Home Sandilyan Yavana Rani Part 1 Ch18 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

Yavana Rani Part 1 Ch18 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

75
0
Yavana Rani Part 1 Ch18 Yavana Rani Sandilyan, Read Yavana Rani Online Free, Yavana Rani PDF, Download Yavana Rani novel, Yavana Rani book,read Yavana Rani free
Yavana Rani Part 1 Ch18 |Yavana Rani Sandilyan|TamilNovel.in

Yavana Rani Part 1 Ch18 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

யவன ராணி – சாண்டில்யன்

முதல் பாகம்

அத்தியாயம் : 18 வஞ்சகக் கண்கள்

Yavana Rani Part 1 Ch18 |Yavana Rani Sandilyan|TamilNovel.in

ராணிதான் புகாரைக் காப்பாற்ற முடியும்! பிரும்மா னந்தரின் விந்தையான இந்தச் சொற்கள் இளஞ்செழியனின் சிந்தையிலே மூட்டிவிட்ட ஏளனச் சிரிப்பு அவன் இதழ்களிலும் சற்றே விரிந்தது. யவன குருமார்கள் சோதிடத்தை நம்பிப் பூம்புகாரில் யவன அரசை நிறுவ வந்த ராணிதான் தமிழர்களின் அந்த மாபெரும் துறைமுக நகரத்தைக் காப்பாற்ற முடியுமென்றால் அதைவிட விபரீத நிலை வேறொன்று இருக்க முடியாது என்று இளஞ்செழியன் மட்டுமல்ல, கூட இருந்த குமரன் சென்னியும் ஹிப்பலாஸும் கூடத் தீர்மானித்துக் கொண்டார்கள். புகாரைக் காப்பாற்று வதற்காகவே, யவனர்கள் போராட முக்கிய சின்னமொன்று இருக்கக் கூடாது என்பதற்காகவே, புகாரிலிருந்து பல கஷ்டங்களுக்கிடையில் சிறையெடுக்கப்பட்ட யவன ராணியின் கையில் தான் பூம்புகாரின் பிற்காலம் இருக்கிறதென்றால், அந்தப் பிற்காலம் கண்டிப்பாய்த் தமிழ்நாட்டின் பொற்காலமாக இருக்க முடியாது என்பதைப் படைத் தலைவனும் அவனது போர்த் தோழர்களும் சந்தேகத்துக்கு இடமின்றிப் புரிந்து கொண்டார்கள். இந்த நிலையில் பிரும்மானந்தர் முகம் மட்டும் ஏதோ ஒரு புது வழியைக் கண்டுபிடித்து விட்டது போல் பூரிப்படைந்திருப்பதன் காரணத்தை மாத்திரம் அவர் களால் புரிந்துகொள்ள முடியாததால் குமரன் சென்னி கேட்டான்: “ராணியால்தான் புகாரைக் காப்பாற்ற முடியு மென்றால் புகார் நம் கையைவிட்டுப் போன மாதிரி தானே” என்று .

பிரும்மானந்தர் சிறிதும் யோசிக்காமலே பதில் சொன் னார், “இல்லை ” என்று மிகத் திட்டமாக.
இதைக் கேட்ட இளஞ்செழியன் முகத்திலும் வியப்புத் தாண்டவமாடவே அவனும் குறுக்கே பாய்ந்து, “என்ன அவ்வளவு திட்டமாகச் சொல்கிறீர்கள் பிரும்மானந்தரே?” என்று வினவினான்.

“காரணங்கள் இருக்கின்றன. ஆனால் அதை ரகசியத் தில் பேசுவோம், வா” என்று இளஞ்செழியனையும் மற்ற இரு உதவிப் படைத் தலைவர்களையும் அழைத்துக் கொண்டு பின்கட்டுக் கூடத்துக்குச் சென்றார் பிரும்மானந்தர். மறைவி லிருந்து இந்தச் சம்பாஷணையைக் கேட்டுக் கொண்டிருந்த டைபீரியஸுக்கும் அவர்களைத் தொடர வேண்டுமென்றும், அவர்கள் சொல்வதைக் கேட்க வேண்டுமென்றும் ஆசை யாகத்தானிருந்தது. என்றாலும் இரண்டு கட்டுகளுக்கு மிடையே காவல் புரிந்த வீரர்கள் தன்னை அனுமதிக்க மாட்டார்களென்பதை அறிந்திருந்தானாகையால், அவன் அவர்களைத் தொடராமல் தான் சிறையிருந்த முன் கூடத்தில் எந்தப் பெரிய தூண் மறைவில் நின்றிருந்தானோ அந்தத் தூண் வீசிய விளக்கின் நிழலிலேயே சென்று கோடியிலிருந்த மஞ்சத்தில் பழையபடி உட்கார்ந்து கொண்டான்.

பின்கட்டுக்குச் சோழர் படை உபதலைவனையும் அவனைச் சேர்ந்த இரு உதவித் தலைவர்களையும் அழைத்துச் சென்ற பிரும்மானந்தர் ஆயுதங்களும், கவசங்களும் நிறைந்த படைக்கலப் பயிற்சிக் கூடத்திலிருந்து விளக்கில், மறுபடியும் ஓலையைப் படித்துப் பார்த்து, ஒரு முடிவுக்கு வந்தவராய் இளஞ்செழியனை நோக்கி, “படைத்தலைவரே! இந்த ஓலையைச் சரியாகப் படித்தீரா?” என்று வினவினார்.

“படித்தேன்” என்றான் படைத் தலைவன், பழைய விஷயத்தை எதற்காகப் பிரும்மானந்தர் திரும்பக் கேட்கிறார் என்பதை அறிந்து கொள்ளாமலே.

“இதில் கையெழுத்திட்டிருப்பது பேரமைச்சர்” என்று பிரும்மானந்தர் சற்று அழுத்தியே சொன்னார்.

“ஆம் அடிகளே” என்று ஒப்புக்கொண்டான் படைத் தலைவன்.

“வழக்கமாக வரும் அரசாங்க உத்தரவுகளைப் போல் புலி இலச்சினையும் பொறிக்கப்பட்டிருக்கிறது.”

“ஆமாம்.”

“சோழ மன்னன் இருங்கோவேளின் உத்தரவுப்படி என்று சுட்டி, பேரமைச்சர் கையொப்பமிட்டிருக்கிறார்.”

“ஆம்.”

“ஆகவே, இருங்கோவேள் சோழ மன்னர்கள் உட்கார வேண்டிய அரியாசனத்தில் உட்கார்ந்து விட்டான் என்பதில் சந்தேகமில்லை.”

“இல்லை.”

“ஆகவே இது அரச சாஸனம். யவனர்கள் தனது அரசுக்கு உறுதுணையாய் நிற்பதனால் அவர்கள் வாணிபம் பெருவாரியாகவுள்ள பூம்புகார் நகரை அவர்களுக்குச் சன்மானமாக வழங்குவதாகவும், எந்த யவனத் தலைவனை யவனர்கள் ஒப்புக்கொள்கிறார்களோ அவனைப் புகாரின் குறுநில மன்னனாக ஒப்புக் கொள்வதாகவும் இந்த சாஸனம் கூறுகிறது.”

“ஆம்.”

“இத்தகைய சாஸனத்தை ஏன் ராணி ஏற்கவில்லை? எதற்காக மறைத்தாள்? இந்த ஓலையோ கோட்டைத் தலைவ னுக்கு எழுதப்பட்டிருக்கிறது. அப்படியிருக்க அவனுக்கும் இதன் விவரங்கள் தெரிந்திருக்க வேண்டும். அப்படியானால் அவன் ஏன் இந்த விவரங்களை டைபீரியஸிடம் சொல்ல வில்லை? ராணி இங்கு வந்த பின்புதானே டைபீரியஸ் இங்கு வந்தான்?”

கேள்விமேல் கேள்வியாகப் பிரும்மானந்தர் அடுக்கிய தைக் கேட்ட படைத்தலைவன் மட்டுமின்றி, குமரன் சென்னியும் ஹிப்பலாஸுங்கூட விடை காணாமல் தவித் தார்கள். பிரும்மானந்தர் நீண்ட நேரம் மௌனம் சாதித்து ஏதேதோ யோசித்துவிட்டுச் சொன்னார்: “படைத்தலைவரே! ராணி மட்டும் இஷ்டப்பட்டிருந்தால் இந்த ஓலைப்படி அவள் இன்று பூம்புகாரின் ராணியாயிருந்திருக்கலாம். ஆனால் அவள் ஓலையை மறைத்ததன்றி டைபீரியஸிடம் ஓலையைப் பற்றிச் சொல்ல வேண்டாமென்று கண்டிப்பான உத்தர விட்டுக் கோட்டைத் தலைவன் வாயையும் கட்டியிருக்கிறாள். நீங்கள் அவளைச் சிறையெடுத்தபோது இஷ்டப்பட்டுக் கூடவே வந்திருக்கிறாள்.”
மேலே பேசப்போன பிரும்மானந்தரைத் தடுத்த இளஞ்செழியன், “ஆம் ஆம்! அதை அவளே சொன்னாள்” என்று கூறினான்.

பிரும்மானந்தர் உதடுகளில் புன்முறுவல் தவழ்ந்தது. “அவள் சொல்லாமலே எனக்குத் தெரியும், அவள் நடவடிக்கையின் காரணம். தமிழ்நாட்டின் அபாயமான காலத்தில் அவள் தமிழருக்குச் செய்திருக்கும் இந்த உதவி மகத்தானது” என்று கூறிய அடிகள், “படைத்தலைவரே! நாட்டின் நிலை உமக்குப் புரிகிறதல்லவா?” என்று கூறினார்.

“சந்தேகமறப் புரிகிறது” என்றான் படைத்தலைவன்.

“தாயாதிக் காய்ச்சல்…!”

“தமிழ்நாட்டை அடிமைப்படுத்த முயலுகிறது.”

“இருங்கோவேள் இளஞ்சேட்சென்னியின் தாயாதி. சமயம் பார்த்து அரசரையும் அகற்றி இளவலையும் மறைத்து விட்டான்.”

“அரசர் இறந்தது…?” மேற்கொண்டு பேச மாட்டாமல் திகைத்து நின்றான் படைத்தலைவன்.

“அரசர் இறக்கவில்லை; அழிக்கப்பட்டார். அரசுக் காகக் கொலை புரிவது வரலாற்றில் காணப்படாத புதுமையல்ல படைத்தலைவரே. நமக்குத் தெரிய வேண்டியதெல்லாம் இளவரசர் எங்கிருக்கிறார் என்பதுதான்” என்றார் பிரும்மானந்தர்.
“இளவரசர் கொல்லப்படவில்லையென்பது தங்களுக்கு எப்படித் தெரியும்?”

“திருமாவளவன் கொல்லப்பட்டிருந்தால் நாட்டில் இத்தனை நேரம் புரட்சி கிளம்பியிருக்கும். அரசர் அழிவும் நேரடியாக நடந்திருக்காது. மக்கள் கண்களில் மண்ணைத் தூவியிருக்கிறான் இருங்கோவேள். அரசர் இறப்பு விபத்து என விளம்பரப்படுத்தப்பட்டிருக்கும். இளவரசர் மறைவுக்குக் காரணம் கூறப்பட்டிருக்கும். உணவை ஜீரணம் செய்ய இஷ்டப்படுபவன் சிறிது சிறிதாகத்தான் உண்பான். முதலில் அரசர், பிறகு இளவரசர், இப்படித்தான் நடக்கும். இளவரசர், ஒன்று, விஷயமறிந்து தப்பியிருக்க வேண்டும். அல்லது சிறை யிருக்க வேண்டும்.”

“அதை அறிவது எப்படி?”

“வழி இருக்கிறது படைத்தலைவரே. இருங்கோவேள் மிகச் சாமர்த்தியமாக வேலை செய்கிறான். புகாரை அவன் யவனர்களுக்கு ஏன் கொடுக்கிறான் தெரியுமா?”

“ஏன்?”

“எதிர்ப்பைச் சமாளிக்க. வாணகரைத் தளத்தைப் பற்றி அவனுக்கு நன்றாகத் தெரியும். சோழ மன்னரிடம் உமக்குள்ள பக்தியையும் நன்றாக அறிவான். எதிர்க்கரையில் ஒரு பலமான விரோதியைத் தடுக்க, பிற நாட்டாருக்கு அளிக்கப்படும் சன்மானம், புகார். இதில் அவன் தனியாக எதுவும் செய்ய வில்லை .”

“வேறு யார் துணை?”

“வேறு யார்? சோழர் பெருமையால் பொறாமை கொண்ட இருவர், சேரமானும் பாண்டிய மன்னனும்.”

“சேரமான் பெருஞ்சேரலாதன் கூடவா?” இதைக் கேட்டுச் சில விநாடிகள் வாயடைத்து நின்ற இளஞ்செழியன், படைத்தலைவன் சொற்களிலும் பார்வையிலும் துளிர்த்த அவநம்பிக்கை ஹிப்பலாஸ், குமரன்சென்னி இவர்கள் முகங் களிலும் சுடர்விட்டது.

மூவர் முகக் குறியையும் கண்ட பிரும்மானந்தர், “சந்தேகம் வேண்டாம் படைத்தலைவரே! பிரதி தினம் வாணிபத்தாலும் படைபலத்தாலும் வீரர்கள் செறிவாலும் வலுவடைந்து வரும் சோழ நாட்டைக் கண்டு சேர மன்னனும் பாண்டியப் பெருமானும் வாளாவிருப்பார்களென்று எண்ணுவதைப்போல் அரசியல் அறிவுச் சூனியம் வேறெதுவும் இருக்க முடியாது. புகார் ஏற்பட்ட பின்பு கொற்கையில் யவனர் வாணிபம் குறைந்தது. சேரமானின் மேற்குக் கடற்கரையில் திண்டியின் மகத்துவமும் முயற்சியின் முக்கியத்துவமும் மறைந்தன. இதை இரு மன்னர்களும் பொறுப்பார்களா? இல்லை படைத்தலைவரே, இல்லை. அவர்கள் கடைக்கண் பார்வையில்லாமல் இச்சதி நடக்கவில்லை. இல்லையேல் குறுநில மன்னனும் இளஞ்சேட் சென்னியின் தேர்களைக் கண்டே நடுங்கிக் கொண்டிருந்த வனுமான இருங்கோவேள் மன்னனாக முடியுமா? ஒருக்காலும் முடியாது. பலமான இரு கரங்கள் மறைவிலிருந்து உதவுகின்றன. வஞ்சகனான இருங்கோவேள் அதை மிகத் தந்திரமாக உபயோகப்படுத்துகிறான்” என்று விளக்கிய பிரும்மானந்த அடிகள் கவலையால் பெருமூச்சும் விட்டார்.

உலக பந்தங்களை அறவே ஒழித்து, செங்கற்பொடிக் கூரை யணிந்த அடிகள், இந்த மாதிரி நாட்டைப்பற்றிக் கவலைப்பட்டுப் பெருமூச்சு விட்டதை மூன்றாம் பேர்வழிகள் கண்டால் அவர்களுக்கு ஒருவேளை ஆச்சரியமாயிருக்கலாம். ஆனால் பிரும்மானந்தரை முழுக்க முழுக்க அறிந்த படைத் தலைவனுக்கோ அவனது துணைவர்களுக்கோ அது எந்தவித வியப்பையும் அளிக்கவில்லை யென்றாலும், அவரது அடுத்த வார்த்தைகள் அவர்களைக் கூட பிரமிக்க வைத்தன.

சற்று யோசித்துவிட்டுப் பிரும்மானந்தர் கேட்டார், “படைத்தலைவரே! இந்த யவன ராணி நல்ல அழகி இல்லையா?” என்று.

யவன ராணியின் அழகுக்கும் அன்றுள்ள அரசியல் நிலைமைக்குமுள்ள தொடர்பு என்ன என்பதை அறியாத படைத்தலைவன், “ஆம் அழகிதான், அதற்கென்ன?” என்று கேட்டான்.

“நீர் ஒப்புக்கொண்டது நல்லதாகப் போய்விட்டது” என்றார் பிரும்மானந்தர், ஏதோ பெரிய சுமை தலையிலிருந்து இறங்கிவிட்டதுபோல் பெருமூச்சு விட்டு.

“என்ன அடிகளே இது?” பிரமிப்புடன் கேட்டான் படைத்தலைவன்.
“இல்லை, பூவழகியிடமிருந்த மயக்கத்தில் ராணியின் அழகைக் கவனிக்காமல் விட்டுவிட்டீர்களோ என்பதற்காகக் கேட்டேன்” என்றார் அடிகள்.

பதிலேதும் சொல்லாமல் தனது உதவிப் படைத் தலைவர்களையும் நோக்கி அடிகளையும் நோக்கினான் இளஞ்செழியன். பிரும்மானந்தர் கேட்ட அடுத்த கேள்வி இளஞ்செழியனையும் மற்ற இருவரையும் ஒரு உலுக்கு உலுக்கியே விட்டது.

“பூவழகிதான் உறையூர் போய்விட்டாள். இங்கிருப் பவள் ராணி. அவளோ உம்மைக் காதலிக்கிறாள். அவள் மீது நீரும் சற்று அன்பு செலுத்தினால்தானென்ன?” என்று வினவினார் பிரும்மானந்தர், தமது சின்னஞ்சிறு கண்களில் விஷமம் சொட்ட.

இளஞ்செழியன் உடல் இதைக் கேட்டதும் ஒரு முறை ஆடியதன்றி, அவன் உள்ளமும் பெரிதும் சங்கடத்தில் ஆழ்ந்தது. சற்று முன்பாக உப்பரிகை அறையில் தான் கண்டதையெல்லாம் குமரன்சென்னி அடிகளிடம் சொல்லி யிருப்பானோ? என்று சந்தேகித்த இளஞ்செழியன், குமரன் சென்னியை நோக்கினான். நிர்மலமாயிருந்த குமரன் சென்னியின் கண்கள் ‘நான் ஏதும் சொல்லவில்லையே’ என்பதைத் தெளிவாக எடுத்துச் சொன்னதன்றி, “இது தகாத வார்த்தை அடிகளே’ என்று அவன் உதடுகள் சீறவும் தொடங்கின. ராணி வந்த இரவிலிருந்து இளஞ்செழியன் போக்கில் ஏற்பட்ட மாறுதல்களைக் கவனித்துக் கொண்டிருந்த ஹிப்பலாஸ் மட்டும், ஏதும் பேசாமல் மௌனமாக நின்றான்.
குமரன் சென்னிமீது தமது யானைக் கண்களைத் திருப்பிய பிரும்மானந்தர் கேட்டார்: “எது தகாத வார்த்தை ?”

“நீங்கள் அந்தப் பெண்ணையும் படைத்தலைவரையும் இணைத்துப் பேசுவது” என்றான் குமரன் சென்னி.

“உனக்குத் தகாத வார்த்தையாயிருக்கலாம் சென்னி. ஆனால், நாட்டுக்குத் தகாத வார்த்தையல்ல. அந்த யவனப் பெண்ணும் படைத்தலைவரைக் காதலிக்கிறாள். ஆகையால் அவருக்கும் தகாத வார்த்தையல்ல…” என்று சொல்லிக் கொண்டுபோன பிரும்மானந்தரை இடைமறித்த குமரன் சென்னி, “அது எப்படி அடிகளுக்குத் தெரியும்?” என்று கேட்டான், தான் அறையில் கண்ட காட்சியை மனத்திற்குள் எண்ணிச் சிரித்துக் கொண்டு ஆனால் வெளிக்கு மட்டும் வெறுப்பைக் காட்டி. “என் ஆசிரமத்தில் படைத்தலைவர் அவளை அழைத்துக் கொண்டு வந்த சமயத்தில் அவள் கண்களைக் கண்டேன். அவள் படைத்தலைவர் மீது நாட்டிய பார்வையைப் பார்த்தேன்” என்றார் பிரும்மானந்தர்.

“பெண்களின் கண்களிலிருந்தே உள்ளத்தை அறியும் வித்தை துறவறத்தில் இருக்கிறதோ?” என்று குமரன் சென்னி வினவினான்.

“எந்த அறத்திலும் மனோதத்துவம் முக்கியம் சென்னி. அதை அறியும் சக்தி துறவிகளுக்கு உண்டு. அந்தச் சக்தி உங்களைவிட எனக்கு அதிகமிருப்பது தற்சமயம் நாட்டுக்குப் பயன்படுகிறது” என்று கண்டித்துப் பேசிய பிரும்மானந்தர், “இப்படி வாருங்கள்; உட்கார்ந்து பேசுவோம்” என்று பக்கத்தி லிருந்த மஞ்சத்தில் உட்கார்ந்து கொண்டு, அவர்களையும் உட்காரச் சொல்லி, தமது திட்டத்தை விவரிக்கத் தொடங்கி, “படைத்தலைவரே! புகாரை யவனர்களுக்குச் சாசனம் செய்த பத்திரத்தை உமது மீதுள்ள ஆசையினால் தான் ராணி மறைத்துவிட்டாள். டைபீரியஸுக்கு மட்டும் அது முன்ன தாகத் தெரிந்திருந்தால் பறையறைவித்துப் புகாரைக் கைப்பற்றியிருப்பான். அப்படிச் செய்திருந்தால் ராணி புகாரை அடைந்திருப்பாள். ஆனால் உம்மை இழந்திருப்பாள். இரண்டையும் கைப்பற்றுவது அவள் திட்டம். அதில் ஒன்றைக் காப்பது நமது திட்டம். ஆகவே ராணியைக் கைவிட வேண்டாம் படைத்தலைவரே” என்றார்.

“அப்படியானால் பூவழகி…” என்று படைத்தலைவன் முணுமுணுத்தான்.

“அவளைப்பற்றிப் பிறகு கவனிப்போம். எப்பொழுது பூவழகியை விடுதலை செய்து இருங்கோவேள் அழைத்துச் சென்றிருக்கின்றானோ அப்பொழுது பூவழகியின் தந்தை மாரப்பவேளும் இருங்கோவேளுடன் இணைந்திருக்க வேண்டும்.”

“சதியிலா?”

“ஆம்.”

“இருக்காது! ஒருக்காலும் இருக்காது. அவர் நாணயந் தவறாதவர்.”

“பொறுத்துப் பார்ப்போம். தந்தை உறையூரிலில்லா விட்டால் பூவழகி எதற்காக உறையூருக்குப் போக வேண்டும்?”
என்று கேட்ட பிரும்மானந்தருக்குப் பதில் சொல்ல முடியாமல் திகைத்தான் படைத்தலைவன்.

பிரும்மானந்தர் அவனைச் சமாதானப்படுத்தத் தொடங்கி, “படைத்தலைவரே, சொந்த உணர்ச்சிகளை, பாசபந்தங்களை உதறவேண்டிய வேளை இது. நாடு அபாயமான நிலையிலிருக்கிறது. அதன் நன்மைக்குப் பூவழகி பலியாக வேண்டுமென்றால் அவளைப் பலியிட வேண்டியது தான். இப்பொழுது நாட்டுக்கு நலம் புரியக் கூடியவள் ராணி. அவளை வசப்படுத்த முயலவேண்டும். நாமெல்லாருமே அரசியல் சதுரங்கத்தின் காய்கள். விதி நகர்த்தும் வழியில் நகரவேண்டும். நீங்கள் நாளையே கருவூர் புறப்படவேண்டும்” என்று அறிவித்தார்.

“எதற்கு?” என்று கேட்டான் படைத்தலைவன்.

“இரும்பிடர்த்தலையாரைச் சந்திக்க” என்றார் அடிகள்.

“யார், திருமாவளவன் மாமனையா?”

“ஆம்.”

“எதற்காக?”

“அவர்தான் சமீப காலம்வரை உறையூரில் இருந்திருக் கிறார். அவருக்குத்தான் உண்மை அரசியல் நிலை தெரியும்.”

“கருவூரில்…?”
“மறைந்து வசிக்கிறார்.”

“நிச்சயமாகத் தெரியுமா உங்களுக்கு?”

“தெரியும்! அவர் இருக்குமிடமும் அறிவேன்.”

“எங்கிருக்கிறார்?”

“கருவூருக்கு வடதிசையிலிருக்கும் சமண மடத்தில்.”

“யார் தலைவர் அதற்கு?”

“எனக்கு வேண்டிய ஒருவர். அவரே எனக்குத் தகவல் அனுப்பினார். ஆகவே நீர் கருவூருக்குக் கிளம்பும். இரும்பிடர்த் தலையாருக்கு ஒரு ஓலை தருகிறேன். அதை அவரிடம் கொடும். அதில் என் திட்டம் பூரணமாக இருக்கும்” என்று கூறிய பிரும்மானந்தர் “உம்முடன் ராணியையும் அழைத்துச் செல்லும்” என்றார்.

“ராணி எதற்கு அடிகளே?” என்று கேட்டான் படைத் தலைவன்.

“காரணமில்லாமல் நான் எதையும் சொல்லவில்லை படைத்தலைவரே. நீர் ராணிக்குக் கொடுத்துள்ள வாக்குப்படி டைபீரியஸை உடனே விடுதலை செய்தாக வேண்டும். டைபீரியஸ் புகாரில் யவனர்களைத் திரட்டி ராணியை மீட்க முயலுமுன்பாக ராணி அவன் கைக்கு எட்டாத தூரத்தில் இருக்க வேண்டும். அவள் இஷ்டப்பட்டு உங்கள் ஒருவருடன் தான் வருவாள். அடுத்த சில மாதங்களில் சோழ மண்டலத்தின் கதியல்ல, தமிழ்நாட்டின் தலைவிதியே தீர்மானிக்கப் படும். அதை வகுப்பதில் ராணி ஒரு முக்கிய பாத்திரம். அவள் உமது கையிலிருந்து நழுவாமல் பார்த்துக்கொள்ளும்” என்று கூறிய பிரும்மானந்தர், காவல் வீரர்களைக் கூப்பிட்டு எழுது கருவிகள் கொண்டு வந்து, ஓலையொன்றை எழுதி முடித்து, முத்திரையும் வைத்தார். படைத்தலைவனிடம் அதை ஒப்படைத்த பிரும்மானந்தர், “படைத் தலைவரே! உம்மிடம் இப்பொழுது நான் ஒப்படைப்பது ஓலையல்ல, தமிழகத்தின் தலைவிதி. இதை திருமாவளவன் மாமனிடம் ஒப்படையும். இது எதிரிகள் கையில் விழுவதைவிட உமது உயிரை விடுவதே மேல். டைபீரியஸை விடுதலை செய்து அவன் இங்கிருந்து படகேறிய மறுவிநாடி நீரும் ராணியும் கருவூருக்குப் புறப்பட வேண்டும்” என்று கூறிய பிரும்மானந்தர், “குமரன் சென்னி! டைபீரியஸை விடுதலை செய்து, படகில் ஏற்றி வா. அவன் செல்வதை ராணியும் படைத் தலைவரும் பார்க்கட்டும். அதே சமயத்தில் இவர்கள் செல்ல இரு புரவிகளும் தயாராகட்டும்” என்று அவனுக்கு உத்தரவிட்டார்.

அடிகள் சொற்படியே அனைத்தும் நடந்தன. அவர் உத்தரவின்படி ராணியுடன் கருவூர் சமண மடத்தை மூன்றாவது நாளிரவு அடைந்த இளஞ்செழியனை சமணமடத் தலைவரே வாயிலில் நின்று வரவேற்றார். படைத் தலைவன் காலத்தை ஓட்டாமல் கேட்டான், “இரும்பிடர்த் தலையார் எங்கிருக்கிறார்?” என்று.

“உள் மண்டபத்தில் புத்தர் பிரான் திருஉருவத்தருகில் அமர்ந்திருக்கிறார்” என்று கூறிய சமணத் துறவி படைத் தலைவனையும் ராணியையும் உள்ளே அழைத்துச் சென்றார். ஆஜானுபாகுவான ஒரு மனிதன் புத்த பகவானுக்கு எதிரே மண்டியிட்டு வணங்கிக் கிடந்தான்.

“படைத் தலைவர் வந்திருக்கிறார்” என்றார் சமணத் துறவி பின்புறமிருந்தே.

தலையைத் திருப்பாமலே கையை நீட்டினான் அந்த மனிதன். ஓலையை அவனுடைய கையில் வைக்கும்படி சமணத் துறவி சைகை செய்யவே, கச்சையிலிருந்த பிரும்மா னந்தர் ஓலையை எடுத்து அவன் கரத்தில் வைத்தான் இளஞ் செழியன். அந்த மனிதனும் புத்த பகவானை வணங்கிய தோரணையிலே முத்திரை ஓலையைப் பிரித்துப் படித்து விட்டு மெல்லச் சிரித்தான். பிறகு எழுந்திருந்து இளஞ் செழியனை நோக்கித் திரும்பினான். இளஞ்செழியனின் ஈட்டி விழிகளுடன் இருங்கோவேளின் விஷம் சொட்டும் வஞ்சகக் கண்கள் ஒரு விநாடி கலந்ததன்றி அவன் முகத்திலிருந்த பெரிய மீசையும் இளஞ்செழியனை நோக்கி ஒருமுறை பயங்கரமாக அசைந்தது!

Previous articleYavana Rani Part 1 Ch17 | Yavana Rani Sandilyan | TamilNovel.in
Next articleYavana Rani Part 1 Ch19 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here