Home Sandilyan Yavana Rani Part 1 Ch15 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

Yavana Rani Part 1 Ch15 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

91
0
Yavana Rani Part 1 Ch15 Yavana Rani Sandilyan, Read Yavana Rani Online Free, Yavana Rani PDF, Download Yavana Rani novel, Yavana Rani book,read Yavana Rani free
Yavana Rani Part 1 Ch15 |Yavana Rani Sandilyan|TamilNovel.in

Yavana Rani Part 1 Ch15 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

யவன ராணி – சாண்டில்யன்

முதல் பாகம்

அத்தியாயம் : 15 வாணகரையில் வரவேற்பு

Yavana Rani Part 1 Ch15 |Yavana Rani Sandilyan|TamilNovel.in

காலை நேரத்தில் ஓலை தந்த உள்ளத்தை அடியோடு உலுக்கிடும் செய்தியுடன் வசந்தமாளிகையின் மாடியறையில் பிரமை பிடித்தவன்போல் நீண்டநேரம் நின்றுவிட்ட யவனர் கடற்படைத் தலைவன் மெள்ள மெள்ளத் தன் உள்ளத்தைச் சூழ்ந்திருந்த கவலையை ஓரளவு நீக்கிக் கொண்டு மீண்டும் ஒருமுறை கையிலிருந்த ஓலையைப் பிரித்துப் படித்தான். ஓலையில் கண்டிருந்த செய்தி மிகத் தெளிவாகவும் திட்ட வட்டமாகவும் இருந்தது. சொற்கள் சொற்பமாக உபயோகப் படுத்தப்பட்டிருந்தாலும் செய்தியில் கண்ட நிபந்தனையில் எந்த முரண்பாடு ஏற்பட்டாலும் விளைவு என்ன என்பது சந்தேகத்திற்கிடமின்றி எழுதப் பட்டிருந்தது.

“டைபீரியஸ்! பூவழகியை நீ சிறை எடுத்தாய்.
ராணியை நான் சிறை எடுத்தேன். தமிழகத்து
மக்களுக்கு ஏற்படும் சிறு தீங்கும் யவன மக்களின்
தலையில் பெருந் தீங்காக வந்து இறங்கும்.
ஜாக்கிரதை!”

ஓலையின் இந்த வாசகத்தை இரண்டாம் முறை படித்த டைபீரியஸின் இதயத்தில் எவ்விதப் பயமும் ஏற்படா விட்டாலும், ராணி இளஞ்செழியன் கையில் சிக்கி விட்டதால் யவனர்கள் ஆக்கிரமிப்பு முயற்சிக்கு ஏற்பட்ட பெரும் தடை அவனைத் திகைப்படையச் செய்தது. ‘காவிரி அணைந் தோடும் வசந்த மாளிகைக்குள், காவிரிக் கரையோரமாக மற்ற இடங்களில் காவல் புரியும் யவன வீரர்களின் கண்களில் அடியோடு படாமல் நுழைந்த இளஞ்செழியன் பூவழகியையே தப்பச் செய்திருக்கலாம்.

‘அப்படியிருக்க யவனராணியை அவன் ஏன் சிறையெடுத்துச் சென்றான்?’ என்று தன்னைத்தானே கேட்டுக் கொண்டு, ‘புகாரின் நலனை உத்தேசித்துத்தான் சோழர் படை உபதலைவன் சொந்த உணர்ச்சிகளுக்கு இடங்கொடுக்காமல் ராணியை எடுத்துச் சென்றிருக்கிறான்’ என்று பதிலையும் தானே சொல்லிக்கொண்ட டைபீரியஸ், மிகத் திறமைசாலியான எதிரியைத் தான் சமாளிக்க வேண்டிய அவசியத்தை உணர்ந்துகொண்டான். ‘கிரேக்க நாட்டு யவன சோதிடர்கள் யவன ராஜ குடும்பத்துப் பெண் தமிழ்நாட்டில் அரசாளுவாள் என்பதைக் கண்டுபிடித்தார்களேயொழிய, அதற்கும் பெரும் முட்டுக்கட்டையாக ஒரு படைத்தலைவன் வந்து முளைப்பான் என்பதை ஏன் கண்டு பிடிக்கவில்லை?’ என்று வெகுண்டு தனது நாட்டுச் சோதிடர்களைச் சபித்த டைபீரியஸ், இளஞ்செழியன் எந்த வழியாக ராணியைக் கொண்டு போயிருப்பான் என்பதைக் கண்டு பிடிக்க முயன்று, அறை பூராவும் ஒருமுறை கண்ணால் துழாவினான்.

அறை பூராவும் மஞ்சங்களும் அலங்காரப் பொருள்களும் வைத்தது வைத்தபடியே இருந்ததாலும், நன்றாகத் திறக்கப்பட்ட சாளரங்கள் அரைகுறையாக மூடியோ ஒருக்களித்தோ சீர்குலைந்து நிற்காததாலும், சாளரங்களின் மரக்கதவுகளில் பொருத்தப்பட்டிருந்த இரும்புத் தாழ்பாள்களிலும் கயிறுகளோ துணியோ கட்டப்பட்டதற்கான அறிகுறிகள் ஏதுமே காணாததாலும், ராணியை இளஞ் செழியன் சிறையெடுத்த வழிதானென்ன என்பதை அறிய முடியாமல் தவித்தான் டைபீரியஸ். அந்த மாடியறையிலிருந்து வெளியேறுவதற்கு இரண்டே வழிகள் தானிருந்தன. ஒன்று, சாளரத்தின் வழியாகக் காவிரிக்குள் இறங்கிப் படகில் செல்லலாம் அல்லது அறைக் கதவுகளைத் திறந்து கொண்டு மாடிக் கூடத்துக்கு வந்து படிகளில் இறங்கிக் கீழ்க்கட்டுகள் இரண்டையும் கடந்து வெளியே செல்லலாம். இந்த இரண்டில் பிந்தியது சாத்தியமில்லையென்பதை உணர்ந்துகொண்ட டைபீரியஸ், ராணி சாளரத்தின் வழியாகவே கடத்திச் செல்லப்பட்டிருக்கிறாள் என்பதைப் புரிந்துகொண்டு, சாளரத்தை அணுகி வெளியே எட்டிப் பார்த்தான்.

கண்ணைப் பறிக்கும் அபூர்வக் காட்சியை வெளியே அளித்துக்கொண்டிருந்தாள் காவிரி அன்னை. பல வர்ண ஜாலங்கள் நிறைந்த சேலைபோல் மின்னி அலைபாய்ந்து காலை வெயிலில் பளபளத்து நின்றது காவிரியின் பெரும் நீர்ப்பரப்பு. அவளுடைய அந்த அழகிய மேற்சேலையிலும் உள்ள அழகு குமிழியிட்ட நீராழத்திலும் எத்தனை எத்தனையோ ஜால வித்தைகளைக் கதிரவன் கற்பித்துக் கொண்டிருந்ததன்றி, தூரத்தே தெரிந்த சங்கமத் துறையில் காவிரியாளை நோக்கி வந்த கடலரசனின் பெரும் அலைக்கரங்கள் காவிரியாளை எழுந்து எழுந்து அணைத்துக் கொண்டிருந்ததால் புகாரின் கடற்கரையே தனிப் பொலிவு பெற்றுவிட்டதுபோல் காணப்பட்டது. தங்கள் கண் முன்பாகவே காவிரிக் காதலியைக் கட்டித் தழுவும் கடலரசனின் நாணமற்ற செய்கையைக் காண இஷ்டப்படாத மரக்கலங்கள் சில நங்கூரம் பாய்ச்சிக் கடலில் சிறிது தூரத்தில் நின்றாலும், காலைக் காற்றில் ஒருபுறமாகத் திரும்பமுற்பட்டன. விடியற்காலையில் சங்கமத் துறையில் நீராடினால் புண்ணியம் கிடைக்கும் என்ற நினைப்பால் அங்கே நீராடி, காலைக் கடன்களைச் செய்து இரு கரங்களாலும் கதிரவனை நோக்கி வேதியர் வாரி இறைத்த நீர்த்துளிகள் அந்தக் காலைக் கிரணங்களால் ஊடுருவப்பட்டு ஏழு வர்ணங்களையும் சிருஷ்டித்ததாலும் அந்த ஏழு வர்ண நீர்த்துளிகள் மீண்டும் காவிரி மீதே விழுந்ததாலும் வேதியர் தமது மந்திர சக்தியில் நீரையே ஏழுவண்ண மணிகளாக்கிக் காவிரியன்னைக்கு மணிமாலை சமர்ப்பிக்கிறார்களோ என்ற பிரமை ஏற்பட்டது. காவிரியில் மறுபடியும் வர்த்தகப் படகுகள் போகத் தொடங்கிவிட்டதாலும், புதுக் கப்பல்களில் வந்திறங்கும் வெளிநாட்டு வணிகரும், உள் நாட்டுப் பிரயாணிகளும் கடற்கரையின் பகுதிகளில் நடமாட ஆரம்பித்ததாலும் பூம்புகாரின் கடற்கரையும் காவிரிப் பகுதியும் மகோன்னத மாகக் காட்சியளித்தன.

யவனர் கடற்படைத் தலைவன் சாதாரண மனநிலையி லிருந்தால் இந்தக் காட்சிகள் அவன் கண்களை மட்டுமன்றிக் கருத்தையும் கவர்ந்திருக்கும். ஆனால், அன்றிருந்த நிலையில் அந்த வண்ணக் காட்சி வேதனைக்காட்சியாகவே விளங்கியது டைபீரியஸுக்கு. அதன் இயற்கை வனப்பை விட, எந்த செயற்கை உதவியைக் கொண்டு இளஞ்செழியன் அத்தனை உயர மாளிகையிலிருந்து அத்தனை பெரிய நதிமூலம் ராணியை எடுத்துச் சென்றிருப்பான் என்பதை ஆராய்வதிலேயே முற்பட்டான் டைபீரியஸ். அவன் நின்றிருந்த சாளரத்துக்கு நேர் எதிரில் பிரும்மாண்டமாக எழுந்து நின்ற வாணகரைக் குன்றின் அமைப்பையும் கண்ணால் அளவிட்ட யவனர் படைத்தலைவன், வாணகரைக் குன்றின் மாளிகைகள் பெரும் உயரமாகக் கட்டப்படாமலிருப்பதையும், குன்றின் அடிவாரத்திலிருந்து வீடுகள் சக்கர வட்டமாகப் பல வியூகங்கள் போல் வகுக்கப் பட்டிருப்பதையும், ஒரு வளைவுக்கு மேல் மற்றொரு வளைவாகத் தெரிந்த பல அடுக்குகள் அக்குன்றை சந்திர வியூகங்கொண்ட பெரும் கோட்டையாக அடித்திருப்பதையும் கண்டு ராணி மட்டும் அங்கே கொண்டுபோகப் பட்டிருந்தால், அவளை விடுவிப்பது எளிதான காரியமல்ல என்று தீர்மானித்துப் பெரும் சோகத்தால் சிறிது நேரம் தலையையும் தொங்கப் போட்டுக் கொண்டான். ஆனால் சோகத்தினால் மட்டும் பலன் ஏற்படா தென்பதை அவன் அறிந்தேயிருந்தானாகையால், மேற் கொண்டு ராணி இருப்பிடத்தை அறிய என்ன நடவடிக்கை எடுக்கலாமென்பதை ஆராய முற்பட்டு மீண்டும் தனது அறையை அடைந்து கோட்டைத் தலைவனைச் சீக்கிரம் அழைத்து வரும்படி ஒரு வீரனை அனுப்பினான்.

டைபீரியஸின் அவசர அழைப்புக்குக் காரணத்தை அறியாத கோட்டைத் தலைவனும் சற்றுக் குழப்பத்துடனேயே யவனர் கடற்படைத் தலைவனிருந்த அறைக்குள் நுழைந்தான். அவன் வருவதற்குள் தன்னைப் பெரிதும் நிதானப்படுத்திக் கொண்டுவிட்ட டைபீரியஸ் சிறிதும் சலனத்தையோ பிரமிப்பையோ காட்டாமல், கோட்டைத் தலைவனை வரவேற்று, “இந்தக் கோட்டைத் தலைவராக எத்தனை நாட்களாகப் பணியாற்றுகிறீர்கள்?” என்று வினவினான்.

கேள்விக்குக் காரணம் புரியாவிட்டாலும் பதில் சொல்ல வேண்டுமென்ற சம்பிரதாயத்துக்காக, “இருபது ஆண்டுகளாக இதே வேலைதான், அதற்கென்ன இப்பொழுது?” என்று கேட்டான் கோட்டைத் தலைவன்.

“ஒன்றுமில்லை. இந்த இருபது ஆண்டுகளில் உமது கண்காணிப்பை மீறி யாராவது புகாரைவிட்டு வெளியேறி யிருக்க முடியுமா?” என்று மீண்டும் வினவினான்.

“ஏன் எவ்வளவோ பேர் வெளியேறியிருக்கிறார்கள். தமிழ்நாடு நமது நாடு போலில்லை படைத்தலைவரே! இங்கு வருவார் போவார்மீது கண்காணிப்பு கிடையாது” என்று தெரியப்படுத்தினான் கோட்டைத் தலைவன்.

“வந்து போவதற்கு அனுமதிப் பத்திரம்?”

“இங்கு வழக்கமில்லை. இந்த நாட்டை நாடி வருகிற வர்களை உபசரிக்கத்தான் மன்னர் கட்டளையிருக்கிறது. உபத்திரவிக்க இல்லை.”

டைபீரியஸ் கோட்டைத் தலைவனைச் சிறிது நேரம் ஆச்சரியம் ததும்பும் கண்களால் பார்த்தான். பிறகு கேட்டான்: “அப்படியானால் கோட்டை வாயில் எதற்கு? காவலர் எதற்கு?” என்று.

“விரோதிகளைத் தடை செய்ய, கடல்மூலமோ நிலத்தின் மூலமோ ஏற்படும் படையெடுப்புக்களை எதிர்த்து நிற்க. தவிர, கடற்கரையோரமாக இந்தப் பெரும் கோட்டைச் சுவர் கட்டப்பட்டு இருப்பதற்கு வேறொரு காரணமும் உண்டு!” என்று கூறினான் கோட்டைத் தலைவன்.

“என்ன அது?”

“இங்கு கடற்கோள் அடிக்கடி ஏற்படுகிறது.”

“அப்படி என்றால்?”

“கடல் சில வேளைகளில் எழுந்து ஊருக்குள் புக வரும்.”

“ஓகோ !”

“ஆமாம். அதைத் தடுக்கவே இந்தப் பெரும் கருங்கல் மதிளும் சேர நாட்டு வயிர மரங்களால் செய்த பெரும் கதவுகளும் அமைக்கப்பட்டிருக்கின்றன. சில சமயங்களில் கடல் இரண்டு மூன்று நாட்கள் இடைவிடாமல் கோட்டைச் சுவரையும் கதவுகளையும் தாக்குவதுண்டு. பிறகு கடல் பின் வாங்கிவிடும். மீண்டும் இது பழைய கடற்கரை! இதோ கரு மணல். மூன்று நாள் நீரில் மறையும் பரதவர் இல்லங்கள் நான்காவது நாளில் பழையபடி தோன்றிவிடும்…” என்று சொல்லிக் கொண்டே போன கோட்டைத் தலைவன், டைபீரியஸ் முகத்தில் சட்டென்று பளிச்சிட்ட ஆச்சரியச் சாயை கண்டு பேச்சை நிறுத்தினான்.

அவன் பேச்சை அறுத்த அந்த விநாடியில், ஆசனத்தை விட்டு எழுந்த டைபீரியஸ், “நில்! யார் இந்தப் பரதவர்?” என்று வினவினான்.

“கடலோடும் சாதி, மீன் பிடிப்பவர்!” என்றான் கோட்டைத் தலைவன்.

“அலைகளுக்கு அஞ்சாதவர்கள்?”

“அலைகளுக்கென்ன, பிரளயத்துக்கும் அஞ்சமாட் டார்கள்.”

“அலை புரண்டு அவர்கள் இல்லங்களுக்கு வரும்போது என்ன செய்வார்கள்?”

“வலைகளைத் தூக்கிக் கோட்டை மதிள் மீது வீசுவார்கள்.”

“வீசினால்?”

“கோட்டை மதிள் பூராவும் வலை படிவதற்கான கொக்கிகள் இருக்கின்றன. கொக்கிகளில் வலைகள் மாட்டி விரியும். வலைக் கயிறுகள் திமிங்கலத்தையும் இழுக்கும் வலு வாய்ந்தவை. அவற்றில் மனிதர் ஏறுவது ஒரு கஷ்டமல்ல.”

“அந்த வலைகளைப் பிடித்து ஏறி, கோட்டை உச்சியை அடைவார்கள்?”

“ஆமாம். அந்தக் காட்சியை நீங்கள் பார்க்க வேண்டுமே?”

“சரி, சரி; பின்னால் பார்ப்போம். ஆனால் இதற்குப் பதில் சொல். அந்த மாதிரி வலையைப் பிணைக்கும் கொக்கிகள் காவிரி அணைந்தோடும் மாளிகைகளிலும் உண்டா ?”

“ஆகா! இருக்கின்றன.”

டைபீரியஸ் விஷயத்தைப் புரிந்து கொண்டான். அதை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக மீண்டும் வினவினான். “இந்த மாளிகையில்?” என்று.

“இதிலும் உண்டு” என்று கூறிய கோட்டைத் தலைவன் டைபீரியஸை மாடிக்கு அழைத்துச் சென்று சாளரத்துக்கு வெளியே சுவரிலிருந்த இருபெரும் ஆணிகளைக் காட்டினான்.

ஆணிகள் புதைந்திருந்த இடத்திலிருந்து ஜலமட்டம் சுமார் நூறு முழ வீச்சுக்கு மேலிருப்பதைக் கண்ட டைபீரியஸ் அத்தனை உயரத்தில் வலைவீசி, ஏறி, ஒரு பெண்ணையும் எடுத்துக் கொண்டு இறங்கக்கூடியவன் மிக வல்லவனாகத் தானிருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தான். யவனர் புராணக் கதைகளில் ட்ராய் நகரத்தின் பெரும் சுவர்களில் ஏணிகளை வைத்து ஏறிய போர் வீரர்கள்கூடப் புகாரின் வலையேறி வீரர்களுக்கு எந்த விதத்திலும் ஈடாக மாட்டார் களென்ற தீர்மானத்துக்கு வந்ததல்லாமல், அந்தப் புராணத்தி லிருந்த யுலிஸிஸின் குள்ள நரித் தந்திரத்தைக் கையாண்டா லொழியத் தமிழர்களை வெற்றி கொள்வதோ பூம்புகாரை யவனர் வசமாக்குவதோ நடவாத காரியமென்றும் திட்டமாகப் புரிந்து கொண்டான். ஆகவே, இனிப் புகாரைப் பிடிக்க வேண்டுமானால் தமிழனை ஆயுதமாக வைத்துக் கொண்டே தமிழனை வெட்ட வேண்டுமென்றும் உறுதி கொண்டு, சோழ மண்டலத்தின் அரசியல் நிலையைக் கண்டறிவதற்கான முயற்சிகளில் இறங்கினான் டைபீரியஸ்.

தன்னுடைய பிற்கால நடவடிக்கை இந்தத் துறையில் தான் செல்ல வேண்டும் என்ற முடிவுக்கு வந்ததும் டைபீரியஸ் மீண்டும் தன் அறையை அடைந்து, கோட்டைத் தலைவனிடம் தன் திட்டத்தைப் பிரஸ்தாபித்த வண்ணம் சில விவரங்களையும் கேட்கத் தொடங்கி, “சோழ மன்னன் இறந்து விட்டதாக உமக்குச் செய்தி வந்தது எப்போது?” என்று வினவினான்.
“தாங்கள் இந்த ஊரை அடைந்த இரவின் ஆரம்பத்தில்” என்று விடையுரைத்தான் கோட்டைத் தலைவன்.

“அரசனுக்கு அடுத்தபடி ஆள் யாருமில்லையா?”

“இளவரசர் இருந்தார்.”

“அவர் எங்கே இப்பொழுது?”

“இருக்குமிடம் தெரியவில்லையென்று தூதன் சொன்னான்.”

“அப்படியானால் உறையூர் அரசபீடம் யார் கையிலிருக் கிறது?”

“அதைச் சொல்லத் தூதன் மறுத்துவிட்டான். ஆனால் உறையூர் நிலை சீர்படும்வரை புகாரைப் பழையபடி நிர்வகித்து வரும் பொறுப்பை எனக்களித்திருப்பதாகச் சொல்லி ஒரு முத்திரை ஓலையையும் தந்தான்.”

“அந்த முத்திரை ஓலை…”

“வழக்கமாக உறையூரிலிருந்து வரும் முத்திரை ஓலை தான்.”

“அதில் யார் கையொப்பமிட்டிருந்தார்கள்?”

“வழக்கமாகப் போடும் முதலமைச்சர்தான். வழக்க மாகப் புலி இலச்சினைதான் பொறிக்கப்பட்டிருந்தது.”
டைபீரியஸ் யோசனையில் மீண்டும் ஆழ்ந்தான். உறையூர் விவகாரம் என்னவென்பதைத் திட்டமாக அறிந்து கொள்ள முடியாவிட்டாலும் அங்கு ஏதோ பெரும் சூது நடக்கிறதென்றும், அரசியல் பிளவு ஏற்பட்டிருக்கிறதென்றும் புரிந்து கொண்டாலும், அந்தப் பிளவு யாரால் ஏற்பட்டது? ஏன் ஏற்பட்டது? எத்தனை நாளைக்கு அதை மூடி வைக்க முடியும்? பிளவின் மர்மம் வெளியானால் அண்டை நாடுகள் என்ன செய்யும்?’ என்று பலவாறாக யோசித்து முடிவு காணாமல் தவித்தான் டைபீரியஸ். யவனர் கடற்படைத் தலைவன் சிந்தையில் ஓடிய எண்ணங்களை ஓரளவு அறிந்து கொண்ட கோட்டைத் தலைவன் அதைப்பற்றி வெளிப்படையாகவே பேசத் தொடங்கி, “எனக்கும் உறையூர் நிலை மர்மமாகவே தெரிகிறது…” என்று இழுத்தான்.

“அப்படியானால் ஒரு வீரனை அனுப்பி, அங்கு நடப்பது என்னவென்பதை அறிந்தாலென்ன?” என்று கேட்டான் டைபீரியஸ்.

“செய்யலாம்” என்று பதில் சொன்னான் கோட்டைத் தலைவன்.

“செய்யலாம் என்பதில் அர்த்தமில்லை …. முதலில் அதைச் செய்யும். அத்துடன் எதிரேயுள்ள வாணகரைக் குன்றுக்கும் ஒற்றர்களை அனுப்பி, சோழர் படை உபதலை வனையும் கண்காணிப்பில் வைக்கவேண்டும். புரிகிறதா?” என்று டைபீரியஸ் தன் கூரிய கண்களைக் கோட்டைத் தலைவன் மீது நாட்டினான்.

கோட்டைத் தலைவனுக்கு அதெல்லாம் அவசிய மென்று புரிந்திருந்தாலும் எதிர்க்கரைக்கு ஆளனுப்புவது அவ்வளவு சுலபமாகப் படவில்லையாதலால் டைபீரியஸை நோக்கி, “தலைவர் உத்தரவின் முதற் பகுதியை நிறைவேற்றி விடலாம்” என்று சொல்லிச் சிறிது நிதானித்தான்.

சற்றே நிலத்தில் தாழ்ந்த டைபீரியஸின் ஈட்டி விழிகள் மீண்டும் கூர்ந்து எழுந்தன. “அதாவது?” என்ற சந்தேகம் ததும்பும் குரலும் எழுந்தது அவனிடமிருந்து.

“உறையூர் நிலவரத்தை அறிந்து வர ஒற்றரை அனுப்பலாம். ஆனால்….”

“தைரியமாகச் சொல்!”

“எதிர்க்கரைக்கு ஆளனுப்புவது எளிதல்ல.”

“ஏன்?”

“படைத் தலைவரிடத்தில் பரதவருக்குப் பக்தி அதிகம். அவர்களாவது யவனர்களாவதுதான் துணிந்து வாண கரைக்குப் போக முடியும்.”

“மற்றவர் போனால்?”

“கோட்டைக்குள்ளேயே புகுவது மிகக் கஷ்டம்.”

“அதென்ன தனிக் கோட்டையா?”
“தனி ராஜ்யமென்றே சொல்லலாம். அங்கிருப்பது யவனரும் தமிழரும் மற்றவரும் கலந்த பெரும்படை. அந்தப் படைவீரர்கள் ஒரே ஒரு தலைவனைத்தான் அறிவார்கள். அவன் உத்தரவிட்டால் காவிரியாற்றில் விழுந்து பிராணனைக் கூட விடுவார்கள்.”

டைபீரியஸின் கண்கள் ஆச்சரியத்தால் மலர்ந்தன. “என்ன யவனர்கூடவா அவனுக்குக் கீழ்ப்படுகிறார்கள் !” என்று வினவினான் வியப்பு குரலில் பூரணமாகத் தொனிக்க.

“ஆமாம் தலைவரே!” என்றான் கோட்டைத் தலைவன்.

“என்ன! யவன ராணி ஒருத்தி இருக்கும்போது கூடவா?” என்று மற்றொரு வியப்புத் தட்டிய கேள்வியும் எழுந்தது, யவனர் கடற்படைத் தலைவனிடமிருந்து.

“இளஞ்செழியனிடமுள்ள யவனர், தமிழர் எல்லோரும் ஒரே குலம். அவர் சொந்த நாடு, சொந்த இனம் அனைத்தையும் மறந்தவர்கள். ஹிப்பாலஸை நீங்கள் கவனித்திருப்பீர்களே” என்று வினவினான் கோட்டைத் தலைவன்.

“காரணம்?”

“இளஞ்செழியன் போர்த் திறமையில், அவன் நேர்மையில், அவனால் சீர்படும் தங்கள் வாழ்வில் பூரண நம்பிக்கையைப் பெற்றவர்கள் அந்த வீரர்கள். அவனிடம் ஏழையாக இன்று சேரும் எந்த வீரனும் ஒரு வருடத்திற்குள் பெரும் பணக்காரனாகிறான். படைத்தலைவனைப் போலவே போரிலும் வல்லவனாகிறான்.”
கோட்டைத் தலைவன் பேச்சைக் கேட்கக் கேட்கப் பெரும் விந்தையாயிருந்து டைபீரியஸுக்கு. இப்படி ஒரு மாய மனிதன் இருக்க முடியுமா என்று பிரமித்தான். அவன் பிரமிப்பை அதிகப்படுத்த மேலும் சொன்னான் கோட்டைத் தலைவன். “இளஞ்செழியன் படையில் சுமார் மூவாயிரம் வீரர்கள் இருக்கிறார்கள். அந்த மூவாயிரம் பேரும் பலமுறை இந்தப் பூம்புகாரை எதிரிகளிடமிருந்து காத்திருக்கிறார்கள். அந்தப் படையில் போரிடும் சாதிகள் மட்டுமல்ல, பரதவரும் இருக்கிறார்கள். கடற்படைச் சண்டையிலும் இளஞ்செழியன் வல்லவன். பல நாள்கள் தன்னந்தனியே படகில் கடலோடி மறைந்து விடுவான். இத்தனைச் சாமர்த்தியசாலி யானபடியால் தான் சோழ மன்னர்களின் மற்றப் படைகள் உறையூரிலுள்ள பெரிய தண்டநாயகரின் அதிகாரத்துக்குட்பட்டிருந்தாலும், இந்த வாணகரைக் குன்றும் அதிலுள்ள பெரும்படையும் மற்ற யார் அதிகாரத்துக்கும் உட்படாமல் இளஞ்செழியன் அதிகாரத்துக்குமட்டும் உட்பட்டுக் கிடக்கிறது.”

டைபீரியஸ் ஆசனத்திலிருந்து எழுந்து சிறிது நேரம் தன் அறையில் மௌனமாகவே உலாவினான். பிறகு கோட்டைத் தலைவன் போகலாமென்பதற்கு அறிகுறியாகக் கையை ஆட்டிவிட்டு மறுபடியும் ஆசனத்தில் அமர்ந்தான். கோட்டைத் தலைவன் அறையைவிட்டு நகர்ந்த சிறிது நேரத்திற்கெல்லாம் காவலன் ஒருவனை விளித்த டைபீரியஸ், பிரும்மானந்தர் கோஷ்டியைக் காவல் புரிந்த வீரர்களில் ஒருவனைக் கூப்பிடுமாறு உத்தரவிட்டான். அந்த வீரன் வந்ததும் டைபீரியஸ் கட்டளை திட்டமாக வெளிவந்தது.

“நீதானே அடிகளையும் மற்றவர்களையும் காவல் புரிகிறாய்?” என்று கேட்டான் டைபீரியஸ்.
“ஆம்.”

“இன்றிரவு அடிகளோ அல்லது ஹிப்பலாஸோ தப்ப முயன்றால் என்ன செய்வதாக உத்தேசம்?”

“கண்ட இடத்தில் வெட்டிவிடுகிறேன்.”

“இல்லை. யாரையும் தொடாதே! அவர்களைத் தப்பிச் செல்ல விடு.”

வியப்பினால் பதில் சொல்ல முடியாமல் வாயைப் பிளந்து கொண்ட யவன வீரனை நோக்கி மீண்டும் திருப்பினான் கட்டளையை டைபீரியஸ். “திட்டமாகத் தெரிந்து கொள். அவர்களில் யார் வேண்டுமானாலும் தப்பிச் செல்லலாம். யாரையும் தடை செய்யாதே. ஆனால் பலமான காவல் இருப்பதுபோல் மட்டும் தெரியட்டும்.”

“சரி, பிரபு! தப்பிச் செல்பவரைத் தொடரட்டுமா?”

“வேண்டாம். இஷ்டப்படி போக விடு.”

உத்தரவைப் பெற்றுக்கொண்டு வீரன் சென்றதும் டைபீரியஸும் எழுந்திருந்து நீராடக்கூடச் செல்லாமல் நேராகக் கடற்கரைப் பகுதிக்குச் சென்று சங்கமத்துறையையும் அங்கிருந்து மாளிகையிருந்த இடத்தையும் பரதவர் குடிசைகளும் படகுகளும் இருந்த மணற்பரப்பையும் ஊன்றிக் கவனித்தான். மீண்டும் அவன் கண்கள் வாணகரைக் குன்றின் கட்டடங்களையும் கோட்டைச் சுவர்களையும் அளந்தன. இம்மாதிரி அன்றைய மாலைக்குள் இரண்டு மூன்று தடவைகள் அந்த இடங்களை வந்துவந்து பார்த்த டைபீரியஸ் சாதாரண யவன வீரன்போல் உடை மாற்றிக் கொண்டு அன்றிரவு பரதவர் குடிசைகளுக்குச் சென்று காவிரியில் படகு செலுத்த யாராவது வரமுடியுமா என்று விசாரித்தான். இவனை முன்பின் பார்த்திராத பரதவர் சிலர் அவன் ஏதோ நதிமீது உல்லாசமாகச் சென்றுவர நினைக்கிறானென்ற எண்ணத்தில், “சரி வருகிறோம்” என்று ஒப்புக் கொண்டனர்.

சரியாக இரண்டாம் ஜாமத்தின் இறுதியில் டைபீரியஸ் வந்து சேர்ந்து படகைச் செலுத்தச் சொன்னான். இரவு பகலைப்பற்றிச் சிறிதும் லட்சியம் செய்யாத பரதவர்கூட., ‘இந்த நேரத்தில் இந்த யவனன் எதைக் கண்டுகளிக்கப் போகிறான்’ என்று எண்ணமிட்டுக் கொண்டே அவன் சொன்ன திக்கில் படகைச் செலுத்தினார்கள்.

நல்ல இருளில் துடுப்புக்களின் சத்தத்தைத் தவிர வேறு சத்தம் எதுவும் அதிகமாக இல்லாமல் படகு வசந்தமாளிகைப் பின்புறமாக ஊர்ந்து சென்றது. மாளிகைக்குச் சிறிது தூரமிருக்கையிலேயே படகைப் பக்கத்துத் தளையொன்றில் பிணைக்கச் சொன்ன டைபீரியஸ் அந்தப் படகிலேயே பரதவருடன் காத்துக் கிடந்தான். இரண்டாம் ஜாமம் மறைந்து நீண்ட நேரமாகியும் மாளிகை மாடியில் எந்தவித உயிர் அசைவும் இல்லை. ‘சிறைப்பட்டவர்கள் ஒருவேளை தப்ப இஷ்டமில்லாமல் தூங்கிவிட்டார்களோ’ என்று கூட நினைக்க முற்பட்டான் டைபீரியஸ். படகோட்டி வந்த இரு பரதவரும் அவன் எதற்காகப் படகில் அங்கு வந்தான், ஏன் தளையிட்டு நிறுத்தச் சொன்னான் என்பதை அறியாமல் குழம்பிப்போய், “பிரபு! இங்கு இன்னும் எத்தனை நேரம் காத்திருக்க வேண்டும்?” என்று கேட்கத் தொடங்கினார்கள்.

அதற்குமேல் தாமதிப்பதில் பயனில்லை என்று டைபீரியஸும் திரும்பியிருப்பான் ஆனால் தற்செயலாக மாளிகையின் மாடியறைச் சாளரம் திறந்து பெரும் கயிறு ஒன்று அதிலிருந்து தொங்கியது. மெள்ள மெள்ள பிரும் மாண்டமான ஓர் உருவம் அந்தக் கயிற்றைப் பிடித்துக் கொண்டு இறங்கியதையும், அது இறங்க முற்பட்ட அதே நேரத்தில் எதிர்க் கரையிலிருந்த ஒரு படகு அந்த இடத்தை நோக்கி வேகமாகப் பாய்ந்து வந்ததையும் கண்ட டைபீரியஸ் இருந்த இடத்தைவிட்டு நகராமல் நடப்பதைக் கவனிக்கலானான். படகு வெகு துரிதமாகக் கயிற்றில் இறங்கியவனை அணுகியதும் அந்த மனிதன் படகில் இறங்க, படகு மீண்டும் எதிர்க் கரையை நோக்கி விரைந்தது.

“தளையை அவிழ்த்து அந்தப் படகைத் தொடருங்கள்” என்று உத்தரவிட்டான் டைபீரியஸ்.

பரதவரிருவரும் அவன் ஆணைக்குக் கீழ்ப்படிந்து முன்னே சென்ற படகைத் துரத்தத் துடுப்புக்களை நீரில் தாழ்த்தி வெகுவேகமாகச் சுழற்றவே படகு படுவேகத்தில் பறந்தது. முன்னே சென்ற படகைச் சேர்ந்தவர்களும் இதைக் கவனித்திருக்க வேண்டும். அந்தப் படகும் திடீரென முன்னைவிட அதிவேகமாகச் செல்லத் தொடங்கியது.

இப்படி வெகு வேகமாகச் சென்ற படகுகளில் முதல் படகு திடீரெனத் தன் வேகத்தைத் தடைப்படுத்தி, போக்கையும் திருப்பிக் கொள்வதைக் கண்ட டைபீரியஸ் தன் படகோட்டிகளைச் சிறிது நிதானிக்கச் சொன்னான். வாணகரையை அணுகச் சில அடி தூரமே இருந்த நிலையில் அந்தப் படகு ஏன் திசை மாறவேண்டும் என்று டைபீரியஸ் தீர்மானிக்கு முன்பாகவே, அந்த முதல் படகு வெகு வேகமாக டைபீரியஸின் படகை நோக்கி வந்தது. வந்து ஒரு சுற்றுச் சுற்றி வளைத்தது. படகிலிருந்த இரு வில்லவர் கைகளில் நாணேற்றி அம்புகள் தொடுத்த விற்கள் தயாராக நின்றன. “உங்கள் படகு முன் செல்லட்டும்” என்றது ஒரு அதிகாரக் குரல் அந்த முதல் படகிலிருந்து. எதிர்பாராத விதமாகத் தன்னந்தனியே மடக்கப்பட்டதாலும் வில்லவர் கைகளிலிருந்த அம்புகளும் தன்னை நோக்கிக் குறி வைக்கப்பட்டிருந்ததாலும் வேறு வழியின்றி அவர்கள் ஆணைப்படி நடக்குமாறு டைபீரியஸ் பரதவரிருவருக்கும் உத்தரவிட்டான். படகுகள் இரண்டும் வாணகரையை நோக்கி வெகு வேகமாக ஓடின.

எதிர்க்கரையைப் படகுகள் அடைந்ததும் அதுவரை இருளாயிருந்த வாணகரைப் படித்துறையில் திடீரெனப் பந்தங்கள் எரிந்தன. ஆச்சரியத்துடன் கரையில் காலை வைக்க முற்பட்ட டைபீரியஸை அசரவைக்க வேறொரு ஆச்சரியமும் காத்திருந்தது. அவனை வரவேற்க, பந்தங்களுக்கிடையே பூரண கவசமணிந்த இளஞ்செழியனே முகத்தில் புன்முறுவல் தவழ நின்றிருந்தான்.

Previous articleYavana Rani Part 1 Ch14 | Yavana Rani Sandilyan | TamilNovel.in
Next articleYavana Rani Part 1 Ch16 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here