Home Thanneer Desam Read Thanneer Desam Ch 22

Read Thanneer Desam Ch 22

77
0
Read Thanneer Desam free, Thanneer Desam is an story poem written by Vairamuthu. Read Thanneer Desam Ch 22, Download Thanneer Desam, Thanneer Desam PDF, Download Thanneer Desam PDF
Thanneer Desam Ch 22 தண்ணீர் தேசம் அத்தியாயம் 22

Read Thanneer Desam Ch 22

தண்ணீர் தேசம்

அத்தியாயம் 22

Read Thanneer Desam Ch 22

மடியில் தமிழையும் வயிற்றில்
நெருப்பையும் கட்டிக்கொண்டு
கிடந்த கலைவண்ணன் வானிலை
மாற்றம்கண்டு மனநிலை
மாறிப்போனான்.

ஏ. என்னவாயிற்று கடலுக்கு?
பகல் ஏன் இருட்டை உடுத்தப்
பார்க்கிறது. வானம் ஏன்
காணாமல் போனது? சூரியனை
மேகம் தின்றுவிட்டதா?

என் கண்மணியின் வெப்பம்
அதிகமாகும் வேளையில்
காற்றின் வெப்பம் ஏன்
குறைந்துகொண்டே போகிறது?

அலைகள் ஏன் பேசுவதை
நிறுத்திக்கொண்டன? கடல் ஏன்
மெளனம் சாதிக்கிறது?
மரணத்துக்கு முன்பே
மெளனாஞ்சலியா?

எங்கள்
திசைகளைத் திருடிக்கொண்டது
யார்? திசைகளைத்
தெரிந்துகொள்ள இதுவரை
சூரிய அடையாளம் இருந்தது.
இப்போது அந்த அடையாளமும்
அழிந்துவிட்டதே.

அதுவும்
சரிதான். பயணம்
போகாதவர்களுக்குத் திசை
எதற்கு?

மீனவர்கள் படகின்
விளிம்புகளுக்கு ஓடியோடி
வானம் பார்த்தார்கள்.
வானிலை போலவே முகம்
இருண்டார்கள்.

தமிழ். தமிழ். – அவன்
கூப்பிட்ட அழைப்புக்குக் குரல்
இல்லை.

செடிக்குத் தெரியாமல்
உதிர்ந்த சிறுமலரைப்போல
நினைவுகள் அவளைவிட்டு
நீங்கிவிட்டன.

ஆனால், அவள் உதடுகள்
மட்டும் முளையின்
கட்டுப்பாட்டிலிருந்து
விடுபட்டு முனகிக்
கொண்டேயிருந்தன.

எங்களோடு என்ன ஊடல்
கடலே. ஏனிந்த இறுக்கம்?

எங்கள் காற்றை எங்கே
கடத்திவிட்டாய்?

ஒன்று மட்டும் புரிகிறது.

இப்போது நீ அடைந்திருப்பது
அமைதி அல்ல. கோபமான
மெளனம் அல்லது மெளனமான
கோபம்.

இதுவரை நாங்கள் பட்டதும்
படுவதும் போதாதா?

எங்கள் படகையே மரணத்தின்
தொட்டிலாக்கி,
தாலாட்டுக்கும் ஒப்பாரிக்கும்
மத்தியில் ஒரு சங்கீதம்
பாடிக்கொண்டிருந்தாயே.
அதைக்கூட ஏன்
நிறுத்திவிட்டாய்?

எங்களை வருத்தியெடுத்தது
போதாதா? இன்னும்
வறுத்தெடுக்க வேண்டுமா?

வீசு காற்றே வீசு.
பேசு கடலே பேசு.

அவர்கள் இருந்த இடம்,
புயலின் கண் மையம்
கொண்டிருந்த பிரதேசம்.

அவர்களுக்குத் தெரியாது –
புயலின் இமை பேசும்.
புயலின் கண் பேசாது என்ற
செய்தி.

புயலின் கண்ணுக்குள்ளிருப்பவர்கள்
பாதுகாப்பாகவே
இருப்பார்கள்.

அங்கே
காற்றழுத்தம் குறையும்.
கடல்வெப்பம் குறையும்.

உறங்கும் வேட்டை நாயைப்
போலவே கடல்
மெளனமாகவே இருக்கும்.
ஆனால், புயலின் கண் நகர்ந்து
நகர்ந்து அவர்கள் மீது
இமைத்தால்போதும் –
குமிழிமேல் விழுந்த இடியாய்
அவர்கள் குலைந்து
போகக்கூடும்.

எப்போதும் இந்த பூமியைச்
சுற்றி இரண்டாயிரம் புயல்கள்
இருந்துகொண்டேயிருக்கின்றன.

சில புயல்கள் வலுவடைந்து
வளர்ந்து வருகின்றன. சில
புயல்கள் பெருமுச்சோடு
இறந்து விடுகின்றன.

புயல் என்பது பூமியின்
வரம்தான்.

பூமியின் உஷணக்காற்றை
உள்வாங்கி, அதைப் பூமிக்கு
மேலே அனுப்புவது புயல்தான்.

ஐம்பது கோடி லிட்டர்
தண்ணீரை உறிஞ்சிக்கொண்டோடி
வந்து பூமியில் ஊற்றுவது
அதுதான்.

ஆனால், புயலுக்கிருப்பது
ஒற்றைக்கண். அதற்கும்
பார்வை
கிடையாது.

அதனால்தான் அது இடம்
தெரியாமலும் தடம்
தெரியாமலும் அடித்துத்
தடுமாற வைத்து விடுகிறது.

புயலுக்கு இரண்டே குணம்.

பூமத்திய ரேகையிலிருந்து
கீழ்நோக்கி வலப்புறம்
சுற்றுவது.

பூமத்திய ரேகையிலிருந்து
மேல்நோக்கி இடப்புறம்
சுற்றுவது.

அந்த ஆறு ஜீவன்களுக்கும்
தெரியாது. அவர்களுக்குத்
தென்கிழக்கே, பூமிக்கு
எதிராய் அப்படி ஒரு புயல்
படைதிரட்டிக் கொண்டிருக்கும்
பயங்கரம்.

புயலின் திசை என்பது
பைத்தியக்காரன் கையில் பந்து
மாதிரி – எங்கே வீசும் என்று
எவருக்கும் தெரியாது.

கடலைப்போலவே கரையிலும்
ஒரு கொந்தளிப்பு.

உயிரை உறையவைக்கும்
வாடைக்காற்று.

இப்போதோ பிறகோ
தரையில் விழுந்து விடுவேன்
என்று பயமுறுத்தும் வானம்.

விசைப்படகுகளைச் சூழ்ந்து
மீனவர் குடும்பங்கள்.

கதறும் கைக்குழந்தைகள் –
பதறும் தாய்மார்கள் – சீறும்
இளைஞர்கள்.

என் பிள்ளைகளை மீட்பதற்கு
இந்தப் படகுகள் போகுமா?
போகாதா? – இசக்கியின்
அன்னை நடுங்கும் குரலில்
நடுங்காமல் கேட்டாள்.

புயல் வரப்போகிறதாம்.
படகு போகாதாம். –
வரலட்சுமி சொன்னாள்
கோபம் குழைத்த பயத்தில்.

என் அப்பா செத்துப்
போவாரா? – விம்மி
அழுதாள் சிறுமி மீனா.

அதிகாரிகளே
சொல்லுங்கள். எங்கள்
ஆட்களைக் காப்பாற்ற இந்தப்
படகுகள் கடலுக்குள் போகுமா
போகாதா?

இப்போது போகாது.
மேலிடத்து உத்தரவுக்காகக்
காத்திருக்கிறோம்.

தன் சட்டையைப் போலவே
இஸதிரிபோட்ட
வார்த்தைகளால் பேசினார்
ஓர் அதிகாரி.

நாங்கள் யாருடைய
உத்தரவுக்காகவும்
காத்திருப்பதில்லை – சீறிய
இளைஞர் கூட்டம் படபடவென்று
படகுகளுக்குள் குதித்துப்
பரவியது.

அதிகாரிகளின் கண்ணெதிரே
படகுகள் நொறுங்கின. சுக்கான்களைச்
சிலபேர்
உடைத்தெறிந்தார்கள்.

விளிம்புகளைச் சிலபேர் வெட்டித்
தள்ளினார்கள்.

தவிடு பொடியானது தளம்.

காற்றில் பறந்து கடலில் விழுந்தது மேற்கூரை.

ஒரு கோபக்கார இளைஞன் டீசல்கலத்தின்
முடியை உடைத்துத் திறந்தான்.

ஒரு தீக்குச்சி கொளுத்திப் படகுக்குள்
வீசியெறிந்து வெளியே குதித்தான்.

அடுத்த பத்தாவது நிமிடத்தில் அத்தனை
படகுகளிலும் பற்றிப் பரவியது நெருப்பு.

அதை அணைக்கலாமா வேண்டாமா
என்று இடி இடித்துப் பட்டிமன்றம்.
நடத்தியது மேகம்.

பேசுவதை நிறுத்திக் கொண்டது கடல்.

முனகுவதையும் நிறுத்திக்கொண்டாள்
தமிழ்ரோஜா.

உஷணத்தில் உலர்ந்து, காய்ந்து சாம்பல்
பூத்திருந்த அவள் உதடுகளின் மடிப்புகளில்
மரணம் வரிவரியாய் உட்கார்ந்திருப்பது
போலவே தோன்றியது.

இன்னும்,, இன்னும்,, இருண்டுகொண்டே
வந்தது வானம்.

இன்றைய பகல் மத்தியானத்திலேயே
செத்துவிட்டதா?

கலைவண்ணன் மீனவர்களை அழைத்து
மெல்லச் சொன்னான் நமக்கு ஏதோ ஒரு
திசையில் புயல் உருவாகி இருக்கிறது
புயலின் மெளனப் பிரதேசத்தில் நாமிருக்கிறோம்.
அந்தப் புயல் நம்மீது கடக்கலாம் அல்லது நம்மேல்
கருணைவைத்து வேறொரு திசையிலும் வீசலாம்.
நாம் எதற்கும் தயாராக இருக்க வேண்டும்.
அவநம்பிக்கை இருட்டு. மீனவர் முகங்களில்
முகாமிட்டது.

எதற்கும் தயாராக இருக்க வேண்டுமா
பேனாக்காரரே. அப்படியானால் நாம்
சாவுக்குத் தயாராக இருக்க வேண்டியதுதான்.

ஏன் சாவைப் பார்த்து இப்படிப்
பயப்படுகிறீர்கள்? புயலடிக்கும் முன்பே
பயமடித்துச் செத்துவிடுவீர்கள் போலிருக்கிறதே.

இல்லை.. இல்லை.. பயப்படவில்லை
பசியால் செத்தாலென்ன புயலால்
செத்தாலென்ன சாவு சாவுதான்
பயமும் விரக்தியும் தொனிக்கப் பேசினான்
பாண்டி.

அல்லா நம்மை மன்னிக்கமாட்டர்.
நம்முடைய சாவுக்கு முன்பே தங்கையைக்
காவுகொடுத்து விடுவோம் போலிருக்கிறதே
கண்ணீரையும் தன்னையும் கட்டுப்படுத்த
முடியாத சலீம் கதறி அழுதான்.

புயல் தன் விஷ நாக்கை வீசாமலும்
மரணம் தன் நச்சுவிரலைச் சொடுக்காமலும்
சிலமணி நேரம் தூரத்தில் நின்று இந்தத்
துடிக்கும் உயிர்களை வேடிக்கை பார்த்தன.

அங்கே காற்றழுத்தம் குறைய – வெப்பநிலை
குறைய – தண்ணீர் இறுகித் தரையாகிவிட்டது
போல் சலனமற்றிருந்தது சமுத்திரம்.

Source

Previous articleRead Thanneer Desam Ch 21
Next articleRead Thanneer Desam Ch 23

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here