Home Na Parthasarathy Read Vanji Maanagaram Ch 10

Read Vanji Maanagaram Ch 10

109
0
Read Vanji maanagaram Ch 10 Free, Vanji maanagaram is a historical novel. Vanji Maanagaram Ch 10. Download Vanji Maanagaram Free, vanji maanagaram pdf
Vanjimanagaram Ch 10 வஞ்சிமாநகரம் அத்தியாயம் 10: ஒரே ஒர் இரவு

Read Vanji Maanagaram Ch 10

வஞ்சிமாநகரம்

அத்தியாயம் 10: ஒரே ஒர் இரவு

Read Vanji Maanagaram Ch 10

கடம்பர்களிடமிருந்து எப்படித் தப்புவது என்ற சிந்தனை குமரன் நம்பியை வாட்டியது. காலமும் அதிகமில்லை. ஒரு பகலும் ஓர் இரவுமே மீதமிருந்தன. என்ன செய்வது எப்படித் தப்புவது என்ற சிந்தனைக்கு விடையாக ஓர் உபாயமும் தோன்றவில்லை. அடுத்த நாள் இரவில் கொடுங்கோளூரைச் சூறையாடிக் கப்பல்களில் வாரிக் கொண்டு போவதற்கான ஏற்பாடுகள் தங்களைச் சூழ நடந்து கொண்டிருப்பதை அவர்களே அங்கு கண்டார்கள். பல முறை சேர மாமன்னர் செங்குட்டுவரிடம் தோற்ற தோல்விகளுக்கெல்லாம் பழி வாங்குவது போல் இம்முறை அறவே கொள்ளையடித்துக் கொண்டு போகும் எண்ணத்துடன் ஆந்தைக் கண்ணன் ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருப்பது யாவருக்கும் புரிந்தது.

குமரன் நம்பிக்கோ சிறைபட்ட வேதனையைப்போலவே பிறிதோர் வேதனையும் உள்ளத்தை வாட்டிக் கொண்டிருந்தது.

‘இந்தக் கப்பல்களில் ஏதோ ஒன்றில் அமுத வல்லி சிறைப்பட்டிருந்தும் அவள் எங்கே எப்படிச் சிறைப்பட்டிருக்கிறாள்? அவளை எவ்வாறு விடுவிப்பது?’ என்ற கவலைகள் அவனை வாட்டின. நகரத்தையும் நாட்டையும் காப்பாற்ற வேண்டிய கவலைகள் ஒரு பக்கம் என்றால் இதயத்தைக் கவர்ந்தவளைத் தேடிக் கண்டுபிடித்துக் காப்பாற்ற வேண்டிய கவலைகள் மற்றொரு பக்கம் சூழ்ந்தன. கடம்பர்களின் கட்டுக்காவலோ மிக அதிகமாகவும் கடுமையாகவும் இருந்தன. தப்புவதற்கான வழிகள் அரிதாயிருந்தன.

பகலில் அவர்களுக்கு முறையாக உணவு கூட வழங்கப்படவில்லை. நாற்றிசையும் கடல் நீரைத் தவிர உதவிக்கு வருவார் யாரும் தென்படாத நிலையில் இரவை எதிர்பார்த்து நம்பிக்கையோடு இருந்தான் குமரன் நம்பி. அவனுடைய பயமெல்லாம் அமைச்சர் அழும்பிள்வேள் தன்னைப் பக்குவ மடையாத விடலைப்பிள்ளை என்று கூறும்படி வாய்ப்பளித்து விடலாகாதே என்பதுதான்.

அவர்கள் கொடுங்கோளுரில் இருந்து கொண்டு வந்திருந்த படகுகளை எல்லாம் ஆந்தைக்கண்ணன் கைப்பற்றிக் கொண்டதோடு மட்டும் அன்றிப் படகோட்டிகளையும் சிறை படுத்திவிட்டான். குமரன் நம்பி முதலிய வீரர்களை ஒரு மரக் கலத்திலும், இவர்களுக்குப் படகோட்டி வந்தவர்களை வேறொரு மரக்கலத்திலுமாகப் பிரித்துப் பிரித்துச் சிறை வைத்திருந்ததனால் ஒருவரோடொருவர் சந்திக்கவும் வாய்ப்பின்றி இருந்தது.

நேரம் ஆகஆகத் தப்பிக்கவும்-திரும்பவும் முடியுமென்ற நம்பிக்கை குறைந்துகொண்டே வந்தது. கதிரவன் மறைகின்ற நேரமும் நெருங்கியது. கடம்பர்களின் கொள்ளை மரக் கலங்களில் மறுநாள் கொடுங்கோளூர் நகரைக் கொள்ளையிடுவதற்கான ஏற்பாடுகள் தீவரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தன. எல்லோரும் தப்ப முடியாவிட்டாலும் யாராவது ஒரிருவர் தப்பினாலும் போதும் என்ற குறைந்த நம்பிக்கையையும் நிறைவேற்றிக் கொள்ள வழி தெரியவில்லை அவர்களுக்கு. எதைச் செய்வதாயிருந்தாலும் அந்த இரவுக்குள் செய்து முடித்துவிடவேண்டும். முன்னெச்சரிக்கையாக நகருக்குள் ஒருவர் செல்ல முடிந்தாலும் பொன்வானி முகத்துவாரக் காவல் படையையும், மகோதைக்கரை கடற் படையையும் கட்டுப்பாடாக எதிர் நிறுத்திக் கடம்பர்களை முறியடிக்கலாம் என்று குமரன் நம்பிக்குத் தோன்றியது. ஆனால் வழிதான் பிறக்கவில்லை. முன்னிரவும் வந்தது. மறுபடி ஆந்தைக்கண்ணன் கோரமான ஏளனச்சிரிப்புடன் அவர்கள் முன் வந்தான்.

“உங்களில் சிலர் உயிர் பிழைக்கலாம்! ஆனால் அதற்கும் நிபந்தனை உண்டு. பொன்வானியாற்றின் முகத்துவாரத்திற்குள் நுழைவதற்கும்-நகரில் செல்வங்களைக் கொள்ளையிடுவதற்கும் எங்களுக்கு வழிகாட்டியுதவுகிறவர்களுக்கு – நாங்கள் உயிர்ப் பிச்சையும் கொள்ளையில் சிறிது பங்கும் தரலாம். ஆனால் அப்படி எங்களை நம்ப வைத்து நடித்துவிட்டு நடுவிலே காலை வாரிவிடுகிறவர்களைச் சித்திரவதை செய்வதற்கும் தயங்க மாட்டோம்” என்று கூறினான் அவன்.

அவனுடைய அந்தப் பேச்சைக் கேட்டு ஒருவர் முகத்திலாவது மலர்ச்சி ஏற்படவில்லை. மாறாக வெறுப்புடன் ஏறிட்டுப் பார்த்தார்கள் அவர்கள். ஆனால் இதென்ன?

அவர்கள் கண் காணவே முற்றிலும் எதிர்பாராத இடத்திலிருந்து ஆந்தைக்கண்ணனுக்கு வரவேற்புக் கிடைத்தது. அந்த வரவேற்பை அளித்தவன் தலைவனே ஆயினும் அவனை ஒரு புழுவைப் பார்ப்பதுபோல் துச்சமாகவும், ஆத்திரமாகவும் உறுத்துப் பார்த்தார்கள் மற்ற வீரர்கள். அவர்கள் மனங்கள் குமுறின.

ஆம்! கொடுங்கோளுர்ப்படைக்கோட்டத்துத் தலைவனாகிய குமரன் நம்பிதான், அந்தக் கொடுந் துரோகத்தைப் புரியவும் ஆந்தைக்கண்ணனுக்கு நகரைக் கொள்ளையிடுவதில் உதவி புரியவும் முன்வருவதுபோல் முகமலர்ந்திருந்தான்.

“ஒருவனுடைய உதவியை நாடும்போது கைகளைப் பிணித்துச் சிறைவைத்துக்கொண்டு நாடுவது உங்களுக்கே நன்றாயிருக்கிறதா? ஒருவேளை நீங்கள் பிணித்திருக்கிற கைகளினால் உங்களுக்கே உதவி வேண்டுமானால் அப்படிச் செய்வது அழகாயிராதே?” என்று குமரன்நம்பி புன்முறுவலோடு தானாகவே வலுவில் ஆந்தைக் கண்ணனோடு பேச்சுக் கொடுத்தது மற்றவர்களுக்கு ஒரு சிறிதும் பிடிக்கவில்லை.

கேவலம் உயிரையும் வாழ்வின் ஆசைகளையும் காப்பாற்றிக் கொள்வதற்காகப் பொறுப்பு வாய்ந்த கொடுங்கோளுர்ப் படைக் கோட்டத்தலைவன் இவ்வளவு இழிவான காரியத்தைச் செய்ய முன் வருவான் என்பதை அவர்களால் நம்பவே முடியவில்லை. ஆனால் அவர்கள் நம்பியும் ஆக வேண்டியிருந்தது.

குரூரமான அந்தக் கொள்ளைக் கூட்டத் தலைவன் ஆந்தைக்கண்ணனை – அணுகி ஓர் அடிமையைவிடப் பணிவாகவும் குழைவாகவும் பேசத் தொடங்கிவிட்டான் குமரன்நம்பி.

“உங்களுக்குத் தேவையான உதவியை நான் செய்ய முடியும். ஆனால் அதற்கு நீங்கள் என்னை முழுமையாக நம்ப வேண்டும். நாளைக் காலையில் நீங்கள் நகரில் கொள்ளையிட வருகிறீர்கள் என்றால் இன்றிரவே நகரத்தை அதற்கு ஏற்றபடி உங்களுக்கு ஒரு தடையுமின்றிச் செய்துவைக்க என்னால் முடியும். ஆனால் என்ன இருந்தாலும் நான் அப்படி செய்து வைக்கிறேன் என்று சொல்கிற வார்த்தையை மட்டுமே நம்பி என்னைத் தனியாக என்னுடைய நகரத்துக்குள் அனுப்பி வைக்கும் நம்பிக்கை உங்களுக்கு வராது. எனவே என்னோடு நான் உங்களுக்குத் துரோகம் செய்து விடாமல் எனது வாக்குறுதியைக் காக்கிறேனா இல்லையா என்று கண்காணிக்க என்னைவிட வவியவர்களான கடம்பர்கள் சிலரையும் உடன் அனுப்பி வைத்தால்கூட நான் மறுக்க மாட்டேன். அவர்களையும் உடனழைத்துச் சென்று நகரத்தில் எல்லாப் பாதுகாப்பு ஏற்பாடுகளையும் நீக்கி உங்கள் வருகைக்கு வாய்ப்பாக வைத்திருப்பேன். அப்படி நான் செய்யத் தவறினால் என்னோடு உடன் வருகிற உங்கள் ஆட்களிடமே என்னைக் கொன்று போடுமாறு ஆணையிட்டு அனுப்புங்கள்” என்று குமரன் நம்பியே ஆந்தைக்கண்ணனிடம் உருகியபோது உடனிருந்த சேர நாட்டு வீரர்களுக்கு அந்தப் பச்சைத் துரோகத்தைக் கண் முன்னே கண்டு இரத்தம் கொதித்தது. ‘சீ! இவனும் ஒரு ஆண்மகனா?’ என்று குமரன் நம்பியை இழிவாக எண்ணினர் அவர்கள்.

அதே சமயத்தில் ஆந்தைக்கண்ணனும் குமரன் நம்பியின் திடீர் மனமாற்றத்தை உடனே நம்பிவிடவில்லை என்று தெரிந்தது.

“துரோகம் செய்ய முன்வருகிறவர்களை அவர்கள் நண்பர்களும் நம்பக்கூடாது, விரோதிகளும் நம்பக்கூடாது என்பார்கள். அதனால்தான் உன்னை நம்ப முடியவில்லை இளைஞனே?” என்று கூறி அவன் முகத்தையே கூர்ந்து கவனிக்கலானான் ஆந்தைக்கண்ணன். அவனுடைய உருளும் விழிகள் குமரனைத் துளைத்தன.

“என்னை முற்றிலும் நம்பவேண்டாம்! உங்கள் ஆட்களையும் உடன் அனுப்புங்கள் என்றுதானே நானும் கூறுகிறேன்” என்றான் குமரன்.

“இதில் நயவஞ்சகம் ஏதுமில்லையே?” என்று மறுபடியும் மிரட்டினான் ஆந்தைக் கண்ணன்.

“உங்களை எதிர்த்து யாராலும் நயவஞ்சகம் புரிய முடியாது” என்று ஆந்தைக்கண்ணனைப் புகழ்ந்து மறுமொழி கூறினான் குமரன். ஆந்தைக்கண்ணனின் முகத்தில் நம்பிக்கை ஒளி படரலாயிற்று.

Source

Previous articleRead Vanji Maanagaram Ch 9
Next articleRead Vanji Maanagaram Ch 11

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here