Home Na Parthasarathy Read Vanji Maanagaram Ch 21

Read Vanji Maanagaram Ch 21

81
0
Read Vanji maanagaram Ch 21 Free, Vanji maanagaram is a historical novel. Vanji Maanagaram Ch 21. Download Vanji Maanagaram Free, vanji maanagaram pdf

Read Vanji Maanagaram Ch 21

வஞ்சிமாநகரம்

அத்தியாயம் 21: வெற்றி மங்கலம்

Read Vanji Maanagaram Ch 21

வேளாவிக்கோ மாளிகைக்குள்ளேயே படைத்தலைவன் குமரன் நம்பியை அழைத்துச் சென்றவுடன் அமைச்சர் அழும்பில்வேள் தெளிவான குரலில் அவனிடம் வினாவினார்.

“கடற் கொள்ளைக்காரர்களாகிய கடம்பர்களைத் துரத்திக் கொடுங்கோளுரையும், சேர நாட்டுக் கடற்கரை நகரங்களையும் காப்பாற்றுமாறு, உனக்கு நான் கட்டளையிட்டதில் எந்த இடத்தில் எந்த விதத்தில் தந்திரம் இருக்குமென்று நீ அநுமானித்தாய்? உன்னை நான் கருவியாக மட்டுமே பயன் படுத்திக் கொண்டேன் என்று நீ எவ்வாறு கூறமுடியும்?”

“தக்க காரணங்களோடு கூற முடியுமாயினும் – உங்களுடைய இந்தக் கேள்விக்கு மறுமொழி கூறுமுன் உங்களை நான் சில கேள்விகள் கேட்க வேண்டும். அதற்கு வாய்ப்பளிப்பீர்கள் அல்லவா?” என்று அமைச்சரைப் பதிலுக்கு வினாவினான் கொடுங்கோளூர்ப் படைக்கோட்டத்துத் தலைவன்.

அமைச்சர் அழும்பில்வேள் சில கணங்கள் தயங்கிய பின், “என்னை கேள்விகள் கேட்க உனக்கு உரிமையில்லை என்று நான் கூறமுடியாது. உன் கேள்விகளை நீ இப்போதே என்னைக் கேட்கலாம்” என்றார்.

உடனே அங்கு நிலவிய அமைதியைத் தொடர்ந்து அந்த அமைதியைக் கிழிப்பது போன்ற உரத்த குரலில் குமரன் நம்பி பேசலானான்:

“மகோதைக் கரையில் கடற்கொள்ளைக்காரர்களின் பயம் அதிகமாகியதும் முதன்முறையாக நீங்கள் என்னை இதே வேளாவிக்கோ மாளிகைக்கு அழைத்து அனுப்பினர்களே, அப்போது இங்கே நம்மிருவருக்கும் இடையே நிகழ்ந்த சில உரையாடல்களை இன்று மீண்டும் நினைவூட்ட வேண்டிய நிலையிலிருக்கிறேன்.” “கொடுங்கோளூரிலேயே அழகிற் சிறந்த பெண்ணொருத்தியைக் கடற் கொள்ளைக்காரர்கள் கொண்டுபோய் விட்டார்கள். அதை நினைக்கும்போதுதான் வருத்தமாக இருக்கிறது” என்று கூறி அன்றைக்கு இருந்தாற் போலிருந்து என்னைப் பரபரப்படையச் செய்தீர்கள்.

“அப்படி ஒன்றும் நடந்திருப்பதற்கே சாத்தியமில்லையே? ஏனென்றால் நான் அங்கிருந்து புறப்படும்போதே கொள்ளை மரக்கலங்கள் கடலில் வெகுதூரத்தில் அல்லவா இருந்தன?” என்று பரபரப்போடு உங்களைக் கேட்டேன் நான்.

“என்ன நடந்தது? எப்படி அந்தப் பெண்ணைச் சிறைப் பிடித்துக் கொண்டு போனார்கள் என்றே தெரியவில்லை. கடற் கரைப் பக்கமாக உலாவச்சென்ற இரத்தின வணிகர் மகள் அமுதவல்லியைக் கடம்பர்கள் பிடித்துக் கொண்டு போய் விட்டதாக நகர் முழுவதும் பரபரப்பாக இருக்கிறது என்று உறுதியாகக் கூறினிர்கள் நீங்கள்.”

“ஆம்! நான் அவ்வாறு சொல்லி முடிப்பதற்குள்ளேயே பதற்ற மடைந்த உன் வாயிலிருந்து ‘ஆ’ வென்ற அலறல் வெளிப்பட்டது. அதையும் நான் கவனித்தேன். ஏன் இவ்வளவு பதற்றமடைகிறாய் குமரா? உனக்குக் கொடுங்கோளுர் இரத்தின வணிகர் மகள் அமுதவல்லியைத் தெரியுமா? என்று கூட நான் கேட்டேன்.”

“ஆம்! நீங்கள் என்னைக் கேட்டீர்கள். ஆனால் என்னிடம் அப்போது நீங்கள் கூறியதில் ஒன்றுமட்டும் பொய். கொடுங் கோளுர் நகருக்குள் கடம்பர்கள் வரவும் இல்லை, யாரையும் கடத்திக்கொண்டு போகவும் இல்லை. அப்படி எல்லாம் ஏதோ நடந்ததாக நீங்கள் என்னிடம் ஏன் கூறினர்கள் என்பதுதான் எனக்குப் புரியவில்லை. கடம்பர்களை நான் வென்று அவர்கள் மரக்கலங்களைச் சோதனையிட்டதில் யாருமே அவர்களிடம் சிறைப்பட்டிருக்கவில்லை என்பதைத் தெரிந்து கொண்டேன். நீங்களோ அப்படி ஒரு செய்தியைக்கூறி என் ஆவலைத் தூண்டினீர்கள். ஏன் அவ்வாறு செய்தீர்கள் என்பதை நான் அறியவேண்டும்” என்றான் குமரன்.

முதலில் மறுமொழி கூறாமல் அவன் முகத்தை நோக்கிப் புன்முறுவல் பூத்தார் அமைச்சர் அழும்பில்வேள், பின்பு மெல்ல அவனை ஒரு கேள்வி கேட்டார்.

“உண்மையிலேயே நான் கூறிய செய்தி உன் ஆவலையும் பரபரப்பையும் தூண்டியது அல்லவா?”

“ஆம்! ஏன் அவ்வாறு தூண்ட முயன்றீர்கள் என்பதுதான் இப்போது என் கேள்வியாக இருக்கிறது?”

“உன் கேள்விக்கு மறுமொழி கூற இயலாத நிலையிலிருக்கிறேன் குமரா! ஆனால் ஒன்று மட்டும் நினைவு வைத்துக்கொள்; ஒரு நாட்டை ஆபத்தான சமயங்களில் காப்பதற்கு வேண்டிய அரசதந்திர முறைகளில் எதை வேண்டுமானாலும் அதன் அமைச்சர் மேற்கொள்ளலாம்.”

“பொய்யைப் போன்ற ஒன்றைக் கூறுவதுகூட அரசதந்திர முறைகளில் அடங்கும் என்று இப்போதுதான் முதன் முதலாகக் கேள்விப்படுகிறேன் அமைச்சரே!”

“எதைப் பொய்யென்று சொல்கிறாய் நீ”

கொடுங்கோளுர் இரத்தின வணிகர் மகள் அமுதவல்லியைக் கடம்பர்கள் சிறைப்பிடித்துக்கொண்டு போய்விட்டார்கள் என்பது பொய்யென்கிறேன்.”

“பிடித்துக்கொண்டு போய்விட்டார்கள் என்பது உண்மையே. கடம்பர்கள்தான் பிடித்துக் கொண்டு போனார்கள் என்று நான் உறுதியாக எதுவும் கூறவில்லையே? கடம்பர்களே அதைச் செய்திருக்கலாம் என்பது என் அநுமானமாக இருந்தது.”

“அநுமானமான ஒரு செய்தியைக் கூறி அரசதந்திர முறைகளில் தேர்ந்த ஒர் அமைச்சர் ஒரு படைத் தலைவனிடம் என்ன பயனை எதிர்பார்த்துவிடமுடியும் என்பதுதான் தெரியவில்லை.”

“எதிர்பார்த்த பயன் எனக்குக் கிடைத்துத்தான் இருக்கிறது குமரா! கொடுங்கோளுர் இரத்தின வணிகர் மகள் அமுதவல்லியைக் கடம்பர்கள் சிறைப் பிடித்துக்கொண்டு போனார்கள் என்று கூறியதால்தான் என்னால் இந்த வெற்றியையே அடைய முடிந்தது.”

“இப்படி நீங்கள் கூறுவதன் குறிப்பு என்னவென்று தெரியவில்லையே?”

“இப்போதே தெளிவாக உனக்குத் தெரியத்தான் வேண்டுமென்றால் அதைச் சொல்லுவதற்கு நான் தயங்க வேண்டிய அவசியமில்லை. படைத் தலைவனாகிய உனக்கு இந்தப் போரில் வெற்றி கிடைத்ததற்குக் கொடுங்கோளுர் இரத்தின வணிகர் மகள் அமுதவல்லியும் ஒரு காரணம் என்பதை நீ என்னிடம் மறுக்க முடியுமா?”

“…..”

அமைச்சருக்கு மறுமொழி கூறமுடியாமல் தயங்கிக் தலைகுனிந்து – முகத்தில் நாணம் கவிழ்ந்து சிவக்க நின்றான் படைத்தலைவன்.

எந்த எல்லையில் நிற்கும்போது அவன் மிகவும் பலவீனமானவனோ அந்த எல்லையில் அவனைக் கொண்டுவந்து நிறுத்திவிட்டார் அமைச்சர். அதோடு விட்டுவிடவில்லை, அவர் மேலும் தொடர்ந்தார்:

“கடம்பர்களின் கடல் முற்றுகையைத் தகர்ப்பதற்கான ஏற்பாடுகளைக் கலந்து பேசுவதற்காக முதன்முதலாகப் படைத் தலைவன் இங்கு அழைக்கப்பட்டபோது – கொடுங்கோளுர் இரத்தின வணிகரின் மகளிடம் தான் விடைபெற்றுக்கொண்டு வந்தான். அந்த அழகிய பெண்ணிடம் சென்று தன்னுடைய வெற்றிப் பெருமிதத்தைப் பங்கிட்டுக்கொள்ள முடியவில்லையே என்ற காரணத்தினால்தான் படைத் தலைவனுக்கு என்மேல் கோபம் வருகிறது. கோபம் தவிர்க்க முடியாததுதான்.

“உன் தந்தை தான் குவித்து வைத்திருக்கும் எல்லா இரத்தினங்களையும் பற்றிக் கவலைப்படலாம். ஆனால் இந்த இரத்தினத்தைப் பற்றி மட்டும் அவர் கவலைப்படவேண்டிய அவசியமில்லை” – என்று படைத்தலைவன் அன்றைக்கு விடைபெறுமுன் அமுதவல்லிக்கு அபயமும் பாதுகாப்பையும் நாட்டு மக்கள் அனைவருக்கும் அளிப்பதற்கு – அமைச்சர் மற்றொரு தந்திரம் செய்தால் அது எப்படித் தவறாகும்?

“……..”

இப்போதும் படைத் தலைவன் மறுமொழி எதுவும் கூறமுடியாமல் தயங்கியே நின்றான். மெல்ல மெல்ல அந்த வேளாவிக்கோ மாளிகை பெரிதாகி அங்காய்த்து வாய் விரித்துத் தன்னை விழுங்கிக்கொண்டிருப்பது போல் உணர்ந்தான் அவன். தன்னைப்பற்றி அமைச்சருக்கு இவ்வளவு தூரம் தெரிந்திருக்க முடியுமென்று அவன் எதிர்பார்க்கவே இல்லை.

“பேரரசர் இங்கு திரும்பி வெற்றி மங்கலம் கொண்டாடுகிறவரை இங்கே கோநகரத்தில் தங்கி இரு. வெற்றி மங்கல விழாவில் உனக்குப் பரிசளித்துப் பாராட்டப் போகிறேன்” – என்று தன் எதிரே தயங்கித் தலை குனிந்தபடி நின்று கொண்டிருந்த படைத் தலைவனை நோக்கிக் கம்பீரமான குரவில் கட்டளையிட்டார் அமைச்சர் அழும்பில்வேள்.

அப்போது அவரை எதிர்த்தோ மறுத்தோ பேசும் மனத் துணிவு அவனுக்கு இல்லை. அரசதந்திர மாளிகையாகிய அந்த வேளாவிக்கோ மாளிகை இந்த முறையும் அவனை வெற்றி கொண்டு விழுங்கி விட்டது. பேரரசரையும் சந்திப்பதற்கு வாய்ப்பாக இருக்குமென்ற காரணத்தினால் படைத் தலைவன் குமரன் நம்பி கோநகரில் மேலும் சில நாட்கள் தங்கினான். தானும் அமுதவல்லியும், பூம் பொழிலில் கொடுங்கோளூர்ப் படைக் கோட்டத்தின் பின்புறத்தில் சந்தித்ததும் உரையாடியதும் எப்படி அமைச்சருக்குத் தெரிந்தன என்பதை விளங்கிக் கொள்ள முடியாமல் மனம் மறுகினான் அவன். அமைச்சரின் அரசதந்திர விழிப்பார்வையானது கோநகரின் வேளாவிக்கோ மாளிகையிலிருந்து நாடு முழுவதும் பார்க்கவும், அறியவும், உணரவும் ஆற்றல் பெற்றிருப்பதை அந்த விநாடியில் அவன் தெரிந்து கொள்ள முடிந்தது. இம்முறையும் வேளாவிக்கோ மாளிகை அவனுக்குத் தாழ்வு மனப்பான்மையையே தந்தது.

Source

Previous articleRead Vanji Maanagaram Ch 20
Next articleRead Vanji Maanagaram Ch 22

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here