Home Sandilyan Yavana Rani Part 1 Ch20 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

Yavana Rani Part 1 Ch20 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

73
0
Yavana Rani Part 1 Ch20 Yavana Rani Sandilyan, Read Yavana Rani Online Free, Yavana Rani PDF, Download Yavana Rani novel, Yavana Rani book,read Yavana Rani free
Yavana Rani Part 1 Ch20 |Yavana Rani Sandilyan|TamilNovel.in

Yavana Rani Part 1 Ch20 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

யவன ராணி – சாண்டில்யன்

முதல் பாகம்

அத்தியாயம் : 20 கவசத்தில் ஒரு பிளவு

Yavana Rani Part 1 Ch20 |Yavana Rani Sandilyan|TamilNovel.in

சமண விஹாரத்தின் தோட்டத்தை நோக்கித் திறந்து கிடந்த சாளரத்தருகே ‘தட்தட்’ என்ற ஓசை கேட்டதுமே எச்சரிக்கையடைந்து மூடிக்கொண்டு அரைப் பார்வையைச் சாளரத்துக்காக ஓடவிட்ட யவன ராணி, பலமான கையொன்று சாளரத்தின் அடிக்கட்டையைத் தாவிப் பிடிக்கவே அத்தனை காவலையும் கடந்து நள்ளிரவில் கள்ளத்தனமாக உள்ளே நுழைய முயலும் அந்த மனிதன் யாரென்பதை உற்றுக் கவனிக்கலானாள். ஆனால் நீண்ட நேரம் மட்டும் சாளரக்கட்டையைத் தாவிப் பிடித்த கை அப்படியே நின்று விட்டதையும், யாரும் ஏறி உள்ளே வராமலிருப்பதையும் கண்ட யவன ராணி, அதன் காரணம் எதுவாயிருக்க முடியும் என்பதை அறியாத்வளாய், தன் விழிகளைச் சற்று அகல விரித்ததன்றி, தலையையும் திருப்பி அடுத்த மஞ்சத்தில் படுத்துக்கிடந்த இளஞ்செழியனைப் பார்த்தாள். இளஞ்செழியன் மஞ்சத்தில் சிறிதும் அசையாமல் படுத்துக் கிடந்தான். அவன் கண்கள் சற்றே மூடி மந்தப்பட்டுக் கிடந்ததையும் முகத்தில் சாதாரணமாகத் தாண்டவமாடும் ஒளியும் சற்றே மறைந்திருப்பதையும் கவனித்த யவன ராணி, படைத் தலைவன் உணர்ச்சிகள் பெரிதும் விழித்துக்கொண்டிருப்பதை அறிந்தாள். பூம்புகாரிலிருந்த அவனுடைய மாளிகையில் யவன வீரர்கள் அவனைப் பிடிக்க வந்த சமயத்தில் இம்மாதிரியே அவன் பார்வையும் முகமும் மந்தப்பட்டுக் கிடந்ததையும், அதையடுத்து வெகுவேகமாக நிகழ்ச்சிகள் ஏற்பட்டதையும் எண்ணிப் பார்த்த யவன ராணி, அப்போது ஏற்படும் ஆபத்து எதுவானாலும் படைத்தலைவன் சமாளித்துக் கொள்ளத் தயாராகிவிட்டானென்பதை நினைத்து அமைதிக்கு அறிகுறியாகப் பெருமூச்சு விட்டாள்.

இளஞ்செழியன் மட்டும் மூச்சுப் பேச்சில்லாமலும் உடலைச் சிறிதுகூட அசையாமலும் படுத்தது படுத்தபடியே கிடந்து சாளரத்தை உற்று நோக்கிக் கொண்டிருந்தான். அந்த நள்ளிரவில் உள்ளே வர முயலுபவன் யாராயிருந்தாலும் பாதி உடலைச் சாளரத்துக்கு வெளியே காட்டிய பின்புதான் உள்ளே குதிக்க முடியுமென்பதையும், அப்படிப் பாதி உடல் தெரிவதற்கும் உள்ளே குதிப்பதற்கும் இருக்கும் இடைவேளை யில் சில வினாடிகளுக்குள்ளாகவே வருபவனை மடக்கிவிட முடியுமென்பதையும் திட்டமாகப் புரிந்து கொண்ட இளஞ் செழியன் எதையும் நிர்வகிக்கத் தயாராகவே இருந்தான். ஆனால் சாளரத்தின் கட்டையைத் தாவிப் பிடித்த மனிதன் இத்தனை ஏற்பாடுகளுக்கும் சிறிதும் அவசியமில்லாமல் செய்துவிட்டானாகையால் அந்த மனிதனுடைய தலை தெரிந்ததுமே யவனராணி மட்டுமன்றி இளஞ்செழியனும் ஒரு விநாடி ஆச்சர்யத்தில் ஆழ்ந்து போனான்.

சாளரத்தைப் பிடித்திருந்த கை மெல்ல அசைந்து இன் னும் அதிகக் கெட்டியாகக் கட்டையைப் பிடித்துக் கொண்டது. அதற்குத் துணையாக இன்னொரு கையும் சாளரத்தைப் பற்றியதும் மெள்ள மெள்ளச் சாளரத்தில் சமண விஹாரத் தலைவரின் வழுக்கைத் தலை மேலே கிளம்பியது. சமண அடிகள் மெள்ளச் சாளரத்தைப் பற்றிப் பெருமூச்சு விட்டுக் கொண்டு உடலை மேலே கிளப்பி ஒரு வினாடி சாளரத்தின் கட்டையில் மாரை வைத்துக் கழைக்கூத்தாடி வித்தை காட்டுவதுபோல் உடலை வளைத்து அதன்மேல் தவழ்ந்து உள்ளே இறங்கினார். உள்ளே இறங்கியவர் உடனே மஞ்சங் களுக்கு அருகில் வராமல் மீண்டும் வெளியே எட்டிப் பார்த்துத் தம்மை ஏதோ சமாதானப்படுத்திக் கொள்வது போல் தலையை ஆட்டிக்கொண்டு படைத்தலைவன் கட்டிலை நோக்கி நடந்து வந்தார். அவர் கட்டிலை அணுகு முன்பே படைத் தலைவனும் யவன ராணியும் சட்டென்று எழுந்து உட்கார்ந்ததைக் கண்டு பிரமித்த சமண அடிகள், “என்ன! நள்ளிரவாகியும் நீங்கள் தூங்கவில்லையா?” என்று வினவினார்.

“உறக்கத்துக்கு வேண்டிய சாதனம் இங்கு என்ன இருக் கிறது அடிகளே?” என்று வினவினான் இளஞ்செழியன்.

“ஏன், இந்த மஞ்சங்களுக்கென்ன?” என்று வினவினார் அடிகள்.

“மஞ்சங்களில் ஒரு குறைவுமில்லை ” என்று ஒப்புக் கொண்டான் படைத்தலைவன்.

“பஞ்சணைகள்?”

“துறவிகளின் மடங்களில் இருக்கத் தகுந்தவைதானா என்பதுதான் சந்தேகம். அரசர்கள் பள்ளியறையில் இருக்க வேண்டியவை.”

“பின்னர் என்னதான் தேவை உங்களுக்கு?”

“உறக்கத்துக்கு மஞ்சமும் மெல்லணையும் மட்டும் போதாது அடிகளே, மனத்தில் நிம்மதி வேண்டும்.”

“ஏன் நிம்மதியிழப்பதற்கு இப்பொழுது என்ன வந்து விட்டது?” என்று அடிகள் வினவினார் ஆச்சரியத்துடன்.

இளஞ்செழியன் ஒரு வினாடி அவரை வேடிக்கையாகப் பார்த்துவிட்டு இதழ்களில் புன்முறுவலையும் படரவிட்டுக் கூறினான், “நிம்மதி இழப்பதற்கு ஏதும் ஏற்படவில்லை அடிகளே. இரும்பிடர்த்தலையாருக்குப் பதில் இருங்கோவேள் இங்கிருந்ததே மனத்திற்குப் பரிபூரண நிம்மதியை அளிக்க வல்லது” என்று.

இகழ்ச்சி ஒலியுடன் வெளிவந்த அந்தச் சொற்களைக் கவனித்த அடிகள், “ஆம் ஆம். அதில் கவலை ஏற்படத் தங்களுக்குக் காரணமிருக்கிறது” என்றார்.

“இந்த அல்ப விஷயத்தைத் தாங்கள் ஒப்புக் கொண்டதே பெரிய விசேஷம்” என்று இளஞ்செழியன் பதில் கூறிய பொழுது அவன் குரலில் இகழ்ச்சி முன்னைவிடப் பலமாக ஒலித்தது.

அவன் குரல் தொனித்த வகையையும் அதைத் தொடர்ந்து உள்ளே எழுந்துகொண்டிருந்த கொதிப்பையும் நன்றாக உணர்ந்துகொண்டாலும், சாதாரணமாகவே பேசத் தொடங்கிய அடிகள், “படைத்தலைவரே! தாங்கள் கவலைப்படக் காரணமிருக்கிறது. ஏன், கோபப்படக்கூடக் காரணமிருக்கிறது” என்று சொல்ல முற்பட்டதை இடையே புகுந்து வெட்டிய இளஞ்செழியன், “சந்தேகப்படவும் காரணமிருக்கிறது அடிகளே” என்றான்.

“உண்மை படைத்தலைவரே! ஆனால் கவலை, கோபம், சந்தேகம் மூன்றும் உடலை, வாட்டும் உணர்ச்சிகள். அவற்றை
அறுக்கவேண்டியது மனிதக் கடமை” என்றார் அடிகள் சிரித்துக் கொண்டே.

“இங்கு நான் துறவறம் பூண வந்திருப்பதாக அடிகளுக்கு நினைப்போ?” என்று வினவினான் இளஞ்செழியன் விஷமமாக.

“அப்படி நினைக்கக் காரணமில்லை” என்று கூறிய அடிகள் யவனராணியை நோக்கிக் கண்களைச் செலுத்தினார்.

அந்தப் பார்வையாலும் சமண அடிகள் விஷமப் புன் முறுவல் கோட்டியதாலும் சிறிது சங்கடத்துக்குள்ளான இளஞ்செழியன், “நிலைமையை நீங்கள் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை அடிகளே. எனக்கும் ராணிக்கும் எந்தவிதத் தொடர்பும் கிடையாது” என்றான்.

“இல்லாதிருந்தால் நல்லதுதான்.”

“நான் சொல்வதை நீங்கள் நம்பவில்லை போலிருக் கிறது.”

“நான் நம்பினால் என்ன, நம்பாவிட்டால் என்ன?”

“வேறு யார் நம்பவேண்டும்?”

“இருங்கோவேள் நம்ப வேண்டும்.”

“இருங்கோவேளுக்கும் ராணிக்கும் என்ன சம்பந்தம்?”
“இதுவரை எந்தச் சம்பந்தமுமில்லை. இனி எப்படி இருக்குமோ தெரியாது. இருங்கோவேள் சென்றபோது அந்தப் பெண்ணை எப்படிப் பார்த்தான் என்பதைக் கவனித்தீர்களா?”

“கவனித்தேன்.”

“காமம் நிறைந்த பார்வை.”

“பார்வையிலுள்ள இந்தப் பாகுபாடுகள் அடிகளுக்கு நன்றாகத் தெரியும் போலிருக்கிறது.”

“மனித மனத்திலுள்ள விகாரங்களைத் துறவிகள் நன்றாக அறிவார்கள். அப்படி நான் அறிந்திருப்பதும் ஒரு வகையில் உங்களுக்கு உதவும். நல்லவேளை, ராணியைக் கண்டு இருங்கோவேள் மயங்கியிருக்கிறான்.”

“அது நல்லவேளை யென்பது அடிகள் எண்ணமோ?”

படைத்தலைவன் குரலில் மெள்ள மெள்ளத் துளிர் விட்டுக்கொண்டிருந்த கோபத்தை அடிகள் நன்றாக அறிந்து விட்டாராகையால் மறைமுகப் பேச்சைத் தொடர்வதை மாற்றி, கவலை பூரணமாகத் தொனித்த குரலில், “படைத் தலைவரே! நீங்கள் இப்பொழுதிருக்கும் நிலையை அறிவீர்கள் என்று நினைக்கிறேன்” என்று கேட்டார்.

“நன்றாக அறிகிறேன் அடிகளே!” என்றான் இளஞ் செழியன்.
“இரும்பிடர்த்தலையாருக்குக் கொடுக்க வேண்டிய ஓலையை அவருடைய பரம விரோதியான இருங்கோவேளிடம் கொடுத்திருக்கிறீர்” என்று மீண்டும் கூறினார் அடிகள்.

“அப்படிக் கொடுக்க ஏற்பாடுகள் செய்ததற்கு அடி களுக்குத் தமிழ்நாடு கடமைப்பட்டிருக்கிறது.”

“ஏற்பாடுகள் செய்தது நானல்ல படைத்தலைவரே.”

“உமது சீடர்களாக்கும்?”

“நிலைமையைத் தவறாகப் புரிந்துகொண்டிருக்கிறீர். நீர் இங்கு வர இரண்டு நாழிகைகளுக்கு முன்புதான் இருங்கோவேள் இந்த மடத்துக்குத் தன் வீரர்களுடன் வந்து சோதனையிட்டான்.”

“சோதனை எதற்கு?”

“இரும்பிடர்த்தலையார் இங்கு ஒளிந்திருப்பதாக யாரோ அவனுக்குத் தெரிவித்திருக்கிறார்கள்.”

“அப்படியா?”

“ஆமாம். ஆகையால் அவரைச் சிறை செய்ய வந்தான். அவர் இல்லையென்று தெரிந்ததும் போய்விடுவானென்று நினைத்தேன். போகவில்லை. வீரர்களை ஒரு அறையில் காவலிருக்கச் சொல்லி நீர் வந்ததும் உள்ளே அழைத்து வரச் சொல்லி எனக்கு ஆணையிட்டான்.”

“அவன் ஆணையை நீர் நிறைவேற்ற வேண்டிய காரணம்?”

“என்றாவது ஒருநாள் கூட்டிலிருந்து விடுதலையடைய வேண்டிய இந்தப் பாழும் உயிரின் மேல் உள்ள பாசத்தால தான்.”

“உம்மைக் கொல்வதாக மிரட்டினானா?”

“மிரட்ட வேண்டிய அவசியமில்லை படைத்தலைவரே. அவன் பார்வையில், சிரிப்பில், தோற்றத்தில் அத்தனையிலும் கொலைக்குறி தாண்டவமாடுகிறது. நீர் இங்கு வரப்போகும் விஷயம் அவனுக்கு எப்படியோ தெரிந்திருக்கிறது. நீர் ஏதாவது செய்தி கொண்டுவருவீர் என்பதையும் அறிந்திருந் தான்.”

“இதெல்லாம் உமக்கு முன்பே தெரிந்திருந்தும் வாசலி லேயே எனக்குச் சிறிய சைகையாவது செய்திருக்கலாமே?”

“செய்திருக்கலாம். ஆனால் இப்பொழுது உம்மிடம் உட்கார்ந்து பேசிக்கொண்டிருக்க முடியாது. என் தலைக்கு நேர் மேல் மாடியில் இருங்கோவேளின் வீரன் ஒருவன் குறுவாளுடன் நிறுத்தப்பட்டிருந்தான்.”

நிலைமையைத் தெளிவாகப் புரிந்து கொண்டதற்கு அடையாளமாகப் படைத்தலைவன் ஒருமுறை தலையை அசைத்தான். அவன், தாமிருந்த அபாயமான நிலையைப் புரிந்து கொண்டதால் சற்றே மகிழ்ச்சியடைந்த சமண அடிகள், அடுத்தபடி எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்பதை விளக்கலானார்.

“படைத்தலைவரே! இளஞ்சேட் சென்னியைத் தீர்த்துக் இத்தனை சீக்கிரத்தில் கருவூருக்கு வருவானென்பதை நான் அறிய நியாயமே இல்லை. சேரனும் பாண்டியனும் கண் காணிக்காமல் இருங்கோவேள் சோழ சிம்மாசனத்தை அடைந்திருக்க முடியாதென்பது அனைவருக்கும் தெரியுமானாலும், வெளிப்படையாக இரு மன்னர்களும் இவனுக்கு ஆதரவை அளிக்கத் துணியமாட்டார்களென்றும், சோழ அரச, பீடம் இருங்கோவேளுக்கு உறுதிப்படும் வரையில் அவன் கருவூரில் தலைகாட்ட முடியாதென்றுந்தான் நினைத் தோம். ஆகவே, இருங்கோவேளை இங்கு சற்றும் எதிர் பார்க்காத நான், இரும்பிடர்த்தலையார் இந்த ஊரில் தங்க அனுமதித்தேன். ஆனால், அவர் இங்கு வந்திருப்பது இருங்கோவேளுக்கு எப்படியோ தெரிந்திருக்கிறது. ஆகவே, அவரைத் தொடர்ந்து ரகசியமாக இங்கு வந்திருக்கிறான். அவன் கருவூரிலிருப்பது யாருக்குமே தெரியாது. நேற்று மடத்தைச் சோதனை செய்ய வந்த பின்புதான் நானே அறிந்தேன். இருங்கோவேளின் ஒற்றர்கள் எங்கும் நடமாடுகிறார்கள். அவன் பக்க பலமும் அதிகரித்து வருகிறது. தமிழகத்தின் ஓரிரண்டு வேளிர்களைத் தவிர மற்ற எல்லா வேளிர்குலச் சிற்றரசரும், அவனுடன் இணைந்து விட்டார்கள். வேளிர் குல ஆட்சியைச் சோழ மண்டலத்தில் நிரந்தரமாக நிறுவிவிட்டால் சோழ மன்னர்களின் சூரியவமிசம் அற்றுவிடும் என்று கனவு காண்கிறார்கள் வேளிர்கள். இந்தக் கனவைத் தூண்டி விட்டவன் இருங்கோவேள். அவனுக்குத் துணை நின்றவர்கள் வேளிர்கள் மட்டுமல்ல, சோழ மண்டலத்தின் கீர்த்தியைக் கண்டு பொறாமை கொண்டுள்ள சேரனும், பாண்டியனும் கூட இந்தத் தருணத்தைப் பயன்படுத்திக்கொள்ளப் பார்க்கிறார்கள்” என்று சொல்லிக் கொண்டு போன அடிகள் பேச்சைச் சற்று நிறுத்திப் படைத் தலைவனைப் பார்த்தார்.
“புரிகிறது அடிகளே! மேலே சொல்லுங்கள்” என்றான் படைத்தலைவன்.

மேலும் சொன்னார் அடிகள்: “இந்த அபாய நிலை யிலிருந்து சோழ நாட்டைக் காக்கக்கூடியவர்கள் இருவர் என்று நேற்று வரையிலும் நினைத்தேன்.”

இளஞ்செழியன் வியப்புடன் தன் விழிகளை அவர்மீது நாட்டினான். அவன் விழிகளில் விரிந்த விழிப்பையும் விழிப்புடன் எழுந்த கேள்விக் குறியையும் கண்ட அடிகள் விளக் கினார்: “நேற்றுவரை நீரும் இரும்பிடர்த் தலையாருமே சோழ மண்டலத்தைக் காக்க முடியுமென்று நினைத்தேன் படைத் தலைவரே! மூன்றாவது ஒருவரும் உதவ முடியுமென்பதை இன்று புரிந்து கொண்டேன்.”

“யாரது?” என்று ஆச்சரியத்துடன் கேட்டான் இளஞ் செழியன்.

“இதோ இருக்கும் இந்த யவனப்பெண்” என்று சுட்டிக் காட்டிய அடிகள், அவள் அழகிய முகத்தையும் உடலையும் மீண்டும் ஒருமுறை ஆராய்ந்தார். அவர் அப்படித் தன்னைப் பார்ப்பதைக் கண்ட யவனராணி சிரித்ததன்றி அதுவரையிருந்த மௌனத்தைக் கலைத்து, “தமிழ்நாட்டுத் துறவிகளை நம்ப முடியாது படைத்தலைவரே. துறவறம் இவர்களுக்கு ஒரு போர்வை போலிருக்கிறது. அங்கு பிரும்மானந்தர், இங்கு இந்த அடிகள்…” என்று கூறவே அப்படியே திகைத்துப்போய் நின்று விட்ட சமண அடிகள், “படைத் தலைவரே! இவளென்ன தமிழில் பேசுகிறாளே!” என்று குமுறினார்.

“தமிழ் தெரியும்; பேசுகிறாள்” என்றான் இளஞ்செழியன்.

“ஐயோ! அதை ஏன் முன்பாகச் சொல்லவில்லை?”

“தமிழை அறிவது என்ன அவ்வளவு கெடுதலா?”

“இல்லை படைத்தலைவரே! இவளுக்குத் தமிழ் தெரியு மென்பதை அறிந்திருந்தால் நான் அரசாங்க விஷயங்களைப் பேசியே இருக்கமாட்டேனே!” என்றார் அடிகள்.

“அதனால் பாதகமில்லை அடிகளே! இவள் முன்பாக நீர் எதையும் பேசலாம்” என்றான் படைத்தலைவன்.

படைத் தலைவன் இப்படிக் கூறிய பின்பும் தயங்கிய அடிகளை நோக்கிய யவன ராணி, “படைத்தலைவர் பேச்சிலும் உங்களுக்கு நம்பிக்கையில்லையா அடிகளே?” என்று கேட்டாள்.

“இருக்கிறது…” என்று இழுத்தார் அடிகள்.

“அப்படியானால் ஏன் சொல்லத் தயக்கம்?” என்று கேட்டான் படைத்தலைவன்.

அடிகள் மீண்டும் தயங்கவே, “எதுவாயிருந்தாலும் பாதகமில்லை அடிகளே! சொல்லுங்கள்” என்றாள் ராணி.

“சொன்னால் கோபித்துக் கொள்ள மாட்டீர்களே” என்று தயக்கத்துடன் மீண்டும் வினவினார் அடிகள்.
“இல்லை; சொல்லுங்கள். உங்கள் மனத்திலுள்ளது எனக்குத் தெரியும்!” என்றாள் ராணி.

துறவியின் மனத்திலிருந்தது ராணிக்கு மட்டுமென்ன இளஞ்செழியனுக்கும் புரிந்துதானிருந்தது. என்றாலும் அவன் அதைப்பற்றிப் பேசவும் தயங்கினான். அடிகளே சற்றுத் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு மென்று விழுங்கிக் கொண்டு சொன்னார், “படைத் தலைவரே! இருங்கோவேளின் கண் ராணியின்மீது விழுந்திருக்கிறது” என்று.

இளஞ்செழியன் இதயம் அடிகள் துவங்கிய பேச்சின் விளைவாக ஏற்பட்ட அருவருப்பால் படபடவென அடித்துக் கொண்டதாகையால் அவன் பதிலேதும் சொல்லாமல் மௌனமாகவே மஞ்சத்தில் உட்கார்ந்திருந்தான். அடிகளே தயங்கித் தயங்கிச் சொன்னார், “படைத் தலைவரே! சொல்வதற்கே நாக்கூசுகிறது. ஆனால் என் திட்டத்தால் ராணிக்கு எந்தவித ஆபத்தும் ஏற்படாது. ஏராளமான மக்களின் வாழ்வு பாதிக்கப்படும்போது சிலருடைய தியாகம் அவசியமாகிறது. பெரும் ஆபத்துக்களை நாம் சமாளிக்க முற்படும்போது அவர்கள் பலவீனத்தை நாம் பயன்படுத்த வேண்டியிருக்கிறது. கவசத்தைப் பற்றிப் பல போர்களைக் கண்டிருக்கும் தங்களுக்கு நான் எதுவும் சொல்லத் தேவை யில்லை.”

“கவசமா?” என்று வினவினான் படைத் தலைவன்.

“ஆம் படைத் தலைவரே! எப்பேர்ப்பட்ட கவசமும் உலோகத் தகடுகளால் பிணைக்கப்படுகிறது. ஆகவே அவற்றுக்கு இடையில் பிளவு இருக்கத்தான் செய்யும். அந்தப் பலவீனப் பகுதியில் அம்பு எய்பவனே வீரன் எனப்படுகிறான்” என்று விளக்கினார் அடிகள்.

“இருங்கோவேளின் கவசத்தில்…”

“ஒரு பிளவு, பலவீனப் பிரதேசம் இருக்கிறது.”

“அது?”

“ராணியிடம் அவனுக்கு ஏற்பட்டிருக்கும் ஆசை.”

“ஆகவே…”

“அந்த இடத்தில் அவனைத் தாக்க வேண்டும்.”

இதைக் கேட்டதும் முகத்தில் கோபம் இணையற்றுத் தாண்டவமாடியதாலும், அந்தக் கோபம் உடலையே ஒரு முறை ஆட்டி விட்டதாலும் மஞ்சத்தைவிட்டு எழுந்த இளஞ் செழியன், சற்று எட்டவே நின்றிருந்த அடிகளை நெருங்கி, “அடிகளே! உமக்கு அறிவு ஏதாவது இருக்கிறதா?” என்று சீறியதன்றி, இடையிலிருந்த குறுவாளின் மீது கையையும் வைத்தான்.

“அப்படித்தான் இந்த அடியவனின் அபிப்பிராயம்.”

“நான் கருத்து வேறுபாடு கொள்கிறேன்.”

“காலை வரையில்தான் கொள்ளலாம்.”

“ஏன்?”

“காலையில் ராணியை அழைத்து வரும்படி இருங்கோ வேள் தனது வீரர்களுக்கு உத்தரவிட்டுச் சென்றிருக்கிறான். இந்த மடத்தைச் சுற்றி இப்பொழுது ஆயுதபாணிகளான வீரர்கள் நூறு பேர் இருக்கிறார்கள்.”

“அப்படியானால் உமது திட்டந்தான் என்ன?”

“இருங்கோவேளுக்கு இணங்குவதுபோல் ராணி பாசாங்கு செய்யட்டும். இரண்டு நாட்கள் அவனை இங்கு தாமதிக்கச் செய்யட்டும். அதற்குள் இருங்கோவேளைத் தீர்த்துக்கட்டிவிட முடியும்.”

“எப்படி?”

“அதற்கு ஏற்பாடு நடக்கிறது.”

“நம்ப முடியவில்லை.”

அடிகள் பதிலேதும் கூறாமல் இளஞ்செழியனைக் கையைப் பிடித்து அழைத்துக்கொண்டு சாளரத்தருகே சென்று தமது கையால் தூரத்தே தெரிந்த ஒரு இடத்தைச் சுட்டிக் காட்டி, “அதோ வெள்ளை வெளேரென்று தெரியும் மாளிகையைப் பாருங்கள் படைத்தலைவரே!” என்றார்.

“அதோ அந்த மாளிகையா?” என்று கேட்டான் இளஞ் செழியன், அடிகள் காட்டிய இடத்தைத் தானும் கையால் சுட்டிக்காட்டி.
“ஆம். நதியின் இக்கரையிலிருக்கிறதே அந்த மாளிகை தான். அதோ, விளக்கொன்று தெரியவில்லை அதன் சாளரத்தில்?” என்று மீண்டும் சுட்டிக் காட்டினார் அடிகள்.

“தெரிகிறது” என்றான் படைத்தலைவன்.

“அந்த மாளிகையைப் பெரிய மர்மம் சூழ்ந்திருக்கிறது” என்றார் அடிகள். படைத்தலைவன் காதுக்கு மட்டும் கேட்கும் படியாக.

“என்ன மர்மம்?”

“அந்த மாளிகைக்கு அருகில் யாரும் போக அனுமதிக்கப்படுவதில்லை.”

“காரணம்?”

“காரணம்?..” என்று ஆரம்பித்த அடிகள் மேற்கொண்டு எதையோ விவரிக்கப் போனவர், சட்டென்று ஒரு வினாடி தாமதித்துப் பிறகு, “படைத்தலைவரே! அதோ உற்றுக் கவனியும். அந்த விந்தையைப் பாரும். பிரதி தினம் நிகழ்கிறது” என்று நடுங்கும் குரலில் கூறினார்.

இளஞ்செழியன் இமை கொட்டாமல் தூரத்தே தெரிந்த அந்த வெள்ளை மாளிகை மாடியறைச் சாளரத்திலிருந்த விளக்கை உற்றுப் பார்த்துக் கொண்டு நின்றான். அடுத்த சில வினாடிகளில் அங்கே இளஞ்செழியன் உணர்ச்சிகளையே உலுக்கும் விந்தைகள் நிகழ்ந்தேறின. விந்தைகளோடு நின்றிருந்தால் பிரதி தினம் அதைக் கண்டு கொண்டிருந்த அடிகளார் அசந்திருக்கமாட்டார். ஆனால், அந்த விந்தை களைத் தொடர்ந்து ஏற்பட்ட விபரீதம் அடிகளையும் அலறச் செய்தது. “கெட்டது குடி! நம் திட்டத்தில் மண் விழுந்தது. அத்தனையும் தொலைந்தது படைத்தலைவரே! அத்தனையும் தொலைந்தது” என்று வாய்விட்டு அலறினார் அடிகள்.

Previous articleYavana Rani Part 1 Ch19 | Yavana Rani Sandilyan | TamilNovel.in
Next articleYavana Rani Part 1 Ch21 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here