Home Sandilyan Yavana Rani Part 1 Ch 4 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

Yavana Rani Part 1 Ch 4 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

99
0
Yavana Rani Part 1 Ch4 Yavana Rani Sandilyan, Read Yavana Rani Online Free, Yavana Rani PDF, Download Yavana Rani novel, Yavana Rani book, read Yavana Rani free
Yavana Rani Part 1 Ch4 | Yavana Rani Sandilyan|TamilNovel.in

Yavana Rani Part 1 Ch 4 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

யவன ராணி – சாண்டில்யன்

முதல் பாகம்

அத்தியாயம் : 4 மன்னர் இல்லை! மகன் மறைந்தான்!

Yavana Rani Part 1 Ch4 | Yavana Rani Sandilyan|TamilNovel.in

படைத் தலைவனையும் சிறை செய்யுங்கள்” என்ற கோட்டைத் தலைவன் இட்ட உத்தரவு கோடையிடிபோல் அந்த மாளிகை பூராவும் பயங்கரமாக ஊடுருவிச் சென்றதையோ, தன் உதவிக்கு வரத்துணிந்த ஹிப்பலாஸின் கழுத்துக்கருகில் இரு வீரர்கள் ஈட்டிகளை நீட்டியதையோ, கோட்டைத் தலைவன் உத்தரவை நிறைவேற்றுவதற்காக மற்றுமிரு யவன வீரர்கள் உருவிய வாட்களுடன் தன்னை நோக்கியும் நகர்ந்ததையோ சிறிதும் லட்சியம் செய்யாமலும் மஞ்சத்தைவிட்டு இம்மியளவும் நகராமலும் இடித்த புளியைப்போல் உட்கார்ந்திருந்த இளஞ்செழியன், ஏதோ மிக முக்கியமான வேலையில் ஈடுபடுபவனைப் போல் மஞ்சத்துக்குக் கீழே கிடந்த ஓலைச் சுவடிகளை எடுத்து வரிசையாக அடுக்கிக் கயிற்றால் கட்ட முற்படவே, கொஞ்ச நஞ்சமிருந்த நிதானத்தையும் இழந்துவிட்ட கோட்டைத் தலைவன், “படைத் தலைவரே! அந்த ஓலைச் சுவடிகளைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம். எனது வீரர்கள் அவற்றைப் பாதுகாத்து எம்மிடம் ஒப்படைப்பார்கள். கிளம்பும் சீக்கிரம்” என்று சீற்றம் அதிகமாகத் தொனித்தக் குரலில் கூறினான்.

கோட்டைத் தலைவன் சீற்றத்துக்கோ உத்தரவுக்கோ கீழ்ப்படியும் உத்தேசத்தை லவலேசமும் காட்டாத இளஞ்செழியனும் மிக நிதானத்துடன் தன் வேலையில் முனைந்து கொண்டே, “இந்தச் சுவடிகளில் அடங்கியிருக்கும் பொக்கிஷம் என்ன என்பதைக் கோட்டைத் தலைவர் அறிந்தால் இத்தனை அவசரப்படக் காரணமிருக்காது” என்று கூறினார்.
தலையைச் சிறிதும் தூக்காமலே சாவகாசமாகச் சோழர் படையின் உபதலைவன் ஓலைச் சுவடிகளைக் கட்ட முற்பட்டதன்றி அவற்றில் அடங்கியிருந்த அறிவுப் பொக்கிஷத்தைப்பற்றிப் பேசவும் முற்பட்டதால் கோபம் தலைக்கேறிய கோட்டைத் தலைவனும், “சுவடிகளைப் பற்றி அறிய வேண்டிய அவசியம் எனக்கில்லை” என்று கடுமையாகப் பதில் சொன்னான்.

இளஞ்செழியன் சுவடிகளைக் கட்டுவதைச் சற்று நிறுத்தி, “கோட்டைத் தலைவரே! தமிழரின் பெரும் பொக்கிஷம் இந்தச் சுவடிகளில் புதைந்து கிடக்கிறது. தமிழர் போர் முறைகள், கோட்டைகள் கட்டும் வழிகள், கோட்டைக் காவலருக்குள்ள அதிகாரங்கள், இன்னும் பலப்பல விஷயங்களை இவற்றில் நீர் காணலாம்” என்று சுவடிகளின் பெருமையை விளக்கியதோடு கோட்டைத் தலைவன் முகத்தில் கூரிய தன் விழிகளையும் நாட்டினான்.

“அந்த விவரங்களைக் காண வேண்டிய அவசியமு மில்லை. அதற்கு நேரமும் இப்பொழுது எனக்கில்லை.” உக்கிரமாக வந்தது கோட்டைத் தலைவன் பதில்.

“அத்தனையும் அறிவுப் பொக்கிஷம்” என்றான் இளஞ்செழியன்.

“எனக்கு அவசியமில்லை.”

“அறிவு தேவையில்லையா?”

“இல்லை.” – கோபத்தால் நிதானத்தை இழந்திருந்த கோட்டைத் தலைவன் என்ன பதிலைச் சொல்கிறோம் என்பதை அறியாமலே இப்படிப் பதில் கூறினான். இதைக் கேட்ட இளஞ்செழியன், தன் கண்களைக் கோட்டைத் தலைவன் மீதிருந்து ஈட்டிகளிடையே நின்றிருந்த ஹிப்பலாஸின்மீது திரும்பி, “ஹிப்பலாஸ்! இப்பொழுதாவது ஒப்புக்கொள்கிறாயா?” என்று ஏதோ தர்க்கத்தில் வெற்றி கண்டுவிட்டவனைப்போல் வினவினான்.

படைத் தலைவன் மனப்போக்கை ஓரளவு புரிந்து கொண்ட ஹிப்பலாஸும், “ஒப்புக்கொள்ளாமல் என்ன செய்வது? ஒப்புக்கொள்ள வேண்டாமென்றால் அதற்குத் தான் கோட்டைத் தலைவர் இடம் வைக்கவில்லையே!” என்று மிகவும் வருந்துபவன்போல் பாசாங்கு செய்து, “உண்மைதான் படைத்தலைவரே! முற்றிலும் உண்மை” என்று வற்புறுத்தியும் பேசினான்.

கோட்டைத் தலைவன் ஏதும் புரியாமல் இளஞ் செழியனையும் அவன் வீரனான ஹிப்பலாஸையும் திரும்பித் திரும்பி இருமுறை பார்த்துவிட்டுக் கடைசியாகக் கண்களை ஹிப்பலாஸ்மீது நாட்டி, “எது உண்மை ஹிப்பலாஸ். என்ன உண்மையை இப்பொழுது புதிதாகக் கண்டுவிட்டாய்?” என்று வினவினான்.

“அதுதான் அறிவு…” என்று இழுத்தான் ஹிப்பலாஸ்.

“அதற்கென்ன இப்பொழுது?” என்று இரைந்த குரலில் கேட்டான் கோட்டைத் தலைவன்.
“ஆதவனைப் போன்றது.”

“சூரியனையா!”

“ஆம். கிழக்கில் உதிக்கிறது.”

“கிழக்கில் உதிக்கிறதா?”

“சந்தேகமில்லை. மேற்கில் அஸ்தமிக்கிறது. இதிலும் சந்தேகமில்லை.”

“என்ன உளறுகிறாய்?”

கோட்டைத் தலைவனின் இந்தக் கடைசிக் கேள்வியை இடைமறித்து வெட்டிய இளஞ்செழியன், “ஹிப்பலாஸ் உளறவில்லை கோட்டைத் தலைவரே! உண்மையை உமக்குத் தெளிவாக எடுத்துரைக்கிறான். சற்று முன்புதான் நான் சொன்னேன்; அறிவு சூரியனைப் போன்றது, கீழ்த்திசையில் உதித்து மேற்கில் அஸ்தமிக்கிறது என்று. ஹிப்பலாஸ் நம்பிவில்லை . ஏன் தெரியுமா?” என்று வினவினான், ஏதோ பெரிய ஆராய்ச்சிக்கு முடிவு கண்டுவிட்டவன் போல.

“ஏன்?” இப்படிக் கேட்ட கோட்டைத் தலைவன் குரல் எரிச்சலால் வரண்டு கிடந்ததன்றி அனாவசியமான தர்க்கத்தில் நேரம் செலவாவதால் ஏற்பட்ட உக்கிரம் அவன் முகத்திலும் நன்றாகப் பிரதிபலித்தது.

“நீங்கள் வந்த பிறகுதான் அவனுக்கு உண்மை தெரிகிறது.”
“ஓகோ!”

“அறிவு மேல் திசையில் அஸ்தமிக்கிறது. கோட்டைத் தலைவரும் ஹிப்பலாஸைப்போல் யவனர். மேல் நாட்டார்” என்று மேலே பேசாமல் வார்த்தையை இழுத்தான்.

அப்பொழுதுதான் படைத் தலைவனும் அவன் வீரனான ஹிப்பலாஸும் அனாவசியமாகப் பேச்சை ஓட்டித் தன்னைக் கேலி செய்கிறார்களென்பதை உணர்ந்து கொண்ட கோட்டைத் தலைவன் சில நிமிஷங்கள் காட்டிய நிதானத்தை அறவே இழந்து, “புரிகிறது. புரிகிறது! என்னை அறிவு கெட்டவனென்று சொல்கிறார்கள். அதைப்பற்றி நான் கவலைப்படவில்லை ” என்று சீறினான்.

கோட்டைத் தலைவன் வார்த்தைகளைக் கேட்ட இளஞ்செழியனும் தன் இதழ்களில் புன்முறுவலொன்றைச் சற்றே ஓடவிட்டு, “இத்தனை நேரங்கழித்தாவது விஷயத்தைக் கோட்டைத் தலைவர் புரிந்து கொண்டது பற்றி மகிழ்ச்சியடைகிறோம். என்ன ஹிப்பலாஸ்?” என்று ஹிப்பலாஸைப் பார்த்தான். ஹிப்பலாஸும் பதிலுக்குச் சம்பிரதாயமாகத் தலையை அசைத்தான்.

கோட்டைத் தலைவனின் அடுத்த வார்த்தைகள் மிகத் திட்டமாக வெளிவந்தன. “படைத்தலைவரே! விளையாட்டுக்கு இது நேரமல்ல” என்று தெளிவாக அறிவித்த கோட்டைத் தலைவன் குரலில், கண்டிப்பு பலமாகத் தெரிந்தது.

“என் அபிப்பிராயமும் அதுதான்?” என்று ஒப்புக் கொண்ட இளஞ்செழியனின் இளநகை சற்று வலிவடைந்து பெரிதாக மலர்ந்தது.

“விளையாட்டுக்கு இப்பொழுது அவசியமில்லை.”

“அவசியமிருப்பதாக நானும் சொல்லவில்லையே!”

“பின் ஏன் காலதாமதம்? புறப்படுங்கள்.”

“எங்கு?”

“போகவேண்டிய இடத்துக்கு.”

“எது அந்த இடம்?”

“போகவேண்டிய இடத்துக்குப் போன பின்பு புரிந்து கொள்ளலாம்.”

இதைக் கேட்ட பின்பு கையில் மெள்ள மெள்ளக் கட்டிக் கொண்டிருந்த ஓலைச்சுவடிகளுடன் இளஞ்செழியன் மெள்ள ஆசனத்தைவிட்டு எழுந்ததையும் அவன் உதடுகளில் அதுவரை மலர்ந்திருந்த பெருநகை சற்று மட்டுப்பட்டுவிட்ட தையும், கண்ணிமைகள் சற்றுத் தாழ்ந்து முகம் சற்று மங்கியதையும் கண்ட ஹிப்பலாஸ், இளஞ்செழியன் புத்தி மிகத் துரிதமாக வேலை செய்கிறதென்பதைப் புரிந்து கொண்டதன்றி, அடுத்த சில விநாடிகளில் கோட்டைத் தலைவனின் நாடகம் அந்த அறையில் ஒரு முடிவுக்குக் கொண்டுவரப்படுமென்பதையும் சந்தேகமறத் தெரிந்து கொண்டதால் மேலே ஏற்படக்கூடிய நிகழ்ச்சிகளை எதிர்பார்த்து மௌனமாக நின்றான்.

மஞ்சத்தை விட்டு எழுந்த இளஞ்செழியன் இமைகள் ஒரு வினாடி தாழ்ந்தாலும் மறு வினாடி உறுதி பெற்று விரிந்ததால் ஈட்டி போன்ற கண்கள் கோட்டைத் தலைவனையும் அவனுடன் நின்ற காவலரையும் ஒருமுறை துழாவின. அந்தக் கண்ணோட்டத்தை அடுத்து அசைந்த உதடுகளிலிருந்து தெளிவான குரலில் வெளிவந்த திடமான சொற்கள் கோட்டைத் தலைவனை மட்டுமின்றி அவனுடன் வந்த வீரர்களையும் கிலிக்கு உட்படுத்தின.

“கோட்டைத் தலைவரே! நீண்ட நாட்களாகத் தமிழகத்தில் சேவகம் புரிந்தும் சோழர் படைத்தலைவர்களைச் சிறை செய்யும் அதிகாரம் யாருக்கும் கிடையாதென்பதை நீர் புரிந்து கொள்ளாததுகூட எனக்கு வியப்பில்லை. ஆனால் காரணம் காட்டாமல் சிறை செய்யலாம் என்று மனப்பால் குடிக்கும் விந்தை என்னவென்றுதான் எனக்கு விளங்கவில்லை. நள்ளிரவில் திட்டி வாசல் குடியர்கள் கண்டதாகச் சொன்ன ஒரு காட்சியை நம்பிச் சோழர் படைகளின் ஒரு உபதலைவனைச் சிறை செய்யத் துணிவுடன் வந்தீர். கதவை உடைக்காத தோஷமாக இங்கு நுழைந்தீர். நீர் தேடி வந்த பெண்ணோ பிசாசோ கிடைக்காமற் போனதால் என்னைச் சிறை செய்யவும் துணிந்தீர். எந்த ஆதாரத்தைக் கொண்டு சிறை செய்கிறீர்? என்ன குற்றத்துக்காக? தெளிவாகப் பதில் சொல்லுங்கள். இல்லையேல்….” என்று உதிர்ந்த வார்த்தைகள் சற்று நின்றாலும் மீதி எச்சரிக்கையைப் பார்வை உதிர்த்தது.

இளஞ்செழியன் பேசிய வேகம் மற்ற வீரர்களை அயர வைத்தாலும், கோட்டைத் தலைவன் உறுதியைச் சற்றும் தளர்த்தாததால் அவன் இரண்டடிகளில் அறையின் மூலையை நாடி அங்கு கிடந்த அன்னப் பறவை ஆபரணத்தை எடுத்து வந்து இளஞ்செழியனிடம் காட்டி, “படைத் தலைவரே! உமது குற்றத்திற்கு அத்தாட்சி இதோ இருக்கிறது, இது போதுமா? இன்னும் ஆதாரம் வேண்டுமா?” என்று கேட்டான்.

“இது வெறும் ஆபரணம். விலை உயர்ந்ததுதான். இதைத் திருடினேன் என்று நினைக்கிறீரா?” என்று கேட்டான் இளஞ் செழியன்.

“இல்லை. திருட்டு இல்லை.”

“பின் என்ன?”

“இதை அணிந்திருந்தவள் ஒரு பெண்.”

“இருக்கட்டுமே! அதனாலென்ன?”

“அந்தப் பெண்ணை ஒப்படைத்தால் உம்மை விட்டு விடுவேன். அந்தப் பெண் யவனர் ஜாதி. அதுவும் சாதாரணப் பெண்ணல்ல. அவளைத் தொடுவது குற்றம் யவன நாட்டில். வேண்டுமானால் ஹிப்பலாஸையே கேளுங்கள்.”

“அந்தப் பெண்ணை நான் பார்த்ததாக யார் உங்களுக்குச் சொன்னது?”

“பின் நகை எங்கிருந்து கிடைத்தது?”

“கடற்கரையிலிருந்து.”

“எப்பொழுது?”

“இன்றிரவுதான். கரையோரமாக நடந்து சென்றேன். ஓர் ஓரத்தில் இந்த நகை ஒதுங்கிக் கிடந்தது. எடுத்து வந்தேன். உமக்கு வேண்டுமானால் எடுத்துக்கொள்ளும்.”

“எனக்கு நகை வேண்டியதில்லை. பெண்தான் வேண்டும்.”

“கோட்டைத் தலைவரை மாப்பிள்ளையாக்கும் பாக்கியம் எனக்கில்லை!”

இளஞ்செழியனின் கடைசிச் சொற்களைக் கேட்ட ஹிப்பலாஸ் அதற்கு மேலும் சம்பாஷணையைத் தாங்க முடியாமல் பெரிதாகச் சிரித்து விட்டான். சிரிப்பின் காரணத்தைப் புரிந்துகொண்ட கோட்டைத்தலைவனும் சினம் கட்டுக்கடங்காமல் மீறியதால் வாளை உருவத் தன் கையை இடையை நோக்கி நகர்த்தியவன் மறுகணம் மரப்பாவையைப்போல் அதிர்ச்சியடைந்து நின்றான். இளஞ்செழியனின் இடையில் அதுவரை மறைந்து கிடந்த சிறு வாள் கண்ணிமைக்கும் நேரத்தில் வெளிப்பட்டு அதன் கூரிய முனை கோட்டைத் தலைவன் கழுத்தை மெள்ள தடவிக் கொண்டிருந்தது. “கோட்டைத்தலைவரே! அப்புறமோ இப்புறமோ சிறிது நகர்ந்தாலும் நீர் பதவியை இழக்க நேரிடும்.

பேசாமல் நிற்கிற இடத்தில் நில்லும்” என்று அதட்டலான சொற்களும் இளஞ்செழியன் வாயிலிருந்து உதிர்ந்தன.

“பதவியை ஏன் இழக்கவேண்டும்?” என்று கேட்டான் கோட்டைத் தலைவன்.

“உயிர் இருந்தால்தான் பதவி இருக்கும்!”

“நான் ஏன் உயிரிழக்க வேண்டும்? என்ன குற்றம் செய்தேன்?”

“பல குற்றங்கள் செய்திருக்கிறீர்கள். உங்கள் உதவாக்கரைக் காவலரின் உளறலைக் கேட்டு இங்கு பெண்ணைத் தேடி வந்தது முதல் குற்றம். காரணமின்றி என்னை எழுப்பியது இரண்டாவது குற்றம். என் அனுமதியின்றி அறையைச் சோதனை செய்தது மூன்றாவது குற்றம். சோதனை செய்தும் பெண் கிடைக்காததால் என்னிடம் மன்னிப்புக் கேட்காதது நான்காவது குற்றம். மன்னிப்புக் கேட்காததுமன்றி ஒரு நகையைப் பார்த்துவிட்டு என்னையும் என் வீரனையும் சிறை செய்ய முற்பட்டது ஐந்தாவது பெருங்குற்றம்” என்று கோட்டைத் தலைவனின் குற்றங்களை விவரித்த இளஞ்செழியன், “இந்தக் குற்றங்களில் ஏதாவது ஒன்றுக்கே உமது தலையைச் சீவிவிட எனக்கு அதிகாரமிருக்கிறது. ஆனால் இத்தனையும் நான் பொருட் படுத்தவில்லை. பெண் இல்லையென்று சொன்ன என் வார்த்தையை நீர் நம்பவில்லை. என்னைப் பொய்யன் என்று நினைத்தீர். அதை மட்டும் நான் மன்னிக்க முடியாது. இருப்பினும் இம்முறை மன்னிக்கிறேன். உமக்கு உயிரின்மீது ஆசையிருக்கும் பட்சத்தில் முதலில் உமது காவலரை வாட்களையும் ஈட்டிகளையும் கீழே எறிந்துவிட்டு மாளிகைக்கு வெளியில் போகச் சொல்லும்” என்று கூறியதன்றிக் கழுத்தில் கத்தியையும் சற்று அதிகமாகவே அழுத்தினான்.

இளஞ்செழியன் குரலில் உதிர்ந்த சொற்களைவிடக் கண்களில் துளிர்த்த உணர்ச்சிகளைக் கண்டு பெரிதும் கலங்கிப்போன கோட்டைத் தலைவன் இளஞ்செழியன் கூறியபடி வாள்களையும் வேல்களையும் கீழே எறியும்படி வீரர்களுக்கு உத்தரவிட்டான். அந்த உத்தரவு காரணமாக விடுதலையடைந்த ஹிப்பலாஸை நோக்கி இளஞ்செழியனின் அடுத்த உத்தரவு பறந்தது. “ஹிப்பலாஸ்! அந்த ஆயுதங்களைத் திரட்டி அந்தக் கவசங்களுடன் போடு. கோட்டைத் தலைவர் கச்சையை அவிழ்த்து அவர் கத்தியையும் விலக்கி அவர் இடுப்புக்குச் சிறிது விடுதலையை அளித்துவிடு. முதலில் காவலாளிகளை வெளியே அனுப்பிக் கதவைத் தாழிடு, அவர்கள் வீதியைத் தாண்டியதும் கோட்டைத் தலைவரை அனுப்புவோம்” என்று கூறிய படைத்தலைவன் உத்தரவுகளைச் சிறிதும் காலதாமதம் செய்யாமல் நிறைவேற்றிக் காவலரை வெளியே அனுப்பி விட்டு மாடிப் படிகளில் ஏறி வந்த ஹிப்பலாஸ், “இனி கோட்டைத் தலைவரை அனுப்பலாமா?” என்று வினவினான்.

அதுவரை கோட்டைத் தலைவன் கழுத்தில் ஊன்றி யிருந்த கத்தியை மஞ்சத்தின்மீது எறிந்த இளஞ்செழியன், “கோட்டைத் தலைவரே! போய் வாரும். இளஞ்செழியனைச் சிறை செய்வது அவ்வளவு எளிதல்ல என்பதைப் புரிந்து கொள்ளும். இந்த அறையில் உமக்கு நேரிட்ட சங்கடத்தைப் பற்றி அரசரிடம் வேண்டுமானாலும் சொல்லலாம். எனக்கு ஆட்சேபணையில்லை” என்றான்.
இதைக் கேட்டதும் அந்த வினாடி வரை முகத்தில் பிரதிபலித்திருந்த கோட்டைத் தலைவனின் கிலி இருந்த இடம் தெரியாமல் மறைந்து விட்டதன்றி மாளிகையே அதிரும்படி யாகவும் சிரித்தான் அந்த யவனன். அவன் சிரிப்புக்குக் காரணத்தை அறிய முடியாத இளஞ்செழியன் ஆச்சரியம் ததும்பும் கண்களை அவன்மீது நாட்டினான். யவனன் தன் சிரிப்பைக் கொஞ்சம் கட்டுப்படுத்திக் கொண்டு ஹிப்பலாஸை மட்டுமின்றி இளஞ்செழியனையும் பிரமிப்பிலும் கலவரத்திலும் ஆழ்த்தக் கூடிய சுடுசொற்களைக் கொட்டத் தொடங்கி இகழ்ச்சியும் குரூரமும் தொனித்த குரலில், “அரசரிடம் சொல்ல முடியாது படைத் தலைவரே! சொல்லவே முடியாது” என்றான்.

“காரணம்?”

“சோழ மண்டலத்துக்கு இப்பொழுது அரசர் இல்லை.”

“அரசர் இல்லையா?”

“அரசர் இறந்து விட்டார்!”

கோட்டைத் தலைவன் கூறிய வார்த்தைகளால் தலைமேல் பேரிடி இறங்கி விட்டதைப் போல் ஒரு கணம் திகைத்த படைத்தலைவன், மறுகணம் நிதானத்தை அறவே இழந்து எதிரே மலை போல் நின்றிருந்த யவனன் மீது பாய்ந்து அவன் கழுத்தை இரு கையாலும் நெரிக்கத் தொடங்கி, “உளறாதே. இன்னும் ஒருமுறை அந்த வார்த்தையைச் சொன்னால் இந்த இடத்திலேயே பிணமாகி விடுவாய்” என்று பெரிதாகக் கூவினான்.
“என்னைக் கொன்றால் அரசர் பிழைத்து விடமாட்டார்” என்று முக்கி முனகினான் இளஞ்செழியனின் இரும்புப் பிடியிலிருந்து தப்ப முடியாத கோட்டைத் தலைவன்.

கழுத்தை நெரிப்பதை விட்டுச் சற்று விலகிய இளஞ்செழியன் மூளை பெரிதும் குழப்பமடைந்து கிடந்தது. “என்ன! மன்னர் மரணமடைந்து விட்டாரா?” என்று ஏதோ கனவில் பேசுபவன் போல் தனக்குத்தானே கேட்டுக் கொண்டு இரண்டு முறை உலாவினான். அந்தக் கேள்விக்குக் கோட்டைத் தலைவனே பதில் சொன்னான். “சந்தேகம் வேண்டாம் படைத்தலைவரே, உறையூரிலிருந்து சற்று முன்புதான் செய்தி வந்தது” என்று.

“சோழ மண்டலத்தின் இணையற்ற செம்மல் இளஞ் சேட்சென்னியா இறந்து விட்டார்!”

“ஆம்.”

“உலகத்திலேயே மிக வேகமாகச் செல்லக் கூடிய அழகிய ரதங்களை உடைய இளஞ்சேட் சென்னியா போய் விட்டார்!”

“அவரேதான்.”

இளஞ்செழியன் அடுத்துப் பயபக்தியுடன் பேசினான். “இளஞ்சேட்சென்னி மறைந்து விட்டார். அவர் செல்வன்

திருமாவளவன் வாழட்டும்” என்று ஏதோ மந்திர உச்சாடனம் செய்பவன் போல் வார்த்தைகளை உதிரவிட்டான் இளஞ்செழியன்.
“இளஞ்சேட் சென்னி இயற்கை மரணம் அடைய வில்லை படைத்தலைவரே. எதிரிகளால் கொலை செய்யப் பட்டார்…” என்று மேலும் விவரித்தான் கோட்டைத் தலைவன்.

“அப்படியானால் இளவரசர் திருமாவளவன்?”

“இருக்குமிடம் தெரியவில்லை.”

“அரசர்மீது ஆணை என்று கதவைத் தட்டினீரே எந்த அரசர் அவர்?”

“எங்கள் தலைவரைத்தான் குறிப்பிட்டேன். படைத் தலைவரே! யவன நாட்டிலிருந்து வந்தது நீங்கள் தூக்கிவந்த பெண் மட்டுமல்ல. இன்னொருவரும் வந்திருக்கிறார். தற்சமயம் புகாரின் கோட்டையில் அவர் தலைமையில், யவனர்கள் திரட்டப்படுகிறார்கள். நாளைக் காலையில் பூம்புகார் யவனர் கையில் இருக்கும். தமிழ்நாட்டின் இந்தக் கடல் வாசல் வழியாக யவனர்கள் சாரி சாரியாகத் தமிழ்நாட்டில் நுழைவார்கள். அதற்குப் பிறகு பொன்னும் முத்தும் பவளமும் கொழிக்கும் இந்தத் தமிழ்நாடு யவனர் வசமாகிவிடும். அதற்குப் பூர்வாங்கமாக நாளைக் காலையில் யவனர்களைக் கொண்டு உமது மாளிகையைச் சூழ்ந்து கொள்கிறேன். பிறகு பார்ப்போம் உமது சாமர்த்தியத்தை” என்ற பெரிய அதிர்வேட்டை வீசிய கோட்டைத் தலைவன், தன் சொற்களைக் கேட்கக் கேட்க இளஞ்செழியன் முகத்தில் ஏற்பட்ட கொலைக் குறியைக் கண்டு மேலும் அவ்விடத்தில் நிற்பது ஆபத்து என்பதைப் புரிந்து கொண்டானாதலால் அறையைவிட்டு வெகு வேகமாக வெளியே சென்றான்.
நிலைமை தெள்ளெனப் புரிந்துவிட்டதால் மிகவும் கலங்கிப்போன உணர்ச்சிகளுடன் கைகளில் தன் தலையைத் தாங்கி நீண்ட நேரம் மஞ்சத்தில் உட்கார்ந்துவிட்ட இளஞ்செழியன், கோட்டைத் தலைவனை அனுப்பிவிட்டுத் திரும்பி வந்த ஹிப்பலாஸைக்கூடத் தலைநிமிர்ந்து பார்க்கவில்லை.

ஹிப்பலாஸே நடுங்கும் குரலில் பேசத் தொடங்கி, “பிரபு! அந்தப் பெண் சாபக் கேடு என்று சொன்னேனே, கேட்டீர்களா?” என்றான்.

இளஞ்செழியன் சிரம் தூக்கி ஹிப்பலாஸை நோக்கி னான். ஹிப்பலாஸ் மேலும் சொன்னான், “தமிழ்நாட்டில் அவள் உடல்பட்ட நேரம் மன்னர் மாண்டு விட்டார். இளவரசர் இருப்பிடம் தெரியவில்லை ” என்று.

“ஆமாம் ஹிப்பலாஸ்! எனக்குக்கூட விதியில் சிறிது நம்பிக்கை ஏற்படுகிறது” என்றான் இளஞ்செழியன் பெருமூச்சு விட்டு.

“நாளைக்குப் பூம்புகார் யவனர்கள் கைகளுக்கு மாறும்.”

“ஆமாம் ஹிப்பலாஸ்.”

“அது மட்டுமல்ல படைத் தலைவரே. இந்தப் பெண்ணுடன் வந்த யவனன் யாரென்று கோட்டைத் தலைவன் சொல்லிவிட்டுப் போயிருக்கிறான்.”

“யாரது?”
“டைபீரியஸ்.”

ஆசனத்திலிருந்து துள்ளியெழுந்த இளஞ்செழியன், “அப்படியானால் இந்தப் பெண்?” என்று ஆத்திரத்துடன் வினவினான்.

“யவன ராணி.”

“யவன ராணியா!”-ஏதும் புரியாமல் வினவினான் இளஞ்செழியன். விவரித்தான் ஹிப்பலாஸ். விவரத்தைக் கேட்ட இளஞ்செழியன் மனத்தில் சொல்லவொண்ணாத் திகில் சூழ்ந்து கொண்டது. தலை கிறுகிறுத்தது.

Previous articleYavana Rani Part 1 Ch 3 | Yavana Rani Sandilyan | TamilNovel.in
Next articleYavana Rani Part 1 Ch 5 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here