Home Sandilyan Yavana Rani Part 1 Ch13 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

Yavana Rani Part 1 Ch13 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

85
0
Yavana Rani Part 1 Ch13 Yavana Rani Sandilyan, Read Yavana Rani Online Free, Yavana Rani PDF, Download Yavana Rani novel, Yavana Rani book,read Yavana Rani free
Yavana Rani Part 1 Ch13 |Yavana Rani Sandilyan|TamilNovel.in

Yavana Rani Part 1 Ch13 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

யவன ராணி – சாண்டில்யன்

முதல் பாகம்

அத்தியாயம் : 13 அதோ அந்த முத்துக்கள்!

Yavana Rani Part 1 Ch13 |Yavana Rani Sandilyan|TamilNovel.in

கீழ்க்கடலில் காலைக் கதிரவன் பெரிய நெருப்புப் பந்துபோல் எழுந்து, நீர்மட்டத்தைக் கிழித்துக்கொண்டு தலையை வெளியே நீட்டியதால் காவிரிப்பூம்பட்டினத்தின் பெரு மதிள்கள் பொன்னிறம் பெற்றுப் பிரகாசிக்கத் தொடங்கிவிட்டனவென்றாலும், மதிள்களின் உயரத்தின் காரணமாக ஊருக்குள் மட்டும் இளவெயில் புகாமலே இருந்தது. அப்படி ஊருக்குள் வெயில் புக நேரமாகவில்லையென்றாலும் பூம்புகாரின் உயரிய உப்பரிகைப் பொந்துகளில் வாசம் செய்து கொண்டிருந்த நானாவர்ண பட்சி ஜாலங்கள் பொந்துகளிலிருந்து வெளியே தலைநீட்டியும், உப்பரிகைத் தாழ்வறைகளில் உல்லாச நடைபோட்டும், சிவ்வென்று பறந்து பறந்து உட்கார்ந்து இன்பமாகக் கூவியும் ஆதவன் எழுந்து விட்டான் என்பதை மக்களுக்கு அறிவித்துக் கொண்டிருந்தன.

ஆரம்பத்தில் மென்மையாகக் கூட்டப்படும் சுருதி, விரல் அழுந்த அழுந்த, இசையின் வேகம் வலுக்க வலுக்க, கமக சப்தங்கள் பெரிதாகக் கேட்கும் வண்ணம், ஜீவாவின் சுரசுரப்பையும் கலந்துகொண்டு உயிர்த்துடிப்புடன் ஒலிப்பதைப் போலவே, உதயகாலத்தின் ஆரம்பத்தில் பட்சி ஜாலங்களின் இன்ப சப்தங்களாலும், அடிகளார் திருக் கூட்டங்களின் நாமாவளிகளாலுமே சூழப்பட்ட காவிரிப்பூம் பட்டினத்தின் இரு பகுதிகளும் வினாடிகள் ஏற ஏற, மக்கள் நடமாட்டத்தாலும், வேகமாகச் சென்ற குதிரைகளின் குளம்படிச் சத்தங்களாலும், மெள்ள மெள்ளத் திறக்கப்படும் பண்டகச் சாலை கடைகளின் ஊழியர் கூச்சலாலும் நிரம்பி, புகார் விழித்துவிட்டது என்பதை அறிவுறுத்தின. பட்டினப் பாக்கத்தின் அரச வீதியிலும், அந்தணர் வீதியிலும், திருமஞ்சனத்தார் வேளமென்ற அரச ஊழியர் இல்லங்களின் வரிசைகளிலும் ஜன நடமாட்டம் மட்டுமன்றி ரதங்களின் போக்குவரத்தும் ஏற்பட்டுவிட்டபடியால், பிரும்மானந்தரின் ரதத்தை வெகு வேகமாகத் தாண்டி வேறு பல ரதங்களும், வண்டிகளும் உருண்டோடியதல்லாமல் ஆயுதம் தரித்த குதிரை வீரர்களும் அந்த ரதத்தைத் தாண்டிச் சென்றாலும் ரதத்துக்குள்ளிருந்தவர்கள் துறவிகள் என்ற காரணத்தால் யாரும் அந்த ரதத்தை ஏறெடுத்துப் பார்க்காமலே சென்று கொண்டிருந்தார்கள். அடுத்தபடி என்ன செய்யவேண்டும் என்பதைப் பற்றித் தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்த அடிகளும் ரதங்களை ஓட்டுபவர்களோ, குதிரை வீரர்களோ தங்களைக் கவனிக்காமல் செல்வதைப் பார்த்து ஓரளவு மகிழ்ச்சி கொண்டாரானாலும் ரதம் செல்லும் திக்கை மட்டும் கவனிக்காமல் விட்டுவிட்டதல்லாமல், ரதத்தை ஓட்டுபவனிடம் எந்தவிதப் பேச்சையும் கொடுக்காமல் மௌனமாக இருந்தார்.

பட்டினப்பாக்கத்திலிருந்த மணிவண்ணன் கோட்டத்தி லிருந்து படகுத்துறைக்குச் செல்ல வேண்டுமானால், பட்டினப்பாக்கத்துக்கும் மருவூர்ப்பாக்கத்துக்கும் இடையே யிருந்த நாளங்காடி இடைநிலத்தை அடைந்து பிறகு தெற்கே திரும்பி, காவிரி நதி புகாரை அணைந்து நிற்கும் பகுதிக்குச் செல்லவேண்டும். ஆனால் பட்டினப்பாக்கத்தின் வீதிகளைக் கடந்து மரங்களடர்ந்த வர்த்தகச் சாலைக்குள் புகுந்த பின்பும் ரதம் தெற்குப்புறம் திரும்பாமல் வடக்குப் புறமாக நேர் எதிர்திக்கில் வேகமாகச் சென்றதை அடிகளோ சோழர்படை உபதலைவனோ நீண்ட நேரம் கவனிக்காவிட்டாலும் அவர்களைப்போல் அதிகக் கொந்தளிப்படையாதிருந்த இன்பவல்லி மட்டும் ரதம் திசை மாறி ஓடுவதைக் கவனித்துவிட்டாளாகையால், மெள்ளப் பூவழகியைக் கையால் அசக்கித் திசையை விழிகளால் சுட்டிக் காட்டி எச்சரிக்கை செய்தாள். உணர்ச்சி அலைகளிலிருந்து விடுபட்ட பூவழகியும் உண்மையை உணர்ந்து கொண்டதும் என்ன செய்வது என்று புரியாமல் தவிக்கலானாள். அடிகள் அப்போதுதான் மோன நிலையில் ஆழ்ந்து கண்களை மூடிக்கொண்டு விட்டாராகையால் அவருக்கு ஜாடை காட்ட முடியாது. தொடுவதும் பெண்மைக்கும் விரோதம். இளஞ்செழியனோ கண்களை மூடாவிட்டாலும் அவன் புத்தி இந்த உலகத்தில் இல்லை என்பதைக் கண்கள் நிரூபித்தன. வாய் திறந்து அழைத்தால் ரதம் ஓட்டுபவன் தெரிந்து கொள்வான். இந்தத் தர்மசங்கடமான நிலையில் என்ன செய்வதென்று அறியாமல் திகைத்த பூவழகிக்கு இளஞ்செழியனைத் தொட்டு அழைப்பதைத் தவிர வேறு வழியில்லை என்பது புரிந்தே இருந்தது.

‘அவரைத் தொடவா!’ நினைக்கும்போதே நாணத்தால் அவள் முகம் சிவந்து உண்மையிலேயே செந்தாமரை ஆயிற்று. ரதத்துக்குள் இடநெருக்கடி அதிகமாயிருந்ததாலும், பிரும்மானந்தர் பெரும் பகுதியை ஆக்கிரமித்துக் கொண்டு விட்டபடியாலும், தோழிகளும் ரதமோட்டுபவனை நெருங்கி ஒதுங்கிவிட்டதாலும், பூவழகியும் இளஞ்செழியனும் ஒருவர் உடல் ஒருவர்மீது படவே உட்கார்ந்து கொண்டிருந்தார்கள். ரதத்தின் அசைவுகள் வேறு அவர்கள் உடல்களை அசைத்து அசைத்து மோதவிட்டு வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த மையால் இருவர் உணர்ச்சிகளும் ஊசிமுனையில் நின்றன. இடிபட்ட தோள்களும் உராய்ந்த கால் விரல்களும் எத்தனை
இலக்கியங்களைப் பேசிக்கொள்ள முடியும் என்று அவ்விரு வரும் சில வினாடிகளில் உணர்ந்து கொண்டார்களாகையால் இருவருக்கும் ரதத்தைவிட்டு இறங்கும் யோசனை சிறிதும் இல்லாதிருந்திருந்தது. போதாக் குறைக்கு அந்த முறைப் பிள்ளை ரதத்தின் அசைவைப் பயன்படுத்திக் கொண்டு செய்ய முயன்ற சேஷ்டைகளையும் எண்ணி வெட்கத்தாலும் ஆசையாலும் நிலைகுலைந்திருந்தாள் பூவழகி. அவன் கை அத்துமீறிய சமயங்களில் அதைத் தடை செய்பவள் போல் ஒதுக்கித் தள்ளிக் கொண்டிருந்த பூவழகி, இன்பவல்லியின் எச்சரிக்கைக்குப் பிறகு தானாக அவனை எப்படித் துணிவுடன் தொடுவாள்?

‘நானாக அவரைத் தொட்டால் அவர் ஏதாவது தவறாக….’ என்று பொருள்பட இன்பவல்லிமீது ஒருமுறை தன் அழகிய விழிகளை நாட்டினாள் வேளிர்குலப் பேரழகி.

‘வெட்கத்துக்கு இது சமயமல்ல. தொட்டு எச்சரிக்கை செய்யுங்கள்’ என்று குறிப்பிடுபவளைப் போல் கண்ஜாடை காட்டிய இன்பவல்லி, ரதம் செல்லும் திசையைக் கையாலும் சுட்டிக் காட்டினாள்.

பூவழகியும் யோசித்து, தன்னைத் திடப்படுத்திக் கொண்டு அவனை லேசாக அசக்கி, ரதம் செல்லும் திசையைச் சுட்டிக்காட்டினாள். விஷயத்தை அப்பொழுதே உணர்ந்து கொண்ட இளஞ்செழியனும் அடிகளின் பாதங்களைத் தன் கையால் அளவுக்கு மீறி வருடி, அவர் மோன நிலையைக் கலைத்து, ரதம் செல்லும் திசையைக் கண்களால் காட்டினான். உண்மையை அறிந்த பிரும்மானந்தர் முதலில் சற்றுக் கலவரம் அடைந்தாலும் அதைக் காட்டிக் கொள்ளாமல், பூவழகியின் பணிப் பெண்களைச் சற்றுப் பின்னடையச் சொல்லி தாம் மட்டும் முன்னுக்கு நகரவே, அவரது பெரும் பாரத்தில் புரவிகளின் கழுத்திலிருந்த பெரும் கயிறுகளும் இரும்புச் சங்கிலிகளும் நன்றாக இறுகவே புரவிகள் வேகம் தடாலென்று தடைப்பட்டது. ரதத்தை ஓட்டியவனும் இதைக் கவனித்து விட்டானாகையால் குதிரைகளின் சேணத்தை ஒரு கையால் பிடித்துக் கொண்டு மற்றொரு கையால் அடிகளைப் பின்னுக்குச் செல்லும்படி சைகை செய்தான்.

அடிகள் ஏதும் புரியாதவர்போல் பேச்சுக் கொடுக்கத் தொடங்கி, “அப்பனே! என்ன சொல்கிறாய்? புரிய வில்லையே” என்றார்.

“பின்னுக்குச் செல்லும்.” கரகரப்பான அடித் தொண்டையிலிருந்து வந்தது பதில்.

ரதத்தை ஓட்டுபவன் வேண்டுமென்றே குரலை மாற்றிப் பேசுகிறானென்பது பிரும்மானந்தருக்கு மட்டுமின்றி, மற்றவர்களுக்கும் புரிந்துவிட்டதால் இளஞ்செழியன் தன் ஆடையில் மறைத்து வைத்திருந்த உடைவாளை எடுக்கத் தொடங்கினான். வாளை எடுக்க வேண்டாமென்று சைகை செய்த அடிகள் ரதம் ஓட்டுபவனை இன்னும் சற்று நெருங்கி உட்கார்ந்து, “ஏன் பின்னுக்குப் போக வேண்டும் அப்பனே! முன்பாரம் நிரம்ப இருக்கின்றதோ?” என்று மீண்டும் பேச்சுக் கொடுத்தார்.

“ஆம். முன்பாரம் அதிகம்தான். பின்னுக்கு நகருங்கள்” என்றான் சற்றுக் கோபத்துடன் ரதமோட்டி.

“நகருவதைப் பற்றி ஆட்சேபணையில்லை. ஆனால்…” என்று தொடங்கினார் பிரும்மானந்தர்.
“பேச அவகாசமில்லை. சொன்னபடி செய்யுங்கள்” என்றான் ரதமோட்டி.

“நான், சொன்னபடி நீ செய்யவில்லையே அப்பனே!”

“ஆம்.”

“படகுத் துறைக்கல்லவா ஓட்டச் சொன்னேன்.”

“ஆம்.”

“பின் ஏன் ஓட்டவில்லை ?”

“காரணமிருக்கிறது?”

“என்ன காரணம்?”

“இப்பொழுது சொல்ல முடியாது. சொல்ல அவகாசமு மில்லை.”

“எங்களை எங்கே கொண்டுபோக உத்தேசம்?”

“போன பின்பு தெரியும்.”

“படகுத் துறைக்கு ஓட்டமாட்டாய்?”

“ஊஹும்.”

“அப்படியானால் சேணத்தை என்னிடம் கொடு, நான் ஓட்டிக்கொண்டு வருகிறேன்.”

“கொடுப்பதற்கில்லை.”

“ஏன்?”

ரதமோட்டியின் கோபம் உச்ச நிலையை அடைந்ததால், “அடிகளே, உம்முடன் பேச அவகாசமில்லை, பின்னால் நகர்ந்தால் வண்டி நகரும். இல்லையேல்…” என்று பேச முற்பட்ட ரதமோட்டியின் கழுத்தைக் கண் மூடிக் கண்திறக்கும் நேரத்திற்குள் பிரும்மானந்தரின் உலக்கைக் கை நெரிக்க முற்பட்டதால் அவன் மூச்சுத் திணறி, பின்புறமிருந்த தோழிகள் மீது சாய்ந்தான். அப்பொழுதே ரதமோட்டியின் முகத்தைப் பார்த்த பிரும்மானந்தர் மட்டுமன்றி இளஞ்செழியனும் பெரும் வியப்பெய்தி, “யார் ஹிப்பலாஸ்! நீயா!” என்று ஏக காலத்தில் கூவினார்கள்.

பண்டார உடையை அணிந்து தலையையும் பெரும் தலைப்பாகையினால் மறைத்திருந்த ஹிப்பலாஸும் மெள்ள அடிகளாரின் பிடியிலிருந்து விடுவித்துக்கொண்டு, “சுவாமி களுக்குக் கொலைப் பழக்கம் உண்டென்று இதுவரையில் தெரியாது படைத் தலைவரே” என்று சொல்லிக் கொண்டு முக்கி முனகி ரதமோட்டும் ஸ்தானத்தில் உட்கார்ந்தான்.

“ஹிப்பலாஸ்! நாம் எங்கு போகிறோம்?” என்று ஏதும் விளங்காமல் கேட்டான் இளஞ்செழியன்.

“மருவூர்ப்பாக்கத்துக்கு.”
“படகுத்துறைக்கு?”

“இப்பொழுது போக முடியாது.”

“மருவூர்ப்பாக்கத்தில்…”

“ஆபத்துக் குறைவு, எல்லாம் பிறகு பேசிக்கொள்வோம்” என்று கூறிவிட்டு, பிரும்மானந்தரைப் பழையபடி பின்னால் போகச் சொல்லிவிட்டுக் குதிரைகளை வாயு வேகத்தில் செலுத்தினான் ஹிப்பலாஸ். ரதமும் நாளங்காடியின் வடகோடியைக் கடந்து மருவூர்ப்பாக்கத்தில் நுழைந்து பல தெருக்களை வளைந்து வளைந்து கடந்து, வீடுகள் மிக நெருக்கமாகவுள்ள பண்டங்கள் வைக்கப்படும் உக்கிராண நிலையங்களுக்கு வந்து சேர்ந்ததும், ஒரு பெரிய மாளிகைக்கு முன்பாக ரதத்தை நிறுத்திய ஹிப்பலாஸ், கீழே இறங்கி, மூடப்பட்டிருந்த அந்த மாளிகைக்கதவை இருமுறை பலமாகத் தட்டியதும், கதவு திறக்கப்பட்டது. கதவைத் திறந்தவுடன் ஏதோ ரகசியமாகப் பேசிய ஹிப்பலாஸ் மீண்டும் ரதத்துக்கு வந்து மற்றவர்களை இறங்கச் சொல்லி உள்ளே அழைத்துச் சென்றான்.

“பல்பண்டம் பகர்ந்து வீசும்
தொல்கொண்டித் துவன்ருறிக்கை”

என மருவூர்ப்பாக்கத்தின் வணிகர் குடியிருப்புப் பகுதியைப் பற்றிப் பட்டினப்பாலை கூறுகிறது. அதாவது, ‘பல பண்டங்களுக்கும் லாபத்தை வெளிப்படையாகச் சொல்லிக் கொடுக்கும் நாணயம் மிக்க வணிகர்கள் பழமையான பொருள்களைச் சேமித்துப் பத்திரப்படுத்தியுள்ள நெருக்கமான வீடுகளையுடையது பாக்கம்’ என்று பட்டினப்பாலை விவரிப்பதற்கிணங்க, இடைவெளியேயில்லாத நெருக்கமான இல்லங்களை இருபுறமும் உடைய அந்த வீதியில் நுழையும் யாரையும் தேடுவது மிகக் கஷ்டம். வீடுகள் இரட்டை சாரியில் நெருக்கமாயிருந்ததல்லாமல் மாளிகையின் உட்புறங்களிலும் கட்டுகள் பல இருந்ததால், உள்ளே புகுந்து ஒவ்வொரு இல்லத்தையும் அலச ஜாம நேரமாவது பிடிக்கும்.

இவையனைத்தையும் நொடிப் பொழுதில் புரிந்து கொண்ட பிரும்மானந்த அடிகள், ஹிப்பலாஸைப் பகிரங்க மாகவே மெச்சத் தொடங்கி, “ஹிப்பலாஸ்! ஒளிந்திருக்க இதைவிடத் தகுதியான இடம் கிடையாது” என்று சிலாகித்தார்.

ஹிப்பலாஸ் பதிலேதும் சொல்லாமல் அவர்களை அழைத்துக் கொண்டு உக்கிராண அறைகளைத் தாண்டி மாடிப் படிகளில் ஏறிச் சென்றான். அவனுக்கு முன் சென்றவன் மாடியை அடைந்ததும் ஒரு பெரும் அறையின் கதவைத் திறந்து விட்டு ‘உள்ளே போகலாம்’ என்பதற்கு அறிகுறியாகத் தலையை வணங்கினான். பூவழகி, இன்பவல்லி, மற்றுமிரு தோழிகள், பிரும்மானந்தர், இளஞ்செழியன் இவர்கள் அனைவரும் ஹிப்பலாஸுடன் உள்ளே நுழைந்ததும் முதல் வழி காட்டியவன் அறைக் கதவைச் சாத்திக் கொண்டான்.

கதவு சாத்தப்பட்டதும் சற்று ஆசுவாசப்படுத்திக் கொண்ட ஹிப்பலாஸ் இளஞ்செழியனை நோக்கி, “படைத்தலைவரே! இந்த அறைக்குப் பின்பு நான்கு பெரும் அறைகள் இருக்கின்றன. இந்த மாளிகைக்குச் சொந்தக்காரர்..” என்று மேலும் ஏதோ சொல்லப் போனவனை இடைமறித்த இளஞ்செழியன், “யார், அரபுநாட்டு வணிகரா?” என்று வினவினான்.

“ஆம், படைத் தலைவரே! மிகவும் நம்பிக்கையானவர் கூட, நீங்கள் இங்கு பத்திரமாயிருக்கலாம்” என்று பதில் சொன்னான் ஹிப்பலாஸ்.

இளஞ்செழியன் ஹிப்பலாஸை ஒரு முறை ஏற இறங்கப் பார்த்து விட்டுக் கேட்டான், “ஹிப்பலாஸ்! நீ ஓட்டி வந்தது பிரும்மானந்தர் ஆசிரமத்து ரதமல்லவா?” என்று.

“ஆம், படைத் தலைவரே!”

“உனக்கு எப்படிக் கிடைத்தது அது?”

“அடிகளின் சீடர் கொடுத்தார்.”

“ஆசிரமத்தின் கதி எப்படியிருக்கிறது?”

“பழையபடிதான் இருக்கிறது. அங்கு யாருமில்லை.”

“டைபீரியஸ்?”

“நீங்கள் தப்பி விட்டதை அறிந்ததும் ராணியையும் தன் வீரர்களையும் அழைத்துக் கொண்டு சென்று விட்டான்.”

“உன்னைப் பின் தொடர்ந்ததாக டைபீரியஸ் சொன்னானே?”
“பின் தொடர்ந்தது உண்மை. ஆனால் டைபீரியஸ் பின் தொடருகிறான் என்பதை உணர்ந்தவுடனேயே புரவிகளை விட்டு நான் காட்டுக்குள் ஓடிவிட்டேன். பிரும்மானந்தர் மடத்துத் தோட்டத்தைப் பற்றித்தான் உங்களுக்குத் தெரியுமே. யார் மறைந்தாலும் தேடிப் பிடிப்பது குதிரைக் கொம்புதான்.”

“அது சரி! டைபீரியஸ் என்னைத் தொடராவிட்டால் எப்படி ஆசிரமத்தை அடைந்தான்?”

“படைத்தலைவரே! டைபீரியஸைப் போன்ற புத்திக் கூர்மையுடையவர் உலகத்திலேயே வெகு சிலர். நான் போகும் திசையைக் கொண்டே அவன் மடத்தை அணுகியிருக்க வேண்டும். நானும் மடத்துக்கு அருகிலுள்ள புதரில் மறைந்து நின்றுதான் அங்கு நடக்கும் விஷயங்களைக் கவனித்தேன். நீங்கள் தப்பியதை அறிந்ததும் டைபீரியஸ் ராணியை அழைத்துக் கொண்டு வெகு வேகமாக யவனர் விடுதிகளை நோக்கிச் சென்றான். அவனிருக்கும்போது அடிகளின் சீடனொருவன் அலறினானே?…”

“ஆம்.”

“அவனை அலறிய காரணத்தைக் கேட்டான்.”

“உம்.”

“டைபீரியஸைக் கண்டு பயந்து விட்டதாகச் சீடன் பாசாங்கு செய்தான். அவனைப் பயமுறுத்தியும் பயனில்லாத தால் டைபீரியஸ் சென்றுவிட்டான்.”
“சீடனைச் சிறை பிடித்துச் செல்லவில்லையா?”

“இல்லை.”

இந்தப் பதில் இளஞ்செழியனைத் தூக்கி வாரிப் போட்டது. “அதில் தானிருக்கிறது ஆபத்து” என்றான் படைத் தலைவன்.

“சீடனை விட்டுப் போனதிலா?” என்று பிரும்மானந்தர் கேட்டார்.

“ஆமாம்.”

“சீடனைக் கொல்லாமல் போனதில் படைத் தலைவருக்குத் திருப்தியில்லை போலிருக்கிறது” என்று பிரும்மானந்தர் விஷமமாகக் கேட்டார்.

“அதல்ல அடிகளே! எப்பொழுதும் கயிற்றின் நுனியைத் தளர விடுபவன் அதற்கு மேலேயுள்ள பகுதியைப் பிடித்தேற முயலுவான். நாம் தப்பிச் சென்ற படலத்தின் முக்கிய இணைப்பு சீடன். அவனைக் கொண்டு நம்மை அறிய டைபீரியஸ் முயலுவான்” என்று விளக்கினான் படைத் தலைவன்.

ஹிப்பலாஸும் பெருமூச்செறிந்துவிட்டு, “டைபீரியஸ் மகா தந்திரசாலி. அவன் எதற்காக ஒருவனைக் கொல்லாமல் விடுகிறான், ஏன் ஒருவனைக் கொல்கிறான் என்பதை யாரும் கண்டறிய முடியாது” என்று கூறி, படைத் தலைவன் சொன்னதை ஆமோதித்தான்.

“கொஞ்சம் டைபீரியஸ் பிரதாபப்புராணத்தை நிறுத்தி விட்டு நாம் மேற்கொண்டு செய்ய வேண்டியது என்ன என்பதைக் கவனிக்கலாமா!” என்று பிரும்மானந்தர் வினவினார்.

பளிச்சென்று வந்தது ஹிப்பலாஸின் பதில். “அடிகளே! நீங்கள் இப்பொழுது செய்ய வேண்டியதெல்லாம் இளைப்பாற வேண்டியது ஒன்றுதான். இங்கு உங்களை யாரும் தேடமாட்டார்கள். படைத் தலைவரும் நீங்களும் இந்தப் பெண்மணிகளும் இன்று பகல் பூராவும் இந்த அறையை விட்டு வெளிவர வேண்டாம். நான் ஊர் நிலவரத்தை அறிந்து வருகிறேன்; என் ஊகம் சரியானால் டைபீரியஸ் படகுத் துறையில் பலமான காவலைப் போட்டிருப்பான். படைத் தலைவர் காவிரிக்கு அக்கரையிலுள்ள தமது படைகளை அணுக ஒருகாலும் டைபீரியஸ் இடந்தர மாட்டான். ஆகவே படகுத்துறை நமக்குப் பயனளிக்காது. வேறு துறை எதுவென்று இரவு முடிவு செய்வோம். அதுவரை இளைப்பாறுங்கள்” என்று கூறிய ஹிப்பலாஸ் படைத்தலைவனிடம் விடை பெற்றுக் கொண்டு வெளியே சென்றுவிட்டான்.

பகல், ஆமை வேகத்தில் நகர்ந்ததால் மனக்கிலேசம் அதிகமாயிருந்ததேயொழிய, அராபிய வணிகர் மாளிகையில் விருந்தினர்களுக்கு குறைவு சிறிதளவும் இல்லை. மாளிகைச் சொந்தக்காரன் சகல வசதிகளையும் அவர்களுக்குச் செய்து கொடுத்தான். நீராடவும், உணவருந்தவும் எல்லா ஏற்பாடு களையும் அவன் மாடிமீதே செய்து கொடுத்ததன்றி, புதுப்புது உடைகளையும் அவர்களுக்கு வழங்கினான்.

அசதியும் வசதியும் சேரும்போது, இளைப்பாறி வசதியை உபயோகப்படுத்தி அசதியைப் போக்கிக் கொள்வது தான் இயல்பு. ஆனால், கவலை குறுக்கிடும் போது மட்டும் எத்தனை அசதியாயிருந்தாலும் உடல், வசதியை ஏற்க இஷ்டப்படுவதில்லை . ஆகவே, இரவு முழுவதும் கண் விழித்த படைத்தலைவனோ, பூவழகியோ, தோழிகளோ, சற்றும் இளைப்பாறாமல் மாலை நேரத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்களானாலும் பிரும்மானந்தர் மட்டும் நிம்மதியாகச் சில நாழிகைகள் தரையில் சாய்ந்துவிட்டார்.

கவலையின் காரணமாக மிகவும் நீண்டுவிட்ட அந்தப் பகலும் மெள்ள மெள்ள மறைந்து இரவு நெருங்கியது. இரவு ஏறிப் பல நாழிகைகள் கழித்து மூட்டையொன்றைத் தூக்கிக் கொண்டு உள்ளே நுழைந்த ஹிப்பலாஸின் முகம் பேயறைந்தது போல் காணப்பட்டது. முதுகிலிருந்த மூட்டையை அவன் கீழே தள்ளும் வரையில் பேசாமலிருந்த இளஞ்செழியன், “இதென்ன பொதி ஹிப்பலாஸ்?” என்று விசாரித்தான்.

“உப்புப் பொதி படைத்தலைவரே! உப்புத் தூக்குபவ னாகத்தான் இந்த வீதிக்குள் நுழைய முடிந்தது. டைபீரியஸை ஏமாற்ற ஏதோ ஒரு வேஷம்! அது கிடக்கட்டும், இனி நாம் செய்ய வேண்டியதைக் கவனிக்க வேண்டும்” என்றான் ஹிப்பலாஸ்.

“பூம்புகார் நிலை எப்படியிருக்கிறது ஹிப்பலாஸ்?” என்று படைத்தலைவன் வினவினான்.

“மாறுதல் ஏதும் வெளிப்படையாகத் தெரியவில்லை” என்றான் ஹிப்பலாஸ்.

“அப்படியென்றால்?” கேள்வியுடன் படைத்தலைவன் புருவங்களும் சற்றே எழுந்தன.
ஹிப்பலாஸ் படைத் தலைவனை நன்றாக ஏறெடுத்துப் பார்த்துவிட்டுச் சொன்னான், “படைத்தலைவரே! மேலுக்கு இது பழைய பூம்புகார்தான், எந்தவித மாறுதலும் தெரிய வில்லை. எந்தக் கெடுபிடியும் இல்லை. யவனர்கள் வழக்கப் படி தங்கள் பணிகளைச் செய்து வருகிறார்கள். ஆனால் யவனப் போர்வீரர் நடமாட்டம் மட்டும் அதிகமாயிருக்கிறது. படகுத் துறையிலும் நாளங்காடி முனைகளிலும், வீதிக் கோடியிலும் யவன வீரர்கள் சாதாரணமாக உலாவுவதைப் போல் காவல் புரிகிறார்கள்” என்று.

இதற்குப் பிறகு மௌனமாகவே நீண்ட நேரம் அறையில் நடமாடிய இளஞ்செழியன் சட்டென்று நின்று, “ஒரு வேளை இதெல்லாம் பிரமையாயிருந்தால்? ஒருவேளை டைபீரியஸ் தன் திட்டங்களை மாற்றிக்கொண்டிருந்தால்?” என்று வினவினான்.

“அப்படிக்கூட நான் நினைத்தேன். இரவு நிகழ்ச்சி களுக்குப் பிறகு ஒருவேளை டைபீரியஸ் தன் திட்டங்களைச் சிறிது நாட்களுக்கு மூட்டைக் கட்டி வைக்க இஷ்டப்படலாம் என்று எண்ணினேன். ஆனால் நான் இந்த வீதிக்குள் நுழைந்தபோதும், வெளியே சென்றபோதும் கோடியில் காவல் புரிந்தவன் பார்த்த பார்வை சந்தேகத்துக்கு இடம் கொடுக் கிறது படைத்தலைவரே.”

இந்தத் தகவலைக்கேட்ட பிரும்மானந்தரும், “எதற்கும் எச்சரிக்கையாயிருப்பதே நல்லது படைத்தலைவரே” என்று கூறிவிட்டு ஹிப்பலாஸை நோக்கி, “அப்படியானால் நாம் தப்பிச் செல்ல வழி ஏதாவது இருக்கிறதா” என்று வினவினார்.

“வழி கண்டுபிடித்து விட்டுத்தான் வந்திருக்கிறேன். நாளங்காடி படகுத்துறை வழியாக நாம் போக முடியாது. ஆனால் கடற்கரையிலுள்ள சங்கமத் துறைப் படகுகளில் செல்லலாம். இன்னும் சில நாழிகைகளில் கொற்கைக்கு மரக்கலம் கிளம்புகிறது. அதில் சரக்குகளை ஏற்றிக் கொண்டு வணிகர் கூட்டமொன்று செல்லுகிறது. நாமும் அந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளலாம். அதற்கு இந்த மாளிகைத் தலைவரே உதவ முற்பட்டிருக்கிறார். அதற்குத் தேவையான உடைகளை எடுத்து வரவே அவர் சென்றிருக்கிறார்” என்று கூறினான் ஹிப்பலாஸ்.

அவன் கூறியபடியே மாளிகைத் தலைவன் அவர்கள் அனைவருக்கும் அராபிய வணிகர் உடைகளை வழங்கினான். இரண்டாம் ஜாமம் எட்டு முன்பாகவே ஹிப்பலாஸ் அவர்களை அழைத்துச் சென்று தெருக் கோடியிலுள்ள மற்றொரு மாளிகையிலிருந்து கிளம்பிய வணிகக் கூட்டத்துடன் கலந்து கொண்டான். சரக்கைத் தூக்குபவர்களின் பெருங்கூச்சலுடன் கூட்டமாகக் கிளம்பிய வணிகர் கும்பலுடன் சேர்ந்து கொண்டு சென்ற இளஞ்செழியன் கூட்டமும் எந்தவிதத் தடங்கலுமில்லாமல் சங்கமத் துறைக்கு அருகிலிருந்த சுங்கச் சாவடிக்கு வந்து சேர்ந்தது. சரக்குகளுக்குச் சுங்க முத்திரையான புலி இலச்சினையை வைத்துக் கொண்டிருந்த சுங்கக் காவலன் சரக்குகளோடு வணிகரையும் ஒவ்வொருவராகப் படகுத் துறைக்குச் செல்ல அனுமதித்துக் கொண்டிருந்தான். பிரும்மானந்தரும் ஹிப்பலாஸும் தங்கள் மூட்டைகளுக்குப் புலி இலச்சினை பொறித்துக் கொண்ட பிறகு, மிகுந்த நாணத்துடன் கையிலிருந்த முத்துக்களடங்கிய மூட்டையொன்றைச் சுங்கக் காவலனிடம் நீட்டினாள் பூவழகி.

மூட்டையைப் பிரித்துப் பார்த்து முத்துக்களைக் கையிலெடுத்துக் கவனித்த சுங்கக் காவலன் அதிருப்திக்கு அறிகுறியாகச் சப்புக் கொட்டிவிட்டு, “இந்த முத்துக்கள் அவ்வளவு விலை உயர்ந்தவையல்ல. இதற்கு என்ன மதிப்பைப் போட்டு முத்திரை வைப்பது? எதற்கும் அந்த முத்துக்களையும் காட்டுங்கள், மதிப்பிடலாம்?” என்றான்.

“எந்த முத்துக்கள்?” என்று கேட்டாள் பூவழகி தலையை நிமிராமலே.

“பவள இதழ்களைத் திறந்தால் சொல்லுகிறேன்” என்று நிதானமாக வந்தது சுங்கக் காவலன் பதில்.

அதிர்ச்சியடைந்து கண்களை உயர்த்தினாள் பூவழகி.

டைபீரியஸின் கூரிய கண்கள் அவள் கண்களை நோக்கி நகைத்துக் கொண்டிருந்தன.

Previous articleYavana Rani Part 1 Ch12 | Yavana Rani Sandilyan | TamilNovel.in
Next articleYavana Rani Part 1 Ch14 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here