Home Thanneer Desam Read Thanneer Desam Ch 14

Read Thanneer Desam Ch 14

118
0
Read Thanneer Desam free, Thanneer Desam is an story poem written by Vairamuthu. Read Thanneer Desam Ch 14, Download Thanneer Desam, Thanneer Desam PDF, Download Thanneer Desam PDF
Thanneer Desam Ch 14 தண்ணீர் தேசம் அத்தியாயம் 14

Read Thanneer Desam Ch 14

தண்ணீர் தேசம்

அத்தியாயம் 14

Read Thanneer Desam

அது ஒன்பதாம் நாள்.
இதயத் துடிப்பு குறையத்
தொடங்கும் இரண்டாம்
வாரம்.

தண்ணீர் குறையக் குறைய
உயிர்த்தாமரை உலரும்
காலம்.

ஒரு மனிதன் தண்ணீர் இல்லாமல்
ஈரப்பதம் இல்லாத
பாலைவனத்தில் இரண்டு நாள்
இருக்கலாம்.

ஈரப்பதமுள்ள கடலில்
ஏழுநாள்வரை பொறுக்கலாம்.

ஆனால் – அது ஒன்பதாம்
நாள்.

காலக்கெடு முடிந்துவிட்டது.
எச்சில் சுரப்பி வறண்டுவிட்டது.

தார்ச்சாலையில் அசைவற்றுக்
கிடக்கும் செத்தபிராணியாய்
உள் அண்ணத்தில்
ஒட்டிக்கொண்டது நாக்கு.

சூரியன் வந்துவந்து
போனாலென்ன. விடியல்
மட்டும் வரவே இல்லையே.

இன்னும் சொல்லப்போனால்
இரவுகூடக் கொஞ்சம்
இதமாயிருக்கிறது.
விடிந்தால்தான்
பயமாயிருக்கிறது.

சாரமற்ற இந்த
வாழ்க்கையைச்
சகிப்பதெப்படி?

கடற்காற்றின் ஒரேமாதிரியான
ஓசை. காது மடலடியில்
படியும் உப்புப் பிசுபிசுப்பு.
கொஞ்சம் கொஞ்சமாய்
எடையிழக்கும் உடல்கள்.
உடம்பின் ஏதோ ஒரு
துவாரத்தின் வழியே, உயிர்
பகுதி பகுதியாய்
வெளியேறுவதாய் ஒரு பயம்.
மோகனமாய்த் தொடங்கி
முகாரியாய் நிறம்மாறிய
தளக் தளக்
அலைச்சத்தம்.

நரகத்தை உருவகித்தவன் அது
கடலுக்கு மத்தியில்தான்
கட்டப்பட்டிருக்கிறது என்று ஏன்
கற்பனை செய்யவில்லை?
இதுதான் நரகம். இதுதான்
மரணத்தின் முன்னோட்டம்.

இந்த நிமிஷத்தின் முதல் தேவை
தண்ணீர்தான். சுருங்கிக்
கொண்டிருக்கும் உயிரைச் சில
மில்லி மீட்டர்களாவது
விரியவைப்பது தண்ணீர்
மட்டும்தான்.

மீனவர் சற்றே தாங்குவர்.
அவை உழைத்த தேகங்கள்.

தமிழ்ரோஜா தாங்குவாளோ?
அது செம்பருத்திப் பூக்களையும்
செண்பகப் பூக்களையும்
செதுக்கிச் செதுக்கி இழைத்த
தேகம்.

கிரேக்கச் சிற்பம்போல்
பளபளத்த பருவமகள்,
மொகஞ்சதாரோ
ஒவியம்போல் முகம்
சிதைந்து போனாளே.
மீனுக்குக் கொண்டுவந்த
பனிக்கட்டி இருந்திருந்தாலும்
ஊனுக்கும் உயிருக்கும்
கொஞ்சம் நீர்
வார்த்திருக்கலாம்.

ஆனால் – கலக்கத்தில் –
உள்ளறைக் கதவு திறந்து
கிடந்ததில் உஷணக்காற்று உள்
நுழைந்து பனிக்கட்டிகளை
அழவைத்துவிட்டுப்
போய்விட்டது.

இனி என்ன வழி? உறைந்த
கடல்நீரில் உப்பிருக்காதாமே.
அதை உறைய வைத்துப்
பருகலாமா?

அய்யோ.
கடல்நீர் உறைய இது
வடதுருவம் அல்லவே.

இனி இருக்கும் ஒரே ஓர்
எதிர்பார்ப்பு வானம்தான்.

இருக்கும் ஒரே ஒரு நம்பிக்கை

  • ஓரிடத்தில் குவிந்ததை அள்ளி
    ஊருக்குப் பகிர்ந்தளிக்கும்
    காம்ரேட் மேகம்தான்.

ஏ, திட்டுத்திட்டாய் மிதக்கும்
மேகங்களே. நீங்களும்
நாங்களும் ஒரே ஜாதிதான்.
ஆமாம்.

இருவருமே விட்டுப்புறப்பட்டு
விலாசம் தப்பியவர்கள்.
கொள்ளை கொள்ளையாய்
மிதக்கும் வெள்ளை
மேகங்களே. எங்களுக்காகக்
கொஞ்சம்
கறுப்பாகுங்களேன்.

மழைத்துளிகளை
உண்டுவாழுமாமே
சாதகப்பட்சிகள். நாங்களும்
இப்போது சாதகப்பட்சிகளே.
இந்தச் சாதகப்பட்சிகளின்
ஜாதகம், இப்போது உன்
கையில் மழையே… உன்
கையில். ஓராண்டுக்கு
எண்பத்தாறு சென்டிமீட்டர்
உலகத்துக்காக ஒழுகும்
மழையே. எங்கள் மீது ஒரே
ஒரு மில்லிமீட்டர் உதிர்க்கக்
கூடாதா? திருடிய பொருளைத்
திருப்பித்தர மறுக்கும் ஒரு
திருடனைப் போல –
உயரத்தில் ஏறிக்கொண்டு ஏன்
எங்கள் உயிர் குறைக்கிறாய்?

கொஞ்சம் அவிழ்த்துவிடு. உன்
வைரப்பை சிந்தட்டும்.
முத்துக்கள் எங்கள் முகத்தில்
தெறிக்கட்டும். மாட்டாயா?

காட்டில் நிலாவும் – கடலில்
மழையும் விரயமா? ஏன்?
காட்டில் நிலவடித்தால் என்ன?
விலங்குகளும் பறவைகளும்
நிலாவின் எதிரிகளா?
பூக்களுக்கு நிலவின் புளகம்
பிடிக்காதா?

கடலில் மழை பெய்தால்
என்ன? இந்த உலர்ந்த
தேகங்கள் உயிர்
நனையக்கூடாதா?

இரக்கமில்லையா
இளையமேகமே? யாராவது
ஒரு விஞ்ஞான தேவதை வந்து
உன்மீது சில்வர் அயொடைடு
தெளித்தால்தான் சில்லென்று
சிரிப்பாயா?

காற்று வந்து மண்ணைச்
சுரண்டாமலிருக்க மழை
வேண்டுமாமே. மரணம் வந்து
எங்கள் உயிரைச்
சுரண்டாமலிருக்கவும் இப்போது
மழைதான் தேவை.

அவர்கள் மானசீகமாக
யாசித்தார்கள். என்ன
செய்வது? காது கேட்காது –
வானத்திற்கு. கண் தெரியாது

  • மேகத்திற்கு.

கடல்
அமைதியாகத்தானிருந்தது.
கரையில் ஒரு புயலடித்தது.

அந்தப் புயலின் பெயர்
அகத்தியர். தமிழ்ரோஜாவின்
தந்தை.

தன் எதிர்காலச்
செலவுப்பட்டியலை எண்ணிக்
கிடந்தபோதுதான்
தமிழ்ரோஜா அவர்
ஞாபகங்களில் மின்னி
மறைந்தாள்.

ஓ. என்னவானாள் என் மகள்?

வாரத்தில் ஒருநாள் மட்டும்
சலவைச்சட்டை அணிந்து
கொள்ளும் ஒரு பழைய
தமிழ்வாத்தியாரைப் போல
அந்த வாரத்தில் அன்றுதான்
மகளை நினைந்தார்
அகத்தியர்.

அது ஒன்றும் அதிசயமல்ல.
முன்பெல்லாம் அவர்
அனுமதியோடு இருவரும்
விடை கொள்வார்கள்.
சிலநாள் சென்று
திரும்புவார்கள்.

அப்போதெல்லாம் அவர்
கொண்ட வருத்தம் முன்று
நாட்களாகத் தன் மகளைக்
காணவில்லையே என்பதல்ல.
தன் மகளின் முகத்தில்
முத்தத்தின் அடையாளங்கள்
காணவில்லையே என்பதுதான்.

இத்தனை நாள் இல்லாமல்
போனது இதுவே முதல் முறை.

அவர் மீசையில் தோன்றிய
நரைகளைப் போலவே
மனதிலும் அங்கங்கே
அச்சரேகைகள்.

சுழற்றினார் –
பத்திரிகை அலுவலகம் –
கலைவண்ணன் இல்லை.

சுழற்றினார் –
பல்கலைக்கழகம் –
தமிழ்ரோஜா இல்லை.

சின்னச் சந்தேகக்கோடு
சீனத்துப் பெருஞ்சுவரானது.

அடுத்ததென் செய்வது?
காவல்துறைக்கு எப்போதும்
அவர் தூரத்து உறவினர்.

பல காக்கிச்
சட்டைகளுக்கெல்லாம்
அவர்தான் கஞ்சி உபயம்.

அடுத்த பத்தாம் நிமிடத்தில்
ஐந்தாறு ஜோடி பூட்ஸகால்கள்
அழகிய கிரானைட் படிகளை
அழுக்காக்கின.

சற்று நேரத்தில் செய்திகள்
பறக்க – அங்கங்கே
தீப்பிடிக்க – ராயபுரம்
காவல்நிலையத்தில் உண்மையின்
மங்கிய கைரேகைகள் பதிவாக

  • அகத்தியர் கண்களுக்கு ஒரு
    மெல்லிய நம்பிக்கை பிறந்தது.

கரையிலிருந்த அவருக்கு
மட்டுமல்ல – கடலில் சிக்கிய
ஜீவன்களுக்கும் ஒரு தூரத்து
நம்பிக்கை
வானத்தில் தெரிந்தது.

உடம்பு நிற்பது உயிரின்
தலத்தில். உயிர் நிற்பது
நம்பிக்கை பலத்தில்.

அந்த
நம்பிக்கை அவர்களைக்
கைவிடவில்லை. பரதன்தான்
முதலில் அதைப் பார்த்தான்.

அதோ.

தன் உயிரையெல்லாம் உருட்டி

  • சுட்டு விரலில் திரட்டி அவன்
    காட்டிய திசையில் ஓர் இருண்ட
    மேகத்தீவு திரண்டு நின்றது
    தென்கிழக்கே.

ஓ.
கருணையின் நிறம் கறுப்பு.
சூரியன்கூட அதன்மீது சுள்ளென்று
அடிக்கவில்லை.

ஒரு மார்கழி மாதத்து
மாலையில் அருகம்புல் மேய்ந்து
திரும்பும் ஒரு தாய்ப்பசுவின்
கொழுத்த காம்பாய் அந்த
மேகம் செழித்து நின்றது.

ஒரு தென்றல்கன்று
வாய்வைத்தால் போதும் –
திமுதிமுவென்று சொரிந்துவிடும்
போலிருந்தது.

சிந்தி விழப்போகும் அந்த
மேகம் இந்த வேளை இங்கு
வருமா?

வாராது.

காற்று அவர்களுக்கு மேகத்தை
அழைத்துவரும் திசையில்
வீசவில்லை. அந்த மேகமிருக்கும்
தென்கிழக்கை நோக்கித்தான்
காற்று வீசுகிறது.

அந்த மேகம் உடைந்து விழும்
நேரத்தில் அதை
அடைந்துவிட்டால் – இருக்கும்
பாத்திரத்தில் சிதறும்
உயிர்த்துளிகளைச் சேமித்துக்
கொள்ளலாமே.

சரிசரி. எப்படி அடைவது?

அதோ அதோ.

எட்டிவிடும் தூரத்தில் வானம்.
தொட்டுவிடும் தூரத்தில்
மேகம்.

கலைவண்ணன் கண்ணில் ஒரு
மின்னல்.
பாண்டி. பரதன்.
பாய்மரம் செய்வோமா? பாய்மரம்…

பாய்மரம் செய்தால் பசி
தீருமா? – இசக்கி.

பசி தீருமோ இல்லையோ,
தாகம் தீரலாம். அதோ
பாருங்கள் ஒரு தாய்மேகம்.
நல்ல வாய்ப்பு நமக்கு.
காற்றும் அதை நோக்கி.
நீரோட்டமும் அதை நோக்கி.
பாய்மரம் மட்டும் கட்டிவிட்டால்
பயணம் கொள்ளலாம். முயற்சி.
முயற்சிதான் முன்னேற்றம். என்ன
சொல்கிறீர்கள்? கடலின்
அடிமைகளாய்ச் சாவதைவிடக்
கடலின் வேட்டைக்காரர்களாய்ச்
சாவோமே.

சரி. அதுதான் சரி
தமிழ்ரோஜா வழிமொழிந்தாள்.

அடுத்த ஐந்தாவது நிமிடத்தில்
ஒரு பாய்மரம் அங்கே
பிரசவமானது.

தளத்தின் மேற்கூரை கழற்றி –
அதை செளகரியமாய்ச் சாய்த்து

  • அதன் ஓரங்களில் கழிகள்
    நட்டு – ஆணிகள் அறைந்து –
    அந்தக் கழிகளில் லுங்கிகள் –
    போர்வைகள் தார்ப்பாய் கட்டி
    வீணையின் தந்திகளாய் இழுத்து
    நிறுத்தி – பரபரவென்று
    பாய்மரம் தயாரித்து, நங்கூரம்
    களைய – பாய்மரத்தில்
    மோதிய காற்று விசுக்கென்று
    நகர்த்தியது விசைப்படகை.

எல்லோரும் கலகலவென்று
ஒலிசெய்து கைதட்டினார்கள்.

ஆகா. அதுவரை செத்துக்கிடந்த
வாழ்க்கை ஜிவ்வென்று
சிறகடித்ததா?

ஓ.

இயங்காத வாழ்க்கையில்
இன்பமில்லை. இயங்கு. இயங்கு
மனிதனே. இயங்கு. வெற்றியை
நோக்கியாவது – தோல்வியை
நோக்கியாவது
இயங்கிக்கொண்டே இரு.
இயக்கமே வாழ்க்கையின்
முதல் அடையாளம்.

வீசு காற்றே வீசு. விரைக
படகே விரைக. எங்கள் உயிரின்
தூரம்
சில கிலோமீட்டர்.
அதோ.
அந்தக் கறுத்த மேகம்தான்
எங்கள் குறிக்கோள். கடலுக்கு
வந்து வானத்தில் தூண்டில்
போட்டவர்கள்
நாங்களாகத்தானிருப்போம்.
வீசு காற்றே வீசு. விரைக
படகே விரைக.

அவர்களின் மனோவேகம்
பாய்மரத்திற்குப் புரியவில்லை.

காற்றுப் பேசினால் மட்டும்தான்
அதற்குக் காது கேட்கும்
போலிருக்கிறது.

காற்று சொல்லியபடி
அது மெதுவாகவே நகர்ந்தது.

ஏ, பாய்மரமே. பாய்மரமே.
உன்னைத்தான் நம்புகிறோம்.
உனக்கு வேரில்லை.
கிளையில்லை. மலரில்லை.
கனியில்லை. ஆனாலும்
பாய்மரமே. எங்கள் உயிர்
ஒதுங்கியிருப்பது உன்
நிழலில்தான்.

நின்று – நின்று – அசைந்து –
அசைந்து – விரைந்து –
விரைந்து – வேகம் குறைந்து –
அலைகள் கடந்து அவர்களின்
லட்சிய மேகத்தை அந்தப் படகு
அடைந்தபோது – அந்த
மாயமேகம் ஏற்கெனவே சில
துளிகளைப் பொழிந்துவிட்டுக்
கலைந்து போயிருந்தது.

இரண்டு முரட்டு அலைகள்
விசைப்படகின் விலா துழாவியதில்
அது அப்படியும் இப்படியும்
ஆடியது.

ஓங்கியடித்த ஒரு காற்றின்
வேகத்தில் பாய்மரத்தின்
தார்ப்பாய் கழன்று தண்ணீரில்
விழுந்தது.

கிரீச். கிரீச். கிரீச்.
கிரீச். – எங்கோ கத்திய
சுண்டெலியின் பாதிக் குரலில் பசி
தெரிந்தது.

Source

Previous articleRead Thanneer Desam Ch 13
Next articleRead Thanneer Desam Ch 15

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here