Home Sandilyan Yavana Rani Part 1 Ch 3 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

Yavana Rani Part 1 Ch 3 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

71
0
Yavana Rani Part 1 Ch3 Yavana Rani Sandilyan, Read Yavana Rani Online Free, Yavana Rani PDF, Download Yavana Rani novel, Yavana Rani book, read Yavana Rani free
Yavana Rani Part 1 Ch3 | Yavana Rani Sandilyan|TamilNovel.in

Yavana Rani Part 1 Ch 3 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

யவன ராணி – சாண்டில்யன்

முதல் பாகம்

அத்தியாயம் : 3 விதியும் மதியும்

Yavana Rani Part 1 Ch3 | Yavana Rani Sandilyan|TamilNovel.in

மனக்குழப்பம் என்னவென்பதையே அதுவரை அறியாதவனும், எப்பேர்ப்பட்ட சிக்கலான சூழ்நிலையிலும் புத்தியை மிகத் தெளிவாக நிறுத்திக்கொண்டு அலுவல் புரியக்கூடிய ஆற்றல் உடையவனென்று பிரசித்தி பெற்றவனுமான இளஞ்செழியனுடைய நுண்ணறிவுகூட, அன்றைய இரவின் இரண்டாம் ஜாமத்திற்குள் நிகழ்ந்துவிட்ட விசித்திர சம்பவங்களால் பல பக்கங்களில் இழுத்து அலைக்கழிக்கப்பட்டுச் சற்று அலங்கோலப்பட்டு நின்றதால், யவன வீரன் திகிலுக்கோ வாயிற்கதவு தட்டப்பட்டதற்கும் கடலிலிருந்து கொண்டுவரப்பட்ட யவன அழகிக்கும் ஏதோ பெருத்த சம்பந்தமிருப்பதுபோல் அந்த வீரன் நடுங்கிய நடுக்கத்திற்கோ சரியான காரணத்தைக் கற்பிக்க முடியாமல் தன் விழிகளை உயரத் தூக்கியவன் வீரன் முகத்தைச் சில வினாடிகள் ஆராய்ந்துவிட்டு, “ஹிப்பலாஸ்! நீ இந்தச் சோழ மண்டலத்துக்கு வந்து எத்தனை நாளாயிற்று?’ என்று வினவினான்.

அந்தக் கேள்விக்குக் காரணத்தைப் புரிந்துகொள்ள முடியாததாலும் புரிந்து கொள்ள இஷ்டப்பட்டாலும் வாயிற்கதவு தடதடவென்று தட்டப்பட்டதால் அப்பொழுதும் மனத்தில் விளைந்து கொண்டிருந்த கிலி அதற்கு இடங்கொடுக்காததாலும் யவனான ஹிப்பலாஸ் தன் கண்களை வாயிற்படியிலும் எண்ணங்களைக் கீழேயிருந்து வந்த சத்தங்களிலுமே சிதற விட்டதால் படைத்தலைவனை ஏறெடுத்துப் பார்க்காமலேயே, “பத்து வருஷங்களாயின படைத்தலைவரே! ஆனால், தமிழ்நாட்டில் என் வாழ்க்கை யைப் பற்றி ஆராய்ச்சி நடத்தச் சமயம் இதுவல்லவென்று தோன்றுகிறது” என்றான்.

எதிர்நோக்கியிருக்கும் ஆபத்தைச் சுட்டிக் காட்டி சற்று ஏளனத்துடனேயே பதில் சொன்ன யவனவீரனின் இதயத்தில் ஓடிய உணர்ச்சிகளை ஓரளவு புரிந்துகொண்ட இளஞ் செழியனும் தன் இதழ்களில் சற்றே இளநகை காட்டி, “ஹிப்பலாஸ்! மனித மூளையே ஓர் ஆராய்ச்சி யந்திரம், அதை உபயோகப்படுத்துவதுதான் அறிவாளிக்கு அழகு என்று இந்த நாட்டின் ஆன்றோர்கள் சொல்லுவார்கள்” என்று பதில் சொன்னான் சற்றுக் குத்தலாக.

“மனித மூளை ஆராய்ச்சி யந்திரம்தான். அதை உபயோகப்படுத்த வேண்டியதும் அவசியம்தான். ஆனால், அது விதிக்கு உட்பட்டுத்தான் இயங்குகிறது என்று எங்கள் நாட்டில் சொல்லுவார்கள். ஆகவே சில சமயங்களில் நாம் இஷ்டப்பட்டாலும் அது வேலை செய்ய மறுக்கிறது என்பதும் அனுபவத்தில் நாம் கண்ட உண்மை” என்று ஹிப்பலாஸ் சிறிது கோபத்துடனேயே பேசினான்.

“யவனர்கள் வசிக்கும் மேற்கத்தி நாட்டுக்கும் கீழ்த் திசையிலிருக்கும் தமிழ் நாட்டுக்கும் பெரும் வித்தியாசமிருக் கிறது ஹிப்பலாஸ்.”

“என்ன வித்தியாசம்?” என்று கேட்டான் ஹிப்பலாஸ்.

கோபத்தால் நிலைகுலைந்த யவன வீரன் உக்கிரத்தை உச்சிக்குக் கொண்டுபோக இஷ்டப்பட்டவன்போல் அடுத்த கேள்வியை வீசத் தொடங்கிய இளஞ்செழியன், “சூரியன் எந்தத் திசையில் உதிக்கிறான்?” என்று ஏதோ பெரிய ஆராய்ச்சியை நடத்துபவன்போல் வினவினான்.

“கீழ்த்திசையில்.”

“எங்கு அஸ்தமிக்கிறான்?”

“மேற்குத் திக்கில்.”

“அறிவும் அப்படித்தான் ஹிப்பலாஸ்! கீழ்த்திசையில் உற்பத்தியாகிறது. அது அஸ்தமிப்பது மேற்குத் திக்கில். ஆதவனுக்கும் அறிவுக்கும் நிறைய சம்பந்தமிருக்கிறது. அதனால்தான் அறிவுக்கு ஒளியையும் அறியாமைக்கு இருளையும் எங்கள் நாட்டவர் ஒப்பிட்டிருக்கிறார்கள். சூரியனைப்போல் ஒளியைப்போல் அறிவும் கிழக்கு நாடுகளில் உற்பத்தியாகி, மேற்கு நாடுகளில் அஸ்தமிக்கிறது. இப்பொழுது புரிகிறதா?”

“புரிகிறது படைத்தலைவரே! தங்கள் நாட்டு நுண்ணறிவுக்கும் இப்பொழுதுள்ள நிலைமைக்கும் என்ன சம்பந்தம் என்பதுதான் புரியவில்லை.”

“சம்பந்தமிருக்கிறது, ஹிப்பலாஸ்! அறிவு விதிக்குக் கட்டுப்பட்டது என்று சொன்னாயல்லவா?”

“ஆம். எங்கள் நாட்டில் அப்படித்தான் சொல்வார்கள்.”

“தமிழ் நாட்டில் அதை ஒப்புக் கொள்வதில்லை.”

“அப்படியா!”

“ஆமாம். விதி எத்தனை வலியதாயிருந்தாலும் அதை மதியால் வெல்ல முடியும் என்பதும் தமிழர் வழக்கு. அறிவுக்கு எதையும் அடிமைப்படுத்தக் கிழக்கத்திய நாடுகள், அதுவும் முக்கியமாகத் தமிழ்நாடு என்றும் இஷ்டப்பட்டதில்லை! ஆண்டவன் ஒருவனுக்கு அடுத்தபடியாக அறிவுக்குத்தான் இடமளித்திருக்கிறார்கள். அறிவினால் எந்த விதியையும் சமாளிக்கலாம் ஹிப்பலாஸ்! அறிவு தெளிவாகவும் மிகச் சுறுசுறுப்பாகவும் இருக்கும் வரையில் ஆபத்தில்லை ” என்றான் இளஞ்செழியன்.

யவன வீரன் ஏதோ பதில் சொல்ல வாயெடுத்தான். இந்த அனாவசியமான சம்பாஷணையின் காரணமாகக் கால தாமதம் ஏற்படவே கீழே மீண்டும் பலமாக இடிக்கப்பட்ட பெருங்கதவு அந்த மாளிகை பூராவும் பரவவிட்ட பயங்கர ஒலி அவன் வாயை அடைத்துவிட்டது. “கதவைச் சீக்கிரம் திற! இல்லையேல் கதவு உடைக்கப்படும்” என்ற ஆத்திரக் குரல் மீண்டும் எழுந்ததைக் கண்ட ஹிப்பலாஸ், “இந்த ஆபத்தைச் சமாளிக்க அறிவுரை கூறுங்கள் படைத்தலைவரே! வாசற்கதவைத் திறக்கட்டுமா, இல்லை, வந்திருக்கிற விருந்தாளிகளே கதவை உடைத்துக் கொண்டு உள்ளே வரட்டுமா? தமிழ்நாட்டில் பழக்கம் எப்படியோ?” என்று விசாரித்தான்.

“வாயிலில் வந்திருக்கிறது ஆபத்து என்று ஏன் நினைக் கிறாய்?” என்று கேட்டான் இளஞ்செழியன்.

“அவர்கள் குரல் இருக்கிற மாதிரியிலிருந்தும் கதவைத் தட்டும் முறையிலிருந்தும் வந்திருப்பவர்கள் நமக்கு மாலை சூட்ட வரவில்லையென்பது இந்த மேல்நாட்டான் ஊகம். ஆனால் ஆதவன் உதிக்கும் நாட்டைச் சேர்ந்த படைத்தலைவர் ஊகம் எப்படியோ?” என்று இளஞ்செழியனையே மடக்கினான் அந்த யவனன்.

யவனனுடைய நகைச்சுவையைக் கண்ட இளஞ் செழியன் மெல்ல நகைத்து, “ஹிப்பலாஸ்! சோழ நாட்டில் பழகிப்பழகி இடக்காகப் பேசக் கற்றுக்கொண்டு விட்டாய். வீரனாயிருப்பவன் ஆபத்தில் இருக்கவேண்டிய நிலையே இதுதான். நகைச்சுவை இதய இருளை அகற்றுகிறது. அதனால் புத்தியும் சுறுசுறுப்பாக வேலை செய்கிறது” என்று ஹிப்ப லாஸைப் பாராட்டிவிட்டு, “ஹிப்பலாஸ்! பயப்படாதே! மாடியின் வெளித் தாழ்வாரத்துக்குப்போய், வந்திருக்கும் வீரர்கள் யாரென்று விசாரி. யாராயிருந்தாலும் அவர்கள் இந்தப் பெண்ணைத் தேடி வர நியாயமே இல்லை. இவள் கடற்கரையில் ஒதுக்கப்படுவாளென்பதை யாரும் ஊகிக்க முடியாது. அப்படியே அலைகளால் ஒதுக்கப்பட்ட அடையாளம் ஏதாவது கிடைத்திருந்தாலும் அந்தப் பெண் இங்குதான் இருப்பாளென்பதைக் கண்டுபிடிக்க முடியாது. இவளை நான் எச்சரிக்கையாகத் திட்டி வாசல் வழியாக எடுத்து வந்திருக்கிறேன். ஆகவே பதற்றமில்லாமல் நிதானமாக நடந்துகொள். கதவைத் திற, ஆனால் கூடியவரை தாமதப் படுத்து” என்றான்.

படைத் தலைவனின் மனப்போக்கைப் புரிந்துகொண்டு நடப்பதில் மிக நிபுணனென்று பூம்புகார் முழுவதிலும் பெயர் பெற்ற ஹிப்பலாஸும், இளஞ்செழியனின் சொற்களை நன்றாக மனதில் வாங்கிக்கொண்டு, உள்ள நிலைமையைச் சமாளிக்க, தான் நடக்கவேண்டிய முறையையும் தீர்மானித்துக் கொண்டு மாளிகையின் வெளித் தாழ்வாரத்துக்காகச் சென்று தலையை வெளியே நீட்டி, “யார் நள்ளிரவில் கதவை இடிப்பது?” என்று அதட்டினான்.

மேலிருந்து யாரோ குரல் கொடுப்பதைக் கேட்டு வாயிலில் குழுமியிருந்த நாலைந்து வீரர்களில் ஒருவன் அண்ணாந்து பார்த்து, “கோட்டைக் காவலர் தலைவர் வந்திருக்கிறார்” என்று கீழிருந்து பலமாகக் கூறினான். தூரத்தே கேட்டுக் கொண்டிருந்த யவன மங்கையர் நடனக் கூச்சலையும் அதற்காக வாசிக்கப்பட்ட இசைக் கருவிகளின் இன்ப ஒலியையும் மாசுபடுத்த வந்த அபஸ்வரம் போல் ஊடுருவிய அந்தச் சொற்களைக் கேட்ட ஹிப்பலாஸ் உள்ளூரச் சற்றுக் கலங்கினாலும் அதை வெளிக்குக் காட்டாமலே, “காவலர் தலைவருக்கு இந்த நள்ளிரவில் இங்கென்ன வேலை?” என்று வினவினான்.

“அவசரக் காரியம்” என்று கிடைத்தது பதில்.

“என்ன காரியம் அது?”

“உன்னிடம் சொல்ல முடியாது ஹிப்பலாஸ்! உங்கள் படைத் தலைவரை நேரில் பார்க்கவேண்டும்.”

“இப்பொழுது முடியாது.”

“ஏன்?”

“படைத்தலைவர் உறங்கிவிட்டார்.”
“உறங்கினாலும் எழுப்ப வேண்டும்.” இந்த முறை கீழிருந்து வந்தது பழைய குரலாயில்லாமல் அதிகாரம் கலந்த மிகப் பயங்கரமான வேறு குரலாயிருக்கவே, தலையை நன்றாக வெளியில் நீட்டி யாரென்று கவனித்த ஹிப்பலாஸ் வீதி விளக்கின் வெளிச்சம் பேசியவன் முகத்தில் அடிக்கவே, “அடடே! தாங்களா? இதை ஏன் அவன் முன்பே சொல்ல வில்லை?” என்று ஏதோ திகிற்பட்டவன்போல் பாசாங்கு செய்து, முதலில் பேசியவனைத் தன் கையால் சுட்டிக் காட்டினான்.

அதுவரை கீழ்க்கட்டின் முகப்பில் நின்று கதவைத் தட்டித் தட்டி அலுத்துப்போய், கதவு திறக்காதது மட்டு மல்லாமல் மேலிருந்து வந்த அனாவசியக் கேள்விகளையும், அதனால் ஏற்பட்ட தாமதத்தையும் பொறுக்காமல் தெருவுக்கு வந்த கோட்டைக் காவலர் தலைவன் மாளிகை மாடிமீதிருந்த ஹிப்பலாஸை நோக்கி, “இப்பொழுது யாரென்று தெரிந்து விட்டதல்லவா? சீக்கிரம் கதவைத் திற” என்று அதட்டினான்.

“இதோ ஒரு வினாடி, வந்துவிட்டேன்” என்று சுறு சுறுப்பைப் பேச்சில் காட்டினாலும் நடையில் காட்டாத யவனன் மீண்டும் மாடித் தாழ்வாரத்தை அடுத்திருந்த படைத்தலைவரின் அறைக்குள் நிதானமாக வந்து, “படைத்தலைவரே! வந்திருப்பவன் கோட்டைக் காவலர் தலைவன். அதட்டல் பலமாயிருக்கிறது. கதவைத் திறக்கட்டுமா?” என்று கேட்டான்.

“கண்டிப்பாகத் திறக்கவேண்டும் ஹிப்பலாஸ். பூம்புகாரின் கோட்டைக் காவலர் தலைவருக்குக் கதவைத்திறக்க முடியாதென்று சொல்ல சோழ மண்டலத்தில் யாருக்கு அதிகாரமிருக்கிறது? ஆனால்…” என்று கூறிவிட்டு வாசகத்தை முடிக்காமல் ஏதோ இழுத்தான் இளஞ்செழியன்.
“ஆனால்?” ஏதும் புரியாமல் விழித்த யவனனின் புருவங்கள் கேள்வி கேட்கும் தோரணையில் சற்றே உயர்ந்தன.

“நமது மாளிகைக் கதவு மிகப் பெரிது” என்றான் இளஞ்செழியன்.

“ஆமாம். சேர நாட்டு வயிர மரத்தால் செய்யப்பட்டது” என்று கூடப் பாடினான் யவனன்.

“அதைத் திறப்பது அவ்வளவு சுலபமல்ல.”

“மிகவும் கஷ்டம்.”

“தவிர…”

“தவிர?”

“தாழ்ப்பாள்கள் இரும்பினால் செய்யப்பட்டவை.”

“நல்ல வடநாட்டு இரும்பு.”

“செய்து நாட்களாயின.”

“எத்தனையோ வருஷங்கள்.”

“இந்த மாளிகையில் உன்னையும் என்னையும் தவிர…”

“வேறு ஆட்கள் ஏது?”
“ஆகவே தாழ்ப்பாள் கவனிக்காமல் துருப்பிடித்துக் கிடக்கும்.”

“ஆமாம், ஆமாம், திறப்பதும் பெரும் கஷ்டம்.”

இளஞ்செழியனுக்கு அடுத்தபடி அவன் படைகளை நடத்தும் பொறுப்புள்ள யவனனான ஹிப்பலாஸுக்கும் இளஞ்செழியனுக்கும் இத்துடன் சம்பாஷணை சற்று நின்றாலும் ஒருவரையொருவர் நன்றாகப் புரிந்து கொண்டதால் மேற்கொண்டு நடக்கவேண்டிய காரியத்தைக் கவனிக்க யவனனான ஹிப்பலாஸ் கீழே செல்ல ஓர் அடி எடுத்து வைத்தான். “ஹிப்பலாஸ்” என்று அழைத்து மீண்டும் அவனைத் தடுத்த இளஞ்செழியன், “நான் உறங்கி நீண்ட நேரமாகிறது. இந்த அறைக் கதவு தாழிடப்பட்டிருக்கும். ஆகவே, திரும்பி வந்து கதவைப் பலமாகத் தட்டு” என்றும் உத்தரவிட்டான்.

இளஞ்செழியனின் எண்ணத்தைச் சந்தேகமறப் புரிந்து கொண்ட யவனனான ஹிப்பலாஸ் மிக நிதானமாக மாடிப் படிகளில் இறங்கிச் சென்று கதவுக்கருகில் வந்து தாழ்ப்பாள் களை அசைப்பது போலும், தாழ்ப்பாள் தொல்லை கொடுப்பது போலும் பாசாங்கு செய்து போதியவரையில் நேரத்தை ஓட்டிவிட்டுக் கடைசியாகக் கதவைத்திறந்து ஏதோ அசாத்தியமான காரியத்தைச் சாதித்து விட்டவன்போல் பெருமூச்சு விட்டுக்கொண்டே, “காவலர் தலைவர் மன்னிக்கவேண்டும். கவனிப்பாரில்லாமல் தாழ்ப்பாள் துருப்பிடித்து இறுகிக் கிடக்கிறது” என்று கோட்டைத் தலைவனை வணங்கி மிகவும் மரியாதையான குரலில் பேசினான்.
ஹிப்பலாஸின் வணக்கத்தையோ மரியாதையையோ சிறிதும் லட்சியம் செய்யாத கோட்டைக் காவலர் தலைவன் கதவு திறக்கப் பெரும் தாமதம் ஏற்பட்டதன் விளைவாகக் கோபம் தலைக்கேறியிருந்ததால், “தலை போகிற நிகழ்ச்சி நேர்ந்திருக்கிறது. கதவைத் திறக்க உனக்கு ஜாமம் ஒன்றாகிறது”

என்று கடிந்துகொண்டதன்றி, “எங்கே உன் தலைவர்?” என்று அதட்டலான குரலில் கேட்டான்.

“இரையாதீர்கள். தலைவர் விழித்துக் கொண்டால் கோபிப்பார்” என்று ஹிப்பலாஸ் எச்சரிக்கை செய்தான்.

கோட்டைத் தலைவன் கண்கள் நெருப்புப் பொறிகளைக் கக்கின. “தூங்குகிறாரா? எப்பொழுது படுத்தார் ஹிப்பலாஸ்? எத்தனை வினாடிகள் இருக்கும்” என்று கோபத்தால் துடித்த உதடுகளிலிருந்து சுடுசொற்களையும் உதிரவிட்ட கோட்டைத் தலைவன் மேற்கொண்டு நேரத்தை வீணாக்க இஷ்டப்படாமல் ஹிப்பலாஸை முன்னால் செல்ல உத்தரவிட்டு அவனைத் தொடர்ந்து தன் வீரர்களுடன் மாடிப்படிகளில் ஏறிச் சென்றான். அப்பொழுதும் சிறிது தாமதப்படுத்த இஷ்டப்பட்ட ஹிப்பலாஸ், “பந்தம் பிடித்திருக்கும் வீரன் வேண்டுமானால் முன்னால் செல்லலாமே. வெளிச்சம் நன்றாகத் தெரியும்; தங்களுக்குப் படியேறவும் சௌகரியமாயிருக்கும்” என்று மீண்டும் பேச ஆரம்பிக்கவே, “அவசியமில்லை. உள்ள வெளிச்சம் போதும். பந்தம் பிடிப்பவன் பின்னால் வரட்டும்” என்று பேச்சைப் பட்டென்று அறுத்த கோட்டைத் தலைவன் கையில் உருவிப் பிடித்திருந்த தன் கத்தி முனையால் ஹிப்பலாஸைத் தட்டி, “உம் நட” என்று கட்டளையிட்டான்.
ஹிப்பலாஸ் அதற்கும் அசையாமல் தாமதமாகவே படிகளில் ஏறி, கோட்டைத் தலைவனையும், இதர காவலர் களையும் அழைத்துக்கொண்டு படைத்தலைவன் அறைக்கு வந்து சேர்ந்து, “பிரபு! பிரபு! சற்றுக் கதவைத் திறங்கள்” என்று கூப்பிட்டுக் கதவை லேசாக இருமுறை தட்டினான். அதற்குப் பதிலேதும் வராதுபோகவே, “நான் என்ன சொன்னேன்? படைத்தலைவர் நன்றாகத் தூங்குகிறார், கோபித்தால் நீங்கள் தான் பொறுப்பாளி” என்று கோட்டைத் தலைவன்மேல் பழியைப் போடுவது போலச் சொல்லிவிட்டு, “பிரபு! மிகவும் அவசரம், கதவைத் திறவுங்கள்” என்று இரண்டாம் முறை சற்றுப் பலமாகவே அறைக்கதவை இடிக்கவே உள்ளே படைத்தலைவன் மஞ்சத்திலிருந்து எழுந்திருக்கும் சப்தமும், மஞ்சம் லேசாக அசையும் ஒலியும் கேட்டன. அவற்றைத் தொடர்ந்து சில வினாடிகளில் திறக்கப்பட்ட கதவுக்கருகில் கையில் அப்பொழுதே ஏற்றப்பட்ட விளக்குடன் காட்சியளித்த இளஞ்செழியன் சற்றே கலைந்திருந்த தன் ஆடைகளைச் சரி செய்துகொண்டு “ஹிப்பலாஸ்! எதற்காக என்னை எழுப்பினாய்? இரண்டு ஜாமங்கள் முடிந்துவிட்டன, தெரியவில்லையா உனக்கு?” என்று சீற்றத்துடன் வினவினான்.

“எனக்குத் தெரிகிறது படைத் தலைவரே! ஆனால் இவர்களுக்குத் தெரியவில்லை ” என்று கூறி, சற்று நகர்ந்து பின்னால் நின்றிருந்த கோட்டைத் தலைவனையும் இதர காவல் வீரர்களையும் சுட்டிக் காட்டினான் ஹிப்பலாஸ்.

அவர்களை அப்பொழுதுதான் பார்த்தவன்போல் நடித்த சோழர் படைத்தலைவன், “அடடா! கோட்டைத் தலைவரா, மன்னிக்கவேண்டும். வாருங்கள், உள்ளே வாருங்கள்!” என்று அழைத்து அறைக் கதவுகளை நன்றாகத் திறந்து, “ஹிப்பலாஸ்! தலைவர் உட்கார மஞ்சமொன்று கொண்டு வந்து போடு” என்று உத்தரவும் விடுத்தானானாலும், அறையின் நிலையைக் கவனித்த ஹிப்பலாஸ் மட்டும் அந்த உத்தரவை நிறைவேற்றத் திராணி சிறிது மில்லாமல் கல்லாய்ச் சமைந்து நின்றான்.

அறை முழுவதும் கவசங்களும் படைக் கலங்களும் சிதறி அல்லோலகல்லோலப்பட்டுக் கிடந்ததையும், அந்த நிலைக்குச் சிகரம் வைத்ததுபோல் அறையில் படைத் தலைவன் மஞ்சத்தில் கிடத்திய யவனப் பேரழகி சுவடு தெரியாமல் அடியோடு மறைந்துவிட்டதையும், படைத் தலைவன் மஞ்சத்திற்குக் கீழே சில ஓலைச் சுவடிகள் மட்டும் கிடப்பதையும் கண்ட ஹிப்பலாஸ், ‘போர்க் கவசங்கள் ஏன் இப்படிக் கிடக்கின்றன? இதென்ன ஓலைச் சுவடிகள்? மாடியிலிருப்பது இது ஒரே அறை. மற்ற இடங்கள் வெளித் தாழ்வாரங்கள். அப்படியானால் அவள் என்ன ஆனாள்?’ என்று பலவாறாக யோசித்து விடையேதும் காணாமல் குழம்பிப் போய் எதிரேயிருந்த படைத் தலைவனை நோக்கி மிரள மிரள விழித்தான்.

ஹிப்பலாஸைத் தொடர்ந்து மிக மூர்க்கத்தனமாக உள்ளே நுழைந்த கோட்டைத் தலைவனும் மிகுந்த சந்தேகத்துடன் அறையைத் தன் கண்களால் துழாவிவிட்டு, பிறகு ஹிப்பலாஸைப் போலவே பெரும் குழப்பமடைந்த வனாய், “மஞ்சம் ஏதும் தேவையில்லை, படைத்தலைவரே! அந்தப் பெண் எங்கே?” என்று வினவினான்.

“பெண்ணா?” என்று ஏதும் புரியாதவன் போலக் கேட்டான் இளஞ்செழியன்.

“ஆம்! நீங்கள் தூக்கி வந்த பெண், எங்கே அவள்?”

“நல்ல கேள்விகள், கோட்டைத் தலைவரே! இளஞ் செழியன் நடத்தைக்கு மாசு கற்பிக்கத் துணிந்த முதல் வீரர் தாங்கள்தான்.”

“தங்கள் நடத்தைக்கு மாசு யார் கற்பித்தார்கள்?”

“பின் எதற்காக என் அறையில் பெண்ணைத் தேடிக் கொண்டு வருகிறீர்கள்?”

“தவறாக அர்த்தம் செய்து கொண்டிருக்கிறீர்கள் படைத்தலைவரே! இந்தப் பெண் அப்படிப்பட்ட பெண்ணல்ல; சாதாரணப் பெண்ணல்ல.”

“கற்புக்கரசியாக்கும்?”

“அதல்ல விஷயம்.”

“இருக்க முடியாது, இருக்க முடியாது. எப்பொழுது இரவில் மணமாகாத ஆண் மகன் அறையில் அவளைத் தேடுகிறீர்களோ அவள் கற்புக்கரசியாக இருக்க முடியாது. ஆனால் யாராயிருந்தாலும் பெண்ணுக்கு இங்கென்ன வேலை?”

“அதைப்பற்றி எனக்குத் தெரியாது. ஆனால் ஒரு பெண்ணை நீங்கள் தூக்கி வந்திருக்கிறீர்கள். இது மட்டும் தெரியும்.”

“நானா!”

“ஆம், திட்டிவாசல் வீரர்கள் பார்த்திருக்கிறார்கள்.”

“சாட்சிகூட இருக்கிறதா?”

“இருக்கிறது.”

“நான் பெண்ணைத் தூக்கி வந்திருப்பதாகத் தங்கள் வீரர்கள் கூறுகிறார்கள்?”

“ஆம்.”

“நேரில் பார்த்திருக்கிறார்கள்?”

“ஆம்.”

“சரி, புரிந்துவிட்டது.”

“என்ன புரிந்துவிட்டது?”

“வீரர்கள் அளவுக்கு மீறிக் குடித்திருக்கிறார்கள். கோட்டைத் தலைவர், காவற்காரர்களையாவது குடி விஷயத்தில் கட்டுப்பாடு செய்தால் ஆள்மாறாட்டமிருக்காது. மது அருந்துவதில் மிதம் வேண்டும் கோட்டைத்தலைவரே! இதைக் காவலாளிகளுக்கு இனியாவது சொல்லி வையுங்கள்” என்று கூறிய இளஞ்செழியன் மெள்ள மஞ்சத்தில் சாய்ந்தான். அறையைச் சுற்றி மீண்டும் ஒரு முறை கண்களைச் சுழலவிட்ட கோட்டைத் தலைவன் அங்கு எந்தப் பெண்ணையும் காணாததால் வெளித்தாழ்வாரங்களையும் ஒரு முறை சோதித்துவிட்டு, ‘இளஞ்செழியன் கூறுவதும் ஒருவேளை உண்மையாயிருக்கக்கூடும். வீரர்கள் குடித்து ஏன் உளறி யிருக்கக் கூடாது’ என்ற சந்தேகம் மெள்ளத் தலைகாட்டவே அறையைவிட்டு வெளியேறக் காலெடுத்து வைத்தவன் சட்டென்று நின்றான். அவன் போக முற்பட்டதைக் கண்டு அமைதிப் பெருமூச்சு விட்ட ஹிப்பலாஸும் கோட்டைத் தலைவன் கண்கள் சென்ற திக்கை நோக்கியதும் காரியம் மிஞ்சிவிட்டதென்பதையும், குட்டு உடைந்துவிடுமென்பதையும் தெரிந்து கொண்டு நடுங்கினான். கோட்டைத் தலைவன் கண்கள் சென்ற திக்கில் அறையின் ஒரு மூலையில் யவனப் பேரழகியின் இடது கை ஆபரணம், சிறகு விரித்துப் பறந்த அன்னப் பறவை-விழுந்து கிடந்தது. அதை நோக்கிய இளஞ்செழியன் கண்களில் மட்டும் எந்தவித உணர்ச்சியுமில்லாதிருந்தாலும் விளக்கொளியில் அந்த அன்னப் பறவையின் சிறகிலிருந்த வைரங்கள் ஜொலித்துச் சிரிப்பன போலவும், ‘உன் வாழ்வையே எரித்து விடுகிறேன்’ என்று பறவையின் கண்களில் பதிக்கப் பெற்றிருந்த இரு பெரும் சிவப்புக் கற்கள் நெருப்பைக் கக்குவனபோலும் ஹிப்ப லாஸுக்குத் தோன்றியதால் மேல்நாட்டு விதி கீழ்நாட்டு மதியை வென்றுவிட்டதென்று முடிவுக்கு வந்தவனாய், அடுத்து நேரிடவிருந்த நிகழ்ச்சிகளைச் சமாளிக்க ஆயத்தமாகி, இடையிலிருந்த கத்தியில் கையை வைத்தான். கை அவன் கத்தியை அணுக முடியவில்லை. கண்ணிமைக்கும் நேரத்தில் காவலரின் இரு ஈட்டிகள் அவன் கழுத்துக்கருகில் மெல்ல ஊர்ந்தது. அந்த ஈட்டிகளைவிடக் கூர்மையான குரலில், “படைத் தலைவனையும் சிறை செய்யுங்கள்!” என்று இரைந்து உத்தரவிட்டான் கோட்டைத் தலைவன்.

Previous articleYavana Rani Part 1 Ch 2 | Yavana Rani Sandilyan | TamilNovel.in
Next articleYavana Rani Part 1 Ch 4 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here