Home Kalki Read Solaimalai Ilavarasi Ch 3

Read Solaimalai Ilavarasi Ch 3

144
0
Read Solaimalai Ilavarasi free, Solaimalai Ilavarasi is an historical novel written by Kalki. Read Solaimalai Ilavarasi Ch 3, Download Solaimalai Ilavarasi
Solaimalai Ilavarasi Ch 3 சோலைமலை இளவரசி அத்தியாயம் 3: சேவல் கூவிற்று

Read Solaimalai Ilavarasi Ch 3

சோலைமலை இளவரசி

அத்தியாயம் 3: சேவல் கூவிற்று

Read Solaimalai Ilavarasi Ch 3

குமாரலிங்கம் சோலைமலையின் அடிவாரத்துக்கு வந்து சேர்ந்தபோது மலைமேலே ஒளிர்ந்து அவனை அவ்விடத்துக்கு கவர்ந்து இழுத்த முருகன் கோயிலின் அமரதீபம் பார்வைக்கு மறைந்துவிட்டது. அதற்குப் பதிலாக கீழ்த்திசையில் உதித்து மேலே சிறிது தூரம் பிரயாணம் செய்து வந்திருந்த விடிவெள்ளியானது உதயகன்னியின் நெற்றிச் சுட்டியில் பதித்த கோஹினூர் வைரத்தைப் போல் டால் வீசிற்று. அதுமட்டுமல்லாமல் வானத்தை மறைத்திருந்த மேகத் திட்டுகள் விலகிவிட்டபடியால் ஆகாச வெளியெங்கும் கோடானுகோடி வைரச்சுடர்கள் வாரி இறைத்தாற் போன்று காட்சி தோன்றியது. கிழக்கு நன்றாய் வெளுத்து சுக்கிரனுடைய பிரகாசமும் மங்கத் தொடங்கிய சமயத்தில் குமாரலிங்கம் சோலைமலையை அடுத்திருந்த பாழடைந்த கோட்டையை அடைந்தான். களைப்பினால் அவனுடைய கால்கள் கெஞ்சின. தன்னை மீறி வந்த தூக்கத்தினால் கண்களும் தலையும் சுழன்றன. ‘இனிமேல் சிறிது தூரமும் நடக்க முடியாது; இந்தப் பாழடைந்த கோட்டைக்குள்ளே புகுந்து எங்கேயாவது ஓர் இடிந்த மண்டபத்தைப் பார்த்துப் படுத்துக் கொள்ள வேண்டியதுதான். ஜனசஞ்சாரம் இல்லாத இடம். பத்திரத்துக்குக் குறைவு ஒன்றுமில்லை’ என்று மனத்தில் எண்ணினான். மதில் சுவர் இடிந்ததனால் ஏற்பட்டிருந்த வழி மூலமாகக் கோட்டைக்குள்ளே புகுந்து சென்றான். மிக வியப்பான எண்ணம் ஒன்று அப்போது அவன் மனத்திலே தோன்றிற்று. அந்த கோட்டைக்குள்ளே முன் எப்போதோ ஒரு சமயம் ஏறக்குறைய இதே மாதிரி சந்தர்ப்பத்தில் ஒளிந்து கொள்வதற்காகப் பிரவேசித்தது ஞாபகத்துக்கு வந்தது. எப்போது எதற்காக அவ்விதம் நிகழ்ந்தது என்பதெல்லாம் ஒன்றும் தெளிவாகவில்லை.

மூன்று வருஷத்துக்கு முன்னால் அவன் இந்த மலைமேலுள்ள முருகன்கோயில் திருவிழாவுக்கு வந்திருந்த போது அந்தப் பாழடைந்த கோட்டையை மேலேயிருந்து பார்த்தானே தவிர அதற்குள்ளே பிரவேசிக்கவில்லை. பின் எப்போது அங்கே தான் வந்திருக்கக்கூடும். இது என்ன பைத்தியக்கார எண்ணம் கோட்டைக்குள்ளே மேலும் போகப் போக அந்த எண்ணம் உறுதிப்பட்டு வந்தது. மேட்டிலும் பள்ளத்திலும் கல்லிலும் காரையிலும் அவன் ஏறி இறங்கி நடந்து சென்ற போது நிச்சயமாக இங்கே முன்னொரு தடவை நாம் வந்திருக்கிறோம். ஆனால் அச்சமயம் இந்த இடங்கள் எல்லாம் இவ்விதமாக இல்லை என்று தோன்றியது. இன்னும் கொஞ்ச தூரம் சென்றதும் காடாக மண்டிக் கிடந்த மரம் செடிகளுக்கு மத்தியில் ஒரு சிறு மண்டபம் இருப்பது தெரிய வந்தது.

அதற்குச் சற்றுத் தூரத்தில் மேல் மச்சுக்களெல்லாம் தகர்ந்து விழுந்து கீழ்த்தளம் மட்டும் அதிகம் சிதையாமலிருந்த ஒரு கட்டிடம் காணப்பட்டது. மேற்படி மண்டபமும் அப்பாலிருந்த கட்டிடமும் அவனுக்கு நன்றாய்ப் பழக்கப்பட்டவையாகத் தோன்றின. எப்பொழுது எந்த முறையில் என்பது மட்டும் தெளிவாகவில்லை. தூக்க மயக்கத்தினால் நன்றாக யோசித்து ஞாபகப் படுத்திக் கொள்ள முடியவில்லை. ‘எல்லாவற்றுக்கும் இந்த மண்டபத்தில் சிறிது நேரம் படுத்து உறங்கலாம். உறங்கி எழுந்த பிறகு மனத்தெளிவுடன் யோசிக்கலாம்’ என்று தீர்மானித்தான். அந்தத் தீர்மானத்தை நிறைவேற்றுவதற்காக மண்டபத்தின் விளிம்பில் ஒரு தூண் ஓரமாக உட்கார்ந்தான். கீழ்த்தளம் அவ்வளவு சுகமாக இல்லை. குண்டும் குழியும் கல்லும் கட்டியுமாகத்தான் இருந்தது. தலைக்கு வைத்துக் கொள்ளவும் ஒன்றுமில்லை. ஆனாலும் இனி ஒரு நிமிஷமும் தூக்கத்தைச் சமாளிக்க முடியாது; கையை மடித்துத் தலைக்கு வைத்துக் கொண்டு படுத்துக் கொள்ள வேண்டியதுதான் என்று குமாரலிங்கம் எண்ணினான். அப்போது எங்கேயோ பக்கத்திலிருந்த கிராமத்திலிருந்து ‘கொக்கரக்கோ’ என்று சேவல் கூவும் சத்தம் கேட்டது. ‘கொக்கரக்கோ கொக்கரக்கோ கொக்கரக்கோ’

மூன்றாவது தடவை சேவல் கோழி ‘கொக்கரக்கோ’ என்று கூவியபோது குமாரலிங்கத்தின் கண்ணெதிரே இந்திர ஜாலமோ மகேந்திர ஜாலமோ என்று சொல்லும்படியாக ஒரு பெரிய அதிசயம் நிகழ்ந்தது. அவன் உட்கார்ந்த மண்டபம் புத்தம் புதிய அழகான வஸந்த மண்டபமாக மாறியது. மண்டபத்தைச் சுற்றியிருந்த காடு ஒரு நொடியில் மலர்கள் பூத்துக் குலுங்கிய செடிகளும் மரங்களும் உள்ள உத்தியானவனம் ஆயிற்று. அதற்கப்பாலிருந்த இடிந்த கட்டிடம் மூன்றடுக்கு மெத்தையுள்ள அழகிய வேலைப்பாடுகள் அமைந்த அரண்மனை ஆயிற்று. இன்னும் அதற்கப்பால் இரு புறங்களிலும் வேறு அழகிய கட்டிடங்கள் சுவர்களில் பூசிய முத்துச் சுண்ணாம்பினால் வைகறையின் மங்கிய வெளிச்சத்தில் தாவள்யமாகப் பிரகாசித்த கட்டிடங்கள் காணப்பட்டன. சேதம் சிறிதுமில்லாத கோட்டைச் சுவர்கள் கோட்டை வாசல்களின் மேல் விமானங்கள் ஆகியவை மங்கலாகவும் ஆனால் முழு வடிவத்துடனும் கண்முன்னே தோன்றின. இந்த மாயாஜால மாறுதல் எல்லாம் சில விநாடி நேரத்துக்குள்ளேயே ஒன்றன் பின் ஒன்றாக நிகழ்ந்து குமாரலிங்கத்தைத் திக்குமுக்காடச் செய்தன. அதே சமயத்தில் அரண்மனை ஆசார வாசலில் நாதஸ்வரம் வாசிக்கும் இனிய ஓசையும் கோட்டை வாசலில் நகரா முழங்கும் சத்தமும் கேட்டன. நல்ல அந்தகாரத்தில் பளிச்சென்று மின்னும் மின்னலில் விஸ்தாரமான பூப்பிரதேசத்தின் தோற்றம் கண்ணுக்குப் புலனாவது போல் அந்தப் பழைய கோட்டையின் அதிசயமான வரலாறு முழுவதும் குமாரலிங்கத்துக்கு ஞாபகம் வந்தது.

ஏறக்குறைய இதே மாதிரி சந்தர்ப்பத்தில் முன்னொரு தடவை இந்தக் கோட்டைக்குள்ளே தான் பிரவேசித்தது முற்றிலும் உண்மை; அதில் சிறிதும் சந்தேகமேயில்லை. இன்றைக்கு ஏறக்குறைய நூறு வருஷத்துக்கு முன்னால் தென்பாண்டி நாட்டில் மேற்கு மலைத் தொடருக்கருகில் இரண்டு பெரிய பாளையப்பட்டு வம்சங்கள் பிரசித்தி பெற்று விளங்கின. ஒவ்வொரு வம்சத்தின் ஆளுகையிலும் சுமார் 300 கிராமங்கள் உண்டு. மறவர் வகுப்பைச் சேர்ந்தவர்களாகிய பழந்தமிழ்க் குடிகளாகிய இரண்டு பாளையக்காரர்களும் பூரண சுதந்திரத்துடன் சிற்றரசர்களாக ஆட்சி செலுத்தி வந்தார்கள். கீழே குடிபடைகள் அவர்களுக்கு அடங்கி நடந்தார்கள். மேலே அவர்கள் மீது அதிகாரம் செலுத்துவதற்கோ கப்பம் கேட்பதற்கோ உரிய பெரிய அரசாங்கம் எதுவும் கிடையாது. அப்படி யாராவது கப்பம் கேட்க வந்தால் அவர்களை எதிர்த்துப் போரிடும் வீரமும் போர் வீரர்களும் அவர்களிடம் இருந்தார்கள். சோலை மலையிலும் மாறனேந்தலிலும் நீடித்த முற்றுகையைச் சமாளிக்கக் கூடிய பெரிய கோட்டை கொத்தளங்கள் இருந்தன. அக்காலத்திலே தான் ‘கும்பெனி’யாரின் ஆட்சி பாரத நாடெங்கும் பரவிக்கொண்டு வந்தது. பண்டம் விற்கவும் பண்டம் வாங்கவும் வந்த வெள்ளைக்கார வியாபாரிகள் முதலில் தங்கள் சொத்துக்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக வீரர்களைச் சேர்த்துப் படை திரட்டினார்கள். பிறகு அந்தப் படைகளைக் கொண்டு நாடு பிடித்து அரசாளத் தொடங்கினார்கள்.

அரசாட்சியெல்லாம் ஈஸ்ட் இந்தியா கம்பெனியின் பெயரிலேயே நடந்தது. வியாபாரத்துக்காக வந்தவர்கள் அரசாங்கம் நடத்தத் தொடங்கினால் அதன் இலட்சணம் எப்படியிருக்கும் என்று சொல்ல வேண்டியதில்லை. எந்தெந்த முறையில் பொருள் திரட்டலாமோ எவ்வளவு சீக்கிரத்தில் திரட்டலாமோ அதுதான் கும்பெனி அரசாங்கத்தின் முக்கிய நோக்கமாயிருந்தது. நாட்டின் அரசாட்சி கையிலே இருந்தால் வியாபாரம் நன்றாய் நடக்கிறது என்றும் லாபம் ஒன்றுக்கு நாலு மடங்காகக் கிடைக்கிறது என்றும் கண்ட பிறகு மேலும் மேலும் இராஜ்யத்தை விஸ்தரிக்கத் தொடங்கினார்கள். சண்டையும் உயிர்ச்சேதமும் இல்லாமல் சமாதான பேத உபாயங்களினால் சில பிரதேசங்களைத் தங்கள் ஆட்சியின் கீழ்க் கொண்டு வந்தார்கள். உடுத்திக் கொள்ள ஸ¤ட்டும் பூட்ஸ¤ம் வேட்டையாடத் துப்பாக்கியும் அழகு பார்க்க நிலைக் கண்ணாடியும் க்ஷவரக் கத்தியும் கொடுத்துச் சில மகாராஜாக்களைத் தங்கள் வசத்தில் கொண்டு வந்தார்கள். அந்தந்தப் பாளையக் காரர்களுக்கு விரோதி யார் என்று தெரிந்து கொண்டு விரோதிகளைப் பூண்டோடு அழித்து விடுவதாக வாக்குறுதி கொடுத்துச் சிலரைத் தங்கள் மேலதிகாரத்தை ஒப்புக் கொள்ளச் செய்தார்கள். இந்தியர்களின் பரம்பரைக் குலதர்மமான விருந்தோம்பல் குணத்தை உபயோகப்படுத்திக் கொண்டு சில சிற்றரசர் களையும் ஜமீந்தார்களையும் பிரிட்டிஷ் கும்பெனி ஆட்சியின் அத்தியந்த சிநேகிதர்களாக்கிக் கொண்டார்கள். இந்த வருஷம் சிநேகிதர்களாயிருந்தவர்களை அடுத்த வருஷம் அடிமைகளாக்கிக் கொண்டார்கள்.

இப்படியெல்லாம் நடந்து கொண்டிருந்த காலத்தில் சோலைமலைக் கோட்டையின் புராதன சிங்காதனத்தில் வீற்றிருந்து செங்கோல் செலுத்தி வந்த மகாராஜாதிராஜ வீரராமலிங்க குலோத்துங்க ருத்திரத்தேவர் பிரிட்டிஷ் கும்பெனியாரின் அத்தியந்த சிநேகிதர் ஆனார். கப்பல் ஏறிக் கடல்கடந்து வியாபாரம் செய்யவந்த வெள்ளைக்காரச் சாதியாரின் அதிஅற்புத சாமர்த்தியங்களைப் பற்றி ஏற்கெனவே சோலைமலை மகாராஜா ரொம்பவும் கேள்விப்பட் டிருந்தார். எனவே ஆங்கிலேயன் ஒருவன் துப்பாக்கிகள் தோட்டாக்கள் சகிதமாகச் சோலைமலைக்கு வந்து மகாராஜாவுக்குப் பெரிய ஸலாம் ஒன்று போட்டுச் சோலைமலைக் கோட்டையை அடுத்த காடுகளில் வேட்டையாட விரும்புவதாகத் தெரிவித்ததும் மகாராஜாவின் ஆனந்தம் அளவு கடந்ததாயிற்று. வேட்டைக்குக் கிளம்பிப் போனார். ஆங்கிலேயன் அவருக்குத் துப்பாக்கியை உபயோகிக்கக் கற்றுக் கொடுத்தான். இம்மாதிரி ஆரம்பமான சிநேகிதம் சீக்கிரத்தில் நெருங்கிய அத்தியந்த நட்பாக முதிர்ந்தது. சீமையிலிருந்து மேற்படி ஆங்கிலேயன் கொண்டு வந்திருந்த இனிப்பும் போதையும் கொண்ட சாராய வகைகள் அவர்களுடைய நட்பு முதிர்வதற்கு ரொம்பவும் துணை செய்தன. சில நாளைக்குள்ளே அந்த ஆங்கிலேயனுடைய சிநேகிதர்கள் சிலரும் சோலைமலைக் காடுகளில் வேட்டையாடுவதற்கு வந்து சேர்ந்தார்கள்.

Source

Previous articleRead Solaimalai Ilavarasi Ch 2
Next articleRead Solaimalai Ilavarasi Ch 4

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here