Home Na Parthasarathy Read Vanji Maanagaram Ch 20

Read Vanji Maanagaram Ch 20

90
0
Read Vanji maanagaram Ch 20 Free, Vanji maanagaram is a historical novel. Vanji Maanagaram Ch 20. Download Vanji Maanagaram Free, vanji maanagaram pdf
Vanjimanagaram Ch 20 வஞ்சிமாநகரம் அத்தியாயம் 20: மன்னர் வருகிறார்

Read Vanji Maanagaram Ch 20

வஞ்சிமாநகரம்

அத்தியாயம் 20: மன்னர் வருகிறார்

Read Vanji Maanagaram Ch 20

நீண்ட நேரம் வேளாவிக்கோ மாளிகை முன்றிலே நடந்து நடந்து கால்கள் ஓய்ந்து எங்காவது சிறிது நேரம் உட்காரலாம் என்று குமரன் நம்பி நினைத்தபோது அவன் முற்றிலும் எதிர்பாராத விதமாக அமைச்சர் அழும்பில்வேளே அங்கு வந்து விட்டார்.

“படைத் தலைவனுக்கு எல்லா மங்கலங்களும் நிறையுமாக ! பெருமன்னரும் பெரும்படைத் தலைவரும், படைகளும் கோநகரில் இல்லாத வேளையில் கொடுங்கோளூர்ப் படைக் கோட்டத்திலுள்ள மிகச் சில வீரர்களைக் கொண்டே கடற் கொள்ளைக்காரர்களின் முற்றுகையை முறியடித்த உன் திறமையை எவ்வளவு பாராட்டினாலும் தகும். இந்த வெற்றி தந்திரமான வெற்றி, சாமர்த்தியமான வெற்றி” என்று வாய் நிறையப் பாராட்டிக் கொண்டே அவனருகில் வந்த அமைச்சர் தன்னுடைய பாராட்டுக்கள் அவன் முகத்தில் எந்தவிதமான மலர்ச்சியையும் மகிழ்ச்சியையும் உண்டாக்காததைக் கண்டு திகைத்தார்.

ஆயினும் திகைப்பை வெளிக்காட்டிக் கொள்ளாமல் “மாமன்னரும், படைத்தலைவர் வில்லவன் கோதையும் படைகளும் குயிலாலுவப் போரில் வெற்றி பெற்றுத் திரும்பி வந்து கொண்டிருக்கிறார்கள். நீலமலையில் தற்சமயம் அவர்கள் பாடியிறங்கியிருப்பதாகத் தெரிகிறது. அநேகமாக இன்னும் இரண்டு நாள் பயணத்தில் அவர்கள் இங்கே கோநகருக்கு வந்துவிடக்கூடும்! மாமன்னர் செங்குட்டுவரையும், படைத் தலைவரையும் சேரநாட்டுப் படைவீரர்களையும் வெற்றி வீரர்களாக வரவேற்க நம் நகரம் விழாக் கோலம் பூணப் போகிறது” என்று வேறு திசைக்குப் பேச்சை மாற்றினார்.

அதைக்கேட்டும் கொடுங்கோளூர்ப் படைக்கோட்டத்துத் தலைவன் அதிகம் பேசாமல், “அரசர் பெருமானும் படைகளும் வெற்றிவாகை குடிக் கோநகருக்குத் திரும்புகிறார்கள் என்பதை அறிந்து மகிழ்கிறேன் அமைச்சரே!” என்று மட்டும் அளவாக மறுமொழி கூறினான்.

“மன்னரின் வடதிசைப் படையெடுப்பு ஒன்றை மட்டும் இல்லை, எங்கும் படையெடுக்காமலே கடம்பர்களை நீ வென்ற வெற்றியையும் சேர்த்தே நாம் இங்கே கொண்டாடவேண்டும் குமரா! இப்போது நாம் கொண்டாட வேண்டிய வெற்றிகள் ஒன்றல்ல குமரா இரண்டு வெற்றிகளையுமே நாம் கொண்டாட வேண்டும்” என்று அமைச்சர் கூறியபோது,

“நான் பெற்றதும் ஒரு வெற்றி என நீங்கள் கொண்டாட முன் வந்திருப்பது தங்கள் கருணையைக் காண்பிக்கிறது அமைச்சரே!” என்று வேகமாக உடன் மறுமொழி கூறினான் குமரன் நம்பி.

தந்திரமான அவனுடைய இந்த விநயத்தின் பொருள் அவருக்கு உடனே விளங்கவில்லை.

“ஏன் அப்படிச் சொல்கிறாய் குமரா?” என்று அவன் கண்களில் மின்னும் உணர்ச்சி ரேகைகளைக் கவனித்தபடியே அவனைக் கேட்டார் அமைச்சர் அழும்பில்வேள்.

குமரன் நம்பியோ ஆத்திரத்தின் காரணமாகக் கட்டுப்பாடற்ற மனநிலையில் இருந்தான் அப்போது. எனவே அவனாலும் அமைச்சரை எதிர்கொண்டு பொருத்தமான மறுமொழி கூறிவிட முடியவில்லை.

சிறிது நேரம் ஒருவர் மனநிலையை ஒருவர் எடைபோடும் முயற்சியில் மெளனமாகக் கழிந்தது. அந்த விரும்பத்தகாத மெளனத்திற்குப்பின் குமரனே பேசினான்.

“கடம்பர்களை வென்று துரத்திய பெருமை எனக்கே உரியதா அல்லது அமைச்சர் பெருமானுக்குரியதா என்பதுதான் எனக்குப் புரியவில்லை. ஏனென்றால் இந்த வெற்றியில் நான் ஒரு சாதுரியமான கருவியாகப் பயன்படுத்திக் கொள்ளப் பட்டிருக்கிறேனேயல்லாமல் – நம்பிக்கைக்குரிய படைத் தலைவனாகவோ வெற்றிக்குரிய வீரனாகவோ பயன்படுத்திக் கொள்ளப்படவில்லை என்று தெரிகிறது. ஒருவனை நம்பிக்கையோடு போற்றுவது வேறு கருவியாகப் பயன்படுத்திக்கொண்டு அதன் மூலம் வெற்றி பெற்றபின் பாராட்டுவது வேறு.”

“இப்படியெல்லாம் நீயாக நினைத்தால் அதற்கு நான் என்ன செய்யமுடியும் குமரா?”

“இல்லை! நிச்சயமாக இதில் கற்பனை எதுவுமே இல்லை. நடந்த நிகழ்ச்சிகளிலிருந்து இதை நான் அனுமானிக்கிறேனேயொழிய கற்பனை எதுவும் செய்யவில்லை.”

“எந்த அளவு கற்பனை? எந்த அளவு அநுமானம் என்பதைப் படைத் தலைவனாகிய நீயே கூறிவிட்டால் நல்லது குமரா”

“அமைச்சர் பெருமானே! கேள்வியிலும் மறுபடி தந்திரம் வேண்டாம். வெளிப்படையாகவே கேளுங்கள்; போதும். கற்பனை எதுவும் இல்லை, அநுமானம் மட்டுமே உண்டு” என்று கூறிய பின்பும், “எந்தளவு கற்பனை? எந்தளவு அநுமானம்? என்று நீங்கள் கேட்பது என்னைப் பொறியில் சிக்க வைக்கச் செய்யும் முயற்சியாக இருக்கிறது என்பதை இந்தக் கணத்தில் நான் உணர்கிறேன்.”

“மிகவும் நல்லது படைத்தலைவா! கற்பனைக்கும் அநுமானத்துக்கும் என்ன வேறுபாடு என்பதையாவது நீ அறிவாய் அல்லவா?”

“அதை அறிவதற்கு நான் தத்துவ ஞானியோ, தர்க்க சாத்திர வல்லுநனோ இல்லை. நான் ஒரு வெறும் படைவீரன். படை வீரனுக்குத் தர்க்க சாத்திரத்தில் அதுமானத்திற்கும், கற்பனைக்கும் உள்ள வேறுபாடுகள் என்னென்ன என்பது தெரிந்திருக்க வேண்டியது அவசியமென்று தாங்கள் கருதுவீர்களாயின் அவற்றை தெரிந்து வைத்திராதது என் குற்றமென்றே நான் ஒப்புக் கொள்ள வேண்டியிருக்கும். அவ்வாறு நான் செய்ய வேண்டுமென்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்களா அமைச்சரே?”

“நான் எதையுமே உன்னிடம் இருந்து எதிர்பார்க்கவில்லை குமரா! காரணங்களை வைத்து முடிவு செய்வது அதுமானம். காரணங்கள் இல்லாமலே முடிவு செய்வது கற்பனை. என்னைப் பற்றி நீ செய்திருக்கும் முடிவுகள் ‘அநுமானங்களா’ ‘கற்பனைகளா’ என்பதை இப்போது நீ தெளிவு செய்துவிட இயலும் என்றெண்ணுகிறேன். ஏனென்றால், கற்பனைக்கும் அநுமானத்துக்கும் இடையிலுள்ள வேறுபாட்டை நானே கூறி முடித்துவிட்டேன்.”

“நீங்கள் கூறியபடியே வைத்துக் கொண்டாலும் உங்களைப் பற்றிய என் முடிவுகள் அநுமானங்கள்தான் அமைச்சரே!” என்று அவன் உறுதியாக மறுமொழி கூறினான். பேச்சு ஒரு கடுமையான திருப்பத்தை அடைந்திருந்தது. அமைச்சரும் தளர்ந்து விடவில்லை.

“உள்ளே போய்ப் பேசலாம் வா”- என்று அவனை உள்ளே அழைத்துச் சென்றார் அமைச்சர்.

அந்த வேளாவிக்கோ மாளிகையின் உள்ளே சென்று எதை விவாதித்தாலும் அது அமைச்சருக்குச் சாதகமாக முடியுமென்ற உணர்வு ஒன்று குமரனுக்கு உள்ளுற இருந்தது.

முதலில் அவன் தயங்கியும் அவர் வற்புறுத்தி உள்ளே அழைத்துச் சென்றுவிட்டார். குமரனாலும் அந்த மாளிகைக்குள் சென்றவுடன் மனத்தில் ஏற்படும் தாழ்வுமனப்பான்மையையும் பிரமையையும் தவிர்க்க முடியவில்லை.

Source

Previous articleRead Vanji Maanagaram Ch 19
Next articleRead Vanji Maanagaram Ch 21

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here