Home Sandilyan Yavana Rani Part 1 Ch21 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

Yavana Rani Part 1 Ch21 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

81
0
Yavana Rani Part 1 Ch21 Yavana Rani Sandilyan, Read Yavana Rani Online Free, Yavana Rani PDF, Download Yavana Rani novel, Yavana Rani book,read Yavana Rani free
Yavana Rani Part 1 Ch21 |Yavana Rani Sandilyan|TamilNovel.in

Yavana Rani Part 1 Ch21 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

யவன ராணி – சாண்டில்யன்

முதல் பாகம்

அத்தியாயம் : 21 எரிந்த மாளிகை!

Yavana Rani Part 1 Ch21 |Yavana Rani Sandilyan|TamilNovel.in

இருங்கோவேளுக்கு யவன ராணிமீது ஏற்பட்ட காம இச்சையை ஒரு மாயவலையாகப் பயன்படுத்தி இரண்டு நாட்களாவது அவனைக் கருவூரில் தங்க வைத்துவிட்டால் அவனை ஒழித்துக் கட்டிவிடலாமென்று சமணத் துறவி சொன்ன யோசனையைக் கேட்ட மாத்திரத்திலேயே சொல்லவொண்ணா அருவருப்பை அடைந்த இளஞ்செழியன், தூரத்தே நதிக்கரையில் தெரிந்த மாளிகையை அவர் சுட்டிக் காட்டியபோது, அந்தச் சமணத் துறவியைத் திருப்தி செய்வதற்காக அதைப் பார்க்கத் துவங்கினானே யொழிய, அவருடைய யோசனையை ஏற்கும் எண்ணமோ அவருடைய திட்டங்களைப் பரிசீலிக்கும் அபிப்பிராயமோ எள்ளளவும் இல்லாமலேயே அந்த மாளிகையை நோக்கித் தன் கண்களை ஓடவிட்டான். நகரத்தை விட்டுச் சற்று விலகி நதியின் கரையில் வெள்ளை வெளேரென்று நின்றிருந்த அந்த மாளிகைக்கு அக்கம் பக்கத்தில் வீடுகளோ மனித சஞ்சாரமோ சிறிதும் இல்லை. சேரமான் தலைநகரான கருவூர் வஞ்சியில் அப்படியொரு மாளிகை தனித்து இருக்க முடியுமென்பதைக் கனவிலும் கருதாத இளஞ்செழியன், இந்த மாளிகையை எதற் காகத் தனித்துக் கட்டியிருக்கிறார்கள் என்பதை அறிய விரும்பி, அதற்குப் பின்னால் தூரத்தே எழுந்த கருவூரின் பெரும் தெருக்களையும் உயர எழுந்து நின்ற அரச மாளிகைக் கூடங்களையும் ஒருமுறை ஏறெடுத்துப் பார்த்தான்.

பின், நிலவு லேசாகக் காய்ந்த அந்த இரவில் சேரமான் தலைநகரான கருவூர் வஞ்சி கண்ணுக்கு இணையற்ற பெரு விருந்தாகக் காட்சியளித்தது. எத்தனையோ விவாதங்களுக்குத் தற்காலத்தில் இலக்கான திருச்சி ஜில்லா கருவூர் அக்காலத்தே பெரும் பொலிவு பூண்டு விளங்கியதென்பது ஆராய்ச்சியாளர் முடிவு. சேரமான் தலைநகராகச் சங்க காலத்தில் விளங்கியது இந்தக் கருவூர்தானா, அன்றி மலையாளத்திலுள்ள கொடுங்கோளூர் என்ற முசிறியா என்பது பற்றிச் சமீப காலம் வரை பெரும் தர்க்கம் நடந்து வந்தது. திருவஞ்சிக்குளமே, சேரமான் தலைநகராயிருந்தது என்பது மலையாள அறிஞர்கள் கருத்து. திருச்சி ஜில்லாவிலுள்ள கருவூர், சங்க காலத்தில் வஞ்சி மாநகர் என்ற பெயருடன் சேரன் தலை நகராகத் திகழ்ந்தது என்பது தமிழறிஞர் வழக்கு. முற்காலத்திய தமிழ் நூல்களையும், பிற்காலத்திய சில சாஸனங்களையும் ஆராயுமிடத்து தமிழர் வழக்குக்கே சரியான ஆதாரங்கள் இருக்கின்றன என்பது சந்தேகத்துக்கு இடமின்றித் தெரிகிறது.

குடபுலம், குணபுலம், தென்புலம் என மூவகைப் பகுப்பு உடைய தமிழகத்தே குடபுலம் சேரர்க்கும், குணபுலம் சோழர்க்கும், தென்புலம் பாண்டியர்க்கும் உரியதாயிருந்த தன்றிச் சேரர்கள் நிலமான குடபுலம் (மேல் திசை நாடு) குண மலை நாடென்றும் குடமலை நாடென்றும் இரு பிரிவாக விளங்கி வந்ததென்றும், பிற்காலத்தில் கொங்கு மண்டலம் என்று அழைக்கப்பட்டது சேரரது குணமலை நாடேயென்றும் பழந்தமிழ் நூல்களில் காணப்படுகின்றன. அந்தச் சேரரது குணமலை நாட்டின் பகுதியான கிழக்குச் சேர மண்டலத்தி லேயே திருச்சி ஜில்லாவின் பகுதிகளாகக் கருவூர், ஆமூர், குழுமூர், பேரூர் இருந்தனவென்பதற்கும், சோழ வேந்தன் கரிகாலனுக்கு அரச வாகை சூடிய யானை புறப்பட்ட கழுமலம் என்ற இடமும் கருவூருக்கு அருகிலிருக்கிற தென்பதும் சுவடிகளால் அறியப்படுகின்றது. ஆகவே சேரமான் தலைநகரான வஞ்சி மாநகர் திருச்சி ஜில்லாவின் ஆன்பொருநை என்ற ஆம்பிராவதி நதிக்கரையிலுள்ள கருவூரேயன்றி மலையாளத்திலுள்ள கொடுங்கோளூர் அல்ல என்று தமிழர் *ஆராய்ச்சி நூல்கள் கூறுகின்றன. தமிழ் ஆராய்ச்சி முறையை யொட்டியே இந்தக் கதையும் எழுதப் படுவதால் அன்று இளஞ்செழியன் கண்ட மாளிகையை அடுத்து ஓடியது கருவூரை அடுத்து நின்ற ஆன்பொருநை யென்ற ஆம்பிராவதி நதியே என்று கொள்ளுவோம்.

ஆம்பிராவதியிலுள்ள பளிங்கு நீரும் அதில் பிரதிபலித்த சந்திர வெளிச்சத்தில் பாதி தெரிந்தும் தெரியாமலுமிருந்த வெள்ளை மாளிகையின் உப்பரிகை உச்சியும் இளஞ்செழியன் கண்களையும் உள்ளத்தையும் அப்படியே கவர்ந்தன. அவற்றி லிருந்து நகரத்தின் நெருக்கமான பகுதிகளுக்காகக் கண்களை ஓடவிட்ட சோழர் படையின் உபதலைவன், சேரமான் தலை நகரான கருவூர் வஞ்சி எத்தனை பலமுடையது, எத்தகைய படைத் தாக்குதல்களைச் சமாளிக்கும் ஆற்றலுடையது என்பதைப் புரிந்து கொண்டான். நகரத்தில் விசாலமான வீதிகள் சோழர் நகர வீதிகளைப்போல் நேர்ச் சதுக்கங்களாகக் கட்டப்படாமல் ஆங்காங்கு திருப்பித் திருப்பிப் பல முக்கோணங்களாகக் கட்டப்பட்டிருப்பதையும், அத்தனை முக்கோணங்களும் பார்ப்பதற்குத் தனிப்பிரிவுகளைப்போல் தோன்றினாலும் ஒவ்வொன்றையும் இணைக்கப் பெருஞ் சுவர்கள் எழுந்ததையும், அப்படி இணைந்த சுவர்கள் தூரத்தே தெரிந்த மலைக்காடுகளை நோக்கிச் சென்று கண்ணுக்கு மறைந்ததையும் கண்ட இளஞ்செழியன் அந்த நகரத்தைத் தாக்கி வெற்றிகொள்வது அவ்வளவு சுலபமல்லவென்பதையும், சேரனை முறியடிக்க வேண்டுமானால் அவனை அந்த நகரத்தைவிட்டு வெளியே இழுக்கவேண்டுமென்பதையும் சந்தேகமறத் தெரிந்து கொண்டான். அத்தனை ஏற்பாட்டுடன் நகர நிர்மாணத்தை நன்றாக அறிந்த அறிவாளிகள் உதவியால் கட்டப்பட்டுள்ள அந்த நகரத்துக்குப் பெரும் பலவீனமான ஒரு தனி மாளிகையை எதற்காக ஊர்ப்புறத்தே கட்டினார்கள் என்பதை அறிய முடியாமல் திணறிய இளஞ்செழியன், “எத்தனை பலமான நகரம்! எத்தனை பலமான அரண்கள்! எத்தனை படை வீடுகள்!” என்று கருவூரை உள்ளூர மெச்சிய தல்லாமல் அதை வாய் விட்டும் மெள்ளச் சொன்னான். அவன் மேற்கொண்டு பேசுவதற்குள் சமணத்துறவி சொன்னபடி அந்த மாளிகையில் நிகழ்ந்த விந்தைகள் அவன் யோசனைகளைச் சட்டென்று அறுத்து நிறுத்தவே மாளிகைச் சாளரத்தையே கண் கொட்டாமல் பார்த்தான் படைத்தலைவன்.

சாளரத்தே துறவி காட்டிய விளக்கு மெள்ள மெள்ள அசைந்து அசைந்து பின்வாங்கி முன்வந்தது. பிறகு பக்க வாட்டில் லேசாக அப்புறமும் இப்புறமும் சஞ்சரித்தது. பிறகு இருமுறை ஆலத்தி எடுப்பதுபோல் சுழன்றது. அப்படி விளக்கை யாரும் எடுத்து ஆட்டுவதாகவும் தெரியாததால் இளஞ்செழியன் பிரமிப்புடன் துறவியை நோக்கி, “அடிகளே! வெண்ணிலவு நன்றாகத்தானே காய்கிறது?” என்று வினவினான்.

பேச்சுக் கொடுக்கச் சிறிதும் இஷ்டப்படாத அடிகள், “ஆமாம்” என்று மட்டும் வேண்டா விருப்பாகப் பதில் சொல்லி மாளிகையையே கவனித்தார்.

“இவ்வளவு நிலவு காயும்போது மாளிகை மாடியறையில் யாராவது இருந்தால் லேசாகவாவது தெரியுமே!”

“தெரியும்” என்றார் அடிகள் அவனைத் திரும்பிப் பார்க்காமலே.
“ஆனால் தெரியவில்லையே.”

“இல்லை.”

“அப்படியானால் விளக்கு தானாக ஆடுமா?”

“ஆடாது.”

“யாராவது எடுத்து அசைத்தால்தானே ஒளி இடம் மாறும்?”

“ஆம்.”

“அப்படி யாரும் அசைப்பதாகவும் தெரியவில்லையே?” என்றான் படைத்தலைவன்.

சிறிதும் பேசாமல் மாளிகையைப் பார்த்துக்கொண்டிருந்த அடிகள் இந்தத் தருணத்தில்தான் முன் அத்தியாயத்தின் இறுதியில் கூறியது போலத் திடீரென அலறினார், “கெட்டது குடி, திட்டத்தில் மண் விழுந்தது. அத்தனையும் தொலைந்தது” என்று.

சமணத் துறவி அப்படி அலறியதற்குத் திட்டமான காரணம் ஏதும் இளஞ்செழியனுக்குப் புரியவில்லையென்றா லும், மாளிகைச் சாளரத்தில் லேசாகக் கண்ணுக்குத் தென்பட்ட நிகழ்ச்சிகள் மட்டும் அவன் மனத்திலும் சந்தேகத்தையும் ஓரளவு திகிலையும் ஏற்படுத்தின. அதுவரை சாளரத்தில் உலாவியிருந்த விளக்கு திடீரென வெளியே விசிறியெறியப் பட்டுச் சாளரத்திலிருந்து கிளம்பி வால் நட்சத்திரம் போல் பறந்து தூரத்தே சென்று விழுந்தது. அதைத் தொடர்ந்து யாரோ இரண்டு மூன்று பேர் அறைக்குள் சண்டையிடும் காட்சி, அந்த அறைக்குள் திடீரென நுழைந்த ஒரு பந்தத்தின் வெளிச்சத்திலிருந்து தெரிந்தது. அடுத்த சில விநாடிகளில் சந்தடி ஏதும் செய்யாமல் பிசாசுகளைப் போலப் பலர் ஊர்ந்து சென்று, மாளிகையைச் சுற்றி எதையோ அடுக்கிவிட்டு, அவற்றுக்கெல்லாம் தீயும் வைத்துவிட்டு மறைந்தார்கள். கண் மூடிக் கண் திறப்பதற்குள் அந்த மாளிகையைச் சுற்றிப் பெருந் தீ எரிந்தது. அப்பொழுதுகூட அடிகள் கூச்சல் போடவில்லை. ஆனால் அந்தத் தீப்பிடித்த மறுகணம் எங்கிருந்தோ பறந்து வந்த குதிரை வீரர்கள் அந்த மாளிகையை வளைத்துக் கொண்டதும்தான் அடிகள் மனம் தாங்காமல் அலறினார்.

அந்த நிகழ்ச்சிகளின் காரணத்தை லவலேசமும் அறிய முடியாததால் குழம்பியிருந்த படைத்தலைவனை அணுகிய யவன ராணியும், தூரத்தே தீப்பிடித்துக் கொண்டிருந்த மாளிகையைக் கண்டு, “இதென்ன படைத்தலைவரே! யார் அந்தத் தீயை வைத்திருக்கிறார்கள்?” என்று கேட்டாள்.

“எனக்குத் தெரியாது ராணி. துறவிதான் அறிவார்” என்றான் இளஞ்செழியன்.

தூரத்தே எரிந்த அந்த மாளிகையைப் பார்த்து அலறிய தன்றி, திக்பிரமையடைந்து தலையில் கையையும் வைத்துக் கொண்டு நின்ற துறவியைத் தன் நீலமணிக் கண்களால் ஒருமுறை துழாவிய யவன ராணி, “ஆபத்தைக் கண்டு கலங்கு வதாலோ அஞ்சுவதாலோ பயனில்லை அடிகளே! விஷயத்தை என்னவென்று விளக்கிச் சொல்லுங்கள்” என்று கேட்டாள்.

நீர் தளும்பி நின்ற கண்களுடன் ராணியை நோக்கிய அடிகள், “விளக்கத் தேவையில்லை ராணி. அந்தத் தேவை தீர்ந்துவிட்டது” என்று குரல் தழுதழுக்க, துக்கம் தொண்டை யடைக்கப் பதில் சொன்னார்.

“ஒரு மாளிகை தீக்கிரையாகியதற்கா இத்தனை சோகம் உங்களுக்கு? யவன நாட்டில் ஊர்களே எரிந்தாலும் நாங்கள் கலங்குவதில்லை” என்று அடிகளுக்கு ராணி எடுத்துக் காட்டினாள்.

சமணத் துறவி அவளை நன்றாக ஏறெடுத்துப் பார்த்து விட்டு வெறுப்புடன் சொன்னார், “எங்களுக்கும் அத்தனை துணிவு உண்டு பெண்ணே” என்று.

ராணி அவரைக் கூர்ந்து நோக்கிவிட்டு அவர் கண்களி லிருந்து கிளம்பிக் கன்னத்தில் வழிந்தோடிய நீரையும் கவனித்தாள். அவள் பார்வை பதிந்த இடங்களையும், அவள் தன்னைக் கவனித்துவிட்டுச் செய்த புன்முறுவலின் காரணத்தையும் புரிந்துகொண்ட சமணத் துறவி சொன்னார்: “யவனர் துணிவுக்கு எங்கள் துணிவு குறைந்ததல்ல பெண்ணே. ஆனால் நீ இப்பொழுது கண்டது சாதாரணக் காட்சியல்ல; தீ வைக்கப்பட்டதும் தனி மாளிகைக்கல்ல.”

“அது தனி மாளிகையல்லவா?” வியப்புடன் வினவினாள் ராணி.

“மாளிகை தனி மாளிகைதான்.” வருத்தத்துடனேயே வெளிவந்தது துறவியின் பதில்.
“ஆகவே தீ வைக்கப்பட்டது தனி மாளிகைக்குத் தானே?” |
“இல்லை ராணி, இல்லை. அதோ எரியும் தீ மாளிகைக்கு வைக்கப்பட்டதல்ல. இரும்பிடர்த்தலையாரின் தலையில், இல்லையில்லை, சோழமண்டலத்தின் தலைமேல் வைக்கப்பட்ட தீ.”

ராணிக்கு மட்டுமல்ல சோழர் படையின் உபதலைவ னுக்கும் சமணத்துறவியின் பேச்சு பெரும் புதிராயிருந்தது. ஒரு தனி மாளிகை எரிவதால் சோழ மண்டலத்துக்கு என்ன கெடுதல் ஏற்பட முடியும் என்பதைப் புரிந்துகொள்ள முடியாததால் சற்றே குழப்பமடைந்த இளஞ்செழியன், “அடிகளே! சோழ மண்டலத்துக்குத் தீங்கு நேருவதாயிருந்தால் அதைத் தடுப்பது படைத்தலைவனான என் கடமை. விஷயத்தை விளக்கிச் சொல்லுங்கள். என்னால் முடிந்ததைச் செய்கிறேன்” என்றான்.

கண்களிலிருந்து வழிந்த நீரைத் துடைத்துக் கொண்டு அடிகள் படைத்தலைவனை நோக்கிவிட்டுச் சொன்னார்: “படைத்தலைவரே! அந்த மாளிகையில் நடப்பது என்ன வென்பது எனக்குத் திட்டமாகத் தெரியாது. ஆனால் அந்த மாளிகையிலிருந்த யவனர்கள் சிலர் ஒரு நாள் சேரமான் உத்தரவால் திடீரென்று அப்புறப் படுத்தப்பட்டார்கள். பிறகு சில நாட்கள் மாளிகையின் உதிர்ந்த சுவர்களுக்குச் சாந்து பூசி வெள்ளை வைத்துப் பழுது பார்த்தார்கள். மாளிகையின் அந்த மதிளின் ஒரு பகுதி இடிந்தும் கிடந்தது. அதையும் செப்ப னிட்டார்கள். பின்பு மாளிகைப் பகுதியில் காவல் அதிகரித்தது. மாளிகையை அடுத்துள்ள ஆம்பிராவதியின் நீராடும் துறைக்குப் போகக்கூடாதென்று மக்களுக்குத் தடையும் விதிக்கப்பட்டது. எல்லாம் சில நாட்களுக்குள்ளாகவே நடந்தது. பிறகுதான் இரும்பிடர்த் தலையாரும் உறையூரிலிருந்து இங்கு வந்து சேர்ந்தார்.”

மேலே சொல்லும் என்பதற்கு அறிகுறியாகத் தலையை அசைத்த இளஞ்செழியன் சாளரத்தைவிட்டு அறையின் நடு விடத்தை அடைந்தான். அடிகள் மேற்கொண்டு சொன்னார்: “இரும்பிடர்த்தலையார் அடிக்கடி மடத்துக்கு வந்து சென்றார். வந்த முதல் நாளே இந்த மாடியறையில் தங்கி, அந்த வெள்ளை மாளிகையைக் கூர்ந்து கவனித்துவிட்டுப் போனார். இரண்டு நாட்களுக்கெல்லாம் அந்த மாளிகைச் சாளரத்தின் விளக்கு எரிந்தது. அந்த விளக்கு தினம் அசையுமென்றும், அசைவு ஏதாவது ஒரு இரவில் நின்றால் தனக்கு அறிவிக்கும்படியும் எனக்குக் கட்டளையிட்டிருந்தார். தினமும் கவனித்து வந்தேன். இடையே பூம்புகார் நிலைமை யைப்பற்றிக் குழப்பமான செய்தி வந்திருந்தது. நீங்கள் வருவதற்கு முதல்நாள் தான் நீங்கள் வரப் போவதாகவும் வந்தவுடன் உங்களைச் சந்திப்பதாகவும் இரும்பிடர்த்தலை யார் கூறிச் சென்றார். அந்த மாளிகையைப் பற்றிய மர்மத்தை அவர் வாய் திறந்து கூறாவிட்டாலும் நான் ஓரளவு புரிந்து கொண்டேன். சமணத் துறவியின் புத்தியும் அத்தனை மந்த மல்ல பாருங்கள்.”

“அப்புறம் என்ன நடந்தது?” இதைக் கேட்ட இளஞ் செழியன் குரலில் கவலை தோய்ந்து கிடந்தது.

“அப்புறம் நடந்ததைக் தாங்களறிவீர்கள். இங்கு வர வேண்டிய இரும்பிடர்த்தலையார் வரவில்லை. பதிலுக்கு அவருடைய பரம விரோதி இருங்கோவேள் வந்தான். அவரிடம் கிடைக்கவேண்டிய ஓலை அவனிடம் கிடைத்து விட்டது. இரும்பிடர்த்தலையாரின் திட்டங்கள் தவிடு பொடியாகிவிட்டன. அதோ மாளிகையைப் பற்றவைத்து விட்டான் இருங்கோவேள். அதோ சோழமண்டலம் பற்றி எரிகிறது” என்று சொல்லிய அடிகள், “இருக்கட்டும் இருக் கட்டும். இதற்கு அந்தப் பாதகனைப் பழி வாங்காமல் விடப் போகிறேனா? இதோ இந்த ராணி தயவு வைக்கட்டும். அவனை இந்த இடத்திலேயே குத்திப்போட்டு அவன் ரத்தத்தில் தலையை முழுகுகிறேன்” என்று வெறி பிடித்தவர்போல் கூச்சலிட்டார்.

சமணத் துறவி அப்படிக் கூச்சலிட்டது யவன ராணிக்கு மட்டுமன்றி இளஞ்செழியனுக்கும் ஆச்சரியமாயிருந்தது. இருங்கோவேளைக் குத்திப் போடுவதைப் பற்றியும் குருதியில் தலை முழுகுவது பற்றியும் அஹிம்ஸா மூர்த்தியின் பெயரால் திகழும் ஒரு மடத்தின் தலைவர் பேசியது பொருத்தமாயில்லை யென்றாலும் சோழ நாட்டைச் சேர்ந்த அந்தத் துறவியின் உள்ள உணர்ச்சிகளின் வேகத்தைப் புரிந்துகொண்ட இளஞ்செழியன் இதயத்தில் ஒரு பெருமிதமும் எழுந்து விளையாடியது. சமணத் துறவியானாலும் நாட்டுப்பற்று அவருக்குப் போகவில்லையென்பதை உணர்ந்த படைத்தலைவன், அவரைப் பற்றித் தான் முதலில் கொண்ட சந்தேகத்தை நினைத்து வருந்தவே செய்தான். அந்த வருத்தத்துடன் அனுதாபத்தின் வசமும் பட்ட இளஞ்செழியன் துறவியைச் சமாதானப்படுத்த முயன்று, “அடிகளே! சோழ மண்டலத் தைப் பல ஆபத்துக்களிலிருந்து காப்பாற்றியுள்ள ஆண்டவன் இப்பொழுது மட்டும் அதை எரித்துவிடுவானென்று நினைப்பது தவறு. எதற்கும் அந்த மாளிகைக்குச் சென்று என்ன நடக்கிறதென்று பார்ப்போம்” என்று சொன்னதன்றி, “ஆமாம்! இருங்கோவேள் வைத்துவிட்டுப் போயிருக்கும் வீரர்கள் கண்களில் படாமல் வெளியே செல்ல வழி இருக்கிறதா?” என்று கேட்டான்.

“அது பிரமாதமில்லை ” என்றார் அடிகள்.

“அப்படியானால் வாருங்கள் போவோம்” என்றழைத்தான் இளஞ்செழியன்.

“சற்றுப் பொறுங்கள். நான் வந்த வழியே கீழே போய் இங்கு ஏதோ சத்தம் கேட்பதாகச் சொல்லி ஒரு காவலனை அழைத்து வருகிறேன்” என்று சொல்லிய துறவி கண்ணைச் சிமிட்டிப் புன்முறுவலும் செய்தார்.

துறவியின் எண்ணத்தைப் புரிந்து கொண்ட ராணி நகைத்ததன்றி, “நல்ல துறவி’ என்று கூறி ஏளனமும் செய்தாள்.

“உங்கள் நாடு இந்த நிலையில் இருந்தால் உங்கள் நாட்டுத் துறவிகளும் வாளாவிருக்கமாட்டார்கள் ராணி” என்று பதிலுக்குக் கூறிய துறவி, “காஷாயத்துக்குள்ளிருப்பவனும் மனிதன் தான்” என்றும் வற்புறுத்திச் சொன்னார்.

“புரிகிறது அடிகளே, புரிகிறது” என்று ராணி மீண்டும் நகைத்தாள்.

அவள் ஏளனச் சிரிப்பைச் சிறிதும் லட்சியம் செய்யாத துறவி, சாளரத்தின்மீது தாவி ஏறி, மெள்ள வெளிப்பக்கமாக இறங்கி மறைந்தார்.
அவர் மறைந்ததும் இளஞ்செழியன் ராணியை நோக்கி, “ராணி! மஞ்சத்தில் படுத்துத் தூங்கு. நான் சீக்கிரம் திரும்பி வருகிறேன். எதற்கும் அஞ்சாதே” என்றான்.

“அச்சம் என் ரத்தத்தில் கிடையாது படைத்தலைவரே! ஆனால், நீர் போகும் வேலை பயனற்றது என்று எனக்குத் தோன்றுகிறது” என்றாள் ராணி.

“என்ன வேலை? எது பயனற்றது? எதைக் கண்டு விட்டாய் ராணி?”

“அந்த மாளிகையில் சிறைப்படுத்தப்பட்டிருப்பவர் ஒன்று, இத்தனை நேரம் தப்பியிருக்க வேண்டும். இல்லை, அழிந்திருக்கவேண்டும். அதோ பாருங்கள். தீ மாளிகை முழுவதையும் சூழ்ந்துவிட்டது. சாளரக் கட்டைகள் கூடத் தீப்பிடித்து வெடித்து விழுகின்றன.”

“ஆம்” என்று தலையசைத்தான் இளஞ்செழியன்.

“அப்படியானால் நீங்கள் போய் என்ன செய்யப் போகிறீர்கள்? சிறையிலிருப்பவர் அழிந்திருந்தால் நீங்கள் செய்யக் கூடியது எதுவுமில்லை. தப்பியிருந்தால் உங்கள் உதவி அவருக்குத் தேவையில்லை” என்று ராணி விளக்கினாள்.

“எதற்கும் நான் போயாக வேண்டும் ராணி. அதிலிருந்தவர் தப்பியிருந்தாலும் அழிந்திருந்தாலும் அறிந்துகொள்ள வேண்டியது என் கடமை. எதற்கும் நீ ஜாக்கிரதையாயிரு. அந்தப் பாதகன் இருங்கோவேள் வந்தால்….” என்று சொல்லிய படைத்தலைவனை இடை மறித்து, “பயப்பட வேண்டாம். இதோ இருக்கிறது” என்று மடியிலிருந்த மெல்லிய குறுவா ளொன்றை எடுத்துக் காட்டினாள் யவனராணி.

அந்த யவன நாட்டுக் குறுவாளைக் கண்டு வியந்த இளஞ்செழியன், அதைக் கையில் வாங்கிப் பார்த்துப் பிரமிப் படைந்து, “எத்தனை மெல்லியது! ஆனால் எத்தனை உறுதி! என்ன கூர்மை!” என்று கூறினான்.

“தாழை மடலில்கூட ஒளிக்கலாம்” என்றாள் யவன ராணி.

“ஆம் ராணி!”

“ஆனால் எடுப்பது தெரியாமல் எடுத்து, புதைப்பது தெரியாமல் யார் மார்பிலும் புதைக்கலாம்” என்று ராணி சொல்லி, அவனை ஒருமுறை கூர்ந்து நோக்கிவிட்டு மீண்டும் கத்தியை அவனிடமிருந்து வாங்கி மடியில் மறைத்துக் கொண்டாள்.

சில நிமிடங்களுக்குள்ளாகவே அடிகளின் குரல் கதவுக்கு வெளியே கேட்டது. “சிறைப்பட்டவர்கள் தப்பிவிடப் போகிறார்கள். உள்ளே போய்ப் பாருங்கள்” என்றது அடிகளின் குரல்.

அவர் உத்தரவுப்படி கதவைச் சரேலென்று திறந்து கொண்டு உள்ளே நுழைந்தான் இருங்கோவேளின் காவலர் தலைவன். அவ்விதம் நுழைந்தவன் விடுவிடு என்று நடு அறையை நாடி அப்புறமோ இப்புறமோ திரும்புவதற்குள், அவனைத் தொடர்ந்து கையில் கமண்டலத்துடன் வந்த அடிகள் ஒரே பாய்ச்சலாகப் பாய்ந்து, அவன் தலைமீது கமண்டலத்தை வேகமாகவும் பலமாகவும் இறக்கவே, சிறிதும் மூச்சுக்கூட விடாமல் தரையில் சாய்ந்தான் காவலர் தலைவன். இந்தக் கைங்கரியத்தை முடித்த அஹிம்ஸாமூர்த்தி யான சமணத் துறவியார் இளஞ்செழியனை நோக்கி, “இவனுடைய மேலங்கியையும், தலைப்பாகையையும் அணிந்து கொள்ளுங்கள்” என்று கூறினார்.

காவலர் தலைவன் தலைப்பாகையையும் அங்கியையும் அணிந்துகொண்ட இளஞ்செழியன் ராணியிடம் விடை பெற்றுக்கொண்டு, துறவியுடன் புறப்பட்டு மடத்தின் வாயிலை அடைந்தான். மடத்தைவிட்டுக் கிளம்பு முன்பாக சமணத் துறவி, மேலே யாரும் போக வேண்டாமென்றும் மேலறையிலிருந்து சத்தம் வந்தாலும் அலட்சியம் செய்ய வேண்டாமென்றும் வீரர்களுக்குப் பணித்ததன்றி, “நானும் இவருடன் சென்று வருகிறேன்” என்று கூறித் துரிதமாக வெளியே நடையைக் கட்டினார்.

இப்படிக் காவலர் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு ஆம்பிரா நதிக்கரையோரமாகவுள்ள மரங்களின் நிழல்களில் ஒதுங்கி ஒதுங்கிப் பதுங்கி மாளிகையின் முன்பிருந்த சிறு தோட்டத்தருகே வந்து துறவியின் காதுகளில் வாட்கள் பலமாக மோதும் அரவம் கேட்கவே, “பேசாமல் வாருங்கள்” என்று இளஞ்செழியனை அழைத்துக்கொண்டு ஒருமரத்தின் பக்கத்தில் பதுங்கினார்.

அவர்கள் பதுங்கிய மறு நிமிடம் ஒரு வாலிபன் ரத்தம் தோய்ந்த வாளுடன் அந்த மரக் கூட்டங்களுக்கிடையில் ஓடி வந்தான். அதிகமாக ஓட முடியாமல் ஒரு காலை நொண்டி நொண்டிக் கஷ்டப்பட்டுத் தட்டுத் தடுமாறி ஓடிவந்த அவன் தன் கண்களை நாலாபுறமும் சில வினாடிகள் ஓட்டினான். ஆனால் அப்படிப் பார்த்து ஒரு முடிவுக்கு வருமுன்பாகவே தடதடவென்று பல வீரர்கள் தோட்டத்துக்குள் புகுந்து அவனை வளைத்துக் கொண்டார்கள்.

Previous articleYavana Rani Part 1 Ch20 | Yavana Rani Sandilyan | TamilNovel.in
Next articleYavana Rani Part 1 Ch22 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here