Home Na Parthasarathy Read Vanji Maanagaram Ch 2

Read Vanji Maanagaram Ch 2

101
0
Read Vanji maanagaram Free, Vanji maanagaram is a historical novel. Vanji Maanagaram Ch 2. Download Vanji Maanagaram Free, vanji maanagaram pdf
Vanjimanagaram Ch 2 வஞ்சிமாநகரம் அத்தியாயம் 2: கொடுங்கோளுர்க் குமரன்

Read Vanji Maanagaram Ch 2

வஞ்சிமாநகரம்

அத்தியாயம் 2: கொடுங்கோளுர்க் குமரன்

Read Vanji Maanagaram Ch 2

குமரன்படைக் கோட்டத்தில் இல்லையென்றறிந்த வலியனும், பூழியனும், அருகில் கோட்டை மதிற்புறத்திலிருந்த பூந்தோட்டம் ஒன்றில் நுழைந்தனர். பேசிக் கொண்டே அந்தப் பூந்தோட்டத்தில் சுற்றிச்சுற்றி வந்த அவர்கள் மிக அழகாகக் கட்டப்பட்டிருந்த ஒரு செய்குன்றின் அருகே வந்ததும் அங்கே வியப்புக்குரிய காட்சி ஒன்றைக் கண்டார்கள். அவர்கள் எந்தக் கொடுங்கோளுர்க் குமரனைத் தேடி வந்தார்களோ அந்தக் குமரனே அங்கு பேரழகியான இளம் பெண் ஒருத்தியோடு அமர்ந்து கொஞ்சிக் குலாவிக் கொண்டிருந்தான். வலியனும் பூழியனும் அருகிலிருந்த புதரொன்றில் மறைந்து நின்று கவனிக்கலானார்கள்.

“நாடு முழுவதும் கொள்ளைக்காரர்களைப் பற்றிய பயம் சூழ்ந்திருக்கும் இந்த வேளையில் கொடுங்கோளூர்ப் படைக் கோட்டத் தலைவர் எத்தகைய காரிய்த்தில் ஈடுபட்டிருக்கிறார் பார்த்தாயா?”

“விவரம் தெரியாமல் பேசுகிறாயே பூழியா! உலகில் ஏற்படும் காதல் நிகழ்ச்சிகளே பெரும்பாலும் இத்தகைய சந்தர்ப்பங்களில் தான் தோன்றுவதாகச் சொல்கிறார்கள்…”

“என்ன இருந்தாலும் நம் குமரன் நம்பிக்கு வாய்த்த காதலியைப் போல் இத்தனை பேரழகி உலகில் வேறெங்குமே இருக்க முடியாது.”

“அப்படியானால் கொடுங்கோளுர்ப் படைக்கோட்டப் பாதுகாப்பைவிட இந்தக் காரியத்தை நம் குமரன் நம்பி செம்மையாச் செய்யமுடியுமென்று சொல்!”

“கோட்டைவிடுகிறவர்கள் அதாவது ஒரு பெண்ணிடம் தங்கள் சொந்த மனத்தையே கோட்டை விடுகிறவர்கள் எங்காவது கோட்டையைப் பாதுகாக்க முடியுமா?”

“பொறு ! அவர்கள் இருவரும் ஏதோ பேசிக்கொள்ளுகிறார்கள், கேட்போம்.”

“காதலர்கள் இருவரும் பேசிக்கொள்வதை ஒட்டுக்கேட்பது பாவம்.”

“பாவமோ, புண்ணியமோ, அதெல்லாம் எனக்குத் தெரியாது.இந்தப் பேச்சை ஒட்டுக் கேட்டால்தான் நாம் அமைச்சர் பெருமானிடம் திரும்பிச் சென்று ஏதாவது விவரங்கள் கூற முடியும்…”

“இதை எல்லாம் அமைச்சர் பெருமானிடம் கூறினால் அவருக்குக் கொடுங்கோளுர்க் குமரன் மேலிருக்கிற சிறிதளவு நம்பிக்கையும்கூடப் போய்விடும் பாவம் !”

“விளைவுகளைப் பற்றி நாம் ஏன் கவலைப்பட வேண்டும்? அமைச்சர் பெருமானின் அந்தரங்க ஒற்றர்கள் என்ற முறையிலே எது நம் கடமையோ அதை நாம் செய்தாக வேண்டும்.”

“அவர்கள் பேசிக்கொள்வதிலிருந்து கொடுங்கோளூரிலேயே பெரிய இரத்தின வணிகர் ஒருவருடைய மகள் அவளென்று தெரிகிறது.”

“உற்றுக்கேட்டால் இன்னும் பல உண்மைகள் தெரியலாம். பொறுத்திருந்து கேட்போம். குமரன் நம்பியும் அவன் காதலியும் இங்கிருந்து புறப்பட்டுச் சென்ற பின் நாமும் வேறு வழியாக இங்கிருந்து வெளியேறி – அப்போதுதான் புதிதாக வருகிறவர்கள்போல் கோட்டையில் போய்க் குமரன் நம்பியைச் சந்திப்போம்” என்று அவர்கள் இருவரும் தீர்மானம் செய்து கொண்டார்கள். இப்படியெல்லாம் இவர்கள் நின்று கவனிப்பதை அறியாத குமரன் நம்பி தன் காதலியிடம் உருகி உருகிப் பேசிக் கொண்டிருந்தான்.

“பெண்ணே இன்று எத்தகைய சூழ்நிலையில் இங்கு நான் உன்னைச் சந்திக்க வந்திருக்கிறேன் தெரியுமா? மகோதைக் கரை முழுவதும் கடற்கொள்ளைக்காரர்களைப் பற்றிய அச்சம் பரவியிருக்கிறது. பேரரசரோ, பெரும்படைத் தலைவரோ, தலைநகரில் இல்லை. கொள்ளைக்காரர்கள் பயத்தைத் தவிர்க்க பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யுமாறு அமைச்சர் அழும்பில்வேளிடமிருந்து எந்த வினாடியில் எனக்குத் தகவல் வருமென்று சொல்ல முடியாது.”

“எல்லாம் எனக்குத் தெரியும். ஆனால் உங்களை ஒரு நாள் ஒரு வேளையாவது சந்திக்காவிட்டால் என்னால் உயிர் வாழ முடியாது.”

“வீரர்களைக் காதலிப்பவர்கள் இவ்வளவு கோழைகளாக இருக்கக் கூடாது பெண்ணே!”

“கோழைத்தனமும் மனம் நெகிழ்ந்து பெருகும் உண்மை அன்பும் எந்த இடத்தில் எந்த அளவுகோலால் வேறுபடுகின்றன என்பதை இன்னும் நீங்கள் உணரவில்லை என்று தெரிகிறது…”

“தெரியாமலென்ன? நன்றாகத் தெரிகிறது. ஆனாலும் அமைச்சருடைய கட்டளையையோ என் பதவிக்கான கடமைகளையோ நான் புறக்கணிக்க முடியாதவனாக இருக்கிறேன். எந்த ஆபத்தான சூழ்நிலையிலும் என் கைகள் விரைந்து பாதுகாக்க வேண்டிய அழகுச் செல்வம் நீதான் என்பதை நான் உணர்கிறேன். ஆயினும் நடு நடுவே என்னுடைய பதவிக் கடமைகள் என்னால் பாதுகாக்கப்பட வேண்டிய மகோதைக்கரை முழுமையையும் எனக்கு நினைவு படுத்துகின்றன.”

“அதனால் என்ன? உங்கள் பிரியத்திற்குரியவள் என்ற முறையில் தனிப்பட்ட பாதுகாப்பை அடையவில்லையானாலும் உங்களுடைய பாதுகாப்பு எல்லைக்குட்பட்ட மகோதைக் கரையிலிருப்பவள் என்ற முறையிலாவது அது எனக்குக் கிடைக்குமல்லவா?” என்று கூறி அவள் சிரித்தாள். அந்தச் சிரிப்பு எத்தகைய ஆண்மையையும் பிடிவாதம் உள்ளவனையும் மயக்கிவிட முடிந்ததாக இருந்தது.

“உனக்கு அமுதவல்லி என்று பெயர் சூட்டியவர்களை மறுமுறையும் பாராட்ட வேண்டும் பெண்ணே! அமுதத்தின் அரிய தன்மை உன் புன்னகையிலும் நிறைந்திருக்கிறது. அமுதம் தேவர்களைச் சாவின்றி நித்திய இளமையோடு வாழ வைக்கிறது என்கிறார்கள். உன் புன்னகையோ – என்னைப் போன்ற மனிதனையே நித்திய இளமையோடு வாழ வைத்துவிடும் போலிருக்கிறதே?…”

“திடீரென்று என்னை அளவுக்கு அதிகமாகப் புகழத் தொடங்கிவிட்டீர்களே? ”

“ஒரு பெண்ணை ஓர் ஆண்மகன் எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாமென்று இலக்கியத்திலேயே இடமளித்து நலம் பாராட்டலென்று பெயரும் சூட்டியிருக்கிறார்கள்.”

“பார்த்தீர்களா? அதில் கூட ஆண்களுக்குத்தான் அதிக உரிமை அளிக்கப்பட்டிருக்கிறது. பெண்களைத்தான் கவனிப்பார் இல்லை !”

“ஏன் இல்லை? அதற்குத்தான் ஆண்கள் இருக்கிறார்களே? நாங்கள் புகழுவதற்காகவும் நலம் பாராட்டுவதற்காகவும் தானே நீங்கள் எல்லாம் அழகாகப் படைக்கப்பட்டிருக்கிறீர்கள்” என்று கொடுங்கோளுர்க் குமரன் நம்பி கூறியபோது அமுதவல்லியின் முகத்தில் நாணம் விளையாடியது. சிறிது நேர உல்லாச உரையாடலுக்குப்பின் அவர்கள் பிரியவேண்டிய வேளை வந்தது.

“நாளைக்கு இதே வேளையில் இங்குவர மறந்து விடாதே! ஊரெல்லாம் ஆந்தைக்கண்ணன் பயமாயிருக்கிறதே என்று பேசாமல் இருந்து என்னை ஏமாற்றிவிடாதே. உன் தந்தையார் வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டிருப்பார். எங்கே இரத்தினங்களையெல்லாம் ஆந்தைக்கண்ணன் வாரிக்கொண்டு போய்விடுவானோ என்று அவருக்குக் குடல் நடுங்கும். உன்தந்தை தன்னிடமுள்ள எல்லா இரத்தினத்தைப்பற்றியும் கவலைப்படட்டும். ஆனால் ஒரே ஒர் இரத்தினத்தைப் பற்றி மட்டும் அவர் கவலைப்படுவதை விட்டு விடலாம்.”

“எந்த இரத்தினத்தைப் பற்றிச் சொல்கிறீர்கள்?”

“புரியவில்லையா? இதோ என் எதிரே நின்று பேசிக் கொண்டிருக்குமிந்த அழகு இரத்தினத்தைப் பற்றித்தான் சொல்லுகிறேன்” – என்று அவள் பூங்கரத்தைப் பற்றினான் குமரன். பின்பு மெல்லிய குரலில் அவள் செவியருகே நெருங்கிக் கூறலானான்: “என்னைப் பொறுத்தவரை அவர் பெற்றிருக்கும் இரத்தினங்களில் உயர்ந்ததும் விலை மதிப்பற்றததும் இதுதான்.”

“அதிகம் புகழ வேண்டாம். நான் நாளைக்கு அவசியம் வருகிறேன்” – என்று நாணமும் மென்மையும் இழைந்த நளினக் குரலில் கூறியபடி அவனிடமிருந்து தன் கரங்களை விடுவித்துக்கொண்டாள் அமுதவல்லி. அவள் செல்லும் வழியைத் திரும்பித் திரும்பிப் பார்த்தவனாகப் படைக் கோட்டத்துப் பாதையில் நடந்தான் குமரன். அவனுடைய நெடி துயர்ந்த தோற்றத்திற்கும் இளமை மிடுக்கு நிறைந்த அந்த வீர கம்பீர நடைக்கும் பொருத்தமாக இருந்தது. சிங்க ஏறு பார்ப்பது போல் அந்த எடுப்பான பார்வையே அவனுக்குப் பெருமிதமளித்தது. அவன் படைக் கோட்டத்திற்குள் நுழையும் போதே வஞ்சிமா நகரிலிருந்து அமைச்சரின் தூதர்கள் வந்திருக்கும் செய்தியைக் காவலர்கள் அறிவித்து விட்டார்கள். அந்தத் தூதர்கள் எங்கே சென்றிருக்கிறார்கள் என்று உடனே அறியத் துடித்தான்.

“சிறது நேரத்தில் மறுபடியும் தங்களை வந்து காண்பதாகக் கூறிச் சென்றார்கள்” – என்றான் கோட்டை வாயிற்காவலன். தூதுவர்கள் வந்த நேரத்தில் தான் படைக்கோட்டத்தில் இல்லாமற் போய்விட்டோமே என்ற கழிவிரக்கமும், அவர்கள் வரவை மீண்டும் எதிர்பார்க்கும் ஆவலுமாகக் காத்திருந்தான். வலியனும் பூழியனும் சிறிது நேரத்திலேயே வந்து சேர்ந்தார்கள். அவர்களை முகமன் கூறி வரவேற்றான் குமரன். “அமைச்சர் பெருமான் தங்களை கையோடு தலைநகருக்கு அழைத்து வரச்சொல்லியிருக்கிறார்” என்று தூதுவர் இருவரும் ஏககாலத்தில் கூறியபொழுது குமரனுக்கு ஒன்றுமே ஒடவில்லை. அந்த அகாலத்தில் அவர்களோடு தலைநகருக்குப் புறப்பட்டால் அமுதவல்லிக்குத் தகவல் தெரியாது போய்விடுமே என்று கவலைப்பட்டான் அவன். ‘மறுநாள் தான் கொடுங்கோளுருக்கு எப்போது திரும்பமுடியுமென்று தெரியாததனால் அநாவசியமாக அவள் பூந்தோட்டத்திற்குத் தேடி வந்து அலைவாளே? தான் தலைநகருக்குப் பயணமாவதை எப்படி அவளுக்கு அறிவிப்பது?’ – என்று வருந்தினான்.

“நீங்கள் இருவரும் விரைந்து சென்று என் வரவை அமைச்சர் பெருமானுக்கு உரைப்பதற்குள் நான் பின் தொடர்ந்து வந்து விடுகிறேன்” என்றான் குமரன். அதைக் கேட்டு வலியனும் பூழியனும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துப் பொருள் பொதிந்த புன்னகை புரிந்தனர். அப்படியே செய்வதாகவும் கூறிவிட்டுப் புறப்பட்டனர். ஆனால் அவர்கள் கொடுங்கோளூர் நகரெல்லையைக்கூடக் கடந்திருக்கமாட்டார்கள். அதற்குள் பயங்கரமான செய்தியொன்று கடற்கரைப் பக்கமிருந்து படைக்கோட்டத்துக்கு வந்துவிட்டது.

Source

Previous articleRead Vanji Maanagaram Ch 1
Next articleRead Vanji Maanagaram Ch 3

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here