையில் ஒரு வெள்ளைக்கார துரை ‘ஜம்’ என்று உட்கார்ந்திருந்தார். அவர் இரண்டு கையிலும் இரண்டு துப்பாக்கிகள் இருந்தன. அவருடைய வெள்ளைமுகம் கோபவெறியினால் சிவப்பாக மாறியிருந்தது. மேடைக்கு அருகில் சோலைமலை மகாராஜா கீழே நின்று துரையிடம் ஏதோ கேட்டுக் கொண்டிருந்தது போலத் தோன்றியது. “அதெல்லாம் முடியாது; முடியவே முடியாது” என்று துரை மிக விறைப்பாகப் பதில் சொல்லுவது போலும் தெரிந்தது. மரக்கிளையில் தொங்கிய சுருக்குக் கயிறு ஒன்றின் கீழே மாறனேந்தல் உலகநாதத்தேவர் நின்று கொண்டிருந்தார். துரையிடம் சோலைமலை மகாராஜா ஏதோ கெஞ்சிக் கேட்டுக் கொண்டிருந்தது அவருக்குக் கொஞ்சமும் பிடிக்கவில்லை. தம்முடைய உயிரைத் தப்புவிப்பதற்காகத்தான் சோலைமலை மகாராஜா அப்படி மன்றாடுகிறாரோ என்ற சந்தேகம் இவர் மனத்தில் உதித்திருந்தது. அதை எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டுமென்ற ஆவல் அவர் மனத்தில் பொங்கி எழுந்தது. ‘ஆறிலும் சாவு நூறிலும் சாவு’ என்னும் பழமொழியை ஆயிரந் தடவை கேட்டிருந்தும் அந்நிய நாட்டான் ஒருவனிடம் போய் எதற்காக உயிர்ப்பிச்சைக் கேட்க வேண்டும் அதிலும் வீரமறவர் குலத்தில் பிறந்தவர்களுக்கு அடுக்கக்கூடிய காரியமா அது சோலைமலை மகாராஜாவைக் கூப்பிட்டுச் சொல்லிவிடலாமா என்று உலகநாதத் தேவர் யோசித்துக் கொண்டிருந்த போது கோட்டைக்குள்ளே அரண்மனை அந்தப்புரத்தின் மேன்மாடம் தற்செயலாக அவருடைய கண்ணையும் கருத்தையும் கவர்ந்தது. மேன்மாடம் கவரவில்லை மேல் மாடத்திலே தோன்றிய ஒரு பெண்உருவந்தான் கவர்ந்தது. வெகு தூரத்திலிருந்தபடியால் உலகநாதத்தேவரின் கூரிய கண்களுக்குக்கூட அந்த உருவம் யாருடையது என்பது நன்றாய்த் தெரியவில்லை.

ஆனால் அவருடைய மனத்துக்கு அவள் இளவரசி மாணிக்கவல்லிதான் என்று தெரிந்து விட்டது. முதலில் இந்தக் கோரக் காட்சியைப் பார்ப்பதற்குச் சோலைமலை இளவரசி அந்தப்புரத்து மேன் மாடத்துக்கு வரவேண்டுமா என்று உலகநாதத் தேவர் எண்ணினார். பின்னர் தம்முடைய வாழ்நாளின் கடைசி நேரத்தில் இளவரசியைப் பார்க்க நேர்ந்த பாக்கியத்தை எண்ணி மகிழ்ந்தார். அடுத்த கணத்தில் “ஐயோ இந்த விவரமெல்லாம் அவளுக்குத் தெரியும்போது என்னமாய் மனந்துடிப்பாளோ” என்று எண்ணி வேதனையடைந்தார். எனினும் சோலைமலை மகாராஜா தம்மிடம் கொண்டிருந்த விரோதத்தை மாற்றிக் கொண்டது இளவரசிக்கு ஓரளவு ஆறுதல் அளிக்குமல்லவா என்ற எண்ணம் தோன்றியது. தாம் சொல்லி அனுப்பிய செய்தியை மாணிக்கவல்லியிடம் சோலைமலை மகாராஜா சரியாகச் சொல்ல வேண்டுமே என்ற கவலை தொடர்ந்து வந்தது. ஐயோ இதென்ன மாடி முகப்பின் மேல் நின்ற பெண் உருவம் வீல் என்று அலறும் சத்தத்துடனே கீழே விழுகிறதே கடவுளே சோலைமலை இளவரசி அல்லவா அந்தப்புரத்தின் மேல் மாடியிலிருந்து கீழே விழுந்து விட்டாள் ஐயோ அவள் உயிர் பிழைப்பாளா சோலைமலை மகாராஜா துரையிடம் மன்றாடுவதை நிறுத்திவிட்டு “ஓ” என்று அலறிக் கொண்டு கோட்டை வாசலை நோக்கி ஓடினார். மாறனேந்தல் உலகநாதத் தேவரும் தம்முடைய நிலையை மறந்து கோட்டை வாசலை நோக்கித் தாமும் பறந்து ஓடினார். ‘டும்’ ‘டும்’ ‘டுடும்’ என்று துப்பாக்கி வேட்டுகள் தீர்ந்தன. போலீஸ் ஜவனால் கழுத்தைப் பிடித்துத் தள்ளப்பட்ட தேசத் தொண்டன் குமாரலிங்கம் தரையிலே விழுந்து மூர்ச்சையானான்.

Source

Previous articleRead Solaimalai Ilavarasi Ch 14
Next articleRead Solaimalai Ilavarasi Ch 16

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here