Home Sandilyan Yavana Rani Part 1 Ch17 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

Yavana Rani Part 1 Ch17 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

103
0
Yavana Rani Part 1 Ch17 Yavana Rani Sandilyan, Read Yavana Rani Online Free, Yavana Rani PDF, Download Yavana Rani novel, Yavana Rani book,read Yavana Rani free
Yavana Rani Part 1 Ch17 |Yavana Rani Sandilyan|TamilNovel.in

Yavana Rani Part 1 Ch17 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

யவன ராணி – சாண்டில்யன்

முதல் பாகம்

அத்தியாயம் : 17 அவளா துரோகி!

Yavana Rani Part 1 Ch17 |Yavana Rani Sandilyan|TamilNovel.in

வாணகரைக் குன்றின் உச்சி மாளிகையின் உப்பரிகை அறையில் யவன மாதரசி தன் மடியிலிருந்து எடுத்து நீட்டிய ஓலையில் கண்ட செய்தியைப் படித்ததும் திகைத்துச் செயலற்று அவளைப் பார்த்தவண்ணமே நின்றுவிட்ட சோழர் படை உபதலைவனான இளஞ்செழியன், அந்த அறையில் தொங்கிய மணிவிளக்கின் பிரகாசத்தில் ஓலையை இரண்டு மூன்று முறை படித்ததன்றி, அந்த ஓலை எப்படி டைபீரியஸுக்கும் கோட்டைத் தலைவனுக்கும் தெரியாமல் ராணியிடம் சிக்கியிருக்க முடியும் என்று ஏற்பட்ட சந்தேகத்தில் சிறிது குழப்பமும் அடைந்தான். ஓலையின் செய்தியை முதல் முறை படித்ததால் ஏற்பட்ட குழப்பம், சந்தேகம் -அனைத்தையும் அவன் முகமாறுதலிலிருந்தே உணர்ந்துகொண்ட யவன ராணி, தான் நின்றிருந்த இடத்தை விட்டுச் சிறிதும் அசையாமலும் உதட்டில் தவழவிட்ட புன்முறுவலைச் சிறிதும் அகற்றி வேறு உணர்ச்சிகளைக் காட்டாமலும் கிரேக்க நாட்டு வெண்சிலையைப் போல் நின்றிருந்தாள்.

ஒரு கையை இடுப்பில் ஊன்றிக்கொண்டு, இளஞ் செழியன் தன்னைவிட்டு விலகியதும் ஒரு கையால் மஞ்சத்தைப் பற்றி, அந்த மஞ்சத்தின் பக்கத்தில் சற்றே இடை சாய, தலை இளஞ்செழியனை நோக்கித் திரும்ப மிக ஒய்யாரமாக நின்ற யவன ராணியை விளக்கின் அடியிலிருந்து கவனித்த சோழற்படை உபதலைவனின் மனம் நாட்டுக்குப் பேராபத்து நேர்ந்திருந்த சமயத்திலும், சித்தம் குழம்பியிருந்த அந்த விநாடியிலும், அந்த யவனப் பெண்ணின் இணையற்ற அழகைக் கண்டு திக்பிரமையடையத்தான் செய்தது. முதன் முதலில் ஓலை தந்த செய்தியின் திகைப்பும் கவலையும் அந்த இணையற்ற அழகு விரித்த வலையில் மெள்ள மெள்ள அடங்கத் தொடங்கின. தமிழர் பிற்காலத்தைப் பற்றி எழுந்த எண்ணங்களை அந்த யவனப் பெண்ணின் அழகும் நீலமணிக் கண்களும் வீசிய வலை சிறிது சிறிதாக அழுத்தத் தொடங்கவே இளஞ்செழியன் இதயத்தில் நாட்டைப் பற்றிய துன்ப அலைகள் மறையத் தொடங்கி, இன்ப அலைகள் தலை காட்டத் தொடங்கின. அந்த அலைகள் விசிறிடவே வந்தது போல் கடற்கரையிலிருந்து கிளம்பி சாளரத்தில் புகுந்த காற்று மேலிருந்து தொங்கிய யவனர் மணி விளக்கைச் சிறிது ஆட்டி முகத்திலும் உடலிலும் ஒளி மாறிமாறிப் பட்டு ஏதோ இந்திர லோகப் பிரமையை ஏற்படுத்தியதன் விளைவாக இளஞ் செழியன் மனமும் அந்த விளக்கின் சுடரைப் போலவே ஊசலாடத் தொடங்கியது. அதுவரை மூடிய வண்ணமே புன்முறுவல் செய்த ராணியின் செவ்விய அதரங்கள் லேசாகத் திறந்து உள்ளேயிருந்த முத்து வரிசையைக் காட்டவே விளக்கின் சுடரொளி, நன்முத்துக்களைச் சாணை பிடிக்கும் சிற்பியைப் போல் அந்த வரிசைமீது தாவித் தாவிச் சென்றதால் ஏதோ பெரிய மந்திரத்தால் கட்டுண்டவன்போல் படைத் தலைவன் பிரமை பிடித்து நின்றான்.

அவன் நிலையை, உள்ளத்தில் ஏற்பட்ட சலனத்தை அவன் முகச்சாயையிலிருந்தும் கண்களின் சலனத்திலிருந்தும் எடை போட்டுவிட்ட அந்த எழிலரசி, அவனை நோக்கி மெல்ல நடந்தாள். இருவருக்கும் இடையேயிருந்தது பத்தே அடிகள் தான். ஆனால், அந்தப் பத்தடிகளையும் அவள் வேண்டுமென்றே, தன் பூவுடல் ஆடி அசைய, அழகுப் பிம்பங்கள் நெகிழ்ந்து நெளிய, மெள்ள மெள்ளக் கடந்தாள். இடையில் கையை வைத்த வண்ணம் அவள் இடையை அசக்கி அசக்கி நடந்ததால் கையிலிருந்த யவன ராஜ குடும்பச் சின்னமான சிறகு விரித்த அன்னப்பறவையும் உயிர் பெற்று அவள் உடலில் அசைவதுபோல் தோன்றியது இளஞ்செழிய னுக்கு. அந்தப் பறவையின் சிறகிலிருந்த உயர்ந்த வைரங்கள் விளக்கொளியில் பல வர்ண ஒளிகளைச் சிதறிப் படைத்தலை வனைச் சித்திரவதை செய்யத் தொடங்கின. இவற்றையெல் லாம் அணு விடாமல் கவனித்து, படைத்தலைவனை அணுகிய யவன ராணி அவன் கையைத் தன் கையால் பிடித்து விரல்களை அவன் விரல்களோடு பின்னவிட்டு அவனை அழைத்து வந்து மஞ்சத்தில் உட்கார வைத்துவிட்டு மஞ்சத்தின் பின்புறத்தில் நின்ற வண்ணம் அவன் மீது மெள்ளச் சாய்ந்தாள்.

அவள் இடையளவு உயரமே யிருந்தது மஞ்சம். அவள் பின்னாலிருந்து படைத்தலைவன்மீது சாய்ந்தபோது, அவள் பொன்னிறக் கொண்டையிலிருந்து அவிழ்ந்து தொங்கிய தங்கக் கம்பிகள் போன்ற இழைகள் சில இளஞ்செழியன் முகத்தின்மீது விழுந்ததாலும், அவள் அவன் தலையின்மீது தன் முகவாய்க்கட்டையை வைத்துக் கொண்டு அவன் தோள்களின் இருபுறமும் வெண்மையான தன் கரங்களைத் தவழவிட்டதாலும் எங்கோ மாயாலோகத்தை நாடிச் சென்று கொண்டிருந்த படைத் தலைவன் மனம், அந்த உலகத்தில் உறையூர் ஓலையை நழுவ விட்டு விடப் போகிறோமே என்ற பயமும் கொண்டதாகையால் வலக்கரத்தின் விரல்கள் அந்த ஓலையைச் சற்று நெருக்கியே பிடித்துக்கொண்டன.

கடற்கரையிலிருந்து யவன ராணியைத் தூக்கி வந்த இரவே அவள் பேரழகினால் ஏற்படக்கூடிய ஆபத்தை உணர்ந்துகொண்ட சோழர் படை உபதலைவன், அன்றிரவில் தன் கண்ணுக்குக்கூடப்படாமல் தன் பின்புறமாக நின்ற அந்த நேரத்தில் அவள் அழகின் சக்தி எத்தன்மையதென்பதைச் சந்தேகமற உணர்ந்து கொண்டான். தன் தோளில் ஊர்ந்து உடலில் இறங்கிய கைகளின் மென்மையை மட்டுமன்றி, நீண்டு ஏதோ புஷ்பத்தின் சிறு இதழ்கள் போல் கண்ணுக்கெதிரில் காட்சி அளித்த சிறு விரல்களையும், அந்த விரல்களின் நுனியில் மருதாணி இடாமலே ரத்த ஓட்டத்தினால் செவேலென்று தெரிந்த நகங்களையும் கவனித்த படைத்தலைவன் கண்கள் பிரும்மசிருஷ்டிப்பில் இப்படியொரு அழகு இருக்குமா என்று பிரமித்தே போனதன்றி, தன் இடது கையைத் தூக்கி அந்தத் தளிர் விரல்களுடன் தன் விரல்களையும் பின்னிக்கொண்டான்.

அவன் விரல்களுடன் அந்தத் தளிர் விரல்கள் எத்தனை எத்தனை மொழிகளைப் பேசின. எத்தனை எத்தனை செய்திகளைச் சொல்லி அவன் இதயத்தைக் குழப்பின. சித்தத்தை மயக்கின!

விடை சொல்ல முடியாத எத்தனையோ கேள்விகள்! விவரம் புரியாத எத்தனையோ பதில்கள்! இரண்டும் கலந்ததுதான் இயற்கையளிக்கும் காதல் பாசம். அதைக் காதலாகவும் இலக்கியத்திலும் அகராதியிலும் வித்தியாசம் பெரிதாயிருக்கலாம். அனுபவத்தில் ஏற்படும் வித்தியாசம் மிக நுண்ணியது. கண்ணுக்குத் தெரியாத கயிறு அது. விதி ஒன்றே விளக்கக்கூடிய பெரும் புதிர். காலம் ஒன்றே அவிழ்க்கக் கூடிய பெரும் சிக்கல்.

அந்தச் சிக்கலில் அகப்பட்டுக் கிடந்தான் படைத் தலைவன். எத்தனை யவன அழகிகள் தொட்டு மாலை போட்ட காலத்திலும் கலங்காத அவன் இதயம்,. யவன ராணியின் கைகள் பட்ட மாத்திரத்தில், அவள் நீலமணிக் கண்கள் அவனைச் சற்றுத் துழாவிய மாத்திரத்தில் அவனை நிலைகுலைந்து போகும்படி செய்யக்கூடிய சக்தியைப் பெற்றிருந்தன. அவனுக்கு நிதானத்தை அளிக்கக்கூடிய சக்தி ஒன்று. அது காவிரிக்கு அக்கரையில் புகாரின் இந்திர விழா விடுதியில் கிடந்தது. யவன ராணி பின்னாலிருந்து அவன் மீது கைகளைத் தவழவிட்ட அந்த இரவில் அவன் மனச் சந்திரன் மீது மாய மேகம் மூடிவிட்டதால் பூவழகியைப் பற்றிய நினைப்பே அவன் இதயத்திலிருந்து அகன்றிருந்தது. ஆகவே அவள் கை விரல்களை அழுத்திப் பிடித்த படைத்தலைவன், “இப்படி வா ராணி” என்று மஞ்சத்தைச் சுற்றி அவளை இழுத்தான்.

இஷ்ட விரோதமாக வருபவள் போல் யவன ராணி மஞ்சத்தைச் சுற்றி வந்து அவன் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு, “ஏன் படைத்தலைவரே!” என்று மதுரமான குரலில் அவன் காதுக்கு மட்டுமே கேட்கும்படியாக வினவினாள்.

அந்தக் கேள்விக்குப் பதில் ஏது? பக்கத்தில் வந்து உட்காரும்படி ஏன் அழைத்தான் என்பது ராணிக்குத் தெரியும். அழைத்தவனுக்கும் தெரியும். வேறு எதுவும் பேச வழியில்லாததால் படைத்தலைவன் அவளைத் தனக்காகச் சாய்த்தான். அவள் அவன் இழுத்த இழுப்புக்கு வராமல் சிறிது விலகியதைக் கண்ட படைத்தலைவன் ஒரு விநாடி ஆச்சரியப் பட்டானானாலும் மறு விநாடி அவளுடைய கையிலிருந்த தன் விரல்களை விடுவித்துக் கொண்டு, அவள் கையின் மேல்புறத்தைச் சற்று அழுத்திப் பிடித்தான். அந்த முரட்டுப் பிடியில் அவள் வேதனையை அடைந்தாலும் மெல்லக் கலகலவென நகைத்தபோது சகோடயாழின் நரம்புத் தந்திகள் புதுப்புது ஸ்வரங்களை உதிர்ப்பது போல் தோன்றியதால் அவள் இருதோள்களையும் பிடித்துத் தனக்காக நோக்கித் திருப்பிய இளஞ்செழியன், “ஏன் சிரிக்கிறாய்?” என்றான் குரல் சற்றே தடுமாற.

அவள் பதில் பேசாமல் அவன் பிடித்ததால் கன்னிச் சிவந்துவிட்ட தன் கையைக் காட்டினாள். அதைக் கண்ட இளஞ்செழியனின் இதயமும் கன்னிச் சிவந்துவிட்டது என்பதற்குச் சான்று கூறவோ என்னவோ, அவன் அழகிய முகமும் சற்றே சிவந்தது. அவன் கை வழவழப்பான தந்தக் கையை மெல்ல வருடியது. அந்த நிலையில் அவள் அவனை நோக்கினாள். நீலமணிக் கண்களின் கடலாழம் அவனை எங்கோ இழுத்துச் சென்று, வெளேரென்ற கழுத்தின் ஒளிவீச்சு அவன் கண்களுக்கெதிரே மின்னல்போல் பளிச்சிட்டது. இரண்டு வருஷ காலம் பூவழகியின் வெறுப்புக்கு இலக்கான அவன் மனம், காதலித்தவளின் இன்பச் சொற்கள் நீராகப் பிரவாகிக்காததால் வறண்டு போன பாலைவனம் போல் கிடந்தது. அதிலே பொழிந்த யவன ராணியின் காதல் சிறு தூற்றலை ஆசையுடன் இழுத்துக் கொண்டது பாலைவனம். கையில் கன்னிய இடத்தில் இவன் உதடுகள் முரட்டுத்தன மாகப் பதிந்தன. அவன் தலை அவள் மடியில் சாய்ந்தது. யவன ராணி அவன் தலையை ஆதரவுடன் தடவிக் கொடுத்தாள்.

அந்த நிலையில் அவள் மனத்தில் அரசு ஆசையில்லை. புகாரைப் பிடிக்க வேண்டும் என்ற துடிப்பும் இல்லை. இளஞ்செழியனின் கம்பீரம், தன்னிடம் சிக்கிக் கொண்ட சமயங்களில் அவனிருந்த நிராதரவான நிலை, பெரிய வீரன் குழந்தைபோல் தன் மடியில் படுத்துக் கிடந்த பரிதாபம் -இவையனைத்தும் அவள் கருத்திலே உண்மை அன்பையும் நிகரற்ற காதல் உணர்ச்சியையுமே கிளப்பிவிட்டன. அதனால் சிறிது அச்சமும் அடைந்த யவன ராணி, மடியில் அமைதியுடன் படுத்துக் கிடந்த படைத்தலைவன் மீது தன் கண்களை ஆசையுடன் ஓடவிட்டாள். ‘நான் வந்த காரியமென்ன? அடைந்த நிலையென்ன? இந்தத் தமிழனை அடிமைப்படுத்த முனைந்த நானே இவனுக்கு அடிமையாகி விட்டேனே’ என்று உள்ளே எண்ணங்களை ஓடவிட்டு, ‘என்னதான் ராணியானாலும் பெண் பெண்தானே’ என்று பெருமூச்சும் விட்டாள். இதனால்தான் ‘பெண்கள் சபல சித்தமுடையவர்கள். அவர்களிடம் உருப்படியான அலுவல் எதையும் ஒப்படைக்காதே என்று உலக சாத்திரங்கள் அனைத்தும் சொல்கின்றனவா?’ என்றும் கேட்டுக் கொண்டாள் ராணி.

என்ன கேட்டும் விவாதித்தும் விஷயத்தை அலசியும் அவள் பெண் உள்ளத்தில், அது கிளறிவிட்ட உணர்ச்சிகளில் பதில் ஒன்றுதான் கிடைத்தது. ஆணையும் பெண்ணையும் சிருஷ்டித்த இயற்கை தரும் பதில் அது. நாடுகளையோ சாதிகளையோ அறியாத பிருத்வி தரும் பதில் அது. நிற பேதத்தையோ செயற்கை வழக்கங்களையோ கணக்கில் வைத்துக் கொள்ளாத புலன்கள் தரும் பதில் அது. அந்தப் பதில் அவளை அயர வைத்தது. இதழ்களைப் படைத் தலைவன் காதருகே கொண்டு சென்று, “படைத்தலைவரே!” என்று ரகசியமாக அழைத்தாள்.

“ஊம்.”

“மிகவும் களைத்திருக்கிறீர்கள்’ என்றாள் ராணி பரிதாபமும் அன்பும் ததும்பிய குரலில்.

இதற்குப் பதிலே இல்லை. அவள் மனம் அந்தச் சமயத் தில் இருந்த நிலை இன்னும் சற்று நீடித்திருந்தால் யவன ராணி எதைச் சொன்னாலும் கேட்டிருப்பான் படைத்தலைவன். ஆனால் அந்த மாயவலையைச் சரேலென்று கிழிக்கவும் அவனைச் சுயநிலைக்குக் கொண்டுவரவும் கதவு பலமாகத் திறக்கப்பட்டதோடு அசந்தர்ப்பமாக உள்ளே நுழைந்து விட்டோமென்ற எண்ணத்தில் யாரோ, “மன்னிக்கவும்” என்று சொன்ன சொல்லும் காதில் விழுந்ததால் இளஞ்செழியன் ராணியின் மடியிலிருந்து எழுந்து சற்று விலகி உட்கார்ந்து வாயிற்படியை நோக்கினான்.

வழக்கமாகத் தான் தாங்கி நிற்கும் பயங்கரமான வேலுடனும், சங்கடப்பட்ட கண்களுடனும் தான் பார்த்த தையே நம்பாதவன் போலக் குமரன் சென்னி வாயிற்படியில் நின்றிருந்தான். அவனுக்கு ஏற்பட்ட சங்கடத்தைவிட அதிக சங்கடத்துக்கு ஆளான இளஞ்செழியன் சிறிது நேரம் வரை அவனை ஏறெடுத்துப் பார்க்கச் சக்தியில்லாமல் தரைமீது தலையைத் தொங்கப் போட்டுக்கொண்டிருந்துவிட்டுக் கடைசியில் கேட்டான்: “எங்கு வந்தாய் சென்னி?”

“தங்கள் உத்தரவைப் பெற வந்தேன்.” ஒரு வீரன் பேசும் முறையில் உணர்ச்சிகளை மூட்டை கட்டி வைத்து விட்டுத் திட்டமாகப் பதில் சொன்னான் குமரன் சென்னி.

“என்ன உத்தரவு?”

“ஓர் ஓலையை இன்றிரவே புகாருக்கு எடுத்துச் செல்ல உத்தரவிட்டதாக யவனர் தலைவர் சொன்னார்.”
“ஓலை எழுதிக் கொடுத்தாரா?”

“எழுதிக் கொடுத்தார்.”

“என்ன எழுதியிருக்கிறது ஓலையில்?”

“பிரும்மானந்தர் முதலியோரை உடனே விடுதலை செய்து என்னுடன் அனுப்பும்படி எழுதியிருக்கிறது.”

“சரி போய் அழைத்துவா.”

இந்த உத்தரவு கிடைத்ததும் குமரன் சென்னி தன் நெடுங் கால்களைத் திருப்பி வெளியே செல்லத் துவங்கினான்.

“இரு. நானும் வருகிறேன்” என்று கூறிய இளஞ்செழியன் மஞ்சத்திலிருந்து எழுந்து, “ராணி, படுத்துக்கொள். நான் வருகிறேன்” என்று விடை பெற்றுக்கொண்டு செல்ல முயன்றவன் திடீரென வாயிற்படியில் நின்று திரும்பி, “ராணி! இது உனக்கு எப்படிக் கிடைத்தது?” என்று கையிலிருந்த ஓலையைக் காட்டி வினவினான்.

“உறையூரிலிருந்து வந்த தூதன் ஒருவன் கொடுத்தான்” என்றாள் ராணி.

“யாரிடம் கொடுத்தான்?”

“கோட்டைத் தலைவனிடம்.”

“கோட்டைத் தலைவன்…?”

“என்னிடம் கொடுத்தான்.”

“இதை ஏன் நீ டைபீரியஸிடம் கொடுக்கவில்லை ?”

பதிலுக்கு யவன ராணி சிரித்தாள். “ஏன் சிரிக்கிறாய் ராணி?” என்று கேட்டான் இளஞ்செழியன்.

“காரணத்தை நீங்களே புரிந்துகொள்ளுங்கள்” என்று சொன்ன ராணி மீண்டும் சாளரத்தருகே சென்று பழையபடி நின்று கொண்டு படைத்தலைவனுக்கு முதுகைத் திருப்பிக் கொண்டாள்.

படைத்தலைவன் உப்பரிகை அறையைவிட்டுப் படிகளில் இறங்கிக் கூடத்துக்கு வந்ததும் குமரன் சென்னி பெரு விழிகள் படைத்தலைவனைக் கூர்ந்து நோக்கின. அந்தப் பார்வையில் தொனித்த கேள்வியைப் புரிந்துகொண்ட இளஞ்செழியன், அவனிடம் ஏதும் பேசமாட்டாமல் அவன் நினைப்பை வேறு திசையில் மாற்றி, கையிலிருந்த ஓலையை அவனிடம் கொடுத்து, “நீயே படித்துப் பார்” என்றான்.

ஓலையைப் படித்த குமரன் சென்னியின் முகத்தில் கவலை படர்ந்தது. “இது டைபீரியஸிடம் சிக்கினால் புகார் அழிந்து விடுமே!” என்று கேட்கவும் செய்தான்.
“புகார் நாளைக்கே யவனர் கைகளுக்கு மாற இதை விட சிறந்த ஆயுதம் தேவையில்லை” என்று ஒப்புக்கொண்டான் இளஞ்செழியனும்.

“அப்படியானால் இதை ராணி ஏன் டைபீரியஸிடம் கொடுக்கவில்லை?” குமரன் சென்னியின் கேள்வியில் வியப்பும் கலந்து இருந்தது.

“அதுதான் எனக்கும் புரியவில்லை. எந்த ஒரு காரியத் துக்காக ராணியும் டைபீரியஸும் தமிழ்நாட்டை நாடி வந்தார்களோ, எந்த ஒரு சோதிடத்தை யவன குருமார்கள் சொன்னார்களோ, அந்தச் சோதிடமும் லட்சியமும் நிறைவேற வழிகாட்டும் இந்த ஓலையை யவன ராணி ஏன் டைபீரியஸிடம் கொடுக்கவில்லை? இருங்கோவேள் மனமார யவனர் கையில் புகாரைக் கொடுப்பதற்காகவே எழுதப்பட்ட இந்த ஒப்பந்தப் பத்திரத்தை எதற்காக ராணி மறைத்து வைத்தாள்? ஏதும் விளங்கவில்லை சென்னி. எதற்கும் நீ போய் பிரும்மானந்தரை விடுவித்து வா. அவர் ஒருவேளை இதற்கு விடை காண முடியும்” என்று சொன்னான் இளஞ்செழியன்.

அதற்குமேல் தாமதிக்காமல் டைபீரியஸ் தந்த விடுதலை ஓலையுடனும், பரதவ வல்லாளனுடனும் அந்த இரவில் மூன்றாம் ஜாமத்திற்குள்ளேயே புறப்பட்ட குமரன் சென்னி விரைவில் காவிரியைத் தாண்டிப் பொழுது புலருவதற்கு முன்பாகவே திரும்பி வந்தான். திரும்பி வந்தவர்களை எதிர் கொள்ள உச்சி மாளிகையில் விழித்துக் கொண்டே உட்கார்ந் திருந்த இளஞ்செழியனுக்கு அதிர்ச்சியைத் தரும் செய்தியைக் கொண்டுவந்தான் குமரன் சென்னி. மிகுந்த வேகத்துடன் மாளிகைக்குள் நுழைந்த பிரும்மானந்தரையும் குமரன் சென்னியையும் பரதவ வில்லாளனையும் கண்ட இளஞ் செழியன், “எங்கே வேளிர் மகள்? எங்கே அவள் தோழிகள்?” என்று வினவினான்.
“பூவழகி உறையூருக்குச் சென்றுவிட்டாள். தோழிகளும் அவளுடன் சென்று விட்டார்கள்” என்று பிரும்மானந்தர் சொன்னார்.

“யார் விடுதலை செய்தது?”

“கோட்டைத் தலைவன்.”

“ராணியின் உத்தரவில்லாமல் எப்படி விடுதலை செய்தான்?”

“அதற்கும் மேற்பட்ட உத்தரவு கிடைத்தது.”

“ராணி உத்தரவுக்கும் மேற்பட்ட உத்தரவு யவனர் களுக்கு உண்டா?”

“கிடையாது படைத் தலைவரே. ஆனால் கோட்டைத் தலைவன் நிலைமை மிகவும் சங்கடமானது. அவன் செய்தது சரிதான்.”

“சரிதானா?”

“சோழ மன்னர் உத்தரவை அவன் எப்படிப் புறக் கணிக்க முடியும்?”

“யார் இப்பொழுது சோழ மன்னர்?”

“இருங்கோவேள்?”
இளஞ்செழியன் இதயம் வெகு வேகமாக அடித்துக் கொண்டது. “இருங்கோவேள்! சோழ மண்டலத்தின் மன்னன்! இதைவிடக் கேவலம் வேறு என்ன இருக்க முடியும்?” என்று வேகத்துடன் கேட்டான்.

“ஏன் இருக்க முடியாது?” என்று விளக்கத் தொடங்கினார் பிரும்மானந்தர். அவர் விளக்க விளக்க, சோழநாடு அதலபாதாளத்தில் அழுந்திப் போவதையும், யவனர் கொடி பூம்புகாரில் பறப்பதையும் அகக் கண்ணில் கண்ட இளஞ்செழியன், “இதை இன்னும் ஒரே மாதத்தில் தடுத்து விடுகிறேன்” என்று சொல்லி வாளை உருவிக் கொண்டு மாளிகைக்கு வெளியே விரைந்தான்.

“பொறுங்கள் படைத் தலைவரே! எங்கு போகிறீர்கள்?” என்று கூறினார் பிரும்மானந்தர். அவர் கூறியது இளஞ் செழியன் காதில் விழவில்லை. குதிரைக் கொட்டடியை நோக்கி வெகு வேகமாக நடையைக் கட்டினான். பிரும்மானந்தரின் கட்டளைமீது படைத்தலைவனைத் தடை செய்து திருப்பி அழைத்து வந்த குமரன் சென்னிமீது மட்டுமின்றி, பிரும்மானந்தர் மீதும் எரிந்து விழுந்த இளஞ்செழியன், “என்னைத் தடைசெய்யக் காரணம் என்ன?” என்று கேட்டான்.

“உங்களிடம் ராணி ஓலை கொடுத்தாளாமே, அதைக் காட்டுங்கள்” என்றார் அடிகள்.

படைத் தலைவன் மடியிலிருந்து ஓலையை எடுத்துக் கொடுத்தான். அதைப் படித்த அடிகள் முகத்தில் அதிர்ச்சி யில்லை, ஆத்திரமும் ஏற்படவில்லை. ஆழ்ந்த யோசனை மட்டுமே தென்பட்டது. சற்று நேரத்திற்குப் பிறகு தெளிவும் ஏற்பட்டது. “இப்பொழுது புரிகிறது” என்றார் அடிகள்.

“என்ன புரிகிறது?” படைத் தலைவன் கேட்டான் துடிப்புடன்.

“நீ உறையூர் செல்லக் கூடாது என்பதன் காரணம்!” என்று சொன்ன அடிகள், காரணத்தை விளக்கியதன்றி யவன மகளின் இதயத்தையும் ஓரளவு புரிந்து கொண்டார். அதை வெளிப்படையாகவும் சொன்னார்: “இந்த நிலையில் புகாரைக் காப்பாற்றக் கூடியவர் ஒருவர்தான்” என்று.

“யார் அது?” என்று கேட்டான் குமரன் சென்னி.

“ராணி” என்று பதில் சொன்னார் அடிகள்.

இதைப் பக்கத்திலிருந்து கேட்ட ஹிப்பலாஸ் பிரமித்தான். ஒருவேளை பிரும்மானந்தருக்கு அறிவு கெட்டிருக்குமோ என்று அவர்மீது சந்தேகப் பார்வையை ஓடவிட்டான் படைத் தலைவன். அவர்கள் சம்பாஷணையை மறைவிலிருந்து கேட்டுக் கொண்டிருந்த டைபீரியஸின் முகத்தில் விவரிக்க இயலாத பல உணர்ச்சிகள் தென்பட்டன. “ராணி யவனர்களுக்குத் துரோகியா?” என்ற சொற்களையும் அவன் உதடுகள் ஆச்சரியத்துடனும் கோபத்துடனும் உதிர்த்தன.

Previous articleYavana Rani Part 1 Ch16 | Yavana Rani Sandilyan | TamilNovel.in
Next articleYavana Rani Part 1 Ch18 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here