Home Sandilyan Yavana Rani Part 1 Ch 2 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

Yavana Rani Part 1 Ch 2 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

97
0
Yavana Rani Part 1 Ch2 Yavana Rani Sandilyan, Read Yavana Rani Online Free, Yavana Rani PDF, Download Yavana Rani novel, Yavana Rani book, read Yavana Rani free
Yavana Rani Part 1 Ch2 | Yavana Rani Sandilyan|TamilNovel.in

Yavana Rani Part 1 Ch 2 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

யவன ராணி – சாண்டில்யன்

முதல் பாகம்

அத்தியாயம் : 2 மஞ்சத்தில் ஒரு மாயச்சிலை

Yavana Rani Part 1 Ch2 | Yavana Rani Sandilyan|TamilNovel.in

கடலலைகள் கொண்டு வந்து கரையோரத்தில் ஒதுக்கிக் காலில் இடறவிட்ட அந்தக் கட்டழகி, இருள் பெரிதும் சூழ்ந்துவிட்ட இரவின் அந்த நேரத்திலும் அளித்த பிரமை தட்டும் காட்சியைக் கண்ட இளஞ்செழியனின் உள்ள உணர்ச்சிகள் ஒரு நிலையில் நில்லாமல் பெரிதும் கலங்கி விட்டதால், அடுத்தபடி என்ன செய்ய வேண்டுமென்பதை அறியாமலும் அந்தப் பெண்ணுக்கு உயிர் இருக்கிறதா இல்லையா என்பதை உணரக் கூடிய எந்த ஏற்பாட்டிலும் இறங்காமலும், ஏதோ பெரும் மந்திரத்தால் கட்டுண்டவன் போல் நின்ற இடத்திலேயே நீண்ட நேரம் கற்சிலைபோல் நின்றான். கரையோரத்தில் ஒதுக்கப்பட்டாலும் பாதி தரையிலும் பாதி நீரிலுமாகக் கிடந்த அந்தப் பாவையின் அழகிய உடலின் ஒரு பாதியைத் திரைகள் அவ்வப்பொழுது வந்து வந்து தழுவிப் பின்வாங்கியதாலும், சற்றுத் தூரத்தேயிருந்த கலங்கரை விளக்கத்தில் ஆடிய பந்தங்களின் வெளிச்சமும், கோட்டை உச்சி விளக்குகளின் சுடரொளியும் லேசாக அந்தத் திரைகளின் மீது விழுந்து திரை நீரைப் பொன் மயமாக அடித்ததாலும், அந்தப் பேரழகியின் உருவத்தை மறைக்க முயன்ற கடலரசன் தன் திரைகளைக் கொண்டு பொன்னிறப் போர்வையை அவள் மீது போர்த்திப் போர்த்தி எடுப்பதுபோல் தோன்றிய அந்த மோகனக் காட்சியைக் கண்ட இளஞ்செழியன் உள்ளத்தைப் பெரும் மாயை மூடிக் கொண்டதால், இதுவரை அவன் உள்ளத்தை ஆட் கொண்டிருந்த வேளிர்குலப் பேரழகி கூடச் சிந்தையிலிருந்து அகன்றே போனாள். எதற்கும் அசையாத சோழர் படையின் உபதலைவனின் இரும்பு நெஞ்சம் கீழே கிடந்த மோகனாஸ் திரத்தின் வசியப் பிணைப்பில் இறுகிவிட்டதையும் அப்படி இறுகிவிட்ட நெஞ்சம் எந்தப் பக்கமும் திரும்ப வழியில்லாமல் தவிப்பதையும் கண்ட விண்மீன்கள், கண்களைச் சிமிட்டி அவனை நோக்கி நகைத்தன. அந்தச் சமயத்தில் அவன் காலில் வந்து மோதிச் சென்ற கடலலைகள்கூட ‘சளக் சளக்’கென்று சத்தம் போட்டு, தங்கள் திரை நுரைகளைக் காட்டி, அவனை நோக்கிச் சிரித்தாலும், அந்தத் திரைகளின் சிரிப்பொலியைக் கூடக் காதில் லவலேசமும் வாங்கிக் கொள்ளாமல் நிலைகுலைந்து நீண்ட நேரம், நின்று கொண்டே இருந்தான் இளஞ்செழியன்.

அதுவரையில் அவன் காதில் லேசாக விழுந்து கொண்டிருந்த கடலின் பேரிரைச்சலும், தூரத்தே காவல் புரிந்து நடந்து கொண்டிருந்த யவன வீரர்களின் எச்சரிப்புக் கூச்சலும் கூட, காலில் கிடந்த கட்டழகியைக் கண்ட வினாடியிலிருந்து அடியோடு அகன்று, உலகமே ஒலியிலிருந்து விடுபட்ட சூனியம் போலும், கீழே கிடந்த அந்த அழகிய உடல் பிரதிபலித்த ஒளி மட்டுமே உலகத்தில் நிலைத்த உயிர் நிலை போலும் தோன்றக்கூடிய நிலைக்கு அவனைக் கொண்டு வந்து விட்டதால், அவன் அப்புறமோ இப்புறமோ நகரக் கூடிய உணர்வையும் இழந்து கிடந்தான்.

உணர்விழந்து கிடந்தது, தரையில் புரண்டிருந்த மங்கையா அல்லது அவளைப் பார்த்துப் பிரமை பிடித்து நின்றுவிட்ட பாண்டிய நாட்டின் அந்த வாலிப வீரனா என்பதை ஊகிக்க முடியாத கடல் நண்டுகள் சில அந்தப் பாவை மீதும், மற்றும் சில இளஞ்செழியன் கால்கள் மீதும், ஏறி ஏறிச் சென்று பார்த்து உண்மையை ஊகிக்க முடியாததால் அப்புறம் நகர்ந்து கொண்டிருந்தன. இருவரில் உணர்விழந்தது யாரென்பதை நிர்ணயிக்க முடியாது என்பதைப் பறை சாற்றுவனபோலத் தூரத்தே நங்கூரம் பாய்ச்சி நின்ற மரக்கலங்கள் தங்கள் உடல்களை இப்படியும் அப்படியுமாக அசைத்துக் கொண்டிருந்ததன்றி, அந்தப் பறைசாற்றலுக்குக் கைதட்டித் தாளம் போடுவன போல் பாய்மரத் தூண்களிலிருந்த கொடிகள் காற்றில் பலமாகப் படபடவென அடித்துக் கொண்டன. மந்திரத்தை மந்திரத்தால்தான் எடுக்க முடியும். அதை எடுக்கும் நேரமும் வந்து விட்டது என்பதை நிரூபிக்க இஷ்டப்பட்ட வானவெளி, நாண்மீன் எனப்பட்ட அசுவினி நட்சத்திரக் கூட்டத்தையும், கோண்மீன் எனப்பட்ட செவ்வாய் புதன் முதலிய கிரகங்களையும் மெள்ள மெள்ள ஒன்று திரட்டி இளஞ்செழியன் மனோ நிலையை அந்த அழகியின் மாயா சக்தியிலிருந்து விடுவிக்க ஏற்பாடு செய்து கொண்டிருந்தது. விண்ணின் இஷ்டப்படி விதி வகுக்கப் படுகிறது. நக்ஷத்திரங்களின் அசைவுக்குத் தகுந்தபடி மனித வாழ்க்கை இயங்குகிறது என்று கூறும் சோதிட சாத்திரத்தை மெய்ப்பிக்கவே அன்று கரையோரம் ஒதுங்கினவளைப் போல் அதுவரை தரையில் அடியோடு உணர்வற்றுக் கிடந்த அந்தப் பேரழகியும், அசுவினியும், செவ்வாயும் புதனும் ஒளிவிடத் துவங்கிய அந்த நேரத்தில், இளஞ்செழியன் மனத்தைக் கட்டுப் படுத்தியிருந்த மந்திரக் கணையை மெள்ள அவிழ்க்கவும் அவன் உணர்ச்சிகளை மெள்ள மெள்ள அவனுக்குத் திரும்ப அளிக்கவும் தன் பூவுடலை லேசாக ஒரு முறை அசைத்தாள்.

அந்த ஓர் அசைவு இளஞ்செழியன் இதயக் கட்டை அவிழ்த்து அவனை இந்த உலகத்துக்குள் கொண்டு வந்து விட்டதால், கடலில் ஒதுக்கப்பட்ட ஒரு பெண்ணுக்கு உதவாமல் அவளை உற்றுப் பார்த்துக் கொண்டு நேரத்தை அனாவசியமாக வீணாக்கிக் கொண்டிருந்த தன் மதியீனத்தை நினைத்துப் பெரிதும் வியந்த அந்த வாலிப வீரன், சட்டென்று உட்கார்ந்து அவள் மூக்கில் விரலை வைத்துப் பார்த்தான். நாசியிலிருந்து சுவாசம் நிதானமாகவும் ஒரே சீராகவும் வந்து கொண்டிருந்ததால் அந்தப் பெண் கடலில் எந்தக் காரணத்தால் விழுந்திருந்தாலும் நீரை அதிகமாகக் குடிக்க வில்லை யென்பதைத் தீர்மானித்துக் கொண்ட சோழர் படையின் உபதலைவன், அவள் இடது கை தழுவியிருந்த மரக்கட்டையின் நீளத்தையும் பரிமாணத்தையும் கண்டு அவள் உயிருடன் தப்பி வந்த காரணத்தையும் அலசிப் பார்த்தான். ‘எங்கோ புயலில் சிக்கி இடிவிழுந்த கப்பலிலிருந்த அடிக் கட்டை இவள் கையில் அகப்பட்டிருக்கிறது. அதைத் தழுவிக் கிடந்த இவளை அலைகள் கரை சேர்த்திருக்கின்றன’ என்று தனக்குள்ளேயே சொல்லிக் கொண்டே இளஞ்செழியன், ஒரு வினாடி அலை மோதிக் கொண்டிருந்த கரையின் மற்ற இடங்களிலும் கண்களை ஓடவிட்டு, கரையோரத்தே ஒதுங்கிக் கிடந்த பல துண்டுப் பலகைகளையும், கிழிந்த சின்னஞ்சிறு பாய்மரச் சீலையொன்றையும் கவனித்தபின் தன் ஊகம் சரியானதுதான் என்ற முடிவுக்கு முதலில் வந்தான். ‘இடி விழுந்து கப்பல் உடைந்தால் கலங்கரை விளக்கக் காவல ருக்கும் தூரத்தே நங்கூரம் பாய்ச்சியுள்ள மரக்கலங்களுக்கும் தெரிந்திருக்கா விட்டாலும், அன்றாடம் மீன் பிடிக்க நெடுந்தூரம் கடலோடும் மீனவராவது செய்தி கொண்டு வந்திருப்பார்களே! அப்படியும் ஒரு செய்தியும் காணோமே! யாருக்கும் தெரியாமல் காவிரிப்பூம்பட்டினத்துக்கு அருகில் ஒரு கப்பல் எப்படிச் சுக்குநூறாகப் போயிருக்க முடியும்? தவிர, வான வெளியில் மேகம் சிறிதுகூட இல்லாமலிருக்க அருகே ஒரு காதத்திற்குள் இடி எப்படி ஏற்பட முடியும்?’ என்று ஏதேதோ யோசித்த இளஞ்செழியன் அந்தக் கேள்விகளுக்கு ஏதும் விடை காணாததால் அந்தப் பெண்ணைத் தூக்கிச் சென்று அவளைச் சுயநிலைக்குக் கொண்டு வந்த பின்பு மீதி விவரங்களை அறிந்து கொள்ளலாம் என்ற உத்தேசத்துடன் அவளை எடுத்துச் செல்ல முனைந்து உதவிக்கு யாராவது ஆட்களைக் கூப்பிடலாமென்று கரைப் பகுதிக்காக கண்களைச் செலுத்தினான்.

இரண்டாம் ஜாமம் அதிகமாக ஏறிவிட்டதால் கூப்பிடு தூரத்தில் ஜனநடமாட்டம் ஏதுமில்லை. யவனக் காவலர் களின் இரண்டாம் ஜாம மேற்பார்வைகூட அநேகமாக முடிந்து விட்டதால், அவர்கள் கோட்டை வாயிலுக்குள் நுழைந்து ஊருக்குள் செல்வதைச் சாரிசாரியாகச் சென்ற பந்தங்கள் நிரூபித்தமையால் அவர்களைக் கூப்பிடவும் வழியில்லை. ‘மாமலையணைந்த கொண்மூப் போலவும் தாய் முலை தழுவிய குழவி போலவும்’ அதாவது கரிய மலையை அணைந்த விண்ணைப் போலவும், தாயின் மார்பகத்தை ஆசையுடன் தழுவும் குழந்தையைப் போலவும் கடலைக் கலந்து நின்றது காவிரி என்று பட்டினப்பாலை ஆசிரியர் வியப்பது போல் பெரும் புனலுடன் கடலில் கலந்த காவிரியின் சங்கமத் துறைக்கருகே அந்தப் பெண் ஒதுங்கிக் கிடந்தாலும், காவிரியின் அகலத்தின் காரணமாக எட்டவே போய்க் கொண்டிருந்த படகுகளையும் குரல் கொடுத்து அழைக்க மார்க்கமில்லாது போயிற்று இளஞ்செழியனுக்கு. இப்படி எந்த வழியும் கிட்டாது போனதாலும், அதிக நேரம் நீரிலே அவளை நிர்க்கதியாகத் தவிக்க விட்டிருப்பது வீரனுக்கு அழகல்ல என்ற உணர்ச்சியாலும், வேளிர்குல மகளைத் தவிர வேறெந்தப் பெண்ணையும் தொடக்கூட இஷ்டப்படாத இளஞ்செழியனின் வலிய கரங்கள் மெள்ள அவளைத் தரையிலிருந்து தூக்கின.

நல்ல அழகிய தோற்றமும் கட்டான சரீரமும் படைத்த அந்தப் பெண் தூக்குவதற்கு அத்தனை லேசாக இருப்பாளென்று முதலில் நினைக்காத இளஞ்செழியன், போகப் போக அவள் மிக லேசாக இருப்பதைக் கண்டு, இத்தகைய ஒரு சொர்ணச் சிலை எப்படிப் பஞ்சுபோலிருக்க முடியும் என்று நினைத்து நினைத்து ஆச்சரியப்பட்டுக் கொண்டே அவளைக் கைகளில் தாங்கி, தூரத்தே தெரிந்த கோட்டைக் கதவை நோக்கி மெள்ள மெள்ள நடந்து சென்றான். மழை பெய்து மண்ணைக் குளிர வைக்கவேண்டிய ஆவணி மாதத்தில், மழையோ குளிரோ இல்லையென்றாலும், கைகளிலே தூக்கிச் சென்ற அந்தப் பெண்ணின் நனைந்த உடையிலிருந்த தண்ணீர் அவன் இதயத்துக்கருகே வழிந்து ஓடியதாலும், அவன் கால்கள் நடந்த அதிர்ச்சியால் அவன் மார்பிலே புதைந்த அவள் அங்கலாவண்யங்களின் அசைவால் ஏற்பட்ட உணர்ச்சிகளின் வேகத்தாலும், அந்தப் பெண்ணின் சரீரத்தின் மென்மை உள்ளத்தே கிளப்பிவிட்ட எத்தனை எத்தனையோ தடுமாற்றங்களாலும் இளஞ்செழியனின் உறுதியான கால்கள்கூடச் சற்றுத் தடுமாற்றத் துடனேயே நடந்து சென்றன. பந்தங்களின் வெளிச்சம் அதிகமில்லாதிருந்தாலும், கையில் கிடந்த அந்தப் பெண் சாமான்யமான அழகுள்ளவளல்ல என்பதை அவளைத் தூக்குமுன்பாகவே அறிந்திருந்த இளஞ்செழியனின் இதயத்தில் அவளைக் கரங்களில் தாங்கிச் சென்ற அந்த நேரத்தில் வேறு ஒரு பயமும் கலந்து கொண்டது. பய மென்னும் கத்தியால் கிழிக்கப்பட்ட மாயத் திரைக்குள் ளிருந்து தலையை அவன் இதயத்துக்குள் நீட்டினாள் வேளிர் குலப் பேரழகி.

வேளிர்குல மங்கையின் எழிலுருவம் மீண்டும் இதயத்துக்குள் துளிர்த்ததும் தானிருந்த நிலையைப் பற்றி ஓரளவு சங்கடத்துக்கும் கிலிக்கும் உள்ளான இளஞ்செழியன், நடையைச் சிறிது தளர்த்தி, கோட்டை வழியே ஒருமுறை நோக்கினான். கோட்டையின் பிரதான வாயிலான கிழக்கு வாயிலில் சென்றால் யவனக் காவலர்கள் கண்களிலிருந்தோ அல்லது தன் படை வீரர்கள் பார்வையிலிருந்தோ தப்ப முடியாதென்பதைப் புரிந்து கொண்ட அந்தப் பாண்டிய நாட்டு வீரன், தான் ஒரு மங்கையை நள்ளிரவில் தூக்கிச் சென்ற விஷயம் வேளிர்குலத்து அழகிக்குத் தெரிந்தால், தன்மேல் அவளுக்கு ஏற்கெனவே உள்ள வெறுப்பு பதின் மடங்காகி விடுமென்பதையும், பிறகு அவளை எந்தக் காலத்திலும் அடைவது அடியோடு சாத்தியமில்லாது போய்விடுமென்பதையும் நினைத்துப் பார்த்து, ‘யார் கண்ணிலும் படாமல் ஊருக்குள் நுழைவதுதான் இதற்கு வழி’ என்று தீர்மானித்துக் கொண்டு கரையோர இருளிலேயே நடந்து கோட்டையின் வடபுறத்திலிருந்த திட்டிவாசலுக்குள் நுழைந்து வேகமாக ஊருக்குள் சென்றான்.

திட்டிவாசலில் பெருங்காவல் இல்லையென்றாலும், அங்கிருந்த பத்துப் பதினைந்து காவலரும், சொட்டச் சொட்ட நனைந்த ஒரு பெண்ணைத் தூக்கிக் கொண்டு உதவிப் படைத் தலைவன் வெகு வேகமாக உள்ளே நுழைந்து சென்றதைக் கண்டதும், ஒருவரையொருவர் ஆச்சரியத்துடன் சற்றுக் கேலியாகவும் கூடப் பார்த்துக் கொண்டார்கள். யவனப் பெண்மணிகள் கடல் நீராடி மதுவருந்தி மயங்கி விடுவதும், அவர்களை யவனர்கள் தூக்கிச் சென்று அவர்கள் விடுதிகளில் கிடத்துவதும் காவிரிப்பூம்பட்டினத்தில் சர்வ சகஜமான காட்சியாயிருந்தாலும், பெண்களைக் கண்ணால் கூடத் திரும்பிப் பார்க்காதவன் என்ற பெயரெடுத்த இளஞ்செழியனும் அத்தகைய கேளிக்கை விலாசத்தில் புகுந்து விட்டானென்று நிலைமையைத் தவறாகப் புரிந்து கொண்ட திட்டிவாசல் காவலர்கள், தங்கள் உள்ளத்தில் எழுந்த உணர்ச்சிகளைக் காட்டச் சாடையாக ஒருவருக்கொருவர் புன்முறுவலும் செய்து கொண்டார்கள். முதலில் அவர்களிடையே எழுந்த ஆச்சரியப் பார்வையையோ அதை அடுத்து விகசித்த உதடுகளின் புன்முறுவலையோ கவனிக்கத் தவறாத இளஞ்செழியன் கண்களில் சற்று பயச்சாயை படர்ந்தாலும், அதிகப் பேர் கவனிக்கவில்லையென்ற காரணத்தால் அந்தப் பயத்தை உதறிக் கொண்டு யவனர் தெருக்களை அடுத்திருந்த தன் மாளிகையை நோக்கி விரைந்து சென்றான்.

இரண்டாம் ஜாமம் ஏறிவிட்ட காரணத்தால் தெருக்களில் அதிக விளக்குகள் இல்லை. ஆங்காங்கு மூலைகளில் எரிந்து கொண்டிருந்த ஓரிரு தீப்பந்தங்களும் அதிக ஜ்வாலையை வீசவில்லை. நிலைமை அத்தனை அனுகூலமாயிருந்த போதிலும் இளஞ்செழியன் அந்த ஓரிரு பந்தங்களின் வெளிச்சத்தில் கூடப் படாமல், அப்பந்தங்களின் வெளிச்சத்தின் விளைவாகப் பக்கத்து மாளிகையின் பெரும் தூண்களும், தாழ்வாரங்களும் வீசியிருந்த நிழல் பிரதேசத்தி லேயே ஒதுங்கி ஒதுங்கி நடந்து சென்றான். வீதிக் காவலர் அவ்வப்பொழுது மூலைகளில் திரும்பிய சமயங்களில் மட்டும் மாளிகைத் தாழ்வாரங்களில் ஏதோ பெரும் குற்றத்தைச் செய்தவனைப் போல் மறைந்துவிட்டு, மீண்டும் நடையைத் துவங்கிய இளஞ்செழியன், மருவூர்ப்பாக்கத்தின் முதல் முப்பெரும் வீதிகளைக் கடந்து, மருவூர்ப்பாக்கத்துக்கும் பட்டினப்பாக்கத்துக்கும் இடையேயிருந்த ஒரு சாலையில் தனித்து நின்ற தன் மாளிகைக்கு வந்து முன்புறக் கதவைப் பெரிதாக இடித்து, “யாரங்கே, கதவைத் திற!” என்று இரைந்து குரலும் கொடுத்தான்.

சில வினாடிகள் சென்றதும் உட்புறத்தின் பெரும் இரும்புத் தாழ்கள் பலத்த சத்தத்துடன் சுழன்று மாளிகையின் பெரும் வாயிற்கதவு திறந்ததும், நெட்டையான இளஞ் செழியனைவிட ஒரு பிடி அதிக உயரத்துடனும் மிகுந்த பருமனான உடலுடனும் வெளியே விளக்குடன் வந்த யவன வீரனொருவன், “இத்தனை நேரம் தங்களுக்காகத்தான் காத்துக் கொண்டிருந்தேன்…” என்று ஏதோ மேலும் பேசப் போய் எதிரே படைத் தலைவனிருந்த நிலையைக் கண்டதும் பேச நா எழாமல், “படைத் தலைவர்… இது…” என்று அரையும் குறையுமாக ஏதோ உளறியதன்றிக் கையை நீட்டி அவன் கையிலிருந்த பெண்ணையும் சுட்டிக் காட்டித் திணறினான். யவன வீரன் கையில் பிடித்திருந்த விளக்கிலிருந்தே அவன் முகத்திலேற்பட்ட குழப்பத்தையும், குழப்பத்தினால் சொற் களில் ஏற்பட்ட குளறலையும், நீட்டிய அவன் பெரும் கை நடுங்கியதையும் கண்ட இளஞ்செழியன், “சரி! சரி! வழியை விடு!” என்று அவனுடன் மேற்கொண்டு ஏதும் பேசாமல் யவன வீரனைத் தன் தோளால் இடித்து ஒரு புறமாகத் தள்ளிவிட்டுக் கையிலிருந்த கட்டழகியுடன் மாளிகைக்குள் புகுந்தான். அந்த யவன வீரனும் மீண்டும் மாளிகைக் கதவைத் தாளிட்டுவிட்டு இளஞ்செழியனைப் பின்தொடர்ந்து சென்று மாடிப்படிகளில் ஏறி அங்கிருந்த தலைவன் அறைக்குள் நுழைந்தான்.

விசாலமான அந்த அறையின் நடுவில் போடப்பட்டிருந்த மஞ்சத்தில் கையில் அதுகாறும் தாங்கி வந்த அந்தப் பெண்ணைக் கிடத்தி, யவன வீரனை விளித்து விளக்குகளையும் தூண்டச் சொன்ன பின்புதான் கடற்கரையில் விதி தன் காலடியில் வீழ்த்தியவளின் வனப்பு எத்தன்மையது என்பதை இளஞ்செழியன் பூரணமாகப் புரிந்து கொண்டான்.

மஞ்சத்தில் கிடத்திவிட்ட அந்த நேரத்திலும் மூர்ச்சை முழுதும் தெளியாமலிருந்தாலும், இளஞ்செழியன் கடற்கரை யிலிருந்து அவளைத் தூக்கி வந்தபோது ஏற்பட்ட அசக்கலில் அவள் குடித்திருந்த கொஞ்ச நீரும் வாய் வழியாக வெளிவந்து விட்டதால் அவள் ஓரளவு சுரணை வரப்பெற்றுப் பஞ்சணையில் மெள்ள அப்புறமும் இப்புறமும் அசைந்தாள். புஷ்பக் கொத்துகளுடன் காற்றிலாடும் பூஞ்செடியைப் போல் அவள் மெள்ள அசைந்தபோது ஈர உடை சற்றே நெகிழ்ந்த தால் லேசாக வெளிப்பட்ட அவள் தேக லாவண்யங்களின் வெண்மை புதுத் தந்தத்தையும் பழிக்கும் தன்மையைப் பெற்றிருந்ததைக் கண்ட இளஞ்செழியன், இப்படியும் ஒரு வெண்மை படைப்பில் இருக்க முடியுமா? என்று பிரமித்துப் போனான். அதிக வெண்மையான வெள்ளல்லி புஷ்பத்தையும், செவ்வரி ஓடாத அல்லி மலரின் உள்ளிதழ்களையும்கூட உவமை சொல்ல முடியாத அத்தனை வெண்மை வாய்ந்த அந்தக் கட்டழகியின் அழகிய வதனத்தைச் சூழ்ந்த ஈரத்தால் கன்னத்தில் ஒட்டிக்கொண்டிருந்த கூந்தல் லேசாகப் பொன்னிறம் பெற்றிருந்ததாலும் நெற்றியின் விசாலத்தில் படர்ந்திருந்த அயல்நாட்டுச் சாயையாலும் தான் தூக்கி வந்தது ஒரு யவனப் பெண்மணிதான் என்பதை நிர்ணயித்துக் கொண்ட இளஞ்செழியன், இயற்கை மிகவும் செழுமையாக்கி யிருந்த அவள் வசீகர எழிலனைத்தையும் பருகிக் கொண்டு நின்றான்.

பிரதி தினம் காவிரிப்பூம்பட்டினத்தில் எத்தனையோ நாடுகளின் அழகிகளைப் பார்த்து அலட்சியத்துடன் அசட்டை செய்து சென்றிருக்கும் அவன் கண்கள் கடலில் கண்டெடுத்த அந்தக் கட்டழகியின் இணையற்ற பேரெழிலில் சிக்கி மீளமாட்டாமல் தவித்தன. கிரேக்க நாட்டின் சலவைக் கல்லால் செதுக்கப்பட்ட தெய்வ மங்கையரின் முகத்தைப் போல உயிருள்ள பெண்மணிகளுக்கும் முகம் இருக்க முடியும் என்று அவள் முகத்தை அன்று கண்ட பின்புதான் இளஞ்செழியன் நம்ப முற்பட்டான். வெள்ளை நுதலைக் கண்களிலிருந்து தடுத்து நின்ற அவள் கரிய புருவங்கள் வேண்டு மளவுக்குத் திட்டமாக வளைந்திருந்தன. சற்றுக் கீழேயிருந்த கண்ணிமைகள் சங்கு மலரின் மேல் மூடியைப்போல் வெண்மையுடனிருந்ததன்றி இமை ரோமங்களும் சங்கு மலரின் நுனிக் கறுப்பைப் பெற்றிருந்ததால் இயற்கை அவள் கண்ணுக்கென்று பிரத்தியேகமாக வகுத்த சிமிழ் போல் கண்களை மூடியிருந்த மெல்லிய சருமங்கள் காட்சியளித்தன. கடல் சில சமயம் விசிறிபோல் ஒதுக்கும் கிளிஞ்சலின் வேலைப்பாடு உயர்ந்ததா அல்லது அவற்றைப் போலவே கண்களை மூடிக்கிடந்த இமைகளின் அழகு உயர்ந்ததா என்பதை அறியமாட்டாமல் திணறினான் இளஞ்செழியன். இயற்கையின் அந்தச் சிமிழுக்கு அப்பால் வழவழப்பாக எழுந்து சற்றே குழி விழுந்து கிடந்த அவள் கன்னங்களில் சமுத்திர மணல் உறுத்தியதால் புள்ளிப் புள்ளியாக எழுந்திருந்த ரத்தச் சிவப்புகள் வைரத்தில் இழைக்கப்பட்ட சிவப்புக் கற்கள் போல் தீபத்தில் பிரகாசித்ததைக் கண்ட இளஞ்செழியன், ‘இதைப் பார்த்துத்தான் அன்னை பூமி தன் கர்ப்பத்தில் வைரங்களையும், நீரோட்டமுள்ள சிவப்புக் கற்களையும் சிருஷ்டித்துக் கொண்டிருக்க வேண்டும்’ என்று எண்ணினான். ஆனால், மணல் உறுத்தியதால் கன்னத்தில் தெரிந்த அந்தப் புள்ளிகள் அதிகச் சிவப்பா, அல்லது நீர் தழுவியதால் பளபளத்துச் செம்பருத்தி மலரின் இதழ்களைப் போல் மிக மிருதுவாகத் தெரிந்த உதடுகள் அதிகச் சிவப்பா, என்பதை மட்டும் பல நூல்களையும் கற்றுத் தெளிந்த அந்தப் பாண்டிய நாட்டு வீரனால் நிர்ணயிக்க முடியவில்லை.

மஞ்சத்தில் கிடந்த அந்த யவன மங்கையின் உடல், சிறுக்க வேண்டிய இடங்களில் சிறுத்து எழுச்சி பெற வேண்டிய இடங்களில் நன்றாக எழுச்சி பெற்றிருந்ததால் யௌவனத்துக்கு இலக்கணம் வகுக்கவே இயற்கை அவளை உருவாக்கியது போல் தோன்றியது இளஞ்செழியனுக்கு. தன் ஆட்சிக்குட்பட்ட காலத்தில் கடலரசன் தன் அலைக்கரங்களால் அவள் ஆடையில் விளைவித்த அலங்கோலத்தினால் மறைவு குறைந்து அழகு எழுந்து நின்றதன் விளைவாகப் பார்த்த இடங்களிலெல்லாம் பல வாளிகளால் தாக்கப்பட்டு, புயலில் அகப்பட்ட மரக்கலம்போல அல்லாடும் மன நிலைக்கு வந்துவிட்ட இளஞ்செழியன் பக்கத்திலிருந்த யவன வீரனை நோக்கித் திரும்பி, “இந்தா! ஒரு சீலையை எடுத்து வந்து இவள் உடலை மூடிவிடு” என்று பதறிக் கூறினான்.

இதைக் கேட்டதாலோ என்னவோ, மஞ்சத்தில் இளஞ்செழியனை மயக்க வந்த மாயச் சிலைபோல் அபார எழிலுடன் கிடந்த அந்த யவன மங்கையின் செவ்விய இதழ்களில் புன்முறுவலொன்று மெல்லப் படர்ந்தது. அந்தப் புன்முறுவலைச் சகிக்கமாட்டாத இளஞ்செழியன், “என்ன? நான் சொல்வது உன்காதில் விழவில்லையா? போர்வையை எடுத்து வா?” என்று மிரட்டிக் கொண்டே பக்கத்தில் திரும்பியதும் யவன வீரன் முகத்திலிருந்த பெரும் கிலிக்குக் காரணத்தைப் புரிந்துகொள்ள முடியாமல், “ஏன், என்ன வந்துவிட்டது உனக்கு?” என்றான்.

யவன வீரன் பதிலேதும் சொல்லாமல் யவன மங்கையின் இடது கரத்துக்காகத் தன் வலது கையை நீட்டிக் காட்டினான். கை காட்டிய திக்கில் பார்வையை ஓடவிட்ட இளஞ்செழியன் அந்த யவன மங்கையின் இடது கரத்தில் ஓர் அழகிய ஆபரணம் இருந்ததையும், அது பறக்கும் அன்னப் பறவையைப் போல் விசிறிவிட்ட சிறகுகளுடன் அமைந்து கிடந்ததையும், விலைமதிக்க முடியாத கற்கள் அதில் புதைக்கப்பட்டிருந்ததையும் கண்டான்.

அந்த நகையைப் பார்த்து யவன வீரன் ஏன் அப்படி பிரமிக்க வேண்டுமென்பதைப் புரிந்துகொள்ள முடியாத இளஞ்செழியன், “விலை உயர்ந்த நகை! இதைவிட விலை உயர்ந்த நகைகள் சோழ மண்டலத்திலும் பாண்டி நாட்டிலும் இருப்பது உனக்குத் தெரியாதா? இத்தனை நாளாகத் தமிழர் பூமியில் வசித்தும் நகையைக் கண்டு பிரமிக்கிறாயே. சரி, சரி! போர்வையை எடுத்து வா! போ!” என்று யவன வீரனைத் துரிதப்படுத்தினான்.

அதற்குப் பிறகும் கிலியை விடாத யவன வீரன் தன் பெரும் கண்களை இளஞ்செழியனை நோக்கித் திருப்பி, “படைத் தலைவரே! அது நகையல்ல! நகை ரூபத்தில் வந்திருக்கும் பெரும் தீமை. அதோ மஞ்சத்தில் கிடப்பவளும் பெண்ணல்ல. இந்த நாட்டைப் பீடிக்க வந்திருக்கும் பெரும் சாபக்கேடு!” என்று குரல் மெல்ல நடுங்கச் சொன்னான்.

“ஆபரணம் ஒரு தீமை! அழகு ஒரு சாபக்கேடு! விந்தையாயிருக்கிறது!” என்றான் இளஞ்செழியன் இகழ்ச்சி குரலில் தொனிக்க.

“விந்தை ஏதுமில்லை! அழகில் விஷமிருப்பதை இயற்கையிலேயே பார்க்கிறோம். இவள் இந்த இடத்திலிருக்க வேண்டாம். உங்களுக்கும் தீமை. உங்கள் நாட்டுக்கும் தீமை. இவளைக் கடலில் கொண்டுபோய் எறிந்துவிட்டு வருகிறேன்” என்று மஞ்சத்தில் கிடந்த அந்த அழகியைத் தூக்கச் சென்றான் யவன வீரன். தூக்கச் சென்றவன் ஸ்தம்பித்து நின்றான். அவன் கைகளை அவள் உடலில் கொடுத்த அதே வினாடியில் வாயிற்கதவு பலமாகத் தட்டப்பட்டது. “யார் உள்ளே? கதவைத் திற!” என்று அதிகாரக் கூச்சலும் கேட்டது.

அவளைத் தூக்க முற்பட்ட யவன வீரன் அவளை மீண்டும் மஞ்சத்திலேயே எறிந்துவிட்டுத் திகைப்பும் கலவரமும் கலந்த முகத்துடன் இளஞ்செழியனை நோக்கி, “படைத் தலைவரே! இனிப் பயனில்லை! ஆபத்து வந்து விட்டது” என்றான்.

Previous articleYavana Rani Part 1 Ch1 | Yavana Rani Sandilyan | TamilNovel.in
Next articleYavana Rani Part 1 Ch 3 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here