Home Na Parthasarathy Read Vanji Maanagaram Ch 1

Read Vanji Maanagaram Ch 1

110
0
Read Vanji maanagaram Free, Vanji maanagaram is a historical novel. ands its about Chera Kings. Download Vanji Maanagaram Free, vanji maanagaram pdf
Vanjimanagaram Ch 1 வஞ்சிமாநகரம் அத்தியாயம் 1: மகோதைக் கரையிலே

Read Vanji Maanagaram Ch 1

வஞ்சிமாநகரம்

அத்தியாயம் 1: மகோதைக் கரையிலே

Read Vanji Maanagaram Ch 1

பூர்ணவாகினி என்று சிறப்பித்துச் சொல்லப்படும் பொன்வானியாறு கடலொடு கலக்குமிடம், அன்று அந்த முன்னிரவு வேளையில் அழகு மிகுந்து தோன்றியது. பெளர்ணமிக்கு மறுநாளாகையினால் சிறிது காலந்தாழ்ந்து உதித்தாலும் நிலாவின் பொலிவு அந்த இடத்தின் பொலிவுக்கு மெருகு ஊட்டியது. பொன்வானியாற்றின் செந்நிற நீரும் மகோதைக் கடலின் நீல அலைகளும் கலக்குமிடம் ஆண்மையும், பெண்மையுமாகிய குணங்களே சந்தித்துக் கலப்பது போல் வனப்பு நிறைந்ததாயிருந்தது. கடலை ஆண்மையாகவும், நதியைப் பெண்மையாகவும் கற்பனை செய்யும் எண்ணத்தைக் கூட அந்தச் சங்கமத்துறையே படைத்துக் கொடுத்தது.

அடர்ந்த மரக்கூட்டங்களுக்கு அப்பால் பொன்வானியாற்றின் கரையோரமாகவே சென்றால் சேரநாட்டின் வீரத் தலைநகரமாகிய கொடுங்கோளுரை அடைந்து விடலாம். கரையோரமாகத் தென்மேற்கே பத்து நாழிகைப் பயணத்தில் வஞ்சிமாநகரம் இருந்தது. கொடுங்கோளுரை ஒட்டிக் கடலோரமாகவே இருந்த முசிறியில் இரண்டு மூன்று நாட்களாகப் பரபரப்பூட்டும் பயங்கரச் செய்தியொன்று பரவிப் பொது மக்களைப் பயமுறுத்திக் கொண்டிருந்தது. மேற்குக் கடலின் கொடிய கொள்ளைக்காரனாகிய கடம்பர் குறுநில மன்னன் ஆந்தைக் கண்ணன் முசிறியைக் கொள்ளையிடப் போகிறான் என்ற செய்திதான் காட்டுத் தீ போலப் பரவிக் கொண்டிருந்தது. பெரு மன்னராகிய கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவ வேந்தர் ஊரிலிருந்தால் கவலை இல்லை. அவரும் பெரும் படைகளோடு இமயத்திற்கும் குயிலாலுவத்திற்கும் சென்றிருந்தார். கொடுங்கோளூர்ப் படைக்கோட்டத்தில் கூட அதிகமான படைவீரர்கள் இல்லை. முசிறியிலிருந்த போர்க்கலங்களையும், கடற்படையையும் கொண்டு ஆந்தைக் கண்ணனை எதிர்க்க முடியுமா என்பதும் தெரியவில்லை. மகோதைக் கரையின் இருபது காத துரமும் இதைப் பற்றியே பேச்சாக இருந்தது. கொடுங்கோளுர்க் கோட்டையின் நாற்பக்கத்து வாயில்களையும் கூட அடைத்துவிட்டார்கள். பாதுகாப்பு ஏற்பாடுகள் விரைவாக்கப்பட்டன. குணவாயிற் கோட்டத்து அரசு துறந்திருந்த இளைய சேரர் இளங்கோ அடிகள் அரச காரியங்களில் ஆலோசனை கூறும் வழக்கமின்மையால் அவரையும் அணுகிக் கேட்க முடியாமலிருந்தது.

கொடுங்கோளுர்க் கோட்டைப் பாதுகாப்புப் படைத் தலைவன் குமரன் நம்பிக்கு நிலைமையை எப்படி எதிர் கொள்வதென்ற சிந்தனை எழுந்தது. மகோதைக் கரையின் இருபது காததுரத்தில் பேரியாறு பொன்வானி, அயிரை போன்ற பல நதிமுகத்துவாரங்கள் அங்கங்கே இருந்ததனால் ஒவ்வொரு முகத்துவாரத்திற்கும் பாதுகாப்பு அவசியமென்று தோன்றியது. முகத்துவாரங்களின் வழியாகக் கொள்ளைக்காரர்களின் படகுகளோ, கப்பல்களோ உள்ளே புக முடியுமானால் குட்ட நாட்டு நகரங்கள் எல்லாவற்றையுமே சூறையாடிவிட முடியும். பொன்னும் மணியும், முத்தும் பவளமும் நிறைந்த மகோதைக்கரை நகரங்களின் கதி என்ன ஆகுமோ என்ற பீதி எங்கும் பரவத் தொடங்கியிருந்தது.

சேனைத்தலைவனும் பெரும்படைநாயகனும் ஆகிய வில்லவன் கோதை மாமன்னரோடு வடதிசைப் படையெடுப்பிற்குச் சென்றிருந்தான். வஞ்சிமாநகரத்தின் அரண்மனையான கனக மாளிகைக் கோட்டத்தில் அமைச்சர் அழும்பில்வேள் மட்டுமே இருந்தார். செய்தி கனக மாளிகையை எட்டுவதற்கும் அதிகநேரம் ஆகவில்லை. ஆந்தைக் கண்ணன் மகோதைக் கரைநகரங்களைக் கொள்ளையிட இருக்கிறானென்ற செய்தி – மெய்யாயிருந்தாலும் பொய்யாகவே பரப்பப்பட்டிருந்தாலும் அமைச்சர் அழும்பில்வேள் அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கவனிக்க வேண்டியவராய் இருந்தார். கொடுங்கோளுர்க் குமரனை உடனே தலைநகருக்கு அழைத்து வருமாறு தம்முடைய அந்தரங்க ஒற்றர்களாகிய வலியனையும் பூழியனையும் அனுப்பி வைத்தார் அழும்பில்வேள். கொடுங்கோளூர் படைக்கோட்டத் தலைவனாகிய குமரன் இளம்பருவத்தினன் – போர் முறைகளிலும் எதிரிகளை முறியடிக்கும் தந்திரங்களிலும் வில்லவன் கோதையைப்போல அவ்வளவு வல்லவன் இல்லை என்றாலும் பேரழகன். குமரனுடைய கம்பீரமே தனி மீசை அரும்பத் தொடங்கும் பருவத்து இளைஞர்களின் மேல் அழும்பில்வேளுக்கு அவ்வளவாக நம்பிக்கை கிடையாது. முதுமையையும் அரசதந்திர நெறிகளையுமே பெரிதாக மதிக்கிறவர் அவர். என்றாலும் இப்போது கொடுங்கோளுர்க் குமரன் என்ற மீசை அரும்பும் பருவத்து இளைஞனைக் கொண்டுதான் தம் காரியங்களைச் சாதித்துக்கொள்ள வேண்டியிருந்தது அவருக்கு. எதைக் கொண்டு எந்தக் காரியத்தை எப்போது சாதிக்கலாமோ அதைக்கொண்டு அந்தக் காரியத்தை அப்போது சாதிக்க வேண்டும் என்பது அழும்பில்வேளின் முடிவு. சிறிய கருவிகளைக் கொண்டும் பெரிய காரியங்களைச் சாதிக்கலாம். பெரிய கருவிகளைக் கொண்டுதான் பெரிய காரியங்களைச் சாதிக்க வேண்டுமென்பதில்லை. எப்படிச் சாதித்துக் கொள்கிறோம் என்பதுதான் முக்கியம் – என்று கவனிக்கிறவர் அவர் எதனால் சாதிக்கிறோம் என்ற காரணமோ, காரியம் நிறைவேறியபின் பயனற்றதானாலும் ஆகிவிடலாம் என்றும் பல சமயங்களில் அவர் கூறுவதுண்டு. அரச தந்திரச் சிந்தனைகளில் சேரநாடு முழுவதும் தேடினாலும் அழும்பில்வேளுக்கு இணையானவர்கள் கிடையாது என்று முடிவாகி யிருந்தது. அத்தகைய அரசியல் வல்லவர் பேரரசரும் பெரும்படைத் தலைவரும் ஊரிலில்லாத இச்சமயத்தில் கொடுங்கோளுர்க் குமரனை அழைத்துவரப் பணித்திருந்தார் என்றால் அதில் ஏதோ அந்தரங்கம் இருக்க வேண்டுமென்றே தோன்றியது. மகோதைக் கரையில் கொடுங்கோளுரிலிருந்து ஆடகமாடம் வரையில் கடற் கொள்ளைக் காரர்களையும் அவர்கள் தலைவனான ஆந்தைக் கண்ணனையும் பற்றிய பயம் நிறைந்திருக்கிற சமயத்தில் அதற்குத்தக்க தீர்திறனாகக் கொடுங்கோளுர்க் குமரனை அழும்பில்வேள் தேர்ந்தெடுப்பார் என்பது பலர் எதிர்பாராத ஒன்று. வேளாவிக்கோ மாளிகையிலும், கனகமாளிகைச் சுற்றுப் புறங்களிலும் வஞ்சிமாநகர அரச கரும வட்டங்களிலும் இச் செய்தி வியப்பையே அளித்தது.

மகோதைக் கரை என்று அழைக்கப்பட்டுவந்த மேற்குக் கடற்கரை நகரங்களும், சிற்றுார்களும் பேரூர்களும் எக்காலத்திலும் – கடற்கொள்ளைக்காரர்களாகிய கடம்பர்கள் குறும்பர்கள் தொல்லையை அறிந்திருப்பினும் பேரரசர் தலைநகரில் இல்லாத காலமென்ற காரணத்தில் எங்கும் பரபரப்பு அதிகமாயிருந்தது. நதிகளின் முகத்துவாரங்களிலும் கரையோரத்துக் கடற்பகுதிகளிலும் அதிகமான படகுகளும் மரக்கலங்களும், நாவாய்களும் போக்குவரவு இருக்கும். இப்போது சில நாட்களாக அந்தக் கலகலப்பான கடற்பகுதிகளும் முகத்துவாரங்களும் எதையோ எதிர்ப்பார்த்துச் சூழ்ந்துவிட்ட பயங்கரத்துடனும், தனிமையுடனும் காட்சியளித்தன. வெறிச்சோடிப் போயிருந்த கடற்கரைப் பகுதிகளும், முகத்துவாரப் பகுதிகளும் பார்ப்பதற்கு என்னவோ போலிருந்தன.

அமைச்சர் அழும்பில்வேளின் ஆணைபெற்றுக் கொடுங்கோளுர்க் குமரனை அழைத்து வருவதற்காகச் சென்ற வலியனும் பூழியனும் கடற்கரைப் பகுதிகளிலும் முகத்துவாரங்களிலும் ஏற்பட்டிருந்த இந்த மாறுதல்களை எல்லாம் கவனித்தார்கள். வஞ்சிமாநகரையும் கொடுங்கோளுரையும் இணைத்த சாலை மிகவும் அழகானது. இருமருங்கிலும் அடர்ந்து செறிந்த பசுமையான மரங்கள் அணிவகுத்தாற்போல் அழகுற அமைந்திருந்தன. வலியனுக்கும் பூழியனுக்கும் அத்தகைய சாலையில் குதிரையில் செல்வதே சுகமாக இருந்தது. ஆயினும் எங்கும் நிலவிய சூழ்நிலை மட்டும் மனநிறைவு தருவதாக இல்லை. யானைப்பாகர் சிலர் மட்டும் தங்களுடைய முகபடாமணிந்த யானைகளோடு சாலையில் குறுக்கிட்டார்கள். நீண்ட கொம்புகளோடு முகபடாம் அணிந்த யானைகள் தங்களுடைய மணிகள் அளவாக விட்டு விட்டு ஒலிக்கும்படி சாலையில் செல்வதே கம்பீரமாகவும் கவர்ச்சியாகவும் இருந்தது. வலியனும் பூழியனும் புரவிகளில் பயணம் செய்தார்கள். பயணத்தின்போது இருவரும் பல செய்திகளைப் பேசிக்கொண்டே பயணம் செய்தார்கள்.

“கொடுமை மிகுந்த கொள்ளைக்கூட்டத் தலைவனாகிய ஆந்தைக்கண்ணனையும் அவன் ஆட்களையும் வெல்வதற்குக் கொடுங்கோளுர்க் குமரனின் சாமர்த்தியமே போதுமென்று நம்புகிறாயா நீ?”- என்று பூழியனைக் கேட்டான் வலியன்.

“கொடுங்கோளுர்க் குமரன் – இதுவரை – பெண்களின் புன்னகையைத் தவிர வேறெதையும் வெற்றிக்கொண்டு பழக்கப்படவில்லை” என்று மறுமொழி கூறினான் பூழியன்.

“ஆனாலும் எல்லாம் தெரிந்தவராகிய அமைச்சர் பெருமானே நம் குமரனை எதிர்பார்க்கிறார் என்றால் அதில் ஏதோ சிறப்பிருக்க வேண்டுமென்று தோன்றுகிறது.”

“அப்படியும் இருக்கலாம். ஆனால் பெரும் படைத் தலைவரும், பேரரசரும் வடதிசைப் படையெடுப்பு மேற்கொண்டு சென்றிருக்கிற இச்சமயத்தில் கொடுங்கோளுர்க் குமரனையும் விட்டால் வேறு யார்தான் இங்கு இருக்கிறார்கள்?”

“அதற்குச் சொல்லவில்லை ! பொதுவாக நம் அமைச்சர் பெருமானுக்கு விடலைப் பருவத்து இளைஞர்கள் மேல் அதிகமாக நம்பிக்கைகள் கிடையாது.”

“எல்லாச் சமயத்திலும் எல்லோரையுமே நம்பாமல் இருந்துவிட முடியாது அல்லவா? அப்புறம் ஆந்தைக்கண்ணன் பாடு கொண்டாட்டமாகி விடுமே?”

பேசிக் கொண்டே கொடுங்கோளுர்ச் சாலையில் விரைந்தார்கள் அமைச்சரின் அந்தரங்கத் துரதர்கள். அவர்கள் கொடுங்கோளுரை நெருங்கிக் கொண்டிருந்தபோது ஊர் அமைதியடைந்திருந்தது. இயல்பாகவே அமைதியடைகிற நேரமென்று சொல்லிவிடுவதற்கும் இல்லை. மகோதைக்கரை நெடுகிலும் பரவியிருந்த ஆந்தைக்கண்ணன் பயம் கொடுங்கோளுரில் மட்டும் குறைந்துவிடுமா என்ன? கொடுங்கோளுர்க் கோட்டை வாயில்கள் அவர்கள் சென்ற வேளையில் அடைக்கப்பட்டிருந்தன. மேற்குப் பக்கமாக இருந்த பெருங்கதவுகளிலே மட்டும் திட்டிவாசல் சிறிதளவு திறந்திருந்தது. உள்ளே போய்த் தெரிந்துகொள்ள வேண்டிய அவசியமில்லாமல் வாயிலிலேயே உண்மை தெரிந்தது. கொடுங்கோளுர்க் குமரன் படைக் கோட்டத்திலுள்ளே இல்லையென்று வலியனுக்கும் பூழியனுக்கும் தகவல் அறிவிக்கப்பட்டது. என்ன செய்வதென்று இருவரும் திகைத்தனர். நிலைமையோ அவசரமாக இருந்தது.

Source

Previous articleRead Thanneer Desam Ch 24
Next articleRead Vanji Maanagaram Ch 2

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here