Home Na Parthasarathy Read Vanji Maanagaram Ch 17

Read Vanji Maanagaram Ch 17

87
0
Read Vanji maanagaram Ch 17 Free, Vanji maanagaram is a historical novel. Vanji Maanagaram Ch 17. Download Vanji Maanagaram Free, vanji maanagaram pdf
Vanjimanagaram Ch 17 வஞ்சிமாநகரம் அத்தியாயம் 17: அமுதவல்லியைத் தேடி..

Read Vanji Maanagaram Ch 17

வஞ்சிமாநகரம்

அத்தியாயம் 17: அமுதவல்லியைத் தேடி..

Read Vanji Maanagaram Ch 17

நீண்ட நேரம் அவன்முகத்தையே உற்றுப் பார்த்துவிட்டு பின்பு ஒலையை அவனுக்குப் படித்துக் காட்டினார் அமைச்சர் அழும்பில் வேள். ஒலையிலிருந்து குயிலாலுவப் போரில் சேரநாட்டுப் படைகளுக்கு வெற்றிமேல் வெற்றி கிடைத்துக் கொண்டிருப்பதாகவும் – விரைவில் மன்னரும், படைகளும் தலைநகருக்குத் திரும்பக்கூடும் என்றும் தெரிந்தது.

“இந்தச் செய்தியை எனக்கு அறிவிப்பதற்காகவா இவ்வளவு விரைந்து என்னை வரவழைத்தீர்கள்? இதைத் தாங்கள் அறிய வேண்டியது அவசியந்தான். நான் அறிந்து ஆகப்போவது என்ன?” என்று குமரன் நம்பி வினாவியபோது அமைச்சர் அழும்பில்வேள் மறுமொழி ஏதும் கூறாமல் புன்முறுவல் பூத்தார்.

இந்தப் புன்முறுவல் படைத்தலைவனின் சினத்தைக் கிளறச் செய்தது. கொடுங்கோளுரில் தான் விரைந்து செய்ய வேண்டிய பணிகள் இருக்கும்போது – தன்னைக் காரணமின்றி வஞ்சிமா நகரத்திற்கு வரவழைத்த அமைச்சர் பெருமான் மேல் கோபம் கோபமாக வந்தது அவனுக்கு. அவனுடைய அந்த நேரத்து மனநிலையை உணர்ந்தவர்போல் அமைச்சர் கூறத் தொடங்கினார்.

“இந்த விநாடியில் உன் மனம் என்மேல் எவ்வளவு ஆத்திரம் கொண்டிருக்கிறது என்பதை நான் நன்கு அறிவேன் குமரா ! பேரரசரும் படைத்தலைவர்களும் திரும்பி வருவதற்குள்ளாவது கடற்கொள்ளைக்காரர்களிடமிருந்து நகரத்தைக் காப்பாற்றி வெற்றிவாகை சூட வேண்டும். உன் வெற்றிச் செய்தியை மன்னருக்குத் தெரிவிக்கும் வாய்ப்பை எனக்குக் கொடு. யாருடைய துணையுமின்றிக் கொடுங்கோளுர் படைக்கோட்டத் தலைவனே கடற்கொள்ளைகாரர்களைத் துரத்தினான் என்ற பெருமையை நீ அடைய வேண்டும். அழகுச் செல்வமாகிய அமுதவல்லியை மீட்க வேண்டும் என்பதையும் மறந்துவிடாதே” என்று மிக நிதானமாக அவர்மீண்டும் வற்புறுத்தியபோது, அவன் உள்ளத்தில் அவர் மீதிருந்த சினம் சற்றே தணிந்தது.

அமுதவல்லிக்கும் தனக்கும் இடையேயுள்ள தொடர்பு தெரிந்து அவர் அவ்வாறு வற்புறுத்துகிறாரா அல்லது இயல்பாகவே வற்புறுத்துகிறாரா என்று புரியாமல் தயங்கினான் அவன். உள்ளத்திலிருக்கும் நினைவு எதுவோ அதையே அவரும் வற்புறுத்தவே அவனுடைய உற்சாகம் அதிகமாகியது. அமைச்சர் பெருமானுக்கு முன்னால் சூளுரை கூறவும் துணிந்துவிட்டான் அவன்.

“பெருமன்னரும் படைத்தலைவர்களும் குயிலாலுவத்தை வென்று வாகை குடித் திரும்புவதற்கு முன்னர் கடற்கொள்ளைக்காரர்களாகிய கடம்பர்களை வென்று வாகை சூடுவேன் என இன்று இந்த விநாடியில் சேரநாட்டின் மிகச் சிறந்த மதியூகியும், அரசதந்திர வித்தகரும் ஆகிய தங்கள் முன் சூளுரைக்கிறேன். நான் வெற்றி வாகை சூடுவேன் என்று கூறும் இந்த உறுதியிலேயே இரத்தின வணிகர் மகள் அமுதவல்லியை மீட்பேன் என்ற உறுதியும் அடங்கியிருக்கிறது. தாங்கள் இனியாவது என்னை நம்பி விடைகொடுக்க வேண்டும். பல விதங்களில் கரையோரத்து மரக்கலத்தில் தங்கியிருக்கும் ஆந்தைக்கண்ணனின் ஆத்திரத்தைக் கிளறிவிட்டிருக்கிறேன். ஆகவே, இனி ஒவ்வொரு விநாடியும் நான் கொடுங்கோளூரின் எச்சரிக்கையோடு காத்திருக்க வேண்டும். இந்த நேரத்தில் தங்கள் அழைப்பைப் பொருட்படுத்தியே வந்தேன்.”

“நீ பொருட்படுத்தும் அளவிற்குப் பொறுப்புள்ளவன் என்பதாலேயே நானும் உன்னைக் கூப்பிட்டேன். மாமன்னர் வடதிசையிலிருந்து திரும்பு முன் கடம்பர் கடல் முற்றுகையைத் தீர்த்துவிடவேண்டும். மீண்டும் அதை வற்புறுத்துகிறேன்” என்றார் அமைச்சர்.

அவருக்கு மீண்டும் அந்த உறுதிமொழியை அளித்து விட்டுப் புறப்பட்டான் குமரன். இதை வற்புறுத்துவதற்காக மீண்டும் அவர் தன்னை வேளாவிக்கோ மாளிகைக்கு அலைய வைத்ததை அவன் வெறுத்தாலும், ‘மன்னர் வடதிசையிலிருந்து திரும்புவதற்கு முன் போரை வெற்றிகரமாக முடிக்கவேண்டும்’ என்று விரும்பும் அவருடைய அந்தரங்க விருப்பத்தை மனமாரப் போற்றினான் குமரன். கடம்பர்களைப் பொருத்தவரை கடமைக்காகப் போராட வேண்டிய அவசியமும் அவனுக்கு இருந்தது. கடைசியாக அமுதவல்லியைச் சந்தித்த வேளையையும், பேசிய பேச்சையும் நினைவு கூர்ந்தான் அவன்.

‘நாளைக்கு இதே வேளையில் இங்குவர மறந்துவிடாதே அமுதவல்லி! ஊரெல்லாம் ஆந்தைக்கண்ணனைப் பற்றிய பயமாயிருக்கிறதே என்று பேசாமல் இருந்து என்னை ஏமாற்றி விடாதே. உன் தந்தையார் வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டிருப்பார் எங்கே தம்முடைய இரத்தினங்களை எல்லாம் ஆந்தைக்கண்ணன் வாரிக்கட்டிக்கொண்டு போய்விடுவானோ என்று அவருக்குக் குடல் நடுங்கும். உன் தந்தை தன்னிடமுள்ள எல்லா இரத்தினங்களைப் பற்றியும் கவலைப்படட்டும். ஆனால், ஒரே ஒரு விலை மதிப்பற்ற இரத்தினத்தைப் பற்றி மட்டும் அவர் கவலைப்படுவதை விட்டுவிடலாம்’ என்று கூறிவிட்டு, ‘நீதான் அந்த விலைமதிப்பற்ற இரத்தினம் அமுதவல்லி!’ என்று தான் அவளைப் புகழ்ந்துரைத்ததையும் வஞ்சிமாமநகரத்திலிருந்து கொடுங்கோளுருக்குத் திரும்பிக் கொண்டிருந்த இந்த வேளையில் நினைவு கூர்ந்தான் படைத் தலைவன் குமரன் நம்பி.

அமுதவல்லியின் வசீகரமான முகமும், எழில் நிறைந்த புன்சிரிப்பும், பருகும் விழிச்சுடர்களும் நினைவு வந்து அவனை உருக்கின. இரவின் குளிர்ந்த காற்றும், சாலையின் தனிமையான சூழலும் அவன் உள்ளத்தை நெகிழச் செய்தன. அந்த நெகிழ்ச்சியில் மனதுக்கினியவளின் நினைவே பெருகியது. வழியெல்லாம் அந்த நினைவின் இனிமையிலேயே கடந்தான் அவன். கொடுங்கோளுரை அடையும்போது நள்ளிரவுக்கு மேல் ஆகிவிட்டது. படைக் கோட்டத்தில் வாயிற்காப்போரைத் தவிர வேறொருவரும் இல்லை. வீரர்கள் அனைவரும் பொன்வானியாற்று முகத்திலேயே காத்திருப்பதாகத் தெரிய வந்தது. அமைச்சரின் அந்தரங்க ஊழியர்களாகிய வலியனும் பூழியனும் கூடப் படைக்கோட்டத்தில் இல்லை. அவர்களும் கூட உறக்கத்தைக் கெடுத்துக்கொண்டு ஆற்று முகத்திற்குச் சென்றிருப்பதாகக் காவல் வீரர்கள் கூறினார்கள்.

குமரனும் உடனே ஆற்று முகத்திற்கு விரைந்தான். வீரர்கள் தங்கள் தலைவனைக் கண்டதும் முகமலர்ந்தனர். தலைவன் அமைச்சரிடம் இருந்து அறிந்து வந்த செய்தியைப் பற்றித் தங்களுக்கு ஏதேனும் கூறுவானோ என்ற எண்ணமும் ஆர்வமும் படைவீரர்களுக்கு இருந்தது. ஆனால் அத்தகைய ஆர்வம் எதுவுமே இல்லாமல் நிதானமாக இருந்த இருவரும் அக்கூட்டத்தில் விருப்பு வெறுப்பற்றுக் காணப்பட்டனர். அவர்களே வலியனும் பூழியனும் ஆவார்கள். அமைச்சர் குமரனை எதற்காகக் கூப்பிட்டனுப்பினார் என்பதைத் தெரிந்து கொள்வதில் அவர்கள் சிறிதும் ஆர்வம் காட்டவில்லை.

அது குமரனுக்கே வியப்பையும் திகைப்பையும் அளிக்கக் கூடியதாயிருந்தது. ஏனைய வீரர்களிடமும் அமைச்சரைச் சந்திக்கச் சென்றது பற்றி அவன் எதுவும் கூறவில்லை. ‘முற்றுகையை விரைவில் முறியடிக்க வேண்டும்’ என்பதை பொதுவாகக் கூறினார் என்று தெரிவித்துவிட்டு மேலே ஆக வேண்டிய காரியங்களைக் கவனிக்கத் தொடங்கினான் குமரன் நம்பி விடிவதற்குள் கடம்பர்கள் படகுகள் மூலம் – ஆற்று முகத்துக்கு வரலாமென்று குமரனின் அநுமானத்திற்குத் தோன்றியது. அப்படி அவர்கள் வந்தால் உடனே அவர்களை எதிர்த்து அழிப்பதற்கும் சிறைப்பிடிப்பதற்கும் வேண்டிய ஏற்பாடுகளை இப்போதிருந்தே செய்யத் தொடங்கினான் அவன்.

முற்றுகையிலிருக்கும் பெரும்பாலான கடம்பர்களை – அவர்களுடைய கப்பல்களுக்குச் சென்றே அழிக்க முயல்வதோ, எதிர்க்க முயல்வதோ ஆபத்தான காரியம் என்பதால் அவர்களை அணி அணியாகப் பொன்வானி முகத்துவாரத்திற்கு வரச் செய்து அழிக்கவோ சிறைப்பிடிக்கவோ செய்ய வேண்டும் என்று கருதினான் குமரன் நம்பி. அவன் எதிர்பார்த்தபடி நிகழுமானால் முற்றுகையில் இருக்கும் கடம்பர்களின் கொள்ளை மரக்கலங்களில் ஆள்பலம் படிப்படியாகக் குறையும். ஆள்பலம் குறையக் குறைய அந்தக் கப்பல்கள் வலிமையற்றவையாக நேரிடும். கப்பல்கள் வலிமையற்றவையாகிவிட்ட பின் – குமரன் தன் வீரர்களுடன் கடலில் புகுந்து கொள்ளை மரக்கலங்களைக் கைப்பற்றி – அவற்றில் ஏதாவதொன்றில் சிறைவைக்கப் பெற்றிருப்பதாகக் கருதும் அமுதவல்லியை மீட்கலாம். அமுதவல்லியை மீட்பதற்கு இதைத் தவிர வேறு வழி இல்லை என்பதைப் படைத் தலைவன் நன்கு அறிந்திருந்தான்.

எனவே அவன் அதற்கான ஏற்பாடுகளில் தீவிரமாக முனைந்திருந்தான். அவன் எதிர்பார்த்தபடியே நடந்தது. பின்னிரவு நெருங்கிக்கொண்டிருந்த வேளையில் மூன்று பெரிய படகுகளில் கடம்பர்கள் ஆயுதபாணிகளாகப் பொன்வானியாற்று முகத்துவாரத்தில் நுழைந்தார்கள். மறைந்திருந்த கொடுங்கோளூர் வீரர்களை ஏற்கெனவே இதை எதிர்பார்த்து எச்சரிக்கையாக இருக்கச் செய்ததனால் – உடனே தாக்குதலுக்கு ஏற்பாடு செய்ய முடிந்தது.

படகுகளில் வந்துகொண்டிருந்தவர்கள் – புதர்களில் கொடுங்கோளூர் வீரர்கள் மறைந்திருந்ததை எதிர்பார்த்திருக்க முடியாத தனால் சிதறி நிலை குலைந்தனர். அந்த அகால வேளையில் கடம்பர்கள் இதை முற்றிலும் எதிர்நோக்கி இருக்கவில்லை. ஒரு படகு ஆற்றில் கவிழ்ந்தது. சிலர் இறந்தனர். நீந்திக் கரையேறியவர்களை கொடுங்கோளுர் வீரர்கள் உடனே சிறைப் பிடித்தனர். ஆற்று முகத்துவாரத்து வழியே நீந்திக் கடலுக்குள் போய்த் தப்பிவிடலாமென்று புறப்பட்ட சில கடம்பர்களையும் நீரில் குதித்து மறித்துச் சிறைப்பிடித்தார்கள் கொடுங்கோளூர் வீரர்கள்.

விடிவதற்குள் அந்த முகத்துவாரத்துப் போர் முடிந்துவிட்டது. கடம்பர்களில் இறந்தவர்கள் தவிர எஞ்சியோரைச் சிறைப்பிடித்தாயிற்று.

இனி அமுதவல்லியைத் தேடிப் புறப்படவேண்டியதுதான் என்று தனக்குள் சிந்தித்தான் குமரன் நம்பி. படகுகள் ஆயத்தமாயின. கொடுங்கோளூர் வீரர்கள் யாவரையும் படகுகளில் அணியணியாகப் பிரித்து அமரச்செய்தான் தலைவன். கடம்பர்களின் கொள்ளை மரக்கலங்கள் முற்றுகையிட்டிருந்த கடற் பகுதியை நாலா திசைகளிலிருந்தும் வளைத்துக் கொண்டு ஒரே சமயத்தில் தாக்க வேண்டுமென்று தன் வீரர்களுக்குக் கூறியிருந்தான் படைத் தலைவன். கடம்பர்களின் கொள்ளை மரக்கலங்களில் ஒன்றுகூடத் தப்பிச் சென்று விடாமல் எல்லாவற்றையும் வளைத்துக் கொண்டு தாக்க வேண்டு மென்பதும் யாவருக்கும் தெளிவாகக் கூறப்பட்டிருந்தது. தாக்குதல் முடிந்ததும் ஒவ்வொரு கொள்ளை மரக்கலத்தையும் சோதனையிட்டுத் தேடவேண்டும் என்றும் திட்டமிடப்பட்டிருந்தது.

எல்லா இடங்களுக்கும் துரத்தித் துரத்தி உடன் வந்த அமைச்சர் அழும்பில் வேளின் அந்தரங்க ஊழியர்களான வலியனும் பூழியனும் என்ன காரணத்தினாலோ கடலுக்குள் படகுகள் புறப்பட்டபோது மட்டும் மெல்ல நழுவி விலகிச் சென்று விட்டார்கள்.

கடம்பர்களின் கொள்ளை மரக்கலங்களைத் தானும் தன் நண்பர்களும் வளைத்துத் தாக்கக் செல்வதை அவர்கள் ஏன் அவ்வளவு அக்கறையாகக் கவனிக்க வரவில்லை என்பது குமரன் நம்பிக்கு ஓரளவு ஐயப்பாட்டை உண்டாக்கியது. அமுதவல்லியைத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டுமென்பது அமைச்சர் மூலமும், அவருடைய அந்தரங்க ஊழியர்கள் மூலமுமே அதிகமாக வற்புறுத்தப்பட்டிருக்க அதைச் செயற்படுத்தும்போது, அவ்வூழியர்கள் காணாததுபோல விலகிச் சென்று விட்டதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டிய நிலையில் இருந்தான் குமரன் நம்பி.

ஆனால், தனியே அதை மட்டுமே சிந்தித்துப் பார்க்கவும் அப்போது அவனுக்கு வாய்ப்பில்லை. ஒரு பெரிய கடல் முற்றுகையைத் தளர்த்தி எதிரிகளின் மரக்கலங்களில் புகுந்து சோதனையிட வேண்டிய காரியத்துக்காக விரைந்து கொண்டிருந்தான் அவன். அந்த நிலையில் அழும்பில்வேளின் அந்தரங்க ஊழியர்களான அவர்கள் இருவரும் ஏன் தங்களைப் பின் தொடரவில்லை என்பதைப் பற்றியே கவலைப்பட முடியாமலிருந்ததற்காக அதிகம் வருத்தப்படாமல் தன் செயல்களைக் கவனித்துச் செய்யலானான் கொடுங்கோளூர்ப்படைக் கோட்டத் தலைவன்.

Source

Previous articleRead Vanji Maanagaram Ch 16
Next articleRead Vanji Maanagaram Ch 18

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here