Home Sandilyan Yavana Rani Part 1 Ch23 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

Yavana Rani Part 1 Ch23 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

72
0
Yavana Rani Part 1 Ch23 Yavana Rani Sandilyan, Read Yavana Rani Online Free, Yavana Rani PDF, Download Yavana Rani novel, Yavana Rani book,read Yavana Rani free
Yavana Rani Part 1 Ch23 |Yavana Rani Sandilyan|TamilNovel.in

Yavana Rani Part 1 Ch23 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

யவன ராணி – சாண்டில்யன்

முதல் பாகம்

அத்தியாயம் : 23 பேசாதே!

Yavana Rani Part 1 Ch23 |Yavana Rani Sandilyan|TamilNovel.in

ரகுவம்ச மகா காவியத்தில் கர்ப்ப ஸ்திரீகளின் முகத்துக்குப் பின்நிலவை உவமையாகக் கூறினான் மகாகவி காளிதாசன். கர்ப்பத்திலிருக்கும் குழந்தை, ரத்தத்தில் பெரும் பகுதியை ஈர்த்துக் கொள்வதால் ஸ்திரீகளின் முகம் ரத்தமிழந்து வெளிறிட்டு விடுவதுபோல, அடுத்த நாள் உற்பத்தி முதல் நாளிரவின் கடைப்பகுதியின் கலையை வாங்கிக் கொள்வதால் வானத்திலுள்ள மதியும் தன் பொலிவை இழந்து மங்கிவிடுகிறான் என்பதைக் குறிக்கவே அந்த உவமை கூறப்பட்டது. ஓர் உயிர்த் தோற்றத்துக்கு மற்றோர் உயிரின் சக்தியை இயற்கை வாங்கியளிப்பதால், சக்தியளிக்கும் உயிர் ஓரளவு பிரகாசத்தை இழந்து விடுகிறது. இது சிருஷ்டியில் காணப்படும் விந்தை. ஓர் உயிர், சக்தியையோ கலையையோ தியாகம் செய்து இன்னொரு உயிரைத் தோற்றுவிப்பதால் ஏற்படும் இந்த விந்தையில் விளைவது உலகம். இந்த விந்தையில் துளிர்விடும் விபத்துக் களும் சம்பத்துக்களும், ஆயாசங்களும், உல்லாசங்களும், அழிவுகளும் ஆக்கங்களும், எத்தனை எத்தனையோ!

அன்று அந்தப் பாழடைந்த மாளிகைத் தாழ்வாரத்தை வானிலிருந்து பார்த்த மதிகூட ஒளி மங்கித்தான் கிடந்தான். அடுத்த நாளை ஈன்றெடுக்கத் தன் கலையைத் தியாகம் செய்த அவன் முகமும் வெளிறிட்டுக் கிடந்ததால் நிலவு மங்கித்தான் இருந்தது. ஆனால் அடுத்த நாளைக்கு அத்தனை தியாகம் செய்த அந்த நேரத்திலும் அந்த மாளிகைக்குள்ளிருந்த மற்றொரு உயிருக்காக உலை வைக்கக் கூடிய பணியில் அந்தச் சந்திரன் ஏன் ஈடுபட்டான்? எதற்காக அந்தப் பாழடைந்த மாளிகைத் தாழ்வாரத்திலிருந்து அந்த ரத்தத் துளிகளை அவ்வளவு சிவப்பாக அவன் எடுத்துக் காட்ட வேண்டும்? இப்படி எத்தனை அக்கிரமங்களை அந்த வெண்மதி செய்திருப்பான்? இதனால்தான் கலைகள் தேய்ந்து தேய்ந்து அவன் துன்பப்பட வேண்டும் என்று சாபம் கிடைத்ததா? இதயம் மட்டும் அன்று கேள்விகளில் லயித்திருந்தால் இன்பவல்லி இத்தனை கேள்விகளையும் கேட்டிருப்பாள். இன்னும் கேட்டிருப்பாள். ஆனால் ரத்தத் துளிகளையும் நோக்கித் தன்னையும் நோக்கிய காவலர் தலைவரின் முகத்தில் படர்ந்த குரூரச் சாயை எந்தக் கேள்விகளுக்கும் இடம் வைக்காததால் அவள் இதயம் குதிரை வேகத்தில் ஓடிக்கொண்டிருந்தது. அது செய்த படபடப்பின் பேரொலி உணர்ச்சி, நரம்புகள் மூலம் காதுக்கு எட்டிப் பெரிய டமாரம் சப்திப்பது போன்ற பிரமையை அளித்து விட்டதால், இன்பவல்லி உள்ளூர நடுங்கிக் கொண்டு வெளிக்கு மிகக் கம்பீரமாகவும் வாசற்படியிலே நின்றாள்.

மயங்கிய அந்த நிலவிலும் கட்டடத் தாழ்வாரத்தில் சொட்டிக் கிடந்த ரத்தத் துளிகள் அவளைப் பார்த்துத் தீவிழி விழித்ததன்றி, ‘நன்றாக அகப்பட்டுக் கொண்டாய்’ என்று சற்று எட்ட இருந்த மரங்களிலிருந்து வெண்ணிறப் பூக்களும் காற்றில் ஆடி அவளைப் பார்த்து நகைத்தன. காவலர் தலைவன் மீண்டும் ஒரு முறை ரத்தத் துளிகளைக் கூர்ந்து நோக்கிவிட்டு, “இங்கு யாரும் வரவில்லையா?” என்று இடியை விடப் பயங்கரமான குரலில் வினவினான்.

உள்ளேயிருந்த பயத்தையெல்லாம் மறைக்க முகத்தைக் கல்லாக்கிக் கொண்ட இன்பவல்லி, “இல்லையென்று தான் முன்பே சொன்னேனே. இரைந்து கூவினால் புதிதாக ஆட்கள் வந்து விடுவார்களா என்ன?” என்று பதிலுக்குக் கேட்டாள்.
காவலர் தலைவன் கோபம் மெல்ல எல்லை மீறிக் கொண்டிருந்தாலும் அதை வெளிக்குக் காட்டாமல் கீழிருந்த ரத்தத் துளிகளைச் சுட்டிக்காட்டி, “இவை என்ன தெரியுமா?” என்று கேட்டான்.

“இதென்ன பெரிய விந்தை! ரத்தம் சிந்தியிருக்கிறது!” என்று சாவதானமாகப் பதில் சொன்னாள் இன்பவல்லி.

“ரத்தத் துளிகள் எங்கிருந்து வந்தன?”

“கேட்பானேன்? காயத்திலிருந்துதான் வந்திருக்க வேண்டும்.”

“காயமடைந்த வாலிபன் யாரும் இங்கு வரவில்லை என்று சொல்லவில்லையா நீ?”

காவலர் தலைவன் பேச்சில் மரியாதை குறைவதையும் அவன் பதட்டம் அதிகமாவதையும் கவனித்த இன்பவல்லி கூடிய மட்டும் காலத்தைக் கடத்தத் தீர்மானித்து வாயிற் படிக்குக் குறுக்கே நன்றாக நின்றுகொண்டு காவலர் தலைவனை ஏற இறங்கப் பார்த்தாள்.

“என்ன பார்க்கிறாய்?” என்று சீற்றத்துடன் கேட்ட காவலர் தலைவன், உள்ளே சென்ற அறையை நோக்கி ஓர் அடி எடுத்தும் வைத்தான்.

இன்பவல்லி வாயிற்படியை நன்றாக மறைத்து நின்று ஒரு பக்கத்தில் தன் கையையும் வைத்து அவனைத் தடுத்து, “என்ன கேட்டாய் நீ?” என்று பொய்க் கோபம் துளிர்த்த குரலில் வினவினாள், தானும் மரியாதையைக் கைவிட்டு.

“என்னைச் சுட்டெரித்து விடுவதுபோலப் பார்த்தாயே,
அது எதற்காக என்று கேட்டேன்” என்று காவலர் தலைவன் பதில் கூறினான் பதில் கூறினான்.

“நீ சோழ நாட்டு வீரன் என்று சொன்னாயே, அது உண்மையா என்று பார்த்தேன்” என்றாள் இன்பவல்லி.

“அதில் சந்தேகப்படக் காரணம்?”

“உன் பேச்சு, நடத்தை?”

“என் பேச்சுக்கு என்ன?”

“பேச்சில் மரியாதையில்லை. ஏகவசனத்தில் பேசுகிறாய். எங்கள் நாட்டு வீரர்கள் பண்பு தெரிந்தவர்கள். பெண்களை மரியாதையாகத்தான் அழைப்பார்கள். நீ மட்டும் சோழ நாட்டு வீரனாயிருந்தால் நாளைக்கே உன் தலையைச் சீவிவிட என்னால் முடியும்.”

இன்பவல்லி கடைசிப் பகுதியைச் சுடச்சுடப் பேசினாள். பேச்சிலும் கடுமையை வரவழைத்துக் கொண்டாள். அவள் பேச்சிலிருந்த கடுமையைக் கண்ட காவலர் தலைவன்கூடச் சிறிது அசந்துபோய், மேற்கொண்டு என்ன செய்வதென்று திகைத்தானானாலும், “நான் கடமையைச் செய்கிறேன். என் தலையை வாங்க யாராலும் முடியாது பெண்ணே” என்றான், மெல்ல தைரியத்தை வரவழைத்துக் கொண்டு.
இன்பவல்லியின் அடுத்த கேள்வி அவன் தைரியத்தைத் தூளாக்கி விட்டபடியால் காவலர் தலைவன் கால்கள்கூடப் பயத்தால் நடுங்கின.

“மன்னர் இருங்கோவேள் கூடவா உன் தலையை வாங்க முடியாது?” என்று ஓர் அதிர்வேட்டை எடுத்து வீசினாள் இன்பவல்லி.

“மன்னர்…. மன்னர்….?” குமுறினான் காவலர் தலைவன்.

“இந்த ஊரில்தான் இருக்கிறார்” என்று இன்பவல்லி இன்னும் ஓர் அம்பை ஏவினாள்.

“அது உங்களுக்கும் தெரியுமா?” காவலர் தலைவன் வார்த்தைகளில் மட்டுமல்லாமல் தோரணையிலும் மிகுந்த மரியாதையும் பணிவும் தெரிந்தன.

“அவர்தான் இங்கு எங்களை அழைத்து வந்தார். பொழுது விடிந்ததும் அவரே வருவார். இந்த ரத்தத் துளிகளைப்பற்றி அவரையே நீ விசாரித்துக் கொள்வது நல்லது. என்னை மீறி நீ உள்ளே நுழைந்தால் பலனை அனுப விக்கத் தயாராக இரு” என்று இன்பவல்லி மிரட்டினாள் காவலர் தலைவனை, அவன் பணிந்துவிட்டான் என்பதைப் புரிந்து கொண்டு.

அலைகடல் துரும்பெனக் காவலர் தலைவன் தத்தளித் தான். இத்தகைய ஒரு நிலையை அவன் எதிர்பார்க்கவே யில்லை. இருங்கோவேள் மிக ரகசியமாகக் கருவூருக்கு வந்திருக்கிறார் என்பதும், அவருக்கு அந்தரங்கமானவர்களைத் தவிர வேறு யாருக்கும் அந்தத் தகவல் தெரியாதென்பதும் காவலர் தலைவன் திட்டமாக அறிந்திருந்தானாகையால் இருங்கோவேளின் விஜயத்தைப்பற்றி அறிந்திருக்கும் அந்தப் பெண், மன்னனுக்கு வேண்டியவளாகத்தான் இருப்பாள் என்பதில் அவனுக்கு லவலேசமும் சந்தேகம் ஏற்படாதது மட்டுமல்ல, ஓரளவு அவளிடம் பயமும் ஏற்பட்டது. ஆனால் எரிந்த மாளிகையிலிருந்து தப்பி வந்தவன் அணுகுவதற்கோ மறைவதற்கோ இந்த ஒரு மாளிகையை விட்டால் வேறு இடமும் இல்லையென்பதை அவன் நன்றாக உணர்ந்து கொண்டிருந்தான். காயமடைந்த ஒருவன் மாளிகைக்குள் இருக்கிறான் என்பதற்குத் தாழ்வாரத்தில் பளிச்சிட்ட ரத்தத் துளிகள் திட்டமான சான்றாக நின்றன. இந்த நிலையில் உள்ளே சென்று, சோதனை செய்யாமல் போனாலும் தவறு. சோதனை செய்வதற்கோ குறுக்கே நிற்கிறாள் இன்பவல்லி. அவளோ மன்னனை நன்றாக அறிந்தவள்!

இந்த நிலையில் காவலர் தலைவன் என்னதான் செய்வான்? ஒரு விநாடி மனத்திற்குள் மன்னனைச் சபித்த தன்றி, எதிரே இருந்த இன்பவல்லியையும் பார்த்து, “இந்தப் பிசாசு எங்கிருந்து வந்தது?’ என்று அவளையும் மனத்திற்குள் நிந்தித்தான். அவ்வளவு தூரம் யாரைச் சபித்தும் நிலையைத் திருத்திக் கொள்ள இடமில்லாது போகவே இன்பவல்லியை நோக்கி, கெஞ்ச முற்பட்டு, “அம்மணி! நாங்கள் ஊழியர்கள். எங்களை மிரட்டிப் பயனில்லை. அரசர் கையிலிருந்து தப்பி ஒரு வாலிபன் ஓடி வந்து விட்டான். அவனைப் பிடிக்காவிட்டால் மன்னருக்கே ஆபத்து. கொஞ்சம் நீங்கள் அனுமதித்தால் உள்ளே சென்று பார்த்து விடுகிறேன்” என்றான்.

“ஒரு வாலிபனால் மன்னருக்கு ஆபத்தா?” வியப்புடன் கேட்டாள் இன்பவல்லி.
“ஆம்.”

“சோழ மண்டலாதிபதிக்கு ஒரு வாலிபனால் ஆபத்தா? ஒரு வாலிபன். நீங்கள் சொல்லுவதைப் பார்த்தால் காய மடைந்தவன். அவனால் என்ன ஆபத்து நேரிட முடியும்?”

“அவனும்…” என்று ஆரம்பித்த அவன் சட்டென்று வார்த்தையை நிறுத்திக்கொண்டு கலவரத்துடன் இன்ப வல்லியை நோக்கினான்.

அவன் ஏதோ முக்கிய விஷயத்தைச் சொல்ல முயன்று நிறுத்திக் கொண்டு விட்டான் என்பதை இன்பவல்லி அறிந்து கொண்டாளானாலும், கலவரப்பட்டவளைப் போல் நடித்து, “அப்படியானால், இங்கு நின்றுகொண்டு ஏன் காலத்தை வீணாக்குகிறீர்கள்? இங்கு எந்த வாலிபனும் வரவில்லை. வந்தாலும் மன்னருக்கு விரோதியானால் நாங்களே அவனைச் சிறைப்படுத்தி விடுவோம். மன்னர் வீரர்களில் சிலர் உள்ளேயும் இருக்கிறார்கள். அப்படி யாராவது வாலிபன் வந்தால் நான் பார்த்துக் கொள்கிறேன். நீங்கள் வேறெங்காவது தேடுங்கள்” என்றாள்.

“அப்படியானால் இந்த ரத்தத் துளிகள்?” என்று இழுத்தான் காவலர் தலைவன்.

“எங்களுடன் ஒரு சமணத் துறவி வந்திருக்கிறார். அவருக்குப் பட்ட காயத்திலிருந்து வந்தவை. வேண்டுமானால் அவரை அழைத்து வருகிறேன்” என்று உள்ளே செல்லத் திரும்பினாள் இன்பவல்லி.
அவள் சொல்லிய விவரங்களாலும், மன்னரே அவர் களையும் அங்கு கொண்டு வந்து வைத்திருக்கிறார் என்பதை இன்பவல்லி அறிவித்ததாலும், காயமடைந்தவரைக்கூட அவள் காட்டத் தயாராயிருந்ததாக நடித்ததாலும், தன் நடுக்கத்தையெல்லாம் பறக்கவிட்ட காவலர் தலைவன் தன் வீரர்களை அழைத்துக் கொண்டு திரும்பினான். திரும்பும் முன்பாக இன்பவல்லியை ஒரு கேள்வி கேட்டான். “இங்கு வந்த விஷயத்தை மன்னரிடம் சொல்லப் போகிறேன். உங்கள் பெயர் என்ன?”

“இன்பவல்லி?”

“ஊர்?”

“புகார். என் பெயரைச் சொன்னாலே மன்னருக்குத் தெரியும். பெரிதும் மகிழ்ச்சி அடைவார். என் தலைவி அவர் நண்ப ர் மகள்.”

“யார் அந்த நண்பர்?”

“மாரப்பவேள்!”

இதைக் கேட்டதும் இடிந்துபோய் நின்றான் காவலர் தலைவன். தமிழகத்தின் பதினைந்து வேளிர்களுள் மிகச் சிறந்த வரான மாரப்பவேளின் இல்லத்தில் அனாவசியமாக விசாரணை செய்துவிட்டோமே என்ற பயத்துடனேயே திரும்பிச் சென்றான் காவலர் தலைவன்.

பாதி உண்மையையும் பாதி பொய்யையும் சொல்லிக் காவலர் தலைவனைப் பயமுறுத்தித் திருப்பியனுப்பி விட்ட இன்பவல்லி, கதவைத் தாளிட்டுக் கொண்டு ஆயாசம் தீர்ந்ததற்கு அறிகுறியாக ஒரு பெருமூச்சு விட்டு, மனத்தில் ஓரளவு சாந்தி நிலவ மாளிகைக்குள்ளே நடந்தாள். மாளிகை உட்கூடத்தை அடுத்த முற்றத்தில்கூட நிலவு வெளிச்சத்தில் ரத்தத் துளிகள் நன்றாகத் தெரிந்தன. உள்ளே சென்று ஒரு காவலரை அழைத்து, முற்றத்தின் ரத்தத் துளிகளைத் துடைக்கச் செய்த இன்பவல்லி, காயமடைந்து வந்த அந்த வாலிபனைப் பார்க்கும் ஆவலுடன் அவனிருந்த அறைக்குள் நுழைந்தாள்.

அந்த அறையில் தன் தலைவி படுக்க வேண்டிய பஞ்சணையில் அந்த வாலிபன் படுத்துக் கிடப்பதையும், அவனுக்குப் பணிவிடை செய்யத் தன் தலைவியே பச்சிலை யுடனும் மருந்துகளுடனும் வந்திருப்பதையும் கண்ட இன்பவல்லியின் ஆச்சரியம் எல்லையைக் கடந்தாயிற்று. வாயிலில் காவலர்தலைவன், வாலிபனைப்பற்றிக் கூறிய தகவல்களின் பேருண்மையை அந்த அறையிலிருந்த சூழ்நிலையைக் கண்டதும் இன்பவல்லி சந்தேகமறப் புரிந்து கொண்டாள். அவன் படுத்திருந்த பஞ்சணையில் ஒரு பக்கத்தில் பச்சிலையை வாட்ட பூவழகி விளக்கு ஒன்றை ஏற்றிக் கொண்டிருந்தாள். மற்றொரு பக்கத்தில் சற்று எட்டத் தள்ளி நின்றிருந்த இளஞ்செழியன் என்ன கவனத்தாலோ அந்த வாலிபன் முகத்தைக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தான். நடுத்தர வயதுக்குமேல் ஏறியதால் அந்த அறைக்குள்ளேயே பெரியவரான சமணத் துறவி அந்த வாலிபன் காலடியில் கைகளைக் கட்டிக் கொண்டு மிகுந்த பணிவுடனும் கவலையுடனும் நின்று கொண்டிருந்தார். அறையில் மௌனம் பூர்ணமாகக் குடி கொண்டிருந்தது. படுகாயப்பட்டு மயக்கமாகப் படுத்திருந்த வாலிபனைப் பார்த்துக் கொண்டிருந்த ஒவ்வொருவர் முகத்திலும் கவலை பலமாகத் தோய்ந்து கிடந்தது. விளக்கை ஏற்றிவிட்டு வாலிபனின் காயங்களைப் பரிசோதித்த பூவழகியின் கண்களில் கவலைக் குறி மற்றவர் களைவிடப் பெரியதாகப் படர்ந்தது.

“ஏனம்மா! பெரிய காயமா?” என்று கேட்டார் சமணத் துறவி.

“நெற்றிக் காயம் பலமில்லை. தோள் பட்டையில் பாய்ந்திருக்கும் வேல்தான் ஆழப் பதிந்து விட்டது. அதிலிருந்து ரத்தம் விரயமாகியதால்தான் மயக்கம் ஏற்பட்டிருக்கிறது’ என்று பூவழகி பதில் சொன்னாள்.

“ரத்தத்தை நிறுத்த முடியுமல்லவா?” கவலை கரை புரண்டோட, துக்கம் தொண்டையை அடைக்கக் கேட்டார் துறவி.

பூவழகி உடனே பதில் சொல்லாமல் மீண்டும் தோள்பட்டையைப் பரிசோதித்தாள். கடைசியில் தலையை அசைத்து, “பாதகமில்லை. ரத்தத்தை நிறுத்தி விடலாம்” என்று சொல்லிவிட்டு, ஜலத்தில் தோய்ந்த துணியைக் கொண்டு நெற்றிக் காயத்தின் ரத்தத்தையும் தோள்பட்டை ரத்தத்தையும் நன்றாகத் துடைத்து, மேற்கொண்டு ரத்தம் வராதிருக்க இரண்டு இடங்களிலும் துணிகளை உருட்டி அழுத்தி, “இவற்றைப் பிடித்துக் கொண்டிருங்கள்” என்று துறவிக்கு உத்தரவிட்டு, “இன்பவல்லி! செம்பில் பால் வைத்திருக்கிறேன். சிறிது கொண்டு வா” என்று தன் பணிப் பெண்ணிடம் கூறினாள்.
“இத்தனை நேரத்துக்குப் பால் நன்றாயிருக்குமா?” என்று இன்பவல்லி கேட்டாள்.

“நன்றாகக் காய்ச்சின பால்தானே, கெடாது, எடுத்து வா. கொஞ்சம் பருகினால்தான் இவர் கண்விழிப்பார்! பிறகுதான் பச்சிலையைப் போட முடியும்” என்றாள் பூவழகி.

இன்பவல்லி வெகுதுரிதமாகச் சென்று பாலைக் கொண்டு வந்தாள். அதற்குள்ளே வாலிபன் கண்களைக் குளிர்ந்த நீர் கொண்டு துடைத்த பூவழகி, துறவியின் உதவியாலும் இளஞ்செழியன் உதவியாலும் அவனைத் தலையணைகளில் உயரத்தூக்கிக் கிட்டத்தட்ட உட்கார்ந்த பாவனையில் சாய வைத்ததன்றி, வெள்ளிக் குவளையில் இன்பவல்லி கொண்டுவந்த பாலையும் அவன் வாயைப் பலவந்தமாகத் திறந்து மெள்ள மெள்ள ஊற்றினாள். இரண்டு வாய்ப் பால் உள்ளே சென்றதாலும், காயங்களில் துணி அமுக்கப்பட்டதால் ரத்தப் போக்கு நின்றதாலும் மெள்ள மெள்ள மயக்கம் நீங்கிய அந்த வாலிபன் தன் கண்களைத் திறந்து அக்கம் பக்கம் இருந்தவர்களையும் பார்த்தான். தான் இருக்குமிடம் எது என்பதையோ, தனக்குப் பணிவிடை செய்து கொண்டிருக்கும் பெண்கள் யார் என்பதையோ அறியாத அந்த வாலிபன், அவர்களை யார் என்று விசாரிக்க மெல்ல உதடுகளைத் திறந்தான்.

“பேசவேண்டாம். சற்றுப் பொறுங்கள். பிறகு நிரம்பப் பேசலாம்” என்று கடிந்துகொண்ட பூவழகியைப் பார்த்துப் புன்முறுவல் கோட்டினான் அந்த வாலிபன். பிறகு துறவியை நோக்கி ரத்தத்திலிருந்து துணிகளை நீக்கச் சொன்ன அந்த வேளிர்குலப் பேரழகி, தன் உடலை ஒருபுறமாக வளைத்துத் திருப்பிக்கொண்டு, பக்கத்தில் எரிந்து கொண்டிருந்த விளக்கில் கையிலிருந்த பச்சிலையை வாட்டத் தொடங்கினாள்.

சமணத்துறவி அந்தப் பெண் பக்குவமாகப் பச்சிலையை வாட்டும் முறையைக் கண்டு வியந்து நின்றார். பஞ்சணையில் சாய்ந்து கொண்டிருந்த வாலிபன் அவள் அழகைக் கண்டு பிரமித்துப் பார்த்துக்கொண்டிருந்தான். சாதாரண சமயமாயிருந்தால் இளஞ்செழியன் கண்ணும் பூவழகியை விட்டு அகன்றே இருக்காது. ஆனால், பாழடைந்த மாளிகையின் அந்த உள் அறையில் அவன் பார்வை, எண்ணங்கள் எல்லாமே பஞ்சணையில் படுத்திருந்த வாலிபனிடமே லயித்திருந்தன. இவனை எங்கு பார்த்திருக்கிறோம் என்பதை ஆராய்ந்து முடிவு கட்டுவதிலிருந்தது மனம். மனத்தின் நிலையை நெற்றியில் பிரதிபலித்த உணர்ச்சி மாற்றங்கள் தெள்ளென விளக்கின; திடீரென்று தெளிவு கண்டதற்கு அறிகுறியாக அவன் கண்கள் பளிச்சிட்டன. உள்ளே வியப்பு திடீரெனத் தோன்றியதற்கு அறிகுறியாக ‘ஹும்’ என்ற ஒலியும் அவனிடமிருந்து கிளம்பி அறை முழுவதும் மெள்ள எதிரொலி செய்தது. அந்த ஒலியைக் கேட்டதும் பஞ்சணையில் சாய்ந்திருந்த வாலிபன் இளஞ் செழியனை நோக்கித் தன் கண்களைத் திருப்பினான். நான்கு விழிகளும் சந்தித்தன. புரிந்துகொண்டன. விழிகள் விண்ட விடுகதையைச் சொல்ல இளஞ்செழியன் இதழ்கள் ஆவலுடன் விரிந்தன.

‘பேசாதே!’ என்று ஆணையிடும் முறையில் வாலிபன் விழிகள் இளஞ்செழியனை நோக்கி அதிகாரத்துடன் மலர்ந்தன. அந்த விழிகளின் ஆணையை வலியுறுத்த இஷ்டப் பட்டதுபோல் அவன் இடது கையும் மெள்ளப் பஞ்சணையி லிருந்து கிளம்பி, ‘நில்!’ என்று எச்சரித்தது. இந்த சமிக்ஞை களை மற்றவர்கள் கவனிக்காவிட்டாலும், சதா எச்சரிக்கை யுடனிருக்கும் இன்பவல்லியின் கூர்விழிகள் மட்டும் நொடிப் பொழுதில் கண்டுகொண்டன.

Previous articleYavana Rani Part 1 Ch22 | Yavana Rani Sandilyan | TamilNovel.in
Next articleYavana Rani Part 1 Ch24 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here