Home Sandilyan Yavana Rani Part 1 Ch16 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

Yavana Rani Part 1 Ch16 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

113
0
Yavana Rani Part 1 Ch16 Yavana Rani Sandilyan, Read Yavana Rani Online Free, Yavana Rani PDF, Download Yavana Rani novel, Yavana Rani book,read Yavana Rani free
Yavana Rani Part 1 Ch16 |Yavana Rani Sandilyan|TamilNovel.in

Yavana Rani Part 1 Ch16 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

யவன ராணி – சாண்டில்யன்

முதல் பாகம்

அத்தியாயம் : 16 ராணியின் நிபந்தனை

Yavana Rani Part 1 Ch16 |Yavana Rani Sandilyan|TamilNovel.in

யாரைப் பிடிப்பதற்காக நள்ளிரவில் காவிரி நீர்மீது தவம் கிடந்தானோ அந்த மனிதனிடமே தான் சிறைப்படும் நிலை, டைபீரியஸைத் தவிர வேறு ஒருவனுக்கு ஏற்பட்டிருந்தால் அவன் அடியோடு நிலை குலைந்து பதறிப் போயிருப்பான். ஆனால் எந்தச் சூழ்நிலையிலும் நிதானத்தை இழக்காத நெஞ்சுரமுள்ள டைபீரியஸ், சோழர் படையின் உபதலைவன் தன்னைக் கைப்பிடித்து, படகிலிருந்து வாணகரைப் படகுத் துறையில் இறக்கிவிட்ட சமயத்திலும் முகத்தில் திகிலையோ குழப்பத்தையோ லவலேசமும் காட்டாமல் சிரித்த முகத்துட னேயே கரையில் காலை வைத்து இறங்கியதன்றி, இளஞ் செழியனுக்கு வணக்கம் செலுத்தும் முறையில் தலையையும் லேசாகத் தாழ்த்தினான். டைபீரியஸின் சிரித்த முகத்தையும், அவன் எந்த ஆபத்திலும் சிக்கிக் கொள்ளாதவன் போலவும், வாணகரையை வேடிக்கை பார்க்க வந்த பிரயாணியைப் போலவும் திடமாக நிலத்தில் காலை ஊன்றி இறங்கி வாணகரைத் தளத்தைச் சுற்று முற்றும் நோக்கியதையும் கண்ட இளஞ்செழியன், உலகத்தில் பெரும் போர் வீரர்களில் ஒருவன் என டைபீரியஸ் பிரசித்தி பெற்றதற்கு நியாயம் இருக்கிறது என்பதை உணர்ந்து கொண்டான்.

வாணகரைப் படகுத் துறையில் இறங்கியதும் டைபீரியஸ் தன்னைச் சுற்றி வளைத்த படகிலிருந்த ஹிப்பலாஸை ஒரு முறை நோக்கிவிட்டு வாணகரைத் தளத்திலும் கண்ணை ஓட்டி “மிகவும் பலமான படைத்தளம்!” என்று வாய் விட்டுப் பாராட்டியதன்றி இளஞ்செழியனை நோக்கிப் புன்முறுவலும் செய்தான்.
இளஞ்செழியன் இதழ்களும் புன்சிரிப்பால் சற்றே விரிந்ததன்றி, “ஆம்! இந்த நாட்டில் அரண் அமைக்கும் முறை இது” என்ற சொற்களையும் பொறுமையுடன் உதிர்த்தன.

டைபீரியஸின் கண்கள் இளஞ்செழியனைச் சில விநாடிகள் கூர்ந்து கவனித்தன. பிறகு இல்லையென்பதற்கு அறிகுறியாகத் தலையை ஆட்டிய யவனர் கடற்படைத் தலைவன், “உங்கள் நாட்டு அரண் அமைக்கும் முறை மட்டும் இதில் இல்லை படைத் தலைவரே! யவனர்கள் முறையும் இதில் கலந்திருக்கிறது. எங்கள் நாட்டுப் புராணங்களில் காணப்படும் ட்ராய் நகரத்தின் சுவர்களைப் போல் இவை ஆகாயத்தை அளாவும் பெரும் சுவர்களல்ல. ஆனால் சுவர் அமைப்பு முறை, யவனர் முறை தான். வியூகம் மட்டும் உங்கள் நாட்டு முறை. சந்திர வட்டங்கள் போல் வீடுகள் எழுந்திருக்கின்றன. பார்வைக்கு இது கோட்டையல்ல. தேவையான சமயங்களில் கோட்டை போல் மாறவல்லது. உங்கள் திறனைப் பாராட்டுகிறேன்” என்று கூறினான்.

“தமிழர்கள் எந்த நாட்டிலும் நல்லது இருந்தால் எடுத்துக் கொள்ளக் கூடியவர்கள். யவனர் கடற்படைத் தலைவருக்கு இது தெரியாத விஷயமல்ல” என்று கூறிய இளஞ்செழியன், பக்கத்திலிருந்த தன் உதவிப் படைத்தலைவர்களை டைபீரியஸுக்கு அறிமுகப்படுத்தத் தொடங்கி, “ஹிப்ப லாஸைத்தான் தங்களுக்குத் தெரியும்…” என்றான்.

“ஆம், தெரியும்.”

“என் படைகளின் யவனர் பிரிவை நடத்திச் செல்பவன் ஹிப்பலாஸ். பல போர்களில் வெற்றி வாகை சூடியவன்.”
“பிற நாட்டிலும் யவனர் பிரசித்தி பெறுவதை எங்கள் நாட்டின் பாக்கியமாகக் கருதுகிறேன்.”

“யவனர் வருகையால் எங்கள் நாடு எவ்வளவோ பயனடைந்திருக்கிறது, கடற்படைத் தலைவரே! நாங்கள் நன்றி மறப்பவர்களல்ல. ஆனால் ஆக்கிரமிப்புக்கு மட்டும் இடம் கொடுக்கும் பழக்கம் எங்களிடமில்லை ” என்று சற்று அழுத்திக் கூறிய இளஞ்செழியன், பக்கத்தில் பூரண கவசத்துடன் பெரும் வேலைத் தாங்கிய ஒரு வீரனைச் சுட்டிக் காட்டி, “இவன் குமரன் சென்னி, தமிழ்ப் படைப்பிரிவின் தலைவன். வேலெறிவதில் நிகரற்றவன். உதாரணமாகத் தாங்கள் காவிரியின் எதிர்ப்பக்கமிருக்கும் மாடிமீது நின்றால் இங்கிருந்தே வேலை எய்து தங்களை…” என்று ஏதோ சொல்லப் போய் நிறுத்திக் கொண்டு, “மாய்த்து விடுவான் என்று சொல்வது பண்பாட்டுக்கு முரண்பாடு” என்று கூறிவிட்டுக் கடைசியாக நின்ற பரதவனை நோக்கித் திரும்பி, “கடற்படைத் தலைவர் உண்மையில் தெரிந்து கொள்ள வேண்டியது இவனை. கடற்போரில் தங்களுக்குள்ள பிரசித்தி இல்லாவிட்டாலும் மரக்கலங்களைக் கடலில் நடத்திப் போரிடுவதில் இணையற்றவன். இவன் பெயர் வல்லாளன்” என்று அவனையும் டைபீரியஸுக்கு அறிமுகப்படுத்தினான்.

சோழர் படை உபதலைவனின் உதவித் தலைவர்கள் ஒவ்வொருவரையும் ஊன்றிக் கவனித்த டைபீரியஸ், தராதரம் பார்த்தே இளஞ்செழியன் உபதலைவர்களைப் பொறுக்கி யெடுத்திருக்கிறான் என்பதைப் புரிந்துகொண்டதன்றி, ‘தன் வலிமையை உணர்த்துவதற்கே இளஞ்செழியன் என்னிடம் இவர்கள் வல்லமையை எடுத்துக் கூறினான்’ என்றும் தனக்குள்ளேயே சொல்லிக் கொண்டாலும் அதை வெளிக்குக் காட்டாமல் தன் பாராட்டுதலைத் தலையசைப்பினாலேயே காட்டினான்.

அதற்குப் பின் வாணகரைப் படகுத் துறையில் நிற்க அவசியமில்லாததால் இளஞ்செழியன் டைபீரியஸை அழைத்துக் கொண்டு படைத்தலைவர் பின் தொடரக் குன்றின் வட்ட வட்டமான வீதிகளின் இடையே மாற்றி மாற்றி அமைக்கப்பட்டிருந்த வாயில்கள் வழியாகக் குன்றின் உச்சியிலிருந்த தன் பாசறைக்குச் சென்றான். வழியில் பல தெருக்கள் வரை மௌனமாகவே வந்த டைபீரியஸ் ஒரு சந்தேகம் மட்டும் கேட்டான், “சக்கர வட்டமாக நிற்கும் தெரு வாயில்களை ஏன் ஒன்றன்பின் ஒன்றாக ஒழுங்காக அமைக்க வில்லை ?” என்று.

“அமைத்தால் ஆபத்திருக்கிறது. ஒரு வேளை எதிரிப் படைகள் ஏதாவது வாணகரையில் காலை வைத்து, முதல் கதவை உடைத்தாலும் நேராக மற்றொரு கதவுக்குப் போகமுடியாது. எதிரே பலமான சுவர் இருக்குமாகையால் சற்றுச் சுற்றிப் போய்த்தான் அடுத்த வாயிலுக்கு வர வேண்டும். அப்படிச் சுற்றிச் செல்லும் படைகள் மீது அம்பும் வேலும் எறிய வீரர்கள் தளம் சுவர்களுக்குப் பின்னால் இருக்கின்றது. ஆகவே வளைந்து அடுத்த வாயிலுக்குச் செல்லும் படைகள் பக்கவாட்டில் தாக்கப்படும். பக்க வாட்டுத் தாக்குதல் எத்தனை பலமானது என்பதை நான் தங்களுக்குச் சொல்லத் தேவையில்லை” என்று பதில் கூறினான் இளஞ்செழியன்.

இளஞ்செழியனின் புத்திக் கூர்மையையும் போர்த்துறை யில் அவனுக்கிருந்த அனுபவத்தையும் அறிந்த டைபீரியஸ் அவனிடம் அபரிமிதமான மரியாதை கொண்டதன்றி ‘இப்பேர்ப்பட்டவர்கள் இருக்கும் நாட்டில் உறையூரில் சதி செய்பவர்களும் இருக்கிறார்கள். இல்லாவிட்டால் யவன ராணி புகாரை ஆளலாமெனச் சொப்பனம் காண முடியுமா?’ என்று நினைத்துக் கொண்டே, இளஞ்செழியனுடன் நடந்து அவனது பாசறைக்கு வந்தான்.

குன்றின் மேலிருந்த இளஞ்செழியனின் விடுதியைப் பாசறை என்று சொல்வதைவிட உல்லாச மாளிகை என்று சொல்வது மிகப் பொருத்தமாயிருக்கும். அவ்வளவு அழகாக இருந்தது அந்தப் பாசறைக் கட்டடம். குன்றின் உச்சியிலிருந்த கட்டடத்தை அடுத்து நின்ற வேறிரு கட்டடங்களும் அந்த மாளிகையைப் போல் அத்தனை அழகுடன் விளங்கா விட்டாலும், கூடிய வரையில் கச்சிதமாகவே அமைக்கப் பட்டிருந்தன. அந்தச் சிறு கட்டடங்களிரண்டும் இருந்த இடத்தையும், அதன் வாயில்களில் நின்ற காவல் வீரர்களையும் கவனித்த டைபீரியஸ் இவை இளஞ்செழியன் உதவித் தலைவர்களின் உறைவிடங்களாயிருக்க வேண்டும் என்ற தீர்மானத்துக்கு வந்தான். கர்ப்பக் கிரகத்தின் வாயிலில் நிற்கும் துவாரபாலகர்களைப் போல் இளஞ்செழியன் மாளிகையின் முன் புறத்திலே நின்ற அந்தக் கட்டடங்களைத் தாண்டிப் படைத் தலைவன் பாசறையை அடைந்த டைபீரியஸ் அந்தப் பாசறையின் முகப்பிலும் உள்ளேயும் செய்யப்பட்டிருந்த அபரிமிதமான வேலைப்பாடுகளையும், உள்ளே வைக்கப் பட்டிருந்த பொருள்களையும் கண்டு பிரமிப்படைந்தான். பாசறை கீழே மூன்று கட்டுகளையும் மேலே ஒரு கட்டு உப்பரிகையும் கொண்டதாயிருந்தது. கீழ்க்கட்டின் முகப்புக் கூடத்தில் வாளும் ஈட்டிகளும் ஏந்திய காவலர் காவல் புரிந்து நின்றனர். அப்படியே பின்கட்டிலும் காவல் இருந்தது. இடையேயிருந்த நடுக்கட்டிலிருந்த பெரிய கூடம் மன்னர்கள் தூதர்களை வரவேற்கும் மண்டபம் போல் விசாலமாக இருந்ததன்றி, யவனர்களின் சித்திர விளக்குகளாலும் இளஞ்செழியன் போரில் வெற்றி கொண்ட நாடுகளிலிருந்து கொண்டுவந்த அபூர்வப் பொருள்களாலும் அலங்கரிக்கப் பட்டு இந்திரலோகம் போல் விளங்கியது. கூடத்தின் மூலைகளில் சாத்தப்பட்டிருந்த போர்க்கருவிகள் மட்டும் இல்லாதிருந்தால் காவிரிப்பூம்பட்டினத்தின் இந்திரவிழா மாளிகைக் கூடத்துக்கும் அந்தப் பாசறைக் கூடத்துக்கும் வித்தியாசம் எதுவுமே இருந்திருக்காது. அத்தனை அழகுள்ள அந்தக் கூடத்தில் நுழைந்ததும் டைபீரியஸை ஒரு மஞ்சத்தில் உட்காரச் சொன்ன இளஞ்செழியன் எதிர் மஞ்சத்தில் தானும்உட்கார்ந்து கொண்டான். அவன் இருபுறங்களிலும் பயங்கர விழிகளைக் கொண்ட குமரன் சென்னியும். ஆஜானுபாகு வான யவன ஹிப்பலாஸும் நின்று கொள்ள, சற்றுத் தள்ளியிருந்த பெரும் தூணில் வலை போலவே இரும்புடை அணிந்து பரதவ வல்லாளனும் சாய்ந்து கொண்டான்.

மிகுந்த மதிப்புடன் விருந்தாளியைப்போல் நடத்தப் பட்டாலும் வாணகரையில் தான் சிறைப்பட்டவன் என்பதில் லவலேசமும் சந்தேகமில்லாத டைபீரியஸ் உள்ளே எழுந்த உணர்ச்சிகளைச் சிறிதும் வெளிக்குக் காட்டாமல் இளஞ் செழியனின் உதவித் தலைவர்கள் நின்ற தோரணையைக் கவனித்தும் கவனிக்காதது போல், “இரவு ஏறிவிட்டது. அடுத்தபடி சோழர் படைத் தலைவரின் உத்தேசம் என்ன?” என்று வினவினான்.

இளஞ்செழியன் மிக நிதானமாகவும் திடமாகவும் பதில் சொன்னான், “தாங்கள் ஒரு ஓலை எழுத வேண்டும்” என்று.
“யாருக்கு ஓலை?” என்று வினவினான் டைபீரியஸ் உணர்ச்சி எதையும் காட்டாமலே.

“புகாரின் கோட்டைத் தலைவனுக்குத்தான்.”

“அடிகளையும் பெண்மணிகளையும் விடுவிக்கச் சொல்லியா?”

“ஆம்!”

“நான் மறுத்தால்?”

“மறுக்கக்கூடிய நிலையில் தாங்கள் இல்லை.”

“சிறைப்படுத்திவிட்டதால் அத்தனைத் திட்டமாக முடிவு கட்டுகிறீர்களா?”

“இல்லை. ஆபத்துக்கு அஞ்சுபவர் தாங்கள் அல்ல என்பது எனக்குத் தெரியும். ஆனால் ராணியின் கட்டளை அப்படி. அதற்குத் தாங்கள் கீழ்ப்படிவீர்களென்பது எனக்குத் தெரியும்.”

“ராணி கட்டளை யிட்டிருக்கிறாரா?” இதைக் கேட்ட டைபீரியஸின் கண்கள் ஆச்சரியத்தால் மலர்ந்தன.

“ஆம்.”

“ஏன் அப்படிக் கட்டளையிட்டிருக்கிறார்கள்?”
“இப்பொழுதுள்ள நிலையைத் தங்களைவிட ராணி புரிந்து கொண்டிருப்பதுதான் காரணம். வேண்டுமானால் ராணியை நீங்களே கேட்டுக்கொள்ளலாம்” என்று கூறிய இளஞ்செழியன் ஆசனத்திலிருந்து எழுந்து டைபீரியஸை ராணியிருந்த உப்பரிகை அறைக்கு அழைத்துச் சென்றான். ஒருமுறை குரல் கொடுத்த பின் அறைக் கதவைத் திறந்து கொண்டு இளஞ்செழியன் உள்ளே நுழைந்தபோது ராணி மஞ்சத்தில் உறங்காமல் சற்று அப்புறம் கடலை நோக்கித் திறந்திருந்த சாளரத்தின் அருகே நின்றிருந்தாள். இளஞ்செழியனும் படைத்தலைவனும் உள்ளே நுழைந்ததும் கவனத்தைக் கடலிலிருந்து உள்ளே திருப்பிய ராணி அவர்கள் இருவரையும் நோக்கிச் சற்றுப் புன்முறுவல் செய்தாள்.

டைபீரியஸ் ராணியைச் சில வினாடிகள் உற்று நோக்கி விட்டுக் கேட்டான், “ராணி! என்னிடம் சிறைப்பட்டிருப்ப வர்களை விடுதலை செய்யும்படி உத்தரவிட்டீர்களா?” என்று.

ராணி பதிலேதும் சொல்லாமல், ‘ஆம்’ என்பதற்கு அறிகுறியாகத் தன் அழகிய தலையைச் சிறிதே அசைத்தாள்.

“பிரும்மானந்தர் வெறும் துறவியல்லவென்று கோட்டைத் தலைவன் சொல்கிறான் ராணி!” என்றான் டைபீரியஸ்.

“தெரியும் எனக்கு” என்றாள் ராணி அலட்சியமாக.

“துறவறத்தைவிடப் போர் அறத்தை நன்றாக அறிந்த வராம்” என்றான் மீண்டும் டைபீரியஸ்.
“அதுவும் தெரியும்.”

“அவரை விடுதலை செய்வதில் ஆபத்திருக்கிறது.”

“ஆபத்தைப் பற்றிக் கவலைப்பட்டுப் பயனில்லை டைபீரியஸ்.”

“ஏன்?”

“எப்பொழுது ஊரை விட்டுக் கடலோடி இத்தனை தூரம் வந்திருக்கிறோமோ, ஆபத்தைப் பற்றி ஏன் கவலைப் படவேண்டும்?”

“அப்படியானால் தாங்கள் நிலை?”

“அதில் என்ன மாறுதல் ஏற்பட முடியும்?”

“இப்பொழுது ஏற்பட்டுள்ள மாறுதல்?”

“ஒரு மாறுதலும் இல்லையே?”

யவன ராணி மெல்லச் சிரித்தாள். டைபீரியஸுக்கு மட்டுமல்ல, இளஞ்செழியனுக்கும் அவள் சிரிப்பின் காரணம் புரியவில்லை . ஏதும் விளங்காததால், “ஏன் சிரிக்கிறீர்கள் ராணி?” என்று கேட்டான் டைபீரியஸ்.

“படைத்தலைவரைக் கேள்” என்ற ராணி இளஞ் செழியனைச் சுட்டிக் காட்டினாள்.
“என்னையா? என்ன கேட்க வேண்டும்!” என்று வியப்புடன் வினவினான் இளஞ்செழியன்.

ராணி கேட்டாள்: “என்னைப் புகாரின் வசந்த மாளிகையிலிருந்து தூங்கி வந்தீர்களல்லவா?”

“ஆமாம்” என்றான் இளஞ்செழியன்.

“நான் ஏதாவது ஆட்சேபணை செய்தேனா?”

“இல்லை.”

“தாங்கள் தோள்மேல் போட்டுக் கொண்டபோது திமிறினேனா?”

“இல்லை.”

“ஏன்?”

“ஏன்? ஏன்?” இருமுறை இளஞ்செழியனும் கேட்டான். பதிலேதும் கிடைக்காததால்.

ராணி சாளரத்தைவிட்டு அறை நடுவுக்கு வந்து மஞ்சத்தருகில் நின்று கொண்டாள். பிறகு, இளஞ்செழியன்மீது நீண்ட நேரம் நீலமணிக் கண்களை நாட்டினாள். அந்தக் கண்கள் சில வினாடிகளில் கனவுலகத்தில் சஞ்சரிப்பதைப் படைத்தலைவன் கண்டான். ஏதோ கனவில் பேசுபவள் போல் பேசினாள் ராணி. “புரியவில்லையா படைத் தலைவரே! தங்களையும் என்னையும் விதி ஒன்றாகப் பிணைத் திருக்கிறது என்று நான் முதல் நாளிரவே சொன்னேனே அது நினைப்பில்லையா உங்களுக்கு? என்று என்னை எங்கள் குலச் சின்ன ஆபரணத்துடன் தொட்டுத் தூக்கினீர்களோ அன்றே எங்கள் நாட்டு வழக்கப்படி நான் உங்கள் சொத்தாகி விட்டேன். யவன குருமார்கள் சொன்னது பொய்க்குமா? ஒருக்காலும் பொய்க்காது படைத்தலைவரே. யார் இஷ்டப் பட்டாலும் படாவிட்டாலும் புகாரில் யவன ராஜ்யம் ஏற்படுவது நிச்சயம். அதற்கு ஏற்கெனவே அறிகுறிகள் பல இருக்கின்றன. சோழ மன்னர் குலம் மறைந்துவிட்டது. ஆள்பவர் யாரென்று விளங்கவில்லை. அரசனில்லா நாடு சிதறிப்போகும். சிதறும் அந்தத் தூள்களில் புகார் ஒன்று. அதை யாரும் தடுக்க முடியாது. சோழர் படைத்தலைவரின் மதிகூட இந்த விதியை உடைக்க முடியாது. அதை அறிந்துதான் நான் உங்களுடன் வந்தேன். டைபீரியஸ் உங்களைச் சிறைப்படுத்தியிருந்தால் உங்களை என் பக்கத்தில் இருத்திக் கொண்டிருப்பேன். ஆனால் அவனால் சிறைப்படுத்த முடியாததால் நீங்கள் தூக்கிச் செல்ல உங்களுடன் முழுச் சம்மதத்துடன் வந்தேன். நான் உங்களிடம் இருக்கும்வரை யவனர் வெற்றி நிச்சயம். இது கிரேக்க குருமார்கள் சொன்னது…” என்று சொல்லிக் கொண்டு போனவளை, சற்றே தடை செய்த இளஞ்செழியன், “என்ன! என்னை யவன குருமார்களுக்குத் தெரியுமா?” என்று வினவினான்.

“தங்களைத் தெரியாது. ஆனால் நான் தமிழர் மண்ணில் காலை வைத்ததும் உள்ளூர்வாசி யொருவனின் துணை ஏற்படும் என்று சொன்னார்கள். அவர்கள் சோதிடம் தப்பாது படைத்தலைவரே. விண்மீன்களை ஆராய்வதில் குருமார்கள் வல்லவர்கள்” என்று கூறிய ராணி டைபீரியஸை நோக்கி, “சிறைப்பட்டவர்களை விடுதலை செய்ய உத்தரவிட்டு ஓலை எழுதிவிடு. ஆனால் புகாரை மட்டும் விடாதே!” என்றாள்.

“நானும் இங்கு சிறைப்பட்டிருக்கிறேனே. புகாரை நான் எப்படிக் கைப்பற்ற முடியும்?” என்று டைபீரியஸ் கேட்டான்.

ராணியின் பதில் திட்டமாக வந்தது. “படைத்தலைவர் உன்னைத் திருப்பியனுப்பச் சம்மதிப்பார்” என்றாள்.

“நான் சம்மதிக்காவிட்டால்?” என்று வினவினான் இளஞ்செழியன்.

“விடுதலை ஓலையை என் கடற்படைத் தலைவர் எழுத மாட்டார்” என்று கூறிய ராணி சற்றே நிமிர்ந்து மகாராணியைப் போல் மிகுந்த கம்பீரத்துடன் இளஞ்செழியனை நோக்கினாள்.

“உங்கள் இருவரையுமே சிறை செய்து இங்கேயே வைத்திருந்தால்?”

“பூவழகியும் அடிகளும் அங்கே சிறையிருப்பார்கள்.”

“உங்களைக் கொண்டு வந்தது போல் அவர்களைக் கொண்டு வர முடியாதா என்னால்?”

“நான் இஷ்டப்படாவிட்டால் என்னையே இங்கு கொண்டு வந்திருக்க முடியாது படைத் தலைவரே! நீங்கள் பலகணி வழியாக உள்ளே நுழைந்தபோது நான் கூச்சலிட் டிருந்தால் யவன வீரர்கள் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே நுழைந்திருப்பார்கள்” என்று சொல்லி இளஞ் செழியனை நோக்கி மந்தகாசம் செய்த ராணி, “சோழர் படைத்தலைவரே! சகலமும் என்னிஷ்டப்படி தான் நடக்கும். ஆகவே நிபந்தனைக்கு ஒப்புக்கொள்ளுங்கள். அடிகளும் அந்த அழகியும், அவள் பெயரென்ன, ஆமாம் பூவழகி, அவளும் இங்கு வந்த பின்பு டைபீரியஸ் விடுதலையாகிச் செல்லட்டும்” என்று கூறினாள் ராணி.

“இல்லையேல்?”

“அவர்கள் அங்கே. நாம் இங்கே. டைபீரியஸும் நானும் மறைந்த பிறகு கோட்டைத் தலைவனோ மற்ற யவனர்களோ தூங்கமாட்டார்களென்பது நீங்கள் அறியாததல்ல.”

இளஞ்செழியன் நீண்டநேரம் மௌனமாக உலவிவிட்டு யவனராணி சொன்னதைச் சீர்தூக்கிப் பார்த்தான். அவள் பிடிவாதம் அவள் கண்களில் திட்டமாகத் தெரிந்தது. அவள் காலால் இடும் வேலையைத் தலையால் செய்யக் காத்து நின்ற டைபீரியஸின் உறுதியையும் அவன் அறிந்தே இருந்தான். ஆகவே அவளிஷ்டப்படியே அவள் சொன்ன நிபந்தனைக்கு ஒப்புக்கொண்ட இளஞ்செழியன் அந்த இடத்தைவிட்டுப் போகக் கிளம்பினான். அவனைப் போக வொட்டாமல் தடுத்த ராணி, “டைபீரியஸ், நீ கீழே சென்று படைத்தலைவர் கேட்டபடி ஓலை எழுதி இவர் உதவித் தலைவர்களிடம் கொடுத்துவிட்டு அங்கேயே சிறையிரு” என்று உத்தரவிட, டைபீரியஸ் பதிலேதும் சொல்லாமல் படிகளில் இறங்கிச் சென்றான்.

அவன் சென்றதும் ராணி வெகு ஒய்யாரமாக நடந்து இளஞ்செழியன் அருகே வந்து, அவன் இரு தோள்களிலும் தன் கைகளை வைத்து, தன் அழகிய விழிகளை அவன் விழிகளுடன் உறவாடவிட்டாள். பிறகு சற்றே கால்களை உயர்த்திக் கட்டை விரல்களை ஊன்றி, அவன் உயரத்துக்கு எழுந்து நின்று, அவன் காதில் மெல்ல இரண்டொரு வார்த்தைகளைப் பேசினாள்.

நெருப்பை மிதித்தவன்போல் இளஞ்செழியன் அவளை விட்டு விலகி, “பொய்! பொய் ராணி! ஒருக்காலும் இருக்காது. அது சாத்தியமே இல்லை” என்று இரைந்து பேசியதன்றி, மீண்டும் அவள் கைகளை இறுகப் பற்றி, “உண்மையைச் சொல், உனக்கெப்படித் தெரியும் அது?” என்று அதட்டவும் செய்தான்.

“இதோ, இதைப் படியுங்கள்” என்று மடியிலிருந்து ராணி ஓர் ஓலையை எடுத்து இளஞ்செழியனிடம் நீட்டினாள். அந்த ஓலையை எடுத்துக் கொண்டு விளக்குக்கு விரைந்து சென்று படித்த இளஞ்செழியன் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்ததன்றி, “இருங்கோவேள்! அந்தப் பாதகனா?” என்ற சொற்களும் அவன் வாயிலிருந்து உஷ்ணத்துடன் உதிர்ந்தன.

அத்துடன் மீண்டும் ராணியை நோக்கித் திரும்பிய இளஞ்செழியன், “அப்படியானால்….” என்று ஏதோ சொல்ல முற்பட்டவனைப் பாதியிலேயே தலையை ஆட்டி ஆமோதித்து நிறுத்தினாள் யவன ராணி. இருவர் கண்களும் கலந்தன. ஆனால் அந்த இரண்டு ஜோடிக் கண்களில் துளிர்த்தது அந்த சமயத்தில் காதலல்ல. பூம்புகாரின் எதிர் காலத்தைப் பற்றிய பெரும் பிரமை, சோழ மண்டலத்தின் பிற்காலத்தைப் பற்றிய பெரும் அபாயம் – இவைதான். கண்கள் வெற்றிச் சிரிப்புச் சிரித்தன. இப்படி ஒரு திருப்பம் பூம்புகாரின் நிலையில் ஏற்படும் என்று அந்த விநாடிவரை அறியாத இளஞ்செழியனின் விழிகளில் மட்டும் பிரமிப்புடன் திகைப்பும் கலந்து கொண்டது.

Previous articleYavana Rani Part 1 Ch15 | Yavana Rani Sandilyan | TamilNovel.in
Next articleYavana Rani Part 1 Ch17 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here