Home Na Parthasarathy Read Vanji Maanagaram Ch 22

Read Vanji Maanagaram Ch 22

93
0
Read Vanji maanagaram Ch 22 Free, Vanji maanagaram is a historical novel. Vanji Maanagaram Ch 22. Download Vanji Maanagaram Free, vanji maanagaram pdf
Vanjimanagaram Ch 22 வஞ்சிமாநகரம் அத்தியாயம் 22: படைத்தலைவனுக்குப் பரிசு

Read Vanji Maanagaram Ch 22

வஞ்சிமாநகரம்

அத்தியாயம் 22: படைத்தலைவனுக்குப் பரிசு

Read Vanji Maanagaram Ch 22

படைத்தலைவன் கடம்பர்களை வெற்றி கொண்டு துரத்திய பின் அமைச்சர் அழும்பில்வேளின் மேல் தீராத கோபத்துடன் வேளாவிக்கோ மாளிகைக்கு வந்தபின் இரண்டு நாட்கள் கழிந்து விட்டன. மூன்றாவது நாள் வைகரையில் வஞ்சிமாநகர் பரிபூரணமான விழாக்கோலம் பூண்டிருந்தது. தோரணங்கள் நிறைந்த வீதி வாரணம் பீடுநடைபோடும் பெருந்தெருக்கள், வெற்றி மங்கலம் பாடவல்ல புலவர்களும், பாணர்களும், பாடினிகளும், கூத்தர்களும், விறலியர்களும், தெருக்கள்தோறும் கூடியிருந்தனர். கீத சாலைகளில் கீதங்களின் ஒலிகள், வேள்விச் சாலைகளில் வேத முழக்கங்கள் எல்லாம் நிறைந்திருந்தன.

நகரம் எங்கும் பூக்களின் நறுமணம். இசைகளின் இன்னொலி, நடன மகளிர் காற்சிலம்புகளின் கிண்கிணி நாதம், இவையே நிறைந்து பொங்கின. மங்கலவேளையில் வடதிசைக் குயிலாலுவத்திலிருந்து கோநகர் திரும்பிய பேரரசர் செங்குட்டுவரும் பெரும் படைத் தலைவர் வில்லவன் கோதையும் சேர நாட்டுப் படை வீரர்கள் பின் தொடர்ந்துவர நகருக்குள் துழைந்தனர். நகர மக்கள் வீதிதோறும் மன்னரையும் படைத் தலைவரையும் வாழ்த்திய வாழ்த்தொலி விண்ணதிர ஒலித்தது. மாடங்களிலிருந்தெல்லாம் மன்னர்மீதும் படைத் தலைவர் மீதும் படைகள் மீதும் பூமாரி பொழிந்தது. அரண்மனை முன்றில் பெருந்தோப் பெண்டிரும், அந்தப்புர மகளிரும் மலர்தூவி மங்கல தீபம் ஏத்தி ஆரத்தி சுற்றிக்கொட்டி அரசர் பெருமானை வரவேற்றனர்.

அமைச்சர் அழும்பில்வேளைக் கட்டித் தழுவிக்கொண்டார் அரசர். அரண்மனை ஐம்பெருங் குழுவினர், ஆயத்தார் முகத்தில் எல்லாம் அரசர் கோநகர் திரும்பிய மகிழ்ச்சி தெரிந்தது. எங்கும் மலர்ந்த முகங்களே தெரிந்தன. அரசரிடம் கொடுங்கோளுர்ப் படைத்தலைவன் குமரன் நம்பியை அழைத்துச் சென்று அவன் சாதனையை வியந்து கூறிய அமைச்சர் அழும்பின்வேள்,

“இந்தச் சாதனைக்கு ஈடாக நான் அளிக்க இருக்கும் பரிசை மாலையில் அரண்மனைக் கொலுமண்டபத்தில் நிகழ இருக்கும் வெற்றி மங்கல விழாவில் அரசர் பெருமானே இந்த இளம் படைத் தலைவனுக்கு அளிக்கவேண்டும்” – என்றும் அரசரை வேண்டிக் கொண்டார்.

“அவசியம் செய்கிறேன்! இளைஞர்களுக்குப் பரிசளிப்பதென்பது எப்போதும் எனக்கு விருப்பமான செயலே” என்று அரசரும் மகிழ்ச்சியோடு அமைச்சரின் வேண்டுகோளுக்கு இணங்கினார். இவை எல்லாம் கொடுங்கோளுர்ப் படைத் தலைவனுக்கு மகிழ்ச்சியை அளித்தாலும் அவனுடைய உள் மனத்தில் ஒரு கவலையும் இருந்தது. தன் உயிருக்குயிரான அமுதவல்லி என்ன ஆனாள் என்பதை அறியமுடியாத வேதனை அவன் மனத்தை வாட்டியது.

அதை யாரிடமும் வெளியிட்டுப் பேசவும் வாய்ப்பில்லை. பேரரசருடைய வடதிசை வெற்றியைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் கோநகரின் அரச வைபவக் கோலாகலங்களின் இடையே அவனுடைய சிறிய மனவேதனையைப் பகிர்த்து கொள்ள அவனுக்கு யாருமே கிடைக்க முடியாதுதான்.

காதலுக்கும் அதன் சுகதுக்கங்களுக்கும் அந்த உணர்வை ஆள்பவர்கள்தான் சொந்தக்காரர்கள். இன்னொருவனுடைய துணையை அதற்கு நாட முடியாது போலும் என்றெண்ணி அந்த உணர்வுகளைத் தன்னுள்ளேயே புதைத்துக் கொண்டான் படைத் தலைவன்.

பேரரசர் வெற்றி வாகையோடு நகர்ப் பிரவேசம் செய்த தினத்தன்று மாலையில் அரண்மனைக் கொலு மண்டபத்தில் வெற்றி மங்கலவிழா நிகழ்ந்தது. புலவர்கள் பேரரசருடைய வெற்றியைப் புகழ்ந்து பாடிப் பரிசில்கள் பெற்றனர்.

பாணர்களும், பாடினிகளும் அரசருடைய வெற்றியை இசைத்துப் பரிசில் பெற்றனர். கூத்தர்களும், விறலியர்களும் அரசர் பெருமானுடைய வெற்றியை ஆடிக்களித்து மகிழ்ந்தனர். அந்த ஆட்டத்துக்கு வெகுமதியாகப் பரிசும் பெற்றனர்.

இறுதியாகப் படை வெற்றிக்குத் துணையாக இருந்த வீரர்களுக்கும் படையணித் தலைவர்களுக்கும் பரிசுகள் கொடுக்கப்பட்டன.

இறுதியாக அமைச்சர் அழும்பில்வேள் முன்வந்து “கொடுங்கோளுர்ப் படைக்கோட்டத் தலைவன் குமரன் நம்பி, கடற் கொள்ளைக்காரர்களை வென்ற வெற்றிக்காக ஈடு இணையற்ற பரிசுப்பொருளைப்பெற இப்போது வருமாறு அழைக்கிறேன்” என்று கூறியவுடன் குமரன் நம்பி தயங்கித் தயங்கி அடக்க ஒடுக்கமாக நடந்து முன் வந்தான்.

அமைச்சர் அரசவையின் உள்ளே நுழையும் வாயிற்புறத்தில் நின்ற ஒரு பணிப் பெண்ணை நோக்கி ஏதோ சைகை செய்தார்.

அவள் ஒரு விநாடி உள்ளே மறைந்தாள். அடுத்த விநாடி அந்தப் பணிப்பெண் அழைத்துவந்து நிறுத்தியவளைப் பார்த்த போது குமரன்நம்பியால் தன் கண்களையே நம்ப முடியவில்லை. ஆம்! கொடுங்கோளூர் இரத்தின வணிகர் மகள் அமுதவல்லி தான் சர்வாலங்காரங்களாலும் அலங்கரிக்கப்பட்டு அவன் முன் கொணர்ந்து நிறுத்தப்பட்டாள்.

சபையில் ஒரே மகிழ்ச்சிக் கூப்பாடு ஆரவாரம், சிரிப்பொலி எல்லாம் அடங்க நீண்ட நேரமாயிற்று. அமைதி நிலவியவுடன் மறுபடி அமைச்சர் அழும்பில்வேளின் குரல் சபையில் ஒலிக்கத் தொடங்கியது:-

“இந்தப் பெண் அமுதவல்லியை கொடுங்கோளுர்ப் படைத் தலைவன் குமரன் நம்பிக்கு மணமுடித்துக் கொடுக்குமாறு பேரரசர் சார்பில் இரத்தின வணிகருக்குக் கட்டளையிடுகிறேன்” என்று அமைச்சர் கூறியவுடன், அதே அவையில் வணிகர்கள் அமர்ந்திருந்த பகுதியிலிருந்த இரத்தின வணிகர் எழுந்து வந்து மலர்ந்த முகத்தோடு, “அமைச்சர் கூறியவாறு செய்ய எனது பூரண சம்மதத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்” – என்று இணங்கினார்.

அந்த வேளையில் அமைச்சர் அழும்பில்வேள் கொலு மண்டபத்து மேடையிலிருந்து இறங்கிவந்து குமரன் நம்பியின் காதருகில் நெருங்கி, “இப்போது உண்மையைச் சொல்லி விடுகிறேன் குமரா! இவளை யாரும் எங்கும் சிறைப்பிடித்துக் கொண்டு போகவில்லை. என்னுடைய வேண்டுகோளின்படி கொடுங்கோளுர் இரத்தின வணிகர் இவளைத் தம் வீட்டிலேயே சிறை வைத்திருந்தார் என்பதுதான் உண்மை. நீ முதன் முதலாக இங்கே வஞ்சிமாநகரத்துக்கு வேளாவிக்கோ மாளிகையில் என்னைக் காணத் தேடி வந்திருந்த தினத்தன்று இரவு நான் உன்னை இங்கே காக்க வைத்துவிட்டுக் கொடுங்கோளுருக்குப் போயிருந்தது இந்தச் சூழச்சிக்காகத்தான். இப்படி ஒரு சூழ்ச்சி செய்து காரியத்தைச் சாதித்துக்கொண்டதற்காக என்னை மன்னித்துவிடு. இவளைக் கடம்பர்கள் சிறைப்பிடித்துப் போனதாக உன்னிடம் நான் பொய் கூறியிராவிடில் இவ்வளவு விரைவில் வெற்றி கிடைத்திருக்காது என்பதை நீயும் ஒப்புக்கொள்ளத்தான் செய்வாய்” என்றார்.

கொடுங்கோளுர்ப் படைத் தலைவன் இதைக் கேட்டு அமைச்சர் மேல் கோபப்படவில்லை.

அந்த ஒரு விநாடியில் வஞ்சிமாநகரம் முழுவதுமே ஒரு பெரிய வேளாவிக்கோ மாளிகையாகிவிட்டதுபோல் தோன்றியது அவனுக்கு.

அவன் கடைக்கண்ணால் அமுதவல்லியின் முகத்தை நோக்க முயன்றான். அவள் புன்முறுவல் பூத்து அந்தப் பார்வையை வரவேற்றாள்.

“இந்தப் புன்முறுவலுக்காக எதையும் பொறுத்துக் கொள்ளலாம்” என்று அவள் காதருகே மெல்லிய குரலில் கூறினான் படைத் தலைவன்.

அப்போது அவர்கள் இருவர் தலையிலும் யாரோ பூமாரி பொழிந்தார்கள். திரும்பிப் பார்த்த படைத்தலைவன் அமைச்சர் சிரித்துக் கொண்டே பூக்களுடன் அருகில் நிற்பதைக் கண்டான்.

“அமைச்சருக்கு என் சொந்த வீரத்திலும் திறமையிலும் நம்பிக்கை இல்லை. இவளைக் கடம்பர்கள் சிறைப் பிடித்ததாகக் கூறினால்தான் எனக்கு வீரமே பிறக்குமென்று முடிவு கட்டிவிட்டீர்கள் போலிருக்கிறது” என்றான் குமரன்.

“உண்மையே அதுதான் குமரா! வீரம் என்றுமே காதலின் மறுபுறமாகத்தான் இருக்கிறது. சீதை சிறைப்படவில்லை யானால் இராமன் வீரனாக நேர்ந்திருக்காது அல்லவா?” – என்று அமைச்சர் அவனுக்கு மறுமொழி கூறியபோது அவை முழுவதும் சிரிப்பொலியால் பொங்கியது. அந்தச் சிரிப்பு வெள்ளத்தில் குமரனும் அமுதவல்லியும் சேர்ந்து நகைத்த சிரிப்பின் ஒலியும் கலந்துதான் இருக்கவேண்டும்.

( நிறைவுற்றது )

Source

Previous articleRead Vanji Maanagaram Ch 21
Next articleRead Parthiban Kanavu Part 1 Ch 1

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here