Home Sandilyan Yavana Rani Part 1 Ch1 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

Yavana Rani Part 1 Ch1 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

147
0
Yavana Rani Part 1 Ch1 Yavana Rani Sandilyan, Read Yavana Rani Online Free, Yavana Rani PDF, Download Yavana Rani novel, Yavana Rani book, read Yavana Rani free
Yavana Rani Part 1 Ch1 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

Yavana Rani Part 1 Ch1 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

யவன ராணி – சாண்டில்யன்

முதல் பாகம்

அத்தியாயம் – 1 மோகனாஸ்திரம்

Yavana Rani Part 1 Ch1 | Yavana Rani Sandilyan|TamilNovel.in

வான் பொய்ப்பினும் தான் பொய்யா மலைத்தலைய கடற் காவிரி புனல் பரந்து பொன் கொழிக்கும்’ எனக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் கவி பாடியதை முன்னதாகவே மெய்ப்பிக்கப் பிரியப்பட்டதுபோல், காவிரிப் பூம்பட்டினத்திற்கு மேலே கருப்புத் திரையிட்டுக் கிடந்த வான வெளி, வருஷ ருது உட்புகுந்துவிட்ட ஆவணி மாதத்தின் அந்த ஆரம்ப நாளில்கூடத் தன்னிடம் மேகக் கூட்டங்களைச் சிறிதளவும் சேர்க்காமலும், ஓரிரு நீர்த்திவலைகளைக்கூட மேலேயிருந்து உதிர்க்காமலும் நட்சத்திரக் கண்களைச் சிமிட்டிச் சிமிட்டி நகைத்துக் கொண்டிருந்ததால், இரவு ஏறி நாழிகைகள் பத்து ஓடிவிட்ட பிறகும், புகார் நகரத்தின் கடற்கரையில் மக்கள் நடமாட்டமும் கேளிக்கைக் கூச்சல்களும் சிறிதும் குறையாமல் பலமாகவே கேட்டுக் கொண்டிருந்தன. கவி வாக்குக்கு முற்கூட்டியே ஆதரவு தந்த வானுக்குத் தான் சளைக்கக் கூடாதென்ற நினைப்பில், குடகு மலையிலிருந்து புறப்பட்டு வெள்ளத்தை அள்ளி வந்த ‘மலைத்தலைய’ காவிரியும் புகாரின் கடலில் கலந்து புனல் பரந்து நின்றதால், அதன் நீர்ப்பரப்பில் ஊர்ந்து சென்ற பெரும் படகுகள் தொலை தூரத்தே கடலிலாடிக் கொண்டிருந்த மரக்கலங்களிலிருந்து இறக்குமதிச் சரக்குகளை உள் நாட்டுக்குக் கொண்டு சென்று, ‘புனல் நாடு’ என்று வழங்கிய சோணாடு வணிகத்தால் பொன் கொழித்துப் பொன்னாடாகவும் ஏற்பாடு செய்து கொண்டிருந்தமையால், சங்கமத் துறையிலும் அந்த இரவில் அமைதி ஏதுமின்றி, கடலோடிகளின் கூச்சலே நிரம்பி நின்றது. இப்படி ஊர்ந்து சென்ற இறக்குமதிச் சரக்குகள் கொண்ட நாவாய்கள் மட்டுமின்றி, அக்கம் பக்கத்து உப்பளங்களிலிருந்து கொண்டுவரப்பட்ட வெள்ளை உப்பை உள் நாட்டுக்கு எடுத்துச் சென்று, அதற்குப் பதிலாக நெல்லை ஏற்றி வந்து கொண்டிருந்த படகுகளை, காவிரியிலிருந்து கிளை பிரிந்து ஓடிய உப்பங்கழிகளின் தளைகளில் ஆங்காங்கு பிடித்துப் பிணைத்துக் கொண்டிருந்த பரதவரின் அதட்டலான குரல்களும் வெகு தூரம்வரை பேரிரைச்சலாகக் கேட்டுக் கொண்டிருந்தன; இவை தவிர, ஓடிய படகுகளின் துடுப்புகள் கழிகளின் நீரில் பாய்ந்து எழுப்பிய ‘சரேல் சரேல்’ என்ற சத்தங்களும், ஆங்காங்கு அப்பொழுதும் அலுவல் புரிந்து கொண்டிருந்த சுங்கக் காவலரின் கட்டளைக் கூச்சல்களுமாகச் சேர்ந்து, பூம்புகார் எனப் புகழ் எய்திய அந்தக் காவிரிப் பூம்பட்டினத்தை அமைதியற்ற நகரமாக அடித்துக் கொண்டிருந்தது.

‘விலங்கு பகையல்லாது கலங்கு பகையறியாக் கொழும் பல் குடிச் செழும்பாக்கத்து’ என்று இலக்கியம் விவரிப்பது போல் கண்ட மாத்திரத்திலேயே அஞ்சி விலகிச் செல்லும் பகைவரைத் தவிர, கலங்கவைக்கும் பகைவரையே அறியாத அந்தப் புகார் நகரம் பல பாக்கங்களை அங்கங்களாகக் கொண்ட வீரர்கள் நிறைந்த பட்டினமாதலால், பகையைப் பற்றிய எண்ணமே சிறிதுமில்லாமல் நகரத்தின் கடற்புறத்தே யிருந்த மணல் திட்டுகளில் கூரை வீடுகளைக் கட்டிக் கொண்டிருந்த பரதவர் என்ற வலைஞர்களிற் சிலர், இரவு ஏறுவதைப் பற்றிய எண்ணம் எள்ளளவும் இல்லாமல், ஆட்டுக் கிடாவோடு ஆட்டுக் கிடாவையும், சேவலோடு சேவலையும், கௌதாரியோடு கௌதாரியையும் சண்டை விட்டுக் கூட்டம் கூட்டமாகக் கூடி வேடிக்கைப் பார்த்துக் கொம்மாளமிட்டுக் கொண்டிருந்ததாலும், மற்றும் சிலர் இறைச்சியை ஒரு கையால் கடித்துக்கொண்டு மற்றொரு கையில் ஏந்திய மதுக் கிண்ணத்திலிருந்த மதுவைக் குடித்துவிட்டு உளறிக் கொண்டிருந்ததாலும், எங்கும் நானாவிதமான கூச்சல்கள் நிரம்பி இரவைப் பகலாக அடித்துக்கொண்டிருந்தன. கலங்கு பகை இல்லாவிட்டாலும் காவலைத் தவிர்க்க விரும்பாத யவன வீரர்கள் கைகளில் தீப்பந்தங்களை ஏந்திக்கொண்டு அணி வகுத்து நான்கு நான்கு பேர்களாகக் கடற்கரையோரமாகப் பல இடங்களில் நடந்து கொண்டிருந்ததன் விளைவாக, அவர்கள் பாதங்களில் தரித்துச் சென்ற தோற் செருப்புகளின் ‘சரக் சரக்’கென்ற ஒலியும், மார்புகளில் அவர்கள் அணிந்திருந்த கவசங்களில் உராய்ந்த வீரப் பதக்கங்களின் சப்தங்களும் சேர்ந்ததால், புகாரின் கடற்கரைப்பகுதி எதிரிகளை நோக்கி, வீரகர்ஜனை செய்து கொண்டிருந்தது போன்ற பிரமையைச் சிருஷ்டித்துக் கொண்டிருந்தது. வெளிநாட்டில் மரக்கலங்களுக்கு வழிகாட்டுவதற்காகப் புகார் நகரின் கடற்கரையில் அமைக்கப்பட்டு வானைப் பிளந்து நின்ற கலங்கரை விளக்கத்தில், சுடர் விட்டுப் பிரகாசித்த பெரும் தீப்பந்தங்களுக்கு அவ்வப்போது எண்ணெய் விட்டுக் கொண்டிருந்த காவலாளிகள், மேலிருந்து எண்ணெய் கேட்டுப் போட்ட கூச்சல்களும் அதற்குத் தரை மட்டத்திலிருந்து கிடைத்த பதில்களும் சேர்ந்து, அமைதியைக் கிழிப்பதற்கு உயரம் ஒரு பெரும் தடையல்ல என்பதை நிரூபித்தன.

விண்ணைத் தொட்டு நின்ற அந்தக் கலங்கரை விளக்கத்துக்குச் சற்று அப்பால் தள்ளி வரிசையாகக் கிடந்த மீனவர் சேரியில்,

“துணைப் புணர்ந்த மடமங்கையர்
பட்டு நீக்கித் துகில் உடுத்து
மட்டு நீக்கி மது மகிழ்ந்து
மைத்தர் கண்ணி மகளிர் சூடவும்”

என்று ‘பட்டினப்பாலை’ கூறும் விளக்கத்தின்படியே பரதவர் குல மங்கைகள், இரவு ஏறிவிட்டதன் காரணமாக அதுவரை கட்டிக்கொண்டிருந்த பட்டாடைகளை நீக்கி வெள்ளைத் துணிகளை உடுத்தி, வழக்கமாக உண்ணும் கள்ளை விடுத்துக் காமவெறியில் திளைத்து, சுறாமீன் எலும்பில் மாட்டிக்கிடந்த கணவர் மாலைகளைத் தங்கள் கழுத்திலணிந்து கொண்டும், கணவர்கள் மனைவிமார்களின் மாலைகளை அணிந்து கொண்டும் நிலைமாறிக் கோஷமிட்டு, ஓடிப் பிடித்துக் கட்டிப் புரண்டு விளையாடிய காதல் விளையாட்டின் வெறிக்கூச்சல் வேறு, பூம்புகாரின் கடற்கரைப் பகுதியைப் பீடித்துக் கொண் டிருந்ததால் எங்கும் அமைதியில்லாத நிலையே நிலவிக் கிடந்தது. அந்த நிலை அடங்கக் காலம் வந்துவிட்டது என்பதை அறிவுறுத்த இஷ்டப்பட்டதுபோல், புகாரின் மேற்குப் பகுதியான பட்டினப்பாக்கத்திலிருந்த மணி வண்ணன் கோயிலின் இரண்டாம் ஜாம மணி பெரிதாக ஒலித்து நாற்புறங்களிலும் ஊடுருவிச் சென்றாலும், அதையும் லட்சியம் செய்யாமல் புகாரின் கடற்கரைப் பகுதியான மருவூர்ப்பாக்கத்திற்கும் மேற்குப் பகுதியான பட்டினப் பாக்கத்திற்கும் இடையேயிருந்த வர்த்தகச் சாலையில் எகிப்தியர், சீனர், கடாரத்தார், ரோமர், கிரேக்கர் ஆகிய பல நாட்டு வணிகர்களின் பேரக் கூச்சல்கள் பெரிதாகவே கேட்டன. நடுநிசி நெருங்கிக் கொண்டிருந்ததற்கு அடையாளமாகப் புகாரில் புத்த விஹாரங்களில் பௌத்தத் துறவிகள் கோஷித்த அமைதி வேதம் கூட, இத்தனைக் கூச்சல்களுக்கிடையே அர்த்தமற்றுப்போய் அமைதிக்கும் வாழ்க்கைக்கும் அதிக சம்பந்தமில்லையென்பதை நிரூபித்தது.

அந்த நிரூபணத்தை ஒப்புக் கொண்டவன் போல் கடற்கரையோரமாக நடந்து சென்ற இளஞ்செழியன், எதிரே தெரிந்த புகார் நகரத்தின் பெரும் விளக்குகளையும், ஜனக் கூட்டத்தையும், தங்கத்தாலும் வஜ்ர வைடூரியங்களாலும் சோழர்களின் புலிக் குறி பொறிக்கப்பட்ட பிரும்மாண்டமான கோட்டைக் கதவுகளையும் ஒருமுறை ஏறெடுத்து நோக்கி, துயரந்தோய்ந்த புன்முறுவல் ஒன்றை உதடுகளில் தவழவிட்ட தன்றி, ஆயாசத்துக்கு அறிகுறியாகப் பெருமூச்சொன்றையும் கூர்மையான தன் நாசியிலிருந்து வெளிவிட்டான். சுமார் இரு பத்திரண்டு வயதுக்குமேல் மதிக்கமுடியாத அந்தப் பாண்டிய நாட்டு வாலிபனின் முகத்திலே படர்ந்து கிடந்த துக்கச் சாயையைத் துடைக்க இஷ்டப்பட்டன போல், சுருண்டு கிடந்த அவன் தலைமயிர்களில் இரண்டொன்று கடற் காற்றில் அலைந்து அலைந்து அவன் அழகிய வதனத்தை தடவிக் கொடுத்துக் கொண்டிருந்தன. அந்த வாலிபனின் உள்ளத்தை அள்ளி அள்ளி அலைத்துக் கொண்டிருந்த எண்ணங்களின் பேரிரைச்சலால், உடலெங்கும் ஊடுருவிச் சென்ற உணர்ச்சிகளைக் குளிர்ச்சியால் அடக்க இஷ்டப்பட்ட கடற்பகுதி, தன் அலைகளைத் தரையில் மோதி நுரை பாய்ச்சித் தண்மையான தன் நீரால் அவன் உறுதியான பாதங்களைத் தழுவித் தழுவிப் பின்வாங்கிக் கொண்டிருந்தது. அந்த அலைகளில் உருண்டோடி வந்த கிளிஞ்சல்களும், கடற்பாசியும் அவன் கால்களில் பாய்ந்து விளையாடினாலும், அந்த விளையாட்டை வெறுத்த அவன் கால்கள் அவற்றை விலக்கித் தள்ளிவிட்டுக் கரையோரமாக நடந்து சென்றன. நல்ல உயரமாகவும் ஒற்றை நாடியாகவும் இருந்த அவன் உடலின் இடைப்பாகத்தில் இறுகக் கட்டப்பட்டிருந்த, பட்டுக் தச்சையிலிருந்து பாதம் வரையில் தொங்கிய நீண்ட வாள், அவன் இடக் காலின் புறப்பகுதியைத் தட்டிக் கொடுத்து, தானிருக்கும் வரையில் இளஞ்செழியன் அமைதிக்குப் பங்கம் அவசியமில்லையென்பதை வலியுறுத்தினாலும், அவன் கழுத்தில் அணிந்திருந்த பாண்டி நாட்டு முத்துச்சரம் மட்டும் நடையின் காரணமாக மார்பில் அப்படியும் இப்படியும் அசைந்து, “நீ சொல்வது தவறு! இவர் நெஞ்சிலுள்ள குமுறலை நீயோ நானோ ஒழிக்க முடியாது. ஒழிக்கக்கூடியவள் வேறொருத்தி இருக்கிறாள்’ என்று கூறி நகைத்துக் கொண்டிருந்தது. ஆழ்ந்த யோசனையாலும் கவலையாலும் சற்றே சுளித்திருந்த வளைந்த கரிய புருவங்களுக்குக் கீழே அரைத் தூக்கத்திலிருப்பனபோல் தாழ்ந்து கிடந்த இமைகளின் மறைவிலிருந்த அவன் பெரும் விழிகள், அவ்வப்பொழுது இமைகளை உயர்த்திப் பார்த்த பார்வையிலிருந்து ஈட்டிகள்போல் ஜொலித்தாலும், உள்ளே எழுந்து கொண்டிருந்த உள்ளக் குமுறலின் காரணமாக மீண்டும் இமை தாழ்த்திப் பழைய நிலையையே அடைந்தன. உறுதியுடன் இடுப்பில் ஊன்றியிருந்த அவன் நீண்ட கரம் மட்டும் அவன் உள்ளத்துக்கு ஆறுதல் அளிப்பதாகத் தோன்றியது.

கரையோரத்திலும் கரையோரத்தை ஒட்டியிருந்த மருவூர்ப்பாக்கத்தின் உட்புறத்திலும் எழுந்த பல கூச்சல் களையும், மீனவ மங்கையர் இராக்காலங்களில் அணியும் தாழை மலர்களின் நறுமணத்தையும், ரோமாபுரியிலிருந்தும் கிரேக்க நாட்டிலிருந்தும் வந்து கடல் முகப்பு மாளிகைகளில் தங்கியிருந்த யவனமங்கையர் சுழன்று சுழன்று ஆடிய ஆட்டத்திற்கு யவன வீரர்கள் போட்ட தாளங்களையும், பாடிய பாட்டுக்களையும், இசைக் கருவிகளின் ஒலிகளையும் இந்திரியங்கள் வாங்கிக் கொள்ளாததால், உலகத்தையே வெறுத்தவன்போல் கடற்கரையோரமாக நடந்து சென்ற இளஞ்செழியன், தன் வாழ்க்கையின் முக்கியப் பிரச்சினைக்கு ஒரு முடிவு காணாமல் ஏதேதோ யோசித்துக் கொண்டு மனோவியாகூலத்தை அறுக்க முடியாதவனாகத் தவித்தான்.

வியாகூலத்தை அறுக்க முடியாத சமயங்களில் மனிதன் வேதாந்தத்தை நாடுகிறான். ஆகவே வேதனையின் மடியில் புரண்டு கொண்டிருந்த இளஞ்செழியனும், ஆழ்கடலில் அசைந்து கொண்டிருந்த பெரும் மரக்கலங்களையும், மருவூர்ப் பாக்கத்தின் புறக்கோட்டத்தே காற்றில் அலைந்து கொண்டிருந்த தீப்பந்தங்களையும், வர்த்தகப் படகுகளில் படபடவென அடித்துக் கொண்டிருந்த பல நாட்டுக்கொடி களையும் கண்டு, ‘உலகத்தில் எல்லாமே சலனந்தான். சலனமில்லையேல் உலகமில்லை’ என்ற வேதாந்த பாவத்தில் இறங்கித் தன் மனச் சலனத்துக்கு ஒரு காரணத்தையும் கற்பித்துக் கொண்டான்.

‘சலனத்தில்தான் உயிர் இருக்கிறது. அசைவைக் கொண்டுதான் வானவெளியில் சுழலும் கோளங்களிலிருந்து சின்னஞ்சிறு புழுப் பூச்சி வரையில் சகலத்துக்கும் உயிர் இருக்கிறது என்று சொல்கிறோம். பாய்ச்சல், நடத்தல், ஊர்தல், நெளிதல்-இந்தச் சலனங்கள் இல்லாவிட்டால் உயிர் இருப்பதற்கு வெளித்தோற்றம் இருக்காது. ஆகவே சலனங்கள் உயிர்த் தொகுப்புக்கு அவசியம். அந்தக் காரணத்தினால்தான் ஆண்டவன் என்ற பெரும் சக்தி உயிராக புல் பூண்டு முதல் எல்லாவற்றிலும் ஊடுருவி நின்று அசைத்து இயக்கி வருகின்றது’ என்று தான் கற்ற தர்க்கத்தை எண்ணிப் பார்த்த இளஞ்செழியன், ‘சலனம் அவசியந்தான். ஆனால் மனத்திற்கும் ஏன் சலனத்தை ஆண்டவன் ஏற்படுத்தி வைத்தான்?’ என்று தன்னைத் தானே கேட்டுக்கொண்டான். ‘மனச்சலனம் மட்டும் இல்லாதிருந்தால் உலகத்தில் வாழ்க்கை எத்தனை இன்பமாயிருக்கும்!’ என்று நினைத்துப் பார்த்த அந்தப் பாண்டிநாட்டு வீரன், ‘ஒரே இன்பமயமாகிவிட்டால் வாழ்க்கைக்கு அர்த்தமிருக்காது. துன்பத்தின் கரையில்தான் இன்பத்தை அனுபவிக்க முடியும். சலனத்தின் துறையில்தான் அமைதியின் சுகத்தை நுகர முடியும்’ என்று தான் கற்ற பாடத்தையும் மனத்திலே வலியுறுத்திக் கொண்டாலும், தன் மனத்திலும் அழியாத இடம் பெற்றுவிட்ட அந்த வேளிர்குல மங்கை தனக்கு இத்தனைச் சலனத்தை அளித்தது சரியல்ல என்ற முடிவுக்கே வந்தான்.

அவன் உள்ள ஊஞ்சலிலே ஆடிக்கொண்டு அவனை இல்லாத பாடெல்லாம் படுத்திக் கொண்டிருந்த வேளிர்குலப் பேரழகி மட்டும் புறத்தே கிடந்து அவளை அணைக்கத் துடித்துக் கொண்டிருந்த அவன் கரங்களில் கிடைத்து விட்டால், அவன் சஞ்சலம் நொடிப் பொழுதில் பறந்து விடத்தான் செய்யும். நினைப்பதெல்லாம் கிடைப்பதென்றால் பூலோகம் சொர்க்கலோகமாகி விடுமென்ற பயத்தாலோ என்னவோ, ஆசைக்கும் அனுபவத்துக்கும் இடையில் இயற்கை பெரும் திரையொன்றைத் தொங்கவிட்டிருக்கிறது. அந்தத் திரை இளஞ்செழியன் வாழ்க்கையில் ‘இரும்புத் திரை’யாக மாறி விட்டதால் அவன் காதலித்த வேளிர்குல மங்கை அவனை ஏறெடுத்துப் பார்க்கவும் மறுத்தாள். அவள் வெறுப்பினால் அவன் மனம் சுக்கு நூறாக உடைந்து கிடந்ததல்லாமல், அந்த வெறுப்புக்குக் காரணத்தையும் அவன் சரியாகத் தெரிந்து கொள்ள முடியவில்லை யாகையால், அவன் மனத்தை விவரிக்க இயலாத வேதனை தாக்கிக் கொண்டிருந்தது. சோழ மன்னர் படைப் பிரிவு ஒன்றின் தலைவனும், பல போர்களில் வெற்றி வாகை சூடியவனுமான இளஞ்செழியன், காதற் போரில் மட்டும் வாகை சூட இயலாதவனாய் மனத்திலே துன்ப வாகை சூடிக் கொண்டு தன் துரதிர்ஷ்டத்தை எண்ணி எண்ணிக் கடற் கரையோரமாகவே நடந்து சென்றான். உள்ளேயிருந்த மனப்போராட்டத்தால் எத்தனை தூரம் நடக்கிறோமென்ற உணர்ச்சியில்லாமலே அலைகளின் ஓரத்தில் நடந்து சென்ற இளஞ்செழியன் தன் வாழ்க்கையிலேயே பெரும் விசித்திரத்தை அந்தக் கடல் அலைகள் அன்று விளைவிக்கு மென்பதையோ, பிற்காலத்தில் தன் வாழ்வில் பெரும் சிக்கல்களைத் தரவல்ல பெரிய ஒரு அஸ்திரத்தை அவை அளிக்குமென்பதையோ அறிந்திருந்தால், அவன் அந்த அலைகளில் அன்று நடந்திருக்க மாட்டான். அப்படி அவன் நடந்திராவிட்டால் இந்தக் கதையும் நடந்தே இருக்காது.

தனி மனிதனுடைய வாழ்க்கையில் ஏற்படும் சின்னஞ் சிறு சம்பவங்கள் நாட்டை எவ்வளவு தூரம் பாதிக்கும். என்பதை அன்றைய சம்பவத்திலிருந்து பிற்காலத்தில் இளஞ்செழியன் புரிந்து கொண்டான். அவன் வாழ்வுக்கும் சோழ நாட்டு வாழ்வுக்கும் பெரும் பெரும் பிரச்சினைகளைக் கிளப்ப வந்த அந்தச் சம்பவத்தின் அஸ்திரம், வருஷ ருதுவின் அந்த ஆவணி முதல் நாளன்று அவன் காலிலே இடறிற்று. ஆழ்ந்த யோசனையுடன் நடந்துகொண்டே சென்று காவிரி நதி தன் பெரும்புனலைக் கடலில் பாய்ச்சும் சங்கமத்துறைக் கருகில் வந்தபோது, காலை ஏதோ சட்டென்று தடுக்கவே எண்ணங்களின் தளைகளிலிருந்து விடுபட்டுக் கீழே குனிந்து காலை இடறிய பொருள் எதுவாயிருக்கும் என்று பார்க்கத் தன் கண்களை அகல விரித்தான் இளஞ்செழியன்.

அகன்ற கண்கள் அப்படியே நிலைத்து நின்றன. தடைப்பட்ட கால் மட்டுமல்ல, உள்ளமும் பிரமை பிடித்துத் தடைப்பட்டு நின்றது. காலை அல்ல, மனத்தைக்கூட அல்ல, அவன் வாழ்வையே, ஏன் சோழர்களின் மாபெரும் சாம்ராஜ்யத்தையே இடற, கடலரசன் வீசிய மோகனாஸ்திரம் போல் தரையில் கிடந்தாள் ஒரு பேரழகி.

Previous articleRead Manipallavam Part 5 Ch15 | Manipallavam Na. Parthasarathy | TamilNovel.in
Next articleYavana Rani Part 1 Ch 2 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here