Home Sandilyan Yavana Rani Part 1 Ch22 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

Yavana Rani Part 1 Ch22 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

91
0
Yavana Rani Part 1 Ch22 Yavana Rani Sandilyan, Read Yavana Rani Online Free, Yavana Rani PDF, Download Yavana Rani novel, Yavana Rani book,read Yavana Rani free
Yavana Rani Part 1 Ch22 |Yavana Rani Sandilyan|TamilNovel.in

Yavana Rani Part 1 Ch22 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

யவன ராணி – சாண்டில்யன்

முதல் பாகம்

அத்தியாயம் : 22 பட்ட மரமும் பசுந் தளிரும்

Yavana Rani Part 1 Ch22 |Yavana Rani Sandilyan|TamilNovel.in

அந்த வாலிபனை நோக்கி ஈட்டிகள் பல பறந்தன. வாட்களைத் தாங்கிய வீரர்கள் அவனை வெட்டிப் போட பெருவேகத்தில் நெருங்கினார்கள். அவன் காலம் முடிந்தே விட்டதென்று நினைத்த இளஞ்செழியன், தன் தலையிலிருந்த தலைப்பாகையை எடுத்தெறிந்துவிட்டு தன் வாளை உருவிக் கொண்டு அந்த வாலிபனுக்கு உதவ முன்னே செல்ல முயன்றான். அடிகள் அவனைத் தடுத்து நிறுத்தி, “ஒரு நிமிடம் பொறுங்கள் படைத்தலைவரே!” என்றார்.

படைத்தலைவன் பொறுத்தது ஒரு நிமிடம்தான் ஆனால் அந்த ஒரு நிமிடத்தில் அவன் கண்டது என்ன! இந்திர ஜாலமா! மகேந்திர ஜாலமா! செப்பிடு வித்தையா! இல்லை. அத்தனையும் இணைந்த பெரும் கனவா! ஏதும் புரியவில்லை படைத்தலைவனுக்கு. ஒரு வாலிபன் உயிர் ஆபத்திலிருக்கிறதே என்ற உணர்ச்சியோ அதைத் தடுக்க வேண்டுமென்ற கடமையோ, எதுவுமே கருத்தில் தோன்றாமல் தன் கண்ணெதிரே நிகழ்ந்த அற்புதங்களைக் கண்டு வியப்பெய்தி ஸ்தம்பித்துக் கற்சிலையென நிலைத்து நின்று விட்டான் சோழர்களின் பிரசித்தி பெற்ற உபதலைவனான இளஞ்செழியன்.

ஆவணித் திங்களின் அந்தத் தேய்பிறைப் பின்நிலவு லேசாகவே காய்ந்துகொண்டிருந்தாலும், மேலே திரையிட்டு நின்ற மரக்கிளைகளின் அடர்த்தியான இலைகளின் காரணமாக மாளிகையை அடுத்த தோப்பில் அதன் வெளிச்சம் அதிகமாக விழாததாலும் நொண்டி நொண்டி ஓடிவந்து பட்டமரத்தில் சாய்ந்துகொண்ட வாலிபனின் முகம் சற்று அப்பாலிருந்த மரமொன்றின் மறைவில் பதுங்கி நின்ற சமணத் துறவிக்கோ சோழர் படை உபதலைவனுக்கோ ஆரம்பத்தில் தெளிவாகத் தெரியவில்லை. ஆயினும் அந்த வாலிபனைத் துரத்திய வீரர்களுக்கு வெளிச்சம் காட்டவந்த காவலர் தீப் பந்தங்களின் ஒளி வீசியதும் அவர் முகம் நன்றாகவே புலனாயிற்று. பட்ட மரத்தில் சற்றுக் கஷ்டப்பட்டே சாய்ந்த அந்த வாலிபனின் பால் வடியும் முகம் குழந்தை முகத்தைப்போல அழகாகவும், மிகக் குறுகுறுப்பாகவும் இருந்ததன்றி அவன் கண்களில் வீரமும் ததும்பி நின்றதையும் அவனைத் துரத்தி வந்த காவலரின் காலடி ஓசையைக் கேட்டதும் அவன் உதடுகள் மடிந்து சற்றே உறுதிப்பட்டதையும் கவனித்த இளஞ்செழியன், அந்த வாலிபனின் துணிவைக் கண்டு எல்லையற்ற வியப்பெய்தியதல்லாமல் அவனை எங்கோ பார்த்திருப்பது போன்ற நினைப்பும் அவன் சிந்தையில் எழலாயிற்று. அந்த நினைப்பின் விளைவாக அந்த முகத்தை அதிகமாக ஊன்றிக் கவனித்த இளஞ்செழியன் அந்த வாலிபன் நெற்றியிலும் இடது தோளிலும் ரத்தம் வடிந்து கொண்டிருப்பதையும், நெற்றியிலிருந்து கோடு போல் வளைந்து இமைப் பக்கமாக ஓடிய குருதியின் சுவடுகூட அவன் முகத்துக்கு அழகைக் கொடுத்ததையும் பார்த்து ‘இவன் பெரும் வீரர் மரபில் பிறந்தவனாயிருக்க வேண்டும்’ என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டான். அந்த வாலிபனின் நீண்ட கரங்களும், சுமார் இருபது வயதுக்கு உள்ளாகவே மதிக்கக்கூடிய அவன் உருவத்தின் பொதுத் தோற்றமும் அவன் வீரத்துக்கு இணையற்ற சான்றுகளாக விளங்கியதல்லாமல், இடைக்குக் கீழே உடையிருந்த நிலைமையிலிருந்தும் நொண்டிநின்ற காலின் தன்மையிலிருந்தும் அந்த வாலிபன் சற்றுத் தூரத்தே பற்றி எரிந்து கொண்டிருந்த மாளிகைத் தீயிலிருந்தே தப்பி வந்திருக்கிறான் என்பதையும் படைத்தலைவன் புரிந்துகொண்டான். மேலும் அந்த வாலிபனைப்பற்றிய ஆராய்ச்சியில் படைத்தலைவன் ஈடு பட்டிருப்பான். அத்தனை கவர்ச்சியான வீரத் தோற்றம்தான். அத்தனை தூரம் எண்ணத்தைக் கவரக்கூடிய கண்கள் தான்! ஆடுகளை எதிர்பார்த்து நிற்கும் புலியின் கண்களைப் போலவே தொடர்ந்துவரும் வீரர்களை எதிர்பார்த்த அந்தக் கண்களைக் கண்டே பிரமித்தான் இளஞ்செழியன். ஆனால் படைத் தலைவனுடைய ஆராய்ச்சிக்கு இடம் கொடுக்காமலும் பிரமிப்பை மட்டும் அதிகப்படுத்தும் வகையிலும் அடுத்த நிகழ்ச்சிகள் நடந்தேறின.

அந்த வாலிப வீரன் பட்ட மரத்தில் உடலைத் தாங்கிக் கொண்ட சில வினாடிகளுக்குள்ளாக வேல்கள் பல அவனை நோக்கிப் பறந்ததன்றி வாட்களைத் தாங்கிய வீரர்களும் அவனை நோக்கிப் பாய்ந்தனர். யாரும் உயிரை விநாடியில் இழக்கக்கூடிய அந்த நிலையை மின்னல் வேகத்தில் அந்த வாலிபன் சமாளித்துக்கொண்டதைக் கண்ட இளஞ்செழியன் பிரமிப்பு மேலும் மேலும் உயர்ந்தது. தன்னை நோக்கி வீசப்பட்ட வேல்களிலிருந்து தப்பிச் சட்டென்று தரையில் உட்கார்ந்து கண்ணிமைக்கும் நேரத்தில் எழுந்து விட்ட அந்த வாலிபன், அடுத்துப் பாய்ந்த நான்கு வீரர்களின் வாட்களைத் தன் வாளால் சரேலென்று தடுத்து நிறுத்திவிட்டானாகையால், குறி தவறிய வேல்களில் இரண்டு பின்னிருந்த பட்ட மரத்தில் தைத்துக்கொண்டதன்றி மற்ற வேல்கள் தொலை தூரத்துக்கு அப்பால் சென்று விழுந்தன. அவன் வாளால் தடுத்து நிறுத்தப்பட்ட வீரர்களும் திடீரெனத் தாக்குவதால் உண்டாகக்கூடிய ஆரம்ப வேகத்தை அடியோடு இழந்து விட்டனர். அந்த ஆத்திரத்தில் தடுக்கப்பட்ட தங்கள் வாட்களைப் பின்னுக்கு உருவி மீண்டும் தாக்க முயன்றபோது அந்த வாலிபன் வாள் நீண்ட கரத்தில் பம்பரம் போலச் சுழலத் தொடங்கி எதிரிகளைக் கிட்டே அணுக முடியாத வண்ணம் தூரவே நிறுத்திவிட்டதைக் கவனித்த படைத்தலைவன் ஆச்சரியத்தால் மூச்சை இழுத்துப் பிடித்துக் கொண்டு நின்றான்.

வாலிபனின் வாள் எதிரிகள் வந்த இடமெல்லாம் அவர் களைத் தடுத்து வெகுவேகமாகச் சுழன்றபோது கையில் கால சர்ப்பத்தைப் பிடித்துச் சுழற்றினால் இப்படித் தானிருக்கும் என்று நினைத்த இளஞ்செழியன் அந்த வாலிபனின் வாள் திறத்துக்கு முன்னால் அவனைக் கொல்ல வந்தவர்கள் எதுவும் செய்ய முடியாமல் தவித்ததையும், அடுத்த இரண்டு வினாடிகளிலே இரு வீரர்கள் மாண்டு கீழே விழுந்துவிட்டதையும் கவனித்தான். வாலிபன் அத்தனை வீரமாகப் போராடினாலும் அவனை எதிர்த்த வீரர்களின் தொகையையும் தூரத்தே மாளிகையைச் சுற்றி நின்ற மற்ற வீரர்களும் எந்த நிமிஷத்திலும் அந்தத் தோப்பிற்கு வந்துவிடலாமென்பதையும் அறிந்த இளஞ்செழியன் அதற்கு மேலும் சமணத்துறவியின் தடையை லட்சியம் செய்வதோ வாலிபனுக்கு உதவாமல் நிற்பதோ சரியல்ல என்ற தீர்மானத்துடன் மறைந்திருந்த மரத்தடியிலிருந்து மெள்ள நழுவி இருளடித்துக் கிடந்த இடங்களின் வழியாக மெள்ள நடந்து, அந்த வாலிபன் நின்றிருந்த பட்ட மரத்தை அணுக முயன்றான். சமணத் துறவியும் பின் தொடர்ந்து சென்றதல்லாமல் ஏதோ கனவில் நடப்பதுபோல் நடந்து சென்றுகொண்டே, “இந்த வாலிபனை எங்கோ இதற்கு முன் பார்த்திருக்கின்றேன். ஆனால் எங்கே?’ என்று தம்மைத் தாமே கேட்டுக் கொண்டார். என்ன எண்ணிப் பார்த்தும் விடை கிடைக்காததால் குழம்பிய சித்தத்துடன் படைத் தலைவனைப் பின் தொடர்ந்து சென்ற அடிகளை வேறொரு இடத்தில் பதுங்கச் செய்த இளஞ்செழியன், “அடிகளே! இந்த இடத்திலேயே நில்லும்” என்று மெதுவாகக் கூறினான்.

“எதற்காக?”

“உம்மால், சண்டையிட முடியாது.”

“யார் சொன்னது? நான் பிரும்மானந்தரிடம் வாள் வித்தை பயின்றவன்.”

சாதாரண சமயமாயிருந்தால், இதைக் கேட்டு இளஞ் செழியன், ஒன்று, வியப்பெய்தியிருப்பான், அல்லது விஷமமாக ஏதாவது பேசியிருப்பான். ஆனால் அந்தச் சமயத்தில் இருந்த சூழ்நிலை, அந்த வீர வாலிபன் எந்த நிமிடத்திலும் கொல்லப் படலாமென்ற பயம்-இந்த இரண்டின் காரணமாக மேற் கொண்டு எதுவும் பேசாமலும் இதர உணர்ச்சிகள் எதற்கும் இடம் கொடாமலும், “அப்படியானால் ஒன்று செய்யுங்கள் நான் உம்மைக் கூப்பிட்டு மற்றவர்களை அழைக்கச் சொன்னதும் நன்றாக இரைந்து கூவி அழையும்” என்றான்.

அடிகள் நிமிடத்தில் விஷயமென்னவென்பதை ஊகித்துக் கொண்டு, “இல்லாதவர்களைத்தானே? கண்டிப்பாய் அழைக்கிறேன்!” என்று வினவினார்.

“ஆம், ஆனால் கூப்பிட்டதுடன் நிற்க வேண்டாம்” என்றான் இளஞ்செழியன்.

“வேறென்ன செய்யவேண்டும்?”
“குறி தவறியதால் அதோ கிடக்கும் வேல்களில் ஒன்றை எடுத்து…”

“யாராவது ஒருவனுக்கு விடுதலை அளித்துவிடுகிறேன்.”

இப்படிச் சொல்லியதோடு நில்லாமல் அடிகள் சற்றுத் தூரத்தில் கிடந்த வேலொன்றையும் எடுக்கச் சென்றவுடன் இளஞ்செழியனும் பதுங்கிப் பதுங்கிப் பட்ட மரத்துக்கு அருகில் வந்தான். அவன் வருவதற்குள்ளேயே இன்னும் இரண்டு வீரர்களின் இதயத்தின் ரத்தத்தை வாலிபனின் வாள் ருசி பார்த்துவிடவே நால்வர் மாண்டுவிட்டதால் மற்றவர்கள் மிக மூர்க்கமாக வாலிபனை நெருங்கினார்கள். அந்தச் சமயத்தில் தன் வாளுடன் மற்றொரு வாளும் எதிரிகள் மீது பாய்வதைக் கண்டு, உதவிக்கு வந்தது யாராயிருக்கும் என்பதைக் கவனிக்க வாலிபன் திரும்பியதும், அந்த அஜாக்கிரதையைப் பயன்படுத்திக் கொண்ட வீரனொருவன் வாலிபன் தோளில் தன் வாளை ஆழப் பாய்ச்சி விட்டான். பட்ட கையில் மீண்டும் கத்தி பட்டதால் ரத்தம் அதிகமாகப் பிரவாகித்ததைக்கூட லட்சியம் செய்யாமல் அந்த வாளை, தோளிலிருந்து பிடுங்கியெறிந்த வாலிபன் மீண்டும் எதிரி களைத் தாக்க முற்பட்டான். அதற்கு முன்பே இளஞ்செழியன் எதிரிகளிருவரை வெட்டிவிட்டதன்றி மிக நிதானமாக வாலிபனை மறைத்து நின்றுகொண்டு பலமான தன் வாளைக் கரகரவெனச் சுழற்றினான். படைத்தலைவன் நீண்ட வாளில் பட்ட வாட்கள் ‘கிளாங் கிளாங்’ என்ற ஒலிகளைப் பரப்பிக்கொண்டு எதிரிகளின் கைகளை விட்டுப் பறந்தன. வாலிபனால் நால்வர் வெட்டுண்டதன்றிப் புதிதாக வந்தவ னாலும் இரண்டுபேர் போய்விட்டதைக் கவனித்ததுமே சற்றுப் பயங்கொண்ட வீரர்கள் இளஞ்செழியன் வாள் வேகத்தைக் கண்டதும், அதிக அச்சமடைந்து விட்டார்களாதலால் ஒரு விநாடி போர் முறையைத் தளர்த்தவே இகழ்ச்சிப் புன்முறுவல் கோட்டிப் படைத்தலைவன், “எந்த நாட்டு வீரர்களப்பா நீங்கள்? வாள் வீச்சிலும் அறவழியைக் கைவிடாத தமிழ் மண்டலத்தைச் சேர்ந்தவர்கள்தானா? ஒரு வாலிபனைக் கொல்ல எத்தனை வீரர்கள்? சரி, சரி, வாருங்கள்! உங்கள் மூதாதையர்கள் உங்களுக்காக நரகத்தில் காத்துக் கிடக்கிறார்கள்” என்று அழைத்து மீண்டும் போரிட வாளை உயர்த்தினான்.

அவன் ஏளனத்தைக் கண்டு பயத்துடன் வியப்பும் அடைந்த வீரர்களில் இருவர், ‘நேராக நின்று இவனுடன் போராடுவதால் பயனில்லை’ என்று தீர்மானித்துச் சற்று எட்டச் சென்று பின்புறமாக அணுக முயலவே, அந்தக் காடே அலறும்படியாக இரைந்தான் படைத்தலைவன், “யாரங்கே? இவர்கள் மீது வேலெறிந்து கொன்றுவிடு. மறைந்திருக்கும் நமது வீரர்களை வரச் சொல்” என்று.

இந்த இரைச்சல் வெறும் பயமுறுத்தல் என்று முதலில் எதிரிகள் நம்பினாலும் அடுத்த வினாடி இருளிலிருந்து துறவி யார் எறிந்த வேல் ஒருவனைத் தாக்கி மாய்த்து விடவே படைத் தலைவன் கூச்சல் வெறும் புரட்டல்ல என்று நினைத்துத் திரும்பியோட முற்பட்டார்கள். அவர்கள் ஓடியதற்குக் காரண முமிருந்தது. படைத்தலைவன் கூச்சல் போட்ட சில விநாடி களில் அவன் கூச்சலுக்கு ஆண்டவனே செவி சாய்த்து வீரர்களை அனுப்பியதுபோல் பல வீரர்கள் வரும் காலடிச் சத்தமும் மரக் கூட்டத்துக்கு அப்பால் கேட்டது.

தான் கூப்பிட்டதும் கூப்பிடாததுமாக உதவிக்கு வரும் வீரர்கள் யார் என்பதைப் புரிந்துகொள்ள முடியாத இளஞ்செழியன் ரத்தத்தால் நனைந்த கையுடன் நின்ற அந்த வாலிபனைத் தன்னைத் தொடரும்படி சைகை காட்டி அழைத்துச் சென்று சமணத் துறவியுடனும் வாலிபனுடனும் மற்றொரு மரத்தடியில் மறைந்துகொண்டான். அவன் மறைந்த சில விநாடிகளுக்குள் வீரர்கள் பலர் சண்டை நடந்த அந்த இடத்துக்கு வரத்தான் செய்தார்கள். அந்த வீரர் கூட்டத்துக்கு முன்னால் வந்து சண்டையில் வீழ்ந்து கிடந்தவர்களைக் கூர்ந்து நோக்கியவனைக் கண்டதும் ஓரளவு அதிர்ச்சியை இளஞ்செழியன் மட்டுமன்றி துறவியார் கூட அடைந்தார்.

பக்கத்திலே காவலர் பிடித்திருந்த பந்தங்களின் வெளிச் சத்திலே இருங்கோவேளின் வஞ்சகக் கண்கள் மிகத்தெளிவாகத் தெரிந்தன. செத்துக்கிடந்த வீரர்களில் ஒருவனைக் காலாலுதைத்துவிட்டுத் தன் பக்கத்தில் நின்றிருந்தவர்களைத் திரும்பி நோக்கிய அந்த வஞ்சக விழிகளில் அந்தச் சமயத்தில் குரூரமும் பரிபூரணமாகக் கலந்திருந்தது. அந்தக் குரூரம் அவன் உதிர்த்த சுடு சொற்களிலும் நன்றாகத் தொனித்தது.

“இதற்கென்ன அர்த்தம்?” என்று வினவினான் இருங் கோவேள் கடுங்கோபத்துடன்.

கூட வந்திருந்த காவலர்களின் தலைவனைப் போல் தோன்றிய ஒருவன் பதில் சொன்னான், “இங்கு சண்டை நடந்திருக்கிறது போல் தெரிகிறது” என்று.

இருங்கோவேளின் கண்கள் நெருப்பைக் கக்கின. “அப்படியானால் இரும்பிடர்த்தலையான் இங்கு வந்திருக்க வேண்டும்” என்ற சுடு சொற்களும் அவன் வாயிலிருந்து உதிர்ந்தன.
“மன்னர் எண்ணுவது சரியல்ல” என்றான் காவலர் தலைவன்.

“ஏன் சரியல்ல?”

“இரும்பிடர்த்தலையார் இருக்கும் இடத்தைச் சுற்றி ஒற்றர்களை நிறுத்தியிருக்கிறேன். அவர்கள் கண்ணில்படாமல் அவர் வெளிவர முடியாது.”

“ஒற்றர்கள் ஏமாறவில்லையென்பது உனக்கெப்படித் தெரியும்?”

“இந்த மாளிகைக்குத் தீ வைக்க வருமுன்பு அவர் இல்லத்தைக் கவனித்து விட்டுத்தான் வந்தேன்.”

“பின் யார் இங்கு போராடியிருக்க முடியும்?”

“அதுதான் புரியவில்லை. ஆனால் சிறையிலிருப்பவன் தப்பியிருக்க முடியாது.”

“ஏன்?”

“அவன் அறையிலிருக்கும்போதே அவன்மீது பாய்ந்து அவனைக் கட்டிப் போட்டோம். பிறகுதான் தீ வைத்தோம்.”

“தீ வைத்த பின்புதான் நீ என்னைத் தேடி வந்துவிட்டாயே! அந்தச் சமயத்தில் அவன் தப்பியிருந்தால்?”

“கைகால் கட்டப்பட்டவன் முதலில் அதிலிருந்து விடு படவேண்டும். அது எளிதல்ல. அப்படியே விடுபட்டாலும் தீயைத் தாண்ட வேண்டும். அதைத் தாண்டினாலும் சுற்றி நின்ற காவலரைத் தாண்ட வேண்டும். இத்தனை கஷ்டங்களையும் ஒரு வாலிபன் தாண்ட வேண்டுமானால் அவன் தெய்வப் பிறவியாயிருக்கவேண்டும்.”

காவலர் தலைவன் அத்தனை தூரம் உறுதி கூறியும் இருங்கோவேளுக்கு நம்பிக்கை பிறக்காததால், “இந்தச் சண்டைக்குக் காரணம் தெரியவில்லையே. இங்கு மாண்டு கிடப்பவர்களும் நம் மாளிகைக் காவல் புரிய அனுப்பிய வீரர் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள்தானே!” என்று சொல்லிய தல்லாமல், “வாருங்கள்” என்று அவர்களை அழைத்துக் கொண்டு தீப்பிடித்துப் பெரும் சத்தத்துடன் கட்டைகள் வெடிக்க எரிந்துகொண்டிருந்த மாளிகையை நோக்கி வேகமாக நடந்தான்.

அவன் பேசியதையெல்லாம் ஒன்று விடாமல் கேட்ட இளஞ்செழியன் சமணத் துறவியை நோக்கி, “அந்தப் பாதகன் நம்பவில்லை அடிகளே! விஷயம் தெரிந்தால் இந்த வாலிபனை விடமாட்டான்” என்றான்.

“ஆம்” என்று தலையை ஆட்டினார் அடிகள்.

கையிலிருந்த காயத்தால் அதிகம் ரத்தம் விரயமானதன் விளைவாக மெள்ள மெள்ளச் சோர்வடைந்த வாலிபனை நோக்கிய படைத்தலைவன், “அடிகளே! இந்த வாலிபனுக்குச் சீக்கிரம் சிகிச்சை செய்தாக வேண்டும். நமது மடத்துக்குப் போகலாமா?” என்று கேட்டான்.
“வாலிபனைக் காப்பாற்றுவதானால் அங்கு போக வேண்டாம்” என்றார் அடிகள்.

“இருங்கோவேளின் வீரர்கள்….”

“மடத்தைச் சுற்றிக் காவல் புரிவதுதான் உங்களுக்குத் தெரியும்.”

“ஆமாம்.”

“தவிர, நாமிருவரும் ஓடிப் போய்விட்ட விஷயமும் இத்தனை நேரம் தெரிந்திருக்கும்.”

“உண்மைதான்.”

“ஆகவே அங்கு செல்வது வாலிபனை மாத்திரமன்றி நம்மையும் இருங்கோவேளின் கையில் ஒப்படைப்பது போலத் தான். அதற்குப் பதில் அத்தனை தூரம் நடக்காமல் இங்கேயே இருங்கோவேளிடம் தலையை நீட்டிவிடலாம்.”

சமணத் துறவியின் தர்க்கரீதியான பேச்சும் அசந்தர்ப்ப மான நகைச்சுவையையும் ரசிக்காத படைத்தலைவன், “வேறு என்னதான் வழி?” என்று வினவினான்.

“சற்றுத் தூரம் போய் வடக்குப்புறம் திரும்பினால் நமது மடத்திலிருந்து சில வீடுகள் தள்ளி ஒரு பழைய மாளிகை இருக்கிறது. அதிக நாளாகப் பழுது பார்க்காத இடம்தான். ஆனால் அங்கு நமது மடத்துச் சீடர் ஒருவர் இருக்கிறார். அந்த இடத்துக்கு யாரும் வரமாட்டார்கள்” என்றார் அடிகள்.
“அப்படியானால் அங்கு அழைத்துச் செல்லும்” என்று உத்தரவிட்ட இளஞ்செழியன், மயக்கமடையும் நிலைக்கு வந்த வாலிபனைத் தன் வலது கரத்தால் பலமாக அணைத்து அழைத்துக்கொண்டு நடந்தான். அடிகள் மரக்கூட்டங்களின் நிழலடித்த இடங்களிலேயே அவ்விருவரையும் மிக ஜாக்கிரதையாக அழைத்துச் சென்றார். வாலிபனும் இளஞ்செழியனும் இருங்கோவேளின் வீரர்களுடன் போரிட்ட இடத்துக்கும் பழைய மாளிகையிருந்த இடத்துக்கும் தூரம் சற்று அதிகமென்றாலும், சமணத் துறவி எதிரிகளின் கண்களில் படாதிருக்க அவர்களை ஆம்பிராவதி நதிக்கரையிலிருந்த புதர்களின் ஒற்றையடிப் பாதையில் சுற்றுவழியாக அழைத்துச் சென்றதால், தூரம் மிக அதிகமாக வளர்ந்தது. சோர்ந்து கிடந்த வாலிபன், எதிரே தெரிந்த பாழடைந்த மாளிகையைக் கண்டதும் ஆறுதல் நிரம்பிய பெருமூச்சுவிட்டான். அடுத்த விநாடி மயக்கமுற்றுத் தரையிலும் சாய்ந்தான்.

“துறவியாரே! வாலிபன் மயக்கமுற்றுவிட்டான்” என்று கீழே தன் கையிலிருந்து நழுவிக்கொண்டிருந்த வாலிபனைக் காட்டிய படைத்தலைவன், அவனை மெள்ள இரு கைகளாலும் தூக்கிக்கொண்டான்.

“இப்படிக் கொண்டு வாரும்” என்று கூறிக்கொண்டே மாளிகை வாயிற்படிக்கு வந்த சமணத் துறவி கதவைப் பலமாக மூன்று முறை இடித்தார். சற்று நேரத்தில் கதவைத் திறந்தாள் ஒரு பெண். அந்தப் பெண்ணைக் கண்டதும் மித மிஞ்சிய ஆச்சரியமடைந்தது சமண அடிகள் மட்டுமல்ல, எதிர்பாராத அந்தச் சந்திப்பால் இளஞ்செழியனும் வியப்படைந்து, “இன்பவல்லி! நீயா!” என்று கூவினான்.
“யார், நீங்களா? இங்கு எங்கு வந்தீர்கள்?” என்று இன்ப வல்லியும் ஆச்சரியத்தால் திறந்த பவள வாயில் நன் முத்துக் களைக் காட்டிக்கொண்டே வினவினாள்.

“பேச நேரமில்லை. கதவைத் திற” என்றான் இளஞ்செழியன்.

இன்பவல்லி அவன் கையிலிருந்த சுமையைக் கவனித் தாள். அந்தச் சுமையிலிருந்து கொட்டிக் கொண்டிருந்த ரத்தத்தையும் கவனித்தாள். “சரி, சரி, உள்ளே வாருங்கள்” என்று கூறி, அவர்களை அழைத்துக்கொண்டு கதவைத் தாளிட்டு விட்டு உள்ளே சென்றாள். அவள் உள்ளே முன் கூடத்துக்கு வருமுன்பே வெளியே குதிரைகளின் குளம்படிச் சத்தம் பலமாகக் கேட்டது. வாயிலில் பலர் இறங்கும் அரவமும் அவர்கள் காதில் விழவே, ஒருமுறை இளஞ்செழியனையும் அவன் கரத்தில் கிடந்த வாலிபனின் பசுந்தளிர் முகத்தையும் கவனித்தாள் இன்பவல்லி.

“பட்ட மரத்திலிருந்து சற்று முன்புதான் தப்பியது இந்தப் பசுந்தளிர், இன்பவல்லி. இதுவும் பட்டுப் போகக் கூடாது” என்றான் இளஞ்செழியன்.

அவன் கருத்தைப் புரிந்துகொண்டாள் இன்பவல்லி. “நீங்கள் கூடத்தைத் தாண்டிச் சென்றால் பக்கத்தில் ஓர் அறை இருக்கும். அதன் மஞ்சத்தில் அவரைப் படுக்க வையுங்கள். வருகிறவர்களை நான் பார்த்துக்கொள்கிறேன்” என்று கூறி விட்டு மீண்டும் திரும்பிச் சென்று கதவைத் திறந்துகொண்டு வாயிற்படியில் நின்றாள். அவள் வாயிற்படியில் நின்றதற்கும் வாயிலில் குதிரை வீரர்கள் வந்து குதிப்பதற்கும் நேரம் சரியாக இருந்தது.

“யார் நீங்கள்?” என்று கேட்டாள் இன்பவல்லி.

“சோழ நாட்டு வீரர்கள்” என்றான் காவலர் தலைவன்.

“இங்கென்ன வேலை?”

“ஒரு வாலிபனைத் துரத்தி வந்தோம்.”

“அதற்கு இத்தனை பேர் தேவையா?” இகழ்ச்சியுடன் கேட்டாள் இன்பவல்லி.

“அதிகமாகப் பேச நேரமில்லை. இங்கு காயமடைந்த வாலிபன் யாராவது வந்தானா?” என்று அதிகாரத்துடன் கேட்டான் காவலர் தலைவன்.

“யாரும் வரவில்லை.”

“எங்குதான் அப்படி மாயமாய் மறைந்திருப்பான்?” என்று சற்று உரக்கவே தன்னைக் கேட்டுக் கொண்ட காவலர் தலைவன், ஏதும் புரியாததால் குழப்பமடைந்து ஏதோ யோசனையில் தலையைக் கீழே தொங்கப்போட்டுக் கொண்டான். அவ்வளவுதான்! தரையில் நிலைத்த கண்களில் சொல்லவொண்ணா கோபம் எழுந்து தாண்டவமாடியது. படபடப்பால் உதடுகள் துடித்தன. அவன் காலடியில் பின் நிலவின் வெளிச்சத்தில் பாழடைந்த மண்டபமாதலால் மேற் கூரையில்லாமல் வெறும் தூண்களே நின்றிருந்த வாயில் தாழ் வாரத்தில், செக்கச் செவேலென்று தெரிந்தது ஒரு ரத்தத் துளி! சற்று விலகி நின்று பார்த்தான் காவலர் தலைவன். ரத்தத் துளிகள் வெளியிலிருந்து தொடர்ச்சியாக வந்து வாயிற்படி யருகில் நின்றன.

அந்தத் துளிகளையும் நோக்கி இன்பவல்லியின் கண் களையும் ஏறெடுத்து நோக்கிய காவலர் தலைவனின் கண்களில் மட்டுமன்றி, இதழ்களிலும் குரூர சாயை பலமாகப் படர்ந்தது.

Previous articleYavana Rani Part 1 Ch21 | Yavana Rani Sandilyan | TamilNovel.in
Next articleYavana Rani Part 1 Ch23 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here