Home Thanneer Desam Read Thanneer Desam Ch 24

Read Thanneer Desam Ch 24

106
0
Read Thanneer Desam free, Thanneer Desam is an story poem written by Vairamuthu. Read Thanneer Desam Ch 24, Download Thanneer Desam, Thanneer Desam PDF, Download Thanneer Desam PDF
Thanneer Desam Ch 24 தண்ணீர் தேசம் அத்தியாயம் 24

Read Thanneer Desam Ch 24

தண்ணீர் தேசம்

அத்தியாயம் 24

Read Thanneer Desam Ch 24

சலீம். சலீம்.

உடல் சோர்ந்து விழுந்தவன்
பேசவில்லை. அசையவில்லை.

இறந்துவிட்டானா? சலீம்
இறந்துவிட்டானா?

இறைப்பதை நிறுத்திவிட்டு அவன்
சுவாசம் பார்த்து,
நாடித்துடிப்பு அறிந்து அவன்
செத்துவிடவில்லை என்ற ஒரு
சின்ன நிம்மதிகண்டு அவனைத்
தமிழ்ரோஜாவின் பக்கத்தில்
கிடத்திவிட்டு, ஏறிவரும்
நீர்மட்டத்தைக் குறைப்பதற்கு
ஓடிவந்தார்கள் மீனவர்கள்.

மழை தன் வேகத்தைக்
குறைத்துக் கொண்டாலும்,
காற்று அந்தப் படகை
ஜலசமாதி செய்துவிடத்
தவியாய்த் தவித்தது.

அதிகாலையில் சிங்கப்பூர்
செல்லும் ஏர் இந்தியா
விமானம் புயலுக்கெதிராகப்
புறப்படலாமா வேண்டாமா
என்று யோசித்துக்
கொண்டிருந்தபோது, காற்று
அட்டவணையோடு வந்தார்
துணைவிமானி.

அட்டவணையில் ஆழ்ந்தார்
கேப்டன் கணேசன்.

25,000 அடி உயரம்
வரைதான் கடுங்காற்று
வீசுகிறது. 25,000 அடிக்கு
மேல் 45,000 அடி வரை
காற்றின் வேகம் குறைவு.
எனவே 25,000 அடிக்கு
மேல் பறந்து, புயல்
பிரதேசம் கடந்துவிட்டால்
சிங்கப்பூர் சென்று சேர்வது
எளிது

அந்தச் சிறகடிக்காத பறவை
சிவ்வென்று பறந்தது.

மழை ஓர் இடைவேளை
விட்டிருந்தது.

சுருங்கிக் கிடந்த சூரியக்
கதிர்கள் மேகக் கிழிசல்களில்
கொஞ்சம் கொஞ்சமாய்
எட்டிப் பார்த்தன.

காற்று மட்டும் கடுகியே
அடித்தது.

விமானம் வங்காள விரிகுடாவின்
மேலே
பறந்து கொண்டிருந்தபோது,
கடலில் மாறிமாறி
மின்னலடித்தது.

கேப்டனின் கண்கள் கடலில்
குதித்தன.

தண்ணீரை இறைப்பதற்காக
மீனவர்கள் முறமாகப்
பயன்படுத்திய தகரங்களில்
சூரிய வெளிச்சம்பட்டுச்
சுடரொளி வீசியது.

கேப்டனுக்கு அது ஓர் அபாய
அறிவிப்பாகவே பட்டது.
தப்பிப்போன படகு பற்றிய
தகவல் கேப்டனின் மனதில்
பதிவாகியிருந்ததால் அவர்
முளை விழித்துக்கொண்டது.

மீட்புக் கூட்டமைப்பு
மையத்துக்குக் கம்பி இல்லாத்
தந்தி முலம்
தகவல் தந்தார்.

ஓ. அவர்களைக் காக்கும்
அசரீரி வந்துவிட்டது.

மீட்புக் கூட்டமைப்பு மையம்
துள்ளிக் குதித்தது.

உறுதி. உறுதியாகிவிட்டது.
தப்பிப்போன படகு பற்றிய
தகவல் வந்துவிட்டது.
தாமதிக்க நேரமில்லை.
கடலோரக் காவல் படையே.
உன் ஹெலிகாப்ட்டரை எடு.
அந்தப் பொறுப்பை, மீட்புப்
பணியில் புகழ்பெற்ற
கமேண்டோ முஸதபாவிடம்
ஒப்படை. அவர்தான்
ஹெலிகாப்ட்டரை நின்று பறக்க
வைக்கும் கலையில் நிபுணர்.

தூறும் மழை
தூறிக் கொண்டேயிருந்தது.
நனையும் மக்கள்
நனைந்து
கொண்டேயிருந்தார்கள்.

காற்றை எதிர்த்து
ஹெலிகாப்ட்டர்
வங்காளவிரிகுடாவின் வானத்தில்
பறந்தது.

அது என்ன சத்தம்?
வான்வழியே என்ன அது
எந்திரத்தின் ஓசை?
சாவுமணிக்குப் பக்கத்தில்
சங்கீதமா?

கலைவண்ணனும் மீனவர் முவரும்
அண்ணாந்து பார்த்தனர்.

தூரத்தில் தெரிந்த விஞ்ஞானப்
பட்டாம்பூச்சி, விரைந்து
வரவரப் பெரிதாயிற்று.

ஹெலிகாப்ட்டர்.
ஹெலிகாப்ட்டர்.

அதன் விசிறியின் வேகத்தைவிட
இதயம் துடித்தது.

சற்றே வெறித்திருந்தது மழை.

விதவையின் சிரிப்பைப் போல
எப்போதாவது வெயிலடித்தது
வானம்.

சூறைக்காற்று மட்டும்
ஒரே சுதியோடு வீசியது.

அவர்களின் தலைக்கு மேலே
தாழப்பறந்து அந்தரத்திலே
நிலைகொண்ட ஹெலிகாப்ட்டர்,
அப்படியும் இப்படியும் காற்றில்
அலையுண்டது.

கமேண்டரின் பயிற்சியிலும்
முயற்சியிலும் நெளிந்துநெளிந்து,
அலைந்து அலைந்து
நிலைகொண்டது.

தலைக்குமேலே பறந்த அந்த
விஞ்ஞான தேவதையைக்
கண்களில் நீர்வழியக்
கையெடுத்துக் கும்பிட்டார்கள்.

ஹெலிகாப்ட்டரிலிருந்து படகின்
தளத்தில் வின்ச் என்று
சொல்லப்படும் எந்திர உருளை
இறங்கியது.

ஏறிவாருங்கள் – ஒருவர்
பின் ஒருவராய்
ஏறிவாருங்கள்
ஹெலிகாப்ட்டரிலிருந்து ஆணையும்
சமிஞ்கையும் பிறந்தன.

படகுக்குள் பரபரப்பு
பரவியது. முதலில் யார்
ஏறுவது?

சகுனம் பார்க்கவோ
சண்டையிடவோ ஏற்றபொழுது
இதுவன்று.
உருளை இறக்கிய உறியின்
பக்கத்தில் யார்
இருக்கிறார்களோ அவர்கள்
முதலில் ஏறுங்கள் –
கத்தினான் கலைவண்ணன்.

இசக்கிதான் இருந்தான்.

அவனே ஏறினான்.

அவன் உருளையின் உறியில்
ஏறி நிற்கவும்
ஏற்றுருளை இயக்கப்பட்டது.

கொஞ்சம் கொஞ்சமாய்ப்
படகில் இருந்தவன் அந்தரம்
போனான்.

அதுவரை எங்கேயோ
பதுங்கியிருந்த காற்று
பாய்ந்து வந்து வீசியது.

ஹெலிகாப்ட்டரையும் அவனையும்
அப்படியும் இப்படியும் ஆட்டி
எடுத்தது.

சக்தியிழந்த தேகம்.
வலுவிழுந்த கைகள். பற்றிக்
கொள்ளும் பலமில்லை.

இன்னொரு சுழல்காற்று
மொத்தமாய் அவன்மீது
மோதியபோது, அவன் தன்னை
மறந்தான். தன் பிடி
தளர்ந்தான். கத்திக்கொண்டே
கடலில் விழுந்தான்.

அய்யோ –
அலறினார்கள்
படகுக்காரர்கள்.

அதிர்ந்து போனார்கள்
ஹெலிகாப்ட்டர்காரர்கள்.

படகில் இருந்த பாண்டி
அவனுக்குப் பக்கத்தில் குதித்து,
அவன் குடுமி பற்றி இழுத்து
அவனைப் படகில் தூக்கிப்
போட்டான்.

ஏறிவாருங்கள். ம்…
ஏறிவாருங்கள்.

ஹெலிகாப்ட்டர் தன் உருளையை
இன்னொருமுறை இறக்கியது.

எவர் ஏறுவது? எப்படி
ஏறுவது?

ஆழி புரட்டும் ஊழிக்காற்றில்
ஒருவர் ஏறிச்செல்லவே
இயலாதபோது, மயங்கிக்
கிடக்கும் இரண்டு உயிர்களைத்
தூக்கிக்கொண்டு எப்படி
ஏறுவது?

ஏற இயலாதவர்கள்
அங்கேயே இருக்கட்டும். ஏற
முடிந்தவர்கள் ஏறி
வாருங்கள்.

அவர்கள் ஒருவரையொருவர்
பார்த்துக் கொண்டார்கள்.

முடியாது. முடியவே
முடியாது. மீண்டால் ஆறுபேரும்
மீள்வோம். மாண்டால்
ஆறுபேரும் மாள்வோம். –
காற்றைக்
கிழித்துக் கொண்டு முன்று
குரல்கள் ஒரே சுதியில்
பேசின.

வீசும் புயல்காற்று,
ஹெலிகாப்ட்டரின்
விலாவறுத்தது.
அதற்குமேல் வானத்தில்
அதனால் நிலைப்பட்டு நிற்க
முடியவில்லை.

அவர்கள் மீது ரொட்டித்
துண்டுகளையும், மருந்துப்
பொட்டலங்களையும்,
மதுப்புட்டிகளையும் எறிந்தது.

பக்கத்துக் கப்பல்களுக்குத்
தகவல் கொடுக்கும் அவசரக்
கண்டுபிடிப்புக்கலன்
ஒன்றையும், கடலுக்குள்
வீசியெறிந்துவிட்டு வந்தவழியே
திரும்பிப் பறந்தது.

பசி. பசி. பசி.

ஒருவாய் அதிகபட்சம் எவ்வளவு
கொள்ளுமோ அதைப்போல
இரண்டு மடங்கு ரொட்டியை
வாயில் திணித்துக்
கொண்டார்கள். பிறகு
ஒருவருக்கொருவர் ஊட்டிக்
கொண்டார்கள்.

மயங்கிக்கிடந்த சலீமையும்
இசக்கியையும் எழுப்பி எழுப்பி
ரொட்டியை அவர்கள் வாயில்
திணித்துத் தண்ணீர்
ஊற்றினார்கள்.

தமிழ். தமிழ். இதோ
ரொட்டி. இதோ மருந்து.
எழு, எழு.

அவள் அசையவில்லை.

அவள் இதயமும் சுவாசமும்
மட்டும் நின்று போகவில்லை.

ஆனால், அவள் சாகவில்லை
என்பதற்கு அதற்குமேல்
அடையாளம் இல்லை.

அவள் வாயில் ஒரு
மாத்திரையைப் பொடிசெய்து
போட்டுத்
தண்ணீர் ஊற்றினான்.

ஆனால், அவன் போட்ட
இடத்தைவிட்டு அது
புறப்படவேயில்லை.

உறைந்துபோன தேகங்களுக்குக்
கொஞ்சம் உஷணம் ஊட்டும்
என்பதற்குத்தான் மதுப்புட்டிகள்
வீசப்பட்டன. ஆனால், அந்தப்
புட்டிகளுக்காக மீனவர்
இருவரும் முட்டிக்
கொண்டார்கள்.

ஆளுக்கு ஒரு புட்டி
அருந்தியதில், சோர்ந்துகிடந்த
அவர்களின் தேகம் துவளத்
தொடங்கியது.

சற்று நேரத்தில் இருவரும்
சுற்றி விழுந்தார்கள்.

நோய் மயக்கத்தில் ஒருத்தி.
பசி மயக்கத்தில் ஒருவன். நீர்
குடித்து ஒருவன். மதுவருந்திய
மயக்கத்தில் இருவர்.
உணர்வோடு இருந்தவன்
கலைவண்ணன் மட்டும்தான்.

படகுக்குள் கடல்நீரின் மட்டம்
உயர்ந்துகொண்டே வந்தது.

வலக்கையில் காதலியை
அணைத்துக் கிடந்தாலும்,
அவனது இடக்கை மட்டும் நீர்
இறைப்பதை நிறுத்தவேயில்லை.

நான் இறைக்கும் ஒவ்வொரு
கை நீரும் மரணத்தை ஒரு
வினாடி தள்ளிப் போடாதா?

இடைவேளை விட்டிருந்த மழை,
தன் இரண்டாம் பாகத்தை
ஆரம்பித்தது.

மழையில் பயங்கரப்
பாடலுக்குப் புயல் ராட்சதப்
பின்னணி இசை வாசிக்க
ஆரம்பித்தது.

நீர்கொண்ட படகு
அங்குலம் அங்குலமாய்
அமிழத் தொடங்கியது.

கலைவண்ணன் – வானம்
பார்த்தான். கடல்
பார்த்தான். மயங்கிக்
கிடக்கும் தோழர்கள்
பார்த்தான். மடியில் கிடக்கும்
மலரைப் பார்த்தான்.

குனிந்தான். அவள் நெற்றியிலும்
கன்னத்திலும் முக்கிலும்
உதட்டிலும் முத்தமிட்டான்.

நிமிர்ந்தான். கண்ணிரண்டும்
கவிழ்ந்தான்.

போய் வருகிறோம் பூமியே,
போய் வருகிறோம். இது
ஒன்றும் கண்ணீரின் வாக்குமுலம்
அன்று. இது என் கடல்
பிரசங்கம்.

இந்த பூமிக்குச் சில
கனவுகளோடு வந்தோம்.
எங்கள் கனவுகளைப்
பரீட்சித்துப் பார்ப்பதற்கு
இந்த பூமியில் அவகாசமில்லை
என்பதனால், கொண்டு வந்த
கனவுகளை மீண்டும்
கொண்டு போகிறோம்.

எங்கள் படகின் முழ்காத
விளிம்பில் முகாமிட்டிருக்கும்
மரணமே. இதோ இந்த
நிமிடத்திலும் நான்
நிறைவாகவே இருக்கிறேன்.

எது பிறப்பு? எது இறப்பு?
-இரண்டிலும் நான்
தெளிவாகவே இருக்கிறேன்.
பிறப்பு என்பது ஐம்பூதங்கள்
கொடுத்த கடன். இறப்பு
என்பது ஐம்பூதங்களின் வசூல்.
நிலம் – நீர் – தீ – வளி –
வெளி என்னும் ஐம்பூதங்களால்
ஆக்கப்பட்ட இந்த உடம்பை,
ஐம்பூதங்களும் மீண்டும்
பிரித்தெடுத்துக் கொள்கின்றன.

எங்கள் பாதம் தாங்கிய
மண்ணே.. நன்றி. எங்களின்
ரத்தமான தண்ணீரே.. நன்றி.
எங்களுக்கு ஒளி கொடுத்த
தீயே.. நன்றி. எங்கள்
உயிரை இயக்கிய காற்றே.
நன்றி. எங்களுக்கு நிலவும்
கதிரும் மழையும் கொடுத்த
ஆகாயமே… நன்றி.

சரிந்து கிடக்கும் தமிழே.
உன்னை என் தோள்களில்
ஏற்றிக் கொள்கிறேன். என்
தலை முழ்காமல், உன் தலை
முழ்கவிடமாட்டேன்

அவன் கண்களை
முடிக்கொண்டான். புறஉலகம்
இருண்டிருந்தது. ஆனால் அவன்
அகஉலகில் ஆயிரம் ஜோதிகளின்
சுடர் தெரிந்தது.

என்ன இது? என்ன நேர்கிறது
எனக்கு? என்ன நேர்கிறது
எங்கள் படகுக்கு?
முழ்கிவிட்டேனா? இல்லையே..
முச்சுவிட முடிகிறதே.

என்ன அதிசயம்?
எங்கள் படகு
எழுகிறதே. ஏதேனும்
திமிங்கிலத்தின் முதுகு வந்து
படகை முட்டுகிறதா?

அவன் கண் திறந்தான்.

அமிழ்ந்த படகு மெல்ல மெல்ல
மேலெழுந்து, தண்ணீர் மட்டம்
தாண்டி அந்தரத்தில் மிதந்தது.

நான் இருக்கிறேனா?
இறந்துவிட்டேனா? இறந்தபிறகும்
கனவு வருமா?

இல்லை. நிஜம் – எல்லாம்
நிஜம்.

பக்கத்தில் நிற்கும்
உதவிக்கப்பலின் ராட்சக்கிரேனின்
கரங்கள், முழ்கிய படகைத்
தண்ணீர்ச் சொட்டச் சொட்டக்
கடலுக்கு மேலே தூக்கிக்
கப்பலில் வைத்துவிட்டது.

மரணத்தின் பிடியிலிருந்த படகு,
வாழ்வின் மடியில் வந்து
விழுந்தது.

கரை…

பொழியும் மழை பொழிந்து
கொண்டேயிருந்தது. நனையும்
மனிதர்கள் நனைந்து
கொண்டேயிருந்தார்கள்.

உறவினர்கள் உயிர் துடிக்க –
மீனவர்கள் காத்திருக்க –
காவல்துறையும் கடலோரக்
காவல்படையும் வெற்றிப்புன்னகை
பூத்திருக்க –
தண்ணீர் தேசத்துக் கைதிகள்
தரை இறங்கினார்கள்.

வெறிகொண்ட கூட்டம்
அவர்களை நோக்கி ஓடிவந்தது.
மயக்கம் தெளிந்து இறங்கிய
மீனவர் நால்வரும், ஓடிவந்த
கூட்டத்தை நோக்கி
ஓடிவரவில்லை.

தடதடவென்று தரையில்
விழுந்தார்கள். மண்ணில்
உருண்டார்கள். புரண்டார்கள்.
அழுதார்கள். அரற்றினார்கள்.

என் தாயே. என் மண்ணே.
என் மாதாவே. என்று
வெறிகொண்டு பூமியை
முத்தமிட்டார்கள்.

பாண்டி, ஒரு பிடி மண்ணை அள்ளி
வாயில் போட்டுக் கரகரவென்று
மென்று தின்றான்.

கீழே விழுந்து புரண்டவர்களை
ஓடிவந்து ஓடிவந்து உறவினர்கள்
தூக்கினார்கள்.

மருத்துவமனை வாசலில் –
கலைவண்ணனைச் சூழ்ந்துகொண்டு
பத்திரிகையாளர்கள்
கேட்டார்கள்.
நீங்கள் மீட்கப்பட்டதற்காக
யாருக்கு நன்றி சொல்வீர்கள் –
அரசாங்கத்துக்கா?
ஆண்டவனுக்கா?

நம்பிக்கைக்கு. – அந்த
ஒற்றைச் சொல் மந்திரத்தை
உச்சரித்துவிட்டுக் கலைவண்ணன்,
தன் காதலியின்
நெற்றிதொட்டான்.

வெப்பம் தணிந்திருந்தது.

இனி –
தமிழுக்கு மரணமில்லை.

Source

Previous articleRead Thanneer Desam Ch 23
Next articleRead Vanji Maanagaram Ch 1

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here