Home Thanneer Desam Read Thanneer Desam Ch 23

Read Thanneer Desam Ch 23

91
0
Read Thanneer Desam free, Thanneer Desam is an story poem written by Vairamuthu. Read Thanneer Desam Ch 23, Download Thanneer Desam, Thanneer Desam PDF, Download Thanneer Desam PDF
Thanneer Desam Ch 23 தண்ணீர் தேசம் அத்தியாயம் 23

Read Thanneer Desam Ch 23

தண்ணீர் தேசம்

அத்தியாயம் 23

Read Thanneer Desam Ch 23

புயல் தன் யுத்தத்தைக்
கரையில் தொடங்கிவிட்டது.
தன்னை எதிர்த்து நிற்கும்
மரங்களை வேரோடு
வீழ்த்திவிட்டு யாரங்கே?
என்று கூவியது.

வானத்தில் நடக்கும் கத்திச்
சண்டைகண்டு பூமி தன்
வீடுகளைப்
பூட்டிக்கொண்டதால்,
ஒவ்வொரு வீடாகச் சென்று
கதவுதட்டியது புயல்.

மழை…
அடர்ந்த மழை…

கூழாங்கல்லின் குழந்தைகள்
மாதிரி பருத்த துளிகள் விழும்
கனத்த மழை…

மனிதர்கள் நடக்க முடியாத
சாலைகளில்
விரைந்துகொண்டிருந்தது
வெள்ளம்.

ஒரு சாலையில் ஓர் எருமையின்
கொம்புகள் மட்டும் மிதந்து
வந்தன.

கொம்புகளுக்குக் கீழே
எருமை இருந்தது.

அரசாங்கம் செய்ய
முடியாததை மழை செய்தது –
பள்ளத்தில் முழ்கிய பாமர
மக்கள் பள்ளியில்
ஒதுங்கினார்கள்.

தவளைகூடப் பாம்பின்
வளையிலாவது ஒதுங்கத்
துடிக்கும் அந்தப் பயங்கரப்
புயல்மழையில், மீனவர் சங்கம்
மட்டும் கடற்கரையில் கூடி,
மழையில் நனையும்
போராட்டத்தை அறிவித்தது.

மாற்று ஏற்பாடுகள் செய்து,
எங்கள் மீனவர்
மீட்கப்படும்வரை நாங்கள்
இருநூறு குடும்பங்களும்
இப்படியே நின்றுகொண்டே
மழையில்
நனைந்துகொண்டேயிருப்போம்…

ஏப்ரல் மாதத்தில்கூட
நடுங்கும்கிழவிகள் நனைய…
நனைய…

ஒவ்வொரு வருஷமும் இதுதான்
கடைசித் தீபாவளி என்று
கருதும் கிழவர்கள் நடுங்க…
நடுங்க…

இப்போதுதான்
தொப்பூழ்க்கொடி
அறுக்கப்பட்ட கைக்குழந்தைகள்
அழத்தெரியாமல் அழ…
அழ…

வைராக்கியமுள்ள பெண்களின்
கூந்தல்வழியே மழைத்தாரைகள்
வழிய… வழிய…

சட்டையணியாத தேகத்தோடு
இளைஞர்கள் மழைக்கு மார்பு
திறந்திருக்க…

முந்நூறு பேருக்குமேல் அந்தக்
கடற்கரையில் உயிருள்ள
சிலைகளாய்ச் சொட்டச்
சொட்ட நனைந்து
கொண்டிருந்தார்கள்.

ஒரே ஒரு கிழவன்மட்டும் ஒரு
முக்கோணக்கோணி எடுத்துத்
தனக்கு முக்காடு
போட்டுக்கொள்ள…
சீ… உனக்கு
வெட்கமாயில்லை… என்று
காறித்துப்பி, அவன்
துணைக்கிழவி வந்து அதைத்
தூக்கியெறிந்தாள்.

கிழவன் கூன் நிமிர்ந்தான்.

நான் சந்தேகப்பட்டது
சரியாகிவிட்டது. புயல்
நம்மைத்தான்
கடக்கிறது…

  • அபாயச் சங்காய்
    அலறினான் பாண்டி.

அவர்களுக்கு மேலிருந்த வானம்
திறந்துகொண்டது.

மழை என்ற ஒரே
தலைப்பில் வானம்
கோடிக்கணக்கான
வார்த்தைகளால் பேசத்
தொடங்கியது.

கலைந்துவிட்டது கடலின்
மெளனம்.

அதுவரைக்கும் கழற்றி
வைத்திருந்த சலங்கைகளை
அவசரமாய் எடுத்து
அணிந்துகொண்டன அலைகள்.

ஜதிசொல்லும் புயலுக்காடத்
தயாராகிவிட்டது சமுத்திரம்.

துச்சாதனப்புயல் செய்த முதல்
காரியம் – படகின் நங்கூரம்
களைந்ததுதான்.

இப்போது படகு, அலைகளின்
ஆளுகைக்கு வந்துவிட்டது.

நகர்ந்தும் சாய்ந்தும்
ஆடியும் அலைந்தும் –
எதிர்முனை உயர்ந்தும்
மறுமுனை அமிழ்ந்தும் –
மறுமுனை உயர்ந்தும்
எதிர்முனை அமிழ்ந்தும் –
விநாடிக்கொரு ஆபத்தை
அடைந்தது விசைப்படகு.

வானத்திலிருந்து மழையின்
அம்புகள். கடலிலிருந்து
அலைகளின் கதாயுதங்கள்.
கேடயம் இல்லாத படகு,
கிறுக்குப்பிடித்துச் சுற்றத்
தொடங்கிற்று.

இப்போதோ பிறகோ படகு
கவிழ்ந்துவிட்டால்
மிதவையாக்கிக் கொள்வதற்குப்
படகில் எதை உடைக்கலாம்
என்று அவர்களின் முளையின் ஒரு
முலையில் ஒரு சிந்தனை
மின்னியபோது – தூரத்தில்
அந்த ஆபத்தான அதிசயம்
தட்டுப்பட்டது.

அங்கென்ன வெள்ளையாய்…
உயரமாய்… தண்ணீருக்கும்
விண்ணுக்குமாய்…?.

கடலுக்குள் முழ்கிக் கிடந்த
வெள்ளைமலை ஒன்று திடீரென்று
வெளிப்பட்டுவிட்டதா..?
விளங்கவில்லை.

அது வேறொன்றுமில்லை –
விஸவருபத்தில் ஒரு வெள்ளை
அலை. புயல் கடல்நீரை
மேலே இழுத்துத் தன்
வருகைக்குக் கட்டிக்கொண்ட
தண்ணீர்ப்பதாகை.

தத்தளிக்கும் படகைநோக்கி
அந்தத் தண்ணீர்ச்சுவர் நெருங்கி
நெருங்கி வந்தது.

அந்த அலைதான் மரணம்
தங்கள்மீது கடைசியாக வீசும்
பாசவலை என்று
முடிவுகட்டியவர்கள், கண்களை
முடிக்கொண்டு, முச்சை
இறுக்கிக்கொண்டு முழ்கத்
தயாரானார்கள்.

சில விநாடிகள் கடந்தும்
தாங்கள் முழ்கவில்லை என்று
தெரிந்து கண் திறந்தபோது,
எழுந்து வந்த தண்ணீர்ச்சுவர்
இடிந்துவிட்டதைக் கண்டார்கள்.

காற்று அதைக்
கைவிட்டுவிட்டது. ஆனால்,
புயல் தன் வேலையை
ஆரம்பித்துவிட்டது.

வாழ்வு – சாவு இரண்டையும்
இனி இயற்கையின் கையில்
விட்டுவிடுவோம் என்ற முடிவுக்கு
வந்தவர்கள்,
ஒருவரையொருவர் இறுகப்
பற்றிக்கொண்டார்கள்.

இரண்டு ராட்சச அலைகள்
முட்டித் தகர்த்ததில்,
அடித்தளத்தின் பலகை சற்றே
விரிசல் கண்டது.
அதன்வழியே உப்புநீர் உட்புகத்
தொடங்கியது.

மேலேயிருந்து
மழைநீர்.
கீழேயிருந்து
கடல்நீர்.

படகு நிறைய ஆரம்பித்தது.

அலையோ புயலோ படகை
முழ்கடிப்பதற்கு முன்னால்
படகில்
சேரும் தண்ணீரே படகை
முழ்கடித்துவிடும் என்ற
பயங்கரம் புரிந்தது.

இறையுங்கள். தண்ணீரை
இறைத்துக் கடலில்
ஊற்றுங்கள்…

  • கத்தினான் பாண்டி.

கட்டிக் கொண்டவர்கள்
பிரிந்தார்கள்.

சாப்பாடு இல்லாமலும் சக்தி
இல்லாமலும் வலுவிழந்தவர்கள்,
இருக்கும் சக்தியையெல்லாம்
திரட்டி இறைக்க
ஆரம்பித்தார்கள்.

படகைச் சுற்றி அடித்துச்
சுழற்றிக் கொண்டிருந்தது
புயல்காற்று.

கை வலித்தது.
உடல் சலித்தது.

அவர்கள் இறைக்க இறைக்க,
முச்சு இரைத்தார்கள்.

அப்படியே
இறைத்துக்கொண்டிருந்தாலும்
சக்தியிழந்து
இறந்துபோவார்கள்.
இறைக்காமல் விட்டாலும் படகு
முழ்கி இறந்துபோவார்கள்.

அவர்கள்மீது மரணம் பலமுனைத்
தாக்குதல் நடத்தியது.

தன்னைச் சுற்றி நிகழும்
பயங்கரங்களில் எதுவும்
முளைக்கெட்டாமல் முக்கால்
மயக்கத்தில் கிடந்த
தமிழ்ரோஜா, கலைவண்ணனின்
கைகளை அனிச்சைச்
செயலாய்த் தேடித் தொட்டு

  • எனக்கு ஒரு முத்தம்
    தருவீர்களா..? கடைசி
    முத்தம்… என்று
    முனகினாள்.

கலைவண்ணன் குனிந்தான்.
கன்னத்தில் முத்தமிட்டான்.
முத்தம் சுட்டது.

சாவே வா…
ஒரே கல்லில் இரண்டு
மாங்காய் உனக்கு…

எங்களில் எந்த உயிரை முதலில்
எடுத்தாலும் இன்னோர் உயிரும்
போய்விடும்.

வா சாவே. வா…

அவளை ஒருகையால்
கட்டிக்கொண்டவன்,
மறுகையால் படகில் சேரும்
நீரை இறைக்க ஆரம்பித்தான்.

புயல் உக்கிரமானது.

கடல் மட்டத்திலிருந்து
எட்டாயிரம் அடி உயரத்தில்
அறுபது மைல் விட்டத்தில்
மேகங்களைத்
திரட்டிக்கொண்டு, மழையைக்
கயிறாக்கிக் காற்றை மத்தாக்கிக்
கடலைக் கடைந்தது புயல்…

இந்தியாவின் ஜனநாயக
சோசலிசத்தைப் போலவே
இல்லாதவன் வீட்டுக் கூரையைப்
பிய்த்து இருப்பவன் வீட்டு
மாடிமேல் எறிந்தது புயல்.

பொழியும் மழை பொழிந்து
கொண்டேயிருந்தது. நனையும்
மனிதர்கள் நனைந்து
கொண்டேயிருந்தார்கள்.
அவர்கள்மீது கேமரா மின்னல்கள்
மின்னிக் கொண்டேயிருந்தன.

எப்படியும்
மீட்டாகவேண்டும்… என்ன
செய்வது? – உதவியாளர்மீது
உறுமி விழுந்தார் அமைச்சர்.

எதற்கும் மீனம்பாக்கம்
வட்டாரத்தில் கேட்டுப்
பார்க்கிறேன்… என்றார்
அமைச்சரைவிட 5 சதம்
விவரமுள்ள உதவியாளர்.

தொலைபேசியையும் தன்
தலையையும் உருட்டி உருட்டி
ஓய்ந்துபோன உதவியாளர்,
இதைப் பேசாமல் உள்துறைச்
செயலாளரிடம்
ஒப்படைத்துவிடுவோம்…
என்று ஒதுங்கினார்.

புயல், இப்போது உள்துறைச்
செயலாளர் அலுவலகத்தில் மையம்
கொண்டது.

ஆணைகள் பறந்தன.

விமானத் தொடர்பு மையத்தை
அவசரமாய் அணுகுங்கள். மீட்புக்
கூட்டமைப்பு மையத்தை வேலை
வாங்குங்கள். கடலோரக்
காவல்படையை
உஷார்ப்படுத்துங்கள். விமானப்
போக்குவரத்துத் துறைக்கு
அறிவிக்கை அனுப்புங்கள். எல்லாக்
கடவுளையும் கூப்பிட்டுக் கடைசியில்
எந்தக் கடவுளும் உதவிக்கு
வராமல் செத்துப் போன ஓர்
இந்துவைப் போல இந்தக்
கதையும் ஆகிவிடக் கூடாது.
முதலில் அவர்கள் இருக்குமிடம்
எதுவென்று நாம்
கண்ணகப்படுத்தியாக வேண்டும்.
பெட்ரோல் கிடங்கில் தீ பரவும்
வேகத்தில் திட்டமிட்டுச்
செயல்படவேண்டும். விரைக –
விரைக – மிக விரைக.

கலங்காதீர் தோழர்களே.
கை சலிக்காதீர். இறைப்போம்

  • இன்னும் இறைப்போம். மரணம்
    நம் உயிரை இறைக்கும்வரைக்கும்,
    உட்புகும் நீரை இறைத்துக்
    கொண்டேயிருப்போம்.

எங்கள் படகின் குடுமி
பிடித்தாட்டும் கொடும்புயலே.
படகின் ஒருமுனை கவிழ்த்து
எங்களைச் சாவின்
வரவேற்பறைக்கு அழைத்துப்
போகிறாய். மறுகணமே எங்கள்
படகை விடுவித்து, வாழ்வின்
வாசலுக்கு அழைத்து வருகிறாய்.
நாங்கள் துயரப்படுவோம் என்று
மகிழ்ந்து போகாதே புயலே.
பெருமைப்படுகிறோம். நாங்கள்
காற்றோடும் கடலோடும்
அல்லவா யுத்தம்
நடத்துகிறோம்?

போர்வைக்குள் புதைந்து
கிடந்தாள் தமிழ்ரோஜா.

மயக்கத்திற்கும் மரணத்திற்கும்
மத்தியில் அவள் சுவாசித்துக்
கொண்டிருந்தாள்.

மீட்புக் கூட்டமைப்பு மையம்
புயலை எதிர்த்து மின்னல்
வேகத்தில் இயங்கியது.

சென்னைக்குத் தென்கிழக்கே
தப்பிப்போன படகின் தடயம்
தேடுக. துல்லியத் தகவல் அறிந்து
விமானமோ கப்பலோ மீட்க
விரைக.

கரையோரக் கப்பல் ஒன்றின்
ரேடார் கருவி இயங்கியது.
120 கடல்மைல்கள் விட்டத்தில்
உள்ள எதையும் துப்பறியும் அதன்
வட்டத்திரையில் சின்னச் சின்ன
வெளிச்சப் புள்ளிகள் சிணுங்கின.

புயலின் ஆரவாரத்தில் திரையில்
குழப்பமே கொடி கட்டியது.
ஆனாலும் ரேடார் திரை சந்தேக
அறிக்கை சமர்ப்பித்தது.

வடக்கே
12 டிகிரியில் 40 நிமிடப்
பயணத்தில், கிழக்கே 80 டிகிரியில்
20 நிமிடப் பயணத்தில்
தப்பிப்போன படகு இருப்பதான
சந்தேகப்புள்ளிகள்
தட்டுப்படுகின்றன.

புயலின் போர்க்குணத்தால்
துல்லிய முடிவுகள் துலங்கவில்லை.

இது ஓர் அனுமானம் –
அவ்வளவுதான்…

அறிக்கை பார்த்த மையம்
அலறியது.

இதுதான்.
இதுவேதான். நமக்குக் கிடைத்த
தகவலும் இந்த அறிக்கையும்
ஒன்றோடொன்று ஒத்துப்
போகின்றன.

தாழப் பறக்கும் டார்னியர்
விமானமொன்று தயாராகட்டும்.
தரை – ஆகாயம் – தண்ணீர்
முப்பிரிவுகளுக்கும் அவசர
அறிவிப்புகள் பறக்கட்டும்.
அனைத்துக் காவல் நிலையங்கள்,
மாவட்ட ஆட்சித் தலைவர்
அலுவலகங்கள், கடலோரக்
காவல்படை, சென்னை துறைமுகப்
பொறுப்புக் கழகம் –
அனைத்தும்
விழிப்பு நிலையில் இருக்கட்டும் படகோ
உடலோ கரையில் ஒதுங்கினால், அருகிலுள்ள
காவல் நிலையத்துக்குத் தகவல் தருமாறு
கடலூர் முதல் காக்கிநாடா வரையிலுள்ள
அனைத்து மக்களும் அறிவுறுத்தப்படட்டும்.

மீட்புக் கூட்டமைப்பு மையம் அடுத்த
கட்டப் பணிக்கு அவசரமானது.
எங்கே?
தாழப் பறக்கும் டார்னியர் விமானம் எங்கே?

விமானிகள் தயங்கினர்.
இரண்டு காரணங்களால் இப்போது முடியாது
ஒன்று –
ரேடரின் தகவல்கள் உறுதிசெய்யப்படாதவை.
இரண்டு –
காற்று கடுமையாக வீசுகிறது. எதிர்த்துப்
பறந்தால் விமானம் விழுந்துவிடும் அல்லது
வெடித்துவிடும்.

கூட்டமைப்பு மையம் குழம்பியது.

Source

Previous articleRead Thanneer Desam Ch 22
Next articleRead Thanneer Desam Ch 24

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here