Home Kalki Read Solaimalai Ilavarasi Ch 17

Read Solaimalai Ilavarasi Ch 17

85
0
Read Solaimalai Ilavarasi free, Solaimalai Ilavarasi is an historical novel written by Kalki. Read Solaimalai Ilavarasi Ch 17, Download Solaimalai Ilavarasi, Solaimalai Ilavarasi PDF, Download Solaimalai Ilavarasi PDF
Solaimalai Ilavarasi Ch 17 சோலைமலை இளவரசி அத்தியாயம் 17: இரும்பு இளகிற்று

Read Solaimalai Ilavarasi Ch 17

சோலைமலை இளவரசி

அத்தியாயம் 17: இரும்பு இளகிற்று

Read Solaimalai Ilavarasi Ch 17

விதி என்கிற விந்தையான சக்கரத்தைக் கொஞ்சம் பின்னோக்கிச் சுழலும்படிச் செய்வோம். மாறனேந்தல் உலகநாதத் தேவர் ஆங்கிலேயரைப் பழி வாங்கும் பொருட்டுத் தம் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள எண்ணிச் சோலைமலை கோட்டைச் சின்ன அரண்மனையில் ஒளிந்து கொண்டிருந்த நாட்களுக்குச் செல்வோம். ஒரு மனிதன் சாதாரணமாய்த் தன் வாழ்க்கையில் பதினைந்து வருஷங்களில் அநுபவிக்கக்கூடிய ஆனந்த குதூகலத்தையெல்லாம் பதினைந்து நாட்களில் அநுபவித்த உலகநாதத்தேவரின் அரண்மனைச் சிறைவாசம் முடியும் நாள் வந்தது. சோலை மலை மகாராஜா ஒருநாள் மாலை தம்மகள் மாணிக்கவல்லியிடம் வந்து “பார்த்தாயா மாணிக்கம் கடைசியில் நான் சொன்னதே உண்மையாயிற்று. இந்த வியவஸ்தை கெட்ட இங்கிலீஷ்காரர்கள் மாறனேந்தல் ராஜ்யத்தை உலகநாதத் தேவனுக்கே கொடுக்கப் போகிறார்களாம். அந்தப்படி மேலே கும்பெனியாரிடமிருந்து கட்டளை வந்திருக்கிறதாம். உலகநாதத் தேவனுடைய தகப்பன் கடைசிவரை போர் புரிந்து உயிரை விட்டானல்லவா தகப்பனுடைய வீரத்தை மெச்சி மகனுக்கு ராஜ்யத்தைக் கொடுக்கப் போகிறார்களாம். அப்படித் தண்டோ ராப் போடும்படி மேஜர் துரை உத்தரவு போட்டிருக்கிறாராம். எப்படியிருக்கிறது கதை” என்று சொன்னார்.

இதைக் கேட்டதும் மாணிக்கவல்லியின் முகத்தில் உண்டான குதூகலக் கிளர்ச்சியையும் அவர் கவனித்தார். அதற்குப் பிறகு மாணிக்கவல்லி தான் பேசிய மற்ற விஷயங்களில் கவனம் செலுத்தாமல் ஒரே பரபரப்புடன் இருந்ததையும் பார்த்தார். “தூக்கம் வருகிறது அப்பா” என்று மாணிக்கவல்லி சொன்னதும் “சரி அம்மா தூக்கம் உடம்புக்கு ரொம்ப நல்லது; தூங்கு” என்று சொல்லிவிட்டுப் போனார். ஆனால் வெகுதூரம் போய்விடவில்லை. சற்றுத் தூரத்தில் மறைந்திருந்து பார்த்துக் கொண்டிருந்தார். அவர் எதிர்பார்த்தது வீண் போகவில்லை. மாணிக்கவல்லி சிறிது நேரத்துக்கெல்லாம் அரண்மனையிலிருந்து வெளியேறுவதைக் கவனித்தார். அவள் அறியாமல் அவளைத் தொடர்ந்து சென்றார். பூந்தோட்டத்தின் மத்தியிலிருந்த வஸந்த மண்டபத்தில் தம்முடைய ஜன்மத்துவேஷத்துக்குப் பாத்திரரான உலகநாதத் தேவரை மாணிக்கவல்லி சந்தித்ததைப் பார்த்தார். அந்தச் சந்திப்பில் அவர்கள் அடைந்த ஆனந்தத்தையும் பரஸ்பரம் அவர்கள் காட்டிக் கொண்ட நேசத்தையும் கவனித்தார். சற்றுமுன் தாம் மகளிடம் சொன்ன செய்தியை அவள் உலகநாதத்தேவரிடம் உற்சாகமாகத் திருப்பிக் கூறியதையும் கேட்டார்.

சோலைமலை மன்னருக்கு அடக்க முடியாத ரௌத்ராகாரமான கோபம் வந்தது. தன்மடியில் செருகியிருந்த கத்தியை எடுத்துக் கையில் வைத்துக் கொண்டார். அவர்கள் இரண்டு பேரையும் ஏககாலத்தில் கொன்றுவிட வேண்டுமென்னும் எண்ணம் முதலில் தோன்றியது. ஆனால் மகள்மேல் அவர் வைத்திருந்த அளவில்லாப் பாசம் வெற்றி கொண்டது. எனவே மாணிக்கவல்லி திரும்பி அரண்மனைக்குப் போன பிறகு உலகநாதத் தேவரை மட்டும் கொன்றுவிடுவது என்று உறுதியுடன் பல்லைக் கடித்துக் கொண்டிருந்தார். ‘இவனுக்கு ராஜ்யமாம் ராஜ்யம் இந்தச் சோலைமலைக் கோட்டைக்கு வெளியே இவன் போயல்லவா ராஜ்யம் ஆளவேண்டும் ‘ என்று மனத்திற்குள் கறுவிக்கொண்டார். அத்தகைய தீர்மானத்துடன் அவர் மறைந்து நின்ற ஒவ்வொரு நிமிஷமும் அவருக்கு ஒரு யுகமாயிருந்தது. மாணிக்கவல்லியும் உலகநாதத்தேவரும் இலேசில் பிரிந்து போகிற வழியாகவும் இல்லை. நேரமாக ஆகச் சோலைமலை மகாராஜாவின் குரோதமும் வளர்ந்து கொழுந்து விட்டுக் கொண்டிருந்தது.

திடீரென்று மாணிக்கவல்லி விம்மும் சத்தத்தைக் கேட்டதும் அவளுடைய தந்தையின் இருதயத்தில் வேல் பாய்வது போல் இருந்தது. இது என்ன இவ்வளவு குதூகலமாகவும் ஆசையுடனும் பேசிக் கொண்டிருந்தவள் இப்போது ஏன் விம்மி அழுகிறாள் அந்தப் பாதகன் ஏதாவது செய்துவிட்டானா என்ன அவருடைய கையானது கத்தியை இன்னும் இறுகப் பிடித்தது; பற்கள் ‘நறநற’வென்று கடித்துக் கொண்டன; உதடுகள் துடித்தன. மூச்சுக்காற்று திடீரென்று அனலாக வந்தது. ஆனால் அடுத்தாற்போல் உலகநாதத்தேவர் கூறிய வார்த்தைகளும் அதன் பின் தொடர்ந்த சம்பாஷணையும் அவருடைய கோபத்தைத் தணித்தன. அது மட்டுமல்ல; அவருடைய இரும்பு மனமும் இளகிவிட்டது. “என்கண்ணே இது என்ன இவ்வளவு சந்தோஷமான செய்தியைச் சொல்லிவிட்டு இப்படி விம்மி அழுகிறாயே ஏன் ஏதாவது தெரியாத்தனமாக நான் தவறான வார்த்தைகளைச் சொல்லிவிட்டேனா அப்படியானால் என்னை மன்னித்துவிடு. பிரிந்து செல்லும்போது சந்தோஷமாகவும் முகமலர்ச்சியுடனும் விடை கொடு” என்று பரிவான குரலில் சொன்னார் மாறனேந்தல் மகாராஜா.

“ஐயா தாங்கள் ஒன்றும் தவறாகப் பேசவில்லை. இந்தப் பேதையிடம் தாங்கள் மன்னிப்புக் கேட்கவேண்டிய அவசியமுமில்லை. என்னுடைய தலைவிதியை நினைத்துத் தான் நான் அழுகிறேன். எதனாலோ என் மனத்தில் ஒரு பயங்கர எண்ணம் நிலைபெற்றிருக்கிறது. தங்களை நான் பார்ப்பது இதுவே கடைசித் தடவை என்றும் இனிமேல் பார்க்கப் போவதில்லையென்றும் தோன்றுகிறது ஏதோ ஒரு பெரும் விபத்து – நான் அறியாத விபத்து – எனக்கு வரப்போகிறதென்றும் தோன்றுகிறது” என்று கூறிவிட்டு மறுபடியும் இளவரசி விம்மத் தொடங்கினாள். இதைக் கேட்ட உலகநாதத் தேவர் உறுதியான குரலில் “ஒரு நாளும் இல்லை மாணிக்கவல்லி உன்னுடைய பயத்துக்குக் கொஞ்சங்கூட ஆதாரமே இல்லை. நீ எதனால் இப்படிப் பயப்படுகிறாய் என்று எனக்குத் தெரியும். உன் தகப்பனாரைக் குறித்துத்தானே அவருக்கு என் மேலுள்ள துவேஷத்தினால் உன்னை நான் பார்க்க முடியாமல் போகும் என்றுதானே எண்ணுகிறாய்” என்றார். “ஆம் ஐயா அவருடைய மனத்தை நான் மாற்றி விடுவேன் என்று ஜம்பமாகத் தங்களிடம் கூறினேன். ஆனால் அந்தக் காரியம் என்னால் முடியவே இல்லை. என்னுடைய பிரயத்தனங்கள் எல்லாம் வீணாகவே போயின. தங்களைப் பற்றி நல்ல வார்த்தை ஏதாவது சொன்னால் அவருடைய கோபந்தான் அதிகமாகிறது. இப்போதுகூடத் தங்களுக்கு ராஜ்யம் திரும்பி வரப்போவது பற்றி அவர் வெகு கோபமாகப் பேசினார்.

தங்களைப் பற்றி பேசுவதற்கே எனக்குத் தைரியம் வரவில்லை” என்றாள் மாணிக்கவல்லி. “கண்ணே இதைப்பற்றி உனக்குச் சிறிதும் கவலை வேண்டாம். உன் தந்தையிடம் நீ என்னைப்பற்றி பேச வேண்டாம். ஏனெனில் நானே பேச உத்தேசித்திருக்கிறேன். மாறனேந்தல் இராஜ்யத்தைத் திரும்ப ஒப்புக் கொண்டதும் முதல் காரியம் நான் என்ன செய்யப் போகிறேன் தெரியுமா உன் தந்தையிடம் வந்து அவர் காலில் விழுந்து என் குற்றங்களை யெல்லாம் மன்னிக்கும்படி வேண்டிக் கொள்ளப் போகிறேன். உன்னை அடையும் பாக்கியத்துக்காக ஆயிரந்தடவை அவர் காலில் விழ வேண்டுமானாலும் நான் விழுவேன். ஆனால் அதுமட்டும் அல்ல; என்னுடைய குற்றத்தையும் நான் இப்போது உணர்ந்திருக்கிறேன். அவரை நான் நிந்தனை சொன்னதெல்லாம் பெருந்தவறு என்று இப்போது எனக்குத் தெரிகிறது. உண்மையில் அவர் சொன்னதுதானே சரி என்று ஏற்பட்டிருக்கிறது இங்கிலீஷ்காரர்களைப் பற்றி நான் என்னவெல்லாமோ நினைத்திருந்தேன். அவதூறு பேசினேன். அப்படிப்பட்டவர்கள் தோற்றுப் போன எதிரியின் வீரத்தை மெச்சி அவனுடைய மகனுக்கு இராஜ்யத்தைத் திருப்பிக் கொடுக்கச் சித்தமாயிருக்கிறார்கள்.

எப்படிப்பட்ட உத்தம புருஷர்கள் ஆகவே உன் தந்தையிடம் நான் மன்னிப்புக் கேட்டுக் கொண்டேயாக வேண்டும். மன்னிப்புக் கேட்டுக் கொண்டு உன்னை எனக்கு மணம் செய்து கொடுக்கும்படியும் கேட்பேன். அதற்கு அவர் சம்மதிக்காவிட்டால் அவருடைய கைக்கத்தியால் என்னைக் கொன்றுவிடும்படி சொல்வேன். இது சத்தியம் அதோ வானவெளியில் மினுமினுக்கும் கோடானுகோடி நட்சத்திரங்கள் சாட்சியாக நான் சொல்வது சத்தியம்” இதை யெல்லாம் கேட்டதும் சோலைமலை மகாராஜாவின் கரையாத கல்மனமும் கரைந்து விட்டது; அவருடைய இரும்பு இதயமும் உருகிவிட்டது; கண்ணிலே கண்ணீரும் துளித்துவிட்டது. அதற்குமேல் அங்கு நிற்கக்கூடாதென்று எண்ணிச் சத்தம் செய்யாமல் அரண்மனைக்குத் திரும்பிச் சென்றார். அன்றிரவெல்லாம் அவர் கொஞ்சங் கூடத் தூங்கவே இல்லை. சோலைமலைக் கோட்டையில் இன்னும் இரண்டு ஜீவன்களும் அன்றிரவு கண் இமைக்கவில்லை.

Source

Previous articleRead Solaimalai Ilavarasi Ch 16
Next articleRead Solaimalai Ilavarasi Ch 18

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here