Home Thanneer Desam Read Thanneer Desam Ch 8

Read Thanneer Desam Ch 8

100
0
Read Thanneer Desam free, Thanneer Desam is an story poem written by Vairamuthu. Read Thanneer Desam Ch 8, Download Thanneer Desam, Thanneer Desam PDF, Download Thanneer Desam PDF
Thanneer Desam Ch 8 தண்ணீர் தேசம் அத்தியாயம் 8

Read Thanneer Desam Ch 8

தண்ணீர் தேசம்

அத்தியாயம் 8

Read Thanneer Desam Ch 8

வாழ்வின் மர்மம்தான்
வாழ்வின் ருசி.

நாளை நேர்வதறியாத சூட்சுமம்தான்
அதன் சுவை.

எதிர்பாராத வெற்றிதான்
மனித மகிழ்ச்சி.

தோல்வியும் எதிர்பாராமல் வருவதால்தான்
மனிதன் அதன் முன்நிமிஷம் வரைக்கும்
முயற்சியில் இருக்கிறான்.

மரணத் தேதி மட்டும் மனிதனுக்குத்
தெரிந்துவிட்டால் மரணம் வருமுன்பே அவன்
மரித்துப் போவான்.

வாழ்க்கையும் ஒருவகையில் கண்ணீரைப்
போலத்தான். இரண்டும் எதிர்பாராமல்
வருவதில்தான் பெருமை.

சரியாகிவிட்டது. டைமிங் பிளேட்
பழுதுபார்த்தாகிவிட்டது…

அவிழ்ந்த லுங்கி தெரியாமல் ஆடிக் குதித்துக்
கத்தினான் சலீம்.

படகுக்குள் அதுவரைக்கும் கோமாவில்
கிடந்த சந்தோஷம் அங்குலம் அங்குலமாய்
அசையத் தொடங்கியது.

கறுத்த முகங்களில் மகிழ்ச்சி நுரைத்தது.

அந்தத் தடித்த இரவுக்கும் வாடைக்
காற்றுக்கும் அந்தச் செய்தி மட்டுமே ஆறுதல்.

மாலையின்றி மேளமின்றிப் பரதனுக்குப்
பாராட்டு விழா.

கலைவண்ணன் ஓடிப்போய் அவன்
கைகுலுக்கினான்.

அதில் –
எண்ணெய்ப் பிசுக்கில் ஊறிய அழுக்கு.

அதனாலென்ன.

உழைக்காதவன் கையில் தங்கமும் அழுக்கு.
உழைப்பவன் கையில் அழுக்கும் தங்கம்.

நாங்கள் படித்தவர்கள்தாம். ஆனால்.
பழுதுபார்க்கப் பயன்படவில்லை எங்கள்
படிப்பு. நீங்கள் படிக்காதவர்தான். ஆனால்
பழுதுபார்த்துக் கொடுத்தது உங்கள் பயிற்சி.
நன்றி பரதன். நன்றி…

தன் அழுக்குக் கையை இழுத்துக்கொண்டு
பரதன் சிரித்தான்.

பிரசவத்தில் முதலில் தலைநீட்டும்
குழந்தையைப் போல – துண்டுமுகம்
காட்டியது தூரத்துநிலா.

சரி. சரி. கரைக்குத் திருப்புங்கள் படகை.
வாடைக்காற்று வாட்டுகிறது. தங்கை தாங்காது.
மீன் விழாவிட்டால் பரவாயில்லை. இவர்களைக்
கரைசேர்த்துத் திரும்பி வருவோம்…

  • பாண்டியின் கரகரப்பான ஆணைகேட்டுச்
    சுறுசுறுப்பான படகு நங்கூரம் களையத்
    தயாரானது.

கலைவண்ணன் முகத்தில் கவலை கப்பியது.

பாண்டி. மீன் விழுந்திருக்குமா..?

விழுந்திருக்காது…

ஏன்..?

படகுதான் நின்றுவிட்டதே… வலை பயணப்பட
வில்லையே.

கண்களைக் கடலுக்கும் காதுகளை அவர்கள்
பேச்சுக்கும் கடன் கொடுத்திருந்தாள்
தமிழ்ரோஜா.

தலைதாழ்த்திப் பேசினான் கலை.

மன்னிக்க வேண்டும். எங்களால்
உங்களுக்கு இன்னல். உங்கள் படகில் துன்பம்
ஜோடியாய்க் குதித்துவிட்டது…

பரவாயில்லை பேனாக்காரரே. திரும்பி
வந்து மீன்பிடித்துக் கொள்கிறோம்…

இருவரும் மெளனமானார்கள். வாடைக்காற்று
மட்டும் வாய்க்கு வந்தபடி பேசிக்கொண்டிருந்தது.

மீன் விழவேண்டுமென்றால் இன்னும்
எவ்வளவு தூரம் போக வேண்டும்..?

எதிர்பாராத குரல்கேட்டு இருவரும்
திரும்பினார்கள்.

  • கேட்டவள் தமிழ்ரோஜா.

இது உண்மைதானா என்று கண்களை
உருட்டி உருட்டிப் பார்த்த பாண்டி –

இன்னும் ஐந்தாறு கிலோமீட்டர் போக
வேண்டியிருக்கும்… என்றான்.

போகலாம்… இவ்வளவு தூரம் வந்துவிட்டோ ம்.
மீன்பிடித்துக்கொண்டே போகலாம். படகை
முன்னோக்கிச் செலுத்துங்கள்…

நிஜந்தானா இது..?
நிலைகுத்தி நின்றான் கலைவண்ணன்.

பேசுவது தமிழா..?. இல்லை,
பெருங்கனவின் குரலா..?.

பகலெல்லாம் உணவு கொள்ளாமல் வண்ணம்
உதிர்ந்து கிடக்கும் என் வசீகரச் சித்திரம்
தோழர்களின் வயிறு வாடக்கூடாதென்று
வாய்திறந்து பேசியதா..?

மற்றவர் நலனுக்காகத் தன் துயர் பொறுக்கும்
தன்னல மறுப்பு இருக்கும் வரைக்கும் காற்றும்
மழையும் பூமியிலிருக்கும். கடல்கள் தங்கள்
கரைதாண்டாதிருக்கும்.

தன் மெளனவிரதத்தைச் சத்தமிட்டு
முடித்துக்கொண்ட விசைப்படகு ஒரு
போர்க்கோபத்தோடு புறப்பட்டது.
கிழக்கே கிளம்பிய நிலாவைத் தொட்டுவிடத்
தன் நீண்ட முக்கை நீட்டியது.

உற்சாகம்தான். படகு முழுக்க ஒரு பரவசம்தான்.

மீன்குழம்பு சாப்பிடுவதே அவர்களுக்கொரு
கலைநிகழ்ச்சிதான்.

கொஞ்சநேரம் தட்டாராய்ச்சி செய்து
கொண்டிருந்த இசக்கி சலித்துக்கொண்டான்.

என்ன சலீம். மீனின் நடுத்துண்டம்
பாண்டிக்கு. வால் பரதனுக்கு. தலை மட்டும்
எனக்கா..?

சாப்பிடுங்கள். அதில்தான் முளை இருக்கிறது.
மீன் தலை சாப்பிட்டால் முளை வளரும்…

அப்படியா. நீ பிறந்ததிலிருந்து மீன் தலையே
சாப்பிட்டதில்லையா..?

பொசுக்கென்று எல்லோரும் சிரித்ததில்
புரையேறிவிட்டது. சத்தங்கேட்டு ஓடிவந்த
தமிழ்ரோஜா தண்ணீர் ஊற்றிக் கொடுத்தாள்.

கலைவண்ணன் அவர்கள் தலை தட்டித் தட்டி,
சிரித்துப் புரையேற்றிய சிரமம் குறைத்தான்.

ஏதோ ஒரு கூச்சம். ஏதோ ஒரு நெகிழ்ச்சி.
அவர்கள் பின்வாங்கினார்கள்.

படித்தவர்கள் தங்களை உபசரிக்கிறார்களே
என்ற பாமரப் பதுங்கல்.

நெளிந்துகொண்டே பரதன் கேட்டான்.
நீங்கள் சாப்பிடவில்லையா..?

சாப்பிடுவோம். இன்று எங்களுக்கு
நிலாச்சோறு… என்றவன், தமிழ்ரோஜாவை
அழைத்துக்கொண்டு படகின் பின்விளிம்பில்
இருள் கவிந்த பிரதேசம் ஏகினான்.

அவள், அவன் மடியில் விழுந்து குறுகிக்
குறுகி ஒரு குட்டியானாள்.
அவன் கங்காருவானான்.

வானத்தில் நிலா. வயிற்றில் பசி.

என்னவோ நிலாச்சோறு என்றீர்களே.

சைவப்பெண்ணே. இன்றுனக்கு நிலாவே
சோறு… நிலாவைத் தின்றுவிடு…

நிலா சைவமா..?

நிச்சயமாய்ச் சைவம்தான்…

எப்படி..?
அங்குதான் உயிர்கள் இல்லையே.

அவள் பசியில் சிரித்தாள். அலைகளோடு
சடுகுடு விளையாடும் நிலவின் கிரணங்களில்
நெஞ்சுகரைந்தவள் –

பெளர்ணமி பார்த்தால் கடல் பொங்குகிறதே.
அது ஏன்..? என்றாள்.

பிரிந்துபோன மகளைப் பார்த்தால் பெற்ற தாய்
பொங்கமாட்டாளா..?

யார் மகள்..? யார் தாய்..?

கடல் – தாய்… நிலா – மகள்…

எனக்கு இந்தக் காதுக்குப் பூ வைக்கும்
கவிதைகள் பிடிப்பதில்லை…

நான் சொல்வது கவிதையல்ல. விஞ்ஞானம்.
பூமியிலிருந்து தூக்கியெறியப்பட்ட துண்டுதான்
நிலா என்று ஒரு விஞ்ஞான முடிவு உண்டு…

எப்படி..?

பூமி தோன்றி அதன் எரிமலைக் குழம்புகள்
ஆறத்தொடங்கிய அந்த ஆதிநாளில் – சூரிய
ஏற்றவற்றத்தால் ஐந்நூறு ஆண்டுகள் வளர்ந்த
ஒரு பேரலை பூமியிலிருந்து பிய்ந்து
விண்வெளியில் வீசப்பட்டது. சில பெளதிக
விதிகளுக்குட்பட்டுத் தூக்கியெறியப்பட்ட
துண்டு ஒரு சொந்தப் பாதை போட்டுச் சுற்ற
ஆரம்பித்தது. அதுதான் நிலா…

ஆச்சரியம். ஆனால் – ஆதாரம்..?

இன்னும் பசிபிக் கடலில் அந்தப்
பள்ளமிருக்கிறது. அந்தப் பள்ளத்திலிருக்கும்
பசால்ட் என்னும் எரிமலைக் குழம்புப்
பாறையும், நிலாப் பாறையும் ஒரே ஜாதி
என்ற உண்மை உணர்த்தப்பட்டிருக்கிறது.
நிலாவை ஈன்று கொடுத்த பசிபிக்
சமுத்திரத்தின் கர்ப்பப்பை இப்போதும்
காலியாயிருக்கிறது…

அவ்வளவு பெரிய பள்ளமா..?

பள்ளம். பெரும்பள்ளம். எவரெஸட்டை
வெட்டி உள்ளே போட்டாலும் இன்னும்
மிச்சமிருக்கும்…

கடலுக்குள் ஏன் மலையை வெட்டிப்
போட வேண்டும். கடலுக்குள் ஏற்கெனவே
மலைகள் இல்லையா..?

இருக்கின்றன…

அடையாளங்கள்..?

தீவுகள்…

தீவுகளுக்கும் மலைகளுக்கும் என்ன
சம்பந்தம்..?

கடலுக்குள் முழ்கிய மலைகளின் முழ்காத
உச்சிகளே தீவுகள்…

அப்படியா..?

அப்படித்தான்… மத்திய பசிபிக்கின்
குறுக்கே இரண்டாயிரம் மைல் நீளமுள்ள
மலைமுகட்டின் கடல் கொள்ள முடியாத
சிகரங்களே ஹவாய்த் தீவுகள். இந்துமகா
சமுத்திரத்தில் இந்தியாவிலிருந்து அண்டார்டிகா
வரை ஒரு மலைத்தொடர் போகிறது. அந்த
மலைத்தொடரில் முழ்காத உச்சிகளே மடகாஸகர் –
இலங்கை – மாலத்தீவுகள் – லட்சத்தீவுகள்…

அவள் இரண்டு கண்களிலும் ஆச்சரிய நிலாக்கள்
அடித்தன. உள்ளிருந்து ஒரு பாட்டுச் சத்தம்.

என்னென்னமோ ஆகிப்போச்சு ஐலசா – ஓடம்
எந்திரத்தில் ஏறிப்போச்சு ஐலசா…
ஒங்களத்தான் கரைசேத்தோம் ஐலசா – அட
எங்க கரை எப்ப வரும் ஐலசா…

ஒவ்வொரு வரியையும் வெவ்வேறு சுதியில்
சமையலறையிலிருந்து சலீம் பாடினான்.

மீன்களுக்கு மட்டும் காது கேட்குமானால்
அவன் அறுப்பதற்கு முன்பே மரித்திருக்கும்.

சலீம்தானே பாடுவது..? என்றாள் தமிழ்.

கழுத்தளவு நீரில் நிற்பவனுக்கே சங்கீதம்
வருமென்றால், கடல்நீரில் நிற்பவனுக்குச்
சங்கீதம் வராதா..?

அவன் விதித்ததே சுதி. அவன் வகுத்ததே
மெட்டு. ஆனால், இப்போது அவனது
சந்தோஷத்தின் உயரத்தை எந்தச் சங்கீத
வித்வானும் தொட்டுவிட முடியாது…

சமையல்கட்டில் ஒரு சுண்டெலி வந்து மாட்டிக்
கொண்டது.

மிளகாய்த்தூள், கடுகுபுட்டிகளுக்குப் பின்னே
இடுக்குகளில் வளைந்து வளைந்தோடி அது
வால்காட்டியது.

சலீம் அந்தச் சுண்டெலியை விரட்டியும்
மிரட்டியும் பார்த்தான்.

ஆனால், அது எலிமொழி பேசிக்கொண்டு
அங்கேயே சுற்றிச்சுற்றி வந்தது.

ஏய். எங்களுக்குத் தெரியாமல் எங்கள்
படகில் ஏறிக்கொண்டு வக்கணை வேறு
காட்டுகிறாயா..? ஓடிப்போ. ஓடிப்போ. என்று
அவன் செல்லமாய் விரட்ட, அது அவன்
தலைமேல் ஒரு எட்டு வைத்துத் தாவி,
அவன் பார்வை தொடமுடியாத இடத்தில்
போய்ப் பதுங்கிக்கொண்டது.

நான் சுறாமீனுக்கே பயப்படாதவன்.
சுண்டெலிக்கா பயப்படப் போகிறேன்..?
என்று தன் வீரத்தைத் தனிமையில்
பிரகடனம் செய்துகொண்டான் சலீம்.

நிலா வெளிச்சத்தில் கடல்குளிக்கும் அந்த
வெள்ளை இரவில் – அலைகளின் மேலே
துள்ளித் துள்ளி விளையாடின ஜெல்லி மீன்கள்.

சில நேரங்களில் அலை எது, மீன் எது
என்ற வித்தியாசம் விளங்கிக்கொள்ள வெளிச்சம்
போதவில்லை.

கலைவண்ணன் மடியில் கிடந்துகொண்டே
அந்த மங்கலான காட்சிகளில் மனது கரைந்து
கொண்டிருந்தாள் தமிழ்ரோஜா.

கடல்நோய் கொண்ட கண்மணி. கடல்
உனக்கும் பிடித்துவிட்டதா..? இன்னும் கொஞ்சம்
கடல் விஞ்ஞானம் சொன்னால் காது கொடுப்பாயா..?

வேண்டாம்… எனக்கிந்த இரவுபோதும். கடல்
அலைகளைக் கிச்சுக்கிச்சு முட்டிச்
சிரிக்கவைக்கும் கிரணங்கள் போதும்.
தண்ணீரிடம் சுதந்திரம் கேட்கும்
ஜெல்லிமீன்களின் துள்ளல் போதும். இது
என் கண்ணுக்குத் தெரிந்த நிஜம்.
இதற்குமேல் இதில் விஞ்ஞானம் பார்த்து, என்
முளையில் நான் முள் குத்திக்கொள்ள மாட்டேன்…

நீ தமிழச்சி. தலைமுறை தலைமுறையாய்த்
தமிழன் செய்த தவறைத் தமிழச்சி நீயும்
செய்கிறாய்.

தெரிந்த பூமியைப் பார்க்க மறந்ததும் –
தெரியாத கடவுளைத் தேடி அலைந்ததும்
தான் தமிழன் செய்த தவறு. பசித்தவன்
காதில் வேதாந்தம் ஓதக்கூடாது
என்பார்கள். வேதாந்தம் மட்டுமல்ல.
விஞ்ஞானமும் ஓதக்கூடாது…

சலீம் வந்து தனிமை கலைத்தான்.

கையில் இரண்டு தட்டுகள் ஏந்தியிருந்தான்.

இதோ. சுத்தமான பாத்திரத்தில் வடித்த
சோறு. சாப்பிடுங்கள்… நீங்கள் பட்டினி
கிடந்தால் எங்களுக்குச் செரிக்காது…

அவன் நீட்டியது பள்ளமும் குழியும்
நிறைந்த அலுமினியத் தட்டுதான். ஆனால்
ஒவ்வொரு பள்ளத்தையும் அவன் தன்
பாசத்தால் நிரப்பியிருந்தான்.

தட்டாமல் வாங்கினர் தட்டை.

அவள் முதலில் பிசைந்தாள். பசி
இப்போது சுத்தம் பார்க்கவில்லை.
உருட்டி உருட்டி ஒரு வாய் உண்டாள்.

மென்றால் ருசி தெரிந்துவிடுமோ என்று
மெல்லாமல் விழுங்கினாள்.

அவள் உண்ணும் அழகுபார்த்து அவன்
உண்ணத் தொடங்கியபோது, விரைந்து சென்ற
விசைப்படகு நிலைகொள்ளாமல் ஆடி
நின்றுவிட்டது.

என்ன… ஏனிந்த நிறுத்தம்..? ஒருவேளை
கரைக்குத் திருப்பச் சொல்லிக் கட்டளையா..?

அங்கே நிலவிய ஒரு நீளமான
குழப்பத்துக்குப் பிறகு பதட்டத்தோடு வந்து
பாண்டி ஒரு சேதி சொன்னான்.

சேதியா அது..?

மேலே மேகம் இல்லை.
மின்னலும் மழையும் இல்லை.

ஆனால் –

இடிமட்டும் காதில் வந்து இறங்கியது.

Source

Previous articleRead Thanneer Desam Ch 7
Next articleRead Thanneer Desam Ch 9

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here