Home Sandilyan Yavana Rani Part 1 Ch14 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

Yavana Rani Part 1 Ch14 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

110
0
Yavana Rani Part 1 Ch14 Yavana Rani Sandilyan, Read Yavana Rani Online Free, Yavana Rani PDF, Download Yavana Rani novel, Yavana Rani book,read Yavana Rani free
Yavana Rani Part 1 Ch14 |Yavana Rani Sandilyan|TamilNovel.in

Yavana Rani Part 1 Ch14 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

யவன ராணி – சாண்டில்யன்

முதல் பாகம்

அத்தியாயம் : 14 சுடும் ஓலை

Yavana Rani Part 1 Ch14 |Yavana Rani Sandilyan|TamilNovel.in

கற்புடைய பெண்களைப் போலவே, பின் தூங்கி முன்னெழும் பழக்கமுடைய அந்தக் காவிரிப்பட்டினம், அப்பொழுது இரவின் முதல் ஜாமமே நடந்து கொண்டிருந்த தாலும், இரண்டாம் ஜாமம் முடியும்வரை எங்கும் வியாபாரமோ அரசாங்க அலுவலோ தடைப்படாமல் நடப்பது வழக்கமாகையாலும், நாலா பக்கங்களிலும் உயிர்த் துடிப்பைக் காட்டிக் கொண்டிருந்ததாகையால், பட்டினப் பாக்கத்தின் கோடியிலிருந்து கடற்கரை வரையிலும் பேரிரைச்சல் கேட்டுக் கொண்டிருந்தது. அதுவும் முக்கியமாகக் கடற்கரைப் பகுதியில் கரை சேரும் பரதவர் கூச்சலாலும், சுங்கக் காவலர், வணிகர் இவர்கள் சச்சரவுப் பேச்சுக்களாலும் அரவம் ஓங்கியே நின்றது. சங்கமத் துறையில் சுங்கச்சாவடியை அடுத்த காவிரியின் நீர்ப் பரப்பில் கரையோரமாக வந்து கொண்டிருந்த படகுகளைப் பரதவர், சுங்கச்சாவடியின் பெரும் கற்பாறைப் படிகளுக்கு அருகாமையில் கயிறு கொண்டு இழுத்துத் தளைகளில் பிணைத்த போதும், சரக்கு மூட்டைகளை எடுத்துச் சென்று சுங்கச் சாவடியில் புலி இலச்சினை பெறப் போட்டபோது ஏற்பட்ட ஆயாச அரவங்களும், பொதி அவிழ்ந்து விடாமலிருக்க அவற்றைத் தொடர்ந்து வணிகர் செய்த எச்சரிக்கைச் சத்தங்களும் கடலலையின் ஒலியைவிடப் பெரிதாக எழுந்து கொண்டிருந்தன.

காவிரியின் வடகரையோரம் கருங்கற்களால் பெரும் மண்டபங்களைப் போலச் சற்று தூரத்துக்கு ஒன்றாக, சோழ மன்னர்கள் அமைத்திருந்த சுங்சச் சாவடிகளின் இருபது இருபத்து ஐந்து படிகள் ஆற்று நீரில் இறங்கி நின்றதால் அவற்றின் மீது காவிரியின் அலைமோதிய சத்தமும் மற்றைய சத்தங்களோடு சேர்ந்து கொண்டது. அந்தப் படிகளின் உச்சியில் அமைக்கப்பட்டிருந்த பெரும் விளக்குகள் கரையோரமாகப் பல இடங்களில் தெரிந்ததால் காவிரித்தாய் பிரதி தினம் மக்கள் மங்களத்துக்காகக் கார்த்திகைத் தீபாலங்காரம் செய்கிறாளோ என்ற பிரமையை அளித்ததல்லாமல், சுங்கம் செலுத்தி முத்திரை பெற்றபின் மரக்கலங்களை நோக்கி ஓடும் படகுகளின் வெளிச்சம் வேறு அந்த இரவில் நீர்ப்பரப்பில் தெரிந்ததால், பிரதி தினம் இங்கு இந்திர விழாதானோ, எரியும் கற்பூரங்களை மக்கள் பிரதி தினம் காவிரியாற்றில் மிதக்க விடுகிறார்களோ’ என்ற பிரமையையும் சிருஷ்டித்தது.

மரக்கலம் ஒன்று சில நாழிகைகளில் புறப்படப் போகிற காரணத்தால் சுங்கச் சாவடிகளுக்கும், வெளியே காவிரியில் இறங்கிய படிகளின் மீது வணிகர் நெரிசல் அதிகமாக இருந்தாலும், சுங்கக் காவலர் நீண்ட நாள் பழக்கத்தின் காரணமாகவும் சோழ மன்னரின் அற்புதமான ஏற்பாட்டின் காரணமாகவும், ஆங்காங்கு கயிறுகள் கட்டி வணிகர்களை ஒருவர்பின் ஒருவராக வரச் சொல்லிச் சரக்குகளைச் சோதித்துப் புலி இலச்சினை பொறித்துக் கொண்டிருந்ததால், எந்த வணிகனும் காவலர் கண்களிலிருந்து தப்ப முடியாமல் குழப்பம் ஏதுமின்றி அலுவல் திறம்பட நடந்து கொண்டிருந்தது. அணிவகுத்துச் செல்லும் வணிகருக்கும் சுங்கக் காவலருக்கும் இடையே இருந்த பெரும் பாறையொன்று புலி இலச்சினை பொறிக்க உபயோகப்பட்டுக் கொண்டிருந்தது. இலச்சினைச் சாந்தைக் காய்ச்சித் தட்டில் ஊற்றிப் பாறை மேல் வைக்க ஒரு காவலனும், இலச்சினைக் கோலை எடுத்து அதில் தோய்த்துப் பதிக்க ஒரு காவலனும், இலச்சினை பதித்தபிறகு அதைச் சோதிக்க ஒரு காவலனும் வரிசையாகப் பாறைக்குப் பின் நின்றிருந்ததாலும், அவர்களுக்கு எதிர்ப் புறத்தில் ஆயுதம் தரித்த காவலரும் பலர் இருந்ததாலும் சுங்கச் சாவடியிலிருந்து தப்புவது சொப்பனத்திலுங்கூட நினைக்க முடியாத காரியமாயிருந்தது.

அப்பேர்ப்பட்ட சுங்கச் சாவடியில் டைபீரியஸின் கூரிய விழிகள் தன் விழிகளோடு ஏளனத்துடன் உராய்ந்ததும் காரியம் மிஞ்சிவிட்டதென்பதை உணர்ந்துகொண்ட பூவழகி, தனக்கு முன்பாகப் புலி இலச்சினை பொறித்துக் கொண்ட பிரும்மானந்தர் மீதும், ஹிப்பலாஸ் மீதும் கண்களைத் திருப்பினாள். டைபீரியஸின் முகம் அதுவரை கீழேயே குனிந்திருந்ததாலும், பூவழகியைக் கண்டு அவன் தலையை நிமிர்த்திய நேரத்திலும் அவன் முகம் அவர்களிடமிருந்து பக்கவாட்டில் திரும்பியிருந்த காரணத்தாலும், பூவழகி ஏன் தாமதிக்கிறாள் என்பதை அறியாத பிரும்மானந்தரும் ஹிப்பலாஸும் கணநேரம் குழம்பியதன்றிப் பூவழகியைச் சீக்கிரம் வரும்படி சைகையும் செய்தார்கள். அந்த சைகையை டைபீரியஸும் கவனித்தாலும் கவனிக்காதவன்போல் பக்கத்திலிருந்த சுங்கக் காவலனிடம், “அவர்கள் இருவரையும் போகச் சொல்” என்று உத்தரவிட்டான். இதைக் கேட்டு வெகுண்ட பிரும்மானந்தர், “இவள் என் மகள். இவளை விட்டு நான் எப்படிப் போக முடியும்?” என்று கூச்சலிட்டு நெருங்க முற்பட்டதும், அவர்மீதும் டைபீரியஸ் தனது பார்வையைத் திருப்பவே பெரும் அதிரிச்சியுற்ற பிரும்மானந்தர் “யார் நீயா!” என்று கேட்டதன்றி, அவனை அணுகி, வந்த வேகத்தில் சுங்கப் பாறை இடிபடவே சிறிது தடுக்கி விழ இருந்தார். டைபீரியஸின் கண் பார்வையிலேயே உத்தரவைப் பெற்ற இரு வீரர்கள் அவர் கைகளைப் பலமாகப் பற்றி நின்றனர். அடுத்த சில விநாடிகளில் பிரும்மானந்தர், ஹிப்பலாஸ், பூவழகி, தோழிகள் ஆகியோரைக் காவலர் வளைத்துக் கொண்டதும் அவர்கள் மீது கண்களை ஓட்டிய யவனர் கடற் படைத் தலைவன் அந்தக் கூட்டத்தில் இளஞ்செழியன் இல்லாததைக் கண்டு நிதானத்தை அடியோடு இழந்து பதறிப் போய், “இவர்களுடன் வந்த படைத்தலைவன் எங்கே?” என்று சீறினான்.

இளஞ்செழியனைத் தேட நாலு பக்கங்களிலும் பறந்த காவலருடன் செல்ல முற்பட்ட டைபீரியஸ், பிரும்மானந்தர் முதலியோரைத் தனது மாளிகைக்கு அழைத்துச் செல்லும்படி உத்தரவிட்டு, கடகடவெனச் சுங்கச்சாவடியின் படிகளில் இறங்கி ஓடி, அடிப்படியில் காவலரை வரிசையாக நிற்க வைத்து ஒவ்வொரு வணிகரையும் ஆராய்ந்து பார்க்கத் தொடங்கியதன்றிக் காவிரியின் நீர்ப்பரப்பிலும் பெரும் பந்தங்களின் வெளிச்சத்தை வீசி, யார் நீந்திச் சென்றாலும் வேலெறிந்து கொன்று விடும் படியும் கட்டளையிட்டான். நாழிகைகள் பறந்தன. பந்தங்கள் காவிரிக் கரையோரம் நடமாடின. வேல்களைத் தாங்கிய காவலர் எச்சரிக்கையுடன் நீர்ப்பரப்பைக் கவனித்தனர். ஆனால் இளஞ்செழியன் மட்டும் எப்படியோ மறைந்து விட்டான். பூவழகிக்குப் பின்னாலிருந்த தோழிகளைத் தொடர்ந்து வந்து கொண்டிருந்த இளஞ் செழியன் எப்படித்தான் மறைந்திருக்க முடியுமென்பது டைபீரியஸுக்கு மட்டுமல்ல, டைபீரியஸின் மாளிகையில் சிறைவைக்கப்பட்ட பிரும்மானந்தருக்கும், ஹிப்பாலஸுக்கும் கூடப் புரியவில்லை .

அத்தனைக் காவலையும் உதறித் தன்னுடைய கண்காணிப்பிலிருந்து மறையக் கூடிய இளஞ்செழியனிடம் வெகு எச்சரிக்கையாக நடந்து கொண்டாலல்லாது தன் கதியும் அதோகதிதானென்பதை அந்த இரவில் சந்தேகமறப் புரிந்து கொண்ட டைபீரியஸ் தன் மாளிகைக்குச் சென்றதும் இளஞ்செழியனைப் பற்றித் தகவலறிவதற்காகப் பிரும்மா னந்தரும் மற்றவரும் சிறையிருந்த கூடத்திற்குள் சென்றான்.

சிறைப் பிடிக்கப்பட்டவர்கள் தாங்கள் சிறையில் தானிருக்கிறோமோ அல்லது சுகபோகத்துக்காகவே தங்களை அங்கு டைபீரியஸ் காவலில் வைத்தானா என்று வியக்கும் வண்ணம் அவர்களை நடத்த யவனர் கடற்படைத் தலைவன் உத்தரவிட்டிருந்தானாகையால், எந்தக் குறையும் பிரும்மா னந்தருக்கோ பூவழகிக்கோ வைக்கப்படவில்லை. அவர்கள் வைக்கப்பட்டிருந்தது சோழ மன்னர்கள் இந்திர விழாவுக்கு வந்தால் தங்குவதற்காகப் பிரேத்யமாகக் கட்டப்பட்டிருந்த பெரும் மாளிகையின் உட்கூடம். கூடத்தின் முகப்பிலிருந்த உயரமான மரக்கதவுகள் சாத்தப்பட்டிருந்ததாலும், வெளியே இரு காவலர் வாளேந்தி காவல் புரிந்ததாலும் மன்னர் குலத்தார் தங்குவதற்கும் அந்த ஏற்பாடுகள் உண்டாகையால், உள்ளேயிருப்பவர்கள் சிறையானவர்கள் என்பதற்கு எந்தவித அத்தாட்சியுமில்லை. பூவழகியைச் சிறைப் பிடித்ததும் தன் வீரர்களுடன் தன் ரதத்திலேயே டைபீரியஸ் அவர்களை மாளிகைக்கு அனுப்பி வைத்ததால் வெளியே பார்த்தவர் களும், ஏதோ மரியாதைக்குரியவர்கள் அழைத்து வரப்படு கிறார்கள் என்று நினைக்கும்படியிருந்ததேயொழியச் சிறைப் பிடிக்கப்பட்டவர்கள் வந்த மாதிரியான சூழ்நிலை அடியோடு இல்லை.

மன்னர் இந்திர விழா விடுதியின் உட்கூடத்தில் சிறை வைக்கப்பட்டிருந்தாலும் அங்கு மஞ்சங்களுக்கோ வேறு உடைகளுக்கோ பஞ்சமில்லாதிருந்ததன்றி, அவர்களைக் கவனிக்கவும் பணியாட்கள் இருந்தபடியால் பிரும்மானந்தர் தாம் உடைகளை மாற்றிக் கொண்டதன்றி, பூவழகியையும், தோழிகளையும் உடைகளை மாற்றிக் கொள்ளச் சொன்னார். பூவழகியின் மனோநிலை எரிமலைக்குச் சமானமாயிருந்ததால் அவள் பிரும்மானந்தர் யோசனைக்குச் சிறிதும் செவி கொடுக்காமல், “அடிகளே! இங்கு நாம் வந்திருப்பது புத்தாடை உடுக்கவும் மஞ்சத்தில் சயனிக்கவும் இல்லை” என்று சற்று ஆத்திரத்துடன் தெரியப்படுத்தினாள்.

அவள் நின்றிருந்த இடத்துக்குச் சற்றுத் தள்ளி எதிரேயிருந்த மெத்தென்ற ஆசனத்தில் நன்றாக அமர்ந்து தாராளமாகச் சாய்ந்து கொண்ட அடிகளார் தமது புதுப்பட்டு உடையைத் தோள் மேல் இழுத்துப் போர்த்துக் கொண்டு பூவழகியைத் தமது சிறு கண்களால் ஊன்றிப் பார்த்துவிட்டு, “மகளே! நாமாக இங்கு வரவில்லை. இஷ்ட விரோதமாக வந்துவிட்டோம். இருப்பினும் கஷ்டமில்லாமல் இரவைக் கழிக்கலாமல்லவா?” என்று சாவதானமாக வினவினார்.

பூவழகி வியப்பைக் கக்கும் விழிகளை பிரும்மானந்தர் மீது நாட்டினாள். ‘ஊர், நெருப்புப் பற்றி எரிகிறது. இவர் கஷ்டப்படாமல் இரவைக் கழிக்க விரும்புகிறாரே’ என்று தனக்குள்ளேயே சொல்லிக் கொண்டாளென்றாலும், அவள் முகபாவத்திலிருந்தே அவள் உள்ளத்தே ஓடிய உணர்ச்சி களையும் புரிந்து கொண்ட அடிகள், “மகளே! வெற்றியைக் கண்டு மகிழாதவனும் தோல்வியைக் கண்டு துன்புறாதவனும் தான் துறவியெனப்படுவான்” என்று விளக்கினார்.

“நான் துறவியல்லவே அடிகளே!” என்றாள் பூவழகி.

“ஏன் துறவியில்லை ?”
“எப்படித் துறவியாவேன்?”

“இளஞ்செழியனிடமிருந்து இரண்டு வருஷ காலமாக துறவறம் பூண்டிருக்கிறாய். இனி மணமே தேவையில்லை யென்று தந்தையிடமும் சொல்லிவிட்டாய். இல்லறத்தை வெறுத்தால் அடுத்தபடி இருப்பது துறவறம்தானே!”

பிரும்மானந்தர் வேடிக்கையாகப் பேசியதைக் கேட்டு இன்பவல்லியும் மற்ற தோழிகளும் நகைத்தனர். ஆனால் பூவழகியோ ஹிப்பலாஸோ பிரும்மானந்தர் நகைச்சுவையில் ஈடுபட மறுத்ததன்றி, ஹிப்பலாஸ் சிறிது கோபத்துடனும் கேட்டான், “பிரும்மானந்தருக்கு இந்தச் சிறை வாசம் மிகவும் பிடித்திருக்கிறது போலிருக்கிறது?” என்று.

“உனக்குப் பிடிக்கவில்லை போலிருக்கிறது” என்று பதிலுக்குக் கேட்டார் அடிகள்.

“பிடிக்கவில்லை.” சற்று அழுத்தமாகப் பதில் சொன்னான் ஹிப்பலாஸ். “அப்படியானால், இந்த இடத்தை விட்டுப் போய் விடுவது தானே?” என்று கேட்டார் அடிகள்.

பிரும்மானந்தருக்கு என்ன பதில் சொல்வதென்று அறியாமல் கோபத்துக்கு ஆளான ஹிப்பலாஸ், மௌனமாகப் பூவழகியை நோக்கினான். அவ்விருவரையும் மாறி மாறிப் பார்த்த பிரும்மானந்தர் சொன்னார்: “ஹிப்பலாஸ், நிராதரவான நிலை ஏற்படும்போது மனத்தை அலைக்கழித்துக் கொள்வதால் பயனேதும் ஏற்படுவதில்லை. பூம்புகார் இன்று யவனர் பிடிப்பிலிருப்பது நமக்குத் தெரியும். ஆனால் ஊர் மக்களுக்குத் தெரியாது. மிக சாமர்த்தியசாலியான எதிரியைச் சமாளிக்க வேண்டிய நிலையில் நாமிருக்கிறோம். வெளிக்குப் பூம்புகாரைப் பழைய பூம்புகாராகவே வைத்திருக்கிறான் டைபீரியஸ். சுங்க நிலையத்தில் கூட மாறுதல் ஏதும் இல்லையென்பதை நீ கவனித்திருக்க வேண்டும். யவன ராஜ குடும்பத்தைச் சேர்ந்த ஒரு ராணியும், அவளை ராணியாக்கித் தமிழர்களின் முக்கிய துறைமுகப்பட்டினமான பூம்புகாரை யவனர் கைகளுக்கு மாற்றும் உறுதியுள்ள ஒரு கடற் படைத் தலைவனும் வந்து ஓர் இரவு ஓர் பகலுக்குள் இம்மாநகர் சிறைப்பட்டுக் கிடக்கிறது. பகிரங்கமாக இன்றே டைபீரியஸ் யவன ராணிக்கு மகுடம் சூட்டலாம். ஆனால் அவன் ஏன் அதைச் செய்யவில்லை?”

“ஏன்?” பூவழகியின் குரல் குறுக்கே புகுந்தது.

“சோழ மண்டலத்தின் உண்மை நிலை இன்னும் டைபீரியஸுக்குத் தெரியாது. இளஞ்சேட்சென்னி இறந்து, திருமாவளவன் மறைந்துவிட்டாலும், உறையூரில் யார் ஆதிக்கம் வகிக்கப் போகிறார்கள் என்பது புலனாகவில்லை. அவசரப்பட்டு பூம்புகாரை கையில் போட்டுக் கொண்டால் ஒரு வேளை உறையூர் நிலை சீர்பட்டுச் சோழர் படைகள் புகாரில் நுழைந்துவிட்டால் தன் நிலை தவிடுபொடியாகி விடும் என்பதை டைபீரியஸ் உணர்ந்திருக்க வேண்டும். ஆகவே, ராணி வந்திருப்பதை வலியுறுத்தி யவன வீரர்கள் மீது அவன் ஆதிக்கம் செலுத்தினாலும் பூம்புகாரைச் சோழர் பட்டினமாகவே இன்னும் வைத்திருக்கிறான். டைபீரியஸைப் பார்த்தவுடனேயே, அவன் குணம் எனக்குப் புலப்பட்டது. அவசரப்பட்டு எதிலும் அகப்பட்டுக் கொள்ளாத கூரிய புத்தியை உடையவன். தமிழ் நாட்டில், சேர, சோழ, பாண்டிய மூன்று முடியரசுகள் உள்ள இந்தப் பெரும் பிரதேசத்தில், திடீரென ஒரு பகுதியைக் கைப்பற்றுவதிலுள்ள ஆபத்தை அவன் உணர்ந்திருக்கிறான். அத்தகையவனிடம் நாம் மிக எச்சரிக்கையுடனிருக்க வேண்டும். அவன் பொறுப்பதுபோல் நாமும் பொறுக்க வேண்டும். தந்திரத்தைத் தந்திரத்தால் கிள்ள வேண்டும். நேற்றிரவு நடந்த யவனர் படை நடமாட்டத்துக்குப் பிறகு திடீரென யவனர் போக்கை டைபீரியஸ் மாற்றியிருப்பது நமக்குப் படிப்பினையாயிருக்க வேண்டும்” என்று பிரும்மானந்தர் விவரித்தார்.

“அப்படியானால் நாம் செய்யவேண்டியது என்ன?” என்று கேட்டான் ஹிப்பலாஸ்.

“இன்றிரவு நாம் நிம்மதியாகத் தூங்கலாம்” என்றார் அடிகள்.
“ஆ
பத்து?” பூவழகியின் உதடுகள் துடித்துக் கேட்டன.

“எதுவுமில்லை மகளே! இந்த அடிகள் உயிருட னிருக்கும் வரையில் இங்குள்ள யாருக்கும் எந்தவித ஆபத்தும் நேரிடமுடியாது. தவிர படைத் தலைவரும் தப்பி விட்டார்” என்று சுட்டிக் காட்டினார் அடிகள்.

“ஆமாம், அவர் எங்கு போயிருப்பார்?” என்று பூவழகி கேட்டாள்.

“எங்கு போயிருப்பாரோ தெரியாது. ஆனால் இளஞ் செழியன் நம்மீது கண்டிப்பாய் ஒரு கண் வைத்திருப்பான்” என்றார் பிரும்மானந்தர்.

“நம்மை விடுவிக்க அவர் என்ன செய்ய முடியும்?”
“யாருக்குத் தெரியும்? டைபீரியஸை நாம் எப்படிப் புரிந்துகொள்ள முடியாதோ அப்படி இளஞ்செழியனையும் புரிந்துகொள்ள முடியாது. சம சக்தியுள்ள இரு பெரும் அறிவுகள் மோதுகின்றன பூவழகி. முடிவைக் காத்திருந்து பார்ப்போம்!” என்று சொல்லிவிட்டு ஆசனத்தில் நன்றாகச் சாய்ந்து கொண்டு கண்களை மூடத் தொடங்கிய அடிகள், “பூவழகி! நீயும் தோழிகளுடன் படுத்துக்கொள்” என்றார்.

பூவழகி தன் மஞ்சத்துக்குச் சென்று உட்கார்ந்து கொண்டாலும் தூக்கம் அடியோடு வராததால் ஏதேதோ சிந்தனைகளில் மூழ்கித் தவித்துக் கொண்டிருந்தாள். ஹிப்பலாஸும் தூங்காமல் அறையின் ஒரு மூலையில் உட்கார்ந்து, “படைத்தலைவர் எங்கு போயிருப்பார்?” என்று யோசித்து விடையேதும் காணாமல் பெருமூச்செறிந்தான்.

நாழி ஓடியது. மற்றவர்கள் யாரும் தூங்காவிட்டாலும் பிரும்மானந்தர் மட்டும் நன்றாக உறங்கிக்கொண்டிருந்தார். இரண்டாம் ஜாமம் முடிந்து காவிரிப் பூம்பட்டினமும் கொஞ்சம் கொஞ்சமாகத் துயிலும் நேரத்தை எட்டிக் கொண்டிருந்தது. பூவழகியின் மனநிலை பெரிதும் சஞ்சலப் பட்டிருந்ததால் அவள் மாளிகையின் உட்கூடத்தைக் கடந்து வெளித் தாழ்வாரத்துக்குச் சென்று எட்டிப் பார்த்தாள். சோழ மன்னர்களின் அந்த வசந்தகால மாளிகை காவிரியின் கரையை அணைத்துக் கட்டப் பட்டிருந்ததால் ஆற்றின் பெரும் அலைகள் அதன் சுவர்களில் மோதிக் கொண்டிருந்தன. கண்ணுக்கெட்டிய தூரம் வரை காட்சி ரமணீயமாயிருந்தது. வெகு தூரத்திலிருந்த வாணகரைக் குன்றின் உச்சித் தீபமும் சங்கமத் துறைக்கருகிலிருந்த கலங்கரை விளக்கத்தின் பெரும் சுடரும் கடலுடன் இணையும் காவிரிமீது வீசி, பிரதிபலித்து எழும் அலைகளைத் தங்கப் பாளங்களாக அடித்துக் கொண்டிருந்தன.

மாற்றார் புக முடியாத ஊர் என்பதால் புகார் எனப் பிரசித்தி பெற்ற அந்த நகரத்தின் சங்கமத் துறையின் அழகையும் காவிரிப் பெருக்கின்மீது விளையாடிய நானாவித விளக்குச் சுடர்களின் இன்பக் காட்சிகளையும் கண்ட பூவழகி அந்த மாநகருக்கு நேர்ந்த அபாயத்தைப் பற்றி எண்ணிப் பெருமூச்சு விட்டதன்றி, பட்டினப்பாக்கத்திலிருந்த தன் தந்தையின் கதி என்ன ஆகியிருக்குமோ என்றும் ஏங்கினாள். அந்த ஏக்கத்திலும் முந்திய இரவில் சந்தர்ப்பங்கள் சிருஷ்டித்துவிட்ட சூழ்நிலையிலும் இளஞ்செழியன் மீதிருந்த வெறுப்பையும் அடியோடு குலைத்துக் கொண்ட பூவழகி, ‘அவர் என்ன ஆனாரோ’ என்று நினைத்து நினைத்து வருந்தினாள். ‘நாங்கள் பிடிபட்டபோது அவர் மட்டும் எப்படித் தப்பிச் சென்றார்?’ என்று நினைத்துப் பார்த்துப் பதிலேதும் கிடைக்காத பூவழகி, ஆறுதலுக்குத் தாயைப் பார்க்கும் மகளைப் போல் காவிரி அன்னையை நோக்கினாள். மாளிகைச் சுவரை அணைத்தோடிய காவிரியன்னையும் மகளுக்கு அபயம் கொடுப்பதற்கு அறிகுறியாகத் தன் அலைகளைச் சுவர்மீது தட்டித்தட்டி ஆறுதல் அளித்தாள்.

அதே நேரத்தில் இளஞ்செழியனைப்பற்றிய நினைப் புடன் இன்னும் இருவரும் அந்த மாளிகையில் இருந்தனர். ஒருத்தி யவன ராணி. இன்னொருவன், டைபீரியஸ். உக்கிரா காரமான கோபத்துடன் டைபீரியஸ்மீது தனது நீலமணிக் கண்களை நாட்டிய யவன ராணி, “படைத் தலைவர் எப்படித் தப்ப முடியும், நீ மட்டும் எச்சரிக்கையாயிருந்தால்?” என்று கேட்டுக் காலை ஆத்திரத்துடன் பூமியில் உதைத்தாள்.
யாருக்கும் அஞ்சாத டைபீரியஸின் கண்கள் அந்த நீல மணிக் கண்களின் ஆவேசத்தைக் கண்டு தரையில் தாழ்ந்தன. “நன்றாகத்தான் காவல் போட்டிருந்தேன்” என்றான் டைபீரியஸ் குரல் நடுங்க.

“நல்ல காவல்! சுங்கச் சாவடியில் நாற்புறமும் அடைப்பு உண்டென்று கூறிய நீ, அந்தச் சுங்கச் சாவடியிலேயே ஒரு தனி மனிதனைத் தப்பவிடும் காவல் சிறந்த காவல்தான்!” என்று இகழ்ச்சி ததும்பக் கூறினாள் ராணி.

“காலை மட்டும் அவகாசம் கொடுங்கள். படைத் தலைவன் எங்கும் தப்பிச் செல்லமுடியாது. கண்டிப்பாய்ப் பிடித்துத் தருகிறேன்” என்றான் டைபீரியஸ்.

யவன ராணி அவன் அளித்த உறுதியில் நம்பிக்கை யில்லாதவள்போல் தலையசைத்துவிட்டு, “சரி சரி! சீக்கிரம் காவலரை அனுப்பித் தேடச் சொல். காலைக்குள் படைத் தலைவரைப்பற்றித் தகவல் வேண்டும்” என்று கூறி அவன் செல்லலாம் என்பதற்கு அறிகுறியாகக் கையை ஆட்டினாள்.

குனிந்த தலையுடன் ராணியின் அறையைவிட்டுச் சென்ற டைபீரியஸ் தன் அறைக்கு வந்து நீண்ட நேரம் ஏதோ யோசித்துவிட்டுக் காவலரை அழைத்துக் காவிரிக் கரையையும் அதைச் சேர்ந்த பகுதிகளையும் அலசிப் படைத் தலைவன் எங்கிருந்தாலும் பிடித்துக்கொண்டு வரும்படி உத்தரவிட்ட தன்றி, ராணி காட்டிய கோபத்தின் விளைவாக இரவு முழுவதையும் தூங்காமலே ஆலோசனையில் கழித்தான்.

பொழுது புலர்ந்து ஒரு நாழிகைக்குப் பிறகுதான் இளஞ்செழியனைப்பற்றிய தகவல் அவனுக்குக் கிடைத்தது. அந்தத் தகவலும் பொன் தட்டில் வைத்து மூடிக் காவலன் கொண்டு வந்திருந்த ஓர் ஓலையில் தெளிவாக இருந்தது. அதைப் படித்ததும் திகைப்பும் கலவரமும் அடைந்த டைபீரியஸ் வெகுவேகமாக மேல் மாடிக்கு ஓடி, ராணியின் அறையை உடைத்துக்கொண்டு உள்ளே நுழைந்தான். அறை காலியாயிருந்தது! ராணியின் பஞ்சணையிலிருந்து அவள் அதில் உறங்கக்கூட இல்லையென்று வெட்ட வெளிச்சமாக விளங்கியது டைபீரியஸுக்கு. கையில் ஓலையைப் பிடித்த வண்ணம் ஏதும் புரியாமல் பிரமை பிடித்தவன் போல் நின்றான் யவனர் கடற்படைத் தலைவன். அவன் கையிலிருந்த ஓலை நெருப்பென அவன் உள்ளத்தைச் சுட்டுக் கொண்டிருந்தது.

Previous articleYavana Rani Part 1 Ch13 | Yavana Rani Sandilyan | TamilNovel.in
Next articleYavana Rani Part 1 Ch15 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here