Home Kalki Read Solaimalai Ilavarasi Ch 18

Read Solaimalai Ilavarasi Ch 18

88
0
Read Solaimalai Ilavarasi free, Solaimalai Ilavarasi is an historical novel written by Kalki. Read Solaimalai Ilavarasi Ch 18, Download Solaimalai Ilavarasi, Solaimalai Ilavarasi PDF, Download Solaimalai Ilavarasi PDF
Solaimalai Ilavarasi Ch 18 சோலைமலை இளவரசி அத்தியாயம் 18: உலகம் சுழன்றது

Read Solaimalai Ilavarasi Ch 18

சோலைமலை இளவரசி

அத்தியாயம் 18: உலகம் சுழன்றது

Read Solaimalai Ilavarasi Ch 18

இரண்டு தினங்களுக்குப் பிறகு மாறனேந்தல் உலகநாதத்தேவரைச் சோலைமலை மகாராஜா சந்தித்த போது அவர் முற்றும் புது மனிதராயிருந்தார். அவர்களுடைய சந்திப்பு பிரிட்டிஷ் படையின் மேஜர் துரையின் முன்னிலையில் துரையின் கூடாரத்தில் நடைபெற்றது. உலகநாதத் தேவரின் கைகள் மணிக் கயிற்றினால் கட்டப்பட்டிருந்தன. அவரையும் இன்னும் சில இராஜாங்கத் துரோகிகளையும் என்ன செய்வது என்பது பற்றி மேலாவிலிருந்து வரவேண்டிய உத்தரவை மேற்படி மேஜர் துரை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார். சோலைமலை மகாராஜா மேற்படி மேஜரால் தாம் ஏமாற்றப்பட்டதையும் உலகநாதத் தேவர் பிடிபட்டதற்குத் தாமே காரணம் என்பதையும் எண்ணி எண்ணி மனம் புண்ணாகியிருந்தார். எனவே உலகநாதத் தேவரைக் கண்டதும் அவருக்கு விம்மலும் கண்ணீரும் பொங்கிக் கொண்டு வந்தன. அந்த வெள்ளைக்காரன் முன்னிலையில் தம்முடைய மனத் தளர்ச்சியைக் காட்டக் கூடாதென்று தீர்மானித்துப் பல்லைக் கடித்து அடக்கிக் கொண்டார். பேச நாஎழாமல் மகாராஜா தவிப்பதைப் பார்த்த உலகநாதத்தேவர் “மாமா தாங்களே இப்படி மனம் தளர்ந்தால் இளவரசிக்கு யார் ஆறுதல் சொல்வார்கள்” என்றார்.

தேவரின் வார்த்தைகள் சோலைமலை அரசரின் மௌனத்தைக் கலைத்தன. “ஆறுதல் சொல்வதா மாணிக்கவல்லிக்கு நான் என்ன ஆறுதல் சொல்லுவேன் அவள் முகத்தைப் பார்க்கவே எனக்குத் தைரியம் இல்லையே தம்பி ஆயிரம் வருஷம் தவம் கிடந்தாலும் உன்னைப் போன்ற ஒரு வீரன் கிடைக்க மாட்டானே மாறனேந்தல் சோலைமலை வம்சங்கள் இரண்டையும் நீ விளங்க வைத்திருப்பாயே அப்படிப்பட்டவனை மூடத்தனத்தினால் இந்தப் பாவி காட்டிக் கொடுத்துவிட்டேனே அந்த வெள்ளைக்காரப் பாதகன் என்னை ஏமாற்றிவிட்டானே அப்பனே வெள்ளைக்காரச் சாதியைப் பற்றி நான் எண்ணியதெல்லாம் பொய்யாய்ப் போயிற்றே நீ சொன்னது அவ்வளவும் மெய்யாயிற்றே எந்த வேளையில் இந்தப் படுபாவி என் கோட்டை வாசலைத் தாண்டி உள்ளே வந்தானோ அன்றைக்கே உன்னுடைய குலத்துக்கும் என்னுடைய குலத்துக்கும் சனியன் பிடித்து விட்டது…” மேஜர் துரை அந்தப் பக்கங்களில் பழகிப் பழகிக் கொஞ்சம் தமிழ் தெரிந்து கொண்டிருந்தான். எனவே சோலைமலை ராஜாவின் ஆத்திரமான பேச்சைக் கேட்டுச் சிரித்தான். அவனுடைய சிரிப்பு சோலைமலை மகாராஜாவுக்கு நெருப்பாயிருந்தது.

“பாவி என் அரண்மனைச் சோற்றைத் தின்றுவிட்டு எனக்கே துரோகம் செய்தாயே செய்வதையும் செய்துவிட்டு இப்போது ஹீ ஹீ என்று சிரிக்கிறாயே” என்றார் சோலைமலை மன்னர். “துர்ரோகமா என்னத் துர்ரோகம் யாருக்கு துர்ரோகம் நீர்தானே இந்த டிரெய்டரை எப்படியாவது காப்சர் செய்து ஹாங்க் பண்ணியே ஆகவேணும் என்று பிடிவாதம் செய்தீர்” என்றான் மேஜர் துரை. இதைக் கேட்டதும் சோலைமலை அரசரின் முகம் வெட்கத்தால் சிறுத்துக் கோபத்தால் கறுத்தது. அதைக் கவனித்த மாறனேந்தல் அரசர் அங்கேயே ஏதாவது விபரீதம் நடந்துவிடாமல் தடுக்க எண்ணி “மாமா நடந்தது நடந்து விட்டது இனிமேல் அதைப்பற்றி பேசி என்ன பயன் இந்த வெள்ளைக்காரன் என்னை விடப் போவதில்லை கட்டாயம் தூக்குப் போட்டுக் கொன்று விடுவான். அதைப் பற்றி எனக்குக் கொஞ்சமும் கவலையில்லை. தங்களுடைய நல்ல அபிப்பிராயத்தைப் பெற்றேனே அதுவே எனக்குப் போதும் மனத்திருப்தியுடன் சாவேன். தாங்கள் குமாரியிடம் நான் சொன்னதாகச் சொல்லுங்கள்; விதியை மாற்ற யாராலும் முடியாது. இளவரசி என்னை மறந்துவிட்டு வேறு நல்ல குலத்தை சேர்ந்த ராஜகுமாரனை மணந்து கொள்ளட்டும்; இது என்னுடைய விருப்பம் வேண்டுகோள் என்று சொல்லுங்கள்…” என்றார்.

அப்போது சோலைமலை மன்னர் நடுவில் குறுக்கிட்டு “தம்பி என்ன வார்த்தை சொல்லுகிறாய் என் குமாரியை யார் என்று நினைத்தாய் உன்னை எண்ணிய மனத்தினால் இன்னொருவனை எண்ணுவாளா ஒரு நாளும் மாட்டாள். இந்தப் படுபாவி உன்னை விடாமற் போனால் என் மகளும் பிழைத்திருக்க மாட்டாள். உங்கள் இருவரையும் பறிகொடுத்துவிட்டு நான் ஒருவன் மட்டும் சோலைமலைக் கோட்டையில் பேய் பிசாசைப் போல் அலைந்து திரிந்து கொண்டிருக்க நேரிடும். ஆனால் ஒன்று சொல்லுகிறேன் கேள்; சோலைமலை முருகன் அருளால் அப்படியொன்ரும் நேராது. நீ தைரியமாயிரு” என்றார். “ஆகட்டும் மாமா நான் தைரியமாகவேயிருக்கிறேன். தாங்களும் மனத்தைத் தளரவிடாமல் இருங்கள். இளவரசிக்கும் தைரியம் சொல்லுங்கள்” என்றார் மாறனேந்தல் அரசராகிய உலகநாதத் தேவர். மறுநாள் உலகநாதத் தேவருக்குச் சாப்பாடு கொண்டு வந்தஆள் துரை கவனியாத சமயம் பார்த்து ஓர் இரகசியச் செய்தி கூறினான். சோலைமலை மகாராஜா மேஜர் துரையிடம் கூடிய வரையில் மன்றாடிப் பார்க்கப் போவதாகவும் அப்படியும் துரை மனம் மாறாவிட்டால் தூக்குப்போடும் சமயத்தில் உலகநாதத் தேவரை விடுவிக்க வேண்டிய வீரர்களைத் தயார்படுத்தி வைத்திருப்பதகாவும் அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்ளத் தேவரும் தயராக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்தான்.

துரையிடம் மன்றாடுவது என்பது மாறனேந்தலுக்குப் பிடிக்கவில்லை. ஆனால் இரண்டாவது சொன்ன விஷயம் ரொம்பப் பிடித்திருந்தது. எனவே அது முதல் அவர் மிக்க உற்சாகமாகவே இருந்தார். சுருக்குக் கயிறுகள் வரிசையாக தொங்கிய இலுப்ப மரத்தின் கிளைக்கு அடியில் நின்ற போது கூட உலகநாதத்தேவரின் உற்சாகம் குன்றவில்லை. சோலைமலை அரசர் மேஜர் துரையிடம் மன்றாடிக் கொண்டிருந்தது மட்டும் அவருக்கு எரிச்சலை அளித்தது. எப்போது அவர்களுடைய பேச்சு முடியும் எப்போது துரை தூக்குப்போட உத்தரவு கொடுப்பான். எப்போது சோலைமலை மகாராஜா மறைவான இடத்தில் தயாராக வைத்திருந்த வீரர்கள் ‘தட தட’வென்று ஓடி வருவார்கள் என்று அவர் பரபரப்புடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார். ஆனால் அவருடைய எண்ணமும் சோலைமலை மகாராஜாவின் முன்னேற்பாடும் ஒன்றும் நிறைவேறாத வண்ணம் விதி குறுக்கிட்டது.

உலகநாதத் தேவர் சிறைப்பட்ட செய்தியைக் கேட்டதிலிருந்து சோகத்தில் ஆழ்ந்து படுத்த படுக்கையிலிருந்து எழுந்திராமலிருந்த மாணிக்கவல்லி சரியாக அந்தச் சமயம் பார்த்து அரண்மனை மேல் மச்சில் ஏறி உப்பரிகையின் முகப்புக்கு வந்தாள். கோட்டை வாசலுக்குச் சமீபத்தில் இலுப்ப மரத்தின் அடியில் தொங்கிய சுருக்குக் கயிற்றின் கீழே தன் காதலர் நிற்பதைப் பார்த்தாள். அவ்வளவுதான். ‘ஓ’ என்று அலறிக் கொண்டு கீழே விழுந்தாள். உலகம் சுழன்றது தினம் ஒரு தடவை சுழன்று வருஷத்தில் 365 தடவை சுழன்று இந்த மாதிரி நூறு வருஷகாலம் தன்னைத் தானே சுழன்று தீர்த்தது நூறு வருஷத்துக்குப் பிறகு பிரிட்டிஷ் ஆட்சி நிலைபெற்றிருந்த இந்தியாவில் இருளடைந்த ஒரு ஜில்லாச் சிறைச்சாலியின் அறையில் குமாரலிங்கம் தனியாக அடைக்கப்பட்டிருந்த போது மேற்கூறிய சம்பவங்கள் எல்லாம் அடிக்கடி அவன் நினைவுக்கு வந்தன. நினைவுக்கு வந்ததோடு இல்லை; அந்த அநுபவங்களையெல்லாம் அவன் திரும்பத் திரும்ப அநுபவித்துக் கொண்டிருந்தான்.

இருபதாம் நூற்றாண்டில் கலாசாலையில் ஆங்கிலக் கல்வியும் விஞ்ஞான சாஸ்திரமும் கற்றுத் தேர்ந்த அறிவாளியான அவன் பல முறையும் ‘இதெல்லாம் வீண் பிரமை; ஆதாரமற்ற மனப் பிராந்தி’ என்று தனக்குத்தானே அறிவுறுத்திக் கொண்டு பார்த்தான். ஆயினும் அந்தப் பிரமை நீங்குவதாக இல்லை. குமாரலிங்கம் சிறைப்பட்டுக் கீழ்க் கோர்ட்டில் விசாரணை நடந்து கொண்டிருந்த போது வழக்கு நடத்தும் விஷயத்தில் சிறிதும் சிரத்தை இல்லாமல் இருந்தான். அவனுக்காக இலவசமாக வந்து வழக்காடிய வக்கீல் அவனுடைய அசிரத்தையைப் பற்றி அடிக்கடி கடிந்து கொண்டார். “வழக்கில் நான் ஜயிப்பதற்கு வேண்டிய ஆதாரங்கள் நிறைய இருக்கின்றன. ஆனால் நீ இப்படி ஏனோ தானோ என்று இருந்தால் கேஸ் உருப்படாது. தூக்கு மரத்தில் நீ தொங்கியே தீர வேண்டும்” என்று சொல்லிக் கண்டிப்பார். “உன் விஷயத்தில் சிரத்தை எடுத்துக் கொள்ளக்கூடிய உற்றார் உறவினர் யாரும் இல்லையா” என்று கேட்பார். அவர்களைக்கொண்டு குமாரலிங்கத்துக்கு ஊக்கமளித்து உற்சாகப்படுத்தலாம் என்றுதான் ஆனால் குமாரலிங்கமோ தனக்கு உற்றார் உறவினர் யாருமே இல்லையென்றும் தன் விஷயத்தில் சிரத்தையுள்ளவர்களே இல்லையென்றும் சாதித்து வந்தான்.

ஒருநாள் வக்கீல் வந்து “என்னடா அப்பா உனக்கு ஒருவருமே உறவில்லை என்று சாதித்துவிட்டாயே சோலைமலை மணியக்காரர் உனக்கு மாமாவாமே” என்றார். “இந்தப் பொய்யை உங்களுக்கு யார் சொன்னது” என்று குமாரலிங்கம் ஆத்திரத்துடன் கேட்டான். “சாக்ஷாத் சோலைமலை மணியக்காரரேதான் சொன்னார். அதோடு இல்லை உன்னுடைய கேஸை நடத்துவதற்காக எவ்வளவு பணம் வேண்டுமானாலும் செலவழிக்கத் தயார் என்றும் சொன்னார்.” இதைக் கேட்டதும் குமாரலிங்கத்தின் மனோ நிலைமையில் பெரும் மாறுதல் ஏற்பட்டது. அப்போதைக்கு உயிரில் ஆசையும் வாழ்க்கையில் உற்சாகமுமே ஏற்பட்டு விட்டன. பொன்னம்மாளின் நிலைமையைப் பற்றி மணியக்காரரிடம் விசாரித்துத் தெரிந்து கொள்ள வேண்டுமென்ற ஆசை அளவில்லாமல் உண்டாயிற்று. எனவே வக்கீலிடம் “நான் சொன்னது தவறுதான் ஐயா ஆனால் சோலைமலை மணியக்காரர் என் விஷயத்தில் இவ்வளவு சிரத்தை கொள்வார் என்று நான் எதிர்பார்க்கவில்லை. தயவு செய்து அடுத்த தடவை தாங்கள் வரும் போது மணியக்காரரையும் அழைத்து வாருங்கள். அவருக்கு நான் நன்றி செலுத்த வேண்டும்” என்றான் குமாரலிங்கம்.

வக்கீலும் அதையேதான் அவனிடமிருந்து விரும்பினார். ஆதலால் உடனே “சரி” என்று சொல்லிவிட்டுப் போனார். ஒருநாள் வக்கீல் தன்னுடைய வாக்கை நிறைவேற்றினார். சோலைமலை மணியக்காரரை அழைத்துக் கொண்டு வந்தார். முன்னே பாழடைந்த கோட்டையில் வேட்டைநாய் பின்தொடரச்சென்ற மணியக்காரருக்கும் இப்போது குமாரலிங்கத்தைப் பார்க்க வந்தவருக்கும் வேற்றுமை நிரம்ப இருந்தது. கொலை குற்றவாளிகளுக்கென்று ஏற்பட்ட கடுஞ்சிறையின் இரும்புக் கம்பிகளுக்குப் பின்னால் குமாரலிங்கத்தைக் கண்டதும் மணியக்காரரின் கண்களில் கண்ணீர் ததும்பியது. பேச முடியாமல் தொண்டையை அடித்துக் கொண்டது; அவருடைய நிலையைப் பார்த்த குமாரலிங்கம் தானே பேச்சைத் தொடங்கினான்.

“ஐயா என்னுடைய வழக்கு விஷயத்தில் தாங்கள் ரொம்பவும் சிரத்தை எடுத்துக் கொண்டிருப்பதாக வக்கீல் ஸார் சொன்னார். அதற்காக மிக்க வந்தனம்” என்றான். “ஆமாம் தம்பி என் வீட்டுத் திணையிலே அல்லவா உன்னைக் கைது செய்துவிட்டார்கள். அதனால் எனக்கு ஏற்பட்ட வருத்தத்தையும் அவமானத்தையும் சொல்லி முடியாது” என்றார் மணியக்காரர். “அச்சமயம் அங்கே தாங்கள் இருந்தீர்களா தங்களை நான் பார்க்கவில்லையே” என்றான் குமாரலிங்கம். “எப்படிப் பார்த்திருக்க முடியும் உன்னை நான் தேடிக்கொண்டு அந்தப் பாழாய்ப் போன கோட்டைக்குப் போனேன். அதற்குள் நீ அவசரப்பட்டுக் கொண்டு வேறு வழியாக ஊருக்குள் வந்துவிட்டாய் எல்லாம் விதியின் கொடுமைதான்” என்றார் மணியக்காரர். “என்னைத் தேடிக்கொண்டு போனீர்களா எதற்காக” என்று அடங்காத அதிசயத்தோடு ம் ஆவலோடும் குமாரலிங்கம் கேட்டான். பிறகு மணியக்காரர் எல்லாம் விவரமாகச் சொன்னார். தளவாய்ப் பட்டணத்தில் குமாரலிங்கம் பிரசங்கம் செய்த போது மணியக்காரர் தம்முடைய முரட்டுச் சுபாவங்காரணமாக இரைச்சல் போட்டுப் பேசிக் கலகம் உண்டாக்கினாரென்றாலும் உண்மையில் அவன் மேல் அப்போதே அவருக்கு மரியாதையும் அபிமானமும் உண்டாகிவிட்டன.

சோலைமலைக்கு அவர் வந்த பிறகு தம் மகள் அவனுக்குச் சாப்பாடு கொண்டுபோய்க் கொடுத்துவிட்டு வருவது பற்றிச் சீக்கிரத்திலேயே தெரிந்து கொண்டார். தெரிந்தும் தெரியாதது போல் இருந்தார். போலீஸார் காந்திக்குல்லா வேஷம் தரித்து அவனைப் பிடிக்க வந்தபோது அவர் ஏமாந்துவிடவில்லை சோலைமலை மகாராஜா மேஜர் துரையின் பேச்சைக் கேட்டு ஏமாந்த பிறகு நூறு வருஷம் இந்தியாவிலே பிரிட்டிஷ் ஆட்சி நடந்திருக்கிறதல்லவா பிரிட்டிஷாரின் தந்திர மந்திரங்களையும் சூழ்ச்சித் திறன்களையும் இந்திய மக்கள் எல்லாருமே தெரிந்து கொண்டிருந்தார்கள் அல்லவா அவ்விதமே மணியக்காரரும் தெரிந்து கொண்டிருந்தார். எனவே அந்த வேஷக்காரர்களின் பேச்சை அவர் நம்புவது போல் பாசாங்கு செய்தாரே தவிர உண்மையில் அவர்களை நம்பவில்லை. அந்த வேஷம்தரித்த போலீஸ்காரர்கள் குமாரலிங்கத்தைப் பிடிப்பதற்கு வந்திருக்கிறார்கள் என்பதையும் ஊகித்துத் தெரிந்து கொண்டார். எனவே அவர்களுக்கு வெகு தடபுடலாக விருந்து கொடுப்பதற்கு வீட்டுக்குள் சத்தம் போட்டுப் பேசி ஏற்பாடு செய்தார். அவ்விதம் பேசி அவர்களை ஏமாற்றிவிட்டுப் பாழடைந்த கோட்டைக்குப் போய்க் குமாரலிங்கத்தைத் தேடிப் பிடித்து அவனுக்கு எச்சரிக்கை செய்யப் புறப்பட்டார். துரதிர்ஷ்டவசமாக அவர் போய்ச் சேருவதற்கு முன்னாலேயே பொன்னம்மாள் போய்விட்டாள். குமாரலிங்கம் தானாகவே வந்து அகப்பட்டுக் கொண்டான்.

இதையெல்லாம் கேட்ட போது குமாரலிங்கத்துக்கு வருத்தத்தோடு கூட உற்சாகமும் கலந்து ஏற்பட்டது. பொன்னம்மாளின் தந்தை என் விஷயத்தில் இப்படிப் பட்ட மன மாறுதல் அடைந்ததை நினைத்து அவன் உற்சாகம் அடைந்தான். பொன்னம்மாள் அவ்வளவு அவசரப்படாதிருந்தால் எவ்வளவு நன்றாயிருந்திருக்கும் என்று வருந்தினான். ‘பொன்னம்மாள் பேரில் என்ன பிசகு அவள் சொன்னதை உடனே நம்பி அவசரப்பட்டு ஓடிய என்பேரில் அல்லவா பிசகு ஒரு கிராம மணியக்காரருக்கு உள்ள புத்திக்கூர்மை காலேஜுப் படிப்புப் படித்த எனக்கு இல்லையே ‘ என்று எண்ணித் தன்னைத்தானே நொந்து கொண்டான். மணியக்காரர் சொன்னதையெல்லாம் மௌனமாய்க் கேட்டுக்கொண்டிருந்த பிறகு தான் ஆரம்பத்திலிருந்தே கேட்பதற்கு விரும்பித் துடிதுடித்துக் கொண்டிருந்த கேள்வியை அவன் கேட்டான். “ஐயா பொன்னம்மாள் எப்படி இருக்கிறாள் சௌக்கியமாயிருக்கிறாளா” என்றான். “இது என்ன கேள்வி என்னமாக சௌக்கியமாயிருப்பாள் உன்னைப் போலீஸார் கைது செய்து கொண்டு வந்ததிலிருந்து அவளுக்கு அசௌக்கியந்தான்” என்றார் மணியக்காரர். “அசௌக்கியம் என்றால் உடம்புக்கு என்ன செய்கிறது வைத்தியம் ஏதாவது பார்த்தீர்களா” என்று குமாரலிங்கம் கவலையோடு கேட்டான்.

“என்ன வைத்தியம் பார்த்து என்ன பிரயோஜனம் வைத்தியத்தினாலும் மருந்தினாலும் தீருகிற வியாதி இல்லை. மனக் கவலைக்கு மருந்து ஏது அவளாலே தான் நீ போலீஸாரிடம் அகப்பட்டுக் கொண்டாய் என்ற எண்ணம் பொன்னம்மாள் மனத்தில் ஏற்பட்டுவிட்டது அதனால் அவள் மனத்தில் ஏற்பட்ட கவலை உடம்பையும் படுத்துகிறது.” இதைக் கேட்ட குமாரலிங்கத்தின் நெஞ்சு பிளந்து விடும் போலிருந்தது. “ஐயா தாங்கள் பொன்னம்மாளுக்கு ஆறுதல் சொல்லக்கூடாதா” என்று குமாரலிங்கம் கூறிய வார்த்தைகளில் அளவு கடந்த துயரம் ததும்பியிருந்தது. “நான் என்ன ஆறுதல் சொல்ல முடியும் சொன்னால் தான் என்ன உபயோகம் நீ வந்து ஆறுதல் சொன்னால்தான் உண்டு ஆனால் நீ ரொம்ப அசிரத்தையாயிருக்கிறாய் என்று வக்கீல் ஐயா சொல்கிறார். அசிரத்தை கூடவே கூடாது. அப்பனே உனக்காக இல்லாவிட்டாலும் பொன்னம்மாளுக்காகச் சிரத்தை எடுத்து கேஸை நடத்த வேண்டும். வக்கீல் ஐயா சொல்கிறபடி செய்து எப்படியாவது விடுதலை அடைய வழியைப் பார்க்க வேண்டும்” என்றார் மணியக்காரர். கதைகளிலே சொல்வதுபோல் அப்போது குமாரலிங்கத்தின் முகத்தில் ஒரு சோகப் புன்னகை தவழ்ந்தது. மனத்திற்குள்ளே அவன் ‘விடுதலை அடைவதா இந்த உடம்பிலிருந்து உயிர்போகும் போதுதான் எனக்கு விடுதலை ஆனால் இதை இவர்களிடம் சொல்லி என்ன பயன் வீணாக வருத்தப்படுவார்கள்’ என்று எண்ணிக் கொண்டான்.

“ஆகட்டும் ஐயா என்னால் முடிந்தவரையில் சிரத்தை எடுத்துக் கொள்கிறேன். ஆனால் பொன்னம்மாளுக்குத் தாங்கள் தைரியம் சொல்லுங்கள். என்னை அடியோடு மறந்து விடச் சொல்லுங்கள். நல்ல அந்தஸ்திலுள்ள வாலிபன் யாருக்காவது அவளைச் சீக்கிரம் கலியாணம் செய்து கொடுங்கள்” என்று பரிவோடு குமாரலிங்கம் சொன்னான். இப்படிச் சொல்லி முடித்ததும் மாறனேந்தல் உலகநாதத் தேவர் சோலைமலை அரசருக்குச் சொன்ன வார்த்தைகளையே தானும் ஏறக்குறைய இப்போது சொன்னதை எண்ணித் திடுக்கிட்டான். அதற்கு மணியக்காரர் கூறிய பதில் மேலும் அவனைத் திடுக்கிடச் செய்தது. சோகமும் பரிகாசமும் கலந்த தொனியில் மணியக்காரர் சிரித்துவிட்டு “குமாரலிங்கம் பொன்னம்மாளை யார் என்று நினைத்தாய் உன்னை எண்ணிய மனத்தினால் அவள் இன்னொருவனை எண்ணுவாளா” என்றார்.

Source

Previous articleRead Solaimalai Ilavarasi Ch 17
Next articleRead Solaimalai Ilavarasi Ch 19

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here