Home Sandilyan Yavana Rani Part 1 Ch12 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

Yavana Rani Part 1 Ch12 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

77
0
Yavana Rani Part 1 Ch12 Yavana Rani Sandilyan, Read Yavana Rani Online Free, Yavana Rani PDF, Download Yavana Rani novel, Yavana Rani book,read Yavana Rani free
Yavana Rani Part 1 Ch12 |Yavana Rani Sandilyan|TamilNovel.in

Yavana Rani Part 1 Ch12 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

யவன ராணி – சாண்டில்யன்

முதல் பாகம்

அத்தியாயம் : 12 மணிவண்ணன் கோட்டம்!

Yavana Rani Part 1 Ch12 |Yavana Rani Sandilyan|TamilNovel.in

அடிகளார் திருக்கூட்டம்!
பழகு தமிழில் ‘கருக்கல்’ என்ற அழகான சொல் ஒன்று உண்டு. விடிவதற்கு முன்பாக இயற்கை தன் கண்களை ஒரு முறை இறுக மூடிவிடுவதால் உலகத்தைச் சூழும் இருட்டின் கருமைக்கு அந்தப் பெயரைத் தமிழர்கள் சூட்டியிருக் கிறார்கள். இருளுக்குப் பின்தான் ஒளி ஏற்படுகிறது என்ற தத்துவத்தைச் சுட்டிக் காட்ட, பொழுது திடீரென்று புலருவதற்கு இரண்டு நாழிகைகள் முன்பாக வானம் நன்றாகக் கருத்தும் கும்மிருட்டுத் தட்டும் நேரம், வெள்ளி முளைத்துச் சில நாழிகைகளுக்கெல்லாம் நேரிடுவதால் வெள்ளி முளைக்கும் நேரத்துக்கும் பொழுது புலருவதற்கு மிடையே யுள்ள காலத்தைத் தமிழர்கள் இன்றும் ‘கருக்கல்’ என்று அழைக்கிறார்கள். ‘கருக்கல்லில் வந்துவிடுகிறேன்’ என்று படிக்காத தமிழர்கள்கூடச் சொல்லுவதை இன்றும் கேட்கலாம். பண்டைத் தமிழர்கள் விடிவதற்கு முன்பே எழுந்திருந்து அலுவல்களில் இறங்கி வந்தார்கள் என்பதற்கும் இயற்கையின் இந்தக் கண்மூடும் வித்தையை அறிந்திருந்தார் களென்பதற்கும் ‘கருக்கல்’ என்ற சொல்லே உதாரணம் என்று அறிஞர்கள் கூறுவதுண்டு. இதற்கு இணையான ஒரு சொல் வேறு மொழிகளில் கிடையாது என்று வாதிப்பவர்களும் உண்டு. இந்தக் கதையின் சம்பவங்களுக்குச் சொல் ஆராய்ச்சி தேவையில்லையாகையால், அந்த வாதத்தில் இறங்காமல் ‘கருக்கலுக்கும் கதைச் சம்பவங்களுக்கும் உள்ள தொடர்பை மட்டும் விவரித்துச் செல்லுவோம்.

கருமை நன்றாகத் தட்டிக் கிடந்த அந்தக் கருக்கல் நேரத்தில் வெளியேயிருந்து எழுந்த ‘வீல்’ என்ற பயங்கரச் சத்தம் பூவழகியின் அழகிய உடலை ஒருமுறை நடுங்கச் செய்து விட்டதாகையால் அவளுக்கு ஆறுதலளிக்க இளஞ்செழியன் அவள் கையைப் பற்றியிருந்த தன் கரத்தை அவள் இடையில் செலுத்தி இறுக அணைத்துக் கொண்டதன்றி, “அடிகளே! வெளியில் சென்று என்ன விஷயம் என்று பார்க்கட்டுமா?” என்று வினவவும் செய்தான்.

“எந்தக் காரணத்தை முன்னிட்டும் வெளியே போக வேண்டாம் படைத்தலைவரே. நீர் இப்பொழுது இருக்கிற இடத்தைவிட்டு நகரவும் வேண்டாம். சற்றுப் பொறும்; நான் போய் இன்பவல்லியையும் இதர தோழிகளையும் அழைத்து வருகிறேன்” என்று சொல்லிவிட்டு, எதிரேயிருந்த சுவரைத் தட்டித் தடவி, பக்கத்திலிருந்த ஒரு ரகசியக் கதவைத் திறந்து கொண்டு வெளியே சென்றார் பிரும்மானந்தர்.

இருட்டில் தனியே விடப்பட்ட பூவழகியும் இளஞ் செழியனும் ஏதும் பேசாமல் மௌனமாகவே நின்றிருந்தாலும் அவர்கள் நெஞ்சங்களில் எழுந்து மோதிய உணர்ச்சி அலைகள் மட்டும் சிறிதும் மௌனம் சாதிக்காமல் பேரிரைச்சலாக எழுந்து அவர்கள் உடலில் ஊடுருவிச் சென்றதால் இருவரும் சிறிது சங்கடத்துடனேயே நின்று கொண்டிருந்தார்கள். பூவழகியின் அழகிய இடையில் தவழ்ந்து அணைத்துக் கொண்டிருந்த அவன் இடக்கரம் மேலே செல்லத் தைரியமின்றி முதலில் பதித்த இடத்திலேயே தடைப்பட்டு நின்றது. தன் உள்ளத்தையெல்லாம் கொள்ளை கொண்ட பூவழகி கருக்கல் அளித்த காரிருளில் தனியே கையில் சிக்கிக் கிடந்த அந்த நேரத்தில் கூட, தான் அவளைத் தழுவத் துணிவில்லாதபடி செய்துவிட்ட அந்தப் பழைய இரவின் விசித்திர சம்பவங்களை நினைத்துப் பொருமினான் இளஞ்செழியன். டைபீரியஸுடன் சென்ற யவன ராணியின் செந்நிறக் கொண்டையும் அல்லிமலர் போன்ற முகமும், நீலமணிக் கண்களும் அந்த இருட்டிலும் தன் மனக்கண்ணில் எழுந்து விட்டதையும் அவள் அழகிய விழிகள் தன் நிராதரவான நிலையைப் பார்த்து நகைப்பதையும் கண்ட இளஞ்செழியன் ‘என் போதாத காலந்தான் அந்த மோகினிப் பிசாசை என் காலடியில் தள்ளிற்று’ என்று மனத்திலே வெறுப்பையும் மூட்டிக்கொண்டான்.

பூவழகியும் பெரிய சங்கடத்தில்தான் இருந்தாள். இளஞ்செழியன் கரம் இடையில் அழுந்தி அணைத்தது ஆதரவாக மட்டுமல்ல. அத்தனை ஆதரவிலும் இன்பத்திலும் இடையே பாய்ந்தன, அவனைப்பற்றி அவள் நெஞ்சத்திலும் ஆழப் பதிந்துவிட்ட சந்தேக பாணங்கள். ‘அன்றொரு நாள் இப்படித்தான் இடையை ஆதரவுடன் தொட்டார். அன்றிருந்தது அவர் கன்னத்தில் ஒருத்தியின் குங்குமப் பொட்டு. இன்று இப்படி நிற்கிறார் இவர். இன்றோ ஒரு யவனப் பெண்ணை என் கண் முன்பாக இழுத்துக்கொண்டு வந்தார்; என்ன மனிதர் இவர்!’ என்று தனக்குள்ளேயே இளஞ் செழியனை வெறுத்துக் கொண்டாள் வேளிர்குலப் பேரழகி.

இருவர் மனங்களிலும் தாண்டவமாடியது வெறுப் பெனும் உணர்ச்சிதான். இளஞ்செழியன் மனத்தில் ஏற்பட்டது சூழ்நிலை தன்னைக் கெடுத்துவிட்டதால் தன்னைப் பற்றியே ஏற்பட்ட வெறுப்பு. காதலில் முளைத்த சந்தேகம், இல்லாத குற்றங்களையெல்லாம் இளஞ்செழியன் மீது நாட்டியதால் காதலன்மீதே பாய்ந்த வெறுப்பு பூவழகிக்கு. இரண்டுவித வெறுப்புக்கும் ஆளான படைத்தலைவன் உள்ளத்தே எழுந்த குமுறலைத் தாங்கமாட்டாமல் பெருமூச் செறிந்ததன்றி, பிரும்மானந்தர் வருவதற்குள் இரண்டொரு வார்த்தைகள் பேசலாமென்ற ஆசையால், “பூவழகி!” என்று அவளை அன்பாகவும் கூப்பிட்டான்.

பூவழகியின் உள்ளம் பலவித உணர்ச்சிகளுக்கு இலக்காகி நின்றதால் அவள் பதிலேதும் சொல்லாமல் மௌனமாகவே நின்றதன்றி, தன் இடையிலிருந்த படைத் தலைவன் கையையும் மெள்ள விலக்கினாள். அவள் செயலிலிருந்தே உள்ளத்தில் மூண்டெழுந்த கோபத்தை ஊகித்துக் கொண்டே படைத்தலைவன் அவளை மெள்ள வழிக்குக் கொண்டுவர வேறொரு தந்திரத்தைக் கையாள முயன்று, “பூவழகி! கடைசியில் உன் தந்தையின் எண்ணம் ஈடேறவில்லையே!” என்று கேட்டான்.

“உம்?” என்று சந்தேகம் சொட்டும் கேள்விச் சத்தம் மட்டும் எழுந்தது பூவழகியிடமிருந்து.

“உன் தந்தை…” என்றான் மீண்டும் இளஞ்செழியன்.

“அவருக்கென்ன?” இந்த முறை சற்று உஷ்ணமாகவும் திடமாகவும் எழுந்தது கேள்வி.

“அவர் எதற்காக என்னை வீட்டைவிட்டு வெளியே அனுப்பினார்?”

“காரணம் உங்களுக்குத்தான் தெரியுமே.”

“உனக்கும் தெரியுமல்லவா?”
“உம்.”

“பின் சொல்லேன்?”

அவள் பதில் சொல்லவில்லை. அதுவரை அவளுக்கு இருந்த கோபத்தை வெட்கம் ஓரளவு வெட்டிவிட்டதால் மௌனமே சாதித்தாள்.

“நீ பெரிய பெண்ணாம்” என்றான் இளஞ்செழியன்.

“உம்.”

“நீ வயது வந்த பெண்…”

“ஊஹும்!”

“அப்படியென்று உன் தந்தை சொன்னார்.”

“ஓகோ !”

“உலகம் கொடியதாம்.”

“சந்தேகமென்ன?”

“நீ இருக்கிற வீட்டில் நான் இருக்கக்கூடாதாம்.”

பேச்சின் போக்கைப் புரிந்துகொண்ட பூவழகி அந்த முறைப்பிள்ளையின் சாமர்த்தியத்தை நினைத்து மெள்ளப் புன்முறுவல் செய்தாள். மேற்கொண்டு கேட்டான் இளஞ் செழியன், “அது நியாயமா பூவழகி?” என்று.

“எது?”

“நீ இருக்கிற வீட்டில் நான் இருக்கக்கூடாதென்பது.”
“நியாயந்தான்.”

“அத்தனை நாள் இருந்தேனே.”

“அதுவும் தவறுதான்.”

“இருந்தால் என்ன நேர்ந்துவிடும்?”

பூவழகி இதற்கு என்ன பதிலைச் சொல்லுவாள்? பஞ்சையும் நெருப்பையும் சேர்த்து வைக்கக்கூடாது என்று சொல்லுவாளா? பூவை அணுகுவது வண்டின் இயல்பு என்று சுட்டிக் காட்டுவாளா? ‘வேண்டுமென்று நான் தான் உங்களைப் பொறாமையால் போகச் சொன்னேன்’ என்று விளக்குவாளா? எதைச் சொல்லுவாள் அந்தப் பேதை! விவர மறிந்த பெண்ணும் ஆணும் பேசும்போது ஏற்படும் சங்கடங்கள் இறுதியில் மௌனத்தையே விளைவிக்கு மாதலால் மீண்டும் மௌனமே சாதித்தாள் அவள். அந்த மௌன நிலைக்குக் காரணத்தைப் புரிந்துகொண்ட இளஞ்செழியன் மட்டும் சந்தர்ப்பத்தை நழுவவிடாமல் மெள்ளச் சிரித்துவிட்டுச் சொன்னான்: “பூவழகி! வயது வந்த பெண் இருக்கிற வீட்டில் நான் இருக்கக்கூடாதென்று உன் தந்தை என்னை விரட்டினார். ஆனால் அவர் எண்ணம் ஈடேற வில்லையே. இதோ என் முறைப்பெண் என் அருகில் தனித்து நிற்கிறாளே. நம்மைப் பிரிக்க ஆண்டவனுக்கு இஷ்டமில்லை பூவழகி. நாம் சிறிதும் எதிர்பாராத நிகழ்ச்சிகள் நம்மை ஒன்றுசேர்த்துவிட்டன பார். பூம்புகாரின் முக்கிய நிலைகளையெல்லாம் யவனர்கள் ஆக்கிரமித்து வருகிறார்கள் அதிலிருந்து பூம்புகாரைக் காக்கவே அவர்கள் ராணியை நான் தூக்கிவந்தேன். அந்த முயற்சி தோற்றது. ஆனால் என் அதிர்ஷ்டம் வென்றது. நீ என்னிடம் கிடைத்துவிட்டாய். என்ன சொல்கிறாய் இப்பொழுது?”

பூவழகி நகைத்தாள்.

“ஏன் சிரிக்கிறாய் பூவழகி?” என்று கேட்டான் இளஞ்செழியன் காரணம் புரியாமல்.

“நீங்கள் பேசும் பேச்சு…”

“அதற்கென்ன?”

“நாட்டுப் பற்றுள்ள பேச்சாகக் காணோம்.”

“காதல் பற்று இருக்கிறது.”

“இல்லை.”

“வேறென்ன இருக்கிறது?”

“பெண்ணைக் களவாடுபவன் பேச்சாயிருக்கிறது.”

“சே! சே!”
“நீ என்னிடம் கிடைத்துவிட்டாய். உன் தந்தையின் எண்ணம் ஈடேறவில்லை என்பதெல்லாம் என்ன பேச்சு? எதைக் குறிக்கிறது?”

அவள் பேச்சு கோபமாகத்தான் இருந்தது. ஆனால் குரலில் கோபத்துடன் ஆசையும் கலந்திருந்ததை இளஞ் செழியன் கவனித்தான். பெண்களின் சுபாவமே அது. அவர்கள் ஆசைக்குக் கோபம் ஒரு மெல்லிய திரை. அதை ஆண் மகன் கிழித்துப் பலவந்தமாக உள்ளே நுழைய வேண்டும் என்பது அவர்கள் எண்ணம் எழுப்பும் அவா. ‘அந்தப் பலவந்தத்தில்தான் இருவரும் இன்பத்தைக் காண்கிறார்கள். எட்டும் பழத்தைவிட எட்டாத பழத்துக்கு இனிப்பு அதிகம். முயற்சியின் கஷ்டம் அதற்குள்ள மதிப்பை ஒன்பது மடங்காக்குகின்றது. பிணக்கின் தத்துவமே இதுதான். இந்தத் தத்துவத்தை உணர்ந்திருந்த இளஞ்செழியன் டைபீரியஸை மறந்தான். யவன ராணியை மறந்தான். பிரும்மானந்தர் சுட்டிக் காட்டிய ஆபத்தான நிலையைக் கூட மறந்தான். அவனும் அவளும் அப்போதிருந்தது தனி உலகம்! வேறு யாருமே இல்லாத ஓர் இன்ப உலகம்!

இன்னும் கொஞ்ச நேரம் அவகாசம் இருந்திருந்தால் அந்த உலகம் பெரிதும் விரிவடைந்திருக்கும். ஆனால் அந்த உலகத்துக்குள்ளே பிரும்மானந்தர் தடதடவென்று நுழைந்தார். அவருடன் இன்பவல்லியும் பூவழகியின் வேறிரு தோழி களுங்கூட மடமடவென நுழைந்தார்கள். பிரும்மானந்தர் வரும்போது தோழியர்களை மட்டும் கொண்டு வராமல் சின்னஞ்சிறு அகல் விளக்கொன்றையும் கொண்டு வந்திருந்த மையால் காதலரிருவரின் கனவுலகம் பிறந்த நேரத்தில் அஸ்தமனமும் ஆகிவிட்டதன் விளைவாக இருவரும் சங்கடப் பட்ட பார்வையுடன் பிரும்மானந்தரை நோக்கினார்கள்.

பிரும்மானந்தரின் சின்னஞ்சிறு கண்களும் படைத் தலைவனையும் அந்த வேளிர் குலப் பேரழகியையும் ஒரு முறை துரிதமாகவே நோக்கி, அவர்கள் மனநிலையை எடை போட்டு விட்டனவாகையால் அவர் நமட்டு விஷமமாகப் புன்முறுவல் செய்துவிட்டு, ஒரு கையில் கொண்டு வந்திருந்த அகல் விளக்கை ஓர் ஓரத்திலும், இன்னொரு கையிலிருந்த துணி மூட்டையை இன்னொரு பக்கத்திலும் வைத்தார். பிறகு இளஞ்செழியனை நோக்கி, “படைத்தலைவர் மன்னிக்க வேண்டும்” என்றும் சொன்னார்.

“எதற்கு?” என்று கேட்டான் படைத் தலைவன்.

“சிறிது நேரமாகிவிட்டது வருவதற்கு.”

“அதனாலென்ன!”

“ஒன்றும் குடிமுழுகிப் போய்விடவில்லை. இருந்தாலும் அதிக நேரம் தாமதிக்க அவகாசமில்லை படைத் தலைவரே. இப்பொழுது புகார் இருக்கும் நிலைமை என்னவென்று நிச்சயமாய்ச் சொல்லமுடியாது. இளஞ்சேட்சென்னி இறந்து விட்ட செய்தியும் திருமாவளவன் மறைந்துவிட்ட செய்தியும் ஏககாலத்தில் கிடைத்திருக்கிறது இவ்வூருக்கு. அதே இரவில் யவனராணி ஒருத்தியும் யவனர் படைத் தலைவன் ஒருவனும் இங்கு வந்து சேர்ந்திருக்கிறார்கள். பூம்புகாரில் கோட்டைத் தலைவனுக்கு சம அதிகாரமுள்ள படைத்தலைவர் நீர் ஒருவர்தான். உமது படைகளோ காவிரிக்கு அக்கரையில் இருக்கின்றன. இந்த அனுகூல நிலையை யவனர்கள் கைக் கொள்ளப் போகிறார்களா அல்லவாவென்பது தெரியாது. ஆனால், பூம்புகாரில் அவர்கள் வசிக்கும் மருவூர்ப்பாக்கத்தை மட்டுமின்றி பட்டினப்பாக்கத்தையும் கைப்பற்றப் போவதாக மாரப்பவேள் சொல்லியனுப்பியிருக்கிறார்.”

“யார்? பூவழகியின் தந்தையா?”

“ஆம், புகார் எப்பொழுதும் மாற்றார் கைவசமாகலாம் என்று அவருக்குச் செய்தி கிடைத்ததால் தம் மகளையே எனக்குத் தகவல் தெரிவிக்க அனுப்பினார். இல்லாவிட்டால் பூவழகி இரவில் இங்கு வருவாளா?”

“இத்தனையையும் அறிந்திருந்தும் யவன ராணியை எதற்காக டைபீரியஸுடன் அனுப்பச் சொன்னீர்கள்? அவளைக் கொல்வதாகப் பயமுறுத்தித்தானே நான் யவன வீரர்களிடமிருந்து தப்பி வந்தேன்? அதே தந்திரத்தைக் கையாண்டிருந்தால் பூம்புகார் விஷயத்திலும் அவர்கள் கையைத் தேக்கியிருக்கலாமே?”

மங்கலான அகல் விளக்கொளியில் சிறு கண்கள் பளபளக்கப் படைத்தலைவனை நோக்கிய அடிகள் சொன்னார்: “படைத்தலைவரே! உமது வீரத்தைப்பற்றியோ கண்களின் கூர்மையைப்பற்றியோ எனக்குச் சந்தேகம் சிறிதும் இருந்ததில்லை. ஆனால், இன்றிரவு பூவழகியைக் கண்ட உணர்ச்சிப் பெருக்கால் உமது கண்கள் பார்வையிழந்து விட்டன. காதலன் குருடன் என்ற தமிழ்ப்பழமொழியை மெய்ப்பித்து விட்டீர். டைபீரியஸின் நிழல், கூடத்தின் வெளித் தாழ்வாரத்தில் விழுந்தவுடனே நான் எச்சரிக்கையடைந்தேன். அவன் கதவின் மறைவில் வந்த பின் என் கண்கள் சாளரத்தைத் துழாவின. யவனர் இருவர் கையில் கட்டாரி களுடன் நின்றிருந்தார்கள். டைபீரியஸ் எதற்கும் தயாராக வந்திருந்தான். நீர் சிறிது எதிர்ப்பைக் காட்டியிருந்தால் சாளரத்தின் மூலம் இரு கட்டாரிகளில் ஒன்று உமது மார்பிலும் இன்னொன்று என் மார்பிலும் பாய்ந்திருக்கும். இருவரும் மேலுலகை அலங்கரித்திருப்போம். ஆனால், அதற்கு வேளை வரவில்லை. ஆகையால்தான் ராணியைப் போகவிட்டேன். தவிர, டைபீரியஸுடன் இரண்டு வீரர்கள் தான் வந்திருப்பார்கள் என்பது என்ன நிச்சயம்? ஆசிரமம் ஒருவேளை சூழப்பட்டிருக்கலாம். அவன் பூவழகியைப் பார்த்த பார்வையும் எனக்குப் பெரிதும் சந்தேகமாயிருந்தது. எதற்கும் நாம் மடத்திலிருந்து சீக்கிரம் தப்பிச் செல்ல வேண்டும் என்று மட்டும் தீர்மானித்துக் கொண்டேன்.”

அடிகள் சொன்னதைக் கேட்ட இளஞ்செழியன் மட்டுமன்றிப் பூவழகியும் பிரமித்து நின்றாள். அவர்கள் பிரமிப்பைச் சட்டை செய்யும் நிலையில் இல்லாத பிரும்மானந்தர் அடுத்த அறைக்கு மீண்டும் சென்று, பெரும் பட்டாக்கத்தியுடன் திரும்பிவந்து அதை இடது கையால் சிறிது கூர் பார்க்கவும் முனைந்தாராகையால், அடிகள் சண்டைக்கு ஆயத்தம் செய்து கொள்கிறார் என்பதைத் தெரிந்து கொண்ட இளஞ்செழியனும் தனது வாளை உருவிக் கையில் பிடித்துக் கொண்டான். வலது கையில் வாளையும் இடது கையில் அகல் விளக்கையும் எடுத்துக்கொண்ட அடிகள், “படைத்தலைவரே! நான் முன்னால் செல்கிறேன். நீர் கடைசியில் வாரும். நம் இருவருக்கும் இடையில் பெண்கள் வரட்டும். பின் தொடருபவர் யாராயிருந்தாலும் தாட்சண்யமின்றி வெட்டித் தள்ளுங்கள். இன்பவல்லி, அந்தத் துணி மூட்டையை நீ எடுத்துக்கொள்” என்று உத்தரவிட்டு முன்னே நடந்தார்.

“அடிகளே!” என்று படைத்தலைவன் அவரைச் சற்றுத் தடை செய்தான்.

“ஏன்?”

“வாயிலில்….”

“வீல் என்று சத்தம் கேட்டதே அதைச் சொல்கிறீரா?”

“ஆமாம்.”

“அதைப்பற்றிக் கவலைப்பட வேண்டாம்.”

“யாரையாவது கொன்று போட்டிருந்தால்?”

“அங்கு சாகக் கூடியவர்கள் யாருமில்லை.”

“அப்படியானால் அந்தக் கதறல்?”

“என் சீடன் கத்தியிருக்கிறான்.”

“சீடனா ?”

“ஆமாம், பூவழகி செய்தி கொண்டு வந்தவுடனேயே சீடர்களை நாலு பக்கத்திலும் காவல் போட்டேன். ஆபத்து வந்தால் அலறும்படியும் சொல்லி வைத்தேன்.”
“டைபீரியஸ் அவனைக் கொன்றுவிடப் போகிறானே!”

“என் சீடர்கள் அப்படி எளிதில் சாகக்கூடியவர்களல்ல படைத்தலைவரே! அப்படியே இருந்தாலும் நாம் என்ன செய்ய முடியும். நாட்டு நன்மைக்கு அவர்கள் செய்ய வேண்டிய தியாகம் அது” என்று சர்வ சாதாரணமாகக் கூறிவிட்டு மேற்கொண்டு பேசாமல் பிரும்மானந்தர் முன்னே வழிகாட்டிச் சென்று அடுத்த அறையில் தரையில் உட்கார்ந்து கீழே இருந்த இரும்புக் கதவைத் திறந்துவிட்டு அடியில் தெரிந்த படிகளில் இறங்கினார்.

சுரங்க வழி மிகச் சுத்தமாக வைக்கப்பட்டிருந்ததைக் கண்ட இளஞ்செழியன், பிரும்மானந்தர் எந்தச் சமயத்திலும் எதற்கும் தயாராக இருக்கிறார் என்பதைப் புரிந்து கொண்டு, ‘அடடா! இவர் துறவறம் பூணாமல் இருந்தால் நாட்டுக்கு எவ்வளவு நன்மையாக இருக்கும்!’ என்று எண்ணினான்.

சுரங்கப் பாதையின் சுத்தத்தைக் கவனித்த பூவழகியும் ஆச்சரியத்தால் தன் விழிகளை அகல விரித்து, “அடிகளே! இது இருப்பது எனக்கு இத்தனை நாள் தெரியாதே” என்றாள்.

“எல்லோருக்கும் தெரிந்துவிட்டால் இந்தப் பாதைக்கு அவசியமே இருக்காதே பூவழகி” என்று பதில் சொன்ன பிரும்மானந்தர், நீண்டநாள் பழக்கத்தில் ஏதோ மடத்தில் நடமாடுவது போலவே இந்தச் சுரங்க வழியில் நடந்து சென்றார். சுமார் ஒன்றரை நாழிகைக்கு மேலாகக் கீழும் மேலும் இறங்கி ஏறிய பின்பு தலைக்கு மேலே தெரிந்த ஒரு பெரிய இரும்புக் கதவை இரு கைகளாலும் நகர்த்திய அடிகள், அதன் மேல்தட்டைத் தாவிப்பிடித்து வெகு லாகவமாக ஏறியதன்றி, பெண்கள் கைகளைப் பிடித்துத் தூக்கி ஒவ்வொருவராக மேலே ஏற்றியும் விட்டார். கடைசியாக இளஞ்செழியனும் மேல்தட்டைத் தாவிப் பிடித்து ஏறித் தரையில் காலை வைத்து நிமிர்ந்து நின்றதற்கும் மணி வண்ணன் கோட்டத்துப் பெரிய மணிகள் பொழுது புலர் வதை உணர்த்த ‘டணார்,’ ‘டணார்’ என்று பெரிதாகச் சப்திப்பதற்கும் சரியாயிருந்தது.

சுற்றுமுற்றுமிருந்த பாறாங்கல் சுவர்களையும் எதிரே தெரிந்த முதுகுப்புறப் பிம்பங்களையும் கண்ட இளஞ்செழியன் மணிவண்ணன் கோட்டத்தின் கர்ப்பக் கிரகத்தில் தானும் மற்றவர்களுமிருப்பதை உணர்ந்து கொண்டானாகையால், “அடிகளே! இது கர்ப்பக்கிரகமல்லவா!” என்று வினவினான்.

“ஆமாம் படைத்தலைவரே! இதற்கும் அடியவன் மடத்துக்கும்தான் சுரங்கமிருக்கிறது.”

“சன்னிதானமாயிற்றே!”

“உலகமே ஆண்டவன் சன்னிதானம் படைத்தலைவரே. இந்தக் கர்ப்பக்கிரகமும் உலகத்தில் ஒரு இடம். இந்தச் சுரங்கத்தை மன்னர்கள் தப்புவதற்காகக் கட்டியவர் ஒரு மகான். இந்த மணிவண்ணன் சிலையையும் கோட்டத்தையும் நிர்மாணித்த என் தந்தைதான் இந்தச் சுரங்கப் பாதையையும் சிருஷ்டித்தார்.”

“தங்கள் தந்தை ஒரு சிற்பியா?”

“ஆமாம் படைத்தலைவரே! எங்கள் பரம்பரையே சிற்பிகள் பரம்பரை.”
“ஆனால் தாங்கள்….”

“ஏன் நானும் சிற்பிதான். ஆனால் அந்தத் தொழிலுக்கு நேரமில்லை” என்று கூறிய பிரும்மானந்தர் மேற்கொண்டு பேசாமல், கையிலிருந்த மூட்டையை அவிழ்த்துப் பல காவி உடைகளை எடுத்து ஒவ்வொருவருக்கும் அளித்து, “இதை அணிந்து கொள்ளுங்கள்” என்று உத்தரவிட்டு, “பூவழகி! நீயும் உன் சேடிகளும் அப்படிப் பிராட்டியின் சிலைப்பக்கம் செல்லுங்கள்” என்று மறைவான இடத்தையும் சுட்டிக் காட்டினார்.

பெண்கள் சென்றதும் பிரும்மானந்தர் இளஞ்செழியனை நோக்கி, “படைத்தலைவரே! பண்டார உடைகளைச் சீக்கிரம் அணியுங்கள். கதவு திறக்க இன்னும் அரைநாழிகையே இருக்கிறது. கதவு திறக்கும் நேரத்தில் நாம் கதவு மறைவில் நின்றுகொண்டால் மணிவண்ணனுக்குப் பூச்சொரியும் அடிகளார் திருக்கூட்டம் கும்பலாக உள்ளே நுழையும். அந்தக் கும்பலில் நாமும் கலந்துகொள்ளலாம். அவர்கள் வெளியே செல்லும்போது மாற்று உடையில் நாமும் செல்லலாம்” என்று தமது திட்டத்தை விவரித்தார்.

அடிகளின் ஏற்பாடுகளைக் கண்டு வியந்துபோன படைத்தலைவன், பதிலேதும் சொல்லாமல் உடைகளை மாற்றிக் கொண்டான். பூவழகியும் தோழிகளும் சன்னியாசினி களாக மாறியதும், தமது கத்தியையும் இளஞ்செழியன் கத்தியையும் மட்டும் வைத்துக் கொண்ட பிரும்மானந்தர் பெண்களின் துணி, நகை, இளஞ்செழியன் ஆடைகள் ஆகிய அனைத்தையும் மூட்டையாகக் கட்டிச் சுரங்கப் பாதையில் எறிந்து இரும்புக் கதவையும் மூடியதன்றி, அடுத்து நடந்து கொள்ள வேண்டிய முறையைப்பற்றிப் பெண்களுக்கும் சொல்லிக் கொடுத்தார்.

பொழுது புலர்ந்தது. மணிவண்ணன் கோட்டத்தின் உதயதாரைகள் இன்பமாக ஊதப்பட்டதால் மதிள்கள் எங்கும் எதிரொலி செய்து ஊரையே நாதமயமாக்கிக் கொண்டிருந்தன. அடிகளார் திருக்கூட்டம் பெருங்கூட்டமாக உள்ளே நுழைந்து, மணிவண்ணனுக்கு மலர்சொரிந்து பல்லாண்டு பாடியது. எல்லோருக்கும் ஒருபடி உயர்ந்த குரலில் பிரும்மானந்தரும் பெருமாளுக்கு வாழ்த்துப் பாடிய போது அவர் காஷாய உடைக்குள்ளே மறைந்திருந்த பெரும் பட்டாக்கத்திகூட ஆனந்தத்தால் சற்றே அசைந்தது.

பூசை முடிந்து திரும்பிய அடிகளார் திருக்கூட்டத்தோடு கலந்து கோவிலைவிட்டு வெளியேறிய பிரும்மானந்தர் கூட்டமும் மற்றவர்களோடு நாமாவளி பாடிக் கொண்டு வீதியில் சென்றது. வீதியின் மூலையொன்றில் திரும்பியதும் பிரும்மானந்தர் தனித்து விலகி மற்றவர்களையும் விலகும்படி சைகை செய்ததன்றி, சற்று தூரத்தில் வேகமாக அவர்களைத் தொடர்ந்து வந்துகொண்டிருந்த இரட்டைப் புரவி ரதமொன்றில் எல்லோரையும் ஏறும்படி கண்களால் ஜாடையும் காட்டினார்.

ரதத்தைச் செலுத்தி வந்தவனும் அடிகள் ஜாடையைப் புரிந்துகொண்டு ரதத்தை ஒரு பக்கமாக நிறுத்தவே எல்லோரும் ரதத்தில் ஏறிக் கொண்டார்கள். எல்லோரும் ஏறியதும் கடைசியாகத் தாமும் ஏறிக்கொண்ட பிரும்மானந்தர், “அப்பனே! படகுத் துறைக்கு ஓட்டு. புரவிகள் ஆமை நடையில் செல்லவேண்டும்” என்று உத்தரவிடவே ரதமும் கன வேகமாகப் பாதையில் தூள் பறக்கச் செல்லத் தொடங்கியது. ரதம் செல்லத் தொடங்கியதும், ‘இனி பயமில்லை ‘ என்ற காரணத்தால் ஆழ்ந்த யோசனையில் இறங்கிவிட்ட பிரும்மானந்தர் மனம் மட்டுமன்றி மற்றவர்கள் மனமும் முதல்நாளிரவின் நிகழ்ச்சிகளில் ஈடுபட்டுப் பலதரப்பட்ட எண்ண அலைகளால் தாக்குண்டு கிடந்ததால் படகுத் துறைக்குச் செல்லவேண்டிய அந்த ரதம் பாதை திரும்பி வேறு மார்க்கத்தில் வெகுவேகமாகச் செல்ல முற்பட்டதை யாருமே கவனிக்கவில்லை .

Previous articleYavana Rani Part 1 Ch11 | Yavana Rani Sandilyan | TamilNovel.in
Next articleYavana Rani Part 1 Ch13 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here