Home Na Parthasarathy Read Vanji Maanagaram Ch 18

Read Vanji Maanagaram Ch 18

80
0
Read Vanji maanagaram Ch 18 Free, Vanji maanagaram is a historical novel. Vanji Maanagaram Ch 18. Download Vanji Maanagaram Free, vanji maanagaram pdf
Vanjimanagaram Ch 18 வஞ்சிமாநகரம் அத்தியாயம் 18: கடம்பர் மரக்கலங்களில்

Read Vanji Maanagaram Ch 18

வஞ்சிமாநகரம்

அத்தியாயம் 18: கடம்பர் மரக்கலங்களில்

Read Vanji Maanagaram Ch 18

திட்டமிட்டபடியும் எந்தெந்தத் திசைகளிலிருந்து எப்படித் தாக்குவது என்று வகுத்துக் கொண்டபடியும்-கொடுங்கோளூர்ப் படை வீரர்கள் படகுகளில் முன்னேறிக் கொண்டிருந்தார்கள். நல்ல வேளையாகக் கடம்பர்களின் கொள்ளை மரக்கலங்கள் எல்லாம் இன்னும் முன்னிருந்த இடத்திலேயே இருந்தன. எந்த மரக்கலமும் எண்ணிக்கையில் குறையவில்லை என்பது படைத் தலைவனுக்குத் திருப்தியளித்தது. பொதுவாகக் கடம்பர்களின் கொள்ளையிடும் முறை எப்படியென்றால், கொள்ளையிட்ட பொருள்களுடனும் – சிறைப்பிடித்த, பகைவர் நாட்டு ஆடவர், மகளிருடனும் கூடிய மரக்கலம் கொள்ளையும் போரும் முடிவடைவதற்கு முன்பே சொந்த நாட்டுக்குத் திரும்பிச் சென்று பத்திரமாக துறையையடையும்படி கடத்தப்பட்டுவிடும். ஆனால் என்ன காரணத்தினாலோ இம்முறை முதலில் எத்தனை கொள்ளை மரக்கலங்கள் துறைக்கு வந்தனவோ அத்தனை மரக் கலங்களுமே அப்படியே இருந்தன.

முதல் நாள் அந்த மரக்கலங்களில் ஒற்றறிவதற்காகச் சென்றபோது ஒரு காரியத்துக்காக அவற்றை எண்ணிக் கணக்கிட்டு வைத்துக்கொண்டான் குமரன் நம்பி. இப்போதும் அந்த மரக்கலங்கள் அப்படியே இருந்தன. ஒரு வேளை கடம்பர்கள் தங்களுடைய தோல்வியைப் பற்றித் தாங்களே இன்னும் சரியாக அறியவில்லையோ என்று தோன்றியது படைத் தலைவனுக்கு. அவர்கள் எந்த விநாடியிலும் தங்கள் கொள்ளை மரக்கலங்களோடு திரும்பி ஓடலாமென்ற கருத்தில்தான் தன்னுடைய வீரர்களையும், படகுகளையும் வில்லம்புகளோடும் வேறு பல படைக்கலங்களோடும் கடம்பர் கலங்களை நான்கு புறமும் வளைக்குமாறு வகுத்துக் கொண்டு முன்னேறினான் அவன்.

முதல் நாள் இரவு முழுவதும் பொன்வானி ஆற்றுமுகப் புதரில் மறைந்திருந்தும் கடம்பர்களை எதிர்த்துப் போரிட்டுக் களைத்திருந்தாலும் படை வீரர்களோ, தலைவனோ ஒய்ந்து விடவில்லை. கடம்பர் கொள்ளை மரக்கலங்களைக் சூறையாடப் போகிறோம் என்ற உற்சாகத்தோடும் ஊக்கத்தோடும் முன்னேறிக் கொண்டிருந்தார்கள் அவர்கள். அருகில் நெருங்குகிறவரை கடம்பர் மரக்கலங்கள் அமைதியாயிருந்தன. சுற்றி வளைத்துக்கொண்டதும் கடம்பர்களும் ஒன்று சேர்ந்து தம் மரக்கலங்களின் மேல் தளங்களின் வில்லம்புகளோடு தோன்றினார்கள். போர் மூண்டது. குமரன் நம்பி எதிர்பார்த்தது போல் மரக்கலங்களில் மீதமிருந்த கடம்பர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே இருந்தது.

ஆயினும் மிகக் குறைந்த எண்ணிக்கை உடையவர்களாக இருந்தும், அந்தக் கடம்பர்கள் கடுமையாகவும் உறுதியாகவும் எதிர்த்துத் தாக்கினார்கள். போர் சிறிது நேரம் நீடித்தது. முடிவில் கடற் கொள்ளைக்காரர்களால் எதிர்த்து நிற்க முடியாமல் போகவே, அவர்கள் தங்கள் தங்கள் மரக்கலங்களில் ஓடி ஒளிந்தார்கள்.

அதுதான் சமயமென்று – புறத்தே அந்த மரக்கலங்களை வளைத்து முற்றுகையை நீக்கவோ, தளர்த்தவோ செய்யாமல் அப்படியே நீடிக்க விட்டுவிட்டுத் தானும் சில தேர்ந்தெடுத்த வீரர்களுமாக ஒவ்வொரு மரக்கலத்தையும் சோதனையிட்டுப் பார்ப்பதற்காகப் புறப்பட்டான் குமரன் நம்பி.

அவன் சென்ற முதல் மரக்கலத்திலேயே முற்றிலும் எதிர்பார்த்திராத உதவி ஒன்று அவனுக்குக் கிட்டியது. அவனால் முன்பு அனுப்பப்பட்டிருந்த செவிட்டூமை ஒற்றன் ஒருவன் அந்த மரக்கலத்தின் பாய்மரத்தில் கட்டிப்போடப் பெற்றுச் சிறை வைக்கப்பட்டிருந்தான். அவனை விடுவித்துக் காப்பாற்றியதோடு, மரக்கலங்களில் சோதனையிடுவதற்கு உதவி செய்யுமாறு வேண்டினான் குமரன் நம்பி.

முதன் முதலாக ஊமை வேடத்தைத் துறந்து முக மலர்ச்சியோடு படைத் தலைவனிடம் பேசத் தொடங்கினான் விடுவிக்கப்பட்ட வீரன்.

ஆந்தைக்கண்ணனுடைய மரக்கலத்தில்தான் அமுதவல்லி சிறை வைக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் இருந்தாலும் ஒவ்வொரு மரக்கலமாகச் சோதனையிடத் தொடங்கினான் அவன்.

அப்படிச் சோதனையிடத் தொடங்கியபோது சிவ மரக்கலங்களின் கீழறைகளில் பதுங்கியிருந்த கடம்பர்கள் சிலர் சிறைப்பட்டனர்.

முதல் கொள்ளை மரக்கலத்தை அணு – அணுவாகச் சோதனையிட்டு முடித்ததும் குமரன் நம்பிக்கு ஒரு யோசனை தோன்றியது.

குற்றுயிரும் குலையுயிருமாய்க் களத்தில் காயப்பட்டவர்களை விட்டுவிடும் வழக்கப்படி கடற்போரில் காயமுற்ற வீரர்களும் ஏனையோரும் – அவர்கள் தலைவனான ஆந்தைக்கண்ணனும் தப்பி ஓடுவதற்கு ஒரு மரக்கலத்தைத் திருப்பி அளித்துவிட்டு மற்றைய மரக்கலங்களைச் சோதனையிட்டபின் நெருப்புக்கிரையாக்கி விடலாம் என்றெண்ணினான் அவன்.

எல்லா மரக்கலங்களோடும் கடம்பர்களைத் தப்பவிட்டால்- மறுமுறை மிக விரைவிலேயே அவர்கள் படையெடுத்து வருவார்கள் என்பது உறுதி எல்லாக் கடம்பர்களையும் அவர்கள் தலைவனான ஆந்தைக்கண்ணன் உட்படச் சிறைப்பிடித்துக் கொடுங்கோளுர்ப் படைக் கோட்டத்தில் கொண்டுபோய் அடைப்பது என்பதும் சாத்தியமான காரியமே இல்லை. அப்படிச் செய்வது அரசதந்திரமும் ஆகாது.

கடம்பர்களைக் கொடுங்கோளுரில் அதிகமாகச் சிறை வைப்பது கொடுங்கோளுர் நகரத்திற்கே பிற்காலத்தில் கெடுதலாக முடியக் கூடியது. கடலில் கொள்ளைக்குப் போனவர்கள் திரும்பி வரவில்லை என்றால் அங்கங்கே பன்னிராயிரம் முந்நீர்ப் பழந்தீவுகளில் இருக்கும் எல்லாக் கடம்பர்களும் ஒன்றுகூடிப் பலநூறு மரக்கலங்களில் கொடுங்கோளூரை நோக்கிப் புறப்பட்டு விடுவார்கள்.

எனவே பெருமன்னர் செங்குட்டுவரும் கடம்பர்களை அவ்வப் போது அடக்கித் துரத்துவது வழக்கமே ஒழியக் கூண்டோடு சிறைப் பிடிப்பது வழக்கமில்லை.

அந்த முறையில்தான் இப்போது குமரன் நம்பியும் செயற்பட விரும்பினான்.

எனவே முதலில் சோதனைசெய்து முடித்த மரக்கலத்தை – அப்படியே ஆந்தைக்கண்ணன் முதலியவர்கள் தப்பி ஓடுவதற்குக் கொடுத்துவிடலாம் என்பது குமரன் நம்பியின் எண்ணமாயிருந்தது.

“சிறைப்பட்ட கடம்பர்களையும் அவர்களுடைய தலைவனான ஆந்தைக்கண்ணனையும் இங்கு அழைத்து வாருங்கள்” என்று தன் வீரர்களுக்கு அவன் கட்டளையிட்டான்.

ஆந்தைக்கண்ணன் கைகள் பிணிக்கப்பட்டுத் தன் எதிரே கொண்டுவரப் பட்டபோது “நீ கொடுங்கோளுரிலிருந்து சிறைப் பிடித்துக் கொண்டுவந்த இரத்தின வணிகர் மகள் அமுதவல்லியை எந்தக் கப்பவில் அடைத்து வைத்திருக்கிறாய் என்பதை மறைக்காமல் உடனே சொல்லிவிடுவது உனக்கும் நல்லது எனக்கும் நல்லது” என்று அவனை நோக்கிச் சீறினான் குமரன் நம்பி.

இந்த வினாவைச் செவிமடுத்ததும் ஆந்தைக்கண்ணனின் உருண்டை விழிகளில் கனல் பறந்தது.

“என்ன உளறல் இது படைத்தலைவரே? கொடுங்கோளுருக்குள் வருவதற்கு முன்பே எங்கள் கதி இப்படி ஆகிவிட்டது. நாங்களாவது இரத்தின வணிகர் மகளைச் சிறைப்பிடிப்பதாவது நாங்களல்லவா இப்போது உங்களிடம் சிறைப்பட்டுத் தவிக்கிறோம்? அப்படியிருக்கும்போது படைத்தலைவர் கூறும் செய்திகள் புதுமையாக அல்லவா இருக்கின்றன?” என்று கொதிப்போடு கூறினான் அவன்.

ஆனாலும் குமரன் நம்பிக்கு அவன் கூறியதில் உடனே நம்பிக்கை உண்டாகவில்லை. மீண்டும் இரைந்து கூப்பாடு போட்டான். “கடம்பர்கள் கொள்ளையடிப்பார்கள் என்றுதான் இதுவரை கேள்விப்பட்டிருந்தேன். இப்போதோ அவர்கள் பொய் சொல்லுவார்கள் என்றும் தெரிகிறது.”

“கோழைகள்தான் பொய்களைச் சொல்லுவார்கள். கடம்பர்கள் என்றுமே கோழைகளாக இருந்ததில்லை. உங்கள் கொடுங்கோளுர் இரத்தின வணிகரின் விலை மதிப்பற்ற இரத்தினங்களையும் முத்துக்களையும் மணிகளையும் அவைகள் நிறைந்திருக்கும் வணிகக் கிடங்குகளையும் கொள்ளையடிக்கும் ஆசை எங்களுக்கு உண்டு அதை நீங்களும் அறிவீர்கள், உலகமே அறியும். ஆனால் நீங்கள் ஏதோ புதுக்கதையை அல்லவா சொல்லுகிறீர்கள்? கொடுங்கோளுர் இரத்தின வணிகரின் மகளை நாங்கள் சிறைப்பிடித்து வந்திருப்பதாக நீங்கள் கூறுவது விநோதமாக அல்லவா இருக்கிறது! அப்படி ஒரு வணிகரின் மகளைச் சிறைப்பிடித்து எங்களுக்கு என்ன ஆகவேண்டும்?” என்று ஆந்தைக்கண்ணனும் பிடிவாதமாக மறுத்துக் கூறினான்.

அவன் வார்த்தைகளை நம்புவதைவிட எல்லா மரக்கலங்களையும் சோதித்துப் பார்த்துவிடுவதே நல்லதென்று ஆந்தைக் கண்ணனும் அவன் ஆட்களும் நின்றுகொண்டிருந்த மரக் கலத்தை முதலிலேயே சோதனை செய்துவிட்ட காரணத்தால் வேறு மரக்கலங்களை குமரன் நம்பியும் அவன் ஆட்களும் சோதனையிடத் தொடங்கினார்கள்.

நிதானமாகவும் பொறுமையாகவும், ஒரு மரக்கலம் விடாமல் தேடித் துளைத்துப் பார்த்தும்-அமுதவல்லியைக் காணவில்லை. கடம்பர்கள் பொன்வானி முகத்துவாரத்தின் வழியாக நகருக்குள் வந்து அமுதவல்லியைச் சிறைப்பிடித்துக்கொண்டு போயிருந்தால் நிச்சயமாக அவர்களுடைய கொள்ளை மரக்கலங்களில் ஏதாவது ஒன்றில்தான் வைத்திருக்க வேண்டும். இத்தனைமரக்கலங்களில் எதிலும் அவள் இல்லை என்றவுடன் குமரன் நம்பியின் மனத்தில் சந்தேகம் எழுந்தது.

அமைச்சர் அழும்பில்வேளும் அவருடைய அந்தரங்க ஒற்றர்களும் எதற்காக இப்படி ஒரு பொய்யைத் தன்னிடம் கூறினார்கள் என்பதை அவனால் புரிந்து கொள்ள முடியவில்லை.

‘உண்மையில் அப்படியே ஆந்தைக்கண்ணன் அமுதவல்லியைச் சிறைப்படித்திருந்தாலும் இப்போது, தான் அவன் பயன் படுத்துவதற்கென்று கொடுத்திருக்கும் அந்த ஒரே ஒரு மரக்கலத்தின் மூலமாகத்தான் அவளைத் தன்னுடைய தீவுக்குக் கொண்டு போகமுடியும். அவனுடைய கூட்டமோ இப்போது மிகமிகச் சிறிதாகிச் சிறைப்பட்டு விட்டது. அந்தக் கூட்டத்திலும் பெண்கள் யாருமே இல்லை. இருந்தாலும் அவர்களைக் குமரன் நம்பி அறியாமல் இப்போது ஆந்தைக்கண்ணன் திருப்பி அழைத்துச் செல்ல வாய்ப்பே இல்லை. எனவே ஏதோ ஒரு காரணத்திற்காக அமைச்சர் அழும்பில்வேளும், அவருடைய அந்தரங்க ஒற்றர்களும் தன்னிடம் உண்மையை மாற்றியோ திரித்தோ கூறியிருக்க வேண்டுமென்று குமரன் நம்பிக்குத் தோன்றியது.

குமரன் நம்பி – ஆந்தைக்கண்ணனையும், அவனுடனிருந்தவர்களையும் ஒரே ஒரு மரக்கலத்துடன் விட்டுவிட்டு ஏனைய மரக்கலங்களுக்குத் தீ வைக்க ஏற்பாடு செய்தான். தீயும் வைக்கப்பட்டது. அதைவிடக் கடுங்கோபத்தீயுடன் கொடுங்கோளுருக்குத் திரும்பினான்.

மறுநாள் – அமைச்சர் அழும்பில் வேளைக் காண வேளாவிக்கோ மாளிகைக்குச் சென்றான்.

Source

Previous articleRead Vanji Maanagaram Ch 17
Next articleRead Vanji Maanagaram Ch 19

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here