Home Sandilyan Yavana Rani Part 1 Ch19 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

Yavana Rani Part 1 Ch19 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

116
0
Yavana Rani Part 1 Ch19 Yavana Rani Sandilyan, Read Yavana Rani Online Free, Yavana Rani PDF, Download Yavana Rani novel, Yavana Rani book,read Yavana Rani free
Yavana Rani Part 1 Ch19 |Yavana Rani Sandilyan|TamilNovel.in

Yavana Rani Part 1 Ch19 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

யவன ராணி – சாண்டில்யன்

முதல் பாகம்

அத்தியாயம் : 19 சிரித்த முகம், தேனூறும் சொல்! விஷ நெஞ்சம்!

Yavana Rani Part 1 Ch19 |Yavana Rani Sandilyan|TamilNovel.in

இதயத்தில் கருணை மருந்துக்குக்கூட இல்லாத இருங்கோவேளின் கண்களை இளஞ்செழியனின் கண்கள் சந்தித்த அந்த விநாடியில் இளஞ்செழியன் மட்டுமல்ல, சமண விஹாரத்தின் அந்தப் பெரும் பிரார்த்தனைக்கூடமே மௌனத்திலும் நிசப்தத்திலும் ஆழ்ந்து விட்டது போல் தோன்றியது. இதயமற்ற இருங்கோவேள் மக்களை வாழ் விக்கவே பிறந்த கருணைக் கடலான புத்தர் பிரான் திருவடிகளுக்கெதிரில் வணங்குவதில் என்ன அர்த்தமிருக்க முடியும் என்று நினைத்துப் பார்த்த இளஞ்செழியனின் மனத்தில் அவனுக்கு வடமொழிப் பயிற்சி அளித்த ஆசிரியர் சொன்ன உவமை உள்ளத்திலே எழுந்து உலாவலாயிற்று. ‘அப்பனே! எந்தக் காரியமும் செய்பவனைப் பொறுத்திருக்கிறது. கெட்டவன் நல்லது செய்தாலும் முடிவு கெட்டதாகவே இருக்கும். உதாரணமாகப் புலியை எடுத்துக்கொள். மிகவும் துஷ்டமான மிருகம். ஏகாதசி உபவாசம் சிறந்தது என்று சாத்திரங்கள் கூறுகின்றன. ஆனால் புலி ஏகாதசியன்று பட்டினி விரதமிருந்தால் மறுநாட் காலை பாரணை செய்யப் பசுமாட்டை அடித்துத் தின்றுவிடும். துஷ்டனுடைய விரதத்தால் நல்லவர்களுக்கு ஆபத்தே விளையும். ஆகவே கெட்டவர்கள் நல்ல பணிகளில் ஈடுபடுவது ஒரு பேராபத்துக்குத் தான்!’ என்று ஆசிரியர் பன்னாட்களுக்கு முன்பு கூறிய சொற்கள் அந்தச் சமயத்தில் அவனது மனத்தில் எழுந்து பெரிதாக ஒலிக்கவே செய்தன. ‘இந்த வஞ்சகன் கருவூருக்கு எப்பொழுது வந்தான்? ஏன் வந்தான்? நான் வரும் விஷயம் இவனுக்கு எப்படித் தெரியும்? இரும்பிடர்த்தலையார் இங்கு இருக்கும் செய்தி இவனுக்குத் தெரிந்திருப்பதாகவே தோன்றுகிறது. அப்படியானால் அவர் என்ன ஆனார்?’ என்ற கேள்விகள் எழுந்து மனத்தில் தாண்டவமாடவே சம்பாஷணையை இருங்கோவேளே துவங்கட்டும் என்று அவன்மீது தன் கண்களை ஓட்டினான்.

நல்ல உயரத்துடனும் உயரத்தைவிடச் சற்று அதிகமான பருமனுடனும் விளங்கிய இருங்கோவேளின் மார்பில் சோழ மன்னர்கள் பட்டம் சூடிய நாள் முதல் இறுதி நாள் வரை அணியும் புலிப்பதக்க வைர ஆரம் புரண்டு கிடந்ததையும், ஓலையைப் பிடித்திருந்த அவன் விரல்கள் ஒன்றில் புலியின் தலை மட்டுமே செதுக்கப்பட்டுக் கற்கள் பதிக்கப்பட்ட முத்திரை மோதிரம் பளிச்சிட்டதையும் கண்ட இளஞ்செழியன், உண்மையில் சோழமண்டலம் இருங்கோவேளின் கைகளுக்கு மாறிவிட்டதென்பதையும், புகாரில் கிடைத்த செய்தி வெறும் புரட்டு அல்லவென்பதையும் புரிந்து கொண்டான். இருங்கோவேளின் பெரும் கண்களில் ஒன்று மட்டும் சற்று ஓரமாக ஒதுங்கிக் கிடந்ததால் கண்களின் பார்வையில் சற்று விகாரமும் வஞ்சகமும் துளிர்விட்டதன்றி, கண்களுக்கு மேல் நன்றாக வளையாமல், சற்று நேராகவே நீண்டு, பொட்டின் பக்கம் சென்ற அடர்த்தியான கரிய புருவங்களில் ஓரிரு மயிர்கள் அதிகமாகவே வளர்ந்து கண்ணை இடறத் தொங்கியதால் அவன் முகம் பார்ப்பதற்கு மிகவும் பயங்கரமாகவே இருந்தது. அந்தப் பயங்கரத்தை இன்னும் அதிகப்படுத்த மேலுதட்டில் எழுந்து கன்னத்தையும் கால்வாசி அடைத்துக்கொண்ட பெரும் மீசையும், தலையில் என்ன சீவினாலும் அடங்காத சுருண்டு பெருத்த மயிர்களும் பெரிதும் உதவின. இவற்றுள் நாற்பது வயது தாண்டிவிட்டதன் விளைவாக முதலில் தெரிந்த இரண்டு மூன்று வரிக்கோடு களும், அனாவசியமாகப் பருத்துக் கிடந்த கன்னங்களும் சோழ மண்டலத்தின் தற்காலிக மன்னனுடைய உணவில் மதுவும் ஊனும் மண்டிக் கிடந்தன என்பதைச் சந்தேகமறத் தெளிவுபடுத்தின. இத்தனையிலும் அவன் பெரு உதடுகளில் ஒரு உறுதியிருந்தது. அந்த உறுதியில் துஷ்டத்தனமும் கலந்திருந்ததால் அவன் உறுதி செல்லும் திக்கு மக்களுக்கோ மாநிலத்துக்கோ நற்பயன் தராத உறுதியென்பதும் நன்றாகப் புலனாயிற்று. இத்தனைக்கும் அவன் நீண்ட கரங்களில் இருந்த வடுக்கள் மட்டும் அவன் பெரும் வீரனென்பதற்கு அத்தாட்சி யாக விளங்கின.

இத்தகைய ஓர் அபாயமான மனிதனிடம் சிக்கிக் கொண்டு விட்டோமே என்ற நினைப்பினாலும், எவனை ஒழித்துக் கட்ட பிரும்மானந்தர் ஓலை எழுதிக் கொடுத்தாரோ அவனிடமே ஓலையைக் கொடுத்துவிட்டோமே என்ற மனச் சஞ்சலத்தாலும் சிறிது நேரம் மௌனமாகவே நின்ற இளஞ்செழியன், தன்னை இருங்கோவேள் கூர்ந்து நோக்கிய சில விநாடிகளுக்குள்ளாகவே என்ன செய்ய வேண்டும் என்பதைத் தீர்மானித்துக் கொண்டு சோழர் அரியாசனத்தில்

அமர்ந்துவிட்ட அந்த வஞ்சகனுக்கெதிரே சிரம் தாழ்த்தி மிகப் பணிவுடன் வணங்கினான். இளஞ்செழியனிடம் இத்தகைய பணிவைச் சற்றும் எதிர்பார்க்காத இருங்கோவேளின் மனத்தில் சந்தேகம் உதயமாகவே அவன் மறுபடியும் இளஞ்செழியன் கண்களை ஒரு முறை ஆராய முற்பட்டாலும், படைத்தலைவன் வணங்கி நின்றதால், அது முடியாமற் போகவே, மெல்ல சம்பாஷணையைப் புகுத்தி விஷயத்தைக் கக்க வைக்கலாமென்ற முடிவுடன் பேசத் தொடங்கி, “படைத் தலைவருக்கு இது எதிர்பாரா சந்திப்பு!” என்று, அரசாங்க ஆணையை வெளியிடுபவன் போல் நிதானமான குரலில் சொன்னான்.
இருங்கோவேளின் நிதானத்துக்குச் சிறிதும் குறைவில் லாத நிதானத்துடனேயே வெளிவந்தது படைத்தலைவன் பதிலும். “ஆம் மன்னவா! எதிர்பாராத சந்திப்புத்தான், ஆனால் மகிழ்ச்சியளிக்கும் சந்திப்புங்கூட” என்றான் படைத் தலைவன்.

“மன்னரா! யார் மன்னர்?” ஏதும் புரியாதவன்போல் கேட்டான் இருங்கோவேள்.

“விந்தையான கேள்விதான். ஆனால் இந்தக் கேள்விக்கு இடமில்லாமல் சோழ மண்டலத்துக்குத் தாங்கள் பேருதவி செய்துவிட்டதாகப் புகார் மக்கள் நினைக்கிறார்கள்” என்று பதில் சொன்னான் படைத்தலைவன், குரலில் எத்தகைய உணர்ச்சியும் காட்டாமல்.

படைத்தலைவன் தன்னை நோக்கி நகைக்கிறானா, உண்மையாகத்தான் பேசுகிறானா என்பதைப் புரிந்து கொள்ள முடியாமல் திணறிய இருங்கோவேள் மேற் கொண்டும் கேட்டான், “அப்படியா நினைக்கிறார்கள் பூம்புகாரின் மக்கள்?” என்று.

“ஆம் மன்னவா! மன்னர் இளஞ்சேட்சென்னி தீ விபத் தில் மாண்டுவிட்டதாகப் பேசிக் கொள்கிறார்கள்.”

“அப்படியானால் மன்னர் மகன் திருமாவளவன்?”

“எங்கோ மறைந்துவிட்டாராம்!”

“உண்மை.”
“மன்னர் இருக்கும்போதுதான் திருமாவளவன் சிறு பிள்ளைத்தனமாக இருந்தார். இறந்த பின்னும் பழையபடியே பொறுப்பில்லாமல் போகும் இடத்தையும் தெரிவிக்காமல் போய் விட்டது பற்றி மக்கள் கொதிப்படைந்திருக்கிறார்கள்.”

இந்தப் பதில் இருங்கோவேளுக்கு அதிகச் சந்தேகத்தை விளைவிக்கவே சற்று தூரத்தே நின்ற சமணத்துறவியை ஒருமுறை நோக்கினான். அந்தப் பார்வையின் பொருளைப் புரிந்துகொண்ட படைத்தலைவன், “நான் சொல்வதில் மன்னர் பிரானுக்கு நம்பிக்கையில்லைபோல் தோன்றுகிறது. அனுமதி கொடுத்தால் விளக்குகிறேன்” என்று மிகப் பணிவுடன் கூறினான்.

“சரி, சொல்” என்பதற்கு அறிகுறியாக அரச தோரணையில் இடது கையை இருங்கோவேள் ஆட்டவே பேச்சைத் தொடர்ந்த இளஞ்செழியன், “திருமாவளவனுக்கு இப்பொழுது வயது சுமார் இருபது இருக்கும்” என்று தமிழ்நாடு அறிந்த உண்மையைப் புதுமைபோல் சொன்னான்.

“ஆம்” என்பதற்கு அறிகுறியாகத் தலையை அசைத் தான் இருங்கோவேள்.

“மிகச் சிறு பிராயத்திலிருந்தே துடுக்கானவர்.”

“அது மக்கள் அறிந்தது.”

“மக்கள் அதை மட்டும் அறியவில்லை , பிரபு.”

“ஊம்…”
“பத்தாவது வயதிலேயே மன்னருக்குத் தெரியாமல் யவனர் கப்பலில் கொற்கைக்கு ஓடிப்போனவர்.”

“ஆமாம்.”

“மறுபடியும் அடிக்கடி புகாருக்கு ஓடிப் போய்விடுவதும் யவனர் குமாரர்களோடு கடலாடுவதும், குறுவாள் பயிற்சியில் ஈடுபடுவதும், நாள் கணக்கில் அரண்மனையில் தலை காட்டாமலிருப்பதும் ஊர் அறிந்தது.”

“சந்தேகமில்லை.”

“அப்பேர்ப்பட்டவர் இப்பொழுதும் ஓடிப்போய் விட்டதைக் கண்டு மக்கள் கொதித்திருக்கிறார்கள்.”

“திருமாவளவன் ஓடிப் போய்விட்டதாகப் பேச் சில்லையே. நான் சிறைப்படுத்தி வைத்திருப்பதாகவல்லவா வதந்தி?” என்று இடையிலே ஓர் அஸ்திரத்தை வீசி இருங்கோவேள் அந்தச் சொல்லம்புக்குப் படைத்தலைவனிடமிருந்து என்ன பதில் வருகிறதென்று பார்த்தான்.

படைத்தலைவன் சிறிதும் தயக்கமில்லாமலே பதில் சொன்னான். “புகாரில் அத்தகைய வதந்தி இல்லை; நேர் மாறான வதந்தியே இருக்கிறது. திருமாவளவன் வழக்கப்படி பொறுப்பில்லாமல் மறைந்துவிட்டதால் அவர் வரும்வரை அரசைக் காக்க அடுத்த உரிமைக்காரரான தாங்கள் தற்காலிக முடி சூடியிருப்பதாகப் பூம்புகார் வாசிகள் பேசிக் கொள்கிறார்கள். தவிர, தங்கள் தயாள குணத்தைக் கண்டு யவனர்களும் தங்கள் பக்கத்தில் சேர்ந்து விட்டார்கள்.”
இருங்கோவேளின் பயங்கர மீசை மீண்டும் ஒருமுறை அசைந்ததன்றி அவன் கண்களும் படைத் தலைவனை ஒரு முறை ஆராய்ந்தன. ஏதோ யோசித்துவிட்டுச் சட்டென்று திரும்பிக் கேட்டான், “புகார் வாசிகள் அனைவருமே நமது பக்கந்தான் என்று சொல்லும்” என்று.

“ஆம். பெரும்பாலோர் தங்கள் பக்கம்தான்.”

“அப்படியானால் நமக்குப் பெருவாரியான ஆதரவிருக் கிறது?”

“சந்தேகமில்லை.”

“அந்த ஆதரவுக்கு இதுதான் அத்தாட்சியா!” கடைசியாக வந்த இருங்கோவேளின் வார்த்தைகள் இடியென உதிர்ந்தன. “அந்த ஆதரவைக் காட்டத்தான் உமது குருநாதர் பிரும்மானந்தர் இந்த ஓலையை இரும்பிடர்த் தலையாருக்கு அனுப்பியிருக்கிறாரா? அந்த ஆதரவைக் காட்டத்தான் இதை எடுத்துக் கொண்டு இந்தச் சமண மடத்துக்கு வந்தீரா? இளஞ்சேட்சென்னி மறைந்த ஒரு மாதத்துக்கு முன்பிருந்தே பிரும்மானந்தரின் சீடர்கள் என்ற ஒற்றர்கள் உறையூரிலும் கருவூரிலும் உலாவி வருவதும் அந்த ஆதரவைக் காட்டத் தானா?” என்று ஒவ்வொரு வார்த்தையையும் அழுத்தி அழுத்திப் பேசினான் இருங்கோவேள்.

இந்தச் சொற்களால் சோழர் படை உபதலைவன் குழம்பிப் போவானென்றோ திகில் கொண்டு உளறிவிடுவானென்றோ இருங்கோவேள் எதிர்பார்த்திருந்ததால் அவன் ஏமாந்தே போனான். இளஞ்செழியன் சிறிதும் பதட்ட மில்லாமலே சொன்னான், “தங்களுக்கு ஆதரவைக் காட்டும் எண்ணம் பிரும்மானந்தருக்கு லவலேசமும் இல்லை. முடிந்தால் இளவரசரைக் கண்டுபிடித்து அரசில் இருத்தவே நினைக்கிறார்” என்று.

எதற்கும் அசையாத இருங்கோவேள் கூட இதைக் கேட்டதும் ஸ்தம்பித்துச் சிறிது நேரம் நின்றுவிட்டதன்றி, படைத் தலைவன் போக்கில் சிறிது நம்பிக்கையும் உண்டாகவே, “அப்படியானால் படைத் தலைவர்…” என்றான்.

“மன்னருக்கு அடிமை” என்றான் படைத்தலைவன் திட்டமாக.

“நம்ப முடியவில்லையே இளஞ்செழியா!” என்று படைத் தலைவனின் பெயரை மகிழ்ச்சியுடன் உச்சரித்து முதன் முதலாகப் பேசினான் இருங்கோவேள். அவன் முகமும் சிறிது மலர்ந்தது. “இளஞ்சேட்சென்னியின் ரத விழாக்களில் முதற்பரிசு பெறும் நீ, இளஞ்சேட்சென்னியிடம் அளவிலா பக்தி கொண்ட நீ, எப்படி என்னிடம் அன்பு கொள்ள முடியும்?”

படைத் தலைவன் மிகவும் பணிவுடனேயே பதில் சொன்னான்: “தவறு மன்னவா! தாங்கள் படைவீரர்களைச் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. வீரனுக்கு எந்தத் தனி மனிதனிடமும் பக்தி கிடையாது. அரச பீடத்திடம்தான் பக்தி. அதற்கே வீரன் ஊழியம் புரிகிறான். தாங்கள் இன்று சோழ மண்டலத்தில் அரச பீடத்தில் உட்கார்ந்திருக்கிறீர்கள். ஆகவே இந்த வாள் ஊழியம் புரியக்கூடியது தங்களுக்குத்தான். தவிர, தாங்கள் என்ன தவறு செய்து விட்டீர்கள்? மன்னரைக் கொலை செய்து விட்டீர்களா? விபத்துக்கு, தாங்கள் எப்படிப் பொறுப்பாளி? விபத்து யாருக்கும் ஏற்படக்கூடியதுதானே? நாளை தங்களுக்கே ஏற்படலாம். அதற்காக நாடு மன்னனில்லாமல் இருக்க முடியுமா? மன்னனில்லா விட்டால் மக்கள் நலம் எப்படிப் பாதுகாக்கப்படும்?”

படைத்தலைவன் பேசிய ஒவ்வொரு பேச்சையும் மனத்திற்குள்ளேயே எடை போட்ட இருங்கோவேள், இளஞ் செழியன் வார்த்தைகளில் விஷமமும் நிறைந்திருப்பதைக் கவனித்து, “அத்தகைய அரச பக்தியுள்ள நீர் இந்த ஓலையை எப்படி இரும்பிடர்த்தலையாருக்குக் கொண்டு வந்தீர்? நீர் வருவது அகஸ்மாத்தாக எனக்குத் தெரிந்திருக்காவிட்டால் இத்தனை நேரம் இந்தச் சதித்திட்ட ஓலை இரும்பிடர்த் தலையாரிடம் போய்ச் சேர்ந்திருக்குமல்லவா?” என்று வினவினான்.

இளஞ்செழியன் இருங்கோவேளை நன்றாக ஏறெடுத்துப் பார்த்து இளநகை கூட்டியதன்றி, “இங்குதான் மன்னர் சிறிது தமது ஆராய்ச்சித் திறனைச் செலுத்த வேண்டும்” என்றான்.

“ஆராய்ச்சித் திறனா?” ஏதும் புரியாமல் கேட்டான் இருங்கோவேள்.

“ஆம் மன்னவா? தாங்கள் புத்தர் பிரான் முன்பு வணங்கிக் கிடந்தீர்களல்லவா?”

“ஆமாம்.”

“தங்கள் கழுத்திலிருக்கும் நவரத்தின மாலைக்கு இரண்டு பதக்கங்கள் உண்டு.”

“ஆமாம்.”

“ஒன்று, முதுகுப் பக்கத்திலிருக்கிறது, அதிலும் புலிச் சின்னமிருக்கிறது.”

படைத் தலைவன் என்ன சொல்ல முயல்கிறானென் பதைப் புரிந்து கொண்ட இருங்கோவேள், “அந்தப் பதக்கத்தை முதலிலேயே பார்த்து விட்டதாகச் சொல்கிறீர்?” என்றான்.

“அரசர் ஆரத்துக்கு இரண்டு பதக்கம் உண்டு என்பது நாடறிந்த விஷயம். தாங்கள் அரச பீடத்தை ஏற்றதும் நாடறிந்த விஷயம். அப்படியிருக்க, தங்களைக் கண்டதும் இந்த ஓலையைத் தங்களிடம் நான் கொடுக்கவேண்டிய அவசிய மில்லை. தவிர, தாங்கள் இங்கு தனியாகவே இருக்கிறீர்கள். என்னிடம் வாளும் இருக்கிறது. நான் அரச பீடத்துக்குத் துரோகியாயிருந்தால், இரும்பிடர்த் தலையாருடனும் பிரும்மானந்தருடனும் சதியில் இறங்குவதாயிருந்தால் நடந்து கொண்டிருக்கக் கூடிய முறையே வேறு” என்று பக்குவமாக விளக்கினான் இளஞ்செழியன்.

உண்மையில் இளஞ்செழியன் ஆரம்பத்தில் அந்தப் புலிப் பதக்கத்தைப் பார்க்கவில்லையென்பதையும், பின்னால் தான் சமாளித்துக் கொண்டானென்பதையும் இருங்கோவேள் எப்படி உணருவான்? ஆகவே அந்த வஞ்சகன் உள்ளத்திலும் மெள்ள மெள்ள நம்பிக்கை உதயமாகவே, அவன் கேட்டான், “எனக்குப் பதில் இங்கு நீர் எதிர்பார்த்த இரும்பிடர்த் தலையார் இருந்திருந்தால் என்ன செய்திருப்பீர்?”
“அதற்கும் திட்டமில்லாமலா வருவேன்? அவரிடம் ஓலையைக் கொடுத்து பிரும்மானந்தர் அழைத்து வரச் சொன்னதாகக் கூறி, பூம்புகார் அழைத்துச் செல்லுவேன்.”

“அவர் வர மறுத்தால்?”

“அரசர் பெயரால் சிறை செய்வேன்.”

“அதற்கு உமக்கு அதிகாரம்?”

“இதோ’ என்று கூறிய இளஞ்செழியன், சற்றுப் பின்னடைந்து, அதுவரை தன் பின்னால் மறைவிலிருந்த ராணியின்மீது விளக்கின் வெளிச்சம் பூரணமாக விழும்படி செய்தான்.

புத்த பகவான் பீடத்திலிருந்த இரு குத்துவிளக்குகளின் பொன்னிறப் பிரகாசம் ராணியின் முகத்தில் நன்றாக விழவே அவள் நீலமணிக்கண்கள் நீலமும் தங்கமும் கலந்த கோமேதக விழிகளென ஒளிவிட்டன. இளஞ்செழியன் பார்வையில் தெரிந்த ஆணையைக் கவனித்தும் அவள் மன்னனுக்குச் சிரம் தாழ்த்தாமல் சாம்ராஜ்ய ராணியைப் போல் மிகக் கம்பீரமாகவே நின்றாள். தந்தச் சிலைபோல் நின்ற யவன ராணியைக் கண்ட இருங்கோவேள் பிரமிப்படைந்து அவள் மீது வைத்த கண்ணை வாங்காமல் பார்த்துக் கொண்டு நின்றான். அந்த அற்புதக் கிரேக்கச் சிலை திடீரெனக் கண் முன் எழுந்ததால் திகைத்துப் போன இருங்கோவேளின் உதடுகளிலிருந்து சொற்கள் பிரமிப்புத் தட்டியே எழுந்தன. “யார் இவள்?”

புகாரின் சம்பவங்கள் அத்தனை துரிதமாகக் கருவூரை வந்தடைய முடியாதென்பதை நன்றாக அறிந்திருந்த இளஞ் செழியன் சற்றும் தடுமாற்றமில்லாமல் பதில் சொன்னான், “புகாரின் ராணி” என்று.

“புகாரின் ராணியா…?” வியப்புடன் கேட்டான் இருங்கோவேள்.

“ஆம், மன்னவா!”

“அப்படியொரு ராணி இருப்பதாக எனக்குத் தெரியாதே.”

“தெரியக் காரணமில்லை. இவள் புகாரில் புரண்டு ஒரு வாரமே ஆகிறது!”

“புகாரில் புரண்டா?”

“ஆம் மன்னவா! இவள் யவன அரசகுமாரி. தனது கடற் படைத் தலைவன் டைபீரியஸுடன் தமிழ்நாடு வந்தாள். இடையே கடற்கொள்ளைக்காரர்களால் மரக்கலம் தீக்கிரை யாகவே, உடைந்த மரப்பலகையைப் பிடித்துத் தப்பி புகார் கடற்கரையில் புரண்டு கிடந்தாள்.”

இந்த விளக்கத்தைக் கேட்ட இருங்கோவேளின் விழி களில் ஆச்சரியம் மேலும் மேலும் விரிந்தது. சந்தர்ப்பத்தை விடாமல் ராணியின் கையிலிருந்த அன்னப் பறவை ஆபரணத்தைச் சுட்டிக் காட்டிய இளஞ்செழியன், “இது யவன அரச குடும்பச் சின்னம். நம்மைவிட நம்மூர்த் துறவிகளுக்கு இதைப்பற்றித் தெளிவாகத் தெரியும்” என்று கூறி சமணமடத் தலைவரை நோக்கி, “சுவாமி! இதைப் பாருங்கள்” என்றான்.

அவன் அதைப்பற்றிப் பிரஸ்தாபிக்கு முன்பாக அதைக் கண்டுவிட்ட துறவி, “மன்னவா, சந்தேகம் வேண்டாம். அது யவன அரச குடும்பச் சின்னம்தான்” என்று வலியுறுத்தினார்.

அந்த வலியுறுத்தலைத் தொடர்ந்து இளஞ்செழியனும், “தாங்கள் அனுப்பிய சாசனப்படி இவள் புகாரின் ராணி, யவனர்கள் தலைவி” என்றான்.

“ஓலையை நான் கோட்டைத் தலைவனுக்கல்லவா அனுப்பினேன்?” என்று வினவினான் இருங்கோவேள்.
“ஆம் மன்னவா! ஆனால் யவன அரச பரம்பரையினர் முன்பாக வேறு யாரும் தலைமைப் பதவி ஏற்க முடியாது. இது யவனர் எடுத்துக்கொள்ளும் பிரமாணம்” என்றான் இளஞ்செழியன்.

இருங்கோவேளின் கண்கள் ராணியின் அழகை மீண்டும் பருகின. அந்த மயக்கத்தினாலும் இளஞ்செழியன் கோவையாகச் சொன்ன கதையாலும் அனைத்தையும் நம்பிய வஞ்சகனான இருங்கோவேள், “படைத்தலைவரே! இத்தகைய அழகிய சான்றுடன் வந்திருக்கும் நீர் சொல்லும் அனைத்தை யும் நான் எப்படி நம்பாமலிருக்க முடியும்! உம்மை நம்புகிறேன். உம்மிடம் நம்பிக்கையில்லாததாலும், உமது வாணகரைத் தளத்தினிடமுள்ள பயத்தாலுமே யவனர்களுக்குப் புகாரை அளித்தேன். அதற்கு இத்தகைய அழகி தலைவியாக வருவாளென்பது எனக்குத் தெரியாது. பூவழகியை விடுவித்துக் கொண்டுவர நான் அனுப்பிய வீரர்கள் சொன்னார்கள், நீர் அவளை விடுவிக்காமல் ஒரு யவனப் பெண்ணைத் தூக்கிச் சென்றுவிட்டதாக. முதலில் நம்பவில்லை. இப்பொழுது நம்புகிறேன். இந்தத் தந்தச் சிலைக்கு முன் பூவழகி எம்மாத்திரம்?” என்று கூறிவிட்டு “படைத் தலைவரே! இன்று இந்த மடத்திலேயே தங்கும். நாளை நாம் உறையூருக்குப் பயணமாவோம்” என்று சொல்லிக் கொண்டு மடத்திலிருந்து கிளம்ப முற்பட்டான். போகு முன்பு சமணத் துறவியை நோக்கி “அடிகளே! சோழ மண்டலத்தின் பிரதான படைத்தலைவர் தங்க, மடத்தில் சரியான வசதிகள் செய்து கொடும். அதோ அந்த அறையில் மறைந்திருக்கும் வீரர்களை அழையும். அவர்கள் இனி மறைந்திருக்க அவசியமில்லை. படைத்தலைவருக்குப் பணிபுரிய உதவுவார்கள்” என்று இருங்கோவேள் உத்தரவிட்டதும் பக்கத்து அறையிலிருந்து வாளேந்திய வீரர் பலர் பிரார்த்தனை மண்டபத்தில் நுழைந்தனர்.

“இவர் நமது படைத்தலைவர். ஜாக்கிரதையாகக் கவனித்துக் கொள்ளுங்கள்” என்று அவர்களுக்கும் ஆணை யிட்டு, “படைத்தலைவரே! நீர் இங்கு தங்கலாம். ஆனால் இந்த ராணி வேண்டுமானால் என்னுடன் வரட்டும். அரச மாளிகையில் இருக்கவேண்டியவள்…” என்று இளஞ்செழியனிடம் தன் எண்ணத்தைக் குறிப்பால் உணர்த்தினான்.

“மிக்க நன்றி மன்னவா! ராணி என்னுடனேயே இருப்பவள். என்னால்தான் காப்பாற்றப்பட்டவள். இனியும் காப்பாற்றப்படுவாள்” என்று வார்த்தைகளைச் சற்று வலுவாகக் கூறவே, இருங்கோவேள் ராணியைப் பார்த்து, காமமும் வஞ்சகமும் கலந்த சிரிப்பை உதிர்த்துவிட்டு வெளியே நடந்தான்.

இருங்கோவேளின் உத்தரவுப்படி ராணிக்கும் இளஞ் செழியனுக்கும் தனியறை ஒழித்து விடப்பட்டு நல்ல பஞ்சணைகளும் அளிக்கப்பட்டன. நீராட்டத்தை முடித்துக் கொண்டு உணவருந்தியதும் தனி அறையில் விடப்பட்ட ராணியும் இளஞ்செழியனும் ஒருவரையொருவர் மௌன மாகவே பார்த்துக்கொண்டனர். சிறிது நேரம் கழித்து ராணி கதவுக்கு வெளியே எட்டிப் பார்த்தாள். பிறகு சாளரத்தின் மூலம் சமண விஹாரத்தின் நந்தவனத்தை எட்டிப் பார்த்தாள். கடைசியாக இளஞ்செழியன் அருகில் வந்து, *சுற்றிலும் காவலிருக்கிறது” என்றாள்.

“தெரியும்” என்றான் இளஞ்செழியன்.

“உங்களை முழுதும் அவன் நம்பவில்லை.”

“அதுவும் தெரியும்.”

“வஞ்சகன்.”

“சிரித்த முகம், தேனூறும் சொல், விஷ நெஞ்சம்.”

“மூன்று குணங்கள்.”

“அயோக்கியனுக்கு அடையாளம். எங்கள் ஆசிரியர் சொல்லுவார்.”

“இது…”

“வடமொழி வாசகம், இங்கு மொழிகள் பல உண்டு. சாதிகள் பல உண்டு. எங்கள் நாட்டில் வண்ணங்கள் பல உண்டு ராணி. இந்த நாடு பல ரத்தினங்கள் கொண்ட பேராபரணம்.”

ராணி அவனைப் பெருமையுடன் பார்த்தாள். பிறகு கேட்டாள், “இனி என்ன செய்வதாக உத்தேசம்?” என்று.

“நள்ளிரவு வரை பொறு, சொல்லுகிறேன்” என்றான் படைத்தலைவன்.

அவன் பொறுக்கச் சொன்ன நள்ளிரவும் வந்தது. புத்த விஹாரத்தில் நிசப்தம் நிறைந்து கிடந்தது. இளஞ்செழியன் ஒரு மஞ்சத்திலும், ராணி ஒரு மஞ்சத்திலும் படுத்துக் கிடந்தார்கள். இருவரும் பற்பல யோசனைகளால் நித்திரையின்றியே கிடந்தார்கள். படைத்தலைவன் எப்பொழுது திட்டத்தை விவரிப்பான் என்று ராணி ஏங்கிக் கிடந்த சமயத்தில் சாளரத் தருகே ‘தட்’ என்ற சத்தம் மெள்ளக் கேட்டது. அந்தச் சத்தம் சற்று நேரத்துக்குப் பின்பு மீண்டும் இருமுறை கேட்டது. அடுத்த வினாடி ஒரு கை மட்டும் கீழேயிருந்து எழுந்து சாளரத்தைத் தாவிப் பிடித்தது.

Previous articleYavana Rani Part 1 Ch18 | Yavana Rani Sandilyan | TamilNovel.in
Next articleYavana Rani Part 1 Ch20 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here