Home Thanneer Desam Read Thanneer Desam Ch 7

Read Thanneer Desam Ch 7

83
0
Read Thanneer Desam free, Thanneer Desam is an story poem written by Vairamuthu. Read Thanneer Desam Ch 7, Download Thanneer Desam, Thanneer Desam PDF, Download Thanneer Desam PDF
Thanneer Desam Ch 7 தண்ணீர் தேசம் அத்தியாயம் 7

Read Thanneer Desam Ch 7

தண்ணீர் தேசம்

அத்தியாயம் 7

Read Thanneer Desam Ch 7

அய்யய்யோ. படகு பழுதா..?
ஓடுமா..? ஓடாதா..?

கரையோடு சேருமா..? – இல்லை
கடலோடு முழ்குமா..?

அப்போதே சொன்னேன்.
உதவாது இந்த உயிர்
விளையாட்டு என்றேன்.

அனுபவம்.. அனுபவம்.. என்றீர்கள்.

கடைசியில் வாழ்வா, சாவா என்ற
அனுபவத்திற்கல்லவா வரவழைத்துவிட்டீர்கள்..?

தீக்குச்சி கொளுத்தி விளையாடும்
குழந்தைகள் முங்கில் காட்டுக்குள் சிக்கிக்
கொண்டது மாதிரி இந்த விளையாட்டுப்
பயணம் வினையாகவல்லவா முடிந்துவிட்டது.
சொல்லுங்கள், சொல்லுங்கள்… இது படகா –
இல்லை நாம் மிதந்து வந்த கல்லறையா..?

கோழிக்கூண்டுக்குள் பாம்பு புகுந்துவிட்டால் –
பக்கவாட்டில் இறக்கையடித்துப் படபடக்கும்
கோழி மாதிரி – அவள் பயந்து நடுங்கிப்
பதறி ஒடுங்கிப் பட்டாசுபாஷை பேசினாள்.

அமைதி. அமைதி. அவசரப்படாதே.
குடியும் முழுகிவிடாது. படகும் முழ்கிவிடாது.
கொஞ்சம் பொறு…

அவளை அமைதிப்படுத்தியவன் நின்ற
படகின்மேல் நில்லாமல் ஓடிக்கொண்டிருந்த
பாண்டியை நிறுத்தி, படகில் என்ன பழுது..?
என்றான்.

எந்திரத்துக்கு எண்ணெய்வரத்து நின்று
விட்டது. எந்திரத்துக்கு வரும் எண்ணெய்க்கு
அழுத்தம் கொடுத்தனுப்பும் டைமிங் பிளேட்
உடைந்துவிட்டது. நல்லவேளை. மாற்றுத்தகடு
இருக்கிறது. மாற்றத் தெரிந்த பரதனும் இருக்கிறான்.
மாற்றிவிடலாம்…

எவ்வளவு நேரமாகும்..?

இரண்டு மணியாகலாம்…

இரண்டு மணி நேரமா –
அல்லது இரவு இரண்டு மணியா..?

  • தமிழ்ரோஜா தடுத்துக் கேட்டாள்.

பயம் வேண்டாம் தாயே. இரண்டு மணி
நேரம்தான்…

அவன் போய்விட்டான்.

மீண்டும் தமிழ்ரோஜா விட்ட இடத்திலிருந்து
புலம்ப ஆரம்பித்தாள்.

முடியாது. இதைப் பழுதுபார்க்க முடியாது.
விடியாது. இதோ, வந்து கொண்டிருக்கும்
இரவு விடியாது. இந்தப் படகு கரைசேர்வது
இருக்கட்டும்… நம் உயிர்போன உடலாவது
கரைசேருமா..? சொல்லுங்கள் கலைவண்ணன்.
சொல்லுங்கள்…

இரு கைகளாலும் அவன் மார்பில் மாறி மாறிக்
குத்தி, அவன் உணர்ச்சி காட்டாததால்
தன் முகத்தையும் அவன் மார்பில் முட்டி முட்டி
அழுதாள்.

அவன் அவளைத் தீண்டாமல் பேசினான்.

இதோ பார். இது மிகை.
வாழ்வைக் கற்பனை செய்.
சாவைக் கற்பனை செய்யாதே…

பூக்கள் காற்றில் உதிர்ந்தால் பூகம்பம்
வந்துவிட்டதென்று புலம்பித் திரியாதே.

உச்சிவானத்தில் நிலா வந்தால் தலையில்
விழுந்துவிடுமோ என்று சந்தேகப்படாதே…

இன்பத்தைக் கற்பனை செய்து பார்.
துன்பத்தை எதார்த்தமாய்ப் பார்.

படகு பழுதானதொரு சின்னஞ்சிறு செய்தி…

உடனே இதுதான் வாழ்வின் கடைசி
இரவென்று கருகிப் போகாதே…

இன்பத்தை இரண்டாய்ப் பார்.
துன்பத்தைப் பாதியாய்ப் பார்…

அவளுக்கு உறுதி ஊட்டும் பாவனையில்
ஒலி குறைந்த தொனியில் அவன் சொல்லச்
சொல்ல, அவள் கண்கள் சொட்டுச் சொட்டாய்த்
தமிழ்ப் பேசின.

கண்ணீர்…
திட உணர்ச்சிகளின் திரவமொழி.

ஏய். என்ன இது..? ஓர் இடைவேளைக்குப்
பிறகு இது கண்ணீரின் இரண்டாம் பாகமா..?

நீ எப்படி இப்படித் தண்டுவடம் இல்லாத
புழுவாய்த் தயாரானாய்..?

நீ கர்ப்பத்தின் சுவர்களை உதைத்து உதைத்து
வெளிவந்த குழந்தையா..? இல்லை –
முட்டையின் ஓடுகளை முட்டாமல் வெளிவந்த
குஞ்சா..?

புராணங்கள் சொல்லும் பெண்களின்
பழைய கலவைகளை விட்டு வெளியே வா…

என்ன கலவை அது என்ற பாவனையில்,
அவள் தன் கண்ணீர்க் கண்களை
உயர்த்திக் கேட்டாள்.

இது கேள். இந்தியப் புராணம் சொல்கிறது.
எல்லாம் படைத்து முடித்த பிரம்மன்,
கடைசியாய்ப் பெண்ணைப் படைக்க
முயன்றபோது தேவையான முலகங்கள்
தீர்ந்திருக்கக் கண்டான்.

யோசித்தான். படைத்து வைத்த ஒவ்வொன்றிலும்
பங்கெடுத்தான்.

நிலாவின் வட்டமுகத்தை – வளர்ந்த கொடியின்
வளைவு நெளிவுகளை – புல்லின் மெல்லிய
அதிர்வுகளை – நாணலின் மென்மையை –
பூக்களின் மலர்ச்சியை – மானின் பார்வையை-
உதயசூரியனின் உற்சாகத்தை – மேகத்தின்
கண்ணீரை – காற்றின் அசைவை – முயலின்
அச்சத்தை – மயிலின் கர்வத்தை – தேனின்
இனிமையை – புலியின் கொடுரத்தை –
நெருப்பின் வெம்மையை – பனியின்
தன்மையை – குயிலின் கூவலை – கொக்கின்
வஞ்சகத்தை – கிளியின் இதயத்தை –
சக்கரவாகத்தின் கற்பை ஒட்டுமொத்தமாய்ச்
சேர்த்துப் பெண் படைத்தானாம் பிரம்மன்.

நான் பெண். சுதந்திரமான பெண். நான்
அச்சப்படுவதற்கும் அழுவதற்கும்கூட எனக்குச்
சுதந்திரமில்லையா..?

அவன் அவள் கண்ணீரைத் தொட்டுக்கொண்டு
சிரித்தான்.

அறியாப்பெண்ணே. அழுகையும் அச்சமும்
தீர்ந்தநிலைதான் சுதந்திரம்.

இதோ பார்… பூமி உருண்டை இன்னொரு
நூற்றாண்டுக்குள் சுற்றப்போகிறது.

பெண் மாறிக் கொண்டிருக்கிறாள்.

தலையணை உறைமாற்ற மட்டுமே
தயாரிக்கப்பட்ட பெண், துப்பாக்கிகளுக்குத்
தோட்டா மாற்றத் தயாராகிவிட்டாள்.

மாறிவிடு. நீயும் மாறிவிடு.

உடைந்த தகடு கழற்றிப் புதிய தகடு
பொருத்தும் முயற்சியில் பரதன்
முனைந்திருக்க – பாண்டியும் இசக்கியும்
சேர்த்து அவனுக்கு ஆறு கரங்களானார்கள்.

நீலவானத்தில் ஜெட்விமானம் விட்டுப்போன
புகை திட்டுத்திட்டாய்த் தெரிவது மாதிரி,
இருள் கவியும் கடல்மீது அங்கங்கே
வெள்ளலைகள்…

இருபத்துமுன்று ஆண்டுகளாய் அவள்
சந்திக்காத ஓர் இரவு அவளைச் சந்திக்க
வந்தபோது – அவள் மெய்யாகவே
மிரண்டு போனாள்.

படமெடுத்துச் சீறும் பாம்பாய் ஓசையோடு
வீசும் வாடைக்காற்று.

விசைப்படகில் வெளிச்சம்விழும்
கடற்பரப்பைத் தவிர சுற்றிக் கறுப்புச்சுவர்
எழுப்பி நிற்கும் இரவு.

வானத்தில் அணைந்து அணைந்து எச்சரிக்கும்
நட்சத்திரங்கள்.

நிலாவைப் பெற்றெடுப்பதற்குப் பிரசவ
வலியில் சிவந்து கொண்டிருக்கும் கிழக்கு.

அலைகளின் தளுக்.. தளுக்.. ஓசைகளில்
தளும்பி ஆடும் படகு.

இவையெல்லாம் அவள் அச்சத்தை மெள்ள
மெள்ள அதிகரித்தன.

அழுது அழுது கண்கள் சிவந்தும் கண்ணீர்
உறைந்தும் போனவள் – இன்னும் எவ்வளவு
நேரமாகும்..? என்றாள் குழந்தையாய்க்
குழைந்து குழைந்து.

இன்னும் ஒரு மணி நேரம் அல்லது
ஒன்றரை மணி நேரம்…

அதுவரை என்ன செய்யலாம்..?

கண்முடித் தியானம் செய்வோம். கவிதை
செய்வோம். நீ அனுமதித்தால் காதலிப்போம்.

விரல் விழுந்துவிட்டால் அழுதுகொண்டிருக்கக்
கூடாது. நகம் வெட்டும் நேரம் மிச்சம் என்று
நினைத்துக்கொள்வோம்.

படகு பழுதானதென்றால் பதறிக்
கொண்டிருக்கக் கூடாது.

கடலில் ஓர் இரவு என்ற கட்டுரைக்குக்
குறிப்பெடுப்போம்…

இப்படி ஒரு தைரியம் உங்களுக்கு எப்படிக்
கிடைத்தது..?

கல்வியோடு வாழ்க்கையைக் கல்யாணம்
செய்தபோது கிடைத்தது.

ஒரு ஜப்பானியக் கவிதை சொல்வேன் –
கேட்டுக் கொள்வாயா..?

சொல்லுங்கள்…
சோதனைகளை அனுபவிக்கப்
பழகிக் கொண்டிருக்கிறேன்.

எரிந்துவிட்டது வீடு
இனி
தெளிவாய்த் தெரியும் நிலா…

  • இந்தக் கவிதையை வாழ்க்கைப்படுத்தக்
    கற்றுக்கொண்டேன்.

தண்ணீரில் எடையிழக்கும் பாரம்போல்
துன்பம் எடையிழந்தது.

தங்கத்தின் துருவல்களைச் சேகரித்தே ஒரு
நகை செய்து விடுவதுபோல், கஷடங்களைச்
சேகரித்தே நாம் கலைசெய்யக் கற்றுக்கொள்ள
வேண்டும்.

கலையின் முதல் எதிரி பசி…
முதல் நண்பனும் அதுதான்.
ஓ. உனக்குப் பசிக்கிறதா..?

அந்த நேரத்தில் அந்தப் படகில் ஒரே
ஓர் ஆறுதல் சலீமின் சமையல் வாசனைதான்.

வாந்தி கண்ட தமிழ்ரோஜா, பகல் முழுவதும்
தேநீர் தவிர எதையும் அருந்தவில்லை.

அவளோடு அவள் பட்டினியைப் பங்கிட்டுக்
கொண்டவனும் அதுவரை எதுவும்
அருந்தவில்லை.

சாப்பிடுங்கள்… எங்களுக்கே பசிக்கிறதே.
உங்களுக்குப் பசிக்காதா..?

சோற்றின் முக்கால்பாகத்தை மீன்குழம்பில்
முழ்கடித்து, தட்டேந்தி நின்றான் சலீம்.

ஆனால், அதில் மீன்துண்டு கிடக்கக் கண்டு,
உயிருள்ள பாம்பைக் கண்டதுபோல் தன்னைப்
பின்னிழுத்துக் கொண்டாள் தமிழ்ரோஜா.

மன்னித்துவிடுங்கள் சலீம். தமிழ் – சைவம்…
என்றான் கலைவண்ணன்.

அப்படியானால் மீன் அசைவமா..?
என்றான் சலீம்.

தயவுசெய்து போய்விடுங்கள். என்னால்
தாங்கமுடியவில்லை… – முகத்தையும் முக்கையும்
முடிக்கொண்டாள் தமிழ்ரோஜா.

வெறும் சோறு… வெறும் ரசம்… தரமுடியுமா
தமிழுக்கு..?

இப்போதே தருகிறேன்… என்ற சலீம்.
ஒரு தட்டைக் கலைவண்ணன் கையில்
தந்தான். மறுதட்டை ஏந்திக்கொண்டான்.
ததும்பும் படகில் தடுமாறாமல் ஓடினான்.

சோற்றில் ரசமுற்றிச் சுடச்சுடக் கொண்டு
வந்தான். தமிழுக்குப் பசித்தது. தட்டை
வாங்கிக் கொண்டாள். உடனே சாப்பிடாமல்
உற்று உற்றுப் பார்த்தாள். தட்டிலிருந்த பிசுக்கு
அவளைப் புசிக்க விடவில்லை.

தூக்கம் வந்தால் தலையணை தேவையில்லை.
பசி வந்தால் சுத்தம் தேவையில்லை.

அவள் பிசுக்கை மறந்தாள். பிசைந்தாள். ரசமே
சோறாய் – சோறே ரசமாய் மாறும் ரசவாதம்
நிகழ்ந்தது.

ஒருவாய் அள்ளி உண்டாள்.

மென்ற சோற்றை விழுங்கவிடாமல் உள்ளே
ஏதோ உறுத்தியது.

சமையலறையில் பாண்டி சலீமைத் திட்டிக்
கொண்டிருந்தான்.

மீன்கரண்டியை ரசத்தில் போடாமல் உனக்குப்
பரிமாறவே தெரியாதா..?

அவ்வளவுதான்.
தமிழ்ரோஜா தன் குடலைத் தவிர,
எல்லாவற்றையும் மொத்தமாய்த் துப்பிவிட்டாள்.

தட்டை வீசியெறிந்தாள்.

அது வங்காள விரிகுடாவில் விழுந்தது.

தயவுசெய்து என்னையும் இந்தக் கடலில்
எறிந்துவிடுங்கள்…

அவள் சத்தத்தில் – அப்போதுதான்
தூங்கப்போன கடல் துடித்து எழுந்தது.

source

Previous articleRead Thanneer Desam Ch 6
Next articleRead Thanneer Desam Ch 8

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here