Home Sandilyan Yavana Rani Part 1 Ch 10 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

Yavana Rani Part 1 Ch 10 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

76
0
Yavana Rani Part 1 Ch10 Yavana Rani Sandilyan, Read Yavana Rani Online Free, Yavana Rani PDF, Download Yavana Rani novel, Yavana Rani book, read Yavana Rani free
Yavana Rani Part 1 Ch10 | Yavana Rani Sandilyan|TamilNovel.in

Yavana Rani Part 1 Ch 10 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

யவன ராணி – சாண்டில்யன்

முதல் பாகம்

அத்தியாயம் : 10 அடிகளின் அழைப்பு

Yavana Rani Part 1 Ch10 |Yavana Rani Sandilyan|TamilNovel.in

அற்பக் காரணங்கள் வாழ்க்கையின் போக்கை எப்படி மாற்றக்கூடும் என்பதை இளஞ்செழியன் அன்றிரவு கண்டு கொண்டான். இந்திர விழாவில் தூள் எழும்பும்படி சென்ற இளஞ்சேட்சென்னியின் தேர்ச் சக்கரத்தில் அடிபட இருந்த ஒரு பெண்ணைக் காப்பாற்றியது குடும்பக் கலகத்தில் வந்து சேருமென்று இளஞ்செழியன் கனவில்கூட நினைக்கவில்லை. அடிபட இருந்து காப்பாற்றிய பிறகும் மூர்ச்சையாகிவிட்ட அந்தப் பெண்ணைத் தூக்கி அவள் வீட்டுக்கு எடுத்துச் சென்றபோது துவண்டு தொங்கிய அவள் நெற்றியிலிருந்த குங்குமம் முதலில் தன் கன்னத்திலும் பிறகு தன் மார்பிலும் விளைவித்த அடையாளங்கள், தன் வாழ்க்கைப் படகின் போக்கையே மாற்றக்கூடிய பெரும் துடுப்புகள் என்பதை இளஞ்செழியன் அறிந்திருந்தால் அந்த அடையாளங்களை நீக்கியே மனை சேர்ந்திருப்பான். ஆனால் அக்காள் மகளைப் பார்க்கும் ஆசையும் மனத்திலிருந்த தூய்மையும் இந்தப் புறத் தோற்றங்களை விலக்கும் எண்ணத்தை அறவே அளிக்க வில்லை. அன்றிரவு ஏற்பட்ட அந்த முறிவைச் சரிப்படுத்த அந்தப் படைத்தலைவன் பட்ட பாடெல்லாம் அடியோடு வீணாயிற்று.

அடுத்த இரண்டு நாட்கள் இளஞ்செழியன் எத்தனையோ முறை முயன்றும் பூவழகியைச் சந்திக்கவே முடியவில்லை. பூவழகியின் தோழி இன்பவல்லியையாவது சந்தித்து தனக்கும் சகோதரி மகளுக்கும் ஏற்பட்ட மனக் கசப்பை மாற்றிக் கொள்ள இளஞ்செழியன் செய்த முயற்சியும் பலன்ளிக்க மறுத்தது. அடிக்கடி கண்ணுக்கெதிரே நடமாடிய இன்பவல்லி தனது தலைவியின் கண்டிப்பினால் இளஞ் செழியனுடன் எந்தவித சம்பாஷணையிலும் இறங்க மறுத் தாள். அப்படித் தோழி தன்னைக் கண்டபோதெல்லாம் மறைவதைக் கண்ட படைத்தலைவன் சமயம் பார்த்து மாடிப்படிக் கருகில் அவளை ஒரு முறை வளைத்து நிறுத்தி, “உங்கள் தலைவி என்ன செய்கிறாள் இன்பவல்லி?” என்று விசாரித்த போதும் பதில் ஒழுங்காக வரவில்லை.

அவன் கேள்விக்கு, “என்ன செய்கிறார்களோ தெரியாது” என்று மட்டும் இன்பவல்லி பதில் சொல்லிவிட்டு அப்புறம் அடியெடுத்து வைக்கப் போனவளை மீண்டும் வழிமறித்து, “இன்பவல்லி” என்று கோபத்துடன் கூப்பிட்டான் படைத்தலைவன்.

“ஏன் படைத் தலைவரே?”

“நான் கேட்கிறேன்….”

“கேள்விக்குத்தான் பதில் சொல்லிவிட்டேனே!”

“பதில் சொல்லிவிட்டால் போதுமா?”

“வேறென்ன செய்யச் சொல்கிறீர்கள்?”

“பூவழகியை நான் பார்க்க வேண்டும்.”

“குறுக்கே நிற்பது நானல்லவே.”

“பின் ஏன் இரண்டு நாட்களாக என்னைக் கண்டதும் ஓடுகிறாய்?”

“ஓடுவது குறுக்கே நிற்பதாகுமா படைத்தலைவரே?”

இதற்குமேல் இளஞ்செழியனுக்கு என்ன பேசுவதென்று தெரியாததால் மிகுந்த கோபத்துடன், “உன் தலைவியை நான் உடனே பார்க்க வேண்டுமென்று சொல். அவள் இஷ்டப் படாவிட்டால் மாடிக்கு வந்து அவள் அறைக்கதவை உடைத்துத் தள்ளி அவளைப் பார்ப்பேனென்று தெரிவி” என்று ஆணையிட்டான். ‘சரி’யென்று தலையை ஆட்டி விட்டுப் போன இன்பவல்லி சற்று நேரத்திற்கெல்லாம் திரும்பி வந்து, “தலைவி தங்களைக் கூடத்துத் தென்பக்க அறையில் அமரச் சொன்னார்கள்” என்றாள்.

இதனால் கொஞ்சம் மனச் சமாதானமடைந்த இளஞ்செழியன் தென்பக்கத்து அறையிலிருந்த மஞ்சத்தில் உட்கார்ந்து பூவழகியை எதிர்நோக்கியிருந்தான். சில விநாடிகளுக்கெல்லாம் பூவழகிக்குப் பதில் அவள் தந்தை உள்ளே நுழைந்ததைக் கண்ட படைத்தலைவன் பதறி எழுந்தான்.

“வேண்டாம், உட்கார் இளஞ்செழியா!” என்றார் பூவழகியின் தந்தை.

“நான்…” என்று மென்று விழுங்கிய படைத்தலைவனை நோக்கிப் புன்முறுவல் செய்த பூவழகியின் தந்தை, “என் மகளை எதிர்பார்த்தாய் ஆனால்…” என்று இழுத்தார்.
“ஆனால் என்ன மாமா?”

“அவள் பருவமடைந்தவள்.”

“அதனால்?”

“மணமாகு முன்பு வேறு ஆண்பிள்ளைகளோடு பேசுவது முறையல்ல.”

“என்னுடன் கூடவா?”

“நீயும் ஆண்பிள்ளைதானென்று நினைக்கிறேன்.”

இளஞ்செழியன் மனத்தில் உக்கிராகாரமான கோபம் பொங்கி எழுந்தது. “நான் ஆண்பிள்ளை என்பதை இன்று தான் தெரிந்து கொண்டீர்களா?” என்று கேட்டு, சுடும் விழிகளை அவர்மீது நாட்டினான்.

பூவழகியின் தந்தைக்குப் பூவழகியின் பிடிவாதத்தை விட நூறு மடங்கு பிடிவாதம் அதிகமாயிருக்கவே அவர் சிறிதும் பிடி கொடுக்காமலே, “இல்லை, முன்பிருந்தே தெரியும். இருந்தாலும் ஊரைக் கவனிக்க வேண்டாமா?”

“ஊருக்கும் இதற்கும் என்ன சம்பந்தம்?” என்று இளஞ்செழியன் கேட்டான்.

“ஊரில்தானே நாம் இருக்கிறோம்?”

“ஆமாம்.”
“ஆகவே ஊரையும் கவனிக்க வேண்டும் இளஞ்செழியா பூவழகி பருவமடைந்த பெண். நீயோ அவளுக்கு முறைப்பிள்ளை. நானும் எல்லாச் சமயங்களிலும் வீட்டிலிருக்க முடிவதில்லை …”

பூவழகியின் தந்தை தன்னை வீட்டைவிட்டு வெளி யேற்றத் தீர்மானித்து விட்டாரென்பதையும், இதுவும் பூவழகி யின் ஏற்பாடென்பதையும் புரிந்து கொண்ட இளஞ்செழியன் இதயத்தில் வேதனை நிறைந்தது. தாயற்ற முறைப் பெண் ணுடன் தன்னைத் தனியே இருக்க அத்தனை நாள் அனுமதித்த பூவழகியின் தந்தை, அன்று ஊரைப் பற்றியும் தான் அங்கிருப்பதால் ஏற்படக் கூடிய வம்பைப் பற்றியும் சுட்டிக் காட்டியதன் காரணம் தெள்ளெனத் துலங்கியதால், அதற்கு மேலும் அந்த வீட்டிலிருப்பது முறையல்லவென்று மறுநாளே பூவழகியிருந்த பட்டினப்பாக்கத்தைத் துறந்து அதற்கும் மருவூர்ப்பாக்கத்துக்கும் இடையிலிருந்த தனித்த தோப்பின் மாளிகையில் வசித்தான். அவன் படைகள் மட்டும் காவிரிக்கு அப்புறமிருந்த வாணகிரி என்று இன்றும் அழைக்கப்படும் வாண கரைக் குன்றில் தங்கியிருந்ததால் பாதி நாட்கள் படையுடனும் மீதி நாட்கள் தன் மாளிகையில் தனித்தும் வாழ்க்கையை நடத்தினான் சோழர் படை உபதலைவன்.

இரண்டு வருஷங்களுக்கு முன்பு ஏற்பட்ட அந்தப் பிரிவு? கண்ணாடிக்கு முன்பு சில வினாடிகளே இணைந்த அந்த உறவு! இரண்டையும் மறக்க முடியவில்லை பூவழகியால். அந்தப் பழைய நினைவுகள் பிரும்மானந்தர் மடத்தின் கூடத்தில் அன்று மீண்டும் எழுந்தனவாகையால், படைத் தலைவன் ஒரு யவனப் பெண்ணைக் கையைப் பிடித்து இழுத்து வந்ததைப் பார்த்ததும் ஏற்பட்ட அதிர்ச்சி கூடத்தை விட்டு நகர்ந்து ஒருக்களித்த கதவு மூலையில் நின்ற அந்த நேரத்திலும் விளங்கவில்லை பூவழகிக்கு.

இரண்டு வருஷங்களில் எத்தனை எத்தனையோ நிகழ்ச்சிகள் நடந்தேறின. எத்தனையோ போர்களில் வெற்றி வாகை சூடினான் இளஞ்செழியன். இத்தனை சிறு வயதில் இத்தனை புகழை எய்தியவன் தமிழகத்தில் யாருமில்லை என்ற பெயரையும் வாங்கினான். யவனர்களும் தமிழர்களும் கலந்த அவன் படைப்பிரிவைக் கண்டு சேரமானும் பாண்டியனுங் கூட அஞ்சினார்கள். சோழமன்னனான இளஞ்சேட் சென்னியை ஒழித்துக்கட்ட முயன்று கொண்டிருந்த தாயாதிகள் கைகளைத் தேக்கி வைத்தது இந்தப் படைப் பிரிவினால் ஏற்பட்ட அச்சம்தான்.

இரண்டு வருஷங்களில் இளஞ்செழியனின் புகழ் ஏறியது. மக்கள் அன்பு ஏறியது. வெளிநாட்டு வணிகர்கள் அவன் காலடிகளில் கொண்டுவந்து குவித்த பொன்னும் அணிகலன்களும் ஏறின. அத்துடன் பூவழகியின் வெறுப்பும் அவன்மீது ஏறிக்கொண்டு வந்தது. அவள் வெறுப்புக்கும் பொறாமைக்கும் தூபம் போடும் நிகழ்ச்சிகளுக்கும் காவிரிப் பூம்பட்டினத்தில் கணக்கேயில்லை. இளஞ்செழியன், அரச வீதிகளில் சென்ற போதெல்லாம் அரச மாளிகையின் சாளரங்கள் திறந்து அழகிய முகங்கள் எட்டிப் பார்ப்பதையும், அவன் அழகையும், வீரத்தையும் பற்றிய பேச்சு மட்டுமன்றி பிராபல்யமானவர்களைப் பற்றிச் சமூகத்தில் சாதாரணமாக ஏற்படும் வம்புப்பேச்சும் உலாவுவதையும் கண்டும் கேட்டும் பலவித கற்பனைகளைச் செய்துகொண்ட பூவழகியின் பூ இதயத்தில் பொறாமை முட்கள் திரும்பத் திரும்பக் குத்திக் காயப்படுத்தியிருந்ததால், அவள் உள் நிலையை உள்ளபடி அறியும் சக்தியை இழந்திருந்தாள். அப்படி வெறுத்துக் கிடந்த அவள் கண்முன்னே பிரும்மானந்தரின் மடத்தில் யவன ராணியை அழைத்துக் கொண்டு உள்ளே நுழைந்ததுமே, நிதானத்தை ஓரளவு இழந்துவிட்ட பூவழகி, அவளை இளஞ்செழியன் ‘கைகளில் தூக்கிக்கொண்டு போனதாகவும் அவன் மாளிகை அறை மஞ்சத்தில் கிடத்தி சைத்தியோப சாரம் செய்ததாகவும் ராணி சாமர்த்தியமாகச் சொன்ன கதையைக் கேட்டதும் மிகவும் வெகுண்டாள். அப்படி வெகுண்டு உள்ளே சென்றவள் கதவைப் பட்டென்று மூடி ஒருக்களித்துக் கொண்டு கூடத்தை நோக்கியபோதும் அந்தப் பழைய நினைவுகள் கண் முன்னெழுந்து மனத்தைப் பிளக்கவே, ‘இப்பேர்ப்பட்டவருக்கா என் மனத்தைப் பறி கொடுத்தேன்?’ என்று பெருமூச்செறிந்தாள். அதைத் தொடர்ந்து அடிகளின் விஷமப் பேச்சு, அவள் இதயத்தில் இயக்கிவிட்ட கொதிப்பின் காரணமாக வீசிய வெறுப்புப் பார்வையில்தான் கதவோரத்தில் மறைந்து நின்ற அந்த உருவம் புலப்பட்டது.

கூடத்தின் நடுவில், யவனர்களின் வேலைப்பாட்டின் சிறப்புக்கு அறிகுறியாக மேலிருந்து தொங்கிக் கொண்டிருந்த வெண்கல விளக்கின் வெளிச்சம் கூடத்தில் நன்றாகவே வீசிக் கொண்டிருந்தாலும், பெரிய கதவு திறந்திருந்ததால் அதன் மூலையில் ஓரளவு இருட்டடித்தே கிடந்தது. இருப்பினும் மறைந்திருந்த உருவம் தரித்திருந்த மார்புக் கவசத்தின் மீது விளக்கொளி லேசாகப் பட்டதால் அது பூவழகியின் கண்களில் பளிச்சென்று தெரிந்தது.

என்ன செய்வதென்று அறியாமல் திகைத்த பூவழகி கூடத்துக்குள் திரும்பிச் சென்று மூன்றாவது மனிதன் இருப்பதை உணர்த்தலாமா என்று ஒரு கணம் நினைத்தாள். அப்படிச் சென்றால் மீண்டும் படைத்தலைவனையும் அவன் யவன ராணியையும் சந்திக்கும் அவசியம் நேரிடுமே என்ற எண்ணத்தில் ஏற்பட்ட வெறுப்பு அவளை மறுபடியும் பழைய இடத்திலேயே நிற்கவைத்தது. இடையே கூடத்தில் துவங்கியது உஷ்ணமான உரையாடல்.

பூவழகி உள்ளே செல்ல முயன்றதுமே அவளைத் தடுக்கப் போன தன்னை இடைமறித்து, ‘இந்த வயதில் இதெல்லாம் சகஜம்’ என்று கூறித் தனக்கும் யவன ராணிக்கும் இல்லாத ஒரு கற்பனை முடிச்சைப் போட்ட அடிகளை, எரித்து விடுபவன் போல் பார்த்த படைத்தலைவன் கோபத்தை ராணியின் நகைப்பு இன்னும் அதிகப்படுத்தி விடவே, “எதற்காக நகைக்கிறாய்?” என்று அவன் சீறினான், அதுவரை அவளிடம் காட்டி வந்த ‘நீங்கள், நாங்கள்’ என்ற மரியாதைச் சொற்களைக் கைவிட்டு.

ராணி விஷமப் புன்முறுவல் செய்து பிரும்மானந்தரை நோக்கினாள். அந்தப் புன்முறுவலின் அர்த்தத்தைப் புரிந்து கொண்ட அடிகளும், “புரிகிறது ராணி, புரிகிறது” என்று ஆமோதித்தார்.

“என்ன புரிந்துவிட்டது உமக்கு?” கோபத்துடன் மறுபடியும் எழுந்தது இளஞ்செழியனின் குரல்.

“உண்மை நிலை” என்றார் அடிகள், உடலை ஒரு முறை அசைத்து, மார்பிலுள்ள பெரும் பதக்கம் விளக்கில் பளபளக்க.

“எந்த உண்மை நிலை?”

“உமக்கும் ராணிக்கும் உள்ள உறவு.”

“என்ன உறவு நிலையைக் கண்டுவிட்டீர்?”

“ராணி யவன ஜாதி குடும்பத்தைச் சேர்ந்தவள்.”

“ஆமாம்.”

“மரியாதைக்குரியவள்.”

“இல்லையென்று யார் சொன்னது?”

“படைத்தலைவர் ராணியை அழைத்ததில் மரியாதை இல்லை ….”

“அதனால்?”

“சொந்தம் ஏற்படும்போது மரியாதையைக் குறைப்பதில் தவறில்லை.”

படைத் தலைவன் கண்கள் நெருப்பைக் கக்கின. “அடிகளே! உமக்குப் பைத்தியமா?” என்று கேட்டான்.

“நிச்சயமாக இந்த அடியவனுக்கில்லை” என்றார் பிரும்மானந்தர்.

“அப்படியானால் எனக்குப் பைத்தியமென்று நினைக்கிறீரா?”

“அந்தச் சந்தேகம் இதுவரை ஏற்படவில்லை.”

“பைத்தியம் இல்லையென்றால் அயோக்கியனென்று நினைக்கிறீரா?”

“அப்படி யார் சொன்னது?”

“இளவயதில் இதெல்லாம் சகஜம் என்று சொன்னீரே, அதற்கு என்ன அர்த்தம்?”

“இதற்கு விளக்கம் வேறு தேவையோ!” என்று தாமாக வியப்பது போல் சொல்லிக் கொண்டார் அடிகள்.

இதைச் சொன்ன பிரும்மானந்தர் குரலில் தொனித்த ஏளனத்தைக் கவனித்தாலும், கவனிக்காதது போல் மீண்டும் சொன்னான் படைத்தலைவன்: “அடிகளே! இன்றிரவுதான் இந்த ராணியைக் கண்டேன்.”

“நல்லது.”

“மூன்று ஜாம காலத்திற்குள் எனக்கும் ராணிக்கும் என்ன சம்பந்தமேற்பட முடியும்!”

பிரும்மானந்தர் பதில் சொல்லச் சங்கடப்பட்டார். “இந்தக் கேள்வியையெல்லாம் துறவியைக் கேட்பது சரியல்ல” என்று சொல்லிப் புன்முறுவலும் செய்தார் அடிகள்.

எதைச் சொல்லியும் அவர் கருத்து மாறாததைக் கண்ட இளஞ்செழியன், “அடிகளே, அப்படியே நான் குற்றம் புரிந்தவனாயிருந்தால் தங்களிடம் ஏன் இவளை அழைத்து வர வேண்டும்?” என்று கேட்டான்.

“அதுதான் எனக்கும் புரியவில்லை” என்று ஒப்புக் கொண்டார் அடிகள்.

இந்த வேளையில் ராணியும் மெல்ல சம்பாஷணையில் புகுந்து, “எனக்கும் அது புரியவில்லை அடிகளே” என்றாள்.

“ராணியை நம்ப வேண்டாம் அடிகளே! இவளை நான் சாதாரணமாகக் கொண்டு வரவில்லை” என்றான் படைத் தலைவன்.

“தூக்கிக் கொண்டு வந்ததாக ராணியே சொன்னாளே” என்றார் அடிகள்.

“மாளிகைக்குக் கொண்டு போனதைச் சொல்லவில்லை. இங்கு கொண்டு வந்ததைச் சொல்கிறேன்.”

“அதிலும் புதுமை இருக்கிறதா?”

இளஞ்செழியன் பொறுமையின் எல்லையைக் கடந்து விட்டதால் அந்த மடமே அதிரும்படியாகக் கூவினான். “அடிகளே! இந்த வீண் விவாதத்தை மேற்கொண்டு நான் நடத்த விரும்பவில்லை ” என்று .

“அடியவனுக்கும் அதில் விருப்பமில்லை” என்று பணி வாகவும் விஷமமாகவும் சொன்னார் அடிகள்.
அந்த விஷமப் பேச்சையோ அதைத் தொடர்ந்து அவர் பெரிய உதடுகளில் உலாவிய புன்முறுவலையோ லட்சியம் செய்யாத படைத் தலைவன் ஈட்டிகள் போன்ற கண்களைத் துறவிமீது நாட்டி, “பிரும்மானந்தரே! என் சொந்த விஷயத்தைப் பிறகு பேசிக் கொள்வோம். ஆபத்தான நிகழ்ச்சிகள் இன்றிரவு தமிழகத்தின் அரசியல் அரங்கில் நிகழ்ந்திருக்கின்றன. தெரியுமா உமக்கு?” என்று வினவினான்.

பிரும்மானந்தர் கண்களும் ஒரு வினாடி படைத் தலைவன் கண்களைச் சந்தித்துத் தாழ்ந்ததுடன், “தெரியும் படைத் தலைவரே’ என்று சாதாரணமாகவே பதில் சொன்னார் அடிகள்.

“பூம்புகார் இந்த நிமிஷத்தில் இருக்கும் நிலை?”

“அதுவும் தெரியும்.”

படைத் தலைவன், “உங்களுக்கென்ன சோதிடம் தெரியுமா?” என்றான் பொறுமை இழந்து.

“சாதாரண சோதிடம் தெரியாது படைத் தலைவரே! ஆனால் அரசியல் விஷயங்களை இந்த அடியவன் அவ்வப் பொழுது அறியும் ஆற்றலுள்ளவன் என்பதைத் தமிழ்நாடு ஒப்புக் கொண்டு வெகு நாட்கள் ஆகின்றன. உதாரணமாக இன்றிரவு…” என்று மேற்கொண்டு அவர் பேச்சைத் தொடரு முன்பு பூவழகி கூடத்தின் உட்கதவைப் படேரென்று திறந்து கொண்டு ஓடி வந்து, “சுவாமி! பேசவேண்டாம். அரசியல் விஷயம் எதையும் பேச வேண்டாம், பொறுங்கள்!” என்று கூவினாள்.
“அஞ்சாதே மகளே! அவன் இங்கிருப்பது நமக்கு எவ்வளவோ அனுகூலம்” என்று கூறிய பிரும்மானந்தர் கதவுக் கருகில் ஒளிந்திருந்தவனைச் சுட்டிக் காட்டியதல்லாமல், “அப்பனே! வா இப்படி வெளிச்சத்துக்கு!” என்று அன்புடன் அழைப்பும் விடுத்தார்.

Previous articleYavana Rani Part 1 Ch 9 | Yavana Rani Sandilyan | TamilNovel.in
Next articleYavana Rani Part 1 Ch11 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here